Monday 9 December 2019

10.பஞ்ச பத்ரி




பஞ்சபத்ரி
விஷால் பத்ரி
பத்ரி விஷால் பத்ரிநாதரின் பிரதான தலமான பத்ரிநாத். பூஜைகள் நடக்கும்போது, 'ஜெய் பத்ரி விஷால் கி'என்று பக்தர்கள் கோஷம் எழுப்புகிறார்கள்.

யோகபத்ரி
பத்ரிநாத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஜோஷி மட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு பத்ரிநாதர் ஆளுயர சாளக்ராம மூர்த்தியாக யோகநிலையில் காட்சி தருகிறார்.

பாண்டு மஹாராஜா குந்தியை மணந்து பாண்டவர்கள் பிறந்து  பாண்டுகேஷ்வரரைத் துதித்து தியானம் செய்ததால் இது 'யோகத்யான் பத்ரி' என்றும் அழைக்கப்படுகிறது. பாண்டு மஹாராஜா தன்னுடைய இறுதி காலத்தை இங்கே கழித்ததாகச் சொல்லப் படுகிறது.
பாண்டவர்களும்தமது காலம் முடிந்த பிறகு இத்தலத்தில் இராச்சியத்தை பரீக்ஷித்திடம் ஒப்படைத்து விட்டு
சுவர்க்காரோகணி எனப்படும் சொர்க்கத்திற்கான பயணத்தை இங்கிருந்து  துவங்கினர்.

பவிஷ்யபத்ரி 
இந்த ஊர், ஜோஷி மட்டிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், 2744 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலைமீது ஏறிச் செல்ல வேண்டும். நரசிம்மர் தரிசனம் தருகிறார்.ஜோஷிமட் நரசிங்க மூர்த்தியின் கை தேய்ந்து விழும் போது ஜெய-விஜய (நரநாராயண)மலைகள் இரண்டும் இணைந்து பத்ரி செல்லும் பாதை அடைபட்டு விடும்.அப்போது இந்தபவிஷ்யபத்ரியில் பெருமாளை தரிசனம் செய்ய முடியும் என்கிறார்கள்.

விருத்தபத்ரி
ஜோஷி மட்டிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், பிப்பல் கோட் போகும் பாதையில் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் முதலில் தரிசித்த தலம். நாரதருக்கு நாராயணர் முதியவராகக் காட்சி தந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. 

ஆதிபத்ரி
கர்ண பிரயாகையிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் ராணி கேத் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இங்கே குப்தர்கள் கால கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சங்கு, சக்கரம், தாமரை,கதை இவற்றுடன் தரிசனம் தருகிறார் நாராயணன்.

இவை எல்லாவற்றையும் தரிசனம் செய்வது சாத்தியமில்லை. நாட்கள் போதாது. மலைகளில் ஏறி இறங்கி செல்வதும் கடினம்.
நாங்கள் பத்ரிநாத் (விஷால்பத்ரி) மற்றும் யோகபத்ரி மட்டுமே தரிசித்தோம்.

யாத்திரைபற்றி
நாங்கள் சார்தாம் யாத்திரை செல்வது பற்றி யோசிக்கவே இல்லை. கேதாரில் ஹெலிகாப்டர் போகாவிட்டால் 14 மைல் நடக்கவேண்டும், குதிரையில் போக வேண்டும் என்றெல்லாம் பலரும் பயமுறுத்த கேதார் போவதெல்லாம் கஷ்டம் என்று விட்டுவிட்டோம்.

என் நாத்தனார் அவர் உறவினர்களுடன் போவதால் எங்களையும் கூப்பிட..போவதா வேண்டாமா என்ற குழப்பம். என் பிள்ளையிடம்  கேட்டதும்..நல்ல சான்ஸ். இப்ப விட்டா போகமுடியாது. கண்டிப்பா போய்ட்டு வாங்கோ..என்று பணத்தையும் கட்டிவிட்டான்.
அந்த கடவுளே இந்த சந்தர்ப்பத்தைக் கொடுத்து தரிசனம் பண்ண கூப்பிட்ட மாதிரி நினைத்து மெய்சிலிர்த்தோம். நல்ல அற்புதமான தரிசனங்கள். மனதில் பதிந்ததை எழுத்திலும் பதிய வைக்கவே இந்த யாத்திரை அனுபவங்கள்.

*யாத்திரை செல்ல ஏற்ற மாதங்களாக செப்டம்பர் அக்டோபரே சிறந்தது. அட்சய திருதியை அன்று ஆலயங்கள் திறந்ததும் தரிசனங்கள் ஆரம்பித்து விடுமாம். மே ஜூனில் மலைகளிலிருக்கும் பனி உருகி வருவதால் பாதைகள் ஈரமாகி நடப்பது கடினம் என்கிறார்கள். ஜூலை ஆகஸ்ட் நல்ல மழை பெய்வதால் ஹெலிகாப்டர்கள் செல்வது கடினம்.நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

*நிறைய டிராவல்கள் இந்த யாத்திரைகளை அழைத்து செல்கிறார்கள். அவர்களே தங்குமிடம் ஏற்பாடு செய்து உணவும் அவ்வப்போது சூடாக சமைத்துப் போடுகிறார்கள்.அந்தக் குளிருக்கு இதமாக உள்ளது! சமைக்கும் வசதியுள்ள ஹோட்டல்கள், தர்மசாலைகளில் நமக்கும் தங்க ஏற்பாடு செய்கிறார்கள்.

*கேதார்நாத் பத்ரிநாத் யமுனோத்ரியில் அதிகபட்ச குளிர் இருப்பதால் தெர்மல், ஜெர்கின்கள்,கையுறைகள், கம்பளி ஸாக்ஸ்கள், தலை குல்லாக்கள்,  ஷீக்கள் அவசியம் தேவை.

*எல்லா இடங்களுக்கும் நிறைய உயரமான படிகள் ஏறி இறங்க வேண்டியிருப்பதால் சுவாச பிரச்னை முழங்கால்வலி இருப்பவர்களுக்கு கடினமே. அங்கு விற்கும் மூங்கில் கழிகளை வாங்கிக் கொண்டால் சற்று வேகமாக நடக்க உதவும்.

*எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் அந்த இறைவனை தரிசித்ததும் 'நாம் செய்த புண்ணியம்' என்று மனம் பக்தியிலும் சந்தோஷத்திலும் மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது.

'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்ற பெருமை நமக்குள்ளும் ஏற்படுகிறது. 'தேவபூமி' என்பதற்கேற்ப அந்த இயற்கை அழகும், பனி மூடிய மலைகளும், பெருகி ஓடும் நதிகளும், ஆன்மீக எண்ணங்களும்,மாசில்லாத சுற்றுச் சூழலும் அவ்விடத்திலேயே இருந்துவிட மாட்டோமா என்ற ஆசையைத் தூண்டுகிறது!

இதயம் கவர்ந்த இமயமே!
இயற்கை அழகில்
இமைக்க மறந்தேன்!
இன்பம் அடைந்தேன்!

உன்னில் நடந்தேன்!
உன்னை தீண்டினேன்!
உன்னை ரசித்தேன்!
உன்னில் மயங்கினேன்!

உன் உயரம் கண்டு வியந்தேன்!
என் துயரம் மறந்து மகிழ்ந்தேன்!
எத்தனை உயரம்..
எத்துணை ஆறுகள்..
அழகாய் இறங்கும் நீர்வீழ்ச்சிகள்..
ஆங்காங்கே ஆலயங்கள்..

என்னை மறந்து
உன்னில் கலந்தேன்!
ஈராறு நாட்கள் இணைந்திருந்தேன்!
இறைதரிசனங்களில்
இவ்வுலகம் மறந்தேன்!
இனி என்று காண்பேன்
இப்பிறவியில் உன்னை!

7.யமுனோத்ரி தாம்


பத்ரி, கேதார், கங்கோத்ரியை அடுத்து யமுனோத்ரி நான்காவது புண்ணியத்தலம்.  இமயமலையில் கார்வாலில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3300 மீட்டர் (10800 அடி) உயரத்தில் யமுனோத்ரிக்கு மேல் 4400 மீட்டர் உயரத்திலுள்ள சம்பஸார் கிளேசியரிலிருந்து தன் நீண்ட பயணத்தைத் துவங்கும் யமுனை, இமயமலைச் சாரலில் பல இடங்களைத் தன் மென்மையான கரங்களால் தழுவியபடியே நிதானமாக, அமைதியாக, அழகாக, ஆரவாரமின்றிச் சென்றுகொண்டிருக்கிறாள். அந்த யமுனோத்ரியே  யமுனையின் ஆலயம் அமைந்துள்ள சார்தாம்களில் ஒன்று.

அசீத முனிவர் நாள்தோறும் கங்கையிலும் யமுனையிலும் குளித்துத் தவம் செய்யும் வாழ்வை மேற்கொண்டவர். அவருடைய முதுமைக் காலத்தில் அவரால் கங்கோத்ரி செல்ல முடியாததால் கங்கை நதியே அவருக்காக யமுனோத்ரி வந்ததாக நம்பப்படுகிறது.

இத்தகு சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலமான யமுனோத்ரி, ரிஷிகேஷிலிருந்து சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் இருக்கிறது. டேராடூன், முசோரி, பார்கோட் வழியாக ஜானகிபாய் சட்டி என்ற இடம் வரையில் தான் பேருந்து செல்லும். பின்னர் அங்கிருந்து 6 1/2 கிலோமீட்டர் தூரம் செங்குத்தான கடினமான மலைப்பாதையில் ஏறிச்சென்றால் யமுனோத்ரி அடையலாம். ஜானகிபாய் சட்டியிலிருந்து பார்க்கும்போது பனி சூழ்ந்த இமயமலைச் சிகரங்கள் இளம் வெயிலில் பளபளத்துக்கொண்டிருந்தது கண்களைப் பறிப்பதாக இருந்தது. இயற்கையின் அழகு நம்மைக் கட்டிப் போடுகிறது! மலையில் ஏறிச் செல்லும்போது கீழே ஒரு மெல்லிய வெண்மைக் கோடாக காட்சி தருகிறது யமுனை.

மேலே ஏற முடியாதவர்களுக்கு குதிரைகளும், நான்கு பேர் தூக்கிச் செல்லும் டோலிகளும் உள்ளன. குதிரைகளுக்கு 1000 முதல் 1200 வரையும், டோலிகளுக்கு 3500 முதல் 4500 வரையும் ஆகும் என்றார் எங்கள் டூர் மேனேஜர். நாங்கள் சென்றது சீஸனின் கடைசி டூர் என்பதால் அவர்கள் கேட்டதைக் கொடுக்க வேண்டியதாயிற்று. அவர்களுக்கு ஏஜண்டுகள் இருப்பதால் அவர்கள் மூலமே நாம் புக் செய்ய முடியும்.

குதிரையில் செல்ல 1500ரூ. டோலி நான்கு பேர் என்பதால் 5000ரூ. குதிரைக்கு 100ரூபாயும், டோலிக்கு 500ரூ.யும் அரசுக்குவரி
செலுத்த வேண்டும். குதிரைக்காரருக்கு 500ரூ.யும் டோலிக்காரர்களுக்கு 1000ரூ.யும் சாப்பாட்டுக்கு கொடுக்க வேண்டும். சீஸனில் குறைவாகக் கேட்பார்களாம். மேலே செல்ல குதிரையில் 1 மணி நேரமும் டோலியில் 2 மணி நேரமும் ஆகிறது.

மலை மிகவும் செங்குத்தாக இருப்பதால் ஏற முடியாதவர்கள் கண்டிப்பாக இப்படித்தான் மேலே ஏறி இறங்க வேண்டும். எங்கள் குழுவில் காலை 9 மணிக்கு கால்நடையாக ஏறிச் சென்றவர்கள் 5 மணிக்கு திரும்பி வந்தார்கள். திரும்ப வரும்போது மழை வந்துவிட்டதால் குதிரைகள் இறங்க முடியாமல் வழுக்கி விழுகின்றன.

