Wednesday 22 June 2016

லலிதா சகஸ்ரநாமம்

லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?
லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த
பிரிக்கமுடியாத ஆதிப் பரம் பொருள். சிவசக்தி ஐக்கியம்
என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.
"துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே"
என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின்
ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம்
செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல,
ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள்
பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான
ஞானம் உருவாகும். சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர்
அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின்
பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.
தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன்.
இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி
ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும். செல்வத்தை
அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால்
அகால மரணம்) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு
இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.
கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி
பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை
செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில்
அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற
இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம்
செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப்
புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.
இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு
வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன் .
பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை
தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள்
நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப்
பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி
தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது
வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.

இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே
தோஷங்கள் விலகிவிடும்.ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ,
ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா
சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம்
செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால்
மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும்
செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப்
பெறமுடியாது" என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி
என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு
உபதேசிக்கிறார். லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு
சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது
சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட
புண்ணியம் நமக்கு சேரும்.

எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து
பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய
விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.

Monday 20 June 2016

மகாபெரியவா திருவடி சரணம்!





மகாபெரியவர் பலர் வாழ்க்கையில் அனுக்கிரகம் செய்ததை எல்லாம் தினமும் படிக்கும்போதும், பலர் கூறும்பொழுதும்  நமக்கும் அப்படி ஒரு வரம் கிடைக்கவில்லையே என்று எண்ணிக் கொள்வேன். நான் ஐந்தாம் வகுப்பில் படித்த சமயம் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு  பள்ளியில் மகாபெரியவரும், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் வந்து தங்கியிருந்தனர். நாங்கள் தினமும் இரண்டு வேளையும் சுவாமிகளை தரிசனம் செய்து வருவோம்.


அப்பொழுதெல்லாம் மடத்தில் ,ஒரு லட்சம் ஸ்ரீராமஜெயம் எழுதினால் ஒரு காமாக்ஷி வெள்ளிக் காசும், பிரசாதமும் அனுப்புவார்கள். நாங்கள் எழுதிய ராம நாமாக்களை ஸ்ரீ ஜெயேந்திரரிடம் கொடுத்து காசும், பிரசாதமும் பெற்றோம்.நான்கைந்து நாட்கள் ஸ்வாமிகள் தங்கியிருப்பார் என்றார்கள். ஆனால் அதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே விடிகாலை கிளம்பி சென்று விட்டார் என்றார்கள். பெரியவர் மிகுந்த கோபக்காரர் என்றும், அவருக்கு சரியாக மரியாதை இல்லாததால் கிளம்பி விட்டார் என்றும் வதந்திகள்.

அதன்பின் திருமணம் ஆனபின் என் கணவர் குடும்பத்தாருடன் காஞ்சிக்கு பெரியவரை தரிசிக்க சென்றோம்.அதன்பின் வடக்கே மாற்றலாகிவிட அவரை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை.



சென்ற பிப்ரவரி மாதம் சென்னையிலிருந்து நானும், என் கணவரும் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தோம். காரை என் கணவர் ஓட்டி வந்தார். மதியம் மூன்று மணி இருக்கும்.விழுப்புரம் அருகே வந்தபோது காரில் ஏதோ தீவது போல நாற்றம் வந்து, அதற்கு மேல் நகராமல் நின்று விட்டது. ஊருக்கு வெளியே யாரை, எங்கு போய்த் தேடுவது என்று புரியவில்லை.அந்த இடத்தில் நல்ல வேளையாக ஒரு லாரி மெக்கானிக் கடை இருந்தது.அங்கு இருந்தவர்களைக் கேட்க அவர்கள் ஊருக்குள் இருக்கும் ஒரு கார் மெக்கானிக் கடைக்கு ஃபோன் செய்து அவர்கள் வந்து பார்த்து காரில் க்ளட்ச் மாற்ற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அந்த மெக்கானிக் எங்களை காரிலேயே அமரச் சொல்லி, மெதுவாக காரை ஊருக்குள்ளிருந்த அவரது கடைக்கு எடுத்து சென்றார். வேலை முடிய இரவு பத்து மணி ஆகும் என்றதால் என்ன செய்வது என்று புரியவில்லை.இரவு காரில் செல்ல முடியாது என்பதால் ஒரு ஹோட்டலில் தங்கி விட்டோம்.




அப்பொழுதுதான் எனக்கு சட்டென்று ஒரு நினைவு வந்தது. இது மகாபெரியவரின் ஊராயிற்றே.இங்கு சங்கர மடம் இருக்குமே என்ற நினைவு வர, என் கணவரிடம் மடத்துக்கு சென்று பெரியவரை தரிசனம் செய்து வருவோம் என்றேன்.ஒரு ஆட்டோவில் மடத்துக்கு சென்றோம். பெரியவரின் அவதார ஸ்தலமாகிய அவரது இல்லமே பாதுகா மண்டபம் என்னும் சங்கர மடமாக உள்ளது. அவர் பிறந்த அறையில் அவரது  திருவுருவ சிலையும், பாத தரிசனமும் மெய்சிலிர்க்க வைத்தது.




மடத்தின் நிர்வாகி மிக நன்றாக மடத்தில் நடக்கும் பாடசாலை மற்றும் பெரியவர் பற்றிய விஷயங்களை விளக்கினார். பெரியவர் அங்கு பலமுறை வந்து தியானத்தில் அமர்ந்து பூஜை செய்திருக்கிறார் என்றும், இப்பொழுதும் ஸ்ரீ ஜெயேந்திரரும், பால பெரியவரும் அடிக்கடி வந்து பூஜை செய்வார்கள் என்றும் கூறினார்.

