Saturday, 31 January 2015

பதிவுலக பிதாமகரின் வீட்டில்....!


எனக்கு பதிவுலக அறிமுகம் கிடைத்தது பதிவுலகில் கொடி கட்டிப் பறக்கும் திரு கோபு சார் அவர்களால்தான். அவரது கதைகளுக்கு விமரிசனம் எழுத ஆரம்பித்த பின்பே பதிவுலகம் பற்றியும், பதிவர்கள் பற்றியும் நான் அறிந்து கொண்டேன். ஒரு பின்னூட்டமும் வராத என் பதிவுகளுக்கு அவரது நட்பு கிடைத்த பின்பே சில பின்னூட்டங்களாவது  கிடைக்க ஆரம்பித்தது. 

புதிய பதிவர்களை ஊக்குவித்து, தவறாமல் அவர்களுக்கு பின்னூட்டம் கொடுப்பதில் கோபு சாருக்கு நிகர் அவர்தான்! அதிலும் நான் சொந்த ஊர்க் காரியாயிற்றே....அபிமானம் கொஞ்சம் கூடவாக்கும்!
நவராத்திரிக்கு தம்பதி சமேதராய் எங்கள் வீட்டுக்கு வந்து கொலுவை ரசித்து, எங்களையும் அறிமுகம் செய்து கொண்ட போது ஏதோ ரொம்ப பழகியவர்களைப் போல ஒரு எண்ணம் உண்டானது. அதன்பின் தொலைபேசியில் தொடர்ந்த எங்கள் நட்பு, எனக்கு அவர் அறை சன்னல் பதிவைப் படித்தது முதல் அவர் வீட்டுக்குப் போய் பார்த்தே வந்து விட வேண்டும் என்ற ஆவலை அதிகப் படுத்தியது. நேற்று அவரும், மாமியும் ஒரு சின்ன Get-togetherக்கு  அழைத்ததின் பேரில் நானும், என் கணவரும் 'பவித்ராலயா'வுக்கு சென்றோம். அனைவரும் வாசலுக்கே வந்து  அழைத்தது மிக்க மகிழ்ச்சியாகவும், அவர்களது விருந்தோம்பலின் மேன்மையையும் காட்டியது.
                                                           தம்பதி சமேதராக நம் கோபு சார்

உள்ளே சென்று அமர்ந்த உடன் துபாய் சாக்லேட், மிக்சர், சோன்பப்டி, சிப்ஸ் என்று.....அப்பவே பாதி வயிறு நிரம்பி விட்டது! அதன்பின் 'கொஞ்சம் பேசிக் கொண்டிருந்து விட்டு டிஃ பன் சாப்பிடலாம்' என்று கோபு சார் சொல்ல, நானும், என் கணவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். என் கணவர் 'இதுவே வயிறு ஃ புல்! இன்னும் டி ஃ பன் வேறா?' என்றார்.

சார் மாமியைக் கூப்பிட மாமியோ கணவர் 'எள் என்பதற்குள் எண்ணை'யாக ஒரு அழகான ஷாலுடன் வந்தார். அதை எனக்கு போர்த்தவும், என் கணவர் கைதட்ட, சார் அதை காமிராவில் க்ளிக்க .....ஆஹா...நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? நமக்கும் ஒருவர் பொன்னாடை  போர்த்துகிறாரே என்று வானத்தில் மிதந்தேன்! பதிவுலகப் பிரம்மாவின்  மோதிரக் கையால் குட்டு கிடைத்தால் கசக்குமா என்ன!


என் கணவர் 'நீ இத்தனை நாளாக எழுதுவதற்கு சார் எப்படி உன்னை பெருமை படுத்தி விட்டார் பார்' என்றார்! என்னவோ நம்ம மனைவிக்கும் ஒருத்தர் பொன்னாடை போர்த்துகிறாரே என்ற சந்தோஷம் போலும் அவருக்கு!! 

சமையலறையில் வெங்காயமும், எண்ணையும் வாசனை தூக்க, என் கணவரும், சாரும் ஜோசியம் பற்றி பேச ஆரம்பித்தனர். என் கணவருக்கு  ஜோதிடம் தெரியும். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவார். அவரது கட்டுரைகளைப் படிக்க கீழுள்ள சுட்டிக்கு செல்லவும்.
 https://scribd.com/yenbeeyes

இருவரும் பேசிக் கொண்டிருக்க நான் நைசாக சமையலறைப் பக்கம் நழுவினேன்! சாரின் மருமகள் அங்கு மும்முரமாக டி ஃ பன் தயார் செய்து கொண்டிருந்தாள்! என்ன அது....அட...அட....அட....அடை...
! சாரின் 'ஆஹா என்ன அழகு அடை' மணக்க மணக்க ரெடியாகிக் கொண்டிருந்தது! சார் வீட்டு ஸ்பெ ஷலான அடையை ருசிக்க நானும் ரெடி ஆனேன்! 


ஆஹா....சூப்பர் அடை! வட்ட வடிவமாக, பெருங்காய மணம் தூக்கலாக, ஓரம் மொறுமொறு வென்று கமகம வெங்காய அடை....வெங்காய சாம்பார் சகிதம் டேபிளுக்கு  வந்தது. என் கணவருக்கு சாம்பாருடன்,வெல்ல சர்க்கரையும் வேண்டும். கேட்கத் தயங்க, அதைப் புரிந்து கொண்ட சார், 'இந்தாங்கோ...வெல்ல சர்க்கரை' என்று நீட்ட, 'இதை...இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்' என்று இவர் சொல்ல, இருவரும் ஒரு பிடி பிடித்தோம்!

தன்  மாமியார், மாமனாரின் பக்குவத்தைத் தெரிந்து கொண்டு சுவையாக, அருமையாக அடை வார்த்துப் போட்ட சாரின் மருமகள் மீனாட்சி சங்கர் அழகான, அமைதியான, சுறுசுறுப்பான  பெண்! அவரது கைப்பக்குவத்தில் எல்லா சமையலுமே மணக்கும் என்று சொன்னார் திருமதி கோபு!
                                                             சாரின் மனைவி,மருமகளுடன்....

அடுத்து சூப்பர் ஃ பில்டர் கா ஃ பி! கா ஃ பி பிரியரான என் கணவர் அதன் சுவையில் மயங்கியே விட்டார்! 'இனி இந்தப் பக்கம் வரப்போ எல்லாம் உங்காத்துக்கு டி ஃ பன், காஃபிக்கு  வந்துடுவேன்!' என்று சாரின் மருமகளிடம் சொல்லிவிட்டார். 
எல்லோரும் சேர்ந்து ஒரு க்ளிக்....

சரி...நேரமாச்சு...கிளம்பும் நேரம் வந்தது....மாமி நாதஸ்வரத்தை ரசிக்க ரெடியாக (அதான் தினசரி மெகா சீரியல்!!), எல்லாரிடமும் விடை பெற்றுக் கிளம்பினோம். ஒரு மாலை நேரம் மனதுக்கு பிடித்த ஒரு நல்ல நண்பருடன் செலவழிந்த மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு  வந்தோம்.

எங்கள் வருகை பற்றி அட்டகாசமாக கோபு சார் எழுதிய பதிவைப் படிக்க இங்கே கிளிக்கவும்....
 http://gopu1949.blogspot.in/2015/02/blog-post.html 

No comments:

Post a Comment