Friday, 24 April 2020

வாழ்க புத்தாண்டு

தமிழுக்கும் அமுதென்று பேர் என்றுரைத்த பாரதி வழிநின்று வாழ்த்துகிறேன் சார்வரி எனும்
இப்புத்தாண்டில் நாம்
நிறைந்த நல்வாழ்வும்
சீரிய சிந்தனையும்
ஓங்கிய ஒற்றுமையும் பெற்று நோய் நொடியின்றி வாழ யாதுமாகி நின்ற காளி அருள் புரிய வேண்டி🙏🏼

Friday, 17 April 2020

ஹேஸல்நட்(Hazel nut) கேக்


ஆஷாட ஏகாதசிக்கு பண்டரிக்கு பாயசத்துடன்  ஏதாவது ஸ்வீட் பண்ணலாமேனு யோசிச்சேன்! என் பிள்ளை போனமுறை வந்தபோது வாங்கி வந்த ஹேஸல்நட் பவுடர் இருந்தது. இதை வைத்து ஒரு கேக் பண்ணலாமென்று முடிவு செய்தேன்.

ஹேஸல்நட் என்பது  கொண்டைக்கடலை மாதிரி பெரியதாக இருக்கும். மிக சத்தானது என்பான் என் பிள்ளை.  வெளிநாடுகளில்  மட்டுமே இதை நான் பார்த்ததுண்டு. பாதாம், மிந்திரி, பிஸ்தா, வால்நட் போல் இதில் சாக்லேட், பிஸ்கட் எல்லாம் செய்வார்கள்.

ஆனால் இதில் நம்ம மெதட்ல கேக் பண்ணினா எப்படி இருக்குமோ என்று உள்ளூர பயம்! கசக்குமோ..துவர்க்குமோ?  கண்ணனை வேண்டிக் கொண்டு கேக் பண்ணி நைவேத்யமும் பண்ணிவிட்டு சாப்பிட்டோம். அருமையாக இருந்தது!

Hazelnutற்கு தமிழ்ப் பெயர் தெரியவில்லை. Googleலும் சரியான பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை! எப்படியோ பாண்டுரங்கனுக்கு ஒரு புதிய இனிப்பு பண்ணி கொடுத்தாச்சு!

Friday, 10 April 2020

பாவம் போக்கும் சிம்மாசலம்


சென்ற வாரம் விசாகப்பட்டினம் சென்றபோது சிறப்பான சிம்மாசலம் கோயிலை தரிசித்து வந்தோம். அருமையான ஆலயம்.

நரசிம்மர் பெரும்பாலும் மலைக்கோயில்களிலேயே வீற்றிருக்கிறார். வேலூர் அருகிலுள்ள சோளிங்கர், ஆந்திராவிலுள்ள அஹோபிலம்,  சிம்மாசலம், கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில், நாமக்கல், மதுரை ஒத்தக் கடைநரசிம்மர் கோயில்கள் சிறப்பானவை.

திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் பரபரப்பான நொடியில்  தன் பக்தன் பிரஹலாதனைக் காக்க மனிதனும். மிருகமும் கலந்த உருவமெடுத்து தூணிலிருந்து வெளிப்பட்ட தனிப்பெரும் அவதாரம் அது.

பிரஹலாதன் கருவிலேயே நாரத முனியால் நாராயண மந்த்ரோபதேசம் பெற்றவன். அவனுடைய நாராயண பக்தியினால் தானே கடவுள் என்ற இரண்யனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத  பிள்ளை அவன்.

அவன் தந்தை ஹிரண்யனுக்கு தன் நாட்டிலுள்ள பிற எல்லோரையும் போல் அவனும் தன் னுடைய பக்தனாக வேண்டும் என்று வெறி. ஹிரண்யன் பிரஹலாதனை பல விதங்களில் துன்புறுத்தியும், நாராயண நாமத்தால் அவற்றையெல்லாம் தன் மீதான பக்தி சிலிர்ப்பாகவே அனுபவித்தான் ப்ரஹலாதன்.

அவற்றில் ஒரு தண்டனையாக கடலில் தள்ளிவிட்டான். அதுவே விசாகப் பட்டினம் அருகிலுள்ள கடல். அவன் பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக மேலே ஒரு மலையையும் தள்ளிவிட்டான்.
'ஹரியே சரி' என்ற ப்ரஹலாதன் நாராயணா என பகவானை சரண் அடையக் கூப்பிட்டான்.

கடலில் அமிழ்ந்து கொண்டிருக்கும் ப்ரஹலாதனை காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில், ஒரு கையில் பீதாம்பரத்தைப் பிடித்துக்
கொண்டு குதித்த வேகத்தில் பகவானின் பாதங்கள் பாதாளம் வரை சென்று விட்டனவாம்.எனவே இங்கு பாததரிசனம் கிடையாது.

ஹிரண்யகசிபுடன் 32 ரூபங்கள் எடுத்துப் போர் புரிந்தாராம் ஹரி. அதில் ஒன்று வராகநரசிம்மர் அவதாரம் ஆகும். பாதாளம் சென்று பிரகலாதனைக் காப்பாற்றியபோது அவன் மேல் கிடந்த மலையுடன் மேலே வந்தார் பெருமாள். அந்த மலையே சிம்மாசலம்.

இங்கு கோயில் கொண்டிருக்கும் நரசிம்மர்,  வராக முகத்துடன் மனித உடலோடு, சிங்கத்தின் வால்கொண்டு, வராக நரசிம்மனாக காட்சி அளிக்கிறார்.
பிரஹலாதனின் விருப்பத்திற்
கிணங்க, ஹிரண்யாக்ஷனை வதம் செய்த வராஹ ரூபம் மற்றும் ஹிரண்யகசிபுவினை அழிக்கப்
போகும் நரசிம்ஹ ரூபம் கலந்து வராக நரசிம்மராக காட்சி தருகிறார். இக்கோயில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவர் வராக நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது.

பகவானுக்கு ஆராதனம் இல்லாமல் போகவே, புற்று மூடி அந்த இடம் காடாக மாறிவிட்டது. பின்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற சக்கரவர்த்தி இந்த இடத்தைக் கடந்து செல்லும் போது, அவரது விமானம் தடைபட்டது.   நரசிம்மமூர்த்தி அவரதுகனவில் தோன்றி, தான் இங்குள்ள கங்கதாரா என்ற தீரத்தத்தின் அருகில் உள்ள புற்றில் இருப்பதாகச் சொல்ல, அவரை அக்ஷயதிருதியை அன்று எழுந்தருளச் செய்து, கங்கதாரா தீர்த்தத்தில் திருமஞ்சனம் செய்து பிரதிஷ்டை செய்தார் புரூவரஸ்.

