Tuesday 19 May 2015

குளுகுளு குல்லு மனாலி...



நான் சில ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் வீட்டிற்கு ஜெர்மனி சென்ற சமயம் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்திற்கு சென்று வந்தோம். அச்சமயம் 'உலகின் மிகப் பெரிய இமயமலையின் சிகரங்கள் இன்னும் அழகாக இருக்கும்மா! அதெல்லாம் போய்ப் பார்' என்றான் என் பிள்ளை. ஏற்கெனவே சிம்லா,டார்ஜிலிங்,காங்க்டாக்  எல்லாம் பார்த்துவிட்டதால் குல்லு மனாலிக்கு சென்றோம்.ஆஹா! அந்த இடத்தின் அழகில் சொக்கிப் போனேன்! திரும்ப வரவே மனமில்லை.


 
'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று நெஞ்சு நிமிர்த்தி நம் மீசைக் கவிஞர் பாரதி பாடியது போல இமயமலையை தன்னகத்தே கொண்டுள்ள ஹிமாச்சல பிரதேசத்தில் எத்தனை குளிர்வாசத்தலங்கள்! இவற்றில் 'தேவ பூமி'என்ற சிறப்புப் பெயருடன் விளங்கும் மனாலி மிக அழகான, நம் கண்ணுக்கும், மனதுக்கும் நிறைவான, ஆன்மீகத் தலங்களைத் தன்னில் கொண்ட அற்புதமான ஒரு சொர்க்கம் எனலாம்.


மனம் மயக்கும் இயற்கை அழகு, வண்ணமயமான மலர்த்தோட்டங்கள், பனிமூடிய  மலைச்சிகரங்கள் மற்றும் ஆப்பிள் தோட்டங்கள் போன்ற உன்னதமான அழகம்சங்களின் மூலம் இந்த மனாலி காலங்காலமாக சுற்றுலாப்பயணிகளை வசீகரித்து வருகிறது. நெடிதுயர்ந்த தேவதாரு மரங்களும், பனி படர்ந்த மலைச் சிகரங்களும், பச்சைப் பசுமை ததும்பும் நிலப் பரப்பும், சீறி ஓடும் ஆறுகளுமாக அந்த இடத்தின் சூழ்நிலை நம்மையே மெய்மறக்கச் செய்யும். கிழக்கில் திபெத்திய பீடபூமியையும், தெற்கில் ஜம்மு காஷ்மீரையும், மேற்கே பஞ்சாபையும் எல்லைகளாகக் கொண்ட மனாலியின் அழகைக் கண்டு களிப்போமா!



Displaying kullu.jpeg
என் பேத்தி ப்ரீத்தி..

                   
இங்குள்ள மிக முக்கியமான இடம் 'ரோதங் பாஸ்' எனப்படும் பனிபடர்ந்த சிகரம். கிட்டத்தட்ட 4000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த சிகரம் நம்மை மேற்கத்திய நாடுகளுக்கு சென்று  பனிப்படலங்களுக்கிடையே, ஸ்னோ-ஃ பாலில் ஜாலியாக நின்று, விளையாடிய அனுபவத்தைக் கொடுக்கிறது. போகும் வழியெங்கும் அழகிய சிறு கிராமங்களும், மேலிருந்து பனி உருகி ஓடும் தெளிவான நீரோடைகளும், நம் கண்ணுக்கு பெரு விருந்து.



                  Displaying kulumanali.jpeg 




மேலே சென்று பனியில் நாம் படுத்துப் புரளலாம்! குட்டி போனி குதிரைகளில் சவாரி செய்யலாம்! பனி மனிதனை உருவாக்கலாம்! பனியை எடுத்து ஒருவர் மேல் ஒருவர் வீசி விளையாடலாம்! இரண்டு குச்சிகளுடன் பனியில் கால் புதிய நடக்கலாம்.! அந்தப் பனியிலும் சூடாக காபியும், டீயும் விற்கும் சிறுவர்கள் நிறைய! ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று வந்த ஒரு புதிய அனுபவத்தைப் பெறலாம்!



              Displaying rothang.jpg


இந்த பாஸின் வழியாக லே, லடாக், கெய்லாக், உதய்பூர் போன்ற இடங்களுக்கு பேருந்து போக்குவரத்து உண்டு. ட்ரெக்கிங் செய்பவர்களுக்கு மிக முக்கியமான வழி இது. ஜூன் முதல் அக்டோபர் வரையே இந்த வழி திறந்திருக்கும். 

 




எல்லா சீசன்களிலும் பனியில் மூடிக் காணப்படும் இந்த ரோதங் பாஸ் செல்வதற்கு மனாலியிலிருந்து பஸ், தனிப்பட்ட வேன், டேக்சி வசதிகள் உண்டு. விடிகாலை 5 மணிக்கே கிளம்ப வேண்டும். போகும் வழியில் பனியில் அணிவதற்கான ஜாக்கெட் போன்ற ஆடைகளை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாடகைக்கு வாங்கி அணிந்து கொண்டு செல்ல வேண்டும். ஸ்வெட்டர்கள் பனியில் நனைந்துவிடும்.

