Friday 26 April 2019

வெயிலோடு_உறவாடி



படிக்கும்போது  விடுமுறை நாட்களை நினைக்கும்போதே ...அதுவும் கோடை விடுமுறைஎன்றாலே மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது?

ஒவ்வொரு வருடமும் போவது ஒரே இடம்தான் என்றாலும் அலுத்ததில்லை! கும்பகோணத்திலிருந்த என் தாய் வழி தாத்தா வீட்டிற்குத்தான் நாங்கள் செல்வோம். நான் எழுதும் அனுபவம் 1960களில்..!

என் பெரிமா, சித்தி குடும்பமும் அங்கு வந்து விடுவார்கள்.என் பாட்டி சிறு வயதிலேயே இறந்து விட்டார். ஏழு குழந்தைகளையும் என் தாத்தா  தானே வளர்த்தார். பெரிய மாமா குடந்தையில் வேலையில் இருந்தார். அவர் குழந்தைகள், நாங்கள்,என் பெரிமா, சித்தி குழந்தைகள் என்று ஒரு டஜனுக்கு மேல்!

நாங்கள் சென்னையிலிருந்து ரயிலில் unreserved ல்தான்  செல்வோம்.துணிமணிகளுக்கு டிரங்க் பெட்டி...கூடவே தலைகாணி,போர்வை,ஜமக்காளத்துடன் ஒரு படுக்கை கட்டி விடுவார் அப்பா!

இரவு ரயிலில்தான் பிரயாணம்..
ரயிலில் ஏறியதும் என் அம்மா
அப்பா கீழ் இரண்டு சீட்களில் என்  சிறிய தம்பிகளுடன்  படுத்து விட, நானும் என் பெரிய தம்பியும் கீழே சீட்களுக்கு இடையில் ஜமக்காளம் விரித்து படுப்போம்!

சீட்களுக்கு கீழே எங்கள் டிரங்குப் பெட்டிகள்! அவற்றுக்கிடையே நடமாடும் கரப்பான்பூச்சிகளைப் பார்த்தால் பயத்தில் தூக்கமே வராது. இன்று நினைத்துப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது!

ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு மாட்டுவண்டி யில்தான் செல்வோம். அதில் பின்னால் உட்கார எனக்கு எப்பவும் இடம் கிடைத்ததில்லை! முன்னால் என் அம்மாவும், நானும்..பின்னால் என் அப்பா தம்பிகள்.

காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஜாலியாக உட்கார்ந்து வரும் தம்பிகளைப் பார்க்க எனக்கு கோபமும் அழுகையும் வரும்!

வாசலும் கொல்லையும்...தாழ்வாரமும் திண்ணையும்...ரேழியும் முற்றமுமாக.
என் தாத்தா வீடு மிகப் பெரியது. கொல்லையில் மாட்டுக் கொட்ட
கையில் எப்பவும் 2,3 மாடுகள் உண்டு.

கூடத்தின் நடுவில் பெரிய அகல ஊஞ்சல். அந்த ஊஞ்சலில் ஆடுவதற்கே எங்களுக்குள் சண்டை நடக்கும். சில சமயம் அடிதடி கூட நடக்கும்!

எங்கள் தாத்தா வீடு குடந்தை பக்தபுரி தெருவில். தாத்தா வக்கீல். அவருக்கு தனி அறை. அங்கு நாங்கள் செல்ல அனுமதி கிடையாது. கதவருகில் நின்று எட்டிப் பார்ப்போம்.

அவர் கட்சிக் காரர்களிடம் கண்டிப்பாக பேசுவது பிரமிப்பு என்றால்...அவன் கூண்டில் நின்று எதிர்க்கட்சி வக்கீல் கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லிக் கொடுப்பது வேடிக்கையாக இருக்கும்!

வெள்ளைவெளேர் பஞ்சகச்ச வேஷ்டியும்..கருப்பு கோட்டும்..
தலையில் டர்பனும்..கையில் கேஸ்கட்டுமாக தாத்தா செல்வதைப் பார்க்க பெருமையாக இருக்கும். அந்தத் தெருவில் இருந்த நிறைய வக்கீல்கள் என் தாத்தாவிடம்தான் டர்பன் கட்டிக் கொள்ள வருவார்கள்!

தாத்தா மிகவும் கண்டிப்பு. அவர் பெண், பிள்ளைகளே அவரிடம் மிக பயந்து மரியாதையாகப் பேசுவார்கள். தாயில்லாத குழந்தைகளை சிறப்பாக வளர்க்கவே தங்களிடம் மிக கண்டிப்பாக நடந்து கொள்வதாக அம்மா சொல்வார். தாத்தா கோர்ட்டுக்கு சென்றபின்பே எல்லாரும் குரல் உயர்த்தி ஜாலியாகப் பேசுவார்கள்! மே மாதம் கோர்ட் விடுமுறை விட்டதும் வீடே அமைதியாகி விடும்..!

ஒருநாள் நாங்களும் கோர்ட் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தாத்தாவிடம் பயந்து கொண்டே கேட்க...அங்கு வந்து சத்தம் எல்லாம் போடக்கூடாது. பேசாமல் அமைதியாக இருக்கணும்...என்று சொல்லி அழைத்துச் சென்றார்.

கம்பீரமாக நடக்கும் அவர் 'எங்கள் தாத்தா' என்று கர்வமாக  உடன் செல்வோம்!

அங்கு அனைவரும் அவருக்கு
கொடுக்கும் மரியாதையை விழி உயர்த்தி பார்த்து மகிழ்வோம்!

அங்கு தாத்தா வாதாடுவதை வாய் பிளந்து பார்த்து ரசிப்போம்!
ஆனால் எங்கள் குடும்பத்தில் எவருமே வக்கீலாகவில்லை.

அக்ஷய திரிதியை 12 கருடனுக்கு என் அப்பா அழைத்துச் செல்வார். சுவாமி தரிசனம் செய்கிறோமோ இல்லையோ...கடைகடையாக நீர்மோர் பானகம் வாங்கிக் குடிப்போம்!

இடையில் ஒருநாள் சுவாமிமலை ட்ரிப்..எங்கள் குலதெய்வம் சுவாமிநாதன் தரிசனம்..அங்கிருந்த எங்கள் சின்னதாத்தா வீட்டுக்கு சென்று தோப்பு துரவெல்லாம் சுற்றி வருவோம்!

காலை நேரங்களில் அந்தக்கால பெரிய மர்ஃபி ரேடியோவில் நியூஸ் கேட்க அத்தனை பெரியவர்களும் கூடத்தில் ஆஜராகி விடுவார்கள். என் தாத்தாவின் தங்கை பெண் சரோஜ் நாராயணசாமி. அந்தக் காலத்தில் நியூஸ் படிப்பதில் அவர் மிகவும் பிரபலம்.அவர் நியூஸ் படிப்பதும் மிக அழகாக இருக்கும்.

கொல்லை கிணற்றடியில்தான் குளியல்! தண்ணீர் இழுத்து குளிக்கும் சுகம் இருக்கே...இன்று தேட வேண்டியிருக்கு🙁

மதியம் எல்லோருமாக பல்லாங்குழி..
தாயம்..கேரம்போர்ட்..ட்ரேட் என்று விளையாடி மகிழ்வோம்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சித்தியுடன் காவேரி பாலம் தாண்டிச் சென்று கல்லூரியை (பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வரும் கல்லூரி!) சுற்றிப் பார்த்து விட்டு காவேரிக்கு சென்று மணலில் விளையாட்டு...!

மாலை சுவாமியிடம் தீபம் ஏற்றியதும் எல்லா பெரியவர்களுக்கும் வரிசையாக நமஸ்காரம்...அந்தக்கால எக்ஸர்சைஸ்!

எங்கள் தம்பிகள் வெளியில் சென்று விளையாடுவார்கள்.எங்களுக்கு
வெளியே போய் விளையாட தடா! கொல்லைப்புறம் பாண்டி
விளையாட மட்டுமே அனுமதி! பாட்டு..தையல்..கோலம்..நடனம்..
ஸ்லோகம் என்று எங்கள் அம்மாக்கள் சொல்லித் தருவார்கள்.

இரவு எல்லாருக்குமாக சாதம் பிசைந்து அம்மாவோ, பெரிமாவோ கையில் போட்டுக் கொண்டே அவர்களின் அந்தநாள் கதையைச் சொல்ல...சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டே வயிறு நிறைந்தது கூடத் தெரியாமல் நாங்கள் சாப்பிடுவோம்!

கூடத்தில் எல்லோரும் வரிசையாகப் படுக்க வேண்டும். எதிரில் திறந்த முற்றம். வாசல் பக்கம் இருக்கும் காமிரா உள்ளில் பெண்கள்...வாசல் திண்ணையில் ஆண்கள்...
ஊஞ்சலில் எங்கள் தாத்தா படுத்துக் கொள்வார்.

என் மாமா,மாமி அங்கு திருடன் வந்த கதையெல்லாம் சொல்ல..எங்களுக்கு இரவு தூக்கமே வராது!

கொல்லையில் மாடு விடாமல் கத்தினால்...பாம்பு வந்திருக்கும்...
என்று என்மாமா ஒரு கழியும், அரிக்கேன் விளக்கும் எடுத்துச் சென்று பார்த்து விட்டு வருவார்.

சில நேரம் பாம்பு சாக்கடை வழியே உள்ளே வந்து அடித்த கதை
யெல்லாம் சொல்ல..பயத்தின் உச்சிக்கே சென்று விடுவோம் நாங்கள்!

அப்பொழுதெல்லாம் வெளிச்சமான லைட்டே பார்த்ததில்லை! ட்யூப் லைட் கிடையாது. எல்லா அறைகளும் அரையிருட்டாக இருக்கும். கூடம் தாண்டி சமையலறை செல்லும் வழியில் இருக்கும் ஸ்டோர் ரூமில் எப்பவும் கரப்பான்பூச்சி..பாச்சை..
பல்லி நடமாட்டம்தான்! அந்த ரூமை நான் ஓடித்தான் கடந்து செல்வேன்!

சமயத்தில் பால் தயிரில் கூட கரப்பு நீச்சலடிக்கும்! மாமி அதை அநாயாசமாக தூக்கிப் போட்டு விட்டு உபயோகப் படுத்துவார்! அதைப் பார்க்கும்போது அருவெறுப்பாக இருக்கும்....சந்தோஷமாக எல்லாரும் அரட்டையுடன் உட்கார்ந்து சாப்பிடும்போது அந்த கரப்பு விஷயமே மறந்து போகும்!

அன்று பெரிய மால்களோ..தீம் பார்க்குகளோ...ஹோட்டல்களோ கிடையாது. வீட்டு சாப்பாடும்..
கோயில்களுக்கு செல்வதும்தான் பொழுதுபோக்கு! அதுவே மனதுக்கு அபரிமிதமான சந்தோஷத்தைக் கொடுத்தது.

சென்னையிலிருந்து செல்லும் எங்களுக்கெல்லாம் அங்கு கொல்லைக் கோடிக்கு செல்லும் அந்தநாளைய கழிவறை மிகப் பெரிய பிரச்னை!

இரவில் ஃபேன் கிடையாது..விசிறி
தான். ஆனாலும் வெய்யில் காலத்தில் இன்றுபோல் வேர்த்து வழிந்து அவதிப் பட்டதில்லை!

