Wednesday 28 May 2014

முதல் பரிசைப் பெற்றுக் கொடுத்த 'சூழ்நிலை'....

திரு வை.கோபு சார் அவர்களின் சிறுகதை 'சூழ்நிலை'கதைக்கு நான் எழுதிய விமரிசனத்திற்கு முதல் பரிசு கிடைத்ததை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கதையைப் படிக்க ....
 http://gopu1949.blogspot.in/2014/05/vgk-17.html

பரிசு பெற்ற விபரம்...

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-17-01-03-first-prize-winners_27.html

கதைக்கான என் விமரிசனம்...
மன வருத்தத்தில் ஆழ்ந்து இருந்த ஜெயாவை மொபைல் ஒலி கலைத்தது.

ஹாய் ஜெயா.. நான் மீரா பேசறேன்..
எப்படி இருக்க?
இருக்கேன்பா..நீ எப்போ வந்த? ஊர்ல உன் ஹஸ்பெண்ட், இன்லாஸ் எல்லாரும் சவுக்கியமா?


ஹ்ம்ம்...நான் நேத்திக்கு வந்தேன்.உனக்கு கல்யாணத்துக்கு உங்கம்மா, அப்பா பாக்கராளாமே? என் அம்மா இப்போதான் சொன்னா. எப்படிப்பட்ட மாப்பிள்ளைடி எதிர்பார்க்கற?



ப்ச்..எனக்கு கல்யாணமே பிடிக்க்கல மீரா. எங்கப்பா பண்ணின ஒரு காரியம் இன்னிக்கு எனக்கு கல்யாணமே வேண்டாம்னு தோண வெச்சுடுத்து.


அப்படி என்ன பண்ணினார்? உன் பேரன்ட்ஸ் ரொம்ப 'ஐடியல் கப்பிளா'ச்சே?


அப்பிடிதான் நானும் நெனைச்சேன். நேத்து எங்க தாத்தா ஒரு சாலை விபத்தில இறந்து போயிட்டதா ஃ போன் வந்தது. எப்பவும் போல அப்பா பிசினஸ் வேலையா சென்னை போயிருக்கார். அம்மாவா அழுது புலம்பறா . நான் அப்பாக்கு விஷ யத்தை சொன்னா, அப்பா கொஞ்சமும் வருத்தமோ, அதிர்ச்சியோ இல்லாம சிரிச்சுண்டே 'சரி, நான் போய் பார்த்துட்டு சொல்றே'ங்கறார்.இப்படி ஒரு மனுஷரான்னு எனக்கு வெறுத்துப் போச்சு.நாளைக்கு நான் கல்யாணம் பண்ணிக்கப் போறவனும் இப்படி இருந்தா  என்ன பண்ணறது? என் அம்மாவுக்காவது கூடப் பிறந்தவா இருக்கா. என் அம்மா, அப்பாக்கு என்னைத் தவிர யார் இருக்கா?



உங்கம்மா சென்னை போயாச்சா? உன் அப்பா அம்மா வீட்டுக்கு போனாரா? 


அம்மா 'தன்வீட்டு மனிதர்களை அப்பா எப்பவுமே மதிப்பதில்லை' என்று கோபப் பட்டுண்டே போனா.அப்பாவின் பணத்திமிர்தான் யாரையும் மதிப்பதில்லை என்று அம்மாவுக்கு கோபம். அப்பாவும் அன்னிக்கே என் தாத்தாவைப் போய் பார்த்தாராம். காரியம் எல்லாம் முடிந்ததும் வந்து விட்டார். அப்பாவிடம் என் அம்மா எதுவும் பேசவே இல்லையாம். பின்னே இருக்காதா? நானாக இருந்தால் டைவர்சே பண்ணிருப்பேன்.



உன் அப்பா என்ன சொன்னார்?அவரிடம் நீ கேட்க வேண்டியதுதான ?


