Saturday 29 February 2020

இறைவ(ன்)னுடன் பேசிய தருணங்கள்..2

காலை எழுந்தது முதல், இரவு வரை இறைவனை ஏதாவது ஒரு விஷயத்துக்கு தொந்தரவு செய்து கொண்டே இருப்பேன். என் வீட்டு பால்கனியிலிருந்து பார்த்தால் மலைக்கோட்டை பிள்ளையார், அருகிலுள்ள சிவாலயம், சற்று தூரத்தில் உக்ரமாகாளி அம்மன்,
சீனிவாசப் பெருமாள் கோவில், கடைசியாக எங்கள் வீட்டிலிருந்து 4,5 கட்டிடம் தள்ளியுள்ள அனுமன் ஆலயம். காலை எழுந்ததும் பால்கனி சென்று அத்தனை தெய்வத்தையும்  வணங்கிய பின்பே காஃபி சாப்பிடுவேன்.

இறைவனுடன்  பேசுவது நான்தான்.பதிலை அவன் செயல்களில் காட்டிவிடுவான்.
என் அம்மாவுக்கு இதயத்தில் பிரச்னை வந்தபோது டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றபோது என் அம்மா மறுத்து விட்டார். 'எனக்கு ஒரே ஆசை..என் பேத்தி கல்யாணத்தைப் பார்க்க வேண்டும்' என ஆசைப்பட்டபோது சத்யசாயி பாபாவிடம்..சாய்ராம். என் அம்மாவை இன்னும் நான்கைந்து வருடங்கள் நல்லபடியா வை. பிறகு உன் இஷ்டம்..என கோரிக்கை வைத்தேன். பேத்தி கல்யாணத்தோடு பேரன் நிச்சயதார்த்தமும் பார்த்தபின்பே மறைந்தார்.

நாங்கள் ஜெர்மனியில் என் மருமகள் பிரசவத்திற்கு சென்றபோது என் அப்பா உடல்நிலை மோசமாகி வென்டிலேட்டரில் வைத்ததாகவும் என்னை வரச் சொல்லியும் தம்பி சொல்லிவிட்டான்.

எனக்கோ தர்மசங்கடம். குழந்தை பிறந்து 10 நாள்கூட ஆகவில்லை. டிக்கெட் விலை வேறு அதிகம். நான் ஒரே பெண். அப்பாவைப் பார்க்காமல் இருக்க முடியாது. குழப்பத்திற்கு ஒரே தீர்வாக சுவாமிநாதனிடம்..என் அப்பாவை நார்மல் ஆக்க வேண்டியது உன் வேலை. வந்து உனக்கு ஒரு அபிஷேகம் செய்கிறேன்'என ஆர்டர் போட்டேன்.

இரண்டு நாளில் அப்பா நார்மலாகியதாக செய்திவர, அடுத்த மாதம் திரும்பியபோது நேராக சென்று அப்பாவைப் பார்த்தோம். ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அடுத்த 2 மாதத்தில் மீண்டும் உடல்நிலை அதிகமாக அவரது கடைசி நாட்களில் நான் உடனிருந்தது என் பாக்கியம்.

என் கணவருக்கு திடீரென்று பேசமுடியாமல் போக பல டாக்டர்களைப் பார்த்தும் எந்த ப்ராப்ளமும் இல்லை என்று சொல்லி, Speech therapy மட்டுமே போதும் என்று சொல்லி
விட்டார்கள். ஆனாலும் சுற்றியிருப்பவர்கள் சொன்னவை..'பேச்சே வராது, குளறிதான் பேச முடியும், அவருக்கு இப்படி ஆச்சு.இவர் திக்கிதிக்கி பேசுவார்' என்றெல்லாம் சொல்ல எனக்கு பயம் அதிகமாகி விட்டது. கணீரென்று தினமும் ருத்ரம் சொல்லி பூஜை செய்பவர் மனதுக்குள்ளேயே சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை.