எந்த இடத்துக்கும் நடந்துதான் சென்றோம்.கால் வலித்ததில்லை.
உச்சி வெயிலும் சுட்டதில்லை!

நம் உறவுகளுடன் இருக்கும்போது கிடைக்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சியில் வெயிலும் உறவானது!

நாங்கள் ஊருக்கு கிளம்பும்போது என் தாத்தா தன் பெண்களைக் கட்டி அணைத்துக் கண் கலங்கும்போது அவரின் பாசம் வெளிப்படும்.

அன்று சென்னைக்கும் குடந்தைக்கும் ஏகப்பட்ட வித்யாசங்கள்...பல அசௌகரியங்கள்..ஆனாலும் மனம் அடுத்த கோடை விடுமுறைக்கு குடந்தை செல்ல  நாட்களை எண்ண ஆரம்பிக்கும்!

அந்த நாட்களின் மறக்காத நினைவுகளில் மனம் இன்றும் லயிக்கிறதே!

அந்த நாட்களின் சந்தோஷத்தை எண்ணி இன்றும் ஏங்குகிறதே!

இன்றும் நாங்கள் ஒன்று சேரும்போது அந்தநாள் ஞாபகங்களைப் பேசி மகிழ்வோம்!

நாங்கள் விளையாடிக் களித்த என் தாத்தாவின் வீடு இன்னும் அப்படியே இருக்கிறதா...மாற்றிக் கட்டியிருப்பார்களா என்று பார்க்க இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கு சென்றேன். வெளியில் க்ரில் கேட்டும், க்ரில் சன்னல்களும் தவிர அப்படியே சிறிதும் மாறாமல்  இருப்பதைக் கண்டு ஆச்சரியம்!

அதற்கு எதிரில் இருக்கும் வீட்டில்தான் நான் பிறந்தேன். தற்சமயம் பஹோலா என்ற பெயரில் இருக்கும் அன்றைய ஹோமியோபதி ஆஸ்பத்திரி. அங்கு ஆஸ்பத்திரியை விரிவு படுத்தும்போது என் தாத்தா எதிர் வீட்டிற்கு மாறிவிட்டார்.

அங்கிருப்பவர்கள் அனுமதியுடன் உள்ளே சென்று பார்த்தபோது பழைய நினைவுகள் மனதில் வந்தன. அன்று எங்களுடன் இருந்து இன்று மறைந்து விட்டவர்களை எண்ணிக் கண்கள் கலங்கி விட்டேன்.

கூட வந்த என் கணவர்...
வாழ்க்கைன்னா அப்படித்தான். இன்னிக்கு இருப்பது நாளைக்கு இல்லாமல் போகும்...என்று தத்துவம் பேசினார்.

...இந்த வீடு இருக்கே.அது மாறியிருந்தால் எனக்கு இவ்வளவு emotions இருக்காதோ...என்றேன். வீட்டு வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

மறக்காத நினைவுகளாய் மனதுக்கடியில் கிடைந்த நினைவுகளைத் தட்டி எழுப்பி வெயிலோடும் சுற்றங்களோடும் உறவாடிய அந்த நாட்களை திரும்பிப் பார்க்க வைத்த மத்யமருக்கு நன்றி🙏

வெயிலோடு உறவாடி
உறவோடு விளையாடி
சிறியோரும் பெரியோரும்
பரிவோடு உரையாடி
தெரியாத கதைகளும்
அறியாத கலைகளும்
சிரிப்போடும் களிப்போடும்
சிறப்பாக சிலிர்ப்பாக
கருத்தாகக் கேட்டு
பெருமையுடன் குதூகலித்து
பிரியா விடை பெற்று
திரும்பச் செல்லும்
அருமையான நாட்களை
இன்று நினைத்தாலும்
இருவிழிகள் கலங்குகிறதே!

Monday 22 April 2019

#என்_தலைதீபாவளி_ அனுபவம்


மத்யமர் தலை தீபாவளி!

மத்யமர் தளத்தின் தலைதீபாவளி நாளில் நான் என் தலைதீபாவளி நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

தீபாவளி என்றாலே மனம் குதூகலிப்பதை மறுக்க முடியாது. அதிலும் தலைதீபாவளி என்றால் ஸ்பெஷல் ஆச்சே! என் தலைதீபாவளி ஒரு மறக்க முடியாத தீபாவளி. 

என் புகுந்த வீடு திருச்சி. என் கணவர் அங்கிருந்த வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். என் பெற்றோர் முசிறியில் இருந்தார்கள். முசிறி சிறிய , இயற்கை அழகுகள் நிறைந்த  கிராமம்.அந்தணர்கள் மட்டுமே  இருந்த  அந்தக்காலத்து அக்ரஹாரம். நல்ல அகலமான தெரு. அகண்ட காவேரி ஓடும் அழகான ஊர். 
என் அப்பா கரூர்வைஸ்யாவங்கியில் மேனேஜராகப் பணி புரிந்தார். பெரிய விசாலமான அந்தக்கால வீடுகள்.  நாங்கள் குடியிருந்த வீடும் அச்சு அசலான அக்ரஹாரத்து வீடு. வாசலில் பெரிய திண்ணை, ரேழி, கூடம், தாவாரம், கிணறு, நீண்ட கொல்லைப்புறம் என்று பெரிய்ய வீடு. அந்த வீட்டில்தான் என் திருமணம் நடந்தது. 

திருச்சியிலிருந்து முசிறி ஒருமணி நேரப் பயணம்.  தீபாவளிக்கு முதல்நாள் காலை எங்களை அழைத்துச் செல்ல என் தம்பி வந்திருந்தான்.  பஸ்ஸிலிருந்து இறங்கியவன், தான் வீட்டுக்கு செல்வதாகச் சொல்லி விரைந்து சென்றுவிட்டான். 'எதற்கு இப்படி ஓடுகிறான்' என்று எனக்கு ஆச்சரியம்! நாங்கள் வீட்டை நெருங்கும்போது பட்டாசு, வாணம் என்று என் மூன்று தம்பிகளுமாக வெடிக்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு ஒரே பட்டாசு சத்தம். எல்லா வீட்டிலிருந்தவர்களும் வெளியில் வந்து பார்க்க, எனக்கோ பெருமை தாங்கவில்லை. எப்படிப்பட்ட வரவேற்பு மாப்பிள்ளைக்கு! 

என் கணவர் மச்சினன்களுடன் வெடிக்க ஏகப்பட்ட வெடி, ராக்கெட் எல்லாம் வாங்கி வந்திருந்தார். அன்று இரவு ராக்கெட் வைக்க பாட்டிலெல்லாம் ரெடி செய்து கொண்டு வெடிக்க ஆரம்பித்தார்கள். அந்த நாட்களிலெல்லாம் தீபாவளிக்கு முதல்நாள் இரவும் வெடிக்கும் வழக்கம் உண்டே. எனக்கு எப்பொழுதும் பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் கிடையாது. நானும், என் அம்மாவும் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

எங்கள் வீட்டில் நிறைய பட்டாசு இருப்பதைப் பார்த்து பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டில் இருந்த என் தம்பிகளின் நண்பர்களும் சேர்ந்து கொள்ள உற்சாகம் அதிகரித்தது. ஆளுக்கு ஒரு பாட்டிலில் ராக்கெட்டை வைத்து, சற்று இடைவெளி விட்டு நின்று , சேர்ந்து பற்றவைத்தார்கள். ஒவ்வொன்று ஒவ்வொரு திசையில் போக, அதிக உயரம் செல்லாத ராக்கெட் ஒன்று நேராக எங்கள் வீட்டு எதிரில் இருந்த தோட்டத்தில் போய் விழுந்து, பெரிதாக எரிய ஆரம்பித்து விட்டது. வெளியில் இருந்த முள்வேலி காய்ந்து இருந்ததால் நிமிடத்தில் நெருப்பு சரசரவென்று பெரிதாக எரிய ஆரம்பித்து விட்டது.

முள்வேலியைத் தாண்டிச் செல்ல தயங்கியபடி  எல்லோரும் விலகி நிற்க என் கணவர் சட்டென்று பக்கெட்டில் தண்ணீரை எடுத்துக் கொண்டு ஓடிப்போய் வேலியைத் தாண்டிச் சென்று நெருப்பில் கொட்டினார். என் அப்பா, பக்கத்து வீட்டுக்காரர்களும் ஆளுக்கொரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்தார்கள். அத்தனை வாளித் தண்ணீரும் கொட்டிய பின் கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கு பிறகே நெருப்பு அணைந்தது. 

அவசரமாக ஓடிய என் கணவர் செருப்பு போட்டுக் கொள்ளாமல் சென்றுவிட்டார். கால் முழுதும் வேலி கிழித்து காலில் முள் குத்தி நடக்க முடியாமல் திண்ணையில் அமர்ந்து விட்டார். எனக்கோ அழுகையே வந்து விட்டது. முழங்கால் வரை முள் கீற்றி ஒரே ரத்தம். மாப்பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே என்று என் அப்பா மிகவும் கவலையாகி விட்டார். காலை துடைத்து மருந்து போட்டு விட்டேன். 

தெருவில் இருந்தவர்கள் வந்து விசாரித்ததோடு, "வெறும்காலோடு போய் முள்ளைக் கூட கவனிக்காமல் தண்ணீர் கொட்டினாரே. உன் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர். சமயத்தில தன்னைப் பத்தி நினைக்காம வேகமா ஓடினாரே. நல்லவேளை..கொஞ்சம் தாமதிச்சிருந்தாலும் தோட்டம் முழுக்க நெருப்பு பிடிச்சிருக்கும்" என்று அவரைப் பாராட்டியபோது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை!

மறுநாள் தீபாவளி விசாரிக்க வந்தவர்கள் எல்லாரும் எங்கள் வீட்டு மாப்பிள்ளையின் வீரம் பற்றி புகழ்ந்து என்னவரை ஹீரோவாக்கி விட்டார்கள்!

பாசத்தோடும்,  பெருமையோடும் நான்  அவரைப்  பார்க்க, காதலோடும், கனிவோடும் அவர் என்னைப் பார்க்க அந்த தலைதீபாவளி எங்களால் என்றும் மறக்கமுடியாத தலைசிறந்த தீபாவளியாகிற்று! 

சின்ன வயதில் பெற்றோர், உடன்பிறந்தவர்களோடு அம்மா செய்யும் பட்சணங்களோடு உல்லாச தீபாவளி! திருமணத்திற்குப் பின் கணவர், குழந்தைகளுடன் உற்சாக தீபாவளி! இப்பொழுது பிள்ளை, மாட்டுப் பெண்,பேரக் குழந்தைகளுடன் சந்தோஷ தீபாவளி! நாளை குழந்தைகள் வந்துவிட்டால் நேரம் இறக்கை கட்டிப் பறக்கும்! 

