ஏப்ரல் ஐந்தாம் நாள் என் வாழ்வில் மிக
முக்கியமான நாள்...என் திருமணநாள். 1976 ம் ஆண்டு என்னுடைய 19ம் வயதில் இந்த நாளில்தான் நான் திருமதியாக மாறினேன். என் அம்மாவும், அப்பாவும் என்னைப் பிரிய மனமின்றி என்னை திருமணம் செய்து
கொடுத்துவிட்டு கலங்கிய கண்களுடன் நின்றது இன்னும் என் கண்களில் கண்ணீரை
நிறைக்கிறது.
ஏப்ரல்,
5-1976 அன்று
திருமணத்தை ஒரு சந்தோஷத்தின் ஆரம்பமாக எண்ணிய நாட்கள் அவை. கணவன்,
மனைவிக்கு
இடையேயான இன்ப வாழ்வில் 'நாம்தான் ராணி' என்ற நினைவும், கற்பனைகளும் எல்லா மணப்பெண்களுக்கும்
இருக்கும் சகஜமான எண்ணம். 'பிரேமையில் யாவும் மறந்தோம்' என்று ஆகாய வானில் சிறகு விரித்து பறக்க ஆசைப்பட்ட நாட்கள்
அல்லவோ அவை? தாயாக நான் ஏற்றுக் கொண்ட என் மாமியார், அச்சான அந்தக்கால மாமியாராகவே இருந்தது என் துரதிர்ஷ்டம். பொறுமையுடன் வாழ
என்னை நானே பழக்கிக் கொண்டேன்.
பூஞ்சோலையாக கனவு கண்ட வாழ்க்கையில் எத்தனை முட்பாதைகள்? ஆனந்தங்களோடு வேதனைகளும், சமயத்தில் வெறுப்பும், கசப்பும்....நவரசங்களும் வாழ்வில் நர்த்தனம் ஆடிய நாட்கள்...இன்பமும், துன்பமும் கவலைகளும், கஷ்டங்களும், ஏமாற்றங்களும், எதையும் ஏற்கும் மனநிலையும் கொண்டதுதானே
வாழ்க்கை. இன்று நினைக்கும்போது அவற்றால் நான் பெற்ற
அனுபவங்கள் எத்தனை எத்தனை. நல்லவற்றை மட்டுமே ஏற்றுக் கொண்டு, அல்லவற்றை மறக்கவும், குறைகளை தள்ளி நிறைகளை மட்டும் காணவும், ஒவ்வொரு அனுபவத்தையும் என்னை மெருகேற்றிக் கொள்ளும் பாடங்களாகவும் எடுத்துக்
கொண்டேன். இன்றைய இந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்னைப்
பக்குவப் படுத்திய நாட்களாகத்தான் அவற்றை நான் நினைக்கிறேன்.
அன்பான கணவரும், அருமையான குழந்தைகளும் என் வாழ்வை முழுமையாக்கினார்கள். ஈன்ற பொழுதினும்
பெரிதுவக்க வைத்த என் குழந்தைகள் என் பொக்கிஷங்கள். நான்கு குழந்தைகளையும் அவர்கள்
விரும்பிய துறைகளில் சிறப்புற செய்தது, எங்கள் கடமையைச் சரியாகச் செய்தோம் என்ற
மனதிருப்தியைக் கொடுக்கிறது.
எதையும் கேட்பதற்கு முன் செய்து கொடுக்கும் என்
கணவர் எனக்கு கடவுள் கொடுத்த வரம். கோபதாபங்கள்,சண்டை சச்சரவுகள் இல்லாத தாம்பத்தியம் ரசிக்குமா! எங்கள் இடையேயும் இவை
எல்லாம் உண்டு. ஆனால் அவ்வப்போதே எதையும் பேசித் தீர்த்துக் கொள்வதும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதும் எங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு
ஆதாரம். மெல்லிழையாக மனதில் ஓடும் அன்பு,
பாசம்
இவற்றை அடிநாதமாகக் கொண்ட இனிய சங்கீதம் எங்கள் மணவாழ்வு!
