Monday, 23 February 2015

மூத்த பதிவர் திருமதி ருக்மணி சே ஷசாயி அவர்கள் வீட்டில் பதிவர் சந்திப்பு...


பரமபத நாதன் பள்ளி கொண்டிருக்கும் ஊரில் ஒரு பாங்கான பதிவர் மாநாடு. இதற்கான காரண கர்த்தா 'செல்வக் களஞ்சிய'மான திருமதி ரஞ்சனி நாராயணனுக்குதான் நன்றி  சொல்ல வேண்டும். அவர் வருகை இந்த சந்திப்பிற்கான காரணம்....இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியவர் நம் பதிவுலக பிரம்மா திரு கோபு சார்!

திரு கோபு சார் அவர்களைத் தவிர நேரில் பார்க்காத மற்ற திருச்சி பதிவர்களின் எழுத்தில் மட்டுமே இருந்த பரிச்சயம் அவர்களை நேரில் பார்க்கும் ஆவலையும் ஏற்படுத்தியது. திருமதி ரஞ்சனியின் ஏற்பாட்டின்படி நாங்கள் அனைவரும், பல வருடங்களாக கதை, கட்டுரைகள், சின்னக் குழந்தைகளுக்கான கதைகளை எழுதி, புத்தகங்களை வெளியிட்டு வரும் திருமதி ருக்மணி சே ஷசாயியின் வீட்டில் சந்திப்பதாக முடிவு செய்தோம். திரு கோபு சார், திரு தமிழ் இளங்கோ சாருடன் நானும் பதிவர்களின் முகம் காண புறப்பட்டேன்! சரியாக நான்கரை மணிக்கு நாங்கள் ருக்மணி மாமியின் வீட்டை அடைய, பின்னால் வந்த திருமதி கீதா சாம்பசிவம், திருமதி ஆதி வெங்கட், செல்வி ரோஷிணி அனைவரும் இணைந்து சென்றோம். ஏற்கெனவே வந்திருந்த திரு ரிஷபன் சாருடன் இணைந்து மாமி எங்களை அன்புடன் வரவேற்றார்.

திரு கோபு சாரும், கீதா மாமியும் கொடுத்த இனிப்புகளை சாப்பிட்டுக் கொண்டே அனைவரும் பொதுவாக பேசிக் கொண்டிருக்க, ஆரம்பித்தது Speech Session! அவரவரைப் பற்றிய அறிமுகம்....வீடு, குடும்பம் இப்படி பொதுவான பேச்சுக்கள்! திரு ரிஷபன் சார்  மிக அமைதியாக இருந்தார்.....நிறைகுடம் தளும்பாதே! அவ்வப்போது நகைச்சுவை கமெண்ட்டுகளை மட்டுமே அவர் வாயிலிருந்து உதிர்ந்தது!! திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தியும், திரு மாலி அவர்களும் வந்தனர். திரு மாலி அவர்கள் ஒரு அஷ்டாவதானி என்பதைக் கேட்டபோது, அவர் திறமை ஆச்சரியப் படுத்தியது.

பதிவர் சந்திப்புக்கு பிள்ளையார் சுழி போட்ட ரஞ்சனி அவர் துணைவருடன் வர, அங்கு உற்சாகம் களைகட்டியது! ரஞ்சனியுடன் ஃ போனிலும், ஈமெயில் மூலமுமே பேசியதுண்டு. அவரை நேரில் பார்த்தது மிக  சந்தோஷமாக இருந்தது. எனக்கு அங்கிருந்த அனைவருமே புதியவர்கள். ருக்மணி மாமிக்கு  அனைவரும் தம்பதியாக வரவில்லையே என்ற  வருத்தம். 
திருமதி ரஞ்சனி ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்து அறிந்து கொண்டார். அடுத்த பதிவர் சந்திப்பிற்கு தன் வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார் திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி. சோலை போன்ற தோட்டத்துடன் இருக்கும் அவரது வீட்டுக்கு, கண்டிப்பாக சென்று ரசிக்க வேண்டும். அவர் மயில், பாம்பு எல்லாம் கூட வளர்ப்பதாக கூடுதல் தகவல் தந்தார் திரு ரிஷபன் சார்! கோபு சார்....அடுத்த சந்திப்பை திரு ராமமூர்த்தி சார் வீட்டில் அரேஞ்ச் பண்ணிடுங்கோ!!
அடுத்து கைக்கும், கண்ணுக்குமான Photo Session !பெண் பதிவர்களான நாங்களே மெஜாரிட்டியாக இருக்க, அனைவரையும்  புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார் நம் புகைப்படக் கலைஞர் திரு கோபு சார்!! அவருக்கு உதவியாக திரு தமிழ் இளங்கோ சார்!! எனக்கு புகைப் படங்களை எடுத்து உதவிய ரோஷிணிக் குட்டிக்கு தேங்க்ஸ்! 

ரோஷிணி எடுத்த புகைப்படம்...

திருமதி ரஞ்சனியின் விவேகானந்தர், மலாலா, திரு ராமமூர்த்தி அவர்களின் ஆரண்ய நிவாஸ், ருக்மணி மாமியின் திருவள்ளுவர் போன்ற சிறப்பான புத்தகங்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டோம் அனைவரும்.
செவிக்குணவு ஆயிற்று... வயிற்றுக்குணவு! .அடுத்து கைக்கும், வாய்க்குமான Food Session! ஆஹா..மாமி மிக அருமையாக இட்லி, போண்டா, ஸ்வீட், சாம்பார், சட்னி என்று பரிமாற, வயிறும் நிறைந்தது; மனமும் மகிழ்ந்தது. விடைபெறும்போது மாமி கொடுத்த தாம்பூலத்தைப் பெற்றுக் கொண்டோம்.






நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு.
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கேற்ப, படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலினைப் போல, அறிவுடையாருடன்  நட்பு கொள்வது பழகப் பழக மகிழ்ச்சி தரும் அன்றோ? 

அன்றைய நல்ல  மாலைப் பொழுது, அன்பான மனிதர்களுடன், இனிமையான சந்திப்புடன், இன்பமான வார்த்தைகளுடன் இனிதே முடிவுற இணையத்தால்  இணைந்த நண்பர்கள் எங்கள் இல்லம் நோக்கிப் புறப்பட்டோம்.
 

No comments:

Post a Comment