நடந்து செல்பவர்கள் குதிரைகளுக்கும், டோலிகளுக்கும் வழிவிட்டுச் செல்லவேண்டும்.நான்கு பேரும் ஒரே மாதிரி கால் வைத்து நிதானமாக செல்கிறார்கள். டோலிக்காரர்கள் சற்று ஏற்றமில்லாத பாதைகளில் நம்மை இறக்கி விட்டு சற்று தூரம் நடக்கச் சொல்கிறார்கள். அவர்களும் மனிதர்கள்தானே? அவர்கள் தூக்கிச் செல்வது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. வழியில் தேனீர் சாப்பாட்டு கடைகளில் இறக்கி அவர்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொள்கிறார்கள். நடந்து செல்பவர்கள் ஓய்வெடுக்க வழியில் இருக்கைகளும்,கழிவறை வசதிகளும் உள்ளன.

பனியாறுகள் கொண்ட பிரம்மாண்ட பனிமலையாக இமயத்தின் தரிசனம். மனிதனின் அசுரக்கரங்கள் இன்னும் எட்டாத இடத்தில் இருப்பதால், அவனிடமிருந்து தப்பிப்பிழைத்த, மரங்களும், செடிகொடிகளும் கொண்ட பசுமையான பிரதேசம் கண்களுக்கு இதத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. ஒரு பக்கம் நெடிதுயர்ந்த மலையும் மறுபுறம் அதலபாதாளமுமாக இயற்கையின் எழிலான காட்சி நம்மைப் பிரமிக்க வைக்கிறது. மலையில் பிறந்து மண்ணில் இறங்கி நம்மை வாழவைக்கும் நதிகளின் பெருமையும் சிறப்பும் சொல்லி மாளாது.  இத்தனை நதிகள் இருந்தும் தண்ணீருக்கு நாம் படும் கஷ்டம் ஏன்? பதில் தெரியாத கேள்வி.

செல்லும் வழியில் ராமர், பைரவர் ஆலயங்கள் உள்ளன. நான் டோலியில் சென்றதால் பார்க்கும் பரவசக் காட்சிகளையும் இயற்கை அன்னையின் எழிலான தோற்றத்தையும் கண்களுக்குள் படம் பிடித்ததோடன்றி என்றும் காணும் விதமாக மொபைலிலும் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் பதிந்து கொண்டேன்.

யமுனை நதி தெளிவாகப் பளிங்குபோலும், சற்றே இளம்பச்சை நிறத்தோடும் அசைந்து வளைந்து நெளிந்து அழகாக ஓடிவருகிறாள். அருகிலேயே யமுனைக்கான ஆலயம் அமைந்துள்ளது. கீழே படிகளில் இறங்கிச் சென்றால் யமுனை நதி. கங்கை சரஸ்வதி போலின்றி சாதுவாக ஓடும் நதியில் நீரும் அதிகமில்லை. மேலே கிளேசியர்கள் உருகி வரும்போது நிறைய தண்ணீர் இருக்குமாம். 

யமுனோத்ரியில் பயங்கர குளிர். தண்ணீரைத் தொட்டாலே கைகள் குளிரில் மரத்துப்போகிறது.இதற்கு அருகில் எப்படி ஒரு வெந்நீர் ஊற்று என்று இயற்கையை நினைக்க  ஆச்சரியமாக உள்ளது. தண்ணீரை பாட்டிலில் நிரப்பிக் கொண்டோம். டோலி ஆட்கள் விரைவாக வரச்சொன்னதால் குளிக்க முடியவில்லை.

அங்குள்ள சூர்யகுண்டம் என்ற வெந்நீர் ஊற்றுக் குளத்தின் தண்ணீரைப் ப்ரோக்ஷித்துக் கொண்டு அருகிலுள்ள யமுனாபாய் குண்டத்திற்கு சென்றோம்.சூரிய குண்டத்தின் அருகில் உள்ள 190°F.ல்  கொதிக்கும் நீரூற்று  'யமுனாபாய் குண்டம்' என்று அழைக்கப்படுகிறது. அங்கே யமுனையின் 'திவ்ய சிலா' பூஜிக்கப்படுகிறது. அங்குள்ள பண்டா என்ற  புரோகிதர்கள்   நாம் கொடுக்கும் அரிசியையும், உருளைக்கிழங்கையும்  ஒரு மெல்லிய துணியில் கட்டி  அந்த குண்டத்தில் 15 நிமிடங்கள்  வைத்துக் கொள்கிறார்கள். அது ஓரளவு வெந்ததும் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். அந்த அரிசியைக் காயவைத்து பாயசம் செய்து சாப்பிட சொல்கிறார்கள். அங்குள்ள கடைகளில் அரிசி, உருளைக் கிழங்கு விற்கிறார்கள்.

அடுத்து யமுனையின் ஆலயதரிசனம். யமுனை சூரியனின் மகள். யமனின் சகோதரி. இவளை வணங்குவதால் யமபயம் இன்றி கஷ்டமில்லாத மரணம் சம்பவிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலே வெகு உயரத்தில் இருந்த யமுனையின் ஆலயத்துக்கு யாரும் எளிதில் போகமுடியாததால் இவ்வாலயத்தை தேஹ்ரி அரசர் நரேஷ் சுதர்சன் ஷா  1839ம் ஆண்டு யமுனோத்ரியில் உருவாக்கினார்.

கர்ப்பகிரகத்தில் கருமை நிறத்தில் யமுனையும் வெண்ணிறத்தில் கங்கையும் காட்சி தருகிறார்கள். தீபாவளிக்கு அடுத்தநாளான யமதிவிதியை அன்று உற்சவ விக்ரகம் கீழுள்ள கர்சாலி என்ற இடத்திலுள்ள ஆலயத்துக்கு பல்லக்கில் விமரிசையாக எடுத்துச் சென்று பூஜிக்கப்படும். ஆறு மாதங்களுக்கு பின்பு அட்சயதிருதியை அன்று திரும்ப யமுனோத்ரிக்கு செல்லும்.

நான்கு தாம்களில் யமுனோத்ரி செல்வது சற்று கடினமாகவே உள்ளது. ஜானகிபாய் சட்டியிலிருந்து பாதை மிக குறுகலாகவும் மேடுபள்ளமாகவும் உள்ளது. தெரு விளக்குகளும் குறைவு.நாங்கள் திரும்பும்போது 6 மணிக்கு மேல் ஆகிவிட்டது. பகலில் மயக்கும் இயற்கை அழகு இருளில் எதையும் ரசிக்க முடியாமல் நம்மை மிரட்டுகிறது. நல்லபடி போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது. பேருந்து ஓட்டுனர்களின் திறமைக்கு தலை வணங்க வேண்டும். இந்த நான்கு தலங்கள் தவிர நாம் தரிசிக்க வேண்டிய சில முக்கியமான ஆலயங்களை பற்றி தொடர்கிறேன்.

9.சார்தாம் யாத்திரை..முக்கிய ஆலயங்கள்.

சார்தாம் யாத்திரையில் நாம் தரிசிக்க வேண்டிய சில முக்கிய ஆலயங்கள்.

உத்தரகாசி
உத்தர காசி  பாகீரதி நதிக்கரையில் கடல்மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. பல ஆறுகள் கொண்ட இம்மா
வட்டத்தில், பாகீரதியும் யமுனையும் பெரிய ஆறுகள்.  வாரணாசியில் உள்ளது போலவே இங்கேயும் ஒரு 'அசி' நதி இருக்கிறது. ஸ்கந்த புராணத்தில் 'கலியுகத்தின் காசி' என்று சொல்லப்பட்டுள்ளது இத்தலம்.

கலியுகம் பாதி முடியும்போது இப்போதுள்ள பத்ரி கேதார் தலங்கள் அழிந்து விடுமாம். பஞ்சபத்ரிகளில் ஒன்றான பவிஷ்யபத்ரி பத்ரியாகவும் உத்தரகாசி கேதாராகவும் மாறிவிடும் என்கிறது புராணம்.

உத்தர காசியிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் மிக அழகாக உள்ளது. இந்த ஆலயத்தில் சிவபெருமான் தவத்தில் வீற்றிருப்பதாக ஐதீகம். கர்ப்பக்கிருகத்தில் இருக்கும் சிவலிங்கம் தென்திசை நோக்கி லேசாக சாய்ந்திருக்கிறது. எமன் மார்கண்டேயரின் உயிரைக் கவர முயன்றபோது, மார்கண்டேயர் சிவபெருமானைக் கட்டி அணைத்துக்கொண்டதால், அவரை எமனிடமிருந்து சிவபெருமான் காப்பாற்றினார்; அதன் காரணமாகத்தான் சிவலிங்கம் தென்திசையில் சாய்ந்திருக்கிறது என்று கூறுகிறது ஸ்தல புராணம். இந்தத் தலம் மார்கண்டேய மஹரிஷிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. கர்ப்பக்கிருகத்தில் சற்றே தலை சாய்ந்த நிலையில் காசிவிஸ்வநாதர் லிங்கவடிவில்  காட்சி தருகிறார். உள்ளேயே விநாயகர் பார்வதி தேவி விக்ரகங்கள் உள்ளன. தற்போது உள்ள கோவில் தேஹ்ரி மன்னர் சுதர்ஷன் ஷாவின் மனைவி கனேதி தேவி 1857ல் கட்டியது.

கோவில் வளாகத்திற்குள்ளேயே, காசி விஸ்வநாதர் சன்னிதிக்கு எதிரே சக்தி தேவிக்கும் கோவில் உள்ளது. சக்தி தேவி 19.5 அடி உயரம் கொண்ட திரிசூலமாகக் காட்சி தருகிறாள். தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான யுத்தத்தில் இந்த திரிசூலத்தைக் கடவுள்கள் பயன்படுத்தி அசுரர்களை அழித்ததாக ஐதீகம். இந்தத் திரிசூலத்தில், விஷ்ணுவின் சுதர்சன சக்கிரமும் பரசுராமரின் கோடரியும் சேர்ந்துள்ளதாம் .

இங்கே பாரத திபேத்திய கலாச்சாரப் பிணைப்பைக் காட்டும் விதத்தில் கல்வெட்டுக்களும் அழகிய சிற்பங்களும் உள்ளன. வேதம் பயிலும் பாடசாலை உள்ளது. நாங்கள் சென்ற அன்று கர்வாசௌத் (Karva Chauth) பண்டிகை. அங்குள்ள பெண்கள் அன்று நம் காரடை நோன்பு போன்று கணவரின் ஆயுளுக்காக செய்யும் பண்டிகை என்பதால் கோவிலில் நிறைய பெண்கள் பூஜை செய்தனர்.

குப்தகாசி
ருத்ரப் பிரயாகையைத் தாண்டி உள்ளது குப்த காசி என்கிற இடம்.  குப்தகாசிக்கு எதிரே உள்ள ‘ஊகிமட்’ என்கிற கிராமத்தில்  மணிகர்ணிகா என்கிற  நீரூற்று  உள்ளது.

150 படிகளுக்கு மேல் அமைந்துள்ள  இந்தக் கோவில் கேதார்நாத், நேபாளம், பசுபதிநாத் ஆகிய ஆலயங்களுடன் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் இங்கு செய்யப்படும் பூஜை, புண்ணிய காரியங்கள்,தான தருமங்கள் அந்தத் தலங்களில் செய்த பலனைத் தருவதாக ஐதீகம்.

கோவில் மிகவும் அழகாக  கிட்டத்தட்ட கேதார்நாத் போலவே உள்ளது. கோவிலுக்கு முன்புறம் அழகிய சிறிய குளம் உள்ளது.
அதில் ஒரு பக்கம் ‘பசு’ முகத்திலிருந்து கங்கையும்  மறுபுறம் ‘யானை’ முகத்திலிருந்து யமுனை நீரும் ஊற்றிக்
கொண்டிருக்கிறது. சரஸ்வதி பூமியிலிருந்து இணைவதால் திரிவேணி சங்கமம் எனப்படுகிறது.