 


Displaying rothangpass.jpg


போகும் வழியில் சாப்பாட்டு ஹோட்டல்கள் இருக்கிறது. சுடச் சுட டீ, சப்பாத்தி சப்ஜி அந்தக் குளிருக்கு அமிர்தமாக இருக்கிறது. அப்பாதையில் போக்குவரத்து மிக மிக மெதுவாக செல்வதால் போய்ச் சேரவே 6 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. நான்கு மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும். அந்த வழியில் போக்குவரத்து அங்குலம்,அங்குலமாகத்தான் நகர்கிறது.



போகும் வழியெங்கும் சுற்றுலா செல்வோர் தூக்கி எறிந்த குப்பைகள்...மாசுபட்ட சுற்றுச் சுழல்... இவ்வளவு பெரிய சுற்றுலா தலத்தை சரியாக பராமரிக்காததைப் பார்க்க மனதுக்கு மிக வருத்தமாக உள்ளது.அங்கு செல்ல வெகு நேரமாவதால் கைக்குழந்தைகள், முதியோர்கள் செல்வது சற்று கடினமே. இவற்றிற்கு நம் அரசு ஏதாவது செய்தால் தேவலை என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.


                         



Displaying manutemple.jpg
மனு ஆலயம்  
மனாலி பல ஆன்மீக நிகழ்வுகளின் இருப்பிடமாக அமைந்துள்ளது. மன்வந்தரங்கள் என்பவை ஏழு. அவற்றில் கடைசி மன்வந்த்ரமான வைவஸ்வத மன்வந்திரத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆறாவது மன்வந்திரம் முடிந்த போது புதிய உலகை உருவாக்க வேண்டிய கடமை வைவஸ்வத மனுவுக்கு ஏற்பட்டது. அவர் மீண்டும் உயிர்களை ஸ்தாபிக்க சப்த ரிஷிகளுடன் ஒரு படகில் வந்தபோது அப்படகு ஒதுங்கிய இடமே மனாலியாம். அங்கிருந்துதான் மனு தன்  சிருஷ்டியை ஆரம்பித்ததாக புராணம் கூறுகிறது. 'மனாலயம்' என்ற பெயரே நாளடைவில் மனாலியாகி விட்டதாம்.

                         


Displaying manudev.jpg
மனு சந்நிதி
ஆலயம் மிக  அழகாக உள்ளது. அமைதியான சுற்றுப்புறம். அவ்வூர் மக்களுக்கு மனு கண்கண்ட தெய்வமானவர். அவரிடம் வேண்டிக் கொண்ட எதுவும் உடன் நிறைவேறும் என்ற  நம்பிக்கையாம். பியாஸ் நதியின் கரையில் அமைந்துள்ளா ஆலயம் மனாலி செல்வோர் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம். மனுவின் சந்நிதி பிரதானமாக உள்ளது.சுற்றிலும் சிவன்நாராயணர் போன்ற தெய்வங்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
                         

அடுத்து டுங்கிரி என்ற இடத்தில் அமைந்துள்ள 'ஹிடும்பா ஆலயம்'. நாம்  பீமனையும், அவன் மனைவி ஹிடும்பியையும் அறிவோம். அவளுக்கு இங்கு ஓர் ஆலயம் இருப்பது வேடிக்கையாக உள்ளது! ஒரு அரக்கிக்கு ஆலயமா? ஆம்...அவள் இங்கு தெய்வமாகக் கொண்டாடப் படுகிறாள்.இடும்பி பீமனை மனந்தபின்பு அவர்களின் புதல்வனான கடோத்கஜன் பிறந்ததும், அவள் இங்கு வந்து தெய்வமாகிவிட்டதாகக் கூறுகிறது வரலாறு. கி.பி.1553ல் ராஜா பகதூர் சிங் என்பவரால்  உருவாக்கப்பட்ட இவ்வாலயத்தில் இடும்பா தேவியின் உருவச் சிலை கிடையாது. பாதச் சுவடுகளே தெய்வமாகக் கொண்டாடப் படுகிறது. அரக்க நிலையிலிருந்த ஒருத்தி அவளது சிறந்த குணங்களால் தெய்வ நிலைக்கு உயரலாம் என்பதையே இது காட்டுகிறது.



                   Displaying hidumba temple.jpeg




மூன்று சதுர கோபுரங்களைக் கொண்டு பகோடா முறையில் மிக அழகாக,சிறப்பான முறையில் மரம்,உலோகம் என உருவாக்கப்பட்டுள்ள இவ்வாலய சுற்றுச் சுவர்களில் அனைத்து இந்துக் கடவுளரின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. ஆவணியிலும், சித்திரையிலும் இரண்டு மிகப் பெரிய திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. 



வசிஷ்டர் ஆலயம்

இங்குள்ள வசிஷ்ட் என்ற கிராமத்தில் ஸ்ரீராமனின் குலகுரு வசிஷ்டருக்கு அமைந்துள்ள கோயிலில் வெந்நீர் ஊற்றுகள் அமைந்துள்ளன. இவை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாகக் கவர்பவை.இவை ராமனின் தம்பி இலக்குவனால் உருவாக்கப்பட்டவையாம். 
Displaying vasishtkund.jpg
வெந்நீர் ஊற்றுகள்
                  
ராமன் ராவணனை வென்று திரும்பியதும் அஸ்வமேத யாகம் செய்ய விரும்பி வசிஷ்டரை அழைத்தபோது,அவர்  இப்புனித பூமியில் தியானத்தில் இருந்தாராம். அவரைத் தேடி வந்த இலக்குவன் குருவிற்கு குளிரும் என்பதால் தன்  அக்னி பாணத்தை விட்டு உருவாக்கியவையே இங்கு காணப்படும் வெந்நீர் ஊற்றுக்களாம். இவற்றில் குளிப்பதால் தீராத நோய்களும், சரும நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. இங்கு குளிப்பதற்கென வசதிகள் செய்யப் பட்டுள்ளன.ஆலயத்தில் வசிஷ்டரின் சிலை உள்ளது. அருகிலுள்ள ராமர் ஆலயம் மலைப் பாறைகளால் சிறப்புற கட்டப்பட்டுள்ளது.