எனக்கு என் அப்பாவிடம் பேசவே பிடிக்கல.நான் எதுவும் அவர்ட்ட கேக்கல.



வருத்தப் படாத ஜெயா. உன் அப்பா ஏன் அப்படி பேசினாரோ? நேர்ல பேசினா எல்லாம் சரியாயிடும். அம்மாவுக்கு என்னோட கண்டலன்சையும் சொல்லிடு.நான் இன்னும் இரண்டு நாள்ல பாம்பே கிளம்பறேன்.அடுத்த தடவை வரப்போ நாம மீட் பண்ணலாம்.பை ஜெயா!



தன்  அப்பா இறந்த விஷ யத்தைக் கேட்டு வருத்தப் படாத கணவனிடம் எந்த  மனைவிக்கும் கட்டுக்கடங்காமல் கோபம் வருவதை மிக நியாயமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.



அகால மரணம் நடந்த வீட்டில் தன மனைவியிடம் எதையும் விபரமாகச் சொல்ல முடியாத மகாலிங்கம், தன்  மனைவியை அவளது தாய்க்கு ஆதரவாக ஒரு மாதம் விட்டுச் சென்றது அவருக்கு தன்  மனைவி மற்றும் அவளது குடும்பத்தாரிடம் இருந்த அன்பைக் காட்டுவதாக ஆசிரியர் அருமையாக எடுத்துச் சொல்கிறார். 

அதன் பொருட்டே ஈஸ்வரியின் தாயார்  அவரைப் பற்றி மிக உயர்வாகப் பேசுவதையும், இறந்த வீட்டில் போகும்போது சொல்லிக் கொள்ளக் கூடாது என்பதையும் இயல்பாகக் காட்டியுள்ளார் ஆசிரியர்!


ஹலோ..ஜெயா....சௌக்கியமா? அம்மா வந்தாச்சா?


எப்போ வந்த மீரா? என்ன திடீர் விசிட்?


எனக்கு இப்போ அஞ்சாம் மாசம் ஜெயா. அதான் அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன்.



கங்க்ராட்ஸ் மீரா. நான் கண்டிப்பா இந்த முறை உன்னை வந்து பாக்கறேன்.


அப்பறம்....உன் குரல்ல ரொம்ப சந்தோஷம் தெரியறதே? என்ன விஷயம்? கல்யாணமா? அம்மா, அப்பா சண்டை சரியாச்சா?



சரியாச்சு. அப்பா அன்னிக்கு சந்தோஷமா பேசினதா சொன்னேனில்லையா?அன்னிக்கு எனக்காக சம்பந்தம் பேச ஒரு இடத்துக்கு போயிருக்கார் அப்பா. அவங்க எதிர்ல இந்த விஷயத்தைப் பத்திப் பேசினா அபசகுனம் ஆகிடும்னுதான் அப்படி பேசினாராம். அதிலிருந்த நியாயத்தை நானும், அம்மாவும் புரிஞ்சுகிட்டோம்.
அதோட எங்க தாத்தாவோட பாடியை பணத்தை செலவழித்ததாலதான்  சீக்கிரம் வீட்டுக்கு கொண்டுவர முடிஞ்சுதாம். மேலும் தாத்தாவுக்கு இறுதிச் சடங்கு  செலவு முழுக்க அப்பாதான் செஞ்சாராம். இந்த விஷயத்தை அம்மாவிடம் கூட சொல்ல வேண்டாம்னு அப்பா பாட்டிகிட்ட சொன்னதாலதான் அம்மாவுக்கு எதுவும் புரியாம அப்பா மேல கோபமாக இருந்தாங்க. அம்மாவும் சமாதானமாகிட்டாங்க. அப்பாவோட உயர்ந்த குணம் இப்போதான் எங்களுக்கு புரிஞ்சது. 
தாத்தாவின் திடீர் மரணம் என் அம்மா,அப்பா ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் காரணமாக அமைந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இப்ப என்னோட ஆசை அப்பா மாதிரி ஒரு நல்ல, மனைவியைப் புரிஞ்சிகிட்ட ஒரு ஆண்தான் எனக்கு கணவரா வரணுங்கிறதுதான்.




