Sunday 23 March 2014

ஆஹா...முதல் பரிசு!

பதிவுலக ஜாம்பவான் திரு கோபு சார் அவர்களின் அமுதைப் பொழியும் நிலவே கதைக்கான  விமரிசனத்துக்கு எனக்குக் கிடைத்த நம்பமுடியாத முதல் பரிசு!
கதைக்கான இணைப்பு
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html
என் விமரிசனத்துக்கான இணைப்பு

http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08-01-03-first-prize-winners.html#comment-form


அமுதைப் பொழியும் நிலவே...


அலுவலக விடுமுறையை ஒரு அருமையான தொடர் பேருந்தில் அமர்ந்து பகல்  கனவுடன் அனுபவிக்கும் ஒரு சராசரி மனிதரின் நிலையை அழகாக,ரசனையோடு கதாசிரியர் விளக்கியவிதம் அருமை.

ஒரு ஆண்  அலுவலகம் விடுமுறை என்றதும்  வீட்டில் மின்சாரமும் இருக்காது என்பதால் ஜாலியாக பஸ் சவாரி செய்யமுடிகிறது. அதே ஒரு பெண் இப்படி சொல்ல முடியுமா? அல்லது செல்ல முடியுமா?

எத்தனை வயதானாலும் சில சின்னச்சின்ன  ஆசைகள் அனைவருக்குமே இருக்கும் என்பதை ஹீரோவின் தொடர் பேருந்து பயண ஆசையாகக் கூறுகிறார் ஆசிரியர்.


தொடர் பேருந்துக்கு ஆசிரியர் கொடுத்த விளக்கங்கள் சற்றே முகச் சுளிப்பை ஏற்படுத்தினாலும், ரசிக்க வைத்தது.

கதாநாயகனின்  நீண்டகால  ஆசையை நிறைவேற்ற, அழகாக பேருந்து வந்து பக்கத்தில் நின்றால் பழம் நழுவிப் பாலில் விழுந்த கதைதானே! சட்டென்று ஏறி பட்டென்று ஒரு இருக்கையைப் பிடித்து விட்ட  நாயகன் காற்று வாங்க ஏறிக் கண்ணயர்ந்து ஒரு கவிதை நடையில் கனவும் கண்டு... அதை நமக்கு கச்சிதமாகச் சொல்லிவிட்டார் கதாசிரியர்!

பேருந்து பயணம் ஒரு இனிமையான அனுபவம்தான்  கூட்டமோ, தள்ளுமுள்ளோ இல்லாவிட்டால்.அந்தப் பயண நேரத்தில் நாம் பலரின் பேச்சு, செய்கைகள் இவை காணவும்,கேட்கவும் சுவையானவை. அதிலும் மொபைலில் சிலர் சத்தமாகப் பேசும்போது அவர்கள் வீட்டு விஷ யம்,வியாபார விஷ யம்,அலுவலக விஷ யம் என்று அத்தனையும் தெரிந்து கொள்ளலாம்.

பேருந்தில் ஏறும் சில காதல்,புது கல்யாண ஜோடிகளின் நெருக்கங்கள் நம்மை  நெளிய வைக்கும்! அதிலும் மல்லிகை மணக்க ஏறிய மயக்கம் தரும் சின்னப் பெண்களைக் கண்ட நம் கதாநாயகரும் பாவம்...அந்த நினைவிலேயே உறங்கிவிட்டார்! மனித மனத்தின் எண்ணங்கள்தான் கனவாக வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் நம் கதாநாயகனும்  ஒரு பெண் நம் பக்கத்தில் உட்கார்ந்து நம்முடன் பேசிக் கொண்டே வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியிருப்பார் போலும்!

குளிர்ந்த அமுதைப் பொழியும் வான்மதியாக ஒரு பெண் அருகில் வந்து உட்கார்ந்து இரண்டு வார்த்தைகள் பேசினாலே போதுமே, ஆண்களின் ஆசை மனம் அவளைத் திருமணம் செய்துகொண்டு ஹனிமூனுக்கே சென்றுவிடுவார்கள்! இது சராசரி  ஆண்களின் உள்மனம்.
அழைப்புக் கடிதத்தில் அவள் பெயரையும், வயதையும் பார்த்து அவளுக்கு கனிந்த பருவம்,அழகிய உருவம்,அரைத்த சந்தன நிறம், மிடுக்கான உடை, துடுக்கான பார்வை....மனத்துக்குள் அவளை வர்ணித்து அப்படியே பதிந்து கொண்டுவிட்டான் நம் ஹீரோ! கனவில் தோன்றும் கற்பனை எண்ணங்கள் இந்தக் கதைக்கு களமாக இருந்து கனம் சேர்க்கின்றன.