அங்குள்ள பெரிய அறையில் மகாபெரியவரின் அழகான சிலை ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. நேரிலேயே அவர் அமர்ந்திருப்பது போல் காணப்படுகிறது. ஒரு பல்லக்கில் பெரியவரின் புகைப்படம் வைக்கப் பட்டுள்ளது.




அன்று நாங்கள் ஹோட்டலில் சாப்பிட முடியாது என்பதால் மடத்தின் நிர்வாகியிடம் அங்கு இரவு ஏதாவது சாப்பிட முடியுமா என்று கேட்டோம். அவரும் உடன் அங்கு வேதம் பயிலும் குழந்தைகளுக்கு சமையல் செய்யும் மாமியிடம் சொல்லி அரிசி உப்புமா செய்து பரிமாற, அந்த உப்புமா தேவாமிர்தமாக இருந்தது.


அந்த வீட்டில்தான் பெரியவர் பிறந்து, தவழ்ந்து, விளையாடி, வளர்ந்த இடம் என்பதைக் கேட்டபோது மனமும், மெய்யும் சிலிர்த்து விட்டது. சுவாமிகள் நடந்த அந்தப் புனிதமான இடத்தில் இன்று நாமும் அமர்ந்திருப்பதை நினைக்க 'என்ன தவம் செய்தோமோ நாம்' என்று ஆனந்தம் ஏற்பட்டது.

பல முறை சென்னையிலிருந்து, திருச்சிக்கு போய் வந்தும், ஒருமுறை கூட சுவாமியின் அவதார ஸ்தலம் செல்ல வேண்டும் என்று எண்ணியதில்லை. சுவாமிகள் காரை வழியில் நிறுத்தி அவரின் தரிசனம் எங்களுக்கு கொடுத்ததுடன், பிரசாதமும் அருளியதை நினைக்க எங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

எங்களுக்கு பெரியவரால் எந்த அனுபவமும் இல்லையே என்று நான் மனதில் நினைத்ததை அறிந்து அதை நிறைவேற்றி வைத்த பெரியவரின் அருளை என்ன சொல்வது?



மகாபெரியவா திருவடி சரணம்!

Saturday 7 May 2016

அன்புள்ள அம்மா...

அம்மா என்றதும் நமக்குள் ஊற்றெடுத்துப் பிரவாகமாக ஏற்படும் உணர்வு....அது வேறு எந்த உறவுக்கும் ஏற்படாது. ஐயிரண்டு மாதங்கள் சுமந்து, தன்  உதிரத்தால் பாலூட்டி, நம் தேவைகளை அவ்வப்போது அறிந்து அதற்கேற்ப அவற்றை நிறைவேற்றி நமக்காகவே வாழ்நாள் முழுதும் வாழ்ந்து முடிக்கும் நம் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாள் அன்னையர் தினம்.

நம் கூடவே இருக்கும்போது தெரியாத அம்மாவின் அருமையை அவள் மறைந்த பின்பே உணர முடிகிறது என்பது கசப்பான உண்மை. நம்மை தாலாட்டி, சீராட்டி, நல்லவைகளை சொல்லி வளர்த்து நம்மை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து, நாம் உயர்ந்தால் தான் மகிழ்ந்து, நம் கண்ணீரை தன  ஆதரவான வார்த்தைகளால் ஆறுதல்சொல்லி.....

 பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு எங்களை விட்டுச் மறைந்த என் அம்மாவின் ஞாபகம் என்னை அம்மாவுடன் வாழ்ந்த அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்கிறது. சின்னப் பெண்ணாய் இருந்தபோது, கனிவும், கண்டிப்புமாய் என்னை அரவணைத்து வழி காட்டியவள். நல்லன சொல்லி அல்லனவற்றை நீக்கியவள்.

பலமுறை அம்மாவின் கண்டிப்பு கோபத்தை ஏற்படுத்தினாலும் நான் தாயானபோது அதன் அவசியத்தை உணர்ந்தேன்.

என்னை நேரில் பாராட்டாமல், அடுத்தவர்களிடம் என்னைப் பற்றி பெருமையாகப் பேசிய அம்மாவைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.

வேறு யாரிடமும் சொல்ல முடியாத தன் மன ஆதங்கங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டபோது ஆறுதல் சொல்லியிருக்கிறேன்.

தன சந்தோஷங்களை உடனுக்குடன் குழந்தையைப்போல் சிரித்துக் கொண்டே சொல்லி மகிழ்ந்த சமயம் நானும் இணைந்து மகிழ்ந்திருக்கிறேன்.

என் திருமணத்தன்று என்னைப் பிரியும் சமயம் கலங்கி அழுத அம்மாவைப் பார்த்து என் மன வருத்தத்தை வெளிக் காட்டாமல் சென்றாலும், பலநாட்கள் அவளை நினைத்து அழுதிருக்கிறேன்.

என் குழந்தைகளின் உயர்வில் என்னம்மா அடைந்த மகிழ்ச்சியில் நான் ஆனந்தப் பட்டிருக்கிறேன்.
2005 ம் ஆண்டு இதே எட்டாம் தேதி அன்னையர் தினத்துக்கு அம்மாவிடம் தொலைபேசியில் பேசி வணங்கியபோது அம்மா சற்று உற்சாகம்  இல்லாதது போல தெரிந்தாலும், அடுத்த எட்டே நாட்களில் அம்மா என்னை விட்டு சென்று விடுவார் என்று எண்ணியும் பார்க்கவில்லை.