எங்கள் குலதெய்வத்திடம் 'ஏன் இப்படி அவரைக் கஷ்டப்படுத்தற? அவர் குரல் சரியாகிய பின்பே உன் சந்நிதி வருவேன். அவர் ருத்ரம் சொல்லி உனக்கு அபிஷேகம் செய்ய சீக்கிரம் அவருக்கு குரல் கொடு' என்று கண்டிஷன் போட்டேன்.

ஆறு மாதங்களுக்கு பின் அவர் பழையபடி பேசியபோது நேராக குலதெய்வம் சந்நிதி சென்று கண்ணீர் மல்க நன்றி சொன்னேன்.

'ஏய்..கண்ணா மரியாதையா நான் கேக்கறதை நடத்திக் கொடுத்துடு' என்று மிரட்டுவதும் உண்டு! அவனைக் கெஞ்சியதும் உண்டு..கொஞ்சியதும் உண்டு!

நான் வேண்டியது நடைபெறாதபோது 'இனிமேல் உன்னோடு பேசமாட்டேன். உன் இஷ்டப்படி என்ன வேணா பண்ணு. என் கஷ்டத்தை நான் பொறுத்துக்க சக்தியை மட்டும் கொடுத்துடு' என்று கோபிப்பேன்.

இறைவன் அருளிய அனுபவங்கள் ஏராளம்..அதில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த அனுபவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்கு
கிறது. திருச்சிக்கு அருகில் சிறிது தூரத்தில் பாலையூர் என்ற இடத்தில் எங்களுக்கு நிலம் உள்ளது. அங்கு சில கொய்யா சப்போட்டா மரங்கள் இருப்பதால் அவ்வப்போது சென்று பார்த்து வருவோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு என் பெண் வயிற்றுப் பேரனும், பேத்தியும் வந்திருந்தபோது அங்கு சென்று வரலாமென்று  சாப்பாடு முடித்து மதியம் ஒரு மணிக்கு எங்கள் நேனோ காரில் கிளம்பினோம். பேரனோடு ஜாலியாக வம்படித்துக் கொண்டு போனபோது எங்கள் தோட்டத்திற்கு செல்ல 10,15 நிமிடங்களே இருக்கும். திடீரென்று வண்டியில் ஏதோ வித்யாசமான சத்தம் வந்தது. என் கணவர் ப்ரேக் போட முயற்சித்தும் க்ளட்ச் வேலை செய்யாததால் முடியவில்லை.  வேகமும் குறைக்க முடியாதபோது என் கணவரும் சற்று பயந்து விட்டார்.

என் பேத்தி பின்னால் மடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.என் பேரன் பயந்து...தாத்தா என்னாச்சு வண்டியை நிறுத்து...என்று கத்தினான்.  நானோ பயந்து கடவுளை யெல்லாம் கூப்பிட ஆரம்பித்தேன். காரின் வேகம் கட்டுப்படுத்த முடியாமல் போய் அடுத்த நொடி அதன் இஷ்டத்துக்கு ஓடி ஒரு பெரிய சத்தத்துடன் வலப்பக்கம் கவிழ்ந்து விட்டது. நான் சாய்ராம் என்றும் என் பேரன் ஜய்பஜ்ரங்பலி என்றும் கத்திவிட்டோம்.

எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. அந்த அரை நொடியில் ஆயிரம் எண்ணங்கள். 'நாம் போனாலாவது பரவாயில்லை. அடுத்தவர் குழந்தைகளுக்கு ஏதாவது ஆனால்' என்று நினைவு வேறு.கார் விழுந்து தலைக்கு மேல் நாலு சக்கரமும் சுற்றி நின்றுவிட, 'அட..நாம் உயிரோடு இருக்கிறோமா' என்று நினைத்தவள், மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று பயந்து கொண்டே பார்த்தேன். நெஞ்சு படபடப்பு.