'காதல் பெண்ணின் கடைக்கண் பார்வையில் காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்' என்று மகாகவியே கூறியிருக்க, சாதாரண ஆண்மகன் எம்மாத்திரம்?

எழிலான பெண் ஒருத்தி அழகு தேவதையாக அருகில் அமர்ந்து வளைந்து,குழைந்து பேசினால் அந்த ஆண் கற்பனைக் குதிரையில் ஏறி ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்து விடுவானே! அதைத்தான் நம் கதாநாயகனும் செய்கிறான்! அமுதா போக வேண்டிய இடத்துக்கு ஆட்டோவில் என்ன,அவளை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு போகக் கூட தயார் நம் கதாநாயகன்!
ஒரு ஆண்  ஒரு அழகிய இளம் பெண்ணைக் கனவில் கண்டாலும்  எப்படியெல்லாம் கற்பனை செய்து அவளைக்  கண  நேரத்தில் காதலித்து கல்யாணம் செய்து கொள்வதுவரை யோசித்து விடுகிறான் என்பதை ஆசிரியர் அருமையாகக் கூறியுள்ளார்.

தன்னுடைய வீட்டு விலாசம், செல் நம்பரோடு தானும் அவளுடைய கைப்பையில் புகுந்து கொண்டான் என்பதைக்  கூறிய ஆசிரியர், பாடல் வரிகளைக் கூட அவன் தனக்கு சாதகமாக்கிக் கொண்டதாகக் கூறுவது சுவாரசியமான கற்பனை!

இதுவரை முன்பின் தெரியாத ஒரு பெண்,வெல்டிங் பற்றி ட்ரைனிங் எடுக்க வந்திருப்பவளை வெட்டிங் பண்ணிக் கொள்ளலாமா  என்று ஆசைப்படும் ஆண்மனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்!

ஒரு அழகு தேவதையை அருகில் அமர்த்தி இத்தனை நேரம் ஆராதித்த நம் கதாநாயகனின் அருகில் 'இதோ வந்திட்டேன்யா'என்று சொல்லாமல் சொல்லி அமர்ந்தவளோ வாழ்ந்து முடித்து இன்று அங்கம் தளர்ந்த ஆச்சி அமுதா! 


பளபள அமுதாவை பகல் கனவில் கண்ட கதாநாயகனுக்கு அருகில் பல்லெல்லாம் போன அமுதாபாட்டி உட்கார்ந்தால் எப்படி ரசிக்க முடியும்? இந்த அமுதாவும் ஒருகாலத்தில் அழகாகத்தானே இருந்திருப்பாள்?  இவளைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள எத்தனை பேர் வரிசையில் இருந்தார்களோ? யாருக்குத் தெரியும்?

'அமுதும்,தேனும் எதற்கு?நீ அருகினில் இருக்கையிலே எனக்கு?' என்று அழகி அமுதா பக்கத்தில் இருந்த போது 'லாலாலா' பாடிய  மனது, அவளுக்காக எதையும் செய்யத் தயாராயிருந்த கதாநாயகனின் காதல் மனம், கிழவி அமுதா கட்டி அணைக்காத குறையாக மேலே இடித்தபோதும்,லுக் விட்டபோதும், பாவம் வெறுத்து போயிருக்கும்! 
இளமை சாசுவதமல்ல ...ஒரு நாள் முதுமை வந்தே தீரும். இளமையின் அழகை ரசிக்கும் நம்மால் முதுமையை ரசிக்க என்ன,சகித்துக் கொள்ளக்கூட முடியவில்லை. ஏன் அவள் பெயரை அமுதா என்று கூவிய பெண்ணின் குரல் கூட நம் கதாநாயகனுக்கு கர்ண கடூரமாக கேட்கிறதே! இதுதான் மனித மனத்தின் விகாரம்.

கற்பனையிலும் ,கனவிலும் நமக்குப் பிடித்தது கிட்டும்: ஆனால் நடைமுறை யதார்த்தம்தான் உண்மையானது: மாறாதது.

அமுதா என்ற ஒரு சின்னப் புள்ளியை வைத்து விட்டு அதைச் சுற்றி இம்மி பிசகாமல், வளையாமல்,கோணலில்லாமல் ஒரு அழகிய நிலவு போன்ற வட்டமான வண்ணக் கோலத்தை வடிவமைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்!

கதையுடன் சேர்ந்த ஒளிப்படக் காட்சிகள் கதைக்கு மேலும் சுவாரசியம் சேர்க்கின்றன. இரண்டு ஸ்மைலிகள்  காதலித்துக் கொண்டிருப்பது அழகான காட்சி!
 
 
 






No comments:

Post a Comment