15ம் தேதி என் அம்மா காலமான செய்தியைக் கேட்டபோது உள்ளத்தில் ஒரு வெறுமை சூழ்ந்த உணர்வு ஏற்பட்டது. அம்மாவை கண்ணாடிப் பெட்டிக்குள் பார்த்தபோது உள்ளம் உடைந்து நொறுங்கி அழுதுவிட்டேன்.

இனி அம்மாவிடம் ஏதும் பேச முடியாது, எதையும் சொல்ல முடியாது, நமக்கு ஆறுதல் சொல்லவும், அன்பாய் தலை கோதவும் இனி அம்மா இல்லை என்பதை நினைக்கும்போது 'இதுதான் யதார்த்தம்' என்று மனம் சொன்னாலும் கண்கள் அழுவதை நிறுத்த முடியவில்லை.

அம்மா என்ற உறவுக்கு அழிவு ஏது? அன்றும், இன்றும், என்றும் இறுதிவரை அம்மாவின் அன்பும், அரவணைப்பும்,பாசமும் மறக்க முடியாது.எத்தனை உறவுகள் சுற்றிலும் இருந்தாலும் அம்மா என்ற வார்த்தைக்கு இணை ஏது?

அன்னையே உனக்கு நமஸ்காரம்!
 

Monday 2 May 2016

திருத்தணி

திருத்தணி ஆலயம் செல்லும் நாம் இறைவனை வணங்கி வருவோம். ஆனால் அத்தலத்தில்  சிறப்பான பல பெருமைகள் உள்ளன. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி மலைக்கு 365 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இவை ஒரு வருட நாட்களைக் குறிகின்றன.

சந்நிதி வாயிலின் தென்புறத்தில் 'பிரசன்ன காதர் ஈஸ்வரர்' என்ற சிவசந்நிதி  உள்ளது.தனக்கு ஏற்பட்ட ஒரு துன்பத்தை நீக்கி அருள் செய்த காரணத்தால் காதர் என்ற நவாப் இந்த லிங்கத்தை நிறுவியதோடு, ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் நவாப் வாத்திய மண்டபத்தையும் அமைத்துள்ளார்.இங்கு நாள்தோறும் பூஜை வேளைகளிலும்,உற்சவ காலங்களிலும் மகம்மதியர்கள் வாத்தியம் வாசிப்பார்கள். இந்து, முஸ்லீம் ஒற்றுமை உணர்வுக்கு இது ஒரு நல்ல சான்றாகும்.

வடக்கு பிரகாரத்தில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அரைக்கும் பெரிய கல் ஒன்று உள்ளது.இது தெய்வயானைக்கு இந்திரன் சீதனமாகக் கொடுத்ததாம். நூற்றுக் கணக்கான ஆண்டுகள் ஆகியும் இக்கல் தேயாமல் இருப்பது அதிசயமாக உள்ளது. இதில் அரைக்கும் சந்தனம் சுவாமிக்கு பூசப் பட்டு, பின் அடியார்களுக்கு  'பாதரேணு' என்ற அருட்பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது.இது அனைத்து நோய்களையும்
தீர்க்கும். நோயுற்றோர் இப்பாதரேணு சந்தனத்தைப் பெற்று நாள்தோறும் மிளகு அளவு சாப்பிட வேண்டும்.

போருக்குப் பின் இங்கு சினம் தணிந்து எழுந்தருளி இருப்பதால் இங்கு சூரசம்ஹார விழா கிடையாது. வருடத்திற்கு இரண்டு பிரம்மோற்சவம் இவ்வாலயத்தின் சிறப்பு. மகாசிவராத்திரி அன்று இரவில் முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

தணிகை முருகன் மூலவரின் மார்பில் சிறிது பள்ளமாக இருக்கும். தாரகாசுரன் திருமாலிடமிருந்து பறித்துக் கொண்ட சக்கரத்தை, அவனை வென்று முருகன் சிலகாலம் தம் மார்பில் அணிந்து கொண்டார். அந்த அடையாளமே அந்தப் பள்ளம். அதில் அணிவிக்கப்பெறும் சந்தனமே சர்வரோக நிவாரணியான பாதரேணு.

கிழக்குப் பிரகாரத்திலுள்ள ஐராவதம் இந்திரனால் சீதனமாகக் கொடுக்கப்பட்டது. ஐராவதம் நீங்கியதால் இந்திரனின் செல்வ  வளம் குறைந்ததால், இந்திரன் வேண்டிக் கொண்டபடி அது இந்திரலோகம் இருக்கும் கிழக்கு திசை நோக்கி நிற்கிறது.

நல்லாத்தூர் வீரமங்கள ஆஞ்சநேயர்



நல்லாத்தூரில் ஆலயம் கொண்டு அருள் தரும் வீரமங்கள ஆஞ்சநேயர் ஸ்ரீவியாசராயரால் உருவாக்கப்பட்டவர். 15ம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களின் குருவாக விளங்கிய வியாசராயர் ஒருமுறை துன்புற்ற போது,ஆஞ்சநேயரைத் துதித்து தன் துன்பம் நீங்கப் பெற்றால், தம் வாழ்நாள் முழுதும் அனுமனுக்கு பல ஆலயங்கள் எழுப்புவதாக வேண்டிக் கொண்டார். அவ்வாறே  732 ஹனுமான் ஆலயங்களை ஏற்படுத்தினார். அவற்றுள் பிரசித்தமான ஒன்றே குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயம். வியாசராயர் தன சீடர்களுடன் ஆஞ்சநேயரின் சிலையை திருப்பதியில் பிரதிஷ்டை செய்ய எடுத்துச் சென்றபோது, நதியில் வெள்ளம் வந்துவிட்டதால் நல்லாத்தூரிலேயே ஆலயம் எழுப்பி, அனுமனை ஸ்தாபித்தார். அதனாலேயே இந்த ஹனுமானின் முகம் திருப்பதி இருக்கும் திசை நோக்கி உள்ளதாம்.

