Monday, 17 March 2014

"பதிவுலக பிதாமகர் திரு கோபு சார் அவர்களது தளத்தில் எனக்கு கிடைத்த பரிசு...!"




பல வித்யாசமான,விறுவிறுப்பான,விதவிதமான பதிவுகளை எழுதி பதிவுலகத்தை தன்பால் ஈர்த்து, அதில் போட்டிகளும் வைத்து வென்றவர்களுக்கு கைநிறைய பரிசு கொடுத்து மகிழும் பதிவுலக ஜாம்பவான் திரு கோபு  சார் அவர்களது தளத்தில் நான் எழுதிய  விமரிசனத்திற்கு இரண்டாம் பரிசு கிடைத்ததை மிக்க பெருமையுடன் எண்ணி மகிழ்கிறேன்.

அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கதையின் பெயர் 'ஆப்பிள் கன்னங்களும்.... அபூர்வ எண்ணங்களும்....!'
கதையின் இணைப்பு இதோ

என்னுடைய இரண்டாம் பரிசு பெற்ற விமரிசனம்



இது ஒரு கிளுகிளு காதல் கதை!




ஆனால் ஒருதலைக் காதல் கதை!




ஒரு பெண் யதார்த்தமாகப் பழகுவது அவளது  நல்ல மனம்! 




அதை அவளுடன் பழகும் ஆண்  காதலாக 
எடுத்துக் கொள்வது அவனுடைய  இயல்பு குணம் !




என்னதான் ’அண்ணன்-தங்கை’  என்று நினைத்துப் பழகினாலும் இத்தனை 'டா'க்களா? ! அது கொஞ்சம் ஓவராகவே தெரிகிறது!


சின்ன வயதில் பழகும் குழந்தைகளுக்குள் ஆண் ,பெண் என்ற பேதமோ, வித்தியாசமோ தெரிவதில்லை. வளர்ந்த பின்பே மனம் களங்கப்படுகிறது.
இருவரும் பிறந்தது முதலே ஒன்றாகப் பழகியதால் ஜெயஸ்ரீ விகல்பமில்லாமல் பழகுகிறாள்.  

அவள் மனம் சுத்தமாகத்தான் இருக்கிறது.


ஏன்..சீமாச்சுவின் மனதிலும் காதல் தோன்றவில்லை, அவள் உள்பாவாடைக்கு நாடா கோர்த்துத் தரும்வரை! ஒரு நல்ல நண்பனாக, சகோதரனாகத்தான்  இருக்கிறான்.



சிறு வயதில் நோஞ்சானாக இருந்த ஜெயஸ்ரீ வயதுக்கு வந்ததும் பளபளவென மெருகேறி ஜொலித்ததை ஆசிரியர் அழகாக வர்ணித்திருக்கிறார்! 


பருவம் அடைவதைப் பற்றி ஒன்றும் அறியாத அப்பாவியான சீமாச்சு ..... பாவம்! அவனுக்கு அதைப் பற்றிச் சொல்ல யாரும் இல்லை. பொதுவாக அந்தக் காலத்தில் எந்த பையனுக்கும் இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.



நோஞ்சானாக அவள் இருந்தபோது ஈர்க்கப்படாத அவன் மனம் அவள் 'பளபள, தளதள' என்று  ஆனதும் காதல் வயப்பட  ஆரம்பித்த வாலிப உணர்வை பாயிண்ட், பாயிண்டாக எழுதியிருக்கிறார் கதாசிரியர்!


'ஆப்பிள் போன்ற கன்னங்கள், அங்கங்கே  மேடுபள்ளங்கள்' என ஒரு இளம்பெண்ணின் அங்க அழகை சாண்டில்யன் போல இளமை ததும்ப  விவரித்திருக்கிறார் ஆசிரியர்!


ஜிகினாஸ்ரீயின் அழகை அப்படியே கண்ணில் பார்த்து மனதில் பதித்து, அங்க லாவண்யங்களை வரைந்த  சீமாச்சு, நறுக்கிய  ஆப்பிளை அவள் படத்தின் கன்னத்தில் வைத்து கடித்து சாப்பிட்டதை அவனது காதலுடனான காமத்தை வெளிப்படுத்துவதை ரசமாக விவரித்திருக்கிறார் கதாசிரியர்!



