Thursday, 9 January 2014

ஆஹா...குளிர் விட்டுப் போச்சு!

அப்பப்பா...என்ன  குளிர்! வெளியில்  தலை  காட்டினாலே   குளிர் பல்லைக் கிட்டுகிறது! பனிப் பொழிவு  அழகோ அழகுதான்! சன்னல் வழியே பார்க்கும்போது! நம் நாட்டில்  மார்கழிக்  குளிருக்கே  இழுத்துப்  போர்த்தி  தூங்கும்  நமக்கு  இந்த  நாட்டுக்  குளிர்  எப்படி  தாங்கும்? ஆம்...நான்  இப்பொழுது  இருப்பது  ஜெர்மனியில்  என்  மகன்  வீட்டில்! மைனசில்  இருக்கும்  இந்தக்  குளிர்  இங்குள்ளவர்களுக்கு  பழக்கமான  விஷயம். சின்னக்  குழந்தைகள்  கூட  அனாயாசமாக  அதற்கான  ஆடைகளை  அணிந்துகொண்டு  வெளியில்  செல்லுகிறார்கள். நமக்கு  அந்த  ஆடைகளே  தொல்லையாக  இருக்கிறதே! ஒண்ணா ,  ரெண்டா? கிட்டத்தட்ட  அரை  டஜனுக்கு மேல் ஆடைகள்!உள்ளே  இன்னர்,  மேலே  ஜீன்ஸ்  பேன்ட், ஸ்வெட்டர், அதன்மேல் கோட், ஷால்,  தலைக்கு  கேப், கைகளுக்கு  கிளவுஸ், காலுக்கு  முழங்கால்  வரை  ஷூ...இதுவே  ஒரு  5 கிலோக்கு  மேல  இருக்கும்  போலருக்கு! இவற்றை  அணிய  ஒருமணி  நேரம்! வந்து  அவிழ்க்க  ஒரு  மணி...வெளியில்  கிளம்பவே  சோம்பலாகத்தான்  இருக்கு!
இந்தக்  குளிரிலும்  வாக்கிங்  செல்கிறார்கள் இந்நாட்டு  முதியவர்கள்!  நடக்கும்வேகத்தைப்பார்க்கணுமே..
.அப்படி  விரைவாக  நடந்தால்  குளிர்  தெரியாதாம் !இங்கு  கோடை  காலம்  3  மாதங்கள்.  அச்சமயம்  மிகக்  குறை...ந்த(!)  ஆடைகளோடு  செல்பவர்கள், குளிரில்  முகம்  மட்டுமே  தெரிய  அணிகிறார்கள்! தினம்  ஒரு  சூப்,  தினுசு  தினுசான  பிரட்,  ஆயத்த  உணவுகள்  என்று  சமையலில்  அதிக  நேரம்  செலவிடாத  ஈசியான  சாப்பாடு! காரம் என்றாலே ஒரு காதம் அல்ல, 10 காதத்துக்கு ஓடுகிறார்கள்!! தெரிந்தவர்  என்று  இல்லாமல்  யாரைப்  பார்த்தாலும்   ஒரு  புன்முறுவலுடன்  கூடிய  ஹலோ! (வலியப்  போய்  பேசினாலும்  முகம்  திருப்பிக்  கொள்ளும் நம்மவர்களின்  நினைவு  வந்தது) வெள்ளை  உடலைப்  போன்றே  வெள்ளந்தியான  மனசும்  உண்டாம்  அவர்களுக்கு ! இது  என்  மகன்  சொன்னது! அவர்களைப்  போலவே  இங்கு   காய்கறிகள்,  பழங்கள்,  வீட்டு  மேல்தளங்கள், ஏன்  சாலைகள் கூட  பளபளக்கின்றன! மாசில்லாத சூழல்!ஆனால்  பாவம்  செடிகளும், மரங்களும்தான்  இலைகளை  உதிர்த்து  மொட்டையாக  நிற்கின்றன. 

இவற்றை எல்லாம்  பார்த்த  எனக்கு  மனதில்  தோன்றிய  எண்ணம்  இது...

தாங்க  முடியாத  குளிரில் 
மனிதன்  பல  ஆடைகளை  அணிகிறான்:
மரங்கள்  தம்  இலைகளைக்  களைகின்றன.

No comments:

Post a Comment