எனவே அக்ஷயதிருதியை அன்று மட்டுமே  பெருமான் நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.மற்ற
நாட்களில் சந்தனக் காப்பிட்ட
தரிசனம் தான்.

சந்தனக்காப்பில் எப்படி ஒரு வருடம் எனத் தோன்றுகிறதா?வைகாச சுக்ல திருதியை, வைகாச பவுர்ணமி, ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500 கிலோ சந்தனம் சாத்துகிறார்கள். அதனால் எல்லா நாட்களும் சந்தனகாப்பு பளபளக்க  காட்சியளிக்கிறார் இந்த வராஹ நரசிம்மர்! அக்ஷயதிருதியை அன்று லட்சக்கணக்கான மக்கள் நிஜரூப தரிசனம் செய்ய வரிசையில் காத்திருப்பராம்!

சந்தனக் காப்பு ஏன்? இத்தலத்
திலும் சைவ வைணவ
சண்டை வந்ததாக கதை உண்டு. முதலில் இந்த மூர்த்தி இங்கு லிங்க ரூபத்தில் வழிபடப்பட்ட
தாகவும், ராமானுஜர் ஸ்ரீகூர்மத்தி
லிருந்து இந்த மலைக்கு வந்து நாராயணனின் தலம் இது என்றும் இங்கு வராகநரசிம்மனின் அர்ச்சா ரூபம் நிறுவப்படவேண்டும் என்றும் வாதம் செய்தாராம். முடிவில், உள்ளே இருப்பவர் நாராயணனா இல்லை நமசிவாயமா என்பதைக் கண்டுகொள்ள லிங்கத்தின் கீழே துளசியும் விபூதியும் இரவில் வைக்கப்பட்டு, காலையில் எது ஏற்றுக் கொள்ளப்பட்டதோ, அவரே அங்கே இறைவன் என்று முடிவு செய்யப்பட, அனைவரும் அப்படியே செய்கின்றனர்.

மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது துளசி மட்டுமே அங்கே கிடந்ததைக் கண்டு உடையவரின் கருத்தில் உடன்பாடு கொண்டு அனைவரும் லிங்கத்தை அகற்றிவிட்டு அங்கே ராமானுஜரின் கட்டளைப்படி வராகநரசிம்மனின் அர்ச்சா
ரூபத்தை செதுக்கினர். அப்படி வழிபடும்போது, அவர் உடலில் ரத்தம் வழிந்ததாகவும், ரத்தத்தை மறைக்க சந்தனத்தை உருவம் முழுவதும் சார்த்தி மூடிவிட்ட
தாகவும் சொல்லப்படுகிறது.

ஹரியும், சிவனும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் வராக லட்சுமி நரசிம்மமூர்த்தியை தரிசித்தால் சிவலிங்க உருவத்தில் நாராயணனின் நாமம் சாத்தப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. தூணிலிருந்து தோன்றிய மூலவர் தூண் போன்றே தரிசனமளிக்கிறார். வராகரும் இவருடன் அரூபமாக உள்ளார்.

நிஜரூபத்தில் பார்க்கும்போது சுவாமியின் கால்களுக்குக் கீழே பாதம் இல்லை. கைகள் நீண்டு இருந்தாலும் உள்ளங்கைகளும் விரல்களும் தெரியாது. முகத்தில் வராக ரூபமும் பின்னால் வால் ரூபமும் கூட இப்போதெல்லாம் சரியாகத் தெரிவதில்லையாம்.

சிறிய மலையின் மீது கோயில் உள்ளது. எக்காலத்திலும் பக்தர்களின் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது போலுள்ளது. தங்குவதற்கு தேவஸ்தானம் நிறைய அறைகள் கட்டி உள்ளார்கள்.

பெருமாளை அருகிலேயே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள். வெளியே வந்து கங்கதாரா அருவி நீர் ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் தெளித்துக் கொள்ள
லாம்.

11ம்  நூற்றாண்டில் கலிங்க நாட்டை வென்ற குலோத்துங்க சோழனால்  மலையை முழுக்க குடைந்தெடுத்து  பாறையால் செய்யப்பட்ட ஒரு தேர், சக்கரங்களுடன் குதிரைகள் இழுத்துச் செல்லும் முறையில் உள்ளது.  இங்கு 525 அதியற்புதமான சிற்பங்கள்  காட்சியளிக்கின்றன.

வாழ்வில் உண்டாகும் துன்பங்களைப் போக்கி பக்தர்களைக் காப்பதில் சிம்மாசலம் நரசிம்மருக்கு இணை வேறு யாருமில்லை.சனக, சனந்தன, சனாத, சனத்குமாரர்
களுக்கும், தேவர்கள், நாரதர், ரிஷிகளுக்கும், இவர்  தரிசனம
ளித்ததாக தலபுராணம் கூறுகிறது.

இவ்வாலயத்தில் கப்பஸ்தம்ப வேண்டுதல் மிகப் பிரசித்தம்.
அந்நாட்களில் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறினால் கோவிலுக்கு வந்து கப்பம் செலுத்துவதாக வேண்டிக் கொள்வதும், நோய் நொடியி
லிருந்து பாதுகாக்கவும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பிறக்க வேண்டிக் கொண்டு இங்குள்ள கப்பஸ்தம்பத்தில் கப்பம்
செலுத்துவதும் வாடிக்
கையாக இருந்ததாம்.

இன்றும் அந்த ஸ்தம்பம் இங்கே இருக்கும் மண்டபத்தில் வெள்ளிக் கவசத்துடன் உள்ளது. அந்தத் தூணின் கீழ் சந்தான கோபாலரின் திருவுருவம் உள்ளது. அந்த கம்பத்தை இரு கைகளாலும் அணைத்தவாறு நம் வேண்டுதல்
களைக் கூற வேண்டும்.