பாண்டவர்கள் தங்கள் பாவம் தீர சிவபெருமானைத் தேடி காசி சென்ற போது அவர்களுக்கு காட்சி தராமல் திருக்கயிலாயத்திற்கு வந்து விட்டார். அவரைத் தேடி இமயமலை வந்தபோது ஈசன் இவ்விடத்தில் நந்தி ரூபத்தில் மறைந்ததால் இவ்விடம் குப்தகாசி என்ற பெயர் பெற்றது.

அர்த்தமண்டபத்துடன்  சிங்கி-பிங்கி எனும் துவாரபாலகர்கள் ஆலயத்தை காவல் காக்க கருவறையில் சிவலிங்க ரூபத்தில் அருள்பாலிக்கின்றார் விஸ்வநாதர். அவருக்கு எதிரே  நுண்ணிய  வேலைப்பாடுகளுடன் சிறிய பஞ்சலோக நந்தியெம்
பெருமான் காட்சி தருகிறார். சிவபெருமான் கௌரிதேவியைஇங்குதான் பெண் கேட்டார் என்று ஒரு ஐதீகம் உள்ளது. அவுரங்கசீப் காசி ஆலயத்தை அழித்து மசூதியாக மாற்றியபோது விஸ்வநாதர் இங்கு வந்தவர் இங்கேயே தங்கி விட்டார் என்று கூறப்படுகிறது.

விஸ்வநாதர் ஆலயத்திற்கு இடப்பக்கம்  இன்னொரு சிறு சன்னதி உள்ளது. அது அர்த்தநாரீசுவரர் சன்னதி. இவ்வாலயத்தில் இடபத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் ஆண்பாதி பெண்பாதியாக சிவசக்தியின் பளிங்குமூர்த்தமாக அருள் பாலிக்கின்றார் சிவபெருமான்.இடப்பக்கம் மூக்குத்தி, அக்கமாலை, சுவடி, திருப்பாதங்களில் கொலுசு, வலப்பக்கம் நாகம், இளம்பிறை, திரிசூலம், திருப்பாதங்களில் நாகம்  என அழகு மிளிர்கிறது. பின்புறம் அன்னபூரணிக்கு ஒரு சிறு சன்னதி உள்ளது.

ஜோஷிமட்
ரிஷிகேஷிலிருந்து 254 கிலோமீட்டர் தொலைவில், கடல்மட்டத்திலிருந்து 6150 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஜோஷிமட் அல்லது திருப்பிருதி எனும் திவ்யதேசம். பெருமாளின் மீது பக்தர்களுக்கும், பக்தர்கள் மீது பெருமாளுக்கும் இருக்கும் அன்பைக் குறிக்கும் பிரீதி என்ற சொல்லிலிருந்து இந்தத் திருத்தலம் திருப்பிரீதி என்று பெயர் பெற்று,  பிறகு இந்தப் பெயர் திருப்பிருதி என்று  மருவியிருக்கலாம்.இங்கே இருக்கும் நரசிம்மர் மற்றும் வாசுதேவர் ஆலயங்கள் ஆதிசங்கரரால் கட்டப்பட்டுள்ளன.

திருமங்கை ஆழ்வாரின் பாசுரப்படி இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் கிடந்த திருக்கோலத்தில் இருந்திருக்கிறார். ஆனால் தற்போது இந்தக் கோவிலில் எழுந்தருளியிருப்பவர் இருந்த கோலத்தில் சேவை சாதிக்கும் நரசிம்மர். இந்தக் கோவில் நரசிங் மந்திர் என்றே அழைக்கப்படுகிறது. இங்குள்ள கல்பவிருக்ஷம் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கருதப்படுகிறது. நரசிம்மர், துர்கை ஆகியோருக்கு இங்கே கோவில்கள் இருக்கின்றன.

கேரளாவில் இருந்து 8-ஆம் நூற்றாண்டில் இங்கு வந்து இந்தக் கோவிலில் உள்ள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த பிறகுதான் ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதினர் என்றும், இங்கே ஒரு பீடத்தை நிறுவினார் என்றும் ஐதீகம். (ஆதிசங்கரர்  இந்தியாவின் நான்கு திசைகளிலும் நிறுவிய நான்கு பீடங்கள்: வடக்கே ஜோதிர்மட்,கிழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி, மேற்கே துவாரகை).

வசிஷ்டர்குகை
ரிஷிகேஷிலிருந்து 25 கி.மீ. தொலைவில் பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ளது வசிஷ்டர் குகை. சில படிகள் கீழே இறங்கிச் செல்ல வேண்டும்.

சப்தரிஷிகளில் ஒருவரும் பிரம்மாவின் மானஸபுத்திரருமான வசிஷ்டரின் பிள்ளைகள் விசுவாமித்திரரால் வஞ்சனை
யால் கொல்லப்பட்டபோது மனம் வெறுத்த வசிஷ்டர் தானும் கங்கையில் விழுந்து உயிர்விட  முடிவு செய்தார்.
கங்காதேவி அவரைக் காப்பாற்றி அங்கு தங்கியிருக்க வேண்டினாள். அருந்ததிக்கும் அவ்விடம் பிடித்துப் போய் அங்கேயே தங்கினர்.பல நூறு ஆண்டுகள் இங்கு தவம் செய்தபின் வசிஷ்டர் தன்  மனசஞ்சலம் நீங்கப் பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.
அருந்ததி குகையும் அருகில் உள்ளது.

இவ்விடம் சுவாமி புருஷோத்தமானந்தா ஆஸ்ரமத்தால்  மிக அழகாக பராமரிக்கப்படுகிறது. சற்று நீண்ட குகையினுள் சிறிய சிவலிங்கம் உள்ளது. அமைதியும் சுத்தமும் மனதைக் கொள்ளை கொள்கின்றன.அங்கு தியானம் செய்ய ஆசனங்களும் உள்ளன. எவரும் உள்ளே சென்று அமர்ந்து தியானம் செய்யலாம். அருகில் அமைதியாக ஓடும் கங்கை நதியின் அழகு சொக்க வைக்கிறது.

ஹனுமான்சட்டி
ஜோஷிமட் பத்ரிநாத் பாதையிலுள்ள ஹனுமான் சட்டி ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம் புராண பெருமை பெற்றது. பீமன் திரௌபதிக்காக சௌகந்திக புஷ்பத்தை தேடிச் சென்றான். வழியில் படுத்திருந்த ஹனுமனை வழிவிடும்படி பீமன் சொல்ல, ஹனுமனும் தன் வாலை நகர்த்திவிட்டு போகச் சொன்னார்.

தன் பலத்தைப் பற்றி அகந்தை கொண்டிருந்த பீமன் 'ஒரு குரங்கின் வாழை நகர்த்த முடியாதா' என்று அலட்சியமாக வாலை நகர்த்தினான். அது நகரக்கூட இல்லை.தன் கையால் பலம் கொண்டவரை நகர்த்தியும் முடியவில்லை. தன் கர்வம் குறைந்து பீமன் மன்னிப்பு கேட்க ஹனுமன் தான் யாரென்று கூறி சகோதரனை அணைத்து ஆசி வழங்கினார். அவ்விடமே இவ்வாலயம் உள்ள இடம். இதே பெயரில் உள்ள இன்னொரு ஊர் யமுனோத்ரி செல்லும் வழியில் உள்ளது.கோவில் சிறிதானாலும் மிக அழகாக இருக்கிறது. இங்கு ஹனுமான் சாலிஸா சொல்லி எதை வேண்டினாலும் நிறைவேறுமாம்.

இன்னும் பல ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் புராண வரலாறுகள் உள்ளது. எல்லா இடங்களுக்கும் செல்ல யாத்திரையின் நாட்கள்தான் போதவில்லை!

8.பஞ்சபிரயாகை


சார்தாம் யாத்திரையில் நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய முக்யமான சங்கமங்கள் ஐந்து.அவையே பஞ்சப்பிரயாகைகள்.

இரண்டு அல்லது மூன்று நதிகள் சந்திக்கும் இடங்கள் பிரயாகை என்று சொல்லப்படுகின்றன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  அலஹாபாத் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறும் சிறப்பு வாய்ந்த தலமாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இவ்விடம் பிரயாகை எனப்படும்.

சார்தாம் யாத்திரை செல்லும்போது உத்தர்கண்ட் மாநிலத்திலும் பஞ்ச பிரயாகை என்று சொல்லப்படுகிற ஐந்து பிரயாகைகள் உள்ளன. அவை தேவப்ரயாகை, விஷ்ணு பிரயாகை, ருத்ர பிரயாகை, நந்த பிரயாகை, கர்ண பிரயாகை. இவை அலநந்தா நதியுடன் வேறு ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடங்கள் ஆகும். 

தேவபிரயாகை
ஹிமாலயப் பயணத்தில் தேவ பிரயாகை ஒரு முக்கியமான தலமாகும். உத்தர்கண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் மாவட்டத்தில் இருக்கிறது தேவ பிரயாகை. சதோபந்திலிருந்து வரும் அலக்நந்தா நதியும், கௌமுகியிலிருந்து பாய்ந்தோடி வரும் பாகீரதியும் சங்கமித்து கங்கையாகப் பெயர் பெறும் இடமாகும். சற்றே பழுப்பு நிறத்தில் அலக்நந்தாவும், இளம் பச்சை நிறத்தில் பாகீரதியும் சங்கமிக்கும் இடம் எழில் கொஞ்சும் ரம்மியமாக இருக்கிறது. இங்கு ஸ்நானம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது.

அலகநந்தாவின் பாலத்தைக் கடந்து சென்று கீழே இறங்கினால் சங்கமம் உள்ளது. இங்கு பிண்ட தர்ப்பணம் செய்வது மிக விசேஷம். ஸ்நானம் செய்ய வசதியாக படிகள் உள்ளன. இங்கும் உயரமான படிகளில் ஏறுவதும் இறங்குவதும்  கடினமாக உள்ளது.

கௌமுகியிலிருந்து ஆவேசமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் அடித்துப் புரண்டு அதிவேகமாக வரும் பாகீரதி நதியும், வஸுதராவில் தோன்றி பல சங்கமங்களைக் கண்டு பாய்ந்து வரும் அலகநந்தாவும் இங்கு சங்கமமாகி புனித கங்கையாகிறது. அதனால் இவ்விடம் ஆதிகங்கை எனப் போற்றப்படுகிறது. இங்கிருந்து கங்கை தன வேகம் குறைத்து அமைதியாக செல்கிறாள்! அருகில்மகரவாகினியாக வெள்ளைப் பளிங்கில் கங்காமாதாவின் சிலையும் ஹனுமன் சிலையும் உள்ளது. இவ்விடத்தில் தேவசர்மா என்ற முனிவர் தவம் செய்ததால் தேவப்ரயாகை எனப் பெயர் பெற்றது.’தேவ பிரயாகை’ என்றால் ‘தெய்வீக சங்கமம்’ என்று அர்த்தம். 

ஸ்ரீரகுநாதர்ஆலயம்
தேவப்பிரயாகை சங்கமத்திற்கு மேலே அரை கிலோமீட்டர் ஏறிச் சென்றால் திவ்ய தேசத்தில் ஒன்றான ஸ்ரீரகுநாதர் கோவிலைக் காணலாம். பத்ரிநாத்திலிருந்து ஹரித்வார் வரை பெருமாளின் விராடரூபம் எனப்படும். அவரது நாபிக்கமலம் தேவப்ரயாக். பிரம்மாவும், தசரதரும், ராவணனைக் கொன்ற பாவம் தீர ஸ்ரீ ராமனும் தவம் செய்த தலம் இது. அந்த இடத்தில் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்ய மண்டபம் உள்ளது. 