கார் அப்படியே தலைகீழாக எதிரிலிருந்த மரம் தடுத்ததால் கீழே உருண்டு விழாமல் நின்று கொண்டிருந்தது. என் கணவரும் பேரனும் சீட்டிலிருந்து கீழே விழுந்து மெதுவாக எழுந்து முன் பக்கம் நின்றிருந்தார்கள். நானும் என் பேத்தியும் கார் கவிழ்ந்ததால் கீழே விழுந்து விட்டோம். பேத்தி மலங்க மலங்க அரை தூக்கத்தில் விழித்து ' பாட்டி என்ன ஆச்சு?' என்றது.

கதவைத் திறந்து கீழே இறங்கலாமென்றால் எந்த லாக்கும்  திறக்க முடியவில்லை. கொஞ்சம் ஆடினாலும் கார் ஆடி கீழே விழுந்து விடுமோ என்று பயம். தெருவில் யாரும் இல்லை. காரின் கதவுகளில் நாங்கள் வேகமாகத் தட்ட சத்தம் கேட்டு ஏழெட்டு பேர் ஓடி வந்தார்கள்.

ஒருவர் பலமாக கதவைத் திறக்க முயல, முடியாததால் , 'உள்ளே எத்தனை பேர் இருக்கீங்க? யாருக்காவது அடி பட்டிருக்கா?'என்று கேட்க, அப்பதான் அந்த நினைவு வந்து பார்க்க, அதிசயம்..நாலு பேருக்கும் ஒரு கீறல் இல்லை. என் மனமோ என் வசமே இல்லை. பயத்தில் உடல் நடுங்க 'கிருஷ்ணா சுவாமிநாதா சாய்ராமா எதுவும் ஆகாமல் காப்பாத்து'என்று சுலோகங்களை சொல்ல ஆரம்பித்தேன்.

'கண்ணாடியைத் திறங்கம்மா' என்று ஒருவர் சொல்ல, முடியவில்லை என்று சைகை காட்டினோம். மீண்டும் முயற்சிப்போம் என்று திறக்க..என்ன அதிசயம்..
கண்ணாடி திறந்து கொண்டது.

என் கணவரும் பேரனும் மெதுவாக வெளியிலிருப்பவர்கள் உதவியுடன் வெளியே குதித்து விட்டனர். பேத்தியை தூக்கி இறக்கியாச்சு. என்னால் சாய்ந்திருந்த சீட்டில் ஏறிக் காலை வெளியில் வைக்க முடியவில்லை. கவிழ்ந்து விட்டதால் மேலிருக்கும் கண்ணாடி கீழே வந்துவிட்டது. வெளியிலிருந்தவர்..பயப்படாதீங்கஎன் காலில் ஏறி மெதுவா இறங்குங்க'என்றபடி தன் காலால் தாங்கிக் கொண்டார். அந்த நேரம் அவர் தெய்வமாகத் தெரிந்தார். கீழே ஒரே முள்செடிகள்..ஏப்ரல் மாதம்..நல்ல வெயில். என் செருப்புகள் காரில் அவிழ்ந்து விட்டதால் சூட்டில் நிற்க முடியவில்லை.

கார் விழுந்த இடத்திற்கு பின்னால் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. எங்கள் கார் விழுந்தபோது மதிய சாப்பாட்டு மணி அடிக்க பிள்ளைகள் வெளி மைதானம் வந்தபோது எங்கள் சத்தம் கேட்டு ஏதோ விபத்து என்று சொல்ல பள்ளி வேலைஆட்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கூடிவிட்டனர். அனைவருக்கும் பெரிய ஆச்சரியம் எங்கள் யாருக்கும் ஒரு காயம் கூட படாதது. இன்னும் சற்று முன்போ தாமதமாகவோ நடந்திருந்தால் எல்லோரும் வகுப்புகளில் இருந்திருப்பார்கள். இதுவும் கடவுள் செயல்தானே?

நாங்கள் பத்திரமாக வெளியில் வந்ததும் 10 பேராக காரைத் தள்ளி மேலே கொண்டு நிறுத்தி விட்டார்கள். 'மரம் இருந்ததால் வண்டி உருளவில்லை. இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்குமோ.நீங்க கும்புடற சுவாமிதான் உங்களை ஒரு காயம் கூட படாமல் காப்பாத்தியிருக்கு' என்றபோது எனக்கு சரியான நேரத்தில் வந்து உதவிய அவர்களும் தெய்வமாகத் தெரிந்தார்கள்.

