Wednesday, 7 May 2014

அன்புள்ள அம்மா வணக்கம்...

அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு அன்று,இவ்வருடம் 11ம் தேதி கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் ஒன்பது  ஆண்டுகளுக்கு முன் மறைந்த என் அம்மாவைப் பற்றி நினைவு கூர்கிறேன்.



அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ..


மாதா பிதா குரு  தெய்வம்...

ஆதி பகவன் முதற்றே உலகு..
எல்லாவற்றிலும் முதல் மரியாதை தாய்க்குதான்.எல்லாருக்குமே அவரவர் தாய் உயர்வுதான்.
பட்டினத்தார்,ஆதி சங்கரர், சத்யசாயி பாபா போன்ற மகான்களும் கூடத் தாயன்பிற்கு  தலை வணங்கியவர்களே.


அம்மா எனும்போதே நமக்குள் ஒரு அன்பும், பாசமும் உருவாவதை எவரும் உணர முடியும். ஒரு தாய் பத்து மாதங்கள் தன குழந்தையை சுமந்து, எவ்வளவோ துன்பங்கள் அடைந்து பெற்றாலும், அவள் தன் குழந்தையைப் பார்த்த அடுத்த நொடியே அத்தனை வலியும்,சிரமமும் ம(ப)றந்து போய் விடுமே! 


தான் பெற்ற குழந்தைகளை நல்வழிப் படுத்தி வளர்க்கும் பொறுப்பு பெரும்பாலும் தாயைச் சேர்ந்ததே.தானாகத் தன்  செயல்களைச் செய்து கொள்ளும் வயது வரை ஒரு குழந்தைக்கு தாய்தான் எல்லாமே. 
தாய் நமக்கு தெய்வம் எனில் அவள் சுமந்த வயிறுதானே நாம் குடியிருந்த கோயில்.


அம்மா என்கிறபோதே என் அம்மாவின் நினைவு வந்து கண்களை கண்ணீர் மறைக்கிறது. மறைந்த அம்மாவை நேரில் பார்க்கவோ, பேசவோ முடியாவிட்டாலும், பல சந்தர்ப்பங்களில் அம்மா சொன்ன அறிவுரைகள்தான் இன்றும் என்னை வழிநடத்திச் செல்கின்றன.


பிறந்தது முதல் என்னைப்  பாலூட்டி, தாலாட்டி ' சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா'என்ற பாட்டைப் பாடி,கொஞ்சி வளர்த்த என் அம்மா, பள்ளிக்கு அனுப்பும்போது பாரதி தாசனின் பாட்டைப் பாடுவார்.

'தலைவாரிப் பூச்சூட்டி உன்னை பாடசாலைக்குப் போ என்று சொன்னாள்  உன் அன்னை' என்ற பாட்டைப் பாடி மலைவாழையாகிய கல்வியில் சிறப்புற செய்தார்.
மாலையில் கண்டிப்பாக சுலோகங்களை சொல்ல வேண்டும்.இரவு இதிகாச,புராண கதைகளுடன் கையில் அம்மா பிசைந்து போட்டு சாப்பிடும் உணவுடன்,ஆன்மீக உணர்வும், நல்ல எண்ணங்களும் உட்செல்லும்.அந்த சாப்பாட்டின் சுவை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் இருக்காது!
 
இந்தக் காலக் குழந்தைகள் தலையும் பின்னுவதில்லை.....பூவும் வைப்பதில்லை! எல்லாம் பாப் தலை...பூ வைக்க, தோடு போட  பள்ளியில் தடை. தொலைக் காட்சியும், கம்ப்யூட்டரும்தான் அவர்களின் ஒரே இலக்கு.

இசை, ஓவியம், கோலம்,தையல்,கைவேலை இவை எல்லாவற்றிலும் எனக்கு ஆர்வத்தை உண்டாக்கியவர் என் தாய்தான். சிறு வயது முதலே எல்லா காரியங்களிலும் ஒரு ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க சொல்லித் தந்தார்.
 சிறிதும் கோணலில்லாமல் வாசலை நிறைத்து என் அம்மா போடும் கோலம் இன்னும் எங்கள் கண்களிலேயே நிற்கிறது.விதவிதமாக சமைப்பதிலும் திறமைசாலி.


'செய்வன திருந்தச் செய்' என்ற வாக்கிற்கேற்ப வீட்டைப் பெருக்கினாலும், பாத்திரம் தேய்த்தாலும்,துணிகளைத் துவைத்தாலும் எதையும் சுத்தமாகச் செய்ய வேண்டும். அந்தத் துணிகளை காயப்போடுவதில்  கூட ஒரு முறையைக் கடைப்பிடிப்பார் என் அம்மா. துளியும் சுருக்கமில்லாமல், (அந்நாளில்  வாஷிங் மெஷினெல்லாம் கிடையாதே)அழகாக,வரிசையாக  உலர்த்தி எடுத்து மடித்து வைப்பார். இஸ்திரி போடவே தேவையில்லாமல் துணிகள் பளபளக்கும். 
மாலையில் எங்களுக்கு சரியாக செஸ், கேரம் போர்ட் என்று விளையாடவும் செய்வார்.
 
அழகுணர்ச்சியிலும் என் அம்மா சற்றும் குறைந்தவரல்ல.திருத்தமாக, நாகரீகமாக அலங்காரம் செய்து கொள்ளும் முறை நான் என் அம்மாவிடம் இருந்து கற்றதே. எழுதுவதில் ஆற்றல் கொண்டவர், அப்பொழுதே தமிழ் மாத இதழ்களில் எழுதுவார். 

வீட்டுப் பராமரிப்பு முதல் குழந்தைகளை வளர்ப்பதுவரை,நான் துவண்ட நேரங்களில் என்னைத் தூக்கிவிட்டு, அழுத சமயங்களில் ஆறுதல் கூறி அவ்வப்போது என் அம்மா கொடுத்த அறிவுரைகளும், ஆலோசனைகளும்தான் இன்றும் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறது.என் அம்மாவின் வழிப்படிதான் என் குழந்தைகளையும் வளர்த்தேன். 

இன்று அம்மா உயிருடன் இல்லை.
என் உள்ளத்தில் இருக்கிறார்.
என் உணர்வுகளில் இருக்கிறார்.
என் உயிரில் கலந்திருக்கிறார்.


To my beloved Mother and best friend,who i know still watches over me.

Thank u 4 all of ur amazing wisdom,and the very special love and encouragement u always gave me...

Let's not forget either that the baby a mother cares for is an object of intense beauty.a child is perfect in his mother's eyes.his skin, his hair, his smile are all brand new and their beauty gives daily preasure.

Only a mother knows the delight of watching their child grow up. ...

Mother love is the fuel that enables a normal human being to do the impossible.

அனைவருக்கும் என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்...


No comments:

Post a Comment