68வது திவ்யதேசமான திருக்கண்டமெனும் கடிநகர் எனப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு வருகை தந்த பெரியாழ்வார் ஸ்ரீரகுநாதனைப் போற்றி 11 பாசுரங்கள் பாடியிருக்கிறார்.அவருடைய பாசுரங்களைக் கல்வெட்டாகப் பதித்திருக்கிறார்கள். 
கற்களால் ஆன இக்கோவில் மிகவும் அழகாக இருக்கிறது. 

பல ஆயிரம் வருடங்கள் பழமையான ஆலயத்தில் ஒரே பிரகாரம். உயரமான கருவறையில் சாளக்கிராம மூர்த்திகளாக லட்சுமணன், சீதையுடன் உயரமான கோலத்தில் சேவை சாதிக்கும்  ஸ்ரீ கோதண்டராமரின் அழகில் மனம் மயங்குகிறது. இங்கேயுள்ள ரகுநாதனின் பாதக் கமலங்களிலிருந்து சரஸ்வதி நதியானவள் அந்தர்யாமியாக உற்பத்தியாகி தேவ பிரயாகையில் அலக்நந்தாவுடனும் பாகீரதி
யுடனும் சங்கமிப்பதாக ஐதீகம். 

விஷ்ணுபிரயாகை
சமோலி மாவட்டத்தில் ஜோஷி மட்டுக்கும் பத்ரிநாத்துக்கும் இடையில் இருக்கிறது விஷ்ணு பிரயாகை. இது. ’அலக்நந்தா’ நதியும் ’தௌலி கங்கா’ நதியும் சங்கமிக்கும் இடமாகும். இரண்டு வண்ணங்களில் நதிகள் சங்கமிக்கும் காட்சி கண்களுக்கு விருந்து.

கார்வால் ஹிமாலயத்தொடரில் உள்ள சௌகம்பா என்கிற சிகரத்தில் உள்ள கிளேசியர்களிலிருந்து இந்நதி தோன்றி பின்னர் இந்திய-திபேத்திய எல்லையில் இருக்கும் மனா என்கிற கிராமத்தில் உற்பத்தியாகும் சரஸ்வதி நதியுடன் சங்கமித்து, பிறகு பத்ரிநாத்வழியாக வருகிறது. இந்தப் பாதையில் செல்லும் அலக்நந்தாவுக்கு 'விஷ்ணு கங்கா'’ என்கிற பெயரும் உண்டு. 

இது நாரதர் விஷ்ணுவுக்குப் பூஜைகள் செய்து வழிபட்ட தலம். இந்தோர் மஹாராணி அஹல்யாபாய் 1889ல் கட்டிய கோவில் இருக்கிறது. இங்கே அருகில் உள்ள ஹனுமான் சட்டி என்கிற இடத்தில் ஜேபீ JayBee  தொழில்நிறுவனத்தாரின்  விஷ்ணு பிரயாகை நீர் மின் திட்டம் மூலம்  400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  

நந்தபிரயாகை
நந்த பிரயாகையும் சமோலி மாவட்டத்தில் உள்ளது. இது ’அலக்நந்தா’ நதியும் ’நந்தாகினி’ நதியும் சங்கமிக்கும் இடம்.

சக்கரவர்த்தி நந்தன் யாகம் செய்த இடமாகையால் அவர் பெயரில் வழங்கப்படுகிறது. கிருஷ்ணரை வளர்த்த யசோதையின் கணவன் நந்தனின் நினைவாகவும் இந்தப் பெயர் என்றும் சொல்லப்படுகிறது. இது கண்வ மஹரிஷி தவம் செய்த இடமாகவும், துஷ்யந்தன்
சகுந்தலை திருமணம் நடந்த இடமாகவும் கூறப்படுகிறது. இங்கே சண்டிதேவி, மகாதேவர், கோபாலனுக்கு  கோவில்கள் உள்ளன.

கர்ணபிரயாகை
கர்ண பிரயாகையும் சமோலி மாவட்டத்தில் உள்ளது. இது ’அலக்நந்தா’ நதியும் ‘பிண்டார்’ நதியும் சங்கமிக்கும் இடம். 
கர்ணன் தவம் செய்து கவச குண்டலம் பெற்ற இடமாகும்.

காளிதாசனின் அபிஞான சாகுந்தலையில் துஷ்யந்தனும் சகுந்தலையும் இங்கே நடனமாடியதாகக் கூறப்பட்டுள்ளது. இங்கே ஸ்வாமி விவேகானந்தர்18நாட்கள் தியானத்தில் இருந்துள்ளார். இங்கு உமாதேவிக்கும் கர்ணனுக்கும் கோவில் இருக்கிறது. சங்கமத்திற்குச் செல்லப் படிக்கட்டுகள் உள்ளன. 

ருத்ரபிரயாகை
கேதார் நாத்திலிருந்து 86 கிலோமீட்டர் தொலைவிலும், ரிஷிகேஷிலிருந்து 140கி.மீ. தொலைவிலும் ருத்ர  பிரயாகை உள்ளது. இங்கு வெண்ணிற அலக்நந்தாவுடன் கேதார்நாத்திலிருந்து வரும் பச்சை நிற மந்தாகினி நதி அழகுற சங்கமிக்கும் இடம். இங்கே சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடியதாலும், ருத்ர வீணையில் இசை மீட்டியதாலும் இவ்விடம் ருத்ர பிரயாகை என்று வழங்கப்படுகிறது. 

ஒரு முறை நாரதருக்குத் தன்னுடைய இசைத்திறமையின் மீது மிகவும் கர்வம் ஏற்பட்டது. தேவர்களின் வேண்டுகோளுக்
கிணங்க, கிருஷ்ணர் அவரிடம், 'உன்னுடைய இசைத்திறமையில் சிவனும் பார்வதியும் மனதைப் பறிகொடுத்துள்ளனர்' என்று சொல்ல அவர்களைத் தரிசிக்க இமயத்திற்குச் சென்றார்.நாரதர் தவறாக வீணை வாசித்ததால் ராகங்களின் அழகு கெட்டுப்போனதென்று அவர் மீது பழி ஏற்பட்டத்தை அறிந்துஅவர் கர்வம் நீங்கியது. பிறகு சிவபெருமானின் சீடராகி நாரதர் முறையாக வீணை கற்றுக் கொண்டார்.

தக்ஷன் சிவபெருமானை அவமதித்ததால், நெருப்பில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்ட தாக்ஷாயிணி பிறகு பர்வத ராஜன் ஹிமவானின் புத்ரி பார்வதியாகப் பிறந்து, சிவபெருமானை மணக்க அவள் தவம் புரிந்து இடமாகவும் இது சொல்லப்படுகிறது. ருத்ரனுக்கும் சாமுண்டிக்கும் இங்கே கோவில்கள் உள்ளன. 

நாங்கள் தேவபிரயாக், விஷ்ணுபிரயாக் மட்டுமே சென்றோம். 2013ல் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்கள் இன்னமும் சீர்படுத்தப்பட்டு வருவதால் அந்த இடங்கள் செல்வது சிரமம் என்தால் செல்ல முடியவில்லை; நேரமும் இல்லை

வசனப் போட்டி

மாமி..இங்க பாருங்கோ. இன்னியோட இந்த மடிசார் புடவைக்கு Good bye சொல்லிட்டேன்.

மாமா..அச்சச்சோ.நாளையிலருந்து என்ன பண்ணப்போற?

மாமி..சுடிதார், ஸல்வார், ஸராரா உங்களுக்கு ஜீன்ஸ் டீஷர்ட் எல்லாம் வாங்கிண்டு வரப்போறேன். தலையை பாப் பண்ணிண்டு, அப்படியே பார்லர் போய் ஃபேஷியல் மெனிக்யூர் பெடிக்யூர் ஐ ப்ரோஸ்லாம் பண்ணிண்டு வருவேன்.

மாமா..உனக்கு என்ன ப்ராப்ளம்? ஏதோ க்யூர் பண்ணிண்டு வரேங்கற.எனக்கு பயமா இருக்கேடி!

மாமி..நான் வரப்போ உங்களுக்கு என்னை அடையாளமே தெரியாது.

மாமா..எதுக்காக இதல்லாம்?

மாமி..அடுத்த வாரம் வரப்போற மத்யமர் ஆண்டு விழாக்கு போகத்தான்.

மாமா..ஓஹோ..எனக்கு சமையல்லாம் பண்ணி வச்சுட்டு போயிடு.

மாமி..நீங்களும் வரேள். கிளம்புங்கோ.

மாமா..எங்க?

மாமி..Gents பார்லர் ஒண்ணுல விசாரிச்சேன். உங்களை சின்னப் பையன் மாதிரி மாத்திட்றதா சொல்லிருக்கான்.

மாமா..ஐயோ..என்ன விட்ரு. எனக்கு அதல்லாம் வேண்டாம்.

மாமி..நத்திங் டூயிங். கிளம்புங்கோ. நான் உங்களை பார்லர்ல விட்டுட்டு என் வேலையை முடிச்சுண்டு வரச்சே உங்களை பிக்அப் பண்ணிக்கறேன்.

மாமா..உங்க மத்யமர் மீட்டிங்கு நான் எதுக்கு?

மாமி..என்னன்னா! இப்டி அசடாட்டம் கேக்கறேள். நாம ரெண்டு பேரும் கப்பிள் ராம்ப் வாக் பண்றோம்..ஜெயிக்கறோம்! க்விக்கா ரெடியாகுங்கோ!

மாமா..ஈஸ்வரா!என்னடா சோதனை இது!

Sunday 1 December 2019

சார்தாம்..6.கங்கோத்ரி தாம்


கங்கை நதியின் பிறப்பிடமான கங்கோத்ரி கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3400 மீட்டர் (11,200 அடிகள்) உயரத்தில் அமைந்திருக்கிறது. பகீரதனின் தவத்தால் பூவுலகிற்குள் நுழைந்த கங்கை இங்கே பாகீரதியாகவே தோன்றுகிறாள். பின்னர் தேவ பிரயாகையில் அலக்நந்தா நதியுடன் சங்கமித்த பிறகுதான் கங்கை என்கிற பெயரைப் பெறுகிறாள்.

கங்கோத்ரிக்கும் மேலே 4255 மீட்டர் உயரத்தில் இருக்கும் 'கௌமுக்' என்கிற இடத்திலிருந்துதான் கங்கோத்ரி என்னும் க்ளேசிய
ரிலிருந்து உற்பத்தியாகிறது பாகீரதி. கௌமுக்கை அடைய ஒற்றையடிப்பாதை கூடக் கிடையாது. கௌமுக்கையும் கடந்து மூன்று கிலோமீட்டர் சென்றால் மேரு-கங்கோத்ரி.

தேவப்பிரயாகையில் அலக்நந்தாவுடன் சங்கமிக்கும் வரை மிகவும் ஆக்ரோஷமாக நுரைத்துக் கீழிறங்கி, கற்கள் மணல் என்று அனைத்தையும் வாரிச்சுருட்டிக்கொண்டு மணலின் வண்ணத்திலேயே ஓடுகிறது பாகீரதி. போகும் வழியெங்கும் பாகீரதியின் ஆக்ரோஷமான ஓட்டம். பாதையெங்கும் மலைச்சாரல்கள், பள்ளத்தாக்குகள் என்று பார்க்குமிடமெல்லாம் பச்சைப் பசேல் என்று பசுமையின் அழகு. எழிலுடன் பகட்டாக வலம் வந்த பாகீரதி  வெண்மையான கூழாங்கற்களை அள்ளிக்கொண்டு வெள்ளை வெளேரென்று நுரைத்துக் கொண்டு தன் ஆக்ரோஷ ஓட்டத்தின் மூலம் வெண்மைப் புரட்சியையும் காண்பிக்கிறாள்! 