மனாலியிலிருந்து சில மைல் தூரத்திலுள்ள நக்கர் (Naggar ) என்ற இடத்தில் பியாஸ் நதிக்கரையில் அமைந்துள்ள கோட்டை மிக அருமையானது.700 ஆண்டுகளுக்கு முன்பு முழுதும் மரத்தினாலும்,கற்களாலும் கட்டப்பட்டு அரச பரம்பரையினர் வாழ்ந்த   இக்கோட்டை தற்போது ஒரு ஹோட்டலாக செயல்படுகிறது. 'நிக்கோலாஸ் ரியோரிச்' எனும் பிரசித்தமான ரஷிய ஓவியரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிக்கோலாஸ் ரியோரிச் ஆர்ட் காலரியும் இந்த கோட்டை வளாகத்தில் உள்ளது.
Naggar Fort 
இங்குள்ள 'ஜகதிபட்' ஆலய இறைவன் பற்றிய செய்தி சற்று வித்யாசமாக உள்ளது. சதுர வடிவில் ஹிமாசலப் பிரதேச ஆலய வடிவில் கற்பலகைகள்,தேவதாரு மரப் பலகைகளைக் கொண்டு அழகுற, சிறிதாகக் காணப்படும்  இவ்வாலயத்தினுள் 5 x 6 x 8அங்குல நீல, அகல, கனம் கொண்ட பாறையே தெய்வமாக வணங்கப்படுகிறது.



                  Displaying jagatipat temple.jpg
அவ்வூர் மக்களின் நம்பிக்கைப்படி  அனைத்து இந்துக் கடவுளரும்,அவர்களின் தேவியரும் தேனீக்களாக மாறி பிருகுதுங் மலையிலிருந்து ஒரு பாறையை எடுத்து வந்து இக்கோட்டையில்  வைத்ததாகவும்,இப்பாறையில் அனைத்து தெய்வங்களும் குடி கொண்டுள்ளதாகவும் கூறப்  படுகிறது. இப்பகுதி மக்களை இடர்களிலிருந்து காப்பாற்றுவதற்காக இந்த கோயிலில் தெய்வங்கள் ஒன்று கூடுவதாகவும் உள்ளூர் மக்களிடையே  நம்பிக்கை நிலவுகிறது.


'ஜகத்சுக்' என்ற இடத்தில் அமைந்துள்ள 'சந்த்யாகாயத்ரி' மற்றும் 'கௌரிசங்கர்' ஆலயங்கள் எட்டாம் நூற்றாண்டின் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாய் விளங்குகின்றன. மணிகரண்,ஜகன்னாதி, ரகுநாத்ஜி, ஆதிப்ரம்மா, பியாஸ் குண்ட்  போன்ற பல இதிகாச காலக் கோவில்களைத்  தன்னகத்தே கொண்ட  குல்லு  'கடவுளரின் பள்ளத்தாக்கு' (valley of Gods) என்று போற்றப்படுகிறது.
 
ஆதிவாசி உடையில் நானும், என் மருமகளும்...
மனாலியில் உள்ள வண்ண மயமான சுவர்ச் சித்திரங்களைக் கொண்ட திபெத்திய புத்த மடாலயமான 'கதான் தேக்சோகிங் கோம்பா' (Gadhan Thekchoking Gompa Monastery) விலுள்ள புத்த விக்ரகம் மிக அழகானது.பௌத்தர்களின் மிக முக்கிய ஆலயமாக இது விளங்குகிறது. இங்குள்ள கடைகளில் திபெத்திய கார்பெட்டுகள் கிடைக்கும்.

Displaying budhdha monastry.jpeg
கதான் தேக்சோகிங் கோம்பா

குழந்தைகளைக் கவரும் மனாலி க்ளப் ஹவுஸ், கிரேட் ஹிமாலயன் நே ஷனல் பார்க்,சோலங் பள்ளத்தாக்கு, இளைஞர்களுக்கு ஏற்ற சாகச விளையாட்டுகள், ஸ்கீயிங்,பாரா கிளைடிங்,போட் ரோயிங்,மௌன்டைன் பைகிங்,ட்ரெக்கிங், பனிச் சறுக்கு விளையாட்டுகள் அத்தனையும் இங்கு உண்டு. 
                 Displaying riverplay.jpg
இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் குளிர்கால பனிச்சறுக்கு (ஸ்கி) திருவிழாவின் போது ஏராளமான சுற்றுலா ரசிகர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

புது மணத் தம்பதிகளுக்கு தேனிலவிற்கு ஏற்ற அருமையான ரொமாண்டிக்கான சுற்றுலாத்தலம் இது!