பல நாட்கள்  மண்ணில் பாம்புப் புற்றில் புதைந்து கிடந்த ஆஞ்சநேயரை அக்கோயிலில் குடிகொண்டிருக்கும் நாகங்கள் பூஜித்து வந்ததாம். சென்னையைச் சேர்ந்த திரு சக்கரவர்த்தி என்ற தொழிலதிபரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் தனக்கு ஆலயம் எழுப்பும்படி கூறி, அவரால் சீர்திருத்தப்பட்டு அழகிய ஆலயம் உருவாகியது. 1998ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இன்றும் நாகங்கள் இந்த ஹனுமனை தினமும் வந்து வழிபாட்டு செல்வதாகக் கூறப்படுகிறது.

 நான்கரை அடி உயர ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பால ஆஞ்சநேயராகக் காட்சிதரும் இவரின் அங்கத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்களின் அழகே அழகு. கிழக்கு பார்த்த சந்நிதியில் வடக்கு நோக்கியவாறு காட்சிதரும் ஆஞ்சநேயரின் கண்கள் கிழக்கு பார்த்து அமைந்திருப்பது சிறப்பு. வலக்கை அபய ஹஸ்தமாகவும், இடக்கையில் தாமரை மொட்டும் தாங்கியபடி காட்சி தரும் அவரது கைகள்  கேயூரம், அங்கதம், கங்கணம் என்ற ஆபரணங்களோடு விளங்குகிறது. கால்களில் தண்டை, நூபுரம் இவற்றுடன் பிரம்மச்சாரி என்பதன் அடையாளமாக கௌபீனம், தலையில் முடியப்பட்ட சிகை,பூணூல் இவற்றோடு கோரைப்பல், இடுப்புப் பட்டை,கழுத்தில் நவரத்னம் பதித்த சாலிக்ராம மாலை, தலைக்கு மேல் உயர்ந்த வாலில் கட்டிய மணி என்று அத்தனை அழகாய் இருக்கிறார் பால  ஆஞ்சநேயர்.
நான்கரை அடி உயர ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பால ஆஞ்சநேயராகக் காட்சிதரும் இவரின் அங்கத்தில் அணிந்திருக்கும் ஆபரணங்களின் அழகே அழகு. கிழக்கு பார்த்த சந்நிதியில் வடக்கு நோக்கியவாறு காட்சிதரும் ஆஞ்சநேயரின் கண்கள் கிழக்கு பார்த்து அமைந்திருப்பது சிறப்பு. வலக்கை அபய ஹஸ்தமாகவும், இடக்கையில் தாமரை மொட்டும் தாங்கியபடி காட்சி தரும் அவரது கைகள்  கேயூரம், அங்கதம், கங்கணம் என்ற ஆபரணங்களோடு விளங்குகிறது. கால்களில் தண்டை, நூபுரம் இவற்றுடன் பிரம்மச்சாரி என்பதன் அடையாளமாக கௌபீனம், தலையில் முடியப்பட்ட சிகை,பூணூல் இவற்றோடு கோரைப்பல், இடுப்புப் பட்டை,கழுத்தில் நவரத்னம் பதித்த சாலிக்ராம மாலை, தலைக்கு மேல் உயர்ந்த வாலில் கட்டிய மணி என்று அத்தனை அழகாய் இருக்கிறார் பால  ஆஞ்சநேயர். அவரது பின்பக்கம்மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களும் வடிக்கப் பட்டுள்ளன. அவர்முன் நின்று நம் வேண்டுதல்களை முறையிடும்போது 'யாம் இருக்க கவலையில்லை' என்றுபாதி திறந்த அருள் விழிகளால் நம்மைப்  பார்த்து கையசைத்து ஆறுதல் சொல்வது போல தோன்றுகிறது. மிக்க வரபிரசாதியான இவர் மலை போன்ற துன்பங்களையும் பனிபோல நீக்குவதில் இந்த ஹனுமனுக்கு இணை இவரே என்று கூறுகின்றனர். ஆஞ்சநேயர் சன்னிதியை சுற்றிலும் ராமர், லக்ஷ்மி வராகர், லக்ஷ்மி நரசிம்மர், லக்ஷ்மி ஹயக்ரீவர், மங்கள கணபதி, தக்ஷிணாமூர்த்தி,நாகதேவதை, வாகனங்களுடன் நவகிரக சன்னி திகள் அமைந்துள்ளன. சனீஸ்வரர் ஆஞ்சநேயரை நேருக்கு நேர் பார்த்தவாறு அமைந்துள்ளார். இத்தலம் ராகு, கேது தோஷப் பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது.

வெளியில் 42 அடியில் சுதைரூபமாகக் காட்சி தரும் அமர்ந்த ஆஞ்சநேயரின் வால்  அவரது இடது கைக்குள்ளாக வெளியில் வந்திருப்பது போல் அமைத்திருப்பது அற்புதமான கலையம்சமாகும்.


இங்கு ராமநவமி, ஹனுமத் ஜெயந்திமிக விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. மற்றும் வெள்ளிக் கிழமை, சனிக்கிழமைகள் மிக விசே ஷமானவை.