ஏற்றமும் இறக்கமுமான  சாலைகளின் வழியாகச் செல்லும்போது மலைச்சாரல்களின் இடையே இமயத்தின் பனிச்சிகரங்களின்  பளபளப்பு.. வளைந்து நெளிந்து உடன் வரும் பாகீரதியின் சலசலப்பு...அங்கங்கு மலையுச்சியிலிருந்து வரும் சிறிய அருவிகள்...
மனதைக் கொள்ளை கொள்கின்றன! குன்றுகளின் மேல் இறைவனின் புகழ்பாடும்சிறுகோவில்கள்..ஆங்காங்கே மலைக்கிராமங்கள்.. மலைச்சரிவுகளில்விவசாயம்..உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரங்கள்..  பாலங்கள், மண்சரிவு ஏற்பட்ட பாதைகள்
என்று பயணம் சில இடங்களில் ஆனந்தமாகவும், பல இடங்களில் பயமாகவும் இருக்கிறது!

நாங்கள் சென்ற அன்று துலா மாதப் பிறப்பானதால் செல்லும் வழியில் 'கங்கனானி' என்ற இடத்திலுள்ள வெந்நீர் ஊற்றில் ஸ்நானம் செய்தோம். தண்ணீர் குளிக்க இதமாக உள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் குளிக்க தனித்தனி இடங்கள் உள்ளது. அங்கு மேலே சில படிகள் ஏறிச் சென்றால் கங்காமாதாவின் சிறிய ஆலயம் உள்ளது. அதன் அருகிலேயே சிவபெருமான்  விநாயகர் அனுமனுக்கும் சன்னதிகள் உள்ளன.

அங்கிருந்து கங்கோத்ரிக்கு சென்றோம். ஆலயத்திற்கு ஒரு கி.மீ.தூரம் நடக்க வேண்டும்.இந்தக் கோவிலை கர்வாலின் கூர்க்கா பிரிவைச் சேர்ந்த ஜெனரல் அமர்சிங் தாப்பா என்பவர் 18ம் நூற்றாண்டில் கட்டியுள்ளார்.

கங்கை பூமிக்கு வர காரணமானவர் பகீரதன் என நாம் அறிவோம். அவனுடைய கொள்ளுத் தாத்தா அயோத்தியை ஆண்ட ஸ்ரீராமனின் வம்சமான இஷ்வாகு குல அரசர் மகாராஜா சகரன். குழந்தைப்பேறு வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது முதல் மனைவியான சுமதிக்கு 60000  பிள்ளைகளும், இரண்டாவது மனைவி கேசினிக்கு அம்சுமான் என்ற ஒரு மகனும் பிறந்தனர். அவர் அஸ்வமேதயாகம் செய்ய விரும்பினார். அதற்காக யாகக் குதிரையை எல்லா நாடுகளுக்கும் அனுப்பி அவர்களுக்கு அசுவமேத
யாகம் பற்றி சொல்வது வழக்கம். அவரை யாரும் எதிர்ப்பவர்கள் இல்லாததை அறிந்த தேவேந்திரன் தன் பதவி பறிபோய் விடுமென பயந்து அக்குதிரையை திருடிச் சென்று கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டிவிட்டான்.

இதனால் கோபம் கொண்ட சகரன் தன் 60000 மகன்களை அனுப்பி குதிரையைக் கண்டு பிடித்து வர அனுப்பினார்.அவர்கள் கபிலமுனியின் ஆசிரமத்தில் குதிரையைக் கண்டு அவர் திருடியதாக எண்ணி அவரைக் கடுஞ்சொற்களால் பேசினர்.
தவம் கலைந்ததால் கோபம் கொண்ட கபிலர் அவர்கள் அனைவரும் சாம்பலாக சாபமிட்டார். அதை அறிந்த அம்சுமான் அவரிடம் பணிந்து வேண்ட'அவர்கள் மோட்சம் அடைய வேண்டுமெனில் தேவலோகத்தில் இருக்கும் கங்கையில் அவர்கள் சாம்பலைக் கரைக்க வேண்டும்'என்றார். 

அம்சுமானும் அவன் மைந்தன் திலீபனும் எவ்வளவு முயற்சித்தும் கங்கையை பூவுலகிற்கு கொண்டு வர முடியவில்லை.
தம் முன்னோர் நற்கதி அடையாததை அறிந்த  திலீபனின் மகன் பகீரதன் தன் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்க கங்கையை வேண்டி 1000 ஆண்டுகள் ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் செய்தான். அவன் தவத்துக்கு இரங்கிய கங்கை பூமிக்கு வந்தாள். எப்படி?

அவள் இறங்கிய வேகத்தில் பூமியே மூழ்கிக் காணாமல் போய்விட்டது. பூமியைக் காப்பாற்ற கங்கையை தம் சடையில் தாங்கி அவள் வேகத்தை கட்டுப் படுத்தினார் சிவபெருமான். இதனால் மனம் வருந்திய பகீரதன் சிவபெருமானைக் குறித்து மீண்டும் தவம் செய்ய, அவன் தவத்திற்கு இரங்கிய சிவன் கங்கையின் வேகத்தைக் குறைத்து பூமிக்கு அனுப்பினார். அந்நதியின் பெயர் பாகீரதி ஆயிற்று. பகீரதனின் முன்னோர்களும் நற்கதி அடைந்தனர்.இதனாலேயே ஒரு காரியத்தில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பலன் அடைவதை 'பகீரதப் பிரயத்தனம்' என்கிறோம்.

இங்கு பகீரதசிலா என்ற பெயரில் பகீரதன் தவம் செய்த இடம் உள்ளது. அதைக் காணும்போது பகீரதனின் மன உறுதியை எண்ணத் தோன்றுகிறது. வெண்ணிறக் கல்லினால் கட்டப்பட்ட கங்காமாதாவின் கோவிலும், காசிவிஸ்வநாதர் ஆலயமும் உள்ளது.
கங்காமாதாவின் சிறிய வெள்ளியிலான விக்ரகம். அவளை தரிசித்தாலே நம் பாவங்கள் நீங்கிவிடும் என்கிறார் அங்குள்ள பண்டா. சிவலிங்கத்திற்கு நாமே அபிஷேகம் செய்யலாம். கணபதிக்கும் துர்கா லக்ஷ்மி சரஸ்வதிக்கும் சந்நிதிகள் உண்டு.

இங்கே பஞ்ச பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் செய்ததாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. இங்குள்ள உற்சவ விக்ரகம் தீபாவளி முதல் அட்சயதிருதியை வரை ஆறுமாதங்களுக்கு கீழுள்ள முக்பா கிராமத்தில் முகிமட் என்ற ஆலயத்தில் வைத்து வழிபாடுகள் நடைபெறும்.

கோவிலிலிருந்து கீழே இறங்கினால் பாகீரதி மிகவும் சில்லென்று குளிர்ச்சியாக  ழகாக தெளிவாக அமைதியாக ஓடுகிறாள். இவ்விடம் கங்கோத்ரி என்றாலும் அலகநந்தாவுடன் சேர்ந்தபின்பே கங்கையாகிறாள். நதி முழுதும் வெண்பளிங்குக் கற்கள். மிக கவனமாகக் குளிக்க வேண்டும். தெய்வீகம் ததும்பி நிற்கும் அழகான அந்த இடத்திலிருந்து வரவே மனமில்லை.தூரத்தில் தெரியும்  க்ளாஸியர்களின் அழகு மனத்தைக் கவர்கிறது.

திரும்ப வரும்போது பைரான்காட்டிலுள்ள பைரவரை தரிசித்து செல்ல வேண்டும் என்பது ஐதீகம். அழகிய சிறிய ஆலயத்து பைரவரிடம் எங்கள் வருகையைப் பதிவு செய்தோம்!த்தரகாசி செல்லும் வழியில் 'பைலட்பாபா ஆஸ்ரம்' பார்க்க வேண்டிய ஆலயம். அத்தனை இறை உருவங்களும் பிரம்மாண்ட உயரத்தில்! அவற்றின் அழகு கண்களுக்கு விருந்து!

மனிதனின் கால், கை படாத இடங்களில் இயற்கை அன்னையின் இயல்பான நாட்டியம் கண்களையும் மனதையும் சொக்க வைக்கிறது!
ராதாபாலு


8 Attachments

சார்தாம்...5.முக்தித் தலம் கேதார்நாத்



நாங்கள் பத்ரிநாத், மனா கிராமம்,பஞ்சபத்ரி,வேறு சில ஆலயங்கள் தரிசனம் முடித்தபின் குப்தகாசி சென்று தங்கினோம். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத் செல்ல வேண்டும். 

இன்னொரு வழி சூரிய சந்திரர்கள் வழிபட்ட கௌரிகுண்ட் வழியாக சென்றால் குதிரை, டோலி அல்லது நடைப் பயணமாக 14கி.மீ. மேலே ஏறிச் செல்ல வேண்டும். இங்கு ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. இறைவனின் பாகம் வேண்டி அம்பிகை தவம் செய்த இடம் இது.பிருகு முனிவர் கைலாயம் சென்றபோது சிவனை மட்டும் வழிபட எண்ணி இருவர் இடையே நுழைந்து வந்தபோது, தன்னை அவர் அவமதித்ததாக எண்ணிய அன்னை சிவபெருமானின் உடலில் பாதி பாகம் வேண்டி இங்குள்ள  கௌரிகுண்ட் என்ற இடத்தில் தவமிருந்தாள். ஈசனும் அவளைத் தன்னில் பாதியாக்கிக் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அதன் அருகிலுள்ள திரியுகி நாராயண் என்ற இடத்தில் சிவபார்வதி திருமணம் நடந்த ஹோமகுண்டத்தில் மூன்று யுகங்களாக இன்னமும் அக்னி அணையாமல் இருக்கிறதாம். நாங்கள் குப்தகாசி வழியே சென்றதால் அங்கு செல்லவில்லை.

குப்தகாசி ஹெலிபேடில் ஹெலிகாப்டர்கள் வருவதும் போவதுமாக பறந்துகொண்டே இருந்தன.அங்கு எடை பார்த்து ஹெலிகாப்டர் தாங்கக்கூடிய அளவுக்கு ஏற்றவாறு ஐந்து, ஆறு என்று சிறு குழுவினராகப் பிரித்து ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்பாடு செய்கின்றனர். ஹெலிகாப்டரில் செல்ல 4000 ரூபாய். 80 கிலோவுக்குமேல் இருந்தால் 1 கிலோவுக்கு 150 ரூபாய் வீதம் அதிகம் கொடுக்க வேண்டும். ஹெலிகாப்ட்டர் வந்ததும் அதன் இயக்கத்தை நிறுத்தாமல்  விரைவாகச் சென்று ஏற வேண்டும் என்பதால் அந்த ஊழியர்கள் நம்மை அழைத்துச் சென்று ஏற்றி விடுகிறார்கள. உள்ளே அமர்ந்து உடலை ஆட்டக்கூடாது, டாடா சொல்லக்கூடாது, புகைப்படம் எடுக்கக்கூடாது  என்றெல்லாம் கண்டிஷன்கள்! பைலட் அருகில் இருவரும் பின்னால் நான்கு பேரும் அமர வேண்டும்.

விமானத்தில் பறந்த நமக்கு ஹெலிகாப்டரில் செல்வது புதிய அனுபவம்! செங்குத்தான இரு மலைகளுக்கிடையே செல்லும்போது  'பாறையில் மோதிவிடுமோ' என்று நடுக்கம்! கீழே அதலபாதாளத்தைப் பார்க்க கதி கலங்குகிறது! மலைகளுக்கிடையே மெல்லிய வெண்கோடாக ஓடும் மந்தாகினியின் அழகு மயங்க வைக்கிறது! மனதிற்குள் நமசிவாய மந்திரம் ஓட, கண் எதிரே இமயமலைச் சாரல்கள் மஹாமேருவாக மஹேஸ்வர ரூபமாகவும், தேவியின் ஸ்ரீ சக்ரமேரு போலவும்  தோன்றியது.