ஷாப்பிங்...அது இல்லாமலா! மனாலியிலுள்ள பல கடைகளிலும் கம்பளி சால்வைகள்,காஷ்மீர் உடைகள்,திபெத்திய கார்பெட்டுகள், கம்பளிக் குல்லாய்கள்,பழ ஜாம்,ஜெல்லிகள்,புத்தரின் திருவுருவங்கள் என பலவும் கிடைக்கும்.'மனாலி ஓல்ட் மார்கெட்'டில் கைவினைப் பொருட்கள்,பயண நினைவுப் பொருட்கள்,கலைப் பொருட்கள்,ஆபரணங்கள் ஹிமாசலின் சிறப்பான தனிப்பட்ட தயாரிப்புகள் என கண்ணைப் பறிக்கும் விதத்தில் கிடைக்கும். இவற்றை நாம் பேரம் பேசி வாங்கலாம்.இவை தவிர ஹாங்காங் மார்கெட், திபெத் மார்கெட், ஸ்னோ லைன் அண்டர்க்ரௌண்ட் மார்கெட் என்று பல ஷாப்பிங் இடங்களில் வேண்டிய பொருட்களை வாங்கலாம்.

ஷாப்பிங்
இங்கிருந்து டெல்லி, சிம்லா, சண்டிகர்,பதான்கோட்தரம்சாலா போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன.மனாலிக்கு அருகில் 165 கி.மீ தூரத்தில் ஜோகீந்தர் நகர் ரயில் நிலையம்  சண்டிகர் வழியாக மற்ற நகரங்களுடன் ரயில் இணைப்பு வசதி உள்ளது. ஹிமாசல் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக்கழகம் (HPTDC)  மனாலியிலிருந்து தில்லி,சண்டிகர்,சிம்லா,பதான்கோட் போன்ற நகரங்களுக்கு சொகுசுப்பேருந்துகளை இயக்குகிறது.

குல்லு-மனாலி செல்வதற்கு மார்ச் முதல் ஜூலை  வரையுள்ள பருவமே உகந்ததாகும்.

Friday 15 May 2015

கலிங்கத்துக் கலைவண்ணக் கோயில்கள்...புவனேஸ்வர்



நம் இந்தியச் சுற்றுலாத் தலங்கள் வரிசையில் ஒரிஸ்ஸாவுக்கு சிறப்பான இடம் உண்டு. உலகின் மக்களைக் கவரும் கொனாரக், பூரி, புவனேஸ்வர் என்று முக்கோணத்தில் அமைந்த Golden Triangle என்ற இந்நகரங்கள் கலைவண்ணம் மிளிரும் புராதனமான, புகழ்பெற்ற இடங்களாகும்.

ஒரிஸ்ஸாவின்  தலைநகரமாக விளங்கும் புவனேஸ்வர் கோயில் நகரம் என்ற சிறப்பைப் பெற்றது. இந்நகரில் கால் வைத்த இடமெல்லாம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவாலயங்கள் இருந்ததாகக் கூறப் படுகிறது கலிங்கம் என்ற புகழ்பெற்ற ராஜ்ஜியம் கி.மு. 260ல் அசோகச்  சக்கரவர்த்தியின் ஆளுமையின் கீழ் இருந்தபோது நடைபெற்ற  கலிங்கப்போர் புவனேஸ்வரில் உள்ள தவுலியில்தான் நடைபெற்றது. அங்குள்ள தயா என்ற பெயருள்ள ஆற்றின் மணல் இன்றும் கூட அந்தப் போரில் உயிரிழந்தவர்களின் குருதி கலந்ததால் சென்னிறமாகக் காணப்படுவதாகக் கூறப் படுகிறது. அதன் பின் மனம் மாறிய அசோகா சக்கரவர்த்தி  புத்த மதத்தைத் தழுவியதால்  பல புத்த மடாலயங்கள் உருவாயின.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கேசரி மற்றும் கங்கா அரசர்களால் பல இந்து ஆலயங்கள் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டன.அதன்பின் பதினாறாம் நூற்றாண்டில் முகம்மதியர்களின் படையெடுப்பால் புவனேஸ்வரின் எண்ணற்ற ஆலயங்கள் அழிக்கப்பட்டு மீதமுள்ளவைகளே இன்று உள்ளன. அவையே கிட்டத்தட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு அதிகமாக உள்ளனவாம். புவனேஸ்வர் என்ற பெயர் பூவுலகம், மேலுலகம், பாதாள லோகம் ஆகிய 'மூவுலகின் கடவுள்' 'Lord Of three  World' என்ற பெயரிலிருந்து  உருவானது. இது 'ஏகாம்ர க்ஷேத்ரம்' என்றும் 'சைவ பீடம்' என்றும் போற்றப்படுகிறது. 
   