நான் அப்பவே சொன்னேனில்லையா? ஏதோ ஒரு காரணத்தால்தான் உன் அப்பா அப்படி நடந்துகிட்டிருக்கார். உங்கப்பா உண்மையிலேயே ஒரு ஜெம்தான்.இது போ
ல ஒரு அப்பா கிடைக்க நீ ரொம்பவே கொடுத்து வெச்சிருக்க. உன் ஆசைப்படி கணவர் கிடைக்க வாழ்த்துக்கள்.


'நீங்கள் பணக்காரர் என்பதால்தானே என் அப்பா இறந்தபோது வருத்தப்படவில்லை.பணத்தால் என் அப்பாவை வாங்க முடியுமா?'என்று ஈஸ்வரி கேட்டது அவள் கோபம்.


பிள்ளை வீட்டாரிடம் திருமண விஷயம் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது இந்த துக்க செய்தியைச் சொன்னால் அது அபசகுனமாகிவிடும் என்று சமாளித்தது அவருடைய சமயோசித புத்தி.



ஆனால் அந்தப் பணத்தால் மனிதஉயிரை வாங்க முடியாது:ஆனால்  உயிரற்ற அவர் உடலை பணம் இருந்ததால்தான் விரைவில் வாங்க முடிந்ததுடன், மற்ற செலவுகளையும் தன்னால் செய்ய முடிந்தது என்று மகாலிங்கம் சொன்னது அவரது உயர்ந்த குணம்.



அந்தப் பணத்தைக் கொடுத்து தான் உதவியது யாருக்கும் ஏன் தன்  சொந்த மனைவிக்குக் கூடத் தெரியக்கூடாது என எண்ணியது அவரின் பெருந்தன்மை. 



மாமனார் ஆசியால் தன் மகளின் திருமணம் சுபமாக முடியும் என்று சொன்னது அவரது நம்பிக்கை.
முதலில் கதையைப் படித்தபோது 'இப்படியும் ஒரு மனிதரா' என்று மகாலிங்கம் மேல் ஏற்பட்ட வெறுப்பு பின்பு அவரது நற்குணத்தால் சிறப்பாக மாறியது கதாசிரியரின் அழகிய கதை நடையினால்!


இந்த நல்ல குணங்களைக் கொண்ட ஒரு உத்தமமான மகாலிங்கம் என்ற மாமனிதரை தம் அழகிய சிறுகதை மூலம் நமக்கு காட்டிய ஆசிரியருக்கு பாராட்டுகள் பல. 



பல நேரங்களில் நமக்கு எதிராளி மேல் பட்டென்று கோபம் வருவது, நாம் அவர்களின் சூழ்நிலைகளைப் பற்றி அறிந்து கொள்ளாததால்தான்.இருவரும் மனம் விட்டுப் பேசி நிலைமையைத் தெரிந்து கொண்டால் பல பிரச்னைகள் மிக எளிதாகத் தீர்வடையும்.



வீடோ, அலுவலகமோ,மனைவியிடமோ, நண்பர்களிடமோ, எந்த சூழ்நிலையிலும் நாம் செய்தது சரியோ, தவறோ அதைப் பற்றி எடுத்துச் சொல்லி விளக்கம் கொடுக்கும்போது இருவருக்கும் இடையிலுள்ள விரோதம் மறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வழி ஏற்படும்என்பதையே இந்தக் கடுகளவு கதை
மூலம் மிக சிறப்பாக, எளிதாக, சொல்லியிருக்கும் ஆசிரியரை எவ்வளவு  பாராட்டினாலும் தகும். 