பின் அங்குள்ள ஊழியர் ஒரு பட்டுத் துணியினால் நம்மைத் தூணுடன் கட்டி இறைவனிடம் நம்மை வேண்டிக் கொள்ள சொல்கிறார். திருமணம் பிள்ளைப்பேறு வியாபார விருத்தி போன்ற வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதாகக் கூறப்படுகிறது.  தம்பதியர் இந்த வேண்டுதலை இணைந்து செய்ய வேண்டும்.இதற்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இங்குள்ள நரசிம்ம தீர்த்தம், கங்காதாரா தீர்த்தம் எனும் இரு அருவிகளிலும் நீராடி வராஹ
நரசிம்மரை வணங்கி, மலைப் பாதையில் கிரிவலம் வந்து வணங்குவதால் தீரா நோய்கள் தீர்ந்து பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். உடல் வளமும் உள்ள வளமும் பெற இந்த வராஹ லட்சுமிநரசிம்மர் பேரருள்  புரிகிறார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி
னத்திலிருந்து 5 கி.மீ தொலைவி
லுள்ளது இத்திருத்தலம்.

Wednesday, 8 April 2020

#நாளாம்_நாளாம்_திருநாளாம்...!_💏👩‍❤️‍👨


... நம்ம கல்யாணம் ஆன புதிசில உங்களுக்கு என்கிட்ட ரொம்ப பிடிச்சது என்ன?...😍

... நான் சொன்னா நீ கோச்சுக்க கூடாது. சரியா?...🌝

...நிச்சயம் இன்னிக்கு கோச்சுக்க மாட்டேன்...😉

...கல்யாணம் முடிஞ்ச ஒரு வாரம் கழித்து முதன் முதலா  நீ ஒரு ரவா உப்மா...🤭

...நிறுத்துங்கோ! நான் பண்ணின உப்மா சரியில்லனு சொல்லப் போறேளா😡 நான் கேட்டது வேற😠...

...நான் சொல்லி முடிக்கவே இல்ல. கோச்சுக்காத. அந்த கொழகொழ உப்மாவை பண்ணிட்டு உன் மாமியார்கிட்ட கமெண்ட் வாங்கிண்டு பாவமா நின்னியே..அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சதுனு சொல்ல வந்தேன்...😄

...உடனே நீங்க என் ஜாதகத்தை ஒரு ஜோஸ்யர்ட்ட காமிச்சு 'இந்தப் பொண்ணுக்கு சமையல் வருமா'னு கேட்டவர்தான...🤨

...அது அப்போ. இப்போ நான் உன் அடிமை. நீ எது சொன்னாலும் தட்டாம பண்ற புருஷன்...🤗

...ஆமாம். இதுக்கொண்ணும் குறைச்சலில்ல...😏

...நல்ல நாள்ள கோபப்படாத!இன்னிக்கு எல்லா வேலையும் நான்தான் பண்ணப் போறேன். சமையலும் பண்ணுவேன்..ஆனா பூஜை பண்ணணும். அதனால
அதை மட்டும் நீ பண்ணிடு...😊

அட..எலி 🐀தானா வந்து வலையில் மாட்டிடுத்தே! பருத்தி புடவையா காச்ச மாதிரிதான். Enjoy என என் மனசு குதூகலிக்க..💃

...ஒரு கண்டிஷன். நீங்க பண்ற வேலையெல்லாம் நான் ஃபோட்டோ, வீடியோ எடுப்பேன். எதுவும் சொல்லக் கூடாது.ஓகேயா?...☺️

...ஓ..வீடியோ எடுத்து குழந்தைகளுக்கு அனுப்பப் போறயா? தாராளமா அனுப்பு...🤩

என் மனசுக்குள் மத்தாப்பு💥 இன்றைய மத்யமர் பதிவுக்கு வீடியோ ரெடி பண்ணியாச்சு😀

நம் வாழ்வின் மறக்க முடியாத நாட்கள் நம் பிறந்தநாளும் மணநாளும். இன்று எங்கள் 45வது  திருமணநாள். Sapphire anniversary. இன்று காலை எங்களுக்குள் நடந்த உரையாடல்தான் மேலே இருப்பது!

திருமணத்தின் போது என் வயது 18. ஏதோ ஓரளவு சமையல் தெரியும். பள்ளிப் படிப்பு முடித்து வீட்டில் இருந்த இரண்டு வருடங்களில் என் அம்மாவின் மூன்று நாட்கள் மட்டுமே..அதுவும் என் அப்பா துணையுடன் சமைத்த அனுபவங்கள் மட்டுமே!🍲🍛

திருமணமாகி வந்தவுடன் 'நீதான் இனிமேல் சமையல்' என்று என்னை சமைக்க சொல்லிவிட்டு தான் ஹாயாக ஹாலில் போய் உட்கார்ந்து விட்டார் என் மாமியார்! 'அம்மா..இந்த உப்பு போறுமா' என்றால் 'எனக்கு அப்படிலாம் சொல்லத் தெரியாது. நிதானமா போடு' என்பார். நிதான
மான்னா...மெதுவாவா?!🤔

திருமணமானால் ஜாலியா இருக்கலாம்😍 என்று கனவு கண்ட என் நினைப்பு அன்றே புஸ்வாணமாயிற்று🙁 ஏதோ தட்டுத் தடுமாறி சமைக்க ஆரம்பித்தேன். அந்த உப்மா..என்னாலயே சாப்பிட முடியவில்லை! என் கணவருக்கு உப்மாவே பிடிக்காதாம். 'உன் உப்மா சாப்பிட்ட பிறகு உப்மாவை சுத்தமா மறந்தே விட்டேன்' என்றார்.