இங்கு அமைந்துள்ள பிந்துசாகர் மிகப்  பெரிய  ஏரி.. மிகப் புனிதமான இந்த ஏரியைச் சுற்றிலுமே பல ஆலயங்கள் அமைந்துள்ளன. இது புராணப் பெருமை பெற்றது. சிவபெருமானால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் என்று பிரம்ம  புராணம் கூறுகிறது.அதற்கான சுவாரசியமான கதை இது! திருமணம் புரிந்து கொண்ட சிவனும், பார்வதியும் வாரணாசிக்கு தம் புது வாழ்க்கையைத் தொடங்கச் சென்றார்களாம். அங்கு மக்கள் நெருக்கடி அதிகமாக இருந்ததால் உல்லாசமாக இருக்க வேறு புதிய  நகரைத் தேடியபோது, 'ஏகாம்ர  க்ஷேத்திரா' என்ற புவனேஸ்வரை  அடைந்தனர். பார்வதி ஒரு மாடு மேய்க்கும் பெண் உருக் கொண்டு அங்கு இன்பமாக நாட்களைக் கழித்தாள் .



அச்சமயம் இவ்விடத்தை ஆண்டு வந்த  கீர்த்தி,வாசா என்ற  இரு அரக்கர்கள்  பார்வதியை மணக்க விரும்ப, பார்வதி தேவி தன்னை அவர்களின் தோள்களில் தூக்கிச் செல்லும்படி கூற, அவ்விருவரையும்   தன் பாதத்தால்  மண்ணில் அழுத்தி வதம் செய்தாள். அச்சமயம் பார்வதிக்கு தாகம் ஏற்பட, ஈசன்  அவ்விடத்தில் தன்  சூலத்தைச் செலுத்தி ஒரு நீரூற்றை உருவாக்கினார். அதில் பாரதத்தின்  எல்லா புனித நதியின் நீர்களையும் கலக்கச் செய்தார். அதுவே பிந்து சாகர் என்ற மிகப் பெரிய நீர்த்தேக்கமாக  மாறியது. ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் ஒரிஸ்ஸாவை ஆண்ட மன்னர்கள் புனிதமான  இந்நீர்த் தேக்கத்தை சுற்றிலுமே  ஆலயங்களை உருவாக்கினர். இப்புனித நதியின் நீர் அதில் குளிப்பவர்களின் அனைத்து நோய்களையும், துன்பங்களையும் நீக்குவதாகக் கூறப் படுகிறது. கிரகண காலங்களில் இந்நதியில் குளித்து, முன்னோர் காரியங்களைச் செய்வது  நற்பலனைத்  தரும். அங்கிருந்த ஒரு மாமரத்தின் அடியில் குடிகொண்ட ஈஸ்வரன் 'கிருத்திவாசன்' என்றும், 'லிங்க ராஜா' என்றும் போற்றப் பட்டார்.




புவனேஸ்வரின்  மிக முக்கியமான, மிகப்பெரிய ஆலயம் லிங்கராஜா ஆலயம். இவ்விறைவன் உலகின் லிங்கங்களுக்கெல்லாம் அரசன் என்ற பொருளில் லிங்கராஜா என்ற பெயர் விளங்குகிறது.கிழக்கு நோக்கி அமைந்துள்ள லிங்கராஜா ஆலயம், பதினொன்றாம் நூற்றாண்டில் ஜஜதி  கேசரி என்ற சோமவன்ஷி அரசனால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.  அவரது கொள்ளுப் பேரனான லலடேந்து கேசரி என்ற மன்னரால் கட்டி முடிக்கப்பட்டது. சிறந்த கலை நுணுக்கத்துடனும், கட்டமைப்புடனும் பிரமிடு போன்ற மேல்பாகத்துடனும் உருவாக்கப்பட்ட இவ்வாலய விமானத்தின் உயரம் 54 மீட்டர். நூறுக்கும் மேற்பட்ட  சந்நிதிகள் அமைந்திருக்கும் இவ்வாலய சுற்றுச் சுவர்கள் 520 அடி நீளமும், 456 அடி அகலமும் கொண்டு ஆலய  நுழைவாயில் 'சிம்ம துவாரம்' என்ற இரண்டு சிங்கங்களை வாயிற் காவலர்களாகக் கொண்டு அழகான தோற்றத்துடன் விளங்குகிறது.  
'சிம்ம துவாரம்'


கலிங்கத்து பாணியில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தின் அமைப்பும், அதில் செதுக்கப்பட்டுள்ள கண்களைக் கட்டி நிறுத்தும் சிற்பங்களும் கலிங்கத்தின்  சிற்பக் கலையின் சிறப்பை எடுத்து இயம்புகின்றன. செந்நிறக் கற்களால், செம்மண்ணால் கட்டப் பட்டுள்ள ஆலயத்தின் நிறம் வித்யாசமாக ஒரிஸ்ஸாவின் கட்டடக் கலையை தனித்துவமாக எடுத்துக் காட்டுகிறது. அரசன், அரசிகளின் உருவம், அரசவை, நாட்டியக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், வேடுவர்கள் என்று ஒவ்வொரு சிற்பமும் அதி அற்புதம்! இவ்வாலயத்தில் லிங்கராஜாவின் சந்நிதி தவிர நூற்றுக்கும் மேற்பட்ட பல இந்துக் கடவுளரின் சந்நிதிகள் உள்ளன. இவ்வாலயத்தின் பல பாகங்கள் கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாம். 