அன்பு மத்யம நண்பர்களே! அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

#நானும்_மத்யமரும்_2018


நான் கடந்த ஆண்டு ஆகஸ்டில்தான் மத்யமர் தள உறுப்பினர் ஆனேன்.ரஞ்சனி நாராயணன்  @Ranjani  Narayanan எனது நெருங்கிய தோழி. நேரிலும் சந்தித்திருக்கிறோம். அவரது FB profileல் POTW மத்யமர் என்று இருந்ததைப் பார்த்து அதுபற்றிக் கேட்டபோது இத்தளம் பற்றிக் கூறினார். அதன்பின்பே மத்யமரில் இணைந்தேன். எனக்கு மத்யமர் மூலம் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
என் முதல் பதிவாக ஆவணிஅவிட்டம் பற்றிய பதிவு போட்டிருந்தேன். மொத்தம்13 கமெண்ட்டுகளே! பாதி என்னுடைய பதில் கமெண்ட்டுகள்! அந்தப் பதிவிற்கு எனக்கு POTWவுக்கு சிபாரிசு செய்த திரு குருசாமி ரமேஷ் @Gurusamy Ramesh.அவர்களுக்கு நன்றி🙏
அடுத்து ரக்ஷாபந்தன் சிறுகதை எழுதினேன். அபர்ணா முகுந்தன் @Aparna Mukundhan அந்தக் கதையின் முடிவை இறுதிவரை ஒப்புக்கொள்ளவில்லை! திரு உமாமகேஸ்வரன் விஸ்வநாதன் @Umamaheswaran Viswanathan அவர்களுக்கு அப்படி ஒரு அனுபவம் இருந்ததை எழுதியபோது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.
அதன்பின் எழுதிய சில ஆன்மிகப் பதிவுகளின் பின்னூட்டங்கள் ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது.என் மனமும் சற்றே துவண்டது.
ராதாஷ்டமி பற்றி எழுதியபோது, 'ராதை  கோபியரின் ஒருமித்த வடிவமே' என்று கீத்மாலா ராகவன் @Geethmala Ragavan குறிப்பிட்டபோது,அதற்கான ஆதாரங்களைத் தேடி படித்தபோது நான் பல விஷயங்களை அறிய முடிந்தது. இதனால் மத்யமரில் நிறைய எழுதும் ஆர்வம் ஏற்பட்டது.
அடுத்து அக்டோபரில் நான் எழுதிய நவராத்திரி ஸ்பெஷல் கதையைப் படித்து, அது தனக்கு மிகப் பிடித்த கதை என்று சொல்லி என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியவர் ரேவதி பாலாஜி @Revathi Balaji. அட்மின் குழுமத்தில் உள்ள அவர் பாராட்டியதுடன் அதற்கு முதன்முறை POTW பெற்றது எனக்கு மத்யமரில் பங்களிப்பை அதிகப்படுத்தியது.
அதே மாதத்தில் நவராத்திரிக்காக நான் எழுதிய 'Night at the golu' விற்கு அடுத்த POTW. ஆச்சரியமான ஆனந்தம்!
அடுத்து நவம்பரில் என் 'குறும்புக் குழந்தைகள்'பதிவுக்கு மூன்றாம் முறையாக POTW. அத்துடன் அன்றே GEMம் கிடைக்க என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை! வானில் பறந்தேன்!
மத்யமரில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு தலைப்பு கொடுத்து அதைப் பற்றி எழுதுவது மிக சுவாரசியமான, வித்யாசமானதாக உள்ளது. பலரின் அனுபவங்களையும் அறிவதால் பல விஷயங்களைப் பல கோணங்களில் அறிய முடிகிறது.
தனித்திறமைகள் பற்றிய என் பதிவுகளும், பாலா ஹரி #Bala Hari அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு நான் எழுதிய கதையும் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகள்.
டிசம்பரில் நான் எதிர்பார்க்காமல் மீண்டும் GEM பரிசு!!இதுவரை 60 பதிவுகளைப் பகிர்ந்துள்ளேன்.என் பகிர்வுகளைப் படித்து பாராட்டிய #மத்யமர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
POTW, GEM இவற்றைப் பெறும்போது நம் கடமையும் அதிகரிப்பதை நான் உணர்கிறேன். இன்னும் நிறைய எழுத வேண்டும், நம் எண்ணங்களை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணும்போதே, மற்றவர் பதிவுகளையும் படித்து, பின்னூட்டமிட்டு உற்சாகமும், ஊக்கமும் தரவேண்டும் என்பதை உணர்கிறேன்; கூடியவரை அவ்வாறே செய்கிறேன்.
மத்யமரில் எனக்கு தோழியான  அனுராதா விஸ்வேசன் @Anuradha Viswesan எங்கள் ஊர் குடந்தைவாசி என அறிந்தபோது, எங்கள் நட்பும் இறுக்கமானது.
முகநூலில் சில தளங்களில் நான் உறுப்பினராக இருந்தாலும், மத்யமரில் இணைந்ததால் உண்டான மன மகிழ்ச்சியும், சந்தோஷமும் வேறு எதிலும் இல்லை என்பது உறுதி. இது பொழுதுபோக்குத் தளம் மட்டுமன்றி, பொது அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், ஆன்மிகம், நாட்டு நடப்பு பற்றி அறியவும் மிகச் சிறந்த தளம் என்பதில் ஐயமில்லை.2018ம் ஆண்டு மத்யமரால் #மறக்க முடியாதஆண்டாக மாறியதை மகிழ்வுடன் கூறிக்கொள்கிறேன்!
எனது பதிவுகளை ஏற்று, ஒப்புதல் அளித்து, தளத்தில் வெளியிடும் அட்மின்களுக்கு மிக்க நன்றி🙏🙏
இந்தப் பதிவு மிக மிகத் தாமதமாக அனுப்புவதற்கு மன்னிக்கவும்.வீட்டு விசேஷங்கள், வெளியூர் பயணத்தாலும் பாதி எழுதியிருந்த பதிவை இன்றுதான் முடித்து அனுப்ப முடிந்தது. நன்றி🙏

Tuesday 16 April 2019

சங்கி ஶ்ரீராமர் ஆலயம் சிங்கப்பூர்

ஶ்ரீராமநவமி ஸ்பெஷல்...

சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகமென்பதால் இந்துக்கடவுளரின்
ஆலயங்கள் நிறைய உண்டு. அதில் சங்கியிலுள்ள ஶ்ரீராமருக்கான
ஒரே  கோயில் மிகப் பிரசித்தமானது.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரச மரத்தடியில் வைத்து சங்கி கிராம மக்களால்  ஆராதிக்கப்பட்ட  மூர்த்தி இவர்.

பிரிட்டிஷ் ராணுவத்தில் பணி புரிந்த ராமா நாயுடு என்பவர் ராமருக்கு ஆலயம் கட்ட விரும்பினார். இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயம் ஆங்கிலேயர்களிடமிருந்து இவ்விடத்தை வாங்கி ஆலயம் கட்டினார்.

அருகிலிருந்த தமிழர்களும் பங்கு பெற்று உதவி செய்ய அழகிய கோவில் உருவாயிற்று.

கட்டுமானப் பணிகளை மதுரையிலிருந்து சென்று பார்வையிட்ட  ஆலய வாஸ்து சாஸ்திர கட்டிடக்கலை வல்லுனர்கள் இவ்வாலயம் கிழக்கு நோக்கி, கடலைப் பார்த்து அமைந்துள்ளது மிகவும் தெய்வீகமானது மற்றும் அங்கு வாழும் மக்களைப் பாதுகாக்கும் கடவுள் என்று கூறியுள்ளனர்.

அதுமுதல் ஆலயத்தின் சிறப்பை பலரும் அறிய அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. இந்துக்களுக்கான திருமணம், முன்னோர் காரியங்களும் அங்கு செய்து வைக்கப் படுகிறது.

ராமநவமி, நவராத்திரி, ஹனுமத் ஜெயந்தி, சண்டி ஹோமம்  போன்ற உற்சவங்களும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

ஆலயத்துள் நுழைந்ததும் அரசமர விநாயகர் அருட்காட்சி தருகிறார். அடுத்து புத்தர் ற்றும் Quan in (Goddess of Mercy) உருவங்கள் அமைந்துள்ளன. இந்துக்கள் அல்லாதவரும் வணங்க இவற்றை அமைத்துள்ளனர்.

இருகை கூப்பிய ஓங்கி உயர்ந்த அனுமன் கண்ணுக்கு விருந்து. ஶ்ரீகோதண்டராமர் வலப்பக்கம் இனியவளும் இடப்பக்கம் இளையவனும் நிற்க கோதண்டமும் பாணங்களும் கொண்டு அழகுறக் காட்சி தருவதைக் காண கண் கோடி வேண்டும்.

இவை தவிர சிவன் அம்பிகை ஶ்ரீராகவேந்திரர் வைஷ்ணவி துர்க்கை சந்நிதிகளும் அமைந்துள்ளன.

சிங்கப்பூரில் நான் கண்டு வியந்த விஷயம் சிவபெருமானும் விஷ்ணுவும் வேறுபாடின்றி எல்லா ஆலயங்களிலும் சன்னிதி கொண்டிருப்பது! ஒவ்வொரு கடவுளின் அழகும் அலங்காரங்களும் நம்மை நகரவிடாமல் நிற்கச் செய்கின்றன.

ஆலயத்தின் சுத்தமும் அடிக்கடி பிரசாத விநியோகமும் சிறப்பான விஷயங்கள். அங்குள்ள இந்து மக்கள் திரளாக வந்து வழிபடுகின்றனர்.

சென்ற ஆண்டு நான் ராமநவமிக்கு இவ்வாலயம் சென்றபோது அபிஷேகங்கள் அற்புத அலங்காரம் ஹோமங்கள் முறையாக சிறப்பாக நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் இணைத்துள்ளேன்.


எல்லாம் முடிந்தபின் பிரசாதமாக இலை போட்டு சாப்பாடு!  சிங்கப்பூர் செல்வோர் அவசியம் தரிசிக்க வேண்டிய அழகான ஆலயம்!
ஆலயம் East Coastல் சங்கி கடற்கரை அருகில் உள்ளது.

அரியலூர் ஶ்ரீகோதண்டராமஸ்வாமி ஆலயம்

பூமிதேவியால் உருவான ஶ்ரீகோதண்டராமர்

அரியலூருக்கு பெருமை சேர்க்கும் தலமாக உள்ளது கோதண்டராமர் கோவில். கோதண்டராமரை தரிசித்தால் குறையில்லாத மணவாழ்வு அமையும். முகூர்த்த நாட்களில் இக்கோவிலில் நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கையே அதற்கு சாட்சி என்கிறார் கோவில் அர்ச்சகரான கிருஷ்ண பட்டாச்சாரியார். பூமிக்கடியில் புதையுண்ட இக்கோவிலை பெருமாள் தூக்கி நிறுத்தினார் என்றும் ஒரு கதையுண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக ஆலயக்கருவறை தேர்போன்ற வடிவில் உள்ளது. ஒரே பீடத்திலமைந்த கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சிலைகள் விக்கிரமங்கலம் எனும் ஊரில் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. தன்னிகரில்லா தசாவதாரப் பெருமாள்களையும் ஒரே இடத்தில் தரிசித்துவர, அரியலூர் கோதண்டராமர் கோவிலுக்கு ஒருமுறை தரிசித்தால் மனம் போல் மாங்கல்யம் கிட்டும்.

அரி என்பது விஷ்ணுவைக் குறிக்கும். அரி குடிகொண்ட ஊர் எனும் பொருளில் அரி+இல்+ஊர் என்பது அரியலூர் ஆனது. துர்வாசரால் சபிக்கப்பட்டார் அம்பரீஷ முனிவர். பெருமாளின் பத்து அவதாரங்களையும் ஒருசேரக் கண்டாலே அவரது சாபம் நீங்கும்.

