மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதை சொன்ன கண்ணன்!
மார்கழி மாதமே மேலுலக கடவுளர்கள் பூமிக்கு வரும் காலமாகக் கூறப் படுகிறது.
அதனால்தான் மார்கழி மாதம் இறைவனைப் பாடவும், பூஜைகளை செய்யவும்,ஆலய
வழிபாட்டிற்கும் சிறந்த மாதமாகப் போற்றப்படுகிறது. வாசலில் விடிகாலையில்
கோலங்கள் போடுவதும், விளக்கேற்றி வைப்பதும் பூமிக்கு வரும் தேவர்களை
வரவேற்கவே.அதனாலேயே எல்லா இடங்களிலும் பாட்டுக் கச்சேரிகள், காலை
வேளைகளில் பஜனைகள், கதாகாலட்சேபங்கள், நடனம், நாடகம் என்று முத்தமிழையும்வளர்க்கும்மாதமாகவும்விளங்குகிறது.சென்னையின் டிசம்பர் மாதக் கச்சேரிகள்
உலகப் புகழ்பெற்றவை.
சின்ன வயதில் நாங்கள் சென்னையில் இருந்தசமயம் எனக்கு பாட்டு
கற்றுக் கொடுத்ததுடன் என் பெற்றோர் இதுபோன்ற கச்சேரிகளுக்கும், நிறைய
அழைத்துச் செல்வார்கள். நான் எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த சபாவில்
தியாகராஜ உத்சவம், ஸ்ரீராமநவமி சமயம் பக்க வாத்தியங்களோடு பாடியதுண்டு.
ஒரு சிறந்த கர்நாடக இசைப் பாடகியாக வேண்டும் என்ற என் ஆசை, அதன்பின்
திருமணம், குழந்தைகள், வெளிமாநில வாசம்...இவற்றால் கனவாகி,அதன்பின் பாடும்
வாய்ப்பும் குறைந்து போயிற்று. இன்றும் பாடகிகளைப் பார்க்கும்போது அந்த
ஏக்கம் என் அடி மனதில் எட்டிப் பார்ப்பதைத் தடுக்க முடியவில்லை! ஆனால்
கேசட்டுகள், சி.டிக்களில் பாட்டு கேட்டு அந்த ஆசையை ஓரளவு தீர்த்துக்
கொள்வேன்! வட மாநிலங்களில் வசித்தபோது நம் கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கு
எங்கு போவது?மும்பையில் இருந்த சமயம் அங்கிருந்த சபாக்களில் உறுப்பினர்
ஆகி, அவ்வப்போது கச்சேரிகள் கேட்க வாய்ப்பு கிடைத்தது. ஒருவாறாக 40
வருடங்களுக்கு பின்பு திரும்ப சென்னை வாசம். டி.வியில் சேனல்களில்
ஒளிபரப்பாகும் கச்சேரிகளைப் பார்த்து மகிழ்ந்த எனக்கு, இனி சென்னையில்
நேரேயே போய்ப் பார்க்கலாம் என்ற பயங்கர சந்தோஷம்!
இன்னும் சில சபாக்களில் டிக்கட் வாங்கச் சென்றால் , கடைசி வரிசைதான் இருக்கிறது என்றார்கள்! ஒரு மாதம் முன்பே ரிசர்வ் ஆகி விட்டதாம்.பல சபாக்களில் கேண்டீன் மெனுக்களையும், அங்குள்ள கூட்டத்தையும் பார்த்தால் இவர்கள் பாட்டுக்காக வந்தவர்களா சாப்பாட்டுக்காக வந்தவர்களா என்று சந்தேகமாக இருக்கிறது!!
சென்னையில் இந்த சீசனில் இலவச கச்சேரி, கதை,
நடனம்,நாடகம் என்று நிறைய நடக்கிறது. வி.ஐ.பிக்களுக்கும், சபா
உறுப்பினர்களுக்குமே பாதி இடத்திற்கு மேல் நிரம்பி விடுகிறதாம்!அதனால்
எல்லாவற்றிற்கும் நெரிசல்தான்!.கிருஷ்ண கான சபாவில் விடிகாலை ஆறு மணிக்கு
ஆரம்பிக்கும் ஸ்ரீவிட்டல்தாசின் நாம பஜனைக்கு 41/2 மணி முதலே சபாவில்
ஆஜராகி விடுகிறார்கள்! தற்காலத்தில் பக்தி அதிகமாகிவிட்டதைப் புரிந்து
கொள்ள முடிகிறது.சென்ற ஆண்டு சென்னையின் எல்லா சபாவுக்கும்(கணவரின்
திட்டோடுதான்!) போய் கச்சேரி, கதை, டான்ஸ் என்று ரசித்து விட்டேன்.பொறுமை
இழந்த என் கணவர் 'இனி கச்சேரிக்கு போற வேலையெல்லாம்
வேண்டாம். பேசாமல் டி.வில பாரு...இல்ல ஆன்லைன்ல கேளு' என்று
சொல்லிவிட்டார். உடனே என் பிள்ளையும் ஒரு ஐ பேடை வாங்கிக் கொடுத்து 'இதில்
நிம்மதியாக எல்லாத்தையும் ரசிச்சுக்கோம்மா' என்று சொல்லிவிட்டான்!
இந்த வருடம் நாங்கள் இருப்பது ஜெர்மனியில் என் மூத்த மகன்
வீட்டில். இப்போ ஆன்லைனில் இந்த வருடக் கச்சேரிகள் மட்டுமில்லை,
திரு.செம்பை,திரு மதுரைமணி, திருமதி.எம்.எஸ், எம்.எல்.வசந்தகுமாரி போன்ற
அந்நாளைய பெரிய இசை மேதைகளோடு, இன்றைய இசைக் கலைஞர்கள் கச்சேரி, நாம
சங்கீர்த்தனம், கதை என்று அமர்க்களமாகக் கேட்க முடிகிறது. இன்றைய விஞ்ஞான
முன்னேற்றத்தின் பலன்தானே இது?தொலைக் காட்சியின் அத்தனை நிகழ்ச்சிகளையும்
நம் வீட்டு வரவேற்பறையில் மட்டுமல்ல, சாப்பாட்டு அறை , சமையலறையில் கூட
ஐபேட், ஐ ஃபோன், மொபைல் மூலம் கேட்க முடிகிறதே?! இப்பல்லாம் நானும்
சமைத்துக் கொண்டே, சாப்பிட்டுக் கொண்டே, வீட்டு வேலைகளை செய்து கொண்டே
இசையை ரசிக்கிறேன். இன்றைய விஞ்ஞான தொழில்நுட்பத்திற்கு ஒரு ஜே!
No comments:
Post a Comment