ஜெயாவின் திருமணம் அவள் அப்பா பார்த்த பையனுடன் அமோகமாக நடக்கப் போவதைக் குறிப்பாக அவளை 'மணம களா'கக் குறிப்பிட்டு சொல்லிவிட்டார் ஆசிரியர்! ஜெயாவுக்கு அவள் தந்தையைப் போன்றே அருமையான கணவர் கிடைக்க நாமும் வாழ்த்துவோம்!










Wednesday 7 May 2014

அன்புள்ள அம்மா வணக்கம்...

அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு அன்று,இவ்வருடம் 11ம் தேதி கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் ஒன்பது  ஆண்டுகளுக்கு முன் மறைந்த என் அம்மாவைப் பற்றி நினைவு கூர்கிறேன்.



அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ..


மாதா பிதா குரு  தெய்வம்...

ஆதி பகவன் முதற்றே உலகு..
எல்லாவற்றிலும் முதல் மரியாதை தாய்க்குதான்.எல்லாருக்குமே அவரவர் தாய் உயர்வுதான்.
பட்டினத்தார்,ஆதி சங்கரர், சத்யசாயி பாபா போன்ற மகான்களும் கூடத் தாயன்பிற்கு  தலை வணங்கியவர்களே.


அம்மா எனும்போதே நமக்குள் ஒரு அன்பும், பாசமும் உருவாவதை எவரும் உணர முடியும். ஒரு தாய் பத்து மாதங்கள் தன குழந்தையை சுமந்து, எவ்வளவோ துன்பங்கள் அடைந்து பெற்றாலும், அவள் தன் குழந்தையைப் பார்த்த அடுத்த நொடியே அத்தனை வலியும்,சிரமமும் ம(ப)றந்து போய் விடுமே! 


தான் பெற்ற குழந்தைகளை நல்வழிப் படுத்தி வளர்க்கும் பொறுப்பு பெரும்பாலும் தாயைச் சேர்ந்ததே.தானாகத் தன்  செயல்களைச் செய்து கொள்ளும் வயது வரை ஒரு குழந்தைக்கு தாய்தான் எல்லாமே. 
தாய் நமக்கு தெய்வம் எனில் அவள் சுமந்த வயிறுதானே நாம் குடியிருந்த கோயில்.


அம்மா என்கிறபோதே என் அம்மாவின் நினைவு வந்து கண்களை கண்ணீர் மறைக்கிறது. மறைந்த அம்மாவை நேரில் பார்க்கவோ, பேசவோ முடியாவிட்டாலும், பல சந்தர்ப்பங்களில் அம்மா சொன்ன அறிவுரைகள்தான் இன்றும் என்னை வழிநடத்திச் செல்கின்றன.


பிறந்தது முதல் என்னைப்  பாலூட்டி, தாலாட்டி ' சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா'என்ற பாட்டைப் பாடி,கொஞ்சி வளர்த்த என் அம்மா, பள்ளிக்கு அனுப்பும்போது பாரதி தாசனின் பாட்டைப் பாடுவார்.

'தலைவாரிப் பூச்சூட்டி உன்னை பாடசாலைக்குப் போ என்று சொன்னாள்  உன் அன்னை' என்ற பாட்டைப் பாடி மலைவாழையாகிய கல்வியில் சிறப்புற செய்தார்.
மாலையில் கண்டிப்பாக சுலோகங்களை சொல்ல வேண்டும்.இரவு இதிகாச,புராண கதைகளுடன் கையில் அம்மா பிசைந்து போட்டு சாப்பிடும் உணவுடன்,ஆன்மீக உணர்வும், நல்ல எண்ணங்களும் உட்செல்லும்.அந்த சாப்பாட்டின் சுவை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் இருக்காது!
 
இந்தக் காலக் குழந்தைகள் தலையும் பின்னுவதில்லை.....பூவும் வைப்பதில்லை! எல்லாம் பாப் தலை...பூ வைக்க, தோடு போட  பள்ளியில் தடை. தொலைக் காட்சியும், கம்ப்யூட்டரும்தான் அவர்களின் ஒரே இலக்கு.