என்றும் துர்வாசர் சபித்தார். எனவே அம்பரீஷர் தெற்கு நோக்கிப் புறப்பட்டு அரியலூரில் வந்து கடும்தவத்தில் ஈடுபட்டார். முனிவரின் தவத்தை மெச்சிய பகவான் தசாவதாரக் கோலத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் அளித்தார். கோதண்டராமர் கோவில் தூண்களில், இந்த தசாவதாரக் காட்சிகள் தத்ரூபமாக உள்ளன.

அவற்றுள் நரசிம்மாவதாரக் கோலத்தை தரிசனம் செய்து வழிபடுவோருக்கு, எதிரிகளை வெல்லும் சக்தியும், செய்யும் செயல்களில் வெற்றியும் கிடைக்கிறது. மனக்குறைகள் நீங்குவதோடு, திருமண வாழ்வும் அமைகிறது.

அரியலூரில் 22 ஆண்டுகளுக்கு பிறகு 2017ல் கோதண்டராமசாமி பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

Saturday 13 April 2019

🙏தமிழ்ப் புத்தாண்டு🙏 விகாரியே வருக..வருக..

விகாரியே வருக..வருக..
வளம்பல பெருக்கி நலமே தருக!!

சித்திரையில் துவங்கும் தமிழ்ப் புத்தாண்டு அன்று ஆதவன் மேஷ  ராசியில் பிரவேசிக்கிறார். அது முதல் நமக்கு வசந்த காலம் ஆரம்பமாகிறது.

வசந்தம் என்றால் மகிழ்ச்சி! புது வாழ்வின் தொடக்கம்! மன்மதனின் ஆட்சி ஆரம்பித்து, காதலர்கள் களிக்கும் காலம்!  எங்கு நோக்கினும் பசுமை! மாமரங்கள் புதுத் தளிரையும், வேப்ப மரங்கள் கொத்து கொத்தாக புது மலர்களையும் தாங்கி நிற்கும்!

தமிழ் ஆண்டுகள் அறுபது. இவற்றின் பெயர்கள் எப்படி ஏற்பட்டன?
அப்பெயர்களின் காரணம் என்ன?
இவற்றை அறிவோமா?

மனிதனின் வயது அந்நாளில்
120 ஆக இருந்தது. 120 ஆண்டுகள்
வாழ்பவர் எல்லா (ஒன்பது) தசைகளையும் பார்க்க முடியும். வருடங்களை அறுபதாக வைத்த காரணம், மனிதன் இரண்டு வட்டங்கள் வாழ வேண்டும் என்பதற்கே.

பிறப்பு, இறப்பில் சிக்கி, மாயையில் வாழும் மனிதருக்கு நல்லது,
கெட்டது  எல்லாவற்றையும் ஒரே மாதிரி பாவிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே, ஆண்டுகளுக்கு நல்ல, கெட்ட பெயர்களை வைத்தனர் நம் முன்னோர்.

பிரபவ என்பது புகழையும், விபவ என்பது அந்தஸ்தையும் குறிக்கும்.
சுக்ல என்றால் வெண்மை. அதாவது தூய்மையான உள்ளத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தாது என்பது கொடையைக் குறிக்கும்.
கர, துன்மதி, குரோதன, ராக்ஷச
என்பது போன்ற அசுரப் பெயர்கள் நம்மிடமுள்ள காம, குரோத, லோப குணங்களைக் குறிக்கும்.

இவ்வருடங்கள் பிறந்தது எப்படி? நாரத புராணத்திற்கு செல்வோம். ஒருமுறை நாரதர் வைகுண்டம் சென்றபோது அருகில் இருந்த ஸ்ரீதேவி சட்டென்று எழுந்து உள்ளே சென்று விட்டாள். நாரதருக்கு இது சுருக்கென்று இருந்தது.

"நாராயணா! நானோ மாயையை வென்ற ஜிதேந்திரியன். தேவி என்னைக் கண்டு உள்ளே சென்றது ஏன்?"என்றார்.

"நாரதா! பிரம்மாவும், ருத்ரனும் கூட மாயையை வெற்றி பெற முடியாது.காலத்திற்கு உருவம் கிடையாது. ஆனால் அக்காலமே மாயைக்கு உருவமாயிருக்கிறது." என்றார் நாராயணர்.

அம்மாயையைக் காண விரும்பிய நாரதரை பூலோகம் அழைத்து வந்தார்  நாராயணர், அவரை ஒரு தடாகத்தில் ஸ்நானம் செய்யச் சொல்லிவிட்டு மறைந்து விட்டார் பகவான்! ஸ்நானம் செய்து கரையேறிய நாரதர் அழகிய ஒரு கன்னிப் பெண்ணாகக் காட்சியளித்தார்.

மாயையில் ஆட்பட்ட நாரதருக்கு தன்  பூர்வீக நினைவுகள் மறந்து, அங்கு வேட்டையாட வந்த காலத்வஜன் என்ற அரசரை மணந்து, 60 பிள்ளைகளைப் பெற்றார். மாயையின் வலையில் சிக்கியபோது அதில் வசப்பட்டதால், தனக்கு  பிறந்த பிள்ளைகளுக்கு பல குணங்களின் பெயர்களைச்  சூட்டினார் நாரதர்.

அவரின் 60 பிள்ளைகளே 60 வருடங்கள். அதனாலேயே பிரபவ முதல் அக்ஷய வரை உள்ள பெயர்கள் அனைத்தும் நம் வாழ்க்கை சம்பந்தப்பட்ட குணங்களின் பெயர்களே.

பண்டைத் தமிழர்கள்  சந்திரனை ஆதாரமாகக் கொண்டே மாதங்களைக் கணித்தனர்.
அதனாலேயே மாதங்களுக்கு
'திங்கள்' என்ற பெயர் ஏற்பட்டது.
அப்பெயர்கள் எப்படி ஏற்பட்டன?
தமிழில் திங்கள் என்பது மாதத்தைக் குறிக்கும்.பன்னிரு திங்களின் பெயரும் தமிழ்ப் பெயர்களே.

கடைசி மாதமான பங்குனிக்குப் பின்பு பனி முற்றும் போய் வானம் வெயிலால் பளிச்சென்று சித்திரம் போல்காணப்படுவதால் 'சித்திரை'.
இம்மாதம் மக்கள், மாக்கள்,
செடிகொடிகள் தழைக்கும் இன்பமான மாதம்.

அடுத்த மாதம் வெய்யில் அதிகரித்து, செடிகொடிகள் வாடி காசநோயுற்றது போல காணப்படும். அதனால் 'வைகாசி' (வை என்பது வைக்கோல்,புல்)என்பதைக் குறிக்கும். வைகாசம் என்பது வைகாசி ஆயிற்றாம்!

தை முதல் ஆனி  வரையான ஆறு மாதங்கள் தேவர்களுக்கு பகல் காலமாகும்.அப்பகலின் முடிவிற்கு எல்லை  மாதம் 'ஆனி'  (ஆனி -எல்லை) ஆயிற்று.சூரியன் வடக்கு  எல்லையை அடைந்து தெற்கு நோக்குவதால் 'தட்சிணாயனம்' எனப்படும்.

ஆதவன் திசை திரும்பும்போது உலகம் ஆட்டமுறும்.அனல் காற்று வீச ஆரம்பிக்கும். 'ஆடி' என்பதற்கு காற்று என்ற பொருள்.

வெப்பம் அதிகரித்து காற்று மேலேழும்பும்.மேகங்கள் வெண்மை நிறம் கொண்டு வெண்பசுக் கூட்டங்கள் அணிவகுத்து செல்வது போல வரிசையாக ஒன்றுடனொன்று இணைந்து செல்வதால், (ஆ-பசுக்கள்) அணியாகச்
செல்வதால் 'ஆவணி' ஆயிற்று.

வானில் வெயிலும், மாசும் புரண்டு அடித்து வானிலை மாறுபட்டு,
வெயிலும், மழையும் சரியாக இல்லாத மந்த நிலை கொண்ட மாதம் 'புரட்டாசி' (புரட்டு - புரண்டு, அசி- வானம் ) புரட்டாசி எனப்பட்டது.

சூரிய வெப்பம் குறைந்து மக்களை பசி அணுகுவதால் 'ஐப்பசி'
(ஐப்பசி..அணுகிய பசி) ஆயிற்று.

கார் காலம் மயங்கத் தொடங்கவே (கார்...திகை-மயங்குவது)
'கார்த்திகை' ஆனது.

சூல்  கொண்ட மேகங்கள் மழை பொழிந்து மயக்கம் தெளிவதால் (மாரி -மழை, கழி-கழிவது)
'மார்கழி' என்றாயிற்று.

மழை நீங்கி ஆதவன் வெளிப்பட்டு அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும்,
வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு புதுத் தோற்றம் கொள்வது, புது நெல்,
புதுப்பானை இவற்றில் செய்யப்பட்டு சூரியனுக்குப் படைக்கப்படும் பொங்கல்... இவற்றால் சிறப்பு பெரும் இம்மாதம் 'தை' (தை-சிறப்பு) ஆகியது.

மழை நீங்கினாலும் வானம் மாசு படிந்திருக்கும் மாதம் 'மாசி' எனப்பட்டது.

மார்கழி முதல் நான்கு மாதம் பனிக்காலமாதலால், பனி கூறுபடும் மாதம் (பங்கு-கூறுபடுவது )
'பங்குனி' மாதம்.

இவ்வாறு பன்னிரண்டு தமிழ் மாதங்களும் பொருள் பொதிந்தவையே.

தமிழ் வருடப் பிறப்பன்று பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் நம் நாட்டில் உண்டு. பஞ்சாங்கம் மூலம்தான் வாரம், நட்சத்திரம், லக்னம் , திதி, யோகம் ஆகிய ஐந்து அம்சங்களைத் தெரிந்து கொள்ள முடியும். அந்த வருடத்திற்குரிய பலன்களை புத்தாண்டு அன்று படித்து அறிந்து கொள்வதே பஞ்சாங்க படனம்.

வருடப் பிறப்பன்று வேப்பம்பூ பச்சடி செய்வது ஐதீகம்.இதில் ஆறுசுவைகளும் சேர்ப்பது வழக்கம். வாழ்வில் சுகத்தை அனுபவிப்பது போலவே துக்கத்தையும் அனுபவிக்கும் மனப்பான்மை வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.

இடைக்காட்டு சித்தரின் விகாரி வருடத்திய பலன் வெண்பா..
“பார விகாரிதனிங் பாரண நீருங் குறையும்
மாரியில்லை வேளாண்மை மத்திபமாம் - சோரார்
பயம் அதிகமுண்டாம் பழையோர்கள் சம்பாத்
தியமுடைமை விற்றுண்பார் தேர்”

இவ்வருடம் மழை குறைவு..வறுமை அதிகரிக்கும்..தானியங்கள் விலை அதிகரிக்கும்..திருட்டு பயம் அதிகரிக்கும்..நாட்டின் மேற்குப் பகுதியில் மழை உண்டு.

இவ்வினிய விகாரி ஆண்டில் வையகத்தார் அனைவரும் அன்போடும்..ஆனந்தத்தோடும்..
இன்பமாகவும்..ஈகையுடனும்..
உற்சாகத்துடனும்..ஊக்கத்தோடும்..
எந்நாளும்..ஏற்றமாக..
ஐயங்கள் நீங்கி..
ஒற்றுமையுடன்..ஓங்கார ரூபனை துதித்து..ஔவியம் அகற்றி..
அஃதே சிறப்பென பல்லாண்டு பல்லாண்டு வாழ்வாங்கு  வாழ இறைவன் அருள்புரிவாராக🙏

இனிய விகாரி ஆண்டு
நல்வாழ்த்துக்கள்!