அதிகமில்லை..வெறும் 7 நிமிடங்களில் கேதார்நாத்தில் இறங்கிவிட்டோம்! அங்கிருந்து ஒன்றரை கி.மீ. நடந்தால் ஆலயம். உயமில்லாத படிகள் ஏற சுலபமாக உள்ளது. 2013 வெள்ளத்திற்குப்   பின் எல்லாம் புதிதாக கட்டியிருக்கிறார்கள். இரவில் தங்கவும் அறை வசதிகள் உள்ளன. நாங்கள் தரிசனம் முடித்தவுடன் திரும்பி விட்டோம்.வழியில் உட்கார பெஞ்சுகள், கழிவறைகள், கடைகள் உள்ளன. நடக்க முடியாதவர்களுக்கு கூடைடோலி எனப்படும் ஒருவரே முதுகில் தூக்கிச் செல்லும் டோலி உண்டு.

உத்தர்கண்ட் மாநிலத்தில் ருத்ரப் பிரயாகை மாவட்டத்தில் கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3500 மீட்டர்கள் (11,700 அடிகள்) உயரத்தில் இமயமலைச்சாரலில் அமைந்துள்ளது கேதார்நாத் ஆலயம். 22,850 அடி உயரத்தில் 'மஹாபந்த்' எனப்படும் பனிச்சிகரத்தின் வாயிலில் இருக்கிறது கேதார்நாத்.சுமேரு பர்வதம் என அழைக்கப் படுகிறது.

நர-நாராயணர்கள் பத்ரிகாஸ்ரமத்தில் தவமிருந்து, மண்ணால் ஆன லிங்கத்தை வைத்துப் பூஜை செய்தபோது பிரசன்னமான சிவபெருமான், அவர்கள் விருப்பத்திற்கிணங்க ஜோதிர் லிங்கமாக கேதாரநாதராக அங்கேயே தங்கிவிட்டதாகச் சிவபுராணம் கூறுகிறது.அருகில் மந்தாகினி நதி அமைதியாக ஓடுகிறது.

மூன்று பக்கமும் பனி மூடிய மலைகள்  பின்னால் சுமேரு பர்வதம் எனப்படும் மலைத்தொடர்கள்.  திருவானைக்காவலிலும், காஞ்சிபுரத்திலும் தேவியினுடைய உக்ரத்தை ஸ்ரீசக்ர யந்திரம் ஸ்தாபித்து அவளை ஸாந்தஸ்வரூபியாகச் செய்த  ஆதிசங்கரரால் எட்டாம் நூற்றாண்டில்  உருவாக்கப்பட்ட கற்கோயில் ஓங்கி உயர்ந்த விமானத்துடன் கலையம்சத்துடன் எழிலாகக் காட்சி தருகிறது. இரண்டு பக்கமும் வாயிற்காப்போர்களும், அதற்கு மேல் குழலூதும் கண்ணனும், விமானத்தின் நடுவில் ஒரு மனிதனின் தலையும் காணப்படுகிறது. 

கேதாரேசுவரர் ஆலயம் பன்னிரெண்டு ஜ்யோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது. வெளியே தலையை சற்று உயர்த்தி உள்ளிருக்கும் இறைவனைக் காண்பதுபோல் பெரிய நந்தியம்பெருமான் உள்ளார். சிங்கி பிங்கி என்ற இரண்டு துவார பாலகர்களுடன் ஒவ்வொரு கதவிலும் தசாவதாரக் கோலங்களுடன் அற்புத சிற்பக்காட்சிகள். உள் மண்டபத்தில் பஞ்சபாண்டவர்களுடன் திரௌபதி குந்திக்கும் அழகிய சிலைகள். நடுவில் வெள்ளிக் கவசம் பூட்டிய நந்தியம்பெருமான். அதனையடுத்து கணபதியும் கௌரிதேவியும் காட்சி தருகிறார்கள்.

திருஞான சம்பந்தரும் சுந்தரரும்  தென்கயிலாயமான திருக்காளத்தியைத் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்தே கேதாரத்தையும் தரிசனம் செய்து பாடியுள்ளனர். 

வாழ்வாவது மாயமிது
மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல்
பசிநோய் செய்த பறிதான்
தாழாது அறஞ்செய்மிந்தடங்
கண்ணான் மலரோனும்
கீழ்மேலுற நின்றான்
திருக்கேதாரமெனீரே! 
என்று சுந்தரர் பாடிய கேதாரீசனைக் காணும்போது மெய்சிலிர்க்கிறது..மனம் ஆனந்தத்தில் நிறைகிறது..கண்ணீர் பெருக இது கனவோ என்று உள்ளம் தடுமாறுகிறது. 

உள்ளே கருவறையில் முக்கோணம் போன்று அமைந்த பாறை போன்ற தோற்றத்தில் எம்பெருமான் காட்சி தருகிறார். காலை நிர்வாண பூஜை சமயம் அவரைத் தொடலாம்;அபிஷேகம் செய்யலாம்;அணைத்துக் கொள்ளலாம்;நம் தலையை அவர் மேல் வைத்து  நமஸ்கரிக்கலாம். நானும் என் கணவரும் இணைந்து அங்குள்ள பண்டா சொல்லியபடி சங்கல்பம் செய்து பூஜித்து இணைந்து நமஸ்கரித்தபோது பெற்ற பிறவிப் பயனை அடைந்த  உணர்வினைப் பெற்றோம். அந்த நேரம் மனதில் எதுவும் வேண்டத் தோன்றவில்லை. இப்பிறவிக்கு இது போதும் என்றே தோன்றியது.

காலையில் நிகழ்த்தப்படும் நிர்வாண தரிசன பூஜையும், மாலையில் சிங்கார தரிசன பூஜையும், காலை வேளைகளில் பால்போக், மஹாபிஷேகம், ருத்ராபிஷேகம், அஷ்டோபசார பூஜை, சம்பூரண ஆரத்தி போன்ற பலவிதமான பூஜைகளும், மாலை வேளைகளில் சிவ சஹஸ்ரநாமம், சிவ அஷ்டோத்ரம், சிவ மகிமை ஸ்தோத்ரம், ஏகாந்த சேவை போன்ற பூஜைகளும் நடத்தப்படுகின்றன.

அவர் இங்குக் கோயில் கொண்ட வரலாற்றைப் பார்ப்போம். மகாபாரதப் போர் முடிந்ததும் பஞ்ச பாண்டவர்கள் தங்கள் பாவத்தி
லிருந்து விடுபடக் கட்டிய கோயில் இது என்று கருதப்படுகிறது. போர் முடிந்தவுடன் பஞ்சபாண்டவர்கள் சொர்க்கம் செல்லுமுன் ஈசனை தரிசிக்க இங்கே வந்தசமயத்தில் சிவபெருமான் காட்டெருமை உருவெடுத்து ஓடியதாகவும், சிவனைப் பிடிக்க அவர்கள் பின் தொடர்ந்து சென்றபோது அவர் பூமிக்குள் மறைய ஆரம்பிக்க, எருமையின் பின்பக்கம் கேதாரத்திலும், மற்ற நான்கு பாகங்களும் வேறு நான்கு இடங்களிலும் தங்கியதாக ஐதீகம். இதனால் இந்தத் தலம் ஸுமேருஅல்லது பஞ்ச பர்வதம் எனப்படுகிறது.

அவருடைய புஜம் துங்கநாத்திலும், முகம் ருத்ரநாத்திலும், வயிறு மத்யமஹேஷ்வரத்திலும், ஜடை கல்பேஷ்வரத்திலும் தங்கிவிட்டதாகக் கருதப்படுகிறது. கேதாரநாதனின் புஜங்களாகக் கூறப்படும் 3680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது துங்கநாத். இவ்விடத்திலிருந்து கேதார்தாம், நந்ததேவி, தூனகிரி, பந்தர்பூஞ்ச் ஆகிய இடங்களைக் காண முடியும். 

சிவனின் முகமாகக் கருதப்படும் ருத்ரநாத்தில் ’வைதரிணி’ நதி பாய்கிறது. இந்தத் தலத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் நீலகண்டர் என்று அழைக்கப்படுகிறார்.  

வயிறு தங்கிய இடம் மத்யமஹேஷ்வர். குப்த காசியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

ஜடாரூபமாக் காட்சிதரும் கல்பேஷ்வர் ஜோஷி மட்டிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குகைக்
கோவிலில் காட்சி தருகிறார்.

பாண்டுகேஷ்வர் என்னும் இடத்தில் ராஜா பாண்டு உயிர் நீத்தார். இங்கிருக்கும் பழங்குடியினர் பாண்டவ நிருத்தியம் என்ற நடனத்தை ஆடுகின்றனர். பாண்டவர்கள் பத்ரிநாத் அருகிலுள்ள சுவர்க்கரோகிணி  என்ற மலையுச்சி வழியே சுவர்க்கம் சென்றதாகக் கூறப்படுகிறது.. பீமன் காட்டெருமை உருவத்திலிருந்த சிவபெருமானோடு சண்டையிட்டபோது சண்டையின் முடிவில் காட்சியளித்த சிவபெருமானுக்குஅவன் நெய்யால் அபிஷேகம் செய்தான். அதனால் இன்றும் கேதார்நாருக்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது. நீரும் வில்வமும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன.இவற்றிலிருந்து பாண்டவர்கள் இவ்விறைவனை வழிபட்டதை அறிகிறோம்.

சிவபெருமானின் அவதாரமான  ஆதி சங்கரர் வழிபட்ட அற்புதத்தலம் கேதாரம். இங்குதான் அவர் மகாசமாதி  அடைந்ததாக கூறப்படுகிறது. ஈசனிடம் அவர் ஐந்து ஸ்படிக லிங்கங்கள் பெற்ற பின் முக்தி லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த புண்ணியத் தலம் என்பதால் இது முக்தித் தலமாகும். அவர் தவம் செய்த இடம் ஆலயத்திற்கு பின்னால் இருந்தது அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

தரிசனம் முடித்து ஆலயத்தை பிரதட்சிணம் செய்தோம். பல சாதுக்கள் ஜடாமுடியுடனும், உடல் முழுதும் விபூதியுடனும் அமர்ந்து பூஜைகளும் ஹோமங்களும் செய்ய நம்மை அழைக்கின்றனர். 

ஆலயத்துக்கு நேர் பின்னால் ஒரு பெரிய பாறை வண்ணம் அடிக்கப்பட்டு வணங்கப் படுகிறது. 2013 ஜூன் 16ம் தேதி இமயத்தில் பெருவெள்ளம் வந்தபோது கேதார்நாத் ஆலயம் அழிந்துவிடும் என்று பயந்தார்களாம். அன்று மாலை ஆலயம் அருகில் பெரும் சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டு மந்தாகினி, சரஸ்வதி ஆறுகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் கட்டுக்கடங்காமல் பெரும் பாறைகளை அடித்துக் கொண்டு ஓடியபோது,  மேலிருந்து உருண்டு வந்த இந்தப் பாறாங்கல் ஆலயத்தின் பின்னால் அரணாக நின்று விட்டதாம். வெள்ளத்தண்ணீர் ஆலயத்தை சிதைக்காமல்  இருபுறமும் பிரிந்து சென்றதாம். இதை மெய்சிலிர்க்க சொல்கிறார்கள் அங்கிருப்போர். இறைவன் இருப்பதை இது போன்ற சம்பவங்களே நமக்கு எடுத்துரைக்கின்றன. 