கலிங்க கட்டிட அமைப்பில் அமைந்துள்ள இவ்வாலயத்தில் விமானம், போகமண்டபம், நாட்ய மண்டபம், ஜகன்மோகன மண்டபம் ஆகிய இவற்றைத் தாண்டிச்  சென்றால் லிங்க ராஜாவின் கர்ப்பக்கிரகம் அமைந்துள்ளது. தானே சுயம்புவாக உருவாகிய லிங்க ராஜா நெடிதுயர்ந்த, எட்டு மீட்டர் குறுக்களவுள்ள லிங்க ரூபத்தில் அருட்காட்சி தருகின்றார். ஏகாம்ர  புராணத்தில் உள்ளபடி இவ்விறைவன் கிருத, த்ரேதா யுகங்களில் ஒரு மாமரத்தின் கீழ் உருவமற்ற நிலையில் வழிபடப் பட்டார். அதன்பின் துவாபர, கலி யுகங்களில் லிங்க ரூபம் கொண்டு அருளுவதாகவும் கூறப்பட்டுள்ளது. லிங்கமானது சக்திபீடத்தின் மீது அமைந்துள்ளதால்  மிகவும் வரப்பிரசாதியாக விளங்குவதாக கூறுகிறார்கள்.

சைவமும்,வைணவமும் இணைந்து பின்பற்றப்பட்ட அந்நாளில், கர்ப்பக்கிரக வாயிலின் இருபுறமும் திருசூலமும், சக்கரமும் அமைந்து இவ்வாலயம் 'ஹரிஹர க்ஷேத்திரம்' என்பதைக் குறிக்கிறது. அதன்பின் 12ம் நூற்றாண்டில் வைணவ வழிபாடு மேலோங்க, அப்போது உருவானதே பூரி ஜகன்னாதர் ஆலயம். இந்த லிங்க ராஜாவிற்கு தினமும் பால், தண்ணீர், தயிர், பழச்சாறு, பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவனும், விஷ்ணுவும் இணைந்து காணப்படுவதால் இங்கு வில்வத்துடன், துளசியும் பெருமானுக்கு அர்ச்சிக்கப்படுகிறது. வேறு எந்த ஆலயத்திலும் உபயோகப் படுத்தாத ஒருவித நச்சுப் பூக்கள் இவ்வாலயத்தில் மட்டுமே இறைவனுக்கு சூட்டப்படுகிறது.

ஆலயத்தின் நடுநாயகமாக விளங்கும் சிவபெருமானின் சன்னிதியைச் சுற்றி விநாயகர், முருகன், பார்வதிக்கான சந்நிதிகள் உள்ளன. அழகிய ஆபரணங்களுடன் அன்புருவாகக் காட்சி தரும் பார்வதியின் சன்னதி நம்மை மெய்மறக்கச் செய்கிறது. இவ்விறைவனை விடியற்காலையில் தரிசனம் செய்வது  அற்புதமான காட்சியாகும். காலை 6 மணி  முதல் இரவு 9 மணிவரை தரிசனம் தரும் இறைவனுக்கு  மதிய ம் 12 மணி முதல் 3 மணிவரை மகாஸ்நானம், 'பல்லப்போக்என்ற நைவேத்தியம் ஆனபின்பே ஆரத்தி காட்டப்படும். இதுவே மகாப்ரசாதமாக பக்தர்களுக்கு அளிக்கப்படும்.அந்த நேரம் கர்ப்பகிரகம் மூடப்பட்டிருக்கும்.


பின் மாலை சந்தியா ஆரத்தி, இரவு 'படாசிங்காரா' என்ற அலங்காரம் செய்யப்பட்டு இறைவனை உறங்கச் செய்வர். இந்த பள்ளியறை நேரத்தில் பஞ்சமுக ஈசனின் மடியில் பார்வதி இருப்பதைப் போன்ற பஞ்சலோகத்தினாலான மூர்த்தி  கர்ப்பகிரகத்திளிருந்து அலங்காரம் செய்யப்பட்டு, தூப, தீபாராதனை, நிவேதனம் செய்யப்பட்டபின், அழகிய பல்லக்கில் பள்ளியறைக்கு எடுத்து செல்லப்படும். இதற்கென கேசரி அரசர்கள் காலத்தில் இருந்தே நியமிக்கப்பட்ட அந்தணர்களே பூஜை செய்து வருகின்றனர்.

இந்த சந்நிதிகளைத் தவிர கிட்டத்தட்ட 100 சிறு சந்நிதிகள் பல இந்துக் கடவுளருக்கும் இவ்வாலயத்தில் அமைந்துள்ளது. மா தாரிணி, நரசிம்ம மூர்த்தி, காளிகாதேவி, நாராயணர், ராமர் என்று ஏகப்பட்ட சந்நிதிகள். அவற்றிற்கான எல்லா விசே ஷங்களும் தவறாமல் நடைபெற்று வருகின்றன.


