Thursday, 10 April 2014

பரிசோ பரிசு....இந்த விமரிசனத்திற்கும்!

திரு கோபு சார் அவர்களின் கதைக்கு நான் எழுதிய விமரிசனத்திற்கு இரண்டாம் பரிசு...

கதைக்கான  இணையதள இணைப்பு 

 http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html
என் விமரிசனத்திற்கான இணைப்பு

 http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-02-04-second-prize-winners.html
மறக்க மனம் கூடுதில்லையே!


கதையின் பெயரில்லாத கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்துவிட்டு அதன் பிறகே விமரிசனம் எழுத விரும்புகிறேன்! கதாசிரியர் பொறுத்தருள்க!!
கதாநாயகன்---ராமு
ராமுவைக் காதலித்த மங்கை---சீதா
ராமு காதலித்த அழகி---மைதிலி
ராமுவின் மனைவி--ஜானகி

'மன்மத லீலையை வென்றார் உண்டோ?'...காதல்  இல்லாத மனிதர் இந்த உலகத்தில் உண்டா....அதுவும் ஆண்கள்! எனக்குத் தெரிந்து கல்யாணத்துக்கு முன்னால்  காதல் செய்யாத ஆண் எவரும் இருக்க மாட்டார்! இளமையில் ஏற்படும் கண்மூடித்தனமான காதல்  (infatuation ) கொள்ளாத ஆடவர் மிகக் குறைவு.


சிலருக்கு அந்தக் காதல் வெற்றியடைந்து 'காலமெல்லாம் காதல் வாழ்க' என்று சந்தோஷமாக வாழ்வார். சிலருக்கு அது நடக்காமல் போவதும் உண்டு. இன்னும் சிலருக்கு  அந்த வாழ்க்கை கிடைத்தும் வெற்றி கிடைப்பதில்லை.


மொத்தத்தில் ஒவ்வொரு ஆணுக்கும் 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்'தான்! அதை கருத்தாகக் கொண்ட கதைதான் 'மறக்க மனம் கூடுதில்லையே'


காதலர்கள் கைகோத்து நடக்கும் மெரினாவுக்குச் செல்லும் யாருக்குமே தன்  துணையின் கையைப் பிடித்துக் கொண்டு நீரில் கால் நனைக்கும்  'சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை' இருக்கும். (நானும் அதற்கு விதிவிலக்கல்ல!) நம் கதாநாயகன் ராமுவுக்கும்  அவன்  மனைவி ஜானகிக்கும்  அந்த ஆசை, அதோடு சேர்த்து நாம் இருவரும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் வந்ததால் அவர்கள் மனம் ஒன்றிய இல்வாழ்வு வாழ்வது தெளிவாகிறது.
காரிலிருந்து இறங்கியவளைப் பார்த்த ராமுவுக்கு 'எங்கேயோ பார்த்த முகம்'...'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே '...அது ஏன் என்று தெரிந்துகொள்ள நாமும் 40 வருடம் பின்னோக்கி செல்வோம்.

அந்நாளைய திருச்சியை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் கதாசிரியர். 'அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே' என்று கணபதி ஆட்சி செய்யும் மலைக்கோட்டையைச் சுற்றி அன்று இருந்த பல ஸ்டோர்களின் நிலைமையை மிக அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார். இரவு பத்துமணி வரை கூடி இளைஞர்கள் பேச்சு அந்தத் தெருப் பெண்கள், தாம் பார்த்த பெண்கள், பழகிய பெண்கள், சினிமா கிசுகிசு என்று ஏகப்பட்ட விஷயங்கள் அவர்கள் உரையாடலில் இடம் பிடிக்கும்.


அந்த வீடுகளில் குடியிருக்கும் இளவயசுப் பையன்கள் கொல்லையில் கிணறு,பொதுக் குளியலறை, பொதுக் கழிப்பறைக்குப் போகும்போது எதிரில் வரும் பெண்களை  'அன்ன    நடை சின்ன இடை' , 'நடையா இது நடையா', 'என்ன பார்வை உந்தன் பார்வை' என்று முணுமுணுத்துக் கொண்டே,  நிமிர்ந்து பார்க்காமல் ஓரக்கண்ணால் மட்டுமே பார்த்துச் செல்வதும் . அந்த பருவப் பெண்களும் பார்த்தும் பார்க்காமல் வளைந்து, நெளிந்து,  ஒரு அசட்டுச் சிரிப்புடன் கடந்து போவதும் அந்நாளைய காட்சிகள்! 