திருமணத்துக்கு முன்பு அப்பாவின் இட
மாற்றத்தால் தமிழகத்தின் பல ஊர்களிலும் இருக்கும் வாய்ப்பு; டில்லியும், மும்பையுமே பெரிய்ய்ய்ய நகரங்களாக எண்ணிக்
கொண்டிருந்த நான் கணவரின் வங்கி வேலையின் மாற்றலால் டில்லி, ஆக்ரா,
மதுரா, கோலாப்பூர், மும்பை என்று பல இடங்களிலும் வசிக்கும்
வாய்ப்பு பெற்றேன். பின் மகன்களுடன் பெங்களுர், சண்டிகர், புவனேஸ்வர், போபால், சென்னை இவற்றில் வாசம். இதனால் பல மொழிகள், கலாசாரம், சமையல் முறைகள் இவற்றை அறியும் வாய்ப்பு
கிடைத்தது.
சின்ன வயதில் ஆனந்த விகடனில் எழுத்தாளர்
மணியனின் பயணக் கட்டுரைகளைப் படித்து பாரிஸ்,
ஸ்விட்சர்லாந்து, லண்டன் போன்ற நாடுகளுக்கு செல்ல ஆசைப்பட்டதுண்டு! அந்த ஆசை நிறைவேறாது என்று
மனதில் நினைத்ததும் உண்டு! ஆனால் அவற்றுடன் இன்னும் பல நாடுகளையும் சென்று கண்டு
களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த என் அன்புக் குழந்தைகளுக்கு நான் நன்றி
சொல்லிக் கொள்கிறேன்.
திருமணத்திற்குப் பின்பு அடுத்தடுத்து
குழந்தைகள், அடிக்கடி ஊர் மாறுதல், குழந்தைகளின் படிப்பு, அவர்களைப் பற்றிய பொறுப்பு, கவலை என்று இறக்கை கட்டிப் பரந்த நாட்களை நான் இன்று திரும்பிப் பார்த்தபோது
பிரமித்து விட்டேன். இத்தனைக்கு நடுவிலும் என்னை அடையாளப் படுத்திக் கொண்ட என் எழுத்துகள் பல பத்திரிகைகளிலும், கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இன்றுவரை
வெளியாகிக் கொண்டிருப்பது என் சிறிய சாதனையாகக் கருதுகிறேன்.
குழந்தைகளுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள்
ஜெர்மனியிலும், சிங்கப்பூரிலும், பெண் மும்பையிலும் அவரவர்கள் செட்டிலாகிவிட, நாங்கள் இரண்டாவது பிள்ளையுடன் சென்னை வாசம்! மூன்று மருமகள்களும், மாப்பிள்ளையும் தங்கமான குணமுள்ளவர்கள். ஏழு பேத்திகளும், ஒரே பேரனுமாக எங்கள் குடும்பம் ரொம்ப பெரிசு!
பொறுப்புகள் முடிந்துவிட்ட நிலையில் வெகுநாளாக
அடிமனதில் இருந்த 'தனிக் குடித்தன' ஆசை தலை தூக்க, என் கணவரிடம் கேட்டேன். பிள்ளையிடமும், மருமகளிடமும் இதைப் பற்றி பேச, அவர்களோ 'இந்த வயதில் தனியாக எப்படி இருப்பீர்கள்?' என்று யோசிக்க, நான் 'இத்தனை நாட்கள் எல்லாருக்காகவும் செய்து
விட்டேன். இனி கொஞ்ச நாள் எங்களுக்காக 'வானப்ரஸ்த' வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறோம்' என்றேன்!
'நீங்கள்
சொல்வது சரிதான்.ஆனால் ஒரு கண்டிஷன். உங்களுக்கு முடியாத போது இங்கு வந்துவிட
வேண்டும்' என்று சொல்ல, நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன்! உடன்
வீடு, கார் என்று அத்தனையும் வாங்கிக் கொடுத்து எங்களை தனிக் குடித்தனம் வைத்த என்
பிள்ளைக்கும், மாட்டுப்பெண்ணுக்கும்தான் நன்றி சொல்ல
வேண்டும்! கடந்த இரண்டு வருடங்களாக எங்களுக்கு பிடித்த திருச்சியில்
வாசம்!