இவ்வாலயத்தில் இந்துக்கள் அல்லாதோர் கண்டிப்பாக  அனுமதிக்கப் படுவதில்லை. பிற மதத்தாருக்கென அமைக்கப்பட்ட பிரத்யேக இடத்திலிருந்தே அவர்கள் இறைவனை தரிசிக்க முடியும்.
இங்கு சிவராத்திரி மிக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இரவு முழுதும் அபிஷேகம் நடைபெறும். கடுமையான நியமத்துடன் எதுவும் உண்ணாமல் விரதம் இருப்போர் பலருண்டாம். காலை 'மகாதீபம்' ஆலய கோபுரத்தில் ஏற்றப்பட்டு, ஆரத்தி தரிசித்த பின்பே விரதம் முடிவுறும். இரண்டு  லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிவராத்திரியன்று இங்கு தரிசிப்பார்களாம். அடுத்து ஏப்ரல் அல்லது மே  மாதம் வரும் அசோகாஷ்டமி அன்று நடைபெறும் 'ரத்-யாத்ரா'வில் லிங்கராஜாவும், அவரது சகோதரி ருக்மணியும் (பார்வதி விஷ்ணுவின் தங்கை என்றால் ருக்மணி சிவனின் சகோதரிதானே!) பிந்துசாகரில் நீராடி, ரதத்தில் ஏறி ராமேஸ்வர் ஆலயம் சென்று அங்கு ஐந்து நாட்கள் தங்கி வருவாராம். சிவபெருமான் அங்கு ஒரு அரக்கனை வதம் செய்ய  செல்வதாக சம்பிரதாயம்.


பிரம்மாண்டமான இவ்வாலயத்தை பிரமிப்புடன் சுற்றிப் பார்த்து, தரிசித்து, அங்குள்ள கலைச்சிற்பங்களை ரசித்து வெளிவர குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகிறது. இவ்வாலயம் தவிர பல புவனேஸ்வரில் பல ஆலயங்கள் உள்ளன. எல்லா ஆலயங்களும் கலிங்க சிற்பக் கலை அமைப்பைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு மன்னன் கட்டிய ஆலயத்திலும் ஒரு வித்யாசமான அழகைக்  காண முடிகிறது.




ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பரசுராமேஸ்வரர் ஆலயம் மிகப் பழமையானது. அளவில் சிறிய இவ்வாலயம் சிவபெருமானுக்குடையதாயினும், இதன் சுற்றுச் சுவர்களில் மகாவிஷ்ணுசப்த கன்னியர், மயில்வாகன முருகன் போன்ற  தெய்வ உருவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இது கலிங்க, புத்த, ஜைன கால சிற்பக் கலைகள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.வெளியில் ஒரு நீள்வடிவ சகஸ்ரலிங்கம் மிக அருமையாக, அளவெடுத்தாற்போல் செதுக்கப்பட்டு காணப்படுகிறது.


ஒன்பதாம்  நூற்றாண்டைச் சேர்ந்த ராமேஷ்வர் ஆலயம் லிங்கராஜாவின் அத்தை வீடாக கூறப்படுகிறது! லிங்கராஜா ராமநவமிக்கு முதல் நாள் அசோகாஷ்டமி அன்று இங்கு வந்து நான்கு நாட்கள் தங்கிச் செல்வார். இது ராமனும், சீதையும் ராவணவதம் முடிந்து இலங்கையிலிருந்து திரும்பியபோது இங்கு சிவபெருமானை ஸ்தாபித்து வணங்கிய ஆலயமாகும்.


பத்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட  ஒரிஸ்ஸாவின் கலைத் திறனுக்கு அடையாளமாக விளங்கும் முக்தேஸ்வரர் ஆலய அழகு நம் கண்களைக் கட்டி நிறுத்துகிறது. உள்ளே காட்சி தரும் இறைவன் சற்று பள்ளத்தில் காணப்படுகிறார். அர்ச்சகர்கள் விபரமாகக் கோயில் பற்றி சொல்லி, நம்மிடம் ஏதாவது தொகையை எதிர்பார்ப்பது எல்லா ஆலயங்களிலும் வாடிக்கை போலும்! அளவெடுத்தாற்போல அமைக்கப்பட்டுள்ள மண்டபங்களில் அழகுறக் காட்சி தரும் முக உணர்வுகளை தத்ரூபமாக விளக்கும் பெண்களின்  உருவங்கள், குரங்குகள் மற்றும் யானைகளின் பல காட்சிகள், பஞ்ச தந்திரக் கதைக் காட்சிகள்  மனத்தைக் கொள்ளை கொள்கின்றன.வேலைப் பாடுடன் அமைந்துள்ள அலங்கார தோரண வாயில் இவ்வாலயத்தின் கூடுதல் சிறப்பு. 


இங்கு அமைந்துள்ள 'மரீசிகுண்ட்' என்ற கிணற்று நீருக்கு மழலைப் பேறு  தரும் விசே ஷ சக்தி உண்டாம். அசோகாஷ்டமி அன்று மட்டுமே  அந்த நீரை இறைப்பராம். அன்று குழந்தை இல்லாதவர்கள் அந்த நீரை பல மடங்கு ஏலத்தொகை செலுத்தி வாங்கிச் செல்வார்களாம். அன்று ஒரு நாளில் மட்டும் ஆலயத்துக்கு பல்லாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குமாம். 

