'தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்', 'மார்கழிப்பூவே' பாடல்களைக் கேட்டஎனக்கு நான் சின்ன வயதில் எதிலோ படித்து ரசித்த ஒரு கதை ஞாபகத்துக்கு
வந்தது.தமிழ் மாதப் பெயர்களை மையமாக வைத்து யாரோ எழுதிய ஒரு அழகான
கற்பனை!அதை நீங்களும்தான் படித்துப் பாருங்களேன்.
அந்தி
மயங்கிய நேரம்...'கார்த்திகை' என்னும் பெயர் கொண்ட இளமை பொங்கும் அழகிய
பெண்ணொருத்தி தன் வீட்டு உப்பரிகையில் நிலவை ரசித்தபடி உலவிக்
கொண்டிருந்தாள். கீழே சென்று கொண்டிருந்த இளம் வாலிபன் ஒருவன் அவள் அழகை ரசித்து அவளைப் பார்த்து, 'அழகியே..உன் மார்கி(க)ழி' (உன்மேலாடை கிழிந்திருக்கிறது) என்றான் துடுக்காக!
அந்தப் பெண்ணும் 'நீ வந்து தை(தை)யேன்!'என்றாள் மிடுக்காக!
'அது மாசில்லையா?' (தவறில்லையா)என்றான் அவ்விளைஞன்!
அந்த மாசில் பங்குநீ'(பங்குனி)'என்றாள் அந்தக் காரிகை!
'சரி! உன் சிற்றிடை (சித்திரை) எனக்கு வேண்டுமே''என்றான் ஏக்கமாக!
'வை காசு(வைகாசி)'என்றாள் மிரட்டலாக!
'ஆ!நீயார்'(ஆனி) என்றான் விழி உயர்த்தி!
'நானா?ஆடி(ஆடி)ப்பிழைப்பவள்'என்றாள் ஏற்றமாக!
'இன்று எனக்கு விருந்தாக ஆவாய்நீ' (ஆவணி)என்றான் தாபமாக!
'புரட்டா செய்(புரட்டாசி)கிறாய்?'என்றாள் பொய்க் கோபத்துடன்!
'ஐ!பசி(ஐப்பசி)'என்று காதலுடன் சொல்லிக்கொண்டே அந்தக்கட்டிளங்காளை உப்பரிகைப் படிகளில் ஏறினான்!