அந்நாளைய ஆண்கள் , பெண்கள் எல்லோருக்குமே 'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே' என்ற இந்த அனுபவங்கள் நினைவில் இருக்கும்.அந்த குருவிக் கூண்டு போன்ற ஓட்டு வீடுகள் இன்று வானளாவ உயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உயர்ந்து நிற்கின்றன. அன்றுபோல் இல்லாமல் இன்று சக வயது  இளைஞர்களும், பெண்களும் சகஜமாக ஹாய் ,ஹலோ என்று பேசிக் கொள்கிறார்கள்.


இன்று உச்சிப் பிள்ளையார் மட்டுமே மாறாமல் இருக்கிறார்! அவரும் பாவம் அத்தனை உயரத்தில் அமர்ந்து கொண்டு 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்று தாயுமானவரை வணங்கிக்கொண்டு அம்மா மாதிரி (பார்வதி தேவி!!) ஒரு அம்சமான பெண்ணை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார் போலும்!


வேலை கிடைத்து கையில் காசு வந்த உடனேயே 'மனம் விரும்புதே உன்னை' என்று யாரைப் பார்த்தாலும் காதலிக்கத் தோன்றும் இயல்பான ஆண்மனம்! அதுவும் நிரந்தர வேலை...300 ரூபாய் சம்பளம்...பெரிய தொகைதான் அந்தக் காலத்தில்! தான் ஒரு பெண்ணைக் காதலிக்க, மற்றொருவளோ ராமுவை ஒருதலையாகக் காதலித்திருக்கிறாள்.


'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ' என்பது போல, ராமுவைக் காதலித்தவள் (சீதா)அழகில்லை என்றாலும், பருவ வயதிற்கேற்ற பதமான பக்குவத்தில் பளபளப்பாக இருந்தாள்! ஆஹா...என்ன ரசனையாக  ஒரு பெண்ணின் அழகை நான்கு வார்த்தைகளில் நறுக்கு தெறித்தாற்போல் நாசூக்காக சொல்லிவிட்டார்  ஆசிரியர் இதற்கே அவருக்கு ஒரு ஓ போட்டாச்சு!


ராமுவிடம் அன்போடும், அரவணைப்போடும், ஆசையோடும் பழகியதோடு அவனுக்கு நாகரீகமும் சொல்லிக் கொடுத்தவள்  'உன்னை நான் சந்தித்தேன்...நீ ஆயிரத்தில் ஒருவன்' என்று மலரை வண்டு சுற்றுவது போல அவனையே சுற்றி வந்தாலும், அவனால் காதலிக்க முடியவில்லை.



ஆனால் ராமுவுக்கோ தன்னைத் திரும்பிக் கூடப் பார்க்காத  அழகி மேல்தான் 'காதல் வந்திடுச்சு ஆசையில் ஓடிவந்தேன்' என்று  கவனம் முழுதும்!  காரணம் தான் எப்படியிருந்தாலும் தனக்கு வருபவள் ஐஸ்வர்யாராயாக...இல்லை இல்லை....அந்த நாளில் பத்மினியா...வைஜயந்தி மாலாவா ... இருக்க வேண்டும் என்ற அடிமன ஆண்  ஆசை!


அவன் காதலித்த பெண்ணோ (மைதிலி ) ராமுவை ஏறெடுத்தும் பார்க்காத ஏந்திழையாள். 'பொட்டு வைத்த முகமோ...கட்டி வைத்த குழலோ' என்று ரசிக்கும்படியான அவளின் அதியற்புத அழகும், செல்வநிலையுமே அவளை, எல்லோரையும் அலட்சியப் படுத்தும் எண்ணத்தை  ஏற்படுத்துகிறது. அந்தக் காலத்திலேயே ஸ்கூட்டரும், காரும் ஒட்டியவளை பருவ வயது ஆண்கள் 'ஆ' என்று பார்த்ததில் வியப்பென்ன? அதுவே அவள் மேலிருக்கும் காதலை இன்னும் அதிகரிக்கும். இந்த துணிச்சலான பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வதை பெருமையாக நினைக்கும் வயது!



'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல' என்று தினமும் அவளைப் பார்க்கத் துடிக்கும் கண்கள்!

 'ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது' என்று ஊசலாடும் மனது!