Friday 12 April 2019

ராமரிடம் கோபித்த அனுமன்!

முடிகொண்டான் ஶ்ரீகோதண்ட
-ராமஸ்வாமி ஆலயம்.

ஶ்ரீராமநவமி ஸ்பெஷல்..

ஶ்ரீராமருக்கு தமிழகத்தில் நிறைய ஆலயங்கள். முடிகொண்டானில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீகோதண்டராமர் ஆலயம் மிகச் சிறப்பு பெற்றது. அனுமன் இல்லாத மூலவரை இங்கு மட்டுமே தரிசிக்கலாம்.

ராமர் வனவாசம் சென்றபோது பரத்வாஜரின் ஆசிரமம் சென்றார். அச்சமயம் முனிவர் அவருக்கு விருந்து தர ஆசைப்பட்டார். ராமர் தாம் வனவாசம் முடித்து திரும்ப வரும்போது அவர் ஆசை நிறைவேறும் என்றார்.

ராவணவதம் முடித்து சீதையுடன் அயோத்தி திரும்பும்போது அனுமனை அவ்விஷயத்தை பரதனிடம் சொல்லும்படி அனுப்பிவிட்டு புஷ்பக விமானத்தில் பரத்வாஜ ஆசிரமம் வந்தார் ஶ்ரீராமபிரான். முனிவரிடம் தாம் ரங்கநாதனை வழிபட வேண்டும் என்று கூற அவரும் ஶ்ரீரங்கநாதரை பிரதிஷ்டை செய்கிறார். பூஜை முடித்து ராமர் விருந்து உண்டார்.

அப்போது திரும்ப வந்த அனுமன் தன்னை விட்டு ராமர் விருந்து சாப்பிட்டதால் கோபித்து ஆசிர
-மத்திற்குள் வராமல் வெளியில் நின்றுவிட்டார். பின்பு ராமர் அவரை சமாதானம் செய்து தன் உணவில் பாதியைக் கொடுத்தாராம்! தனக்கு ராமர் அவரை அடுத்து இலை போட்டு வைக்காததால் கோபத்தில் அவ்வூரில் 'வாழைமரம் வளராது' என்று சபித்து விட்டாராம் ஞ்சனை மைந்தன்! இன்றுவரை முடிகொண்டானில் வாழை மரங்கள் வளர்வதில்லையாம். அதனால் அனுமன் சன்னிதி எதிரில் தனியாக உள்ளது.

பரத்வாஜர் வேண்டிக் கொண்டதால் பட்டாபிஷேகத்திற்கு முன்பே இத்தலத்தில் மகுடம் சூடி காட்சி கொடுத்த கோதண்டராமருக்கு 'முடி கொண்ட ராமர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஊரும் முடிகொண்டான் என ஆயிற்று.

வலப்பக்கம் சீதையும் இடப்பக்கம் இலட்சுமணருமாக கழுத்தும், இடுப்பும், காலும் வளைந்து 'உத்தம லட்சணம்' என்ற சிறப்பான வடிவத்தில் அற்புத அழகில் ஜொலிக்கும் உற்சவர் கண்களோடு நம் மனதையும் கொள்ளை கொள்கிறார். எதிரில் கோபத்திலும்  பணிவாக கைகுவித்து நிற்கும் ஆஞ்சநேயர் தாசானுதாசன். ராமனுக்காக ஶ்ரீரங்கநாதரை பரத்வாஜ முனிவர் உருவாக்கிய சிறப்பு பெற்ற தலம்.

வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்ட பரத்வாஜ ஆசிரமம் இருந்தது இவ்வூரே எனக்கூறப்படுகிறது. ஶ்ரீராமர் பல ஆலயங்களிலும் தெற்கு நோக்கி காட்சி தருவது இலங்கையில் ஆட்சி புரியும் விபீஷணன் வேண்டியபடி தன்னை வணங்குவதற்காக என்பர். மாறாக  இவ்வாலயத்தில் மட்டுமே ஶ்ரீரங்கநாதர் தெற்கு நோக்கியும் ராமர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.

இவ்வாலயத்தில் ஶ்ரீராமநவமி பத்து நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆழ்வார்கள் காலத்துக்கு முன்பே தோன்றிய தலம்.இங்கு வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்றும் வெளிநாட்டில் படிக்க விரும்புவோர் இத்தலத்தில் வழிபட நிச்சயம் நிறைவேறும் எனப்படுகிறது. கலைகளில் சிறந்து விளங்க இத்தல இறைவன் அருள்பாலிப்பது கண்கூடு.

முடிகொண்டான் திருவாரூர் மாவட்டத்தில் திருக்கண்ணபுரம் சிறுபுலியூர் திவ்ய தேசங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து 20கி.மீ. தூரத்தில் திருவாரூர் ஹைவேயில் முடிகொண்டான் உள்ளது.

Sunday 7 April 2019

தமிழ் அமுது..தமிழ் அழகு. தமிழ் இனிது..

அன்னையவள் ஆசையுடன் அள்ளி அணைப்பாள்!
தந்தையோ பாசத்துடன் தாங்கிப் பிடிப்பார்!
தமக்கையோ கண்ணீரைத் துடைப்பாள்!
தமையனோ தயையுடன் அள்ளிக் கொள்வான்!
ஆசிரியர் அறியாமை நீக்கி ஞானத்தைத் தருவார்!
நண்பரோ துவண்டபோது தோள் தருவார்!
மனைவி துன்பத்திலும் துணை வருவாள்!
மழலையின் சிரிப்பு சுவை தரும் இனிப்பு!
கொஞ்சும் தமிழே எதையும் விஞ்சும் நம்மொழி!
தமிழே நீ என்றும் இளமையாக வாழ்க!வளர்க!!