ஒரு ஆசிரியர் தன் டூவீலரில் என்னையும் பேத்தியையும் அழைத்துச் சென்று பள்ளி ஆசிரியர்கள் அறையில் உட்காரச் சொல்லி பிஸ்கட் கூல்ட்ரிங்க் எல்லாம் வாங்கித் தந்து சாப்பிடச் சொன்னார். ஆனாலும் எனக்கு அந்த அதிர்ச்சியில் எதுவும் வேண்டியிருக்கவில்லை. குழந்தைகளுக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்றியது அந்த தெய்வம்தானே?

என் கணவர் தினமும் பஞ்சாயதன பூஜை செய்பவர். அந்த வருடம் நாங்கள் ஷண்ணவதி செய்து கொண்டிருந்ததால் அன்று தர்ப்ணம், பூஜை எல்லாம் முடித்துதான் கிளம்பினோம். அந்த பூஜாபலனும் பித்ருக்களின் ஆசியும்தான் எங்களைக் காப்பாற்றியது என்று தோன்றியது.

நான் என் பேரன் பேத்தியுடன் வாடகை வண்டி ஒன்றில் ஏறி திருச்சி வந்துவிட்டோம். என் கணவர் இன்ஷ்யூரன்ஸ்க்கு ஃபோன் செய்தபோது, வண்டி என் பிள்ளை பெயரில் இருப்பதால் அவனுக்கு மெஸேஜ் போக உடன் அவன் ஃபோன் செய்து விட்டான்.

நாங்கள் விஷயத்தை அவனிடம் சொல்ல, அவன் மற்றவர்களிடம் சொல்லி வரிசையாக ஃபோன். காயம் படவில்லை என்பதை யாரும் நம்பாமல் வீடியோவில் பார்த்த பின்பே நம்பினார்கள். என் பெண் மாப்பிள்ளை ரொம்பவே பதறி விட்டார்கள். நல்ல
வேளையாக பாதிப்பு எங்களுக்கு இல்லை..முக்கியமாக குழந்தைகளுக்கு...பாவம் கார்தான் சப்பட்டையாகி ஆஸ்பத்திரி போய் வந்தது!

இந்த சம்பவம் கடவுள் நம்முடன் எப்பொழுதும் அரணாக இருக்கிறான், நம்மை கவனித்துக் காப்பாற்றுகிறான் என்ற நம்பிக்கையை அதிகமாக்கியது.அவனுக்கு ஜன்மம் முழுக்க நன்றி சொன்னாலும் போதாது. அதுமுதல் இறைவனுடனான நெருக்கம் இன்னும் இறுகியது.

இறைவன் பேசுவது மட்டுமா..பசித்த நேரத்தில் சாப்பாடும் போட்டிருக்கிறார்! நாங்கள் என் மகனுடன் மலேசியாவில் Battu Caves முருகன் கோவில் சென்றிருந்
தோம். மலை ஏறி தரிசனம் முடித்து வர மதியம் ஆகி பசி வயிற்றைக் கிள்ளியது. கோவில் குருக்களிடம் 'பக்கத்தில் ஹோட்டல் இருக்கா?' என்றபோது, இங்கு vegetarian சாப்பாடு கிடைப்பது கஷ்டம். என்னோடயே சாப்பிடலாம். வாங்கோ'என்று அழைத்துப் போய் கோவில் மடப்பள்ளியில் சாப்பிட்டோம். தான் சுவாமிமலை என்று அவர் சொன்னபோது நாங்களும் அந்த ஊர் என்று தெரிந்து சந்தோஷப்பட்டார். முருகப் பெருமான் அன்று எங்கள் பசியை போக்கியது அவனருள்தானே?