ஆனால் அவளுடன் நேரில் பேசவோ, விருப்பத்தை வெளியிடவோ தயங்கும் பண்பாடு.
தீபாவளியன்று ராமுவே எதிர்பார்க்காத ஒரு விஷயம் அவனை மைதிலி வீட்டில் கூப்பிட்டு பட்சணம் கொடுத்தது. 'கண்ணுக்கு மையழகு' என்று அவள் கண்களைப்  பார்க்க முயற்சித்தும் முடியாத தயக்கம் .

'ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றது' என்று பாடத் துடிக்கும் மனசு!

'பாவாடை தாவணியில் பார்த்த உருவமா' என்று ஆச்சரியப்பட்டு பார்த்த கண்கள்!

ஒரு பைங்கிளியை 'செல்லக் கிளியே...மெல்லப்பேசு' என்றபடி அதன் கூட்டுக்குள் சென்று பார்த்த பரவசம்...கதாசிரியரின் கற்பனை நயம் பொருந்திய அசத்தலான  வரிகள்! 

தான் விரும்பும் பெண் நஞ்சைக் கொடுத்தாலும் அமிர்தமாக இருக்கும் வயதில் ரவா லாடும், மிக்சரும் தேவாமிர்தமாக இருக்குமே! அவளைப் பார்த்து ' நீ சிரித்தால்  தீபாவளி' என்றும் 'சுந்தரன் ஞானும், சுந்தரி நீயும் 'என்ற பாட்டைப் பாடத் தோன்றியது ராமுவுக்கு.

'கண்ணெதிரே தோன்றினாள்...கனிமுகத்தைக் காட்டினாள்'  என்று கவிதை பாடிய வண்ணம் நன்றி சொன்னபோதும் சலனம் காட்டாத அந்தப் பெண்ணின்  பெற்றோர் கேட்ட கேள்விகளில் ராமுவின் மனம் செல்லவில்லை. ஆனால் அவர்கள் ஆசீர்வதித்த போது மனத்தில் ஒரு சின்ன சலனம், இத்தனை விசாரித்தவர்கள் தன்னை மாப்பிள்ளையாக்கிக் கொள்வார்களோ என்று.


அதற்கான வாய்ப்பே இல்லாமல் ராமு கைப்பிடித்தது  அவனுடைய பெற்றோர் பார்த்து வைத்த ஜானகி என்ற பெண்ணை! 'மத்தள மேளம் முரசொலிக்க' அவள் கழுத்தில் ராமு தாலி கட்டியபோது  'நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்'  என்ற பாட்டுதான் அவன் மனதில் தோன்றியது.



'வந்தாள்  மகாலட்சுமியே' என்று 'மணமகளே மருமகளே வா வா' என்று ஜானகியை ராமு வீட்டார் வரவேற்க, நாம் விரும்பியது கிடைக்காதபோது, கிடைத்ததை விரும்பும் ஒரு சாமானிய மனிதனாக வாழ்க்கை ஆரம்பமானது ராமுவுக்கு.

அன்று சீதாவைக் கண்ட ராமுவுக்கு அன்றைய சிரிப்பு மாறாத அவள் முகமும் உரிமையுடன் பர்சை எடுத்து பணத்தை எண்ணியதும், இஷ்டப்பட்டதை சாப்பிட்டதும், தனக்கு இவன் கணவனாகக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவளுள் இருப்பதை உணர முடிகிறது. ஒரு ரூபாய் நோட்டில் தன கையெழுத்தைப் போட்டு அதை பத்திரமாக வைத்துக் கொள்ளச் சொன்னதும், ராமுவின் விசிட்டிங் கார்டை தன்  நெஞ்சில் வைத்ததிலிருந்தும் அவள் காதல் மாறவில்லை என்பதை 'நெஞ்சம் மறப்பதில்லை'  என மிக அழகாக சொல்லியிருக்கிறார் கதாசிரியர்.


வேறு விலை அதிகமான எந்தப் பொருளையும் வாங்காமல், ராமு பணத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லியும் அதை மறுத்த அவளின் தன்மானமும், 'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ' என்று மல்லிகைப்பூவை மட்டும் வாங்கிக் கொண்ட அவளின் பெருந்தன்மையும்,  காதலின் ஆழமும் அவளிடம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.


'சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்'
என்று அவள் தன்  கஷ்டத்தையும் மறந்து எப்போதும் சிரித்து கொண்டிருப்பதும், ராமுவின் நாகரீகத்தில் அக்கறை கொண்டு விக் வைத்துக் கொள்ளச் சொன்னதும் அவளின் ஆசைகள் ஈடேறாத மனத்தைக் காட்டுகிறது.
'எங்கேயோ பார்த்தமுகம்' என்று ராமு  யோசித்துக் கொண்டிருந்த அந்த கடற்கரைப் பெண்ணின் வீட்டிற்கு ராமுவும்,ஜானகியும் சென்றபோது பணம் அங்கு தாண்டவமாடியதைக்  காண முடிந்தது.அதே நேரம், பெண்ணின் திருமணம் என்ற மகிழ்ச்சியில் வளைய வர வேண்டிய அந்தப் பெண்ணின் தாய் எங்கே?  