Saturday 6 April 2019

குருவாயூருக்கு வாருங்கள்..2


குருவாயூருக்கு வாருங்கள்...
பதிவு..2
பதிவு 1..Link
https://m.facebook.com/groups/788208064700343?view=permalink&id=1058905997630547
சென்ற பதிவில் குருவாயூர் ஆலயம் பற்றி அறிந்தோம். இந்த உன்னிகிருஷ்ணனின் லீலைகள் ஒன்றா..இரண்டா?
வடக்கு பிரகாரம் யானைப்பந்தல் மண்டபம். இதன் மேல் ஒரு சதுர துவாரம் உள்ளது. ஆதிசங்கரர் ஒருநாள் ச்ருங்கேரிக்கு வான்வழியே சென்றபோது  குருவாயூர் ஆலயத்தில் சீவேலி நடக்க, கீழே இறங்காமல் அலட்சியமாய் சென்றார்.
அவர் அகந்தையை அடக்க எண்ணிய இறைவன் அவரைக் கீழே விழும்படி செய்தார். மூர்ச்சை தெளிந்த சங்கரருக்கு விஷ்ணு தரிசனம் கிடைத்தது. அங்கு 41 நாட்கள் தங்கி பூஜைமுறைகளை வகுத்து, கோவிந்தாஷ்டகம் இயற்றினார். இன்றும் அந்த துவாரத்தை அங்கு காணலாம். அதற்கு அடையாளமாக கீழே ஒரு சதுரம் வரையப்பட்டுள்ளது. இன்றும் சீவேலி செல்லும்போது வாத்ய இசையை அவ்விடம் வரும்போது நிறுத்தி விட்டு செல்வார்களாம்.
மேல்பத்தூர் நாராயண பட்டதிரி தன்குருவின் வாதநோயைத் தான் பெற்றுக் கொண்டு குருவா
யூரப்பனின் முன்பு அமர்ந்து தினமும் பாகவதத்தை ஆதாரமாகக் கொண்டு நாராயணீயம் பாட, அழகுக்கண்ணன்
தலையசைத்துஆமோதிக்க
அவரது நோயும் தீர்ந்தது..நமக்கு நாராயணீயம் என்ற அற்புதப் பொக்கிஷம் கிடைத்தது. மகா பெரியவர் குருவாயூருக்கு சென்று தரிசனம் செய்ததுடன் நாராயணீயத்தின் மகிமையை பலமுறை எடுத்துச் சொல்லியுள்ளார்.
குருவாயூரப்பன் தரிசனம் முடித்து கருவறையை வலம்வரும்போது நேர்பின்னால் செதுக்கப்பட்டிருக்கும் பள்ளிகொண்டபரமனின் அழகு சொக்க வைக்கிறது.அருகிலுள்ள தசாவதாரத் தூண்களும் அழகு.
1970ல் ஆலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் அந்த மண்டபத்தில் தூணிலுள்ள  மரத்தாலான சிற்பங்கள் சிதிலமடைய, பிரச்னத்தில் வந்தபடி கருங்கல் சிலைகள் பதிக்கப்பட்டன.
அச்சமயம் தசாவதாரங்களில் கண்ணனுக்கென கம்சவத காட்சி சிலை செதுக்கப்பட்டதாம். அச்சமயம் அங்குவந்த சிறுவன் ஒருவன் அங்கு வேணுகோபாலன் செதுக்கப்பட்ட தூணை வைக்கச் சொல்ல, அப்படி ஒரு தூண் செய்யவில்லையே என சிற்பி கூறினார். அச்சிறுவன் சிற்ப
சாலையில்  அந்த தூணைக்காட்டி மறைந்து விட்டான்.
அழகு நிறைந்த அந்தச் சிலை அந்த கோபாலனாலேயே உருவாக்கப்பட்
டதாக நம்புகிறார்கள். சமீப காலத்தில் நடந்த இந்த சம்பவம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
மஞ்சுளா வாரியர் என்ற பெண்மணி தினமும் குருவாயூரப்பனுக்கு இரவில் சார்த்த மாலை கொண்டு வருவாள். ஒருநாள் கோவில்நடை சார்த்திவிட அவள் மனம் கலங்கி நின்றபோது அவ்வழி வந்த பூந்தானம் அடியார் அவள் நின்றிருந்த ஆலமரத்தடியையே கண்ணனாக பாவித்து மாலையை சார்த்தச் சொன்னார். அவளும் அப்படியே சார்த்தினாள்.
மறுநாள் காலை மேல்சாந்தி, அய்யன் மேலிருந்த மாலைகளை அகற்றும்போது ஒரு மாலை மட்டும் எடுக்க முடியவில்லை. அங்கிருந்த பூந்தானம்...அது மஞ்சுளாவின் மாலையெனில் கீழே விழட்டும்...
என்று சொல்ல அது கீழே விழுந்தது. அந்த சம்பவத்தின் சாட்சியாக இன்றும் அந்த ஆலமரம் உள்ளது. அதனடியில் ஒரு பெரிய கருடன் சிலையும், மறுபக்கம் பூந்தானத்தின் உருவமும் உள்ளது. அந்த மரத்தடி..மஞ்சுளா ஆல்.. எனப்படுகிறது.
இறைவனே விருப்பப்பட்ட இளநீர் அபிஷேகம் இவ்வாலயத்தில் ஆராட்டு நாளன்று நடக்கிறது. அதற்கான இளநீர் காய்களை இழவ சமூகத்தைச் சேர்ந்த தம்புரான் படிகள் குடும்பத்தினரே இன்றுவரை அளித்து வருகின்றனர்.
அந்த நாட்களில் அந்த சமூகத்தினருக்கு ஆலயத்தில் நுழைய அனுமதி இல்லை. ஆராட்டு நாளன்று ஆலய அர்ச்சகர் ஒருவர் கிட்டை என்ற தென்னை மரமேறியிடம் சுவாமிக்கு இளநீர் அபிஷேகத்திற்கு சில தேங்காய்களைக் கேட்டார்.கிட்டை அவரது வேலையில் கவனமாக இருந்ததால் இவரை கவனிக்க
வில்லை.அர்ச்சகர் சிறிது நேரம் நின்றுவிட்டு திரும்பிவிட்டார்.
அப்பொழுது திடீரென்று தேங்காய்கள் மடமடவென்று கீழே விழ, பயந்த கிட்டை அவற்றை எடுத்துக்கொண்டு ஆலயம் சென்று நடந்ததை சொன்னபோது, அர்ச்சகர் எவரும் அவர் இருப்பிடம் செல்லவில்லை எனத் தெரிய வந்தது. கிருஷ்ணனே இளநீர் அபிஷேகத்திற்கு ஆசைப்பட்டு நிகழ்த்திய இந்த சம்பவத்தை உணர்ந்தனர். அதுமுதல் ஆராட்டு நாளன்று இளநீர் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஆரம்பமானது.
பூந்தானம் நம்பூதிரி குருவாயூரப்பனிடம் மிக ஆழ்ந்த பக்தி உடையவர்.மிக எளிமையாக எழுதுபவர். அவர் தான் எழுதிய ஞானப்பானையை படித்து தவறு இருப்பின் சரி செய்யும்படி பட்டதிரியிடம் கேட்டார். அவரது திறமையைப் பற்றி ஏளனமாகப் பேசிய பட்டதிரி மறுத்துவிட்டார். மனம் வருந்திய பூந்தானம் கண்ணனிடம் இது பற்றி முறையிட்டார்.
அன்றிரவு வழக்கம் போல் நாராயணீயத்தை பட்டதிரி படித்தபோது அவர் அருகில் வந்து அமர்ந்த சிறுவன் ஒருவன் முதல் சுலோகத்தில் ஒரு தவறு.. இரண்டாவதில் இரண்டு தவறு..மூன்றாவதில் மூன்று தவறு என்று சொல்லிக் கொண்டேபோக, வந்திருப்பவன் பாலகிருஷ்ணன் என்றுணர்ந்த பட்டதிரி, உடன் பூந்தானத்திடம் சென்று மன்னிப்பு கேட்டு அவரது ஞானப்பானையை படித்து அதில் எந்தத் தவறும் இல்லாததை ஒப்புக் கொண்டார்.
மற்றொருமுறை விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும்...பத்மநாப அமரப்ரபு...என்பதை ..பத்மநாபோ மரப்ரபு...மரங்களின் கடவுள் என்ற பொருளில் படிக்க,பட்டதிரி ஏளனமாக சிரித்தபடி...நீ சொல்வது தவறு. அது மரப்ரபு அல்ல,  அமரப்ரபு...என்று சொல்ல..கருவறையிலிருந்து குருவாயூரப்பன்...நான் மரப்ரபுதான்..என்று சொன்னார். பட்டதிரியைவிட பூந்தானத்தின் பக்தியை இறைவன் அதிகம் விரும்பினார் என்பதை பட்டதிரி அறியவே இந்தத் திருவிளையாடல்!இந்த சம்பவத்தை உணர்த்தும் விதமாக டெர்ரகோட்டாவினால் செய்யப்பட்ட  உயரமான மரப்ரபு சிலை ஸ்ரீவல்ஸம் கெஸ்ட் ஹவுஸில் நிறுவப்பட்டுள்ளது.
50 வருடங்களுக்கு மேல் ஐயனைச் சுமந்த கிரிராஜன் கேசவன் குருவாயூர் ஏகாதசி அன்று குருவாயூரப்பனைப் பார்த்படியே இறைவனடி அடைந்தது. கேசவனுக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
வில்வமங்கலம் சுவாமி
களுக்கும்,குருரம்மைக்கும் மட்டுமே  கிருஷ்ணன் பல வடிவங்களிலும் காட்சி கொடுத்திருக்கிறார். வில்வமங்கலம் ஒருநாள் கருவறையுள் கண்ணனைத்தேட  அந்த உன்னிகிருஷ்ணனோ கால்களில் சலங்கையுடன் சுட்டம்பலம் என்ற வடக்கு பிரகாரத்தில் நடனமாடிக் கொண்டிருந்தாராம்! அதுமுதல் அவ்விடம்  'நிருத்தம்' என அழைக்கப்பட்டது. வில்வமங்கலம் தியானத்தில் இருக்கும்போதும் தனை மறந்து கண்ணனைப் பாடிக்கொண்டு ஆடும்போதும் பலமுறை கண்ணன் தரிசனம் கொடுத்ததுண்டாம்.
மற்றொரு முறை கண்ணனைக் காணாமல் தேட அவனோ கிழக்குநடையில் கிருஷ்ண
னாட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தானாம். இப்படி அடிக்கடி கருவறையை விட்டு ஓடிவிடுவதால் அதுமுதல் கிருஷ்ணனாட்டம் கருவறை பூஜைகள் முடித்து மூடப்பட்டபின்பே நடக்க ஆரம்பித்ததாம்!
குருரம்மாவுக்கு குழந்தை வடிவில் வந்து வேலைகளைச் செய்து கொடுத்தும், குறும்புகள் செய்தும், அவர் அடித்தபோது சிரித்து மகிழ்ந்தும், ஒரு மகனைப்போல் அவளுக்கு வேலைகளை செய்து கொண்டும் அந்த பாலகிருஷ்ணன் லீலைகள் புரிந்தானாம்!
ஒரு விவசாயி தன் தென்னந்
தோப்பில் இருக்கும் மரங்களின் முதல்காயை குருவாயூரப்பனுக்கு அர்ப்பணிப்பதாக வேண்டிக
கொண்டான். தேங்காய் மூட்டைகளுடன் குருவாயூர் வரும் வழியில் திருடன் ஒருவன் வழிமறித்தான்...இவை குருவாயூரப்பனுக்கு காணிக்கை...
என விவசாயி சொல்லியும் கேட்காத திருடன் ...இந்தத் தேங்காய்க்கென்ன கொம்பா முளைத்திருக்கு...என்றபடி மூட்டையைப் பிரிக்க அத்தனை தேங்காயும் கொம்புகளோடு இருந்ததாம்! இதன் சாட்சியாக இன்றும் ஆலயத்தில் ஒரு கொம்புத் தேங்காய் பக்தர்களின் பார்வைக்காக உள்ளது.
ஒரு சிறுவன் பசி பொறுக்க முடியாமல் ஒரு கடையிலிருந்து வாழைப்பழத்தை திருடி விட்டான். குருவாயூரப்பனின் பக்தனான அவன் கோவில் உண்டியலில் பாதி பழத்தைப் போட்டுவிட்டு மீதியை தான் சாப்பிட்டுவிட்டான். இது தெரிந்த கடைக்காரன் அவனுக்கு தண்டனை கொடுக்க எண்ணி, ஆலயத்தை சில சுற்றுகள் சுற்றச் சொன்னான். அச்சமயம் அந்தப் பையனின் பின்னாலேயே குருவாயூரப்பன் சுற்றுவதைக் கண்டு பதறிவிட்டான்.அன்றிரவு அவன் கனவில் தோன்றிய கண்ணன்...பாதி பழத்தை நானும் சாப்பிட்டதால் ஆலயத்தை சுற்றி வந்தேன்..என்றார்!
வில்வமங்கலத்தின் நண்பரான மானதேவன் என்ற அரசர் தானும் கண்ணனைப் பார்க்க ஆசைப்
படுவதாயும்,வில்வமங்கலம் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் வேண்டினார்.வில்வமங்கலம் ....கண்ணன் மறுநாள் விடிகாலை இலஞ்சி மரத்தடியில் விளையாடும்போது  நீங்கள் காணலாம். ஆனால் தொடக்கூடாது...என்றார். அதேபோல் மறுநாள் கண்ணன் விளையாடும்போது மன்னர் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணனை ஆலிங்கனம் செய்து கொள்ள...நீ என்னைத் தீண்டுவாய் என்று வில்வமங்கலம்
சொல்லவில்லை...என்றபடி
மறைந்து  விட்டார் கிருஷ்ணர். அணைக்கும்போது  கிருஷ்ணனின் மயிற்பீலி ஒன்று மன்னன் கையில் கிடைத்தது. அது இன்றுவரை நடைபெறும் கிருஷ்ணனாட்டத்தின் கிருஷ்ணனின் தலைகிரீடத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மானதேவர் இயற்றிய 'கிருஷ்ணகீதி' என்ற கிருஷ்ணன் கதை 8 அத்தியாயங்கள் கொண்டது. அவதாரம், காளியமர்த்தனம்,
ராஸக்ரீடா, கம்ஸவதம்,ஸ்வயம்வரம்,
பாணயுத்தம், விவிதவதம்,
ஸ்வர்காரோகனம். இவை இன்றுவரை குருவாயூரில் ஆலயத்தில்  இரவு கருவறை நடை சாத்தியபின் பக்தர்கள் வேண்டுதலாக கிருஷ்ணனாட்டம் என்ற பெயரில் நடைபெறுகிறது.
உபன்யாச சக்கரவர்த்தி சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் தொழுநோயால் பாதிக்கப்
பட்டிருந்தபோது நாராயணீயத்தை பாராயணம் செய்து குருவாயூரப்பன் அருளால் நோய் முற்றிலும் நீங்கப் பெற்றார்.குருவாயூர் மற்றும்  நாராயணீயத்தின் மகிமையை நம் தமிழ்நாட்டில் பரவச் செய்ததில் அவருக்கு பெரும்பங்கு உண்டு.
செம்பை வைத்யநாத பாகவதர் நாம் அனைவரும் அறிந்த பிரபலமான பாடகர். அவர் ஒருமுறை  திருச்செங்கோட்டில்... பாவன குருபவன புராதீச மாஸ்ரயே...என்று கச்சேரி  செய்து கொண்டிருந்தபோது திடீரென்று குரல் வெளிவராமல் நின்றுவிட்டது. பல மருத்துவர்களிடம் காட்டியும் குணமடையவில்லை.
அச்சமயம் அவர் குருவாயூர் சென்று கண்ணனிடம்...உன் பெயரைப் பாடும்போதுதான் என் குரல் நின்றது. அதனைத் தொடர்ந்து பாட மீண்டும் குரலைக் கொடு.என் வாழ்நாள் முழுதும் கிடைக்கும் சம்பாத்தியத்தை உன் ஆலயத்திற்கு தருகிறேன்...என மனமிறைஞ்சிக் கதற, அவரது குரல் அக்கணமே  திரும்பக் கிடைத்தது.  இறுதிவரை சொன்ன சொல்லை நிறைவேற்றினார். ஆலயத்தில் அவரது திருவுருவப்படம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாத குருவாயூர் ஏகாதசி சமயம் நடக்கும் பத்துநாள் உற்சவம் 'செம்பை ஏகாதசி இசைவிழா' என்ற பெயரில் நடைபெறுகிறது.
ஐயனை தரிசித்து விட்டு வெளிவருமபோது பிரகாரத்தில் ஆல்ரூபம் என்ற பெயரில் உடல்உறுப்புகள் வீடு தொட்டில் போன்றவற்றின் வெள்ளி உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. நமக்கு என்ன நோய் அல்லது குறை தீர வேண்டுமோ அதைக் கைகளில் எடுத்து மனமொன்றி வேண்டிக் கொண்டு, நம்மால் முடிந்த காணிக்கை உண்டியலில் சேர்க்க வேண்டும்.
ஒரு வெண்கல உருளி நிரம்ப குந்துமணி வைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கும் ஒரு கதை உண்டு.
குருவாயூரப்பனிடம் மிகவும் பக்தியுள்ள ஒரு முதியவள் 
மிகவும் ஏழை. எல்லாரும் கோபாலனுக்கு விலை உயர்ந்த பொருட்களைக் காணிக்கையாகக் கொடுப்பதைப் பார்த்து தானும் ஏதாவது கொடுக்க நினைத்தாள். அச்சமயம் குந்துமணிகள் ஒரு மரத்திலிருந்து நிறைய கீழே விழுந்திருப்பதைக் கண்டு, அவற்றை தினமும் எடுத்து அலம்பி ஒரு பையில் வைத்திருந்தாள்.
வெகுதூரத்திலிருந்து அவற்றை சமர்ப்பிக்க குருவாயூர் சென்றநாள் விஷு. அன்று அவ்வூர் மன்னன் வழிபட  வருவதால் அனைவரையும் வழிவிடச் சொல்லி தள்ளினர். நிலைதடுமாறிய முதியவள் கீழே விழ குந்துமணிகள் கீழே கொட்டிவிட்டது. அச்சமயம் திடீரென்று அரசன் ஏறிவந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. மன்னன் அஞ்சி மணிவண்ணனை வேண்ட, கருவறையிலிருந்து...எங்கே என் குந்துமணிகள்?...என்ற குரல் கேட்டது.
அனைவரும் தவறை உணர்ந்து அந்த முதியவளை அழைத்து அவளது குந்துமணிகளைத் திரட்டி இறைவன் முன் வைத்தபின்பே யானை சரியானது. அதுமுதல் அப்பனை அன்புடன் பக்தி செய்த மூதாட்டியின் பெருமையை அனைவரும் அறிய குந்துமணிக்கு இறைவன் சன்னிதியில் இடம் கிடைத்தது.
பள்ளியில்படிக்கும் குழந்தைகள் இந்த மணிகளை இரு கையாலும் அள்ளி எடுத்து மும்முறை அதிலேயே போட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
சோறூட்டல் எனும் அன்னபிராசனம், அங்கபிரதட்சணம், துலாபாரம்,திருமணம்  இவை இவ்வாயத்தில் சிறப்பான வேண்டுதல்கள்.
குருவாயூரின் சிறப்புகளையும் உன்னிகிருஷ்ணனிடம் பக்தி வைத்தவர்களிடம் அவன் காட்டிய கருணைக்கும் எல்லையே இல்லை.அவனைப் பற்றி எழுத ஆரம்பித்தால் அவன் அருமையும் பெருமையும் நிறுத்த முடியாமல் தொடர்ந்து பதிவு நீளமாகி விட்டது🙏
🙏🙏ஶ்ரீக்ருஷ்ணாய துப்யம் நம:🙏🙏

நாளாம் நாளாம் திருநாளாம்....!!💕

5.4.2019
ஏப்ரல் ஐந்தாம் நாள் என் வாழ்வில் மிக முக்கியமான நாள்...என் திருமணநாள்.1976 ம் ஆண்டு என்னுடைய19ம் வயதில் இந்த நாளில்தான் நான் திருமதியாக மாறினேன். என் அம்மாவும்,
அப்பாவும் என்னைப் பிரிய மனமின்றி என்னை திருமணம் செய்து கொடுத்துவிட்டு கலங்கிய கண்களுடன் நின்றது இன்னும் என் கண்களில் கண்ணீரை நிறைக்கிறது.
திருமணத்தை ஒரு சந்தோஷத்தின் ஆரம்பமாக எண்ணிய  நாட்கள் அவை. கணவன், மனைவிக்கு இடையேயான இன்ப வாழ்வில்
'நாம்தான் ராணி'என்ற நினைவும்,
கற்பனைகளும்  எல்லாபுதுமணப்
பெண்களுக்கும் இருக்கும் சகஜமான எண்ணம். 'பிரேமையில் யாவும் மறந்தோம்' என்று ஆகாய  வானில் சிறகு விரித்து பறக்க ஆசைப்பட்ட நாட்கள் அல்லவோ அவை? 
தாயாக நான் ஏற்றுக் கொண்ட என் மாமியார்,அச்சான அந்தக்கால மாமியாராகவே இருந்தது என் துரதிர்ஷ்டம்.பொறுமையுடன் வாழ என்னை பழக்கிக்கொண்டேன்.
பூஞ்சோலையாக் கனவு கண்ட  வாழ்க்கையில் எத்தனை முட்பாதைகள்? நவரசங்களும் வாழ்வில் நர்த்தனம் ஆடிய நாட்கள்...இன்பமும்,துன்பமும்... கவலைகளும்,கஷ்டங்களும்...ஆனந்தங்களோடு வேதனைகளும்...
சமயத்தில் வெறுப்பும்,கசப்பும்....
ஏமாற்றங்களும் சீற்றங்களும்...
எதையும் ஏற்கும் மனநிலையைக் கொண்டதுதானே வாழ்க்கை.  
இன்று நினைக்கும்போது அவற்றால் நான் பெற்ற அனுபவங்கள் எத்தனை எத்தனை! நல்லவற்றை மட்டுமே ஏற்றுக் கொண்டு,அல்லவற்றை மறக்கவும்,குறைகளைத் தள்ளி நிறைகளை மட்டும் காணவும்,
ஒவ்வொருஅனுபவத்தையும் என்னை மெருகேற்றிக் கொள்ளும் பாடங்களாகவும் எடுத்துக் கொண்டேன்.
இன்றைய இந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்னைப் பக்குவப் படுத்திய நாட்களாகத்தான் அவற்றை நான் நினைக்கிறேன்.
அன்பான கணவரும்,அருமையான குழந்தைகளும் என் வாழ்வை முழுமையாக்கினார்கள். ஈன்ற பொழுதினும் பெரிதுவக்க வைத்த என் குழந்தைகள் என் பொக்கி
ஷங்கள! நான்கு குழந்தைகளையும் அவர்கள் விரும்பிய துறைகளில் சிறப்புற செய்தது, எங்கள் கடமையைச் சரியாகச் செய்தோம் என்ற மனதிருப்தியைக் கொடுக்கிறது.
எதையும் கேட்பதற்கு முன் செய்து கொடுக்கும் என் கணவர் எனக்கு கடவுள் கொடுத்த வரம். கோப
தாபங்கள்,சண்டை சச்சரவுகள் இல்லாத தாம்பத்தியம் ரசிக்குமா! எங்கள் இடையேயும் இவை எல்லாம் உண்டு. ஆனால் அவ்வப்போதே எதையும் பேசித் தீர்த்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது எங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஆதாரம்!
மெல்லிழையாக மனதில் ஓடும் அன்பு, பாசம் இவற்றை அடிநாதமாகக் கொண்ட இனிய சங்கீதம் எங்கள் மணவாழ்வு!💖
திருமணத்துக்கு முன்பு அப்பாவின் இட மாற்றத்தால் தமிழகத்தின் பல ஊர்களிலும் இருக்கும் வாய்ப்பு;
கணவரின் வங்கி வேலையின் மாற்றலால் டில்லி, ஆக்ரா,
மதுரா,கோலாப்பூர், மும்பை
என்று பல இடங்களிலும் வசிக்கும் வாய்ப்பு பெற்றேன்.
பின் மகன்களுடன் பெங்களுர்,
சண்டிகர், புவனேஸ்வர்,போபால்,
சென்னை  வாசம். இதனால் பல மொழிகள், கலாசாரம்
சமையல் முறைகள் இவற்றை அறியும் வாய்ப்பு கிடைத்தது.
சின்ன வயதில் ஆனந்த விகடனில் எழுத்தாளர் மணியனின் பயணக் கட்டுரைகளைப் படித்து பாரிஸ்,
ஸ்விட்சர்லாந்து,லண்டன் போன்ற நாடுகளுக்கு செல்ல ஆசைப்பட்ட
துண்டு! அந்த ஆசை நிறைவேறாது என்று மனதில் நினைத்ததும் உண்டு! ஆனால் அவற்றுடன் ஜெர்மனி, சிங்கப்பூர்மலேசியா,தாய்லாந்து,
இந்தோனேசியா,கம்போடியா, ரோம் போன்ற  நாடுகளையும் சென்று கண்டு களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த என் அன்புக் குழந்தைகளுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்!
திருமணத்திற்குப் பின்பு அடுத்தடுத்து குழந்தைகள்,அடிக்கடி ஊர் மாறுதல்,குழந்தைகளின் படிப்பு,அவர்களைப் பற்றிய பொறுப்பு, கவலை என்று இறக்கை கட்டிப் பறந்த நாட்களை நான் இன்று திரும்பிப் பார்த்தபோது பிரமித்து விட்டேன். இத்தனைக்கு நடுவிலும் என்னை அடையாளப் படுத்திக் கொண்ட என் எழுத்துகள் பல பத்திரிகைகளிலும்,கிட்டத்தட்ட  முன்னூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இன்றுவரை வெளியாகிக் கொண்டிருப்பது என் சிறிய சாதனையாகக் கருதுகிறேன்.✍️
குழந்தைகளுக்கு திருமணமாகி  அவரவர்கள் செட்டிலாகிவிட,
நாங்கள் இப்பொழுது திருச்சியில் தனிக்குடித்தனம்! மூன்று மருமகள்களும்,மாப்பிள்ளை
யும் தங்கமான குணமுள்ளவர்கள். ஏழு பேத்திகளும், இரண்டு பேரன்க
ளுமாக எங்கள் குடும்பம் ரொம்ப பெரிசு!👭👭👭🤰👬
எங்கள் திருமணம் முசிறியில் நடந்து, நான் என் துணைவருடன் வாழ வந்த ஊர் திருச்சி. திருமணம் முடிந்து காரில் முசிறியிலிருந்து திருச்சி வந்து கொண்டிருந்த
போது,குணசீலம் ஆலயத்தின் அருகில் கார் பழுது ஆகிவிட்டது.
இக்காலம் போல கால்டேக்சியோ
மொபைல் ஃ போனோ இல்லாத காலமாச்சே? இறைவனை தரிசித்து எங்கள் மணவாழ்வைத் தொடங்க வேண்டும் என்பது பெருமாளின் எண்ணம் போலும்!குணசீலம் ஶ்ரீபிரசன்னவெங்கடேசப்
பெருமாளை தரிசனம் செய்து
விட்டு,பஸ்ஸில் திருச்சி வந்து சேர்ந்தோம்.🙏
நான்கு வருடங்களுக்கு முன்பு எங்கள் நாற்பதாவது மண நாளில் குணசீலப்  பெருமாளை தரிசித்துவிட்டு, எங்கள் திருமணம் நடந்த இடத்தையும் பார்த்துவர ஆசைப் பட்டோம். இத்தனை நாட்களாக நாங்கள் வெளி ஊர்களில் இருந்ததால் இப்படிப்பட்ட வாய்ப்பும்,எண்ணமும் வரவில்லை.
என் திருமணத்தின்போது என் அப்பா  முசிறியில் வங்கியில் வேலை
பார்த்து வந்தார்.நாங்கள் குடியிருந்த வீடே பெரிய சத்திரம் மாதிரி
இருந்ததால் அதிலேயே எனக்கு திருமணம் நடந்தது! அந்த வீட்டைப் பார்க்கும் ஆசை வந்தது.🏠
வீடு இப்போ மாறியிருக்குமோ,
அடையாளம் தெரியுமா என்ற
கேள்விகளுடன் போன எங்களை அன்றிருந்த அதே நிலையில் இன்றும் காட்சி தரும் அந்த வீடு ஆச்சரியப் படுத்தியது! அந்த வீட்டில் என் பெற்றோர்,தம்பிகளுடன் வாழ்ந்த நாட்கள் மனதில் ஓடியது. அந்த வீட்டின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம்! 
அன்று எங்கள் திருமணத்தில் எங்களை வாழ்த்திய பெரியவர்கள் இன்று இல்லாததை நினைத்து மனம் கலங்கியது.இந்த சிறப்பான வாழ்க்கையை எனக்கு அமைத்துக் கொடுத்த என் தந்தைக்கும்,
தாய்க்கும்  என் மனமார்ந்த நன்றிகளை மானசீகமாக சொல்லிக் கொள்கிறேன்.🙏
எனக்கு சந்தோஷம் தந்த இந்தநாள் மறக்க முடியாத சோகமான  நாளாகவும் ஆனது. ஐந்து வருடங்களுக்கு முன் இதே நாளில் என் அப்பா மறைந்து விட்டார். 😭
ராஜமுந்திரியில் என் தம்பியுடன் இருந்தவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். என் அப்பாவுடன் 25 நாட்கள் உடனிருந்தேன். மீண்டும் வீடு திரும்பி விடுவார் என நினைத்த எங்களை ஏமாற்றிவிட்டு காலன் அவரை அழைத்துச் சென்றுவிட்டான்.😢
ஆசை அன்பு இழைகளினாலே...
பாசம் என்னும் வண்ணங்களோடு...
நேசம் என்னும் தறியினிலே ....
நெசவு நெய்தது வாழ்க்கை...!💑
இன்று குரோம்பேட்டை குமரன்குன்றம் சென்று ஶ்ரீசுவாமிநாத ஸ்வாமியை தரிசித்து வந்தோம்.🙏
என் நிறைவான வாழ்க்கையில் என்றும் என்னுடைய எல்லா செயல்களிலும் துணை நிற்கும் இறைவனை சிரம் தாழ்த்தி, இருகரம் கூப்பி வணங்குகிறேன்.🙏
ஓம் ஶ்ரீ சாய்ராம்🙏
#ராதாபாலு
'நாளாம் நாளாம் திருநாளாம்' படித்து பாராட்டி வாழ்த்து சொன்ன அன்பு மத்யம நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏இதுநாள் வரை என் குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே வாழ்த்துக்களைப் பெற்றிருந்த எங்களை முகமறியாத நீங்கள் வாழ்த்துக் கடலில் மூழ்கடித்த இந்த நாள் இனியநாள் மட்டுமல்ல...இதுவரை கிட்டாத நாள்...!
இனிதாய் உணர்ந்தேன்!
மனதால்  மகிழ்ந்தேன்!
கனிவாய் பகிர்ந்தேன்!
பணிவாய் நன்றிகளை!!