ஆலயம் நல்லாத்தூரில் குசஸ்தலை ஆற்றின் கரையில் திருத்தணியிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

ஆலய நேரம்---காலை 6 -12---மாலை 4 -8    தொலைபேசி...04118-270666

பெரியபாளையம் பவானி அம்மன்

பெரியபாளையத்தில் அருள் புரியும் அம்மன் தேவகியின் எட்டாவது குழந்தையான மாயையே. பவானி என்ற பெயரில் இங்கு கோயில் கொண்டுள்ளாள். அன்னை பவானி அரை உருவத்துடன், வலது மேற்கையில் சக்கரமும், இடது மேற்கையில் சங்கும் ஏந்தி, கீழிரு கைகளில் வாளும், அமுத கலசமும் கொண்டு தோற்றம் அளிப்பது இங்கு மட்டுமே அமைந்துள்ள கோலம். ஐந்துதலை நாகம் சிரத்தை அலங்கரிக்க, தன சகோதரன் கண்ணனின் சங்கும், சக்கரமும் கொண்டு  எழுந்தருளி இருக்கும் இவ்வம்மனின் சுயம்பு வடிவம் நாளும் வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.ஆண்டுதோறும் ஆடி முதல் ஞாயிறு தொடங்கி 14 ஞாயிற்றுக் கிழமைகள் ஆடிப்பெருவிழா நடைபெறும். அதில் பத்தாம் ஞாயிறு அன்று சூரியன் அன்னை பவானியைப் பூசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.பெரியபாளையம் பவானி அம்மன்
பெரியபாளையத்தில் அருள் புரியும் அம்மன் தேவகியின் எட்டாவது குழந்தையான மாயையே. பவானி என்ற பெயரில் இங்கு கோயில் கொண்டுள்ளாள். அன்னை பவானி அரை உருவத்துடன், வலது மேற்கையில் சக்கரமும், இடது மேற்கையில் சங்கும் ஏந்தி, கீழிரு கைகளில் வாளும், அமுத கலசமும் கொண்டு தோற்றம் அளிப்பது இங்கு மட்டுமே அமைந்துள்ள கோலம். ஐந்துதலை நாகம் சிரத்தை அலங்கரிக்க, தன சகோதரன் கண்ணனின் சங்கும், சக்கரமும் கொண்டு  எழுந்தருளி இருக்கும் இவ்வம்மனின் சுயம்பு வடிவம் நாளும் வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.ஆண்டுதோறும் ஆடி முதல் ஞாயிறு தொடங்கி 14 ஞாயிற்றுக் கிழமைகள் ஆடிப்பெருவிழா நடைபெறும். அதில் பத்தாம் ஞாயிறு அன்று சூரியன் அன்னை பவானியைப் பூசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

Sunday 1 May 2016

மாரங்கியூர் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் கோயில்

ராமர் உருவாக்கிய ராமலிங்கேசர்...


ஆலயங்கள் நம் நாட்டின் பொக்கிஷங்கள். அவை இறை பக்தியுடன் நம் நாட்டின், தொன்மையையும், மேன்மையையும் தெள்ளென எடுத்துக் கூறுகின்றன. இன்று புதிது புதிதாக பல ஆலயங்கள் உருவாக்கப் பட்டாலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் இறைவனாலும், அவர்தம் பக்தர்களாலும் உருவாக்கப்பட்ட ஆலயங்களின் சான்னித்தியம் சொல்லில் அடங்காதது. அவ்வாலய மூர்த்திகள் வழிபடுவோரின் இன்னல் களைந்து இனிய வாழ்வை அமைத்துத் தருவதை  இன்றும் நம் கண்கூடாகக் காண்கிறோம். நமக்கு ராமரால் உருவாக்கப்பட்ட ராமேஸ்வரம் சிவபெருமானைத் தெரியும். ஆனால் அதற்கு முன்பாகவே ஸ்ரீராமர்  ஆலயம்  அமைத்து வழிபட்ட ராமலிங்கஸ்வமியை தரிசிக்க விழுப்புரம் அருகிலுள்ள மாரங்கியூருக்கு வாருங்கள்!
அவ்வகையில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வெளியில் தெரியாத சின்னஞ்சிறு கிராமம் மாரங்கியூர்.அங்கு 1000 ஆண்டுகளுக்கு மேலான, சங்க காலத்திலேயே சிறப்பு பெற்ற சிவாலயம் ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் ஆலயம்.பல  சிறப்புகளையும்,பெருமைகளையும் பெற்ற  அழகிய ஆலயம் இன்று இயற்கை சீற்றத்தாலும், வானிலை  மாறுபாடுகளாலும் சிதைந்து நிற்கின்றதைக் காணவே மனம் கலங்குகிறது. ஆலயத்தின் பெருமை அறிந்த ஊர் மக்கள் மற்றும் சிவனடியார்களால் இன்று அவ்வாலயம் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் காணும் நிலையில் உள்ளது.இனி இவ்வாலய சிறப்புகளைக் காண்போம்.



இவ்வாலயம் ராமேஸ்வரத்துக்கு இணையான சிறப்பு பெற்றதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீராமபிரான் சீதையைத் தேடி வந்தபோது அமாவாசை நாளாக இருக்க, தென் பெண்ணை ஆற்றங்கரையில் தர்ப்பணம் முதலிய பித்ருகாரியங்களைச் செய்தார். ராமேஸ்வரம் சென்று ஈசனை வழிபட விரும்பியவர், அங்கு செல்ல பல நாட்களாகும் என்பதால் மாரங்கியூரில் ஒரு ஆலயம் அமைத்து அதில் சிவலிங்கத்தை ஸ்தாபித்து ஸ்ரீராமலிங்கேஸ்வரராக எண்ணி வழிபட்டார். அதுமுதல் ராமேஸ்வரம் செல்ல இயலாதவர்கள் இவ்வாலயத்தில் சங்கல்பம்செய்த்து பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. திருவிராமேஸ்வரர் என்ற இவ்வாலய ஈசனை  அமாவாசை அன்று வழிபட்டால் இறந்த முன்னோர்களின் ஆசி கிட்டும்; பித்ரு தோஷங்கள் நீங்கும்.