சப்தஸ்தான தலங்களை தரிசித்து வரும்போது திருச்சோற்றுத்துறை ஈசனை தரிசித்த முடித்ததும் அந்த குருக்கள்'நீங்க இங்கயே சாப்ட்டு ரெஸ்ட் எடுத்துண்டு வெயில் தாழ  போங்கோ' என்றார். அந்த ஊர் அன்னதானத்துக்கு பெயர் பெற்றதாம். ஈசனே அவர் வடிவில் தன் பிரசாதத்தை சாப்பிடச் சொன்னதாகத் தோன்றியது.

இதுபோல் இறைவனுடன் நான் பேசுவதும் அவர் பேசாமலே பதில் சொல்வதும் எங்கள் நித்யப்படி வழக்கமாகி விட்டது! 'இனி உன்னிடம் நான் எதுவும் கேட்கப் போவதில்லை. நீ நடத்துவதை நடத்து. இன்றுபோல் என்றும் எங்களை காத்து நோய் நொடியில்லாத வாழ்வு தந்து உன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்' என்பதே என் வேண்டுதல்.

இறைவனிடம்_பேசிய_ தருணங்கள்..1


இறைவனைக் காட்டியதும், அவரால் முடியாததில்லை என்று போற்றியதும், அவரை இறுக்கப் பிடித்தால் நீ இனிமையாக வாழலாம் என்றும் சொல்லிக் கொடுத்ததும் என் அம்மா.

தவறு செய்தால் சுவாமி கண்ணைக் குத்திவிடும், பொய் சொன்னால் வாய் பேசமுடியாது, திருடினால் கையில் காயம் படும் என்றெல்லாம் பயமுறுத்தும் அம்மா ஒரு விஷயத்தை சரியாகப் பண்ணினால் 'சுவாமி பரிசு கொடுக்கும்' என்பார். நாங்கள் நச்சரிப்போம் எப்ப சுவாமி வரும் என்று. சுவாமியை நேரில் பார்க்க ஆசை! 'சுவாமி நம்ம கண்ல படமாட்டார். ராத்திரி வந்து பரிசை தலைமாட்டில் வைத்துச் சென்றுவிடுவார்' என்பார். அதை வைப்பது அம்மாதான் என்று தெரிய ரொம்ப நாளாயிற்று! அப்பவும் அவள் நம்மை ஏமாற்றி யிருக்கிறாள் என்று எண்ணத் தோன்றியதில்லை.

நான் நான்காம் வகுப்பு படித்த சமயம் நடந்த சம்பவம் இது. என் உடன் படிப்பவள் மல்லிகா என்று பெயர், அவள் மாலை நேரம் என் வீட்டுக்கு வந்து என்னுடன் படிப்பாள். ஒருநாள் என் பாட்டு வாத்யாருக்கு கொடுக்க 10ரூபாய்.. புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் (என் அப்பா வங்கியில் பணி புரிந்ததால் எப்பவும் புதிய நோட்டுகள் தான்) அப்பா கொடுத்ததை என் புத்தக அலமாரியில் வைத்திருந்தேன்.என் தோழி படித்து விட்டு கிளம்பிப் போய்விட்டாள்.

நான் பாட்டு கிளாஸ் கிளம்பியபோது  ஒன்பது ரூபாய்தான் இருந்தது. அம்மாவிடம் சொன்னேன். என் ஃப்ரெண்ட் தவிர யாரும் வராததால் அவள்தான் எடுத்திருக்க வேண்டும் என்றார் என் அம்மா. என்னை அனுப்பி அவள் அம்மாவிடம் சொல்லி கேட்டுவா என்றார். நான் கேட்டபோது அவள் தான் எடுக்கவில்லை என்றாள்.

இரவு அப்பாவிடம் விஷயம் சொன்னதும் மீண்டும் அவள் வீட்டில் சென்று 'புதிய நோட்டு இருக்கா?' என்று கேட்பதோடு அந்த நோட்டின் நம்பரையும் குறித்துக் கொடுத்தார். மறுநாள் நான் மீண்டும் போய்க் கேட்டபோது அவள் அம்மாவுக்கே சந்தேகம் வந்து அவளை கோபமாகத் திட்டி விசாரித்த போது, தான்
எடுத்ததாக சொல்லி ரூபாயைக் கொடுத்தாள். என் அப்பா எழுதிக் கொடுத்த அதே நம்பர். அவள் அம்மா என் வீடு வந்து மன்னிப்பு கேட்டார். அதன்பின் அவள் என் வீட்டுக்கு வருவதில்லை. என்னுடன் பேசுவதுமில்லை.