(உப்மா சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்று சமீபத்தில் படித்தேன். உப்மா வயிற்றில் ஊறி உப்பிக் கொண்டு மூச்சுவிட முடியாமல் போய் விடுமாம். அதனால் மனைவியர்களை உப்மா செய்து கணவருக்கு சாப்பிட கொடுக்காதீர்கள் என்ற எச்சரிக்கை வேறு!! இந்த விஷயம் நம் மத்யமர் சகோதரர்களுக்கு சர்க்கரையாக இனிக்குமே!😆)

 என் மாமியாரோ 'உன்னை பெண்பார்க்க வந்தப்போ உங்கம்மா மைசூர்பாகு நன்னா பண்ணிருந்தாளே. உனக்கு தெரியுமா?' என்ற கேள்வி வேறு.🥺

என் வீட்டுக்கு போகும்போது அம்மாவிடம் ஸ்வீட்லாம் செய்ய கத்துண்டு வருவேன்.எந்த
சமையல் புத்தகம் பார்த்தாலும் வாங்கி விடுவேன். என்னைப் பொறுத்தவரை மீனாட்சி அம்மாளின் சமைத்துப்பார் is the best! அளவுகள் அப்பழுக்கின்றி இருக்கும்.🥣

அதன் பின்பு எல்லா சமையலும் செய்து பார்த்து கற்றுக் கொண்டேன். ரவா உப்மாவை என் கணவரே 'இன்னிக்கு ரவா உப்மா பண்றயா?சாப்ட்டு நாளாச்சு' என்கிற நிலை! பல ரெசிபிகள் நன்றாக வரும்..சில காலை வாரும்..(சரியா வராத ரெசிபிகளை மத்தவா கண்லயே காமிக்க மாட்டேன்!!) இன்று நானே புதிதாக செய்யும் அளவு தேறியாச்சு. அப்பப்ப தமிழ் magazinesல போட்டிக்கல்லாம் போட்டு ப்ரைஸ்லாம் வாங்கியாச்சு. இப்போ 25 பேருக்கு ஈஸியாக சமைக்க முடியும்.🍨🥤

என் கணவர் வீட்டு வேலை செய்வதில் கில்லாடி! எல்லா வேலைகளிலும் அவர் உதவி உண்டு! என் மாமியாரும் அவருமாக இருந்தபோதே அம்மாவுக்கு கிச்சனில் ஹெல்ப் பண்ணியிருப்பதால் பல வேலைகள் தெரியும்.

குழந்தைகள் ஸ்கூல் போகும் நாட்களில் நான் சமையலில் பிஸி. அப்பல்லாம் குழந்தைகளை குளிப்பாட்டி யூனிஃபார்ம் போட்டு தலைவாரி நெற்றியில் விபூதி இட்டு, (என் பெண்ணுக்கு மட்டும்தான் நான் பண்ணுவேன்)புத்தகங்கள் எடுத்து வைத்து... இப்பவும் 'அப்பா மாதிரி நீ perfect இல்லமா' என்பார்கள்  குழந்தைகள்!🤷

சமையலும் நன்றாக செய்வார். கால்கிலோ உருளை, சேம்பு கறி பண்ண...என்ன ஒரு கால் கிலோ நெய் போறும்!!! மொறுமொறுனு ரோஸ்ட் ஆகிருக்கும். இப்பவும் என்னிடம் 'கறிக்கு இன்னும் நெய் விட்டு ரோஸ்ட் பண்ணணும்'பார்😀

எனக்கு காலில் ஆபரேஷன் ஆனபோது ஒன்றரை மாதம் அவர்தான் அத்தனை வேலை
களும் செய்தார். இப்பொழுது நாங்கள் மட்டும் தனியாக இருப்பதால் அதிக வேலை கிடையாது. ஆனாலும் 'நானும் ஹெல்ப் பண்ணுவேன்' என்று காய்கறி நறுக்குவது, துணி உலர்த்துவது, பாத்திரம் தேய்ப்பது எல்லா வேலையும் செய்வார். கேட்டால் 'பெட்டர் ஹாஃப் னா இப்படிதான் இருக்கணும்' என்று விளக்கம் வேற தருவார்!👩‍❤️‍👨

எப்படியோ மத்யமர்க்குனு சொல்லாம இன்னிக்கு அவர் வேலையை வீடியோ எடுத்தாச்சு! இன்னிக்கு wedding day க்கு வெளில போகவும் வழியில்ல. ஆனா கிஃப்ட் வாங்காம விடுவேனா! போன மாசமே பவுன்ல ஜிமிக்கியும், second channel க்கு குட்டி வைரத் தோடும் வாங்கியாச்சு.

இந்த வருஷ wedding day கொரோனாவோட கப்சிப்னு ஆயிடுத்து...இதுவரை இல்லாத விதமா மறக்க முடியாததாவும் ஆயிடுத்தே!

Saturday, 4 April 2020

இந்த நாள் என்று மாறும்?நாமெல்லாம் Curfew எப்பொழுது முடியுமென்று காத்திருக்கிறோம். விரைவில் சரியாக கடவுளை வேண்டுவோம்.

ஒருவேளை  இந்த நிலை மீண்டும் வந்தால்...வீட்டில் எப்படி பொழுதைக் கழிப்பது என நினைக்கிறீர்களா? கீழே நான்
எழுதியுள்ள சில விஷயங்களை செய்து நம் நாட்களை சிறப்பானதாக்குவோமே!

⏱️அலாரத்தை அணைத்து விடுவது..!
🛌 காலையில்அவசரமில்லாமல் எழுவது
🙏🏼🛐 பிரார்த்தனை
🧘 தியானம், யோகா
📿 நாமஜபம்
🛁 நிம்மதியான குளியல்
🍽️ புதுவகை சமையல் செய்வது
🍛🍲🥣 சுவையாக சாப்பிடுவது
🍵 டீ காஃபி நேரத்துக்கு..
🏋️ உடற்பயிற்சி
👨‍👩‍👧‍👧குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது
♟️🎲🧩 Indoor games விளையாடுவது
📈 🖥️ Work from home
📺 தொலைக் காட்சி
🎼 பாட்டு
💻 கம்ப்யூட்டர்
🖋️எழுதுவது
📖 பிடித்ததை படிப்பது
🎮 CD games
🧵தையல் வேலைகள்
🧶ஸ்வெட்டர் பின்னுவது
🎨🖌️பெயிண்டிங், ஓவியம்
📲 உறவினர் நண்பர்களுடன் ஃபோன் செய்து பேசுவது
🧹🚮 வீட்டை சுத்தம் செய்வது
👗👕துணிகளை அடுக்கி வைப்பது
👖துணி தோய்த்து இஸ்திரி செய்வது
🧳✈️ (கொரோனா முடிந்தபின்!) வெளியூர் செல்ல plan செய்வது
📚 பிடித்த புத்தகங்களை படிப்பது
👨‍👩‍👧‍👦குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது
🤳 Selfie எடுத்துக் கொள்வது..
💃 மறந்த கலைகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வது
📸 புகைப்படம் எடுப்பது
🛋️  ஆற அமர உட்கார்ந்து Rest எடுப்பது
🎻 🎺🎷வாத்யங்கள் வாசிப்பது
😌 Relax..Relax..Relax
🔐வீட்டை பூட்டுவதை கண்டிப்பாக மறந்து விடுங்கள்😀😆

இவை தவிர இன்னும் உங்களுக்கு பிடித்த பல விஷயங்கள் இருக்குமே? அவற்றையும் கிடைத்த இந்த நேரத்தில் புதுப்பிக்கலாம்.