அதன் அருகிலேயே முற்றுப்  பெறாத நிலையிலுள்ள சித்தேஸ்வரர் ஆலயத்தின் சிற்பங்களும் மிக அற்புதம்

 அதனை ஒட்டி அமைந்துள்ள கேதாரகெளரி ஆலயத்தின் சிற்பங்கள் சிதிலமடைந்திருந்தாலும், இவ்வாலயம் பற்றி சுவையான ஒரு கதை உள்ளது. அரசன் லலடேந்து கேசரி அரசாண்டபோது,கேதார், கௌரி என்ற காதலர்களின் நினைவாக இவ்வாலயத்தை உருவாக்கினான். அந்நாட்டின் பிரஜைகளான இவ்விருவரும் ஒருவரை ஒருவர்  விரும்பி,திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனராம். ஜாதிப் பிரச்னை இவர்களின் திருமணத்தை ஆட்சேபிக்க, நாட்டை விட்டு வெளியேறினர்.செல்லும் வழியில்  கேதாரை ஒரு புலி அடித்துக் கொன்றுவிட, மனம் நொந்த கௌரி அங்கிருந்த ஒரு குளத்தில் குதித்து உயிர் துறந்தாளாம். அதை அறிந்த அரசன் அவர்கள் நினைவாக இவ்வாலயம் எழுப்பினானாம். இங்குள்ள சிவனும், பார்வதியும் கேதார், கௌரி என்ற பெயரில் விளங்குகின்றனர். இங்கு அமைந்துள்ள க்ஷீர குண்டத்தில் ஊறும் நீர் வெண்மையாக  இருப்பதுடன், மிகவும் தூய்மையானதும், அனைத்து நோய்களையும் நீக்கும் சக்தியும், மறுபிறவி இல்லா வாழ்வும் தரக் கூடியதாம். சீதலா அஷ்டமி அன்று லிங்கராஜா இவ்வாலயம் வந்து பார்வதியைத் திருமணம் செய்து கொள்வது இவ்வாலயத்தின் விசே ஷத் திருவிழாவாகும்.



ராஜாராணி ஆலயம் மிகப் பழமையானதுடன், கஜுராஹோ போன்ற ஆண், பெண் இணைந்த காமசூத்திர சிற்பங்களை அதிகமாகக் கொண்டதால், 'காதல் ஆலயம்' எனப்படுகிறது. இது கட்ட பயன்பட்ட கற்களின் பெயரான 'ராஜாராணி' என்பதே இக்கோயிலின் பெயராயிற்றாம்! இதிலுள்ள சிற்பங்களில் பெண்கள் அணிந்துள்ள ஆபரணங்களும், அலங்காரமும், அவர்களின் நடனக் காட்சிகளும் தத்ரூபமாகக் காணப்படுகின்றன.இவ்வாலய இறைவர் பெயர் இந்திரேஸ்வரர். இன்று உள்ளே இறைவனும், வழிபாடும் இல்லை. ஆலயத்தின் 8 வாயில்களிலும் இந்திரன், குபேரன், வாயு முதலான தேவர்கள் காட்சி தருகிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் பாதுகாக்கப்படும் இவ்வாலயம் நன்கு பராமரிக்கப்படுகிறது.


வைட்டல் ட்யுல் ஆலயம் சக்தி ஆலயமாகும். 18ம் நூற்றாண்டு ஆலயமான இதில் சாமுண்டிதேவி  சவத்தை ஆசனமாகக் கொண்டு,மண்டை ஓட்டு மாலையுடன், இரு பக்கமும் ஓநாய், ஆந்தையுடன்,எட்டு கைகளில் கத்தி, கேடயம், திருசூலம், அரக்கனின் வெட்டப்பட்ட தலை, வாள், வஜ்ராயுதம்,வில், அம்பு இவற்றுடன் பயங்கரமாகக் காட்சி தருகிறாள். இவ்வாலய  கர்ப்பகிரகம் இருண்டு இருப்பதால், வெளி மண்டப சிற்பங்களை ரசிக்க காலை வேளையில் செல்வது நலம். 

 (64) யோகினி ஆலயம் புவனேஸ்வரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் ஹிராபூரில் உள்ளது. இது இந்தியாவின் சிறப்பான நான்கு யோகினி கோவில்களில் ஒன்றாகும். .சக்திதேவியின் அம்சமான 64 யோகினிகளின் உருவம் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. பிரதான வழிபாட்டு தெய்வமாக மஹாமாயா வணங்கப்படுகிறாள். இது தாந்த்ரீக சக்தி நிறைந்த ஆலயம். இங்கு மனம் குவித்து வணங்குவோருக்கு அற்புத சித்திகள் கிட்டும் என்பதால் இங்கு நிறைய மக்கள் சென்று தரிசிக்கின்றனர்.



அனந்த வாசுதேவர்  ஆலயம் வைணவக் கோயில். அங்கு ஸ்ரீ கிருஷ்ணர் பலராமன், சுபத்திரையுடன் பூரி ஆலயம் போல் காட்சி தருகிறார்.  இவைதவிர யமேச்வர், பிரம்மேஷ்வர், ராமர் ஆலயம் என்று ஏகப்பட்ட ஆலயங்கள். புவனேஸ்வரிலுள்ள ஆலயங்களை தரிசிக்க மட்டும் இரண்டு நாட்கள் ஆகும். இதைத்தவிர கொனாரக், பூரி மற்றுமுள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு மகிழ இன்னும் மூன்று  நாட்கள் தேவை. கலிங்கத்தின் கலையழகைக் கண்களால் கண்டு களித்து வர ஒருமுறை புவனேஸ்வர் சென்று வாருங்கள்!புவனேஸ்வருக்கு அனைத்து பெரிய நகரங்களில் இருந்தும் ரயில், விமான வசதி உண்டு. மார்ச் முதல் செப்டம்பர் வரை இங்கு செல்வதற்கு  ஏற்ற காலம்.