எங்கள் திருமணம் முசிறியில் நடந்து, நான் என் துணைவருடன் வாழ வந்த ஊர் திருச்சி. திருமணம் முடிந்து காரில்
முசிறியிலிருந்து திருச்சி வந்து கொண்டிருந்தபோது, குணசீலம் ஆலயத்தின் அருகில் கார் பழுது
ஆகிவிட்டது.
இக்காலம் போல கால்டேக்சியோ, மொபைல் ஃ போனோ இல்லாத காலமாச்சே? இறைவனை தரிசித்து எங்கள் மணவாழ்வைத் தொடங்க வேண்டும் என்பது பெருமாளின் எண்ணம்
போலும். குணசீலப்பெருமாளை தரிசனம் செய்துவிட்டு, பஸ்ஸில் திருச்சி வந்து சேர்ந்தோம்.
குணசீலம் கோவில் இன்று
நாற்பதாவது மண நாளான இன்று அந்தப் பெருமாளை
தரிசித்துவிட்டு, எங்கள் திருமணம் நடந்த இடத்தையும் பார்த்துவர
ஆசைப் பட்டோம். இத்தனை நாட்களாக நாங்கள் வெளி ஊர்களில் இருந்ததால் இப்படிப்பட்ட
வாய்ப்பும், எண்ணமும் வரவில்லை. என் அப்பா அச்சமயம்
முசிறியில் வங்கியில் வேலைபார்த்து வந்தார்.நாங்கள் குடியிருந்த வீடே பெரிய
சத்திரம் மாதிரி இருந்ததால் அதிலேயே எனக்கு திருமணம் நடந்தது.
எங்கள் திருமண மண்டபம் (வீடு) அன்றும் இன்றும்!!
வீடு இப்போ மாறியிருக்குமோ, அடையாளம் தெரியுமா என்ற
கேள்விகளுடன்
போன எங்களை அன்றிருந்த அதே நிலையில் இன்றும் காட்சி தரும் அந்த வீடு ஆச்சரியப்
படுத்தியது. அந்த வீட்டில் என் பெற்றோர்,
தம்பிகளுடன்
வாழ்ந்த நாட்கள் மனதில் ஓடியது. அந்த வீட்டின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்
கொண்டோம்!
அன்று எங்கள் திருமணத்தில் எங்களை வாழ்த்திய பெரியவர்கள் இன்று இல்லாததை நினைத்து மனம் கலங்கியது. என் அப்பா சென்ற ஆண்டு இதே நாளில் எங்களை விட்டுப் பிரிந்ததை எண்ணி கலங்கி விட்டேன். இந்த சிறப்பான வாழ்க்கையை எனக்கு அமைத்துக் கொடுத்த என் தந்தைக்கும், தாய்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அன்று எங்கள் திருமணத்தில் எங்களை வாழ்த்திய பெரியவர்கள் இன்று இல்லாததை நினைத்து மனம் கலங்கியது. என் அப்பா சென்ற ஆண்டு இதே நாளில் எங்களை விட்டுப் பிரிந்ததை எண்ணி கலங்கி விட்டேன். இந்த சிறப்பான வாழ்க்கையை எனக்கு அமைத்துக் கொடுத்த என் தந்தைக்கும், தாய்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என் நிறைவான வாழ்க்கையில் என்றும் என்னுடைய
எல்லா செயல்களிலும் துணை நிற்கும் இறைவனை சிரம் தாழ்த்தி, இருகரம் கூப்பி வணங்குகிறேன்.
ஆசை அன்பு இழைகளினாலே...
நேசம் என்னும் தறியினிலே ......
நெசவு நெய்தது வாழ்க்கை......
இன்று போல் என்றும் வாழ்க...
ReplyDeleteவாழ்த்துக்கள் பல...
வருகைக்கும், அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்....
ReplyDelete