மறக்கக் கூடாத விஷயங்கள்...
🧴🚰 அடிக்கடி கை அலம்ப மறக்காதீர்கள்..
💊 மருந்துகளை எடுத்துக் கொள்ள மறக்காதீர்கள்..
😷 கண்டிப்பாக முகமூடியுடன் வெளியே செல்ல மறக்காதீர்கள்..

🏘️ Stay Healthy
🤗 Stay safe
🏡Happy home
💃🕺Enjoy your days

#செல்லமே-#புதுயுகசிறுவர்இலக்கியம்


நானும் என் பேத்தியும்  நிறைய பேசுவோம். என்னிடம் நிறைய கேள்விகள் கேட்பாள். கதைகள் சொல்வேன். ஒருமுறை அவளுக்கு பாரி கதையை சொன்னேன்.

'அந்த காலத்தில் பாரி என்ற அரசன் ஒருவர் பரம்பு என்ற நாட்டை ஆண்டு வந்தார். அவருக்கு இயற்கையை ரசிக்கப் பிடிக்கும்'

'இரு பாட்டி.. இயற்கைன்னா?'

ஆங்கில மீடிய குழந்தைகளுக்கு தமிழ் புரிவதில்லையே!

'இயற்கைன்னா nature.புரிஞ்சுதா?'

'ஓ..புரிஞ்சுது. அதாவது beautiful flowers, cute animals, big trees அதல்லாம்தானே?'

'ஆமாம். அவர் அடிக்கடி காட்டுக்கு போய் மரம் செடி கொடியல்லாம் ரசிச்சுட்டு வருவார்'

'அப்டீன்னா?'

'Enjoy பண்றதுனு அர்த்தம். அப்படி ஒரு முறை தன் தேர்ல ஏறி காட்டில் பாரி போய்க் கொண்டிருந்தபோது ஒரு முல்லைப்பூ கொடி ஒண்ணு கீழ விழுந்து கிடந்தது.'

'கொடின்னா..national flagதான?'

'இல்ல climber. நீ படிச்சிருப்பயே climberனா என்ன?'

'ஓ..அதுவா? ..cucumber, bitter guard, jasmine அதெல்லாம்தான..கரெக்டா?'

'கரெக்ட். முல்லைப் பூங்கற்து jasmine மாதிரி பூ. அது climb பண்ண முடியாம கீழ விழுந்து கிடந்தது. காட்டில யார் அதுக்கு கொம்பு நட்டு படர விடுவா? அதைப் பார்த்த பாரிக்கு மனசு ரொம்ப கஷ்டமாயிடுத்து.'

'நீ சொல்ற மாதிரி பாவம்னாரா?'

எனக்கு சிரிப்பு வந்தது.என்னை எவ்வளவு தூரம் இவள் கவனித்திருக்கிறாள் என்று பெருமையாகவும் இருந்தது.

'அதை நிமிர்த்தி நிறுத்த அங்க மரம் எதுவும் இல்ல. உடனே பாரி என்ன பண்ணினார் தெரியுமா? தன்னுடைய தேரை அது பக்கத்துல நிறுத்தி அந்த செடியை அதில் ஏத்தி விட்டார்.'

'அவர் great பாட்டி! ஒரு குட்டி செடிக்காக தன்னோட costly தேரையே விட்டுட்டு வந்துட்டாரா?'

'ஆமாம். அதனால் அவரை எல்லாரும் புகழ்ந்து 'பாரி வள்ளல்'னு பாராட்டினா'

'wait..wait..வள்ளல்னா?'

'யாராவது கஷ்டப்பட்டா அது மனுஷாளோ அனிமலோ பறவையோ..அதுக்கு தன்னைப் பற்றி நினைக்காம ஹெல்ப் பண்றவாளுக்கு தமிழ்ல வள்ளல்னு பேர்'

'ஓ..அப்படியா?'

'அதுபோல நாமளும் யார் கஷ்டப்பட்டாலும் நம்மால முடிஞ்ச  help பண்ணணும்..கதை பிடிச்சுதா?'

'சூப்பர் பாட்டி' என்றவள் ஏதோ யோசித்து,
'பாட்டி என்னோட கீழ வாயேன்' என்றாள்.
அங்கு அழகிய நாய்க்குட்டி ஒன்று படுத்துக் கொண்டிருந்தது. இவளைப் பார்த்ததும் வாலை ஆட்டிக் கொண்டு சற்று நொண்டியபடி ஓடி வந்தது.

'இந்த பப்பி ஒருநாள் நொண்டிண்டே நம்ம பில்டிங் வாசல்ல நின்னுண்டிருந்தது. வாட்ச்மேன் விரட்டினார். நான் பிஸ்கட் போட்டு உள்ளே அழைச்சுண்டு வந்தேன். பாவம்தான பாட்டி இது?'

'அழகா இருக்கே' நான் அதன் முதுகைத் தடவ வேகமாக வாலை ஆட்டியது.

'உனக்கு நாய் வளர்க்க ரொம்ப பிடிக்கும்னு அப்பா சொன்னாளே'

'ஆமாம். சின்ன வயசுல வளர்த்திருக்கேன்.மேல சொல்லு'

'அன்னிலருந்து இங்கயே இருக்கு. நான் தினமும் பிஸ்கட் போடுவேன். இப்பல்லாம் என் ஃப்ரண்ட்ஸும் போட்றா. அது கால் சீக்கிரம் சரியாகணும்னு godகிட்ட வேண்டிக்கோ பாட்டி'

'நிச்சயம் சரியாயிடும். நாயைத் தொட்டா மறக்காம கை அலம்பு.'

'பாட்டி..நானும் பாரி மாதிரி நல்லவதான? அவர் ராஜா..தேர் கொடுத்தார். எனக்கும் இந்த பப்பியை வீட்டுல வளர்க்க ஆசைதான். ஆனா அம்மா கோச்சுப்பா. அதனால தினமும் அதுகூட விளையாடிட்டு பிஸ்கட் ப்ரெட்லாம் போட்றேன்.'