அவள்தான் தான்  காதலித்த மைதிலி என்று தெரிந்தபோது ராமு எப்படி அதிர்ச்சியில் கலங்கிப் போயிருப்பான்? படிக்கும்போதே மனம் பதைக்கிறது.

'விழியே கதை எழுது'' என்று தான் அன்று கற்பனை செய்த அந்த விழிகளில் இருந்து கண்ணீர்.

'ஜல்ஜல்ஜல்லெனும்  சலங்கை ஒலி' என்று  'கொலுசு  ஒலித்த  பாதங்களில்கால்களில்  சங்கிலி;

'காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே' என்று எண்ணிய ராமு தன்  நிலையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்த பரிதாபம் ஆசிரியரின் எழுத்துக்களில் நன்கு புரிகிறது.
அந்த நேரத்திலும் அவர்களுடன் தன்  மனைவி ஜானகியை ஒப்பிட்டுப் பார்த்து 'நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்' என்று மனதில் எண்ணி, சீதாவையும்,, மைதிலியையும் ஒப்பிட்டுப் பார்த்து தன் அதிர்ஷ்டத்தை எண்ணி 'நீதானே என் பொன்வசந்தம்' என்று ஆசையுடன் ஜானகியைப் பார்த்தானோ!

இருந்தும் 'இஞ்சி இடுப்பழகி மஞ்ச செவப்பழகி' மைதிலியையும், 'கள்ள சிரிப்பழகி' சீதாவையும் நம் ஹீரோவுக்கு 'மறக்க மனம் கூடுதில்லையே!'
பெண்ணின் தாயார் மனநிலை சரியில்லாதவள் என்பதற்காக அவள் பெண்ணை ஒதுக்குவது  சரியல்ல என்ற ராமுவின் எண்ணமும் அவளையும் சரியாக்கி விடலாம் என்ற நம்பிக்கையும் பாராட்டத் தக்கது.

இளமைக் காலம் இனிமையானது...நமக்கு எந்தக் கவலையும் இருப்பதில்லை...நம் மனம் என்னென்னவோ எண்ணுகிறது...அவை நடக்குமா, நடக்காதா என்ற சந்ர்தேகங்கள் இல்லாமல் சந்தோஷம் ஒன்றையே   கனவு காணும் காலம். அப்பொழுது நாம்  பெற்றோர், சுற்றியிருப்போர், நண்பர்கள் பற்றிக்  கவலைப்  படுவதில்லை.


' உன்னைச் சொல்லிக் குற்றமில்லை...என்னைச் சொல்லிக் குற்றமில்லை'  என்று நமக்கு புரிய காலம் நமக்கு கொடுத்த நாட்கள் கிட்டத்தட்ட 30 க்கும் மேற்பட்ட வருடங்கள்.


அதிலும் காதல் பலரின் கண்களை மறைத்து விடுகிறது. அந்தப் பருவம் தாண்டி வந்து நாம் ஒரு நல்ல வாழ்க்கை வாழும்போதுதான் நாம் அந்தத் தவறை செய்யாதது சரிதான் என்று உணர முடிகிறது. நமக்கு நல்லதைச் செய்யும் பெற்றோரின் பெருமையை உணர முடிகிறது.


'காகித ஓடம் கடலலை மீதுபோவது போல'த்தான் நம் வாழ்வும்.

கதாசிரியர் சொல்வதுபோல இளமை, அழகு, ஆரோக்கியம் இவை அழியக் கூடியவை. என்றும் நிரந்தரமல்ல. என்றும் பணிவுடன், அடக்கத்துடன், அன்புடன்  நடந்து கொள்வதே ஒருவரை உயர்ந்த நிலையை அடையச் செய்யும்.

ராமுவின் மகனுக்கும், மைதிலியின் மகளுக்கும் திருமணம் நடக்கவும், மைதிலி விரைவில் குணமடையவும் இறைவன் அருள் புரியட்டும்.

'எந்நாளும் நலம் வாழ என் வாழ்த்துக்கள்!!'
ராதாபாலு

No comments:

Post a Comment