ஆகம விதிப்படி கற்றளியாக எழுப்பப்பட்ட இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் இன்று இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விக்ரமசோழ வானகுலராயன் என்ற மலைய மானன் இவ்வூரைத் தலைநகராகக்  செய்தான். அச்சமயம் திருவெண்ணைநல்லூருக்கருகில் ஓடிக் கொண்டிருந்த தென்பென்னையாறு திசை மாறி பெரிய நகரமாக இருந்த இவ்வூரை அழித்துச் சென்றபோது இவ்வாலயமும் பெருத்த சேதமடைந்தது.


தற்சமயம் சிதைந்து காணப்படும் இராஜகோபுரம் மற்றும் சுற்று மண்டபங்கள் கி.பி. 1069ம் ஆண்டில் மதால்வி கோலன் கொண்டல்  என்ற தேவரடியாரால் கட்டப்பட்டது. இவ்வூரில் கி.மு.1000 முதல் 500ம் ஆண்டுகளில் இருந்த மட்பாண்டங்களும், கற்கால சின்னங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அதன்பின் சமணர்கள் வாழ்ந்த அடையாளமாக தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று உள்ளது. அதன்பின் சம்புவரையர், சோழர், விஜயநகர, பாண்டிய அரசர்கள் ஆண்ட காலத்தில் மிக சிறப்புற்று விளங்கியதற்கான சான்றுகள் கல்வெட்டுகளில் உள்ளன. பின்னர் பெருவெள்ளத்தால் சிதிலமடைந்த இவ்வாலய சிலைகள் தென் பெண்ணையாற்றில் இருந்து மீட்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

பலிபீடம் தாண்டி நந்தி வீற்றிருக்க கருவறையில் காட்சி தரும் ஈசன் ஸ்ரீ ராமலிங்கர் சிறிய ஆவுடையில் அழகாகக் காட்சி தருகிறார். ஈசன் வரப்பிரசாதி என்றும், அமாவாசை பித்ரு தர்ப்பண நாட்களில் இவரை வழிபடுவோர் சிறப்பான வாழ்வைப் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.


மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் அன்னை பர்வதவர்த்தினி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு நிகரான காமகோட்ட நாச்சியாராக போற்றப் படுகிறாள். பெண்கள் வேண்டுவதையும், விரும்புவதையும் நிறைவேற்றித்தரும் கற்பக விருட்சமாக விளங்குகிறாள் தேவி. நான்கு கரங்களுடன் காட்சி தரும் தேவியின்  அழகு கண்ணோடு மனதையும் கவர்கிறது.


சங்க காலத்துக் கோயில் என்பதை உணர்த்தும் வகையில் கையில் கட்டாரி என்ற அரிவாளுடன் காட்சி தரும் கொற்றவை உருவம் இங்குள்ளது. ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலக் கொற்றவையம்மன் மான், சிங்கம்,எட்டு கரங்களுடன் அழகுறக் காட்சி தருகிறாள். இவளை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் வழிபடுவோருக்கு கல்வி, பிள்ளை செல்வம், தனம், தான்யம், வீரம், மன நிம்மதி இவை கிட்டும்.  இந்த அமைப்பில் உள்ள கொற்றவை சிற்பம் இந்தியாவில் வேறெங்கும் இல்லை.

இன்னொரு வழிபாட்டுச் சிறப்பு பெற்ற தேவி மூதேவி, ஜ்யேஷ்டா தேவி எனப்படும் மூத்த தேவி. எங்குமில்லாத விதத்தில் இவ்வன்னை தாமரையில் அமர்ந்து வித்தியாசமாகக் காட்சி தருகிறாள். சாதாரணமாக மூதேவிக்கு எங்கும் வழிபாடு கிடையாது. ஆனால் இவ்வூரில் ஒரு வீட்டின் மூத்த மகன், மகள் வியாழக் கிழமைகளில் இவ்வன்னையை வழிபட்டால் அவர்கள் குடும்பம் சிறப்பு பெறும் என்பதால் அவ்வூருக்கு அருகிலுள்ளோர் ஏராளமானோர் வந்து வணங்கி பயனடைவதாகச் சொல்கின்றனர்.


இவை தவிர கணபதி, அசுர மயிலில் வேகத்துடன் காட்சி தரும் ஆறுமுகப் பெருமான், சண்டிகேசர், பைரவர், சூரிய சந்திரர், பிட்சாடனர்,சப்த கன்னியர் என்று அத்தனை சிற்பங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இத்துணை  சிறப்பும், பெருமையும் பெற்ற இவ்வாலயத்தை மீண்டும் உருவாக்க, ஆகம விதிப்படி பழைய நிலையிலேயே கட்ட எண்ணி திருப்பணி நடைபெறுகிறது.ஸ்ரீ ராமர் வழிபட்ட சிறப்பு பெற்ற இவ்வாலயம் மீண்டும் பூஜைகளும், விழாக்களும் நடந்து இறைஅருளை  அனைவரும்  பெற இவ்வாலய கும்பாபிஷேகம் இவ்வாண்டு இறுதிக்குள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திருப்பணிக்கு அனைவரும் தம்மால் இயன்ற பொருளுதவி செய்தாலே திருப்பணி விரைவில் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற முடியும். 