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த வயதில் அவளின் அன்பு என்னை ஆச்சரியப் படுத்தியது. அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டேன். 'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்'என்ற பாரதி பாடல் நினைவு வந்தது.

Tail piece..
இது இரண்டு வருடம் முன்பு..இப்பொழுது அவள் Blue Crossல் சேர்ந்து ஒவ்வொரு ஞாயிறன்றும் சென்று நாய்களுடன் நேரம் செலவழித்து சந்தோஷப் படுகிறாள்.

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை


ஆலயங்கள் மூடியதும் இறைவனை தரிசிக்க முடியாததும் என் மனதுக்கு மிக வருத்தமாக இருந்தது. அதைப் பற்றி யோசித்தபோது எனக்கு தோன்றியதை எழுதினேன்.

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை🙏🏼

நாரதர் வைகுண்டம் வருகிறார். நாராயணனைப் பணிந்து வணங்குகிறார்.

..நாராயண..நாராயண..

..வா நாரதா. நலமா?

..தங்கள் அருளால் நலம் தேவா.

..உன் முகம் வாடியிருப்பதன் காரணம் என்னவோ?

..என்ன சொல்வது ப்ரபோ. உங்களுக்கு தெரியாததா?பூலோகம் இன்றிருக்கும் நிலைமை அறியாதவரா தாங்கள்?
ஏன் இந்தக் கஷ்டம் ஐயனே?

..பூவுலகில் அதர்மம் அதிகமாகும்போது நான் அவர்களைத் தடுத்தாட் கொண்டு அருள் செய்வது நீ அறிந்ததுதானே?அதைத்தான் இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறேன்.

..அப்படியென்றால் கலியுகம் முடியப் போகிறதா பரந்தாமா?

பகவான் சற்று பெரிதாக சிரித்தார்!

..என்ன கேள்வி கேட்கிறாய் நாரதா.அதற்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் உள்ளன.

..முன்பெல்லாம் அரக்கர்களை உருவாக்கி நல்லவர்களைக் காப்பாற்றினீர்கள். இப்பொழுது ஏதோ கிருமியாமே? அப்படியென்றால்..?

..இப்பொழுது பிரம்மன் படைத்த மனிதர்களே அரக்க குணத்துடன் கடவுள் பக்தியின்றி ஆன்மிகத்தில் நம்பிக்கையின்றி மனம் போனவாறு வாழ்கிறார்
களே..அவர்களை நல்வழிப்
படுத்தவே இந்தக் கிருமிகளை உருவாக்கினேன்.

..அது சரி. ஆனால் ஆலயங்கள் மூடப்பட்டு நீங்களும் தனிமைப் படுத்தப்பட்டு விட்டீர்களே? மானுடர்கள்  தம் கஷ்டங்களைப் போக்கிக் கொள்ள தங்களை நாடி ஆலயங்களுக்குதானே வருவார்கள்?

..உண்மை. ஆனால் உலக நலனை வேண்டி வருபவர்களை விட  தானும் தம் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டி மிகப் பெரிய அளவில் அபிஷேக ஆராதனைகள் செய்ய வருபவர்களே அதிகமாக இருப்பர். என் சிலைகளையே கடத்தி விற்று சம்பாதிப்பவர்கள் இதில் எத்தனை ஊழல் செய்வார்களோ? உண்மையான பக்தியுடன் என்னை நாடி வருபவர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். அதனால்தான் நான் ஒதுங்கி விட்டேன். நிஜமான பக்தி உள்ளோர் வேறு வழியின்றி வீட்டிலேயே என்னை வழிபடுவார்களே?

..எனக்கு இது சரியாகப் படவில்லையே சுவாமி.உங்கள் அருகாமை தேவையானபோது நீங்கள் ஒதுங்கிவிட்டதாக பேசுவார்களே?

..தவறு நாரதா. நான் இவ்வுலகம் முழுதும் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருக்கிறேன். நான் உங்களையெல்லாம் காப்பாற்றும் பொறுப்பில் உள்ளேன். என் குழந்தைகளை நான் கஷ்டப்பட விடுவேனா? என்னை முழுமையாக நம்புபவர்கள் என்றும் பக்தி வழியிலிருந்து விலக மாட்டார்கள். உலகில் நாத்திகம் அதிகமாகும்போது என்னை நிலைநாட்டிக் கொண்டு 'என்னை பக்தியுடன் பணிபவர்களை நான் கைவிட மாட்டேன்' என்பதை இவ்வுலகுக்கு உணர்த்தவே இந்த லீலை.

..இது இன்னும் எத்தனை நாளைக்கு  இறைவா?

..கவலைப்படாதே. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் அதனை வெல்லும்.
"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்-பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்" என்று நான் கீதையில் உரைத்ததை மறந்து விட்டாயா நாரதா? உலகம் என்னை அறியவே  இந்த திருவிளையாடல். கவலைப் படாதே.விரைவில் உலகம் பூராவும் என் நாமம் ஒலிக்கும். மக்களின் இடர் நீங்கி நன்மை உண்டாகும்.

..உமக்கு எல்லாமே விளையாட்டுதான். நான் சென்று வருகிறேன் ப்ரபோ.
நாராயண..நாராயண..

என்வாழ்வின்பொன்னானதருணங்கள்


கடவுளால் அளிக்கப்பட்ட இவ்வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும்  பொன்னானவைதான் என்பது என் எண்ணம்.

அன்பான பெற்றோர், அருமையான கணவர், அழகான குழந்தைகளை அடைந்த நேரம் பொன்னானதுதானே!

தமிழகத்தைத் தாண்டாத எனக்கு திருமணமாதும் வடக்கே வாழும் வாய்ப்பு. கணவருடன் கைகோர்த்து கண்மலர்ந்து தாஜ்மகாலை ரசித்து அதன் அழகில் சொக்கிய நேரம் மறக்க முடியாத சொக்கத் தங்கமான தருணம்!

பின் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட அவர்களின் படிப்பு  மற்றும் இதர திறமைகளில் ஊக்குவித்து அவர்களைப் பத்தரை மாற்றுத் தங்கங்களாக  உயர்த்த நேரம் போனதே தெரியாமல் உழைத்த தருணங்கள் பொன்னானதே!