இவ்வாலயம் தீபாவளியோடு ஆறு மாதங்கள் பனியினால் மூடப்படும். பின் அட்சயதிருதியை அன்று திறக்கப்படும். அச்சமயம் இங்குள்ள பஞ்சமுகங்களைக் கொண்ட உற்சவ மூர்த்தி  கீழுள்ள கிமட்  ஓம்காரேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளி பூஜைகள் தொடரும்.ஆறுமாதம் கழித்து கோயில் திறக்கும்போது இங்கிருந்து கிளம்பி மலைக்கு சென்று மூலவரோடு அருள்பாலிப்பார். இங்கு ஆலயம் மூடும் அன்று நிறைய நெய்யுடன் ஒரு அகண்ட தீபம் ஏற்றி வைப்பதாகவும், அது ஆறு மாதங்கள் அணையாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.



Urchavar.jpg
கோவிலைக் காப்பாற்றிய பாறை.jpg

Sumeru parvatham.jpg

சார்தாம் யாத்ரா..4.சரஸ்வதி நதியின் தோற்றம்


(மனா கிராமம் பத்ரிநாத்)

சரஸ்வதி நதியை நாம் எங்கும் காணமுடியாது. அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் சரஸ்வதி நதி கலப்பதாக ஐதிகம். இவள் பிறந்த இடம்தான் பத்ரிநாத்திற்கு அருகில் இருக்கும் இந்தியாவின் கடைசிக் கிராமம்  மனா.

மூன்று கிலோமீட்டர் தொலைவில் திபேத்திய எல்லையில் உள்ள  இந்தியாவின் கடைசியிலுள்ள  இக்கிராமத்தில் ஒரு இயற்கை அழகு மிகுந்த இடத்தில் சரஸ்வதி நதியின் தோற்றுவாய் உள்ளது.

அது மட்டுமா? வேத வியாசர் மகாபாரதம் சொல்ல அதை விநாயகப் பெருமான் எழுதியதும் இங்குதான்.
பஞ்ச பாண்டவர்கள் சுவர்க்கம் சென்றதும் இங்கிருந்துதான் என்கிறது புராணங்கள். இவற்றைக் கேட்டபோது நம்மையறியாமல் ஒரு ஈர்ப்பும் சிலிர்ப்பும் ஏற்படுகிறது.

மலைப்பாதை முழுதும் நம்முடன் ஓடிவரும்  அலகநந்தா நதியின் அழகில் என்னை மறந்தேன் நான்!
மேட்டிலும் பள்ளத்திலும் பாறையிலும்  குதித்தும் கும்மாளமிட்டும் குதூகலித்து  'இது என் ராஜ்யம்' என்று மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து ஓடும் நதியாக நாமும் ஆகமாட்டோமா என்ற ஆசை ஏற்படுகிறது. அந்த அழகை எத்தனை வார்த்தைகளில் வடித்தாலும் நேரில் அனுபவித்தாலே உணர முடியும்.

உயரமாக செங்குத்தான மலைமீது செல்ல படிகள் ஏறுவது சற்று கடினமாக இருந்தாலும் நம்முடன்
இருக்கும் இயற்கையின் அழகில் அந்த சிரமத்தை மறக்கிறோம். வழியெல்லாம்  ஸ்வெட்டர், பனிக்குல்லா கடைகள்; தேனீர் ஹோட்டல்கள். குளிரும் மிக அதிகம். அந்தக் குளிருக்கு தேனீர் இதமாக இருக்கிறது!

அங்குள்ள மக்கள், பெண்களும் கூட  முதுகில் கூடைகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் மட்டுமன்றி கேஸ் சிலிண்டர்களையும் தூக்கிச் செல்வது ஆச்சரியமாக உள்ளது. இவர்களுக்கெல்லாம் முதுகு முழங்கால் வலிகள் வராதோ? அந்த மாசில்லாத சுற்றுச்சூழ்நிலை அவர்கள் ஆரோக்யத்தையும் பாதுகாக்கும் போலும்!

முதலில் யானைமுகன் விநாயகனின் 'கணேஷ் குஃபா' என்ற குகை.வியாசமுனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கிமகாபாரதத்தை எழுதுமுன் விநாயகர் அவரிடம் 'தான் எழுத ஆரம்பித்தால் நிறுத்தாமல் எழுதுவேன் என்றும் சற்றும் இடைவெளி தராமல் தொடர்ந்து பாரதத்தை சொல்ல வேண்டும்' என்றும் ஆணையிடுகிறார். கணநாதரின் எழுத்தாணி அடிக்கடி உடைந்து போகிறது. அந்த நேரங்களில் வ்யாஸர்  தொடர்ந்து சொல்ல யோசித்துக் கொள்வாராம்!

ஆனால் விநாயகரோ  வியாசரிடம்  கூறியபடி விரைவாய் எழுதத் தனது தந்தத்தையே உடைத்து எழுத்தாணியாக மாற்றிகே கொண்டு தொடர்ந்து எழுதினார். அவரே குகையில் காட்சி தரும் விநாயகர்  என்று கூறுகிறார்கள். குகையில் குனிந்து விநாயகரை தரிசித்து வியாசகுகைக்கு சென்றோம்.

மகாபாரதம் இயற்றிய வியாசர் வீற்றிருக்கும்குகைக்கு மேலும் சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
மஹாபாரதம் எழுதிய பிறகு வியாசர் மன சஞ்சலத்துடன் இருந்தபோது, நாரதர் ஆலோசனைப்படி மானுடரின் மோக்ஷத்திற்காக பாகவதம் எழுதிய இடம்தான் வியாச குகை என்று நம்பப்படுகிறது. இது 5300 வருடங்களுக்கு மேல் பழமையானது. இங்கு விநாயகர், சுகர்,வல்லபாச்சாரியார் சிற்பங்களும் பழமை மாறாமல் உள்ளன. மகாபாரத ஏட்டுச்சுவடியும் ஒரு கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்துப் போற்றப் படுகிறது.

எங்கும் காண முடியாத சரஸ்வதி நதியைக் காண நம் மனம் ஆவலாகிறது. இங்குதான் இரு மலைகளுக்கிடையே அலை மோதி ஆர்ப்பரிக்கும் நதியாக நுரை பொங்க வெளிப் படுகிறாள்.அடேயப்பா..என்ன வேகம்!

ஓ.... என்கிற சப்தம் மட்டும் கேட்கும் அமைதியான சூழ்நிலையில், நாம் நிற்கும் இடத்திலிருந்து சற்றே கீழே, நம்மால் நெருங்க முடியாத ஒரு பள்ளமான பகுதியில் இருக்கிறது சரஸ்வதியின் உற்பத்தி ஸ்தானம். ஆக்ரோஷத்துடன் ஆரவாரமாக சற்றே ஆணவத்துடன் கண்ணைப் பறிக்கும் வெண்ணிறத்தில் அதிவேகமாக கிளம்பும் சரஸ்வதி பிரமிக்க வைக்கிறாள். இவளின் மறைவுக்கு காரணம் யார்?

ஒரு சுவையான புராண சம்பவம்!மகாபாரதம் எழுதுவதில் ஈடுபட்டிருந்த விநாயகர், ஆர்ப்பரிக்கும் நதியை
அமைதியாகச் செல்லும்படிக் கூறினார். ஆனால் சரஸ்வதி நதியோ, அகம்பாவம் கொண்டு மேலும் பேரொலியுடன் ஆர்ப்பரித்தாள். அதனால் கோபமுற்ற விநாயகர் 'நதியே நீ கண்ணுக்குத் தெரியாமல்
மறைந்து போவாய்,உன்பெயரும் மறையும்' எனச் சாபமிட்டார்.

தன் நிலை உணர்ந்த சரஸ்வதி நதி, தன்னை மன்னிக்குமாறு பணிந்து வேண்டினாள். கஜமுகனும்
நதியின் மீது கருணை கொண்டு 'நதியே!நீ இங்கு மறைந்து, கங்கையும்,யமுனையும்,
சங்கமம் ஆகும் இடங்களில் எல்லாம் மூன்றாவது நதியாக் கலந்து புகழ் பெறுவாய்' என்றார். அதனால் அலஹாபாத், குப்தகாசி, ரிஷிகேஷ் போன்ற கங்கை யமுனை இணையும் இடங்கள் திரிவேணி சங்கமம் எனப்படுகின்றன. அருகில் சரஸ்வதிக்கு சிறிய குகைக் கோயில் உள்ளது.

சரஸ்வதி கர்வம் அடங்கி வெளியே வந்து அலக்நந்தா ஆற்றுடன்  கலந்தபின், அந்தர்யாமியாகி விடுகிறாள். சரஸ்வதியும் அலகநந்தாவும் கலக்குமிடம் மிகவும் ரம்மியமாக இருக்கிறது.  இந்த இடத்திற்கு கேசவ பிரயாகை என்று பெயர்.

சரஸ்வதி நீரை நாம் அங்கிருக்கும் குழாய்களில் பிடித்துக் கொள்ளலாம். இதற்கும் மேலே பஞ்ச
பாண்டவர்கள் சுவர்க்கம் சென்ற இடம் உள்ளது. அவ்விடம் 'பீம்புல்' பீமன்பாறை எனப்படும். ஐவரும் பாஞ்சாலியுடன் சுவர்க்காரோகணம் என்ற இடத்தின் வழியே சுவர்க்கம் சென்றபோது  வழியில் சரஸ்வதிநதியைக் கடக்க முடியாமல் பாஞ்சாலி தவிக்க, பீமன் ஒரு பாறையைப் பாலமாகப் போட்டதாக புராண வரலாறு. அதில் பீமனின் கைத்தடங்களும் தெரிவதாக எழுதப்பட்டுள்ளது. தர்மர் தவிர மற்ற ஐவரும் அங்கே தம் உடலை விட்டு சுவர்க்கம் செல்ல, தர்மர் மட்டுமே மனித உடலுடன், அறமாகிய நாய் வழிகாட்ட மேலுலகம் சென்றார்.அவர்கள் சென்ற வழி,மலைப்படிக்கட்டுகள், உயர்ந்தோங்கிய மலைப்பாதை இன்றும் இருக்கிறதாகவும் அந்த இடத்திற்கு செல்வது மிகவும் கடினம் என்றும் கூறப் படுகிறது..

மனா கிராமம் இந்தியாவின் கடைசி கிராமம். அடுத்து திபெத்தின்(சீனா) எல்லை தொடங்கி விடுகிறது. அங்குள்ள தேனீர் விடுதியும் இந்தியாவின் கடைசி தேனீர்க்கடை என்ற சிறப்பைப் பெறுகிறது.இங்கு
தின்பண்டம், குடிநீர்,பானங்கள், டீ, பிஸ்கட் அனைத்தும் கிடைக்கின்றன. இதைப்போலவே வியாச குகை அருகேயும் இந்தியக் கடைசி டீக்கடை உள்ளது.

இமயமலையின் ஒவ்வொரு இடத்திற்கும் தனிப்பட்ட சிறப்பு உள்ளது. அதனாலேயே அது தேவபூமி என்ற
சிறப்பைப் பெறுகிறது. அந்தபூமியில் நடக்கும்போது நமக்குள்ளும் ஆனந்தமும், அமைதியும் ஏற்படுவதை உணர முடிகிறது.  
ராதா பாலு ...திருச்சி
Vyasa Cave.jpeg
வியாசர் குகை

Vyas rishi.jpg

சார்தாம் யாத்ரா..2.ரிஷிகேஷ்


ரிஷிகேஷ்

உத்தர்கண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ், ஹரித்வாரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது.  சார்தாம் யாத்திரையின் துவக்கம் இங்கிருந்துதான். அடக்கமாக, அமைதியாக ஓடி வரும் கங்கைக்கரையில் அமைந்த அழகான நகரம்.