நமக்கு அருள் செய்யத் தயாராகக் காத்திருக்கும் தெய்வங்களுக்கு, நாம் சரியான முறையில் ஆலயம் அமைத்து வழிபாட்டைச் செய்தாலே அவர்கள் மனம் மகிழ்ந்து நம் குடும்பத்தையும், நம் நாட்டையும் சீர்பெறச் செய்வர். அன்பர்கள் இவ்வாலயம் சென்று தரிசனம் செய்து திருப்பணிக்கு உதவிடலாம்.
ஆலயம் விழுப்புரத்திலிருந்து பேருந்து மார்க்கத்தில் கல்பட்டு என்ற இடத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் செல்ல வேண்டும்.
திருவெண்ணெய் நல்லூர் - ஏனாதிமங்கலம் வழியில் இறங்கி  1 கிலோமீட்டர் செல்ல வேண்டும்.

Attachments



Saturday 30 April 2016

அனைத்தும் தரும் அன்னாவரம் ஸ்ரீசத்ய நாராயண சுவாமி ஆலயம்

என்னைக் கவர்ந்த கோயில்களில் ஒன்று அன்னாவரம் ஸ்ரீ வீர சத்யநாராயண சுவாமி கோயில். சத்யநாராயணரின் ஆலயங்கள் மிகக் குறைவே. அவற்றுள் தனிச் சிறப்பு கொண்டு விளங்குவது அன்னாவரம் ஆலயம். அக்கோயிலின் அழகும், சாந்நித்தியமும் தரிசிப்பவரை  மெய்சிலிர்க்க வைக்கும். இவ்வாலயத்தில் பிரம்மா, சிவன், மகாவிஷ்ணு மூவரும் இணைந்து இருப்பது இவ்வாலயத்திற்கு சிறப்பை அதிகரிக்கிறது. மும்மூர்த்திகள் இணைந்து அருள் தரும் ஆண்டவனுக்கு 'ஹரி ஹர ஹிரண்யகர்ப த்ரிமூர்த்தியாத்மகா'என்ற பெயரும் உண்டு.

ஆந்திராவில் திருப்பதிக்கு அடுத்ததாக மிக பெருமையும், சிறப்பும், செல்வமும்  பெற்ற ஆலயமாக அன்னாவரம் திகழ்கிறது. முற்காலத்தில் இவ்வூரில் எப்பொழுதும் தடையின்றி அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இதற்கு அன்னாவரம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், இங்கு அருள்புரியும் ஸ்ரீ சத்ய நாராயணர் 'அனைன வரம்', அதாவது தன்னை வணங்கியவரின் விருப்பமான வரங்களைத் தருபவர் என்பதாலும் அன்னாவரம் என்ற பெயர் பெற்றதாகக் கூறப் படுகிறது.

இவ்வாலயம் அமைந்த வரலாறு ஸ்கந்தபுரானத்தில் ரேவாகாண்டத்தில் காணப்படுகிறது.இறைவன் கோயில் கொண்டிருக்கும் இம்மலை 'ரத்னகிரி' என்று அழைக்கப் படுகிறது. இம்மலை மேருமலையின் மகனாக புராணம் உரைக்கிறது. மேருமலையும், அதன் மனைவி மேனகையும் வரம் செய்து மகாவிஷ்ணுவின் அருளால் ரத்தினாகரா, பத்ரா என்ற இரு மகன்களைப் பெற்றனர். பத்ரா விஷ்ணுவை நோக்கித் தவம் செய்து பத்ராசலம் என்ற மலையாகி தன்னிடம் விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீராமபிரானைத் தாங்கிப் புகழ் பெற்றது.



ரத்னாகர மலையும் நாராயணரை நோக்கித் தவம் செய்து அவரையே தன்னிடத்தில் வந்து வாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தைக் கேட்க, விஷ்ணுவும் தானே வீர வேங்கட சத்ய  நாராயண சுவாமி என்ற பெயரில் இங்கு கோயில் கொண்டார் என்கிறது தல வரலாறு. ரத்னாகர் மலை ரத்னகிரி என்ற பெயரைப் பெற்றது. இம்மலையைத் தொட்டவாறு புண்ணிய நதியான பம்பா சரோவர் என்ற ஆறு ஓடுகிறது.

இங்கு பெருமான் ஆலயம் கொண்டது எவ்வாறு? ஏரங்கி பிரகாசம் என்ற அந்தணரின் கனவில் வந்த நாராயணர் தன் விக்கிரகம் இம்மலையில் வழிபாடு இன்றி இருப்பதாயும்,அதனைக் கண்டுபிடித்து ஆலயம் அமைக்கும்படியும் ஆணையிட அவரும் ஊர்மக்களிடம் இவ்விஷயம் சொல்லி, அனைவரும் பகவானைத் தேடிக் கண்டுபிடித்து இம்மலையில் சிறிய ஆலயம் அமைத்து வழிபட ஆரம்பித்த ஆண்டு 1891. அதன்பின் 1934ம் ஆண்டு மீண்டும் சற்று பெரிய ஆலயமாக உருவாக்கப்பட்டது. சில்ப  சாஸ்திரம் மற்றும் ஆகம விதிகளின்படி ரதம் போன்ற தற்போதைய ஆலய அமைப்பு உருவாக்கப் பட்டது 2012ல்.