இசை, ஓவியம், கோலம்,தையல்,கைவேலை இவை எல்லாவற்றிலும் எனக்கு ஆர்வத்தை உண்டாக்கியவர் என் தாய்தான். சிறு வயது முதலே எல்லா காரியங்களிலும் ஒரு ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க சொல்லித் தந்தார்.
 சிறிதும் கோணலில்லாமல் வாசலை நிறைத்து என் அம்மா போடும் கோலம் இன்னும் எங்கள் கண்களிலேயே நிற்கிறது.விதவிதமாக சமைப்பதிலும் திறமைசாலி.


'செய்வன திருந்தச் செய்' என்ற வாக்கிற்கேற்ப வீட்டைப் பெருக்கினாலும், பாத்திரம் தேய்த்தாலும்,துணிகளைத் துவைத்தாலும் எதையும் சுத்தமாகச் செய்ய வேண்டும். அந்தத் துணிகளை காயப்போடுவதில்  கூட ஒரு முறையைக் கடைப்பிடிப்பார் என் அம்மா. துளியும் சுருக்கமில்லாமல், (அந்நாளில்  வாஷிங் மெஷினெல்லாம் கிடையாதே)அழகாக,வரிசையாக  உலர்த்தி எடுத்து மடித்து வைப்பார். இஸ்திரி போடவே தேவையில்லாமல் துணிகள் பளபளக்கும். 
மாலையில் எங்களுக்கு சரியாக செஸ், கேரம் போர்ட் என்று விளையாடவும் செய்வார்.
 
அழகுணர்ச்சியிலும் என் அம்மா சற்றும் குறைந்தவரல்ல.திருத்தமாக, நாகரீகமாக அலங்காரம் செய்து கொள்ளும் முறை நான் என் அம்மாவிடம் இருந்து கற்றதே. எழுதுவதில் ஆற்றல் கொண்டவர், அப்பொழுதே தமிழ் மாத இதழ்களில் எழுதுவார். 

வீட்டுப் பராமரிப்பு முதல் குழந்தைகளை வளர்ப்பதுவரை,நான் துவண்ட நேரங்களில் என்னைத் தூக்கிவிட்டு, அழுத சமயங்களில் ஆறுதல் கூறி அவ்வப்போது என் அம்மா கொடுத்த அறிவுரைகளும், ஆலோசனைகளும்தான் இன்றும் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறது.என் அம்மாவின் வழிப்படிதான் என் குழந்தைகளையும் வளர்த்தேன். 

இன்று அம்மா உயிருடன் இல்லை.
என் உள்ளத்தில் இருக்கிறார்.
என் உணர்வுகளில் இருக்கிறார்.
என் உயிரில் கலந்திருக்கிறார்.


To my beloved Mother and best friend,who i know still watches over me.

Thank u 4 all of ur amazing wisdom,and the very special love and encouragement u always gave me...

Let's not forget either that the baby a mother cares for is an object of intense beauty.a child is perfect in his mother's eyes.his skin, his hair, his smile are all brand new and their beauty gives daily preasure.

Only a mother knows the delight of watching their child grow up. ...

Mother love is the fuel that enables a normal human being to do the impossible.

அனைவருக்கும் என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்...


Sunday 4 May 2014

முத்தான கதை விமரிசனத்திற்கு முதல் பரிசு....

நீ முன்னாலே போனா ....நா பின்னாலே வாரேன் ...

திரு வை.கோபு சார் அவர்களின் மேலே குறிப்பிட்ட கதைக்கு நான் எழுதிய விமரிசனத்திற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.கதையைப் படிக்க கீழே கொடுத்துள்ள அவரது தளத்திற்கு செல்லவும்.

 http://gopu1949.blogspot.in/2014/04/vgk-14.html

அதற்கான என் விமரிசனம்...


மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.....இது அந்நாளைய பெரியோர் வாக்கு.
அந்த பெரிசு என்ன பேச்சு பேசுது பாரு...ரொம்ப திமிருதான்...இது இந்தக் கால இளசுகள் பேச்சு.
அப்படிப்பட்ட முதியோர்களையும், பல முதியோர்களின் வாழ்வில்  தம் கடைசி நாட்களைக் கழிக்க வலுக்கட்டாயமாக அனுப்பப்படும் முதியோர் இல்லங்களையும் மையமாகக் கொண்ட வாழ்வியல் தத்துவத்தை விளக்கும் அருமையான கதையை எழுதிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
ஒரு தந்தையை, தன்னை பெற்று, வளர்த்து,ஆளாக்கி, நல்லவற்றை, தீயவற்றைச்  சொல்லிக் கொடுத்து, ஒரு நல்ல மனிதனாக உருவாக்கியவரை பாரமாக எண்ணி 'என் வீட்டில் இருக்காதே' என்று சொல்லாமல் சொல்லி முதியோர் இல்லத்தில் கொண்டு விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் செல்பவனையும், 'பார்த்து போப்பா' என்று சொல்லத்துடிக்கும் அந்தப் பித்தான தந்தையின் பாசத்தை கல்மனம் கொண்ட அந்தப் பிள்ளை எப்படி அறிவான்?
நாம் பஸ்ஸிலோ, ரயிலிலோ, மார்க்கெட்டிலோ பார்ப்பவர்களிடம் கூட அவர்கள் குடும்பம் பற்றிக் கேட்பதுண்டு!அந்த இல்லத்தில் நிரந்தரமாகத் தங்க வந்திருந்த அந்தப் புதிய முதியவரைப் பற்றி அறிய அத்தனை பேரும் ஆவலாய் இருந்ததில் வியப்பென்ன?அவர் கதையைக் கேட்ட அரட்டை  ராமசாமிக்கு மட்டுமல்ல, நமக்கும் அவர் சொன்ன வி ஷயங்கள் சற்று சுவாரசியத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன.
மூன்று குழந்தைகள், திருமணமான பேத்தி, எண்பதுக்குமேல் வயது, மனைவி இறந்து 15 நாட்களாவதற்கும் முதியோர் இல்லம்....அதுவும் மனைவியை அவரே கொன்று விட்டதாக குற்றச் சாட்டு.....இவை அந்த முதியவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆவலை நமக்கும் உண்டாக்கி விடுகின்றனவே! இந்த இடத்தில் ஆசிரியர் 'தொடரும்' போட்டு விட்டாரே?

"என்னங்க...தூங்கிட்டீங்களா? எப்படி இருக்கீங்க? இந்தப் பிள்ளைங்களை நெனைச்சாலே எனக்கு ரொம்ப கோபமா வருதுங்க. நான் போயி ஒரு  மாசம்கூட ஆகலியே? அதுக்குள்ளே உங்களை இங்க கொண்டுவந்து விட்டுட்டாங்களே? என்னை நீங்கதான் கொலை செய்துட்டதா வேற சொல்லிட்டாங்களே? என்னால தாங்க முடியலிங்க."



"அழாத கோமு! அவங்களுக்கு நம்ம அன்பும், பாசமும் புரியல. உன்னை எல்லா காரியமும் முறையா பண்ணி மேல அனுப்பினார்களே...இங்க எப்பிடி வந்த?"
"என்னங்க...இப்படி கேட்டிட்டீங்க? உங்களை விட்டு நான் எங்க போவேன்?"
"சரி...வருத்தப்படாம தூங்கு. நானும் இந்தப் புது இடத்துல தூங்க முயற்சி பண்றேன்."


விமரிசனத்தைத் தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்..

 http://gopu1949.blogspot.in/2014/05/vgk-14-01-03-first-prize-winners.html