சீமாச்சுவுக்கே தன்  தகுதிக்கு அவள் தன்னைக் காதலிப்பாளா என்ற சந்தேகம் ஏற்பட்டு, அவளைத் தன்னைக் காதலிக்கத் தூண்டவே அவளைப் படமாய் வரைந்தான். ஆனால் அதற்குள் அவள் திருமணம் நிச்சயமாகிவிட்டதே? அவன் இந்த விஷயத்தை ஜெயஸ்ரீயிடம் சொல்லியிருந்தால் அவள் அவனை விட்டு விலகியிருப்பாள்.



தையல்காரர் சொன்ன அவளுடைய காதலன் விஷயம், அவளோடு கூடவே இருக்கும் சீமாச்சுவுக்கு தெரியாதது வியப்பாக உள்ளது. எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளும் ஜெயஸ்ரீ சுரேஷ் பற்றியும், தன்  திருமணம் பற்றியும் சொல்ல மறந்து விட்டாளா அல்லது சொல்ல விரும்பவில்லையோ? சீமாச்சு மனதில் அவள்மேல் காதல் இருக்கும் என்பதை அவள் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை என்பது அவளது  நல்ல மனத்தைக் காட்டுகிறது.



அவளுக்கு தன்மேல் ஈடுபாடு   இல்லை என்பதைத் தெரிந்துகொண்டதாலேயே அவனுக்கு தான் வரைந்த படத்தை அவளிடம் கொடுக்க முடியவில்லை. ஆனால் அவனைத் தவறாக நினைக்காத ஜிகினாஸ்ரீ அனைவரிடமும் அவன் திறமையைப் புகழ்ந்ததுடன், சுரேஷிடமும் அவனைப் பற்றி உயர்வாகச் சொல்லியிருக்கிறாள்.



சீமாச்சுவை திருமணம் முடியும்வரை தன்னுடன் இருந்து உதவி செய்ய வேண்டும் என்றும், நீதான் என்னுடைய சகோதரன் என்றும் ஜிகினாஸ்ரீ சொன்னது அவள் அவனிடம் கொண்டிருந்த பரிசுத்தமான அன்பையே காட்டுகிறது. 



ஆணி சீமாச்சுவின் நெற்றியில் பட்டு வலித்தபோது, தன்  காதல் நிறைவேறாமல் போனதால் ஏற்பட்ட வலியை உணர்ந்தான் என்பதையும், வாஷ் பேசினில் கை அலம்பியதோடு, அவள் மேலிருந்த ஆசை, காதலையும் சேர்த்து அலம்பி விட்டதையும்  ஆசிரியர் சிம்பாலிக்காக எழுதியுள்ளார்!




ஒரு பெண் ஆணுடன் பழகும்போது களங்கமில்லாமல், சுத்தமான மனதுடன்தான் பழகுகிறாள். அவள் கொஞ்சம் உரிமை எடுத்துப் பழகினால், இயல்பான இனக்கவர்ச்சியால் ஒரு ஆண்தான் முதலில் காதல் வயப் படுகிறான்.

அவளை தன்  சகோதரி போன்றோ, தோழி போன்றோ எண்ணாமல், அந்தப் பெண் தன்னைப் பற்றி எப்படி நினைக்கிறாள் என்பதைப்பற்றியும் யோசிக்காமல் அவள் உடன் பிறந்த பாசத்துடன் பழகினாலும், அவளைக் கட்டாயப்படுத்தி தன்னைக் காதலிக்கத் தூண்டும் பல திரைக் கதைகளை நாம் காண்கிறோம். 


பிடிக்காத பெண்ணின் பின்னாலேயே துரத்தி, துரத்தி அவள் நிலையைப் பற்றி சற்றும் எண்ணாமல் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் கதாநாயகர்கள்தான் இன்று சினிமாவில் அதிகம். அந்தப் பெண் நிறையப் படித்திருப்பாள், பணக்காரியாக இருப்பாள்... ஆனால் இவனோ படிப்பறிவில்லாமலோ, தாதாவாகவோ வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பான். அதுதான் உண்மையான காதல் என்று முடியும் திரைப்படம்!