ரத்னகிரி என்ற சிறிய குன்றின்மேல் நான்கு புறம் சக்கரங்களைக் கொண்டு ரத வடிவில், அழகிய வெண்ணிற கோபுரங்களைக் கொண்ட ஆலயத்திற்கு சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இங்கு கோயில் கொண்டுள்ள சத்யநாராயண சுவாமி 13 அடி உயரத்தில் உருளை வடிவத்தில் காட்சி தரும் வித்யாசமான அமைப்பில் உள்ளார். கீழும், மேலுமாக இரண்டு தளங்களைக் கொண்ட கர்ப்பக்கிரகத்தில் ஸ்ரீ சத்யநாராயண பீடம் என சொல்லப்படும் கீழ்ப் பகுதியில் பிரம்ம  ரூபமாகக் காட்சி தரும் இறைவனின் நான்கு பக்கங்களிலும் ஆராதனை மூர்த்திகளாக விநாயகர், சூரியன், ஈசன், அம்பிகை உருவங்கள் அமைந்துள்ளன. 'ஸ்ரீ மகாத்ரிபத் வைகுண்ட  நாராயண யந்திரம்' என்னும் சக்தி வாய்ந்த  விசே ஷ யந்திரம் அமைக்கப் பட்டுள்ளது. இது ஜன தன ஆகர்ஷண யந்திரம் என்பதாலேயே இங்கு பக்தர்களின் வரவு அதிகமாக உள்ளது. தன்னை வணங்குவோரின் ஆசைகளையும், வேண்டுதல்களையும் வரமாகத் தரும் ஸ்ரீ சத்யநாராயணரின் அருள் உலகளாவியது.

மேல்நிலையில் ஸ்ரீ சத்யநாராயண சுவாமியின்  வலப்பக்கம் லிங்க ரூப சிவபெருமானும், இடப்பக்கம் ஸ்ரீ அனந்த லக்ஷ்மி தாயாருடனும் அழகுக் காட்சி அருள்கின்றனர். தங்கக் கவசத்தில் பளபளவென ஜொலிக்கும் சத்யநாராயணரின் முன் நாம் மெய்மறந்து நிற்கிறோம். 'நாராயணா ஏன்னா நாவென்ன நாவோ 'என்பதுபோல் நம் வாய் 'நாராயணா' என்றுதான் திரும்பத் திரும்ப சொல்கிறதே தவிர,  அவரிடம் வேண்டுவது எதுவென்று புரியவில்லை. அங்கேயே இறைவனுடன் கரைந்து விடும் மனோபாவமே ஏற்படுகிறது.மெய்சிலிர்க்கும் அனுபவமாக உள்ளது. 

இவ்வாலயத்தில் சத்யநாராயண விரதம் செய்வது மிக சிறப்பானதாகக் கூறப் படுகிறது. தம்பதிகளாகச் செய்யும் இந்த பூஜைக்கான கட்டணம் 200 ரூபாய் முதல் 1500 வரை உண்டு. காலை 6 மணி முதல் மாலை 6 வரை இந்த பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுவர். கோவிலின் உள்ளே இருக்கும் கல்யாண மண்டபத்தில் அனைவரும் வரிசையாக உட்கார வைக்கப் பட்டு, பூஜைக்கான சாமான்களைத் தந்து, சங்கல்பம் செய்து வைத்து சுவாமிக்கு முன்பு அர்ச்சகர்கள்  சத்யநாராயண பூஜை செய்து வைக்கிறார்கள். கடைசியாக தீபாராதனை முடித்து, கதை படித்து விரதத்தை பூர்த்தி செய்கிறார்கள். சத்யநாராயணருக்கு விசே ஷமான இத்தலத்தில் இந்த விரத பூஜை செய்வதால் திருமண பாக்கியம், பிள்ளைப் பேறு, விரும்பிய வேலை, இவற்றுடன் நினைத்தது நிறைவேறும் என்று கூறப் படுகிறது. எனக்கு இது நிதர்சனமாக நடந்தது. 

ஆலயம் மிக சுத்தமாகப் பராமரிக்கப் படுகிறது.இக்கோயில் அருகில் அமைந்துள்ள ராமர்  மற்றும் வன துர்கை ஆலயங்களும் மிக அழகாக உள்ளன. இங்குள்ள கோசாலை அருமையாக பராமரிக்கப் படுகிறது. ஒவ்வொரு ஏகாதசியும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.மே மாதம் 6 நாட்கள் நடைபெறும் சுவாமியின் திருக் கல்யாண உத்சவம் மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது. அந்த நன்னாளில் இத்தலத்திற்கு வந்து திருமணம் செய்து கொள்பவர்களின் கூட்டமும் அதிகமாக இருக்குமாம்!

மற்றும் நவராத்திரி, தெப்ப உத்சவம், தீப உத்சவம் இவற்றுடன் சிவபெருமானுக்கான உத்சவங்களும் இங்கு  மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  மக்கள் கூட்டம் திருப்பதி போன்றே காணப்படுகிறது.
இக்கோயிலுக்கு ஒருமுறை சென்று தரிசித்தவரை மீண்டும் ஈர்க்கும் சக்தி இந்த பெருமானுக்கு நிச்சயம் உண்டு. ஒவ்வொரு முறை செல்லும்போதும் எனக்கு மீண்டும் சென்று அப்பெருமானை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாலேயே எனக்கு மிகவும் பிடித்த கோயிலாக உள்ளது.

அன்னாவரம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் விசாகப்பட்டினத்திலிருந்து 125 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அனைவரும் வாழ்வில் ஒருமுறை அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புத புண்ணியத் தலம் அன்னாவரம்.