Tuesday 2 April 2019

குருவாயூருக்கு வாருங்கள்!

குருவாயூரப்பன் நாமம் பாடிடுவோமே|
குறையில்லா வாழ்வுதனை நாடிடுவோமே|

என்னப்பன் குருவாயூரப்பனைப்
பற்றி பாடவோ பேசவோ இந்த ஜன்மம் போதாது.
குருவாயூர் போகவேண்டும் என்று நிறைய நாட்களாக நான் சொல்லிக் கொண்டிருக்க, சென்றவாரம் திடீரென்று என் கணவர் 'நாம் நாளை குருவாயூர் செல்கிறோம்'என்றவரை நான் ஆச்சரியமாகப் பார்க்க, 'உன் ஆசையை நிறைவேற்றுவதே ஈசன் எனக்கிட்ட பணி'என்று தலை சாய்த்து சொல்ல என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை!

நாற்பது வருடங்களுக்கு பின் குருவாயூர் தரிசனம். என் எண்ணம் முழுதும் கிருஷ்ணஸ்மரணை. திருச்சியிலிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸில் பயணம். ரொம்....ப நாளைக்கு பிறகு ரயில் பயணம்..படித்துக் கொண்டும், தூங்கிக் கொண்டும், பக்கத்து சீட் பயணிகளுடன் பேசிக்கொண்டும்!

நாங்கள் அங்கிருந்த இரண்டு நாட்களும் குட்டிக் கண்ணனை தைலாபிஷேகம், சந்தனக்காப்பு, மலர் அலங்காரம், அத்தாழபூஜை என்று ஏழுமுறை வரிசையில் சென்று தரிசித்தும்,அவனை தரிசிக்கும் ஆவல் தணியவில்லை!

ஒவ்வொரு அலங்காரத்திலும் ஒவ்வொரு அழகில் மாயப் புன்னகை செய்கிறான் அந்த மாமாயன் மாதவன்! இந்த அழகுதான் அன்று ராதையையும் கோகுலத்து கோபியரையும் இவனிடம் காதல் கொள்ள வைத்ததோ!

குருவாயூரின் வரலாறு நாம் அறிந்ததே. ஸ்ரீகிருஷ்ணனால் பூஜிக்கப்பட்ட  பாதாளஅஞ்சனம் என்ற விலை மதிப்பற்ற கல்லினால் செய்யப்பட்ட சங்கு சக்கரம் கமலம் கதாயுதம் கழுத்தில் துளசிமாலை முத்து அட்டிகை தரித்த மகாவிஷ்ணுவின் திருச்சிலை, பிரகஸ்பதி மற்றும் வாயு பகவானால், ஶ்ரீமகாதேவரின் ஆணைப்படி பூலோகவைகுண்டம் எனப்படும் இத்தலத்தில் ருத்ரதீர்த்தத்தின் கரையில் நிறுவப்பட்டது. அதுவே குருவாயூரப்பன் இங்கு கோவில் கொண்ட வரலாறு.

குங்குமப்பூ, கஸ்தூரி, கோரோசனை, அகோவனம், செஞ்சந்தனம் ஆகிய ஐவகைத் திரவியங்களை பன்னீரில் கலந்து அரைத்த நறுமணச் சந்தனத்தையே குருவாயூரப்பனுக்குப் பூசுகிறார்கள்.

விடியற்காலை கருவறை திறந்தவுடன், முன்தினம் சாத்தப்பட்ட சந்தனக் கலவையைக் கண்டுகளிக்கலாம். குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் தைலாபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த உஷத்கால பூஜையில் குருவாயூரப்பன் உற்சவ விக்ரகம், வெளிப் பிரகாரத்தை மூன்று முறை சுற்றிக் கொண்டு வரப்படுகிறது. அந்த நேரத்தில், அஷ்டதிக் பாலகர்களுக்கும், குரு, வாயு பகவான் ஆகியோருக்கும், பலிபீடத்தில் அன்னம் இடப்படுகிறது. இவ்வாறு பரிவார தேவதைகளுக்குச் செய்யப்படும் வழிபாடு ‘சீவேலி’ எனப்படும்.
ஆலயத்தின் அழகும் புனிதமும் நம்மை மெய்மறக்கச் செய்கிறது.

வரிசையில் நின்று அனைவருக்கும் ஒரே மாதிரியான தரிசனம்.சிறப்பு தரிசனம், தனிவரிசை எதுவும் இல்லை. Senior Citizens வரிசை ஆலயத்தினுள் பிரகாரத்தில் காலை 8-10, மாலை 6-8  உண்டு.
உள்ளே பூஜிக்கும் அர்ச்சகர்கள் மனம் ஒன்றி அவர்கள் கடமையை செய்வது மனநிறைவு. அர்ச்சனைகள் செய்யப்படுவதில்லை என்பதால் யாரும் எவரிடமும் எதுவும் எதிர்பார்ப்பதில்லை.

கர்ப்பகிரகத்தில் சந்தனம்,
அபிஷேகித்த பால் எதுவும் கொடுப்பதில்லை.தரிசனம் செய்துவிட்டு வெளிவரும்போது அபிஷேகமான சந்தனமும்,காலை தைலாபிஷேகம் ஆனதும் தைலமும்,பாலும்  இலவச பிரசாதமாகத் தரப்படுகிறது. அத்தைலம் தீராத நோய்களையும் தீர்க்க வல்லது.

உன்னிகிருஷ்ணனுக்கு நிவேதித்த நெய்பாயசம், பால்பாயசம்,
அப்பம்,அவல்,அடை,களபம்,வெண்ணெய்,திரிமதுரம்,சர்க்கரை பாயசம்,அபிஷேக எண்ணெய் அனைத்தும் விற்பனை செய்யப் படுகிறது.

ஆலயத்தின் கிழக்கு, மேற்கு வாசல்களில் அழகான உயர்ந்த தீபஸ்தம்பங்கள். சன்னிதிக்கு முன்பாக தங்கக் கவசம் பூட்டிய 100 அடி உயர கொடிமரத்தின் இருபக்கமும் தீபஸ்தம்பங்கள் அழகுற காட்சி தருகின்றன. கருவறைக்கு செல்லும் முகமண்டபத்தின் நுழைவாயில் மேல் இரு பெரிய தந்தங்கள் அழகுற அமைக்கப்பட்டு நடுவில் மகாலட்சுமியின் திருவுருவம் காட்சி தருகிறது.

இந்த வாயில்படி தாண்டியதும் இடப்பக்கமுள்ள திண்ணையில் அமர்ந்துதான் பட்டதிரி நாராயணீயம் எழுத, குழந்தை கண்ணன் அதைத் தலையசைத்து ஆமோதித்தானாம்!
விடிகாலை 3 மணிக்கு நிர்மால்யம். இரவு முழுதும் தேவர்கள் இறைவனை பூஜிப்பதாக ஐதிகம். காலை விஸ்வரூபம் காண்பது மிக புண்ணியமாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து தைலாபிஷேகம்,
வாகைசார்த்து, சங்காபிஷேகம், அலங்காரம், உஷத்கால பூஜை என்று
121/2 மணிவரை சிரித்த முகத்துடன் கையில் வாழைப்பழம் வெண்ணெய் குழல் இவற்றுடன் மாறுபட்ட அலங்காரங்களில் காட்சி தரும் அந்த சின்னக்கண்ணனை கையில் தூக்கிக் கொஞ்ச ஆசை வருகிறது!

மாலை 4 1/2 மணி முதல் மீண்டும் நமக்கு அருள தயாராகிவிடுகிறான் அந்த தாமோதரன்! பின் மாலை சீவேலி அத்தாழ பூஜை இரவு சீவேலி என்று 9.15 வரை நமக்கு தரிசனம் தரும் தயாபரனுக்கு அதன் பின்பே ரெஸ்ட்!

இந்த உன்னிகிருஷ்ணனின் லீலைகள் ஒன்றா..இரண்டா? அவற்றை பதிவு 2ல் தொடர்கிறேன்.