மூத்த மகன் +2வில் தமிழகத்தில் மாநில மூன்றாமிடமும், அடுத்த பிள்ளை +2வில் மாநில முதலிடமும் பெற்று என்னை ஈன்ற பொழுதின் பெரிதுவக்க வைத்த பொன்னான தருணங்கள் நினைக்கும்போதே மனம் நிறைப்பவை!

இரண்டாம் மகன் +2வில் Commerce பிரிவு எடுத்து மாநில முதலாக வந்து திரு சேஷன், அன்றைய முதல்வர் திரு கருணாநிதி ஆகியோரிடம் பரிசுகள் பெற்றதோடு KKR பாமாயில் கம்பெனியாரின் மாருதி கார் பரிசு பெற்றதும் என் வாழ்வின் ஜொலிக்கும் தங்கத் தருணங்கள்!

என் மகள் மருத்துவரானதும், கடைக்குட்டி மகன் IITயில் M.Tech படித்து சிங்கப்பூரில் வேலைக்கு சென்றதும் 'என் தங்கமே' என்று அவர்களைப் பாராட்டிப் பரவசமடைந்த  ஹால்மார்க் தங்கத் தருணங்கள்!

மாற்றுக் குறையாத தங்கம் போன்ற மருமகள்களும், இன்னொரு பிள்ளையாக மாப்பிள்ளையும், நவரத்தினங்களாக பேரன் பேத்திகளும் கிடைத்த நேரங்கள் ஒரு நல்ல சிறப்பான வாழ்க்கை கிடைத்ததை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறிய  தங்கத் தருணங்கள்!

புத்தகங்களில் மட்டுமே படித்தறிந்து அவற்றின் அழகில் சொக்கிப்போன பாரிஸையும், ஸ்விஸ்ஸையும் பார்க்க முடியுமா என்று ஆசைப்பட்ட எனக்கு அவை மட்டுமல்லாமல் கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம், பாலியின் இந்து ஆலயங்கள், பாங்காக்கின் டைகர் டெம்பிள்,ரோமின் கொலோசியம், வாடிகனின் புகழ் பெற்ற சர்ச், லண்டன்  பக்கிங்காம் அரண்மனை என்று பல நாடுகளையும் கண்டு மகிழக் கிடைத்த  வாய்ப்புகள் தகதகக்கும் தங்க நினைவுகள்!

பாரத நாட்டின் பல ஆலயங்களை தரிசித்திருந்தாலும் சமீபத்தில் சென்று தரிசித்த  சார்தாம் யாத்திரையில் கேதார்நாத் ஈசனை தொட்டு வணங்கியபோது 'பொன்னார் மேனியனை தரிசித்து பிறந்த பயனை அடைந்து விட்டோம்' என்று மெய்சிலிர்த்த பொன்னான தருணம்!

முப்பது வருடங்களாக தமிழ் இதழ்களில் கதை, கட்டுரை, போட்டிகளில் எழுதி அவை பிரசுரமாகி அவற்றை இதழ்களில் கண்டு சந்தோஷிக்கும் நேரம் பொன்னே கிடைத்ததாய் மகிழ்ந்த நேரங்கள்!

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மத்யமரில் பல தலைப்புகளில் எழுதுவதும், அவற்றிற்கு பல மத்யமர்களின் பாராட்டுகளும், எழுத்துத் திறமையை ஊக்கப்படுத்தும் பூஸ்ட்டாக அட்மின்களால் கொடுக்கப்பட்ட  ஏழு POTW மற்றும் 2 GEMம் பெற்ற நேரங்கள் 'இங்கு நம் எழுத்துக்கும் மதிப்பு இருக்கிறது' என்று மனம் களிப்படைந்த நிமிடங்கள் தரம் குறையாத பொன்னான தருணங்கள் மட்டுமா என்னை வானில் சிறகடித்து பறக்க வைத்த தருணங்களும் கூட!

நான் போடும் பலவகைக் கோலங்கள், இசையுடன் இயைந்து பாடும் கீர்த்தனைகள், விதவிதமாய் செய்யும் பாரம்பரிய மற்றும் புதுவித சமையல்கள், என் blouseகளில் நானே உருவாக்கி தைக்கும் டிசைன்கள், அழகிய கைவேலைகள்..இவற்றை மனம் ஒன்றி செய்து அவை சிறப்பாக அமையும்போது அந்த நேரங்கள் நானே மகிழும் தங்கத் தருணங்கள்! இன்னும் இதுபோல் நிறைய்...ய!

ஒரு இல்லத்தரசியாக இருந்து எல்லா கடமைகளையும் முடித்து என் கணவருடன்  இனி இறை சிந்தனையுடன் வாழும்  வானப்ரஸ்த வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இப் பொன்னான நேரத்தில் 'இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையில் நாம் என்ன சாதித்தோம்' என யோசிக்க வைத்து அந்தப் பொன்னான நேரங்களை மீண்டும் நினைத்துப் பார்க்க வைத்த மத்யமருக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏🏼🙏🏼

உலகம் முழுக்க விடுமுறை..!

ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபட்ட நாட்களில்தான் விடுமுறை விடுவார்கள். ஒட்டு மொத்தமாக எல்லா நாடுகளுக்கும் விடுமுறை கொடுத்து நாம் கேள்விப் படுவது இதுவே முதன்முறை!

இன்றைய நம் நிலையை நினைத்துப் பார்க்கிறேன். நான்கைந்து மாதங்களுக்கு முன்பு இது போன்ற நிலைமையை நாம் யோசிக்கக் கூட இல்லையே? கோடை விடுமுறைக்கு எங்கே எவ்வளவு நாள் போகலாம் எப்படியெல்லாம் enjoy பண்ணலாம் என்று எவ்வளவு முடிவு செய்து வைத்திருந்தோம்? இன்றோ வாசல்படியைக் கூட தாண்ட  முடியாத நிலை. வெளியூர்களில் வெளிநாடுகளில் இருக்கும் குழந்தைகள் பற்றிய கவலை.

70, 80 ஆண்டுகளுக்கு முன்பு நம் பெரியோர்கள் நமக்கு காட்டித் தந்த வாழ்க்கை நெறிமுறைகளை நாம் இன்று கடைப் பிடிக்கிறோமா?

அன்றைக்கு மடி ஆசாரம் என்று பெரியவர்கள் சொன்னதை இந்நாளில் கேலி செய்து புறம் தள்ளினோம். சாதத்தை தொட்டால் கை அலம்ப வேண்டும், கீழே அமர்ந்து சாப்பிட வேண்டும், சாப்பிட்ட இடத்தை துடைக்க வேண்டும் என்பதெல்லாம் மறந்தோம்.

வாசலில் சாணி கரைத்த தண்ணீரை தெளித்தால் கிருமிகள் வீட்டுக்குள் வராது, வெளியில் போய் விட்டு வந்தால் கை கால்களை அலம்ப வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை என்றானது. தலைமுடியைத் தொட்டாலும், நகம் வெட்டினாலும் கை அலம்ப வேண்டும் என்றதெல்லாம் கிருமிகள் நம்மிடமிருந்து விலக என்பதை அறியவில்லை.

வாசலில் கோலம் போடுவது தீய சக்திகளை உள்நுழையாமல் தடுக்கும் என்ற நம்பிக்கை
யெல்லாம் பத்தாம்பசலித்தனம் என்றாகி ஸ்டிக்கர் கோலம் இடம் பிடித்தது. வாசலில் மட்டுமா..பெண்களின் நெற்றியிலும் குங்குமம் வைப்பது அநாகரிகமாகி ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது.

ஒரு குழந்தை போதும் என்ற மனோபாவம் வளர்ந்தது.  ஒருவருக்கு ஒரு வீடு என்பது போக இரண்டு மூன்று வீடுகள்.  எல்லோரிடமும் எக்கச்சக்க   பணவசதி. பணத்தால் எதையும் செய்ய முடியும் என்பதால் குடும்ப உறுப்பினர்களே ஒருவருக்
கொருவர் தேவையில்லாமல் போய்விட்டது.

சாப்பாடு கூட ரெடியாகக் கிடைக்கும் போது தாய் தாரம் எதுவுமே அவசியமில்லா
ததாயிற்று. பணம் அதிகமாக கடவுளிடம் பயம் விலகி பக்தியும் காணாமல் போனது. ஆசார அனுஷ்டானங்கள்,  இரு பாலாருக்குமான அத்யாவசிய நியமங்கள் அநாவசியமாகிப் போனது.

ஆலயங்களில் இறைவன் எதிரிலேயே ஊழல், ஏமாற்றுதல், கடவுளை தரிசிக்க பணம் வாங்குதல் என்று 'கடவுளாவது ஒண்ணாவது..அவர் வெறும் கல்' என்று அவரை பணம் சம்பாதிக்க மட்டுமே கருவியாகக் கொண்டு வாழும் மக்கள் அதிகமாகிப் போனது. பாவம் செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்பது போய் பாவம் செய்தாவது சொத்து சேர்க்கும் குணம் அதிகமாயிற்று.

அதர்மம் ஓங்கும்போதுதான் இறைவனின் அருள் வெளிப்படும். நமக்கு துன்பமும், துயரமும் வரும்போது நாம் தட்டுவது  இறைவன் வாழும் ஆலயக் கதவுகளையே.அந்த இறைவனே இன்று கோபித்துக் கொண்டு நம்மை அண்டவிடாது ஆலயக் கதவுகளை அடைத்துக் கொண்டு விட்டாரோ?

நாட்டில் எத்தனை திறமை வாய்ந்த  ஜோசியர்கள்.அவர்களாலும் இப்படி ஒரு நிலைமை வரும் என்பதைச் சொல்ல முடியவில்
லையே. இங்குதான் நாம் இறைவன் இருக்கிறான் என்று உணர முடிகிறது.  அன்றைய வழக்கங்கள் எவ்வளவு ஆரோக்கியமானவை என்று அறிய முடிகிறது. மறந்துபோன கை அலம்பும் பழக்கம் இன்று மறுக்க முடியாத அவசியம் ஆகிப் போனது. என்னே இறைவனின் திருவிளையாடல்.

ஒரு சின்ன கண்ணுக்கு தெரியாத கிருமி எப்படி இவ்வுலகையே ஆட்டி வைத்து கண்ணாமூச்சி ஆடுகிறது! பந்த், வேலை நிறுத்தங்கள் உலகுக்கு புதியல்லை. ஆனால் இன்று போல் உலகின் அத்தனை  தெருக்களும் அமைதியாக இருந்ததுண்டா? பூமியின் பாரம் தாங்காத பூமாதேவி ஓய்வு எடுக்கிறாளோ?! அவளுடன் இணைந்து  சகலமும் சாந்தியில் திளைக்கின்றன. இயற்கை தவிர அத்தனையும் மக்கள் உட்பட ஓய்வு எடுக்கிறோம்!

உலகை நல்வழிப்படுத்தவும் நாடுகளுக்குள் பகைமையைத் தவிர்க்கவும் அமைதியை நிலைநாட்ட போராடிய பெரியோர் எத்தனை பேர்? இன்று கொரோனா என்ற பெயரில் உருவான கிருமி கோடீஸ்வரனிலிருந்து ஒன்றுமே இல்லாத ஓட்டாண்டி வரை அத்தனை பேரையும் பேரமைதியில் ஒடுக்கி விட்டது.

நேரத்துக்கு ஒரு நாடாகப் பறக்கும் ஒரு தொழிலதிபருக்கும் சின்ன சந்தில் வாழும் ஏழைக்கும் வாழ்க்கை ஒரே மாதிரிதான்..வாழ்வதும் ஒருமுறையே என்று ஆணித்தரமாக அறிய வைத்து விட்டது கொரோனா.

இதிலிருந்து மீள நமக்கு ஒரே வழி அந்த இறைவனிடம் கதறி அழுது நம்மைக் காப்பாற்ற வேண்டுவது ஒன்றே.அவன்தாள் வணங்கி அவனருளை வேண்டுவோம். நாம் எவ்வளவு சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அதைத் தீர்மானம் செய்து, நடத்திவைப்பது பகவான் தான். அதனால் எல்லாப் பொறுப்புகளையும்,பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, “பகவானே.! உன் சித்தம்.!" என்று சொல்லி,அவனைச் சரணடைவோம். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை.

இனி வரும் தமிழ்ப் புத்தாண்டு சார்வரியில் நமக்கு புதிதான சுத்தமான பூமியைத் தந்து நம்மை ஆரோக்யமாக வாழவைக்க இறைவனை பிரார்த்திப்போம்.