நகரெங்கும் யோகா மையங்கள். சிவானந்த சுவாமி ஆசிரமம் மிக அருமையாக உள்ளது.  அனைத்து நாடுகளிலிருந்து ஆயிரக்
கணக்கான சுற்றுலாப்பயணிகள் 
வந்து இங்கே யோகா கற்றுச் செல்லுகின்றனர்.  'உலகின் யோகா தலைநகரம்' 
என்று போற்றப்படுகின்றது.கீதா மந்திர்

ரிஷிகேஷ் என்கிற மஹாவிஷ்ணுவின் பெயருக்கு இந்திரியங்களுக்கு அதிபர் என்று பெயர். ரைப்ய மஹரிஷி தன் புலன்களை அடக்கி இந்தத்தலத்தில் கடுந்தவம் புரிய, அவருக்கு ரிஷிகேஷ் நாராயணராக மஹா விஷ்ணு காட்சி தந்ததால் இத்தலம் ரிஷிகேஷ் என்று பெயர் பெற்றது.ஆதி சங்கரரும் ஸ்ரீ ராமானுஜரும் இங்கு வந்து தவம் புரிந்துள்ளார்கள்.

ராவணனைக் கொன்றதற்காக ராமபிரான் இங்கே பிராயச்சித்த சடங்குகளைச் செய்யும்போது ஆர்ப்பரித்து ஓடும் கங்கை தொந்தரவாக இருந்ததால், ஒரு அம்பை எய்து அதை அமைதியாக்குகிறான் லக்ஷ்மணன். இன்றும் கங்கை அமைதியாகத்தான் அங்கே ஓடிக்கொண்டிருக்கிறாள். மேலும் கங்கையைக் கடந்து செல்ல லக்ஷ்மணன் ஒரு தொங்குப் பாலத்தைக் கட்டியதாகப் புராணம் கூறுகிறது.

லக்ஷ்மண் ஜூலா என்ற இந்த கயிற்றுப் பாலம் 1889ஆம் ஆண்டில் அதிர்வுதாங்கும் பாலமாக இரும்புக் கம்பிகள் கொண்டு மாற்றப்பட்டது. 1924ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, இது வலுவான தற்போதைய பாலமாக மாற்றப்பட்டது. 

அருகிலேயே 'ராம் ஜூலா' என்கிற பெயரில் ஒரு பாலத்தையும் அரசு கட்டியுள்ளது. இதுசிவானந்த பாலம் எனப்படுகிறது. இதற்கு எந்தப் புராண சம்பந்தமும் இல்லை. இங்கு ராமர், லக்ஷ்மணர் ஆகியோருக்குக் கோவில்கள் இருக்கின்றன.

இந்த நகரம் இந்தியாவின் சாகசத் தலைநகரமாக உருவாகியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து வரும் பயணிகள் புனித கங்கையில்  படகுப் பயணத்தோடு bunky jumping, river rafting போன்ற விளையாட்டுக்களையும் 
அனுபவிக்கின்றனர்.

மிகவும் புராதனமான பரத் மந்திர் கோவில் தான் ரிஷிகேஷ் நகரம் உருவாவதற்குக் காரணம். ரைப்ய மஹரிஷி புலன்களை அடக்கித் தவமிருந்தபோது மஹாவிஷ்ணு நான்கு கரங்களுடன் பரத் மகராஜ் என்ற பெயரில் காட்சி தந்த ஆலயம். 13ம் நூற்றாண்டில்  வசந்த பஞ்சமி  அன்று ஆதிசங்கரர் உருவாக்கியது.  

கோவிலுக்குள் நுழைந்தவுடன் மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. இதனுடன் அரச மரமும் அதே வகையான வேறொரு மரமுமாக மூன்று மரங்கள் பின்னிப்பிணைந்து ஒரே மரமாகக் காட்சி தருகின்றன. இவை மூன்றையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகளாக மக்கள் வழிபடுகின்றனர். 

பரத் மந்திரை அடுத்த கங்கைக் கரையில் அமைந்துள்ள திரிவேணி கட்டத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி இணைந்து திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே தினமும் மாலையில் பிரசித்தி பெற்ற கங்கா ஆரத்தி நடைபெறுகிறது.

ரிஷிகேஷிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் நீலகண்டர் கோவில் இருக்கிறது. போகும் வழியில் வில்வ மரங்கள் அடர்ந்து இருக்கின்றன.அந்தக் கோவிலில் உள்ள சிவலிங்கம் மரத்தின் அடியில்பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. 

அம்மரத்தில் குடியிருக்கும் தேனீக்களின் ரீங்காரத்தை சாமகானமாகக் கேட்டு மகிழும் சிவபெருமான் காட்சி தருகிறார். இங்கே பார்வதிக்கும்
அஞ்சனையின் கைகளில் காட்சி தரும் பால ஹனுமானுக்கும் தனி சன்னிதிகள் உள்ளன. 

ருத்திராட்சங்களும், ஸ்படிகங்களும் இங்கு விற்கப்படுகின்றன.ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலைகள், ஸ்படிக லிங்கம் போன்றவை அரசு அங்கீகாரம் பெற்ற கடைகளில் கியாரண்டியுடன் கிடைக்கின்றன.


சார்தாம் யாத்ரா..1.ஹரித்வார்

உத்தர்கண்ட் மாநிலத்தில்   கடல்மட்டத்திலிருந்து 950 அடி உயரத்தில் உள்ள சிவாலிக் குன்றுகளின் அடிவாரத்தில் கங்கை நதியின் கீழ்கரையில் சமவெளியில் அமைந்துள்ளது ஹரித்வார். இது மிகவும் புராதனமான, புனிதமான நகரம். 

கங்கோத்ரியில் புறப்பட்ட கங்கை கிட்டத்தட்ட 320 கிலோமீட்டர்கள் ஹிமாலயத்தில் பல இடங்களைக் கடந்து இங்கே வந்து சேர்கிறாள். இங்கே கிட்டத்தட்ட 1 மைல் அகலத்தில் பயணிக்கிறாள் கங்கை. ஹிமாலயக் கோவில்களின் நுழைவாயில் ஹரித்வார். இங்கிருந்துதான் சார்தாம் யாத்திரை துவங்குகிறது. இந்தத் தலத்திற்கு கங்காத்வாரம், மாயாபுரி என்கிற பெயர்களும் உண்டு. 

இங்குள்ள கங்கைக்கரை ஹரிகி பவுரி (Hariki Pauri) எனப்படும். ‘ஹரி’ என்றால் விஷ்ணு; ‘பவுரி’ என்றால் ‘பாதம்’. இந்த இடம் ‘ஹரிகி பவுரி’ (விஷ்ணுவின் பாதம்) என்று வழங்கப்படுகின்றது. பத்ரி நாத்திலிருந்து ஹரித்வார் வரை உள்ள விஷ்ணுவின் பாதம் ஹரித்வாரின் கரையில் ஆரம்பிப்பதாக நம்பிக்கை. 

இங்கே தினமும் மாலை வேளையில் விஷ்ணுவின் பாதத்தை வழிபடும் விதமாகக் கங்கைக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். கரையில் இருக்கும் பல கோவில்களிலும் பெரிய மணிகளை அடித்தபடியே விஷ்ணு, சிவன், கங்கையைப் பாடியவாறு ஆரத்தி காண்பித்து வழிபடுகிறார்கள். கரை முழுவதும் பெரிய பெரிய தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. தெய்வீகம் நிலவும் அந்த நேரம் நம் மனம் மெய் மறந்து போகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் கங்கையின் இரு கரைகளிலும் கூடி தீபாராதனை செய்து வழிபடுவது காணக் கண்கொள்ளாக் காட்சியாக  நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. 

ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா நடக்கும் ஹரித்வாரில் கோவில்களுக்கு பஞ்சமில்லை.
மாயாதேவி கோவில்,மானஸாதேவி, சண்டிதேவி கோவில் ஆகியவை இங்குள்ள  புகழ்பெற்ற  ஆலயங்கள். மாயாபுரி என அழைக்கப்படும் சக்திபீடங்களில் ஒன்று  மாயாதேவிகோயில்.

சக்திதேவி தன் தந்தையின் யாகத்திற்கு சிவனின் வார்த்தையை மீறிக் கொண்டு சென்ற வரலாறு நாம் அறிந்ததே. அங்கு மனமுடைந்து இறந்த சக்தியின் உடலை சிவபெருமான் தூக்கிக் கொண்டு கைலாயம் சென்றபோது பூமியில் விழுந்த அவள் அங்கங்களே சக்திபீடங்கள் எனப்படும்.அவளது மேல்பகுதி விழுந்த இடமே இவ்வாலயம்.

'அயோத்யா மதுரா மாயா  காசி காஞ்சி அவந்திகாபுரி த்வாரவதிசைவ ஸப்தைத்தே மோக்ஷதாயகா' என்ற ஏழு மோக்ஷபுரிகளில் இதுவும் ஒன்று. அழகிய கோவில். சந்நிதியில் காளிதேவி,காமாக்யா தேவிக்கு நடுவில் எழிலாகக் காட்சி தருகிறாள் அன்னை மாயாதேவி.

இங்கு மலைமேல் அமைந்திருக்கும் மானஸாதேவி, சண்டிதேவி ஆலயங்களும் சக்திபீடங்களாகும்.  பீடங்களில் ஒன்றான மானஸாதேவி கோயில் சித்த பீட முக்கோணத்தின் உச்சியில் அமைந்துள்ளது. மாயாதேவி, சண்டி தேவி மற்றும் மானஸா தேவி ஆகிய மூன்று தேவிகளும் இணைந்து   முக்கோணமாக  உருவாக்கப்பட்டிருக்கிறது.மலையிலுள்ள இவ்வாலயங்களுக்கு செல்ல ரோப்கார் வசதி உள்ளது.

காஸ்யப முனிவரின் மனதில் தோன்றியதால் அம்மனுக்கு மானஸா தேவி என்று பெயர். பக்தர்களின்  வேண்டுதல்களை உடன் நிறைவேற்றி வைப்பதாலும்  இப்பெயர்.  வாசுகி நாகரின் மனைவியாக மானஸா தேவி வணங்கப்படுகிறார். ஷிவாலிக் மலைகளில் உள்ள 'பில்வா பர்வத்' என்ற இடத்தில் இவ்வாலயம் உள்ளது. மானஸா தேவியின் இரண்டு சிலைகளில் ஒன்றிற்கு ஐந்து கைகளும், மூன்று வாய்களும் மற்றொன்றிற்கு எட்டு கைகளும் அமைந்துள்ளது.

சண்டிதேவியின் ஆலயம் 'ஹரிகி பவ்ரி' என்ற இடத்திலிருந்து 4 கி.மீ.தூரத்தில் உள்ளது. சண்டி தேவி ஆதி சங்கரரால் 8 ஆம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டு 1929 ஆம் ஆண்டு காஷ்மீர் மன்னரால் இந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டது. 
 
சும்பன் நிசும்பன் என இரண்டு அரக்கர்களை அழிக்க சக்தி சண்டிதேவியாக அவதரித்து அவர்களை அழித்தபின் இம்மலையில் ஓய்வு எடுக்கிறாள். இஙகுள்ள இரு சிகரங்கள் சும்ப நிசும்பன் என்ற பெயரில் உள்ளன.

வைஷ்ணோ தேவி கோவில், பாரத் மாதா கோவில், தக்ஷமகாதேவர் கோயில், சப்தரிஷி ஆஸ்ரமம் என தரிசிக்க பல ஆலயங்கள்  உள்ளன. ஆனால் நேரமின்மையால் நாங்கள் மேற்குறிப்பிட்ட ஆலயங்கள் மட்டுமே தரிசித்தோம்.

IMG_20191012_161238.jpg
IMG_20191012_161039.jpg

IMG_20180507_142413.jpg
images (53)_1574840994206.jpeg
Hindu_god_Shiva_murti_statue_near_Ganges_in_Haridwar_India_sights_culture_beliefs_2015.jpg
GettyImages-943681362-b14111ffae644aebabb0659d7e479ed7 (1).jpg

IMG_20191127_133446.jpg

IMG_20191012_182415.jpg

IMG_20191012_182255.jpg