இந்தக் கதையிலும் ஜிகினாஸ்ரீ சீமாச்சுவிடம் வித்யாசமே இல்லாமல் பழகியதைக் காதல் என்று எடுத்துக் கொண்டு அவளைக் காதலித்த சீமாச்சு பாவம்.... ஒரு அப்பாவி! அவனுக்கு ஒரு நல்ல பெண் மனைவியாக அமையவும், ஜிகினா...இல்லை...ஜெயஸ்ரீயும்,சுரேஷும் மணம் முடித்து நீண்ட நாள் நல்வாழ்வு வாழவும் வாழ்த்துக்கள்!



கதையின் ஆரம்பத்தில்  காணப்படும் குண்டு ஆப்பிளும்,கொழுகொழு கன்ன குட்டியும் சூப்பர்!!






9 comments:

  1. அருமையான விமர்சனம்
    பரிசு பெற்றமைக்கும் தொடர்ந்து பெறவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இதே போட்டிகளில் தொடர்ந்து வாராவாரம் கலந்துகொண்டு மேலும் மேலும் பரிசுகள் பல வென்றெடுக்க இதுவே முதல் அடியாக [First Step] அமையட்டும்.

    இதனைத் தங்களின் இந்தத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு எனக்கும் என் வலைப்பதிவுக்கும் பெருமை சேர்த்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்.

    முதல் வேலையாக தங்கள் பதிவுகளில் உள்ள WORD VERIFICATION என்ற நந்தியை உடனடியாக நீக்கி விடவும். இது இருந்தால், பின்னூட்டமிட்டு கருத்தளிக்க வருவோருக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும். யாரும் வரவும் மாட்டார்கள்.

    பிரியமுள்ள கோபு [VGK]

    { சாதாரணமானவன் மட்டுமே }

    ReplyDelete
  3. http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-02-03-second-prize-winners.html

    திருமதி ராதா பாலு அவர்கள் ’சிறுகதை விமர்சனப்போட்டியில்’ வெற்றி பெற்றுள்ள அறிவிப்பு மிகச்சிறப்பான முறையில் மேற்படி இணைப்பினில் வெளியிடப்பட்டுள்ளது.

    காணத்தவறாதீர்கள் !

    வாராவாரம் நடைபெறும் போட்டிகளில் அனைவரும் கலந்துகொள்ள மறவாதீர்கள் !!

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  4. விமர்சனம் அருமை...

    வாழ்த்துக்கள்... தொடருங்கள்...

    ReplyDelete
  5. திரு ரமணி சார்...தங்களின் பாராட்டுக்கு நன்றி. உங்களின் அற்புதமான எழுத்துக்களுக்கு முன்னால் என் விமரிசனம் ஒன்றுமே இல்லை. இருப்பினும் திரு கோபு சார் தளத்தில் தங்களைப் போன்ற மிகப் பெரிய,சிறப்பான பதிவர்களுக்கிடையில் எனக்கும் இந்த பரிசு கிடைத்ததை எண்ணி மிக்க மகிழ்வடைகிறேன்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. திரு கோபு சார் அவர்களுக்கு

    பாராட்டுக்கு மிக்க நன்றி.

    "இதே போட்டிகளில் தொடர்ந்து வாராவாரம் கலந்துகொண்டு மேலும் மேலும் பரிசுகள் பல வென்றெடுக்க இதுவே முதல் அடியாக [First Step] அமையட்டும்".

    தங்களின் வாழ்த்துக்கு மீண்டும் நன்றி.

    "இதனைத் தங்களின் இந்தத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு எனக்கும் என் வலைப்பதிவுக்கும் பெருமை சேர்த்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்."

    தங்கள் வலைப் பதிவில் பரிசு பெற்றதால் என் தளத்திற்குதான் பெருமை!

    "முதல் வேலையாக தங்கள் பதிவுகளில் உள்ள WORD VERIFICATION என்ற நந்தியை உடனடியாக நீக்கி விடவும். இது இருந்தால், பின்னூட்டமிட்டு கருத்தளிக்க வருவோருக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும். யாரும் வரவும் மாட்டார்கள்."

    நீங்கள் போனமுறை சொன்னபோதே எடுத்துவிட்டேன் சார்....இன்னும் எப்படி இந்த பிரச்னை?எனக்கு புரியவில்லை.

    ReplyDelete
  8. திரு தனபாலன்...தங்களின் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete