Thursday, 21 March 2019

பள்ளிக்கூட பிரவேசம்!!!

குழந்தைகள் பள்ளி சென்ற நாளை அத்தனை சுலபமாக மறக்க முடியுமா!என் முதல் மகனை சிவகாசியில் பள்ளியில் சேர்த்தோம்.அவனுக்கு ஏற்கெனவே 1-100, A-Z எல்லாம் எழுதத் தெரியும். முதல்நாள் ரொம்ப சமத்து பிள்ளையாக வகுப்பில் போய் அமர்ந்து டாட்டா சொல்லிவிட்டான்!எனக்குதான் கண்ணில் கண்ணீர்!

LKG காலை 10 முதல் 3 மணிவரை. 12 மணிக்கு தூங்கவைத்துவிட்டு, 3 மணிக்கு பிஸ்கட், பால் கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.

நான்கைந்து நாட்கள் கழித்து இவருடன் நானும் கொண்டுவிடப் போனபோது அவன் ஆசிரியை...உங்க பிள்ளை க்ளாஸுக்குள் இல்லாமல் வெளியே வந்து  நீங்கள் வருவீர்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான்.
மதியம் தூங்கச் சொன்னால் என்னையும் அருகில் படுக்க சொல்கிறான். அவனுக்கு வாயில் விரல் போடும் வழக்கம் உண்டா?என் புடவையைப் பிடித்துக் கொண்டு விரல் போட்டுக் கொண்டு தூங்குகிறான்...என்று சொல்லி சிரித்தார்!

நான் ஆசிரியை எதிரிலேயே...இப்படி செய்யலாமா என்றபோது,
அவர் ...பரவாயில்லை.எனக்கு பிரச்னை இல்லை.கொஞ்சநாளில் சரியாகிவிடும்...என்றார்.
என் பக்கத்தில் படுத்து தூங்கும் பழக்கம் அவனுக்கு.பாவமாக இருந்தது. 15,20 நாட்களுக்கு பிறகே சரியானான்!

அடுத்தவன் இவனைப் பார்த்து வளர்வதால் சமத்தாக ஸ்கூல் போவான் என்று நினைத்தேன்.
அவனும் சமத்தாக...நானும் அண்ணாவோட ஸ்கூல் போறேன்...என்று குஷியாகக் கிளம்பினவன், வகுப்பில் விட்டு வெளியே வந்ததும் அழுதுகொண்டே வெளியில் ஓடிவந்து விட்டான்.பள்ளி வாட்ச்மேன் இவனைப் பிடித்து இழுக்க, அவனைத் தள்ளிவிட்டு கீழே மண்ணில் உருண்டு,புரண்டு..எங்களுக்கு மனதே கேட்கவில்லை.'நீங்க போங்க.
நாங்க சமாளிச்சுக்கறோம்'என்று ஆசிரியை சொல்ல, நான் இவரிடம்..பாவம். அடுத்த வருஷம் அனுப்பிக்கலாமா?..எனக்கேட்க, அவர் கோபமாக முறைக்க வாயை மூடிக் கொண்டு விட்டேன்!

ஒருவாரம் நாங்கள் கொண்டுவிடுவதும்,அவன் பிரண்டு அழுவதுமாக..வேற வழியில்ல. படிச்சுதான் ஆகணும் என்று பள்ளி செல்ல ஆரம்பித்து விட்டான்!

அடுத்த மகள் ஒன்றரை வயது முதலே புத்தகங்களைப் பையில் வைத்துக்
கொண்டு அண்ணாக்களோடு, 'நானும் ஸ்கூல் போவேன்'என்று
ஒரே அழுகை! இது எப்படி? அப்பல்லாம் ப்ளேஸ்கூலல்லாம் கிடையாதே. 3வயதில் பள்ளியில் சேர்த்தபோது யாரையும் கூட வரணும் என்று சொல்லாமல் படு சமர்த்தாக அண்ணாக்களுடன் ரிக்ஷாவில் ஏறிப் போனாள்.நாங்கள் மனம் கேட்காமல் பின்னால் சென்றோம்! ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு தினுசு!


Wednesday, 20 March 2019

#ஒழுக்கம் _ உயிரினும்


எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.

அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே.இதிலிருந்து அன்னைதான் குழந்தைகளை சரியாக வளர்ப்பவள்  என்பதை சொல்லியிருக்கிறார் கவிஞர்!  குழந்தைகள் பெரும்பாலான நேரம் அன்னையருடன் இருப்பதால் அவ்விதம் சொல்லியிருப்பார் போலும்! ஒரு பெண்ணுக்குத்தான் பொறுமை, அன்பு, தவறுகள் செய்யக் கூடாது என்று சொல்லி திருத்தும் திறன்கள் அதிகம் என்பது  தெரிகிறது.அந்த நாளில் என்  பெற்றோர் எங்களை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார்கள்.12 வயது ஆகிவிட்டால் எந்தப் பையனிடமும் பேசக்  கூடாது, பழகக் கூடாது என்பது அந்நாளைய கட்டுப்பாடு. காதல் வந்துவிடும், மனம் கெட்டுப் போய்விடும் என்ற பயத்தில் காலேஜுக்கு கூட பெண்களை அனுப்பாத காலம் அது! குமுதம் விகடன் போன்ற புத்தகங்களைக் கூட என் அம்மா படித்துவிட்டு ஒளித்து வைத்து விடுவார்! MGR படங்களுக்கு தடா! குடும்பப் படங்களுக்கு மட்டுமே அழைத்து செல்வார்கள்.இக்காலத்திலோ எதிலும் ஒளிவு மறைவு இல்லை.உள்ளங்கையில் சகலமும் தெரிந்து கொள்கிறார்கள். இதையெல்லாம் செய்தால் என்ன தவறு என்ற எண்ணம் மனதில் தோன்ற, அதுவே அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கைக்கு தடை ஆகிறது. பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போவதால் அந்நாளை போன்ற கவனிப்பு இன்று குழந்தைகள் மேல் இல்லையோ என்பது என் எண்ணம். வீட்டில் நல்லது கெட்டது சொல்லித்தர பெரியவர்களும் இல்லை: இருப்பவர்களும் அபத்த T V சீரியல்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். வீட்டில் இருக்கும் நேரமும் பலருக்கு குழந்தைகளை விட முகநூலும், வாட்ஸப்பும் முக்கியமாகி விடுகிறது. குழந்தைகள் எதிரில் தங்களுக்குள் வாக்குவாதம், பெரியவர்களை பற்றி தவறாகப் பேசுவது, நீ உயர்வா  நான் உயர்வா என்ற ஈகோ, மனத்தைக் கோணலாக்கும் சீரியல்கள்... இவை குழந்தைகளை மனம் மாறி, வழி மாறி செல்லத் தூண்டுகின்றன.என்  பெற்றோர் எங்களை கண்டிப்புடன் வளர்த்தது போல் நாங்கள் எங்கள் குழந்தைகளை வளர்க்கவில்லை. அவர்களை தட்டிக் கொடுத்து, விட்டுப் பிடித்து வளர்த்தோம். அவர்கள் படித்தது ஆரம்பத்திலிருந்தே co-education பள்ளிகள். எனவே வித்யாசம் இல்லாமல் இருபாலாரும்  இணைந்து பழகியதால் தவறான எண்ணங்கள் மனதில் ஏற்பட்டதில்லை.  சிறு வயதில் படிக்கவும், எழுதவும் அவர்களும் அடம் செய்ததுண்டு. ‘சரி, கொஞ்ச நேரம் விளையாடி விட்டு வந்து படி’ என்று விட்டுப் பிடித்தால் எந்தக் குழந்தைதான் புரிந்து கொள்ளாது? நாம் வாழும் முறைதான் அவர்களுக்குப் பாடமாகிறது. அன்போடும், பணிவோடும், நேர்மையோடும், பொறுமையோடும் வாழ வேண்டும் என்றும், பொறுமையே வெற்றிக் கனியைப் பறித்துத் தரும் ஆயுதம் என்பதையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.....எனக்கு மூன்று மகனும், ஒரு மகளும். அவர்களை ஆண், பெண் வித்யாசமில்லாமல்தான் வளர்த்தோம். ஆன்மிகம், பொது அறிவு,     அறவுரைக் கதைகள் என்று புத்தகங்கள் நிறைய வாங்கி கொடுத்து படிக்க சொல்வேன். எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவோம். அப்பொழுதெல்லாம் மொபைல் இல்லாததால் பள்ளி, கல்லூரிக் கதைகளை சொல்வார்கள். நான் அவர்களுக்கு சமமாகப் பேசியதால் அவர்களும் எதையும் மறைத்ததில்லை. பள்ளி விடுமுறை நாட்களில் திருப்பாவை, திருவெம்பாவை, விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற ஸ்லோகங்களை சொல்லிக் கொடுத்து மனனம் செய்ய சொல்வேன். வகுப்பில் முதலிடம்தான் பெற வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தியதில்லை. ஆனால் அதிக மதிப்பெண்கள் பெற்றால்தான் சிறந்த மேல் படிப்பு, வேலை வாய்ப்பு கிடைக்குமென்பதை அவ்வப்போது வலியுறுத்துவேன். அவர்களின் நண்பர்களை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வருவார்கள். டிபன் சாப்பாடு என்று செய்து கொடுப்பேன். அவர்களும் எனனுடன் அமர்ந்து வீட்டுக் கதைகள் முதற்கொண்டு பேசுவார்கள்! இப்பவும் என் பெண், பிள்ளைகளின் நண்பர்கள் போனில் பேசி விசாரிப்பார்கள்.என் முதல்மகன் தமிழ்நாட்டில் மாநில மூன்றாமிடமும், இரண்டாம் மகன் மாநில முதலிடமும் பெற்று என்னை ஈன்ற பொழுதின் பெரிதுவக்க வைத்தார்கள். முதல்மகன் BITS Pilaniயில் இன்ஜினியரிங் முடித்து, நேனோடெக்னாலஜியில் Ph.Dபெற்று பெர்லின் யூனிவெர்சிட்டியில் பணியில் இருக்கிறான்.இரண்டாமவன் மாநில முதலிடம் பெற்று KKR பாமாயில் கம்பெனியார் கொடுத்த மாருதி காரைப் பரிசாகப் பெற்றான்.அப்போதைய முதல்வர் திரு கருணாநிதியிடமிருந்து மேல்படிப்பிற்கான தொகை பரிசாகேப் பெற்றான். XIMபுவனேஸ்வரில் MBA முடித்து, CarnegieMellon University (US) ல் பயிற்சி பெற்று தற்சமயம் சென்னையில் EducationConsultant மற்றும் SkillTrain technology-enabled vocational training Course ( https://www.youtube.com/watch?v=egDNlm--GkU...) சொந்தமாகவும் நடத்தி வருகிறான். இதன் மூலம் அதிகம் படிக்காதவர்கள் கூட வீடியோ மூலம் மொபைல், மோட்டார் சைக்கிள், கம்ப்யூட்டர்,வீட்டு உபயோகப் பொருட்கள் ரிப்பேர் செய்வதை சுலபமாகக் கற்று சுயதொழில் செய்யலாம். 'எளிய மக்களையும் மேம்படுத்தும் திட்டம் இது' என்பான். மகள் மருத்துவர். கடைசி மகன் ஐஐடியில் M.Tech படித்து லண்டனில் வேலையில் இருக்கிறான்.இரண்டாம் மகன் MBA படிக்கும்போது காலேஜில் அடிக்கடி பார்ட்டிகள் நடக்குமாம். அத்தனை மாணவ, மாணவிகளும் Alcohol பார்ட்டியில் கலந்து கொள்வார்கள் என்று அவன் சொன்னபோது நான் பதற்றமாக..நீயும் குடிப்பியா..என்றேன். 'பயப்படாதம்மா. எனக்கு அதன் நாற்றமே பிடிக்காது. எல்லாரும் என்னை கம்பெனி கொடுக்க சொல்வார்கள். நான்..'எல்லாரும் கொஞ்ச நேரத்தில் flat ஆனா உங்க ரூம்க்கு கொண்டுவிட ஒருத்தர் வேண்டாமா?'..என்பேன்..என்று சொன்னபோது பெருமையாக இருந்தது. ஹார்வர்ட் யுனிவர்சிட்டியில் Ph.D செய்ய வாய்ப்பு கிடைத்தும் போக மறுத்துவிட்டான். நாங்கள் வற்புறுத்தியும் 'அங்கு படித்தால் எனக்கு அங்கேயே வேலையும் கிடைத்துவிடும். இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் உங்களை கவனித்துக் கொள்ள நான் இங்கு இருக்கிறேன். நான் எப்பவும் வெளிநாட்டில் வேலைக்கு போக மாட்டேன்' என்பான். ஆடம்பரம் இல்லாமல் சிம்பிளாக வாழணும் என்பான். இப்பவும் குழந்தைகளுக்கு கூட நெய்ல் பாலிஷ், லிப்ஸ்டிக் எல்லாம் போட அனுமதிக்க மாட்டான். பள்ளி விழாவில் நடனத்தில் சேர்ந்த என் பேத்திக்கு லிப்ஸ்டிக்,மை எல்லாம் போடக்கூடாது என்று ஆசிரியையிடம் சொல்லி விட்டான்!கடமைகளை முடித்துவிட்ட நாங்கள் திருச்சிக்கு போய் இருக்கிறோம் என்றபோது தட்டாமல்...உங்களுக்கும் ஓய்வும், தனிமையும் வேண்டாமா...என்று சொல்லி எங்களை அனுமதித்தான். அப்பா வெளியில் போக கஷ்டப் படக் கூடாது என்று ஒரு காரும், ஸ்கூட்டரும் வாங்கிக் கொடுத்தான். என் மருமகளுக்குத்தான் ரொம்ப வருத்தம். நம் கடமைகள் முடிந்தபின் நாம் பிள்ளைகளின் கூடவே இருப்பதைவிட விலகி இருந்து அவர்களை ரசிப்பது ஒரு சந்தோஷம் என்பது எங்கள் எண்ணம்! திருச்சியில் இருந்தாலும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சென்னை செல்வோம்! ஒரு மாதம் ஆனதும் பேத்திகள்...எப்போ சென்னை வரப்போற பாட்டி...என்று கூப்பிடுவார்கள்!என் மகள் மும்பை கிராண்ட் மெடிக்கல் காலேஜில் படித்தாள்.அங்கு படிக்கும் சீனியர் மாணவனைக் காதலிப்பதாக சொன்னபோது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அவன் மராத்திய பையன். அவனும் எங்கள் வீட்டுக்கு வருவான். மிக நல்ல பையன். நாங்களும் அவனது பெற்றோரும் அவர்களுடன் அமர்ந்து பேசினோம். 'உண்மையில் இருவருக்கும் விருப்பமா, இருவரும் வெவ்வேறு மொழி, கலாச்சாரம் ஒத்து வருமா' என்பதைக் கேட்டபோது இருவருமே...இது infatuation இல்லை.இருவருக்கும் விருப்பம் இருக்கிறது...என்ற பின்பே திருமணம் முடித்தோம். என் பெண்ணுக்கு 13,7 வயதில் இரு குழந்தைகள். மாமியார், மாமனார் இவர்களுடன்தான் இருக்கிறார்கள். இப்பொழுது என் பெண்ணின் மாமியார்...உங்கள் பெண்ணை மாதிரி மருமகள் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம். அருமையான பெண்...என்று பாராட்டும்போது ஆஹா. நம் பெண்ணை நன்றாக வளர்த்திருக்கிறோம் என்று மிக பெருமையாக இருந்தது. வேலைக்கும் போய்க்கொண்டு, அவர்கள் சமையலையும் கற்றுக்கொண்டு, குழந்தைகளையும் சிறப்பாக வளர்ப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது.குழந்தைகளை நல்லமுறையில் வளர்க்க எனக்கு தெரிந்த சில டிப்ஸ்...

கெட்ட  விஷயங்களிலிருந்து விலகி நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்து பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் எந்த நாளிலும் தவறான வழிக்கு செல்வதில்லை.பெற்றோரே குழந்தைகளின் ‘ரோல் மாடல்கள்’ என்பதால் பிள்ளைகளின் எதிரில் சண்டையிடுவதோ, பொய் பேசுவதோ, தவறுகளை மறைப்பதோ கூடாது. உன்னால் எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.குழந்தைகளுக்கு அதிக வசதிகளைக் கேட்டதும் செய்து கொடுப்பதும், தனி அறை கொடுத்து படிக்க, உறங்கச் செய்வதும் அவர்கள் தகாத விஷயங்களைக் கற்றுக் கொள்ள வழி செய்யும். குழந்தைகளைத் தனிமைப் படுத்தல் கூடாது. அவர்களின் படிப்பு, நண்பர்கள் பற்றி அவ்வப்போது கேட்டு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.‘நீ எதற்கும் லாயக்கில்லை’ என்றோ அல்லது குழந்தை செய்த தவறை அடிக்கடி சுட்டிக் காட்டியோ அல்லது மற்ற பிள்ளைகளுடன் அவர்களை ஒப்பிட்டுப் பேசியோ அவர்களை நோகடிக்கக்கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் வளைந்து கொடுத்து, விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.அதிக கண்டிப்பும், பயமுறுத்தி அடக்கி வைத்தலும் குழந்தைகளை நம்மை விட்டு விலகச் செய்யும். குடுமபத்தின் வரவு செலவுக்கணக்குகள், தம்மை வளர்க்க  எவ்வளவு கஷ்டப்பட்டு பெற்றோர் உழைக்கிறார்கள் என்பதை அவர்களும் தெரிந்து கொள்ளும்படி எல்லா விஷயங்களிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும். நம் கஷ்டம் குழந்தைகளுக்கு தெரியக் கூடாது என்று நினைத்து மூடி மறைப்பது தவறு.பெற்றோர் ஒருவருக்கொருவர் அன்பு, பாசம் மரியாதையுடன் நடந்து கொண்டு குழந்தைகளுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். நம் பெற்றோரின் வழிகாட்டல் சரியானது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்க வேண்டும்.வெளியுலகத்தில் அவர்கள் பல விஷயங்களையும் பார்க்க நேரிடுகிறது. சமயங்களில் மனதில் பதட்டமும், கோபமும், வெறுப்பும், இது சரியா தவறா என்ற சந்தேகங்களும் ஏற்படும்போது அதை வீட்டிலுள்ள பெற்றோரிடம் தயங்காமல் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு பெற்றோர்கள் அன்பாக, அனுசரணையாக இருக்க வேண்டும்.எந்தத் துயர் வரினும் இறைவனைப் பிரார்த்தனை செய்வது மனதுக்கு அமைதியும், பிரச்னைக்கு தீர்வும் கிடைக்கும் என்பதை அவர்கள் உணரும்பொருட்டு பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துவதும் பெற்றோரின் கடமை.

Friday, 8 March 2019

செம்மை மாதர்


என்னைப் பெற்று, வளர்த்து கலைகளைக் கற்றுக் கொடுத்து எனக்கு சீரான, சிறப்பான அறிவுரைகளை சொல்லி என் இன்றைய வாழ்வின் ஆதாரமான என் அன்னைக்கும், திருமணத்திற்குப் பின் என்னிடம் கண்டிப்புடன் நடந்து என்னை எந்த சூழலையும் கலங்காமல் எதிர்கொள்ளும் திறனைக் கொடுத்த என் மாமியாருக்கும், இன்று அவர்கள் என்னுடன் இல்லையென்றாலும் என் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்!

நான் கலங்கி நின்ற சமயங்களில் எனக்கு இன்னொரு தாயாய் இருந்து எனக்கு ஆறுதல் தந்து என்னைத் தேற்றிய என் மகள் மற்றும் மருமகளுக்கும், பல நேரங்களில் உடனிருந்து வழி நடத்திய பெண்மணிகளுக்கும், என் நேரங்களை இனிமையாக்கிய  சிநேகிதிகளுக்கும்,மத்யமரால் எனக்கு கிடைத்த அன்புத் தோழிகளுக்கும் என் மனமார்ந்த மகளிர்தின வாழ்த்துக்கள்!

அம்மா, பாட்டி, சகோதரி, மகள் எனும் அனைவரும் நம்முடன் ரத்த சம்பந்தம் உடையவர்கள். அவர்களிடம் நாம் அன்பு காட்டுவது இயல்பு.இன்று நான் சிறந்த பெண்மணியாகக் குறிப்பிடப் போவது அன்னை தெரசாவையே. சிறு வயது முதல் எனக்கு அன்னை தெரசாவை மிகவும் பிடிக்கும்.அவரது தன்னலமற்ற தொண்டுக்கு முன் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று
எண்ணுவேன்.உடனிருப்பவரே அருவறுக்கும் தொழு
நோயாளிகளையும்,சகதியிலும், சேற்றிலும், குப்பைத்தொட்டிகளிலும் கிடைக்கும் குழந்தைகளையும் சற்றும் கூசாமல் தொட்டுத் தூக்கி சென்று அவர்களுக்கு வாழ்வு கொடுத்த அன்னை தெரசாவின் மாண்பு என்னை வியக்க வைத்தது;என் மனதை நெகிழ வைத்தது.

1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26 மெசிடோனியாவில் பிறந்த அன்னையின் பெயர் அக்னஸ் கொன்ஸா பொஜாக்கியோ (Agnes Gonxha Bojaxhiu). இதற்கு சின்னஞ்சிறு மலர் என்ற பொருளாம்.அதனால்தானோ அவர் சின்னஞ்சிறு மலர்கள் போன்ற குழந்தைகளிடம் அளவில்லா பாசம் கொண்டிருந்தாரோ?ஆழ்ந்த இறைநம்பிக்கையும், பொதுத்தொண்டில் அளவற்ற ஆர்வமும் கொண்டிருந்த அன்னை தன 18 வயதில் கத்தோலிக்க கன்னிகாமட உறுப்பினரானார்.
கல்கத்தாவில் இந்திய மிஷனரிகளின் சமூகத் தொண்டுகளில் ஈர்ப்பு பெற்றவர்,1931ல் அன்னை தெரசா என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற்று  இந்தியா வந்தார்.

அதன்பின் சில ஆண்டுகள் ஆசிரியப் பணியில் இருந்தவர்,அதை விடுத்து கல்கத்தாவில் மோதிஜில் என்ற சேரிப் பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கு தொண்டு செய்தபடி அவர்களுடன் வாழஆரம்பித்தார்.
அங்குள்ள குழந்தைகளுக்கு படிப்பு, நோயாளிகளுக்கு மருத்துவம் என்று தொண்டு செய்து வந்தார்.1950ல் மிஷனரீஸ் ஆப் சாரிட்டி (Missionaries of Charities)என்ற அறக்கட்டளையை ஆரம்பித்தார்.

இதன் மூலம் பசியால் வாடுகின்றவர், வீடின்றி தவிக்கின்றவர், கண்பார்வை இல்லாதவர்,
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர் என தன்னால் முயன்ற அத்தனை உதவிகளையும் பாரபட்சம் இல்லாமல் செய்து வந்தார். முதியவர்களுக்கு கருணை இல்லம் உருவாக்க விரும்பியவர்,அரசாங்க உதவியுடன் ‘காளிகட்’ என்னுமிடத்தில் ஹீக்ளி
நதிக்கரையின் அருகில் கிடைக்கப்பெற்ற “நிர்மல் ஹ்ருதய்” என்ற கட்டிடத்தை முதியோர் காப்பகமாக மாற்றினார். இதன்  பெயர்தான் பின்னாளில் “காளிகட் இல்லம்”.

1955ல் சிசுபவன் என்ற உடல் ஊனமுற்ற, குப்பைத்தொட்டிகளில் போடப்பட்ட குழந்தைகளுக்கான இல்லம் ஆரம்பித்தார்.1957ல் தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனை ஆரம்பித்தார். இவற்றிற்கான பணத்தை எப்படி சேர்த்தார் என்பதை இந்த உருக்கமான நிகழ்ச்சியின் மூலம் அறியலாம்.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டும்  வழக்கம் கொண்ட அன்னை ஒரு கடைக்கு முன் சென்று நின்று தொடர்ந்து யாசகம் கேட்டார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு அவர் நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார். அப்போது சற்றும் மனம் தளராமல் 'மிக்க நன்றி. நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்' என்று கேட்டார்'.அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப்பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் வந்த போப்பாண்டவர் தான் சுற்றுப்பயணம் செய்த விலை உயர்ந்த காரை அன்னைக்கு பரிசளித்தார்.அன்னையோ அதை ஏலம் விட்டு அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார்.தன் வாழ்நாள் முழுதும் ஏழைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், குடிசை வாசிகளின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்காவும் செலவழித்த அன்னை "குடிசை சகோதரி" என அழைக்கப்பட்டார்.

1962ல் பத்மஸ்ரீ, 79ல் நோபல் பரிசு, 83ல் எலிசபெத் மகாராணியின் கவுரவ விருது, 97ல் அமெரிக்க கவுரவ பிரஜா உரிமை,77ல் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக டாக்டர் பட்டம் என பல பட்டங்கள் தேடி வந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல் 45 வருட காலங்கள் சமூகப் பணிகளே வாழ்க்கையாக வாழ்ந்தவர், 1997 செப்டெம்பர் 5ம்நாள் இருதய நோயால்  உயிர் நீத்தார். #அன்னை என்று உலகம் முழுக்க அழைக்கப்பட்ட அவரின் தொண்டு அவரை 'சாதனைப்பெண்மணி' ஆக்கியது.

'நீங்கள் செல்லுமிடமெல்லாம் அன்பைப்பரப்புங்கள்.தனிமையும்,
தன்னிரக்கமும் மிகப் பெரிய வறுமை நிலைகள்' என்று உரைத்த
அன்னை தெரேசாவே என் மனம் கவர்ந்த #செம்மைமாதர்!