ஒன்றிரண்டு மாதத்திற்கு பின் அவள் மாவு மில்லில் அரைக்கப் போனபோது அந்த மெஷின் சுற்றும்போது கையை விட்டு ஒரு விரலில் மேல்பாதி பாகம் கட் ஆகி விட்டது என்று கேள்விப் பட்டு, என் அம்மாவிடம் சொன்னேன். அம்மா..பாவம். தப்பு செய்தால் தண்டனை சாமி கொடுப்பார்னு சொன்னேனே. பார் அவள் அன்னிக்கு நம்ம வீட்டிலருந்து பணத்தை திருடினதுக்கு இப்டி ஆயிடுத்து பார்..என்றார். அந்த நிகழ்ச்சி என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திட  அது முதல் நான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் உண்டாகியது.

கடவுளை தாய் தந்தை குருவாக மட்டுமன்றி தோழனாகவும் நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை அவர் என் நண்பன். அவரிடம் கோபமும் கொள்ளலாம்..சண்டையும் போடலாம்..நான் எது தேவை என்றாலும் அவரிடம் சற்று வேகமாக  அதிகாரமாகத்தான் பேசுவேன்.

கடவுள் பேசுவாரா? அவர் பேசுகிறாரோ இல்லையோ நான் அவருடன் கண்டிப்பாக பேசுவேன். ஆனால் அதன் பலன் எனக்கு கிடைத்துவிடும்!...இங்க பாரு எனக்கு இந்த வேலை ஆகணும் நீ என்ன பண்ணுவியோ தெரியாது எப்படியாவது நடத்தி வைக்கணும்.
என்பேன்! இதை நான் சத்தமாகவே சுவாமி அறையில் நின்று கடவுளிடம் சொல்வேன்.

அதைப் பார்த்து என் கணவர் 'என்னைஅதிகாரம்
பண்ற மாதிரி சுவாமியையும் பண்ணாத. பாவம் அவர் உன்ட்ட மாட்டிண்டு கஷ்டப்பட்றார்' என்பார்!

'நான் உங்களை சாமி லெவலுக்கு வெச்சிருக்கேன்னு புரிஞ்சுக்கோங்கோ' என்பேன்!

'நான் போனா போறதுன்னு உன்னை பொறுத்துப்பேன். சுவாமிக்கு கோபம் வந்தா உனக்கு காரியமல்லாம் பண்ணிக் கொடுக்க மாட்டார்' என்று கேலி பண்ணுவார்!

என் மகன் ஈரோடில் 10ம் வகுப்பு படித்த சமயம் திடீரென்று ஒரு முழங்காலில் வலி என்றான். சாதாரண வலியாக இருக்கும் என்று மருந்தெல்லாம் தடவியும் சரியாகவில்லை. காலை அசைக்கக்கூட முடியாமல் தவிக்க, டாக்டரிடம்  சென்றபோது அவரும் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். மருந்துகள் முடிந்தும் வலி குறையாம லிருக்க வேறு ஸ்பெஷலிஸ்டிடம் காட்டினோம். X-ray, ஸ்கேன் எல்லாம் எடுத்தும் ஒரு பிரச்னையும் தெரியவில்லை. 3 மாதமாகியும் எந்தபலனும் இல்லை. காலை ஊனி நடக்கவே முடியவில்லை. ஆயுர்வேத மருந்திலும் பயன் இல்லை. டாக்டரை மாற்றியதுதான் மிச்சம். உள்ளூர எனக்கு...இனிமேல் பிள்ளையால் நடக்க முடியுமா... என்றெல்லாம் கவலை,பயம்.
இறுதி ஆண்டுப் பரீட்சைகள் நெருங்கி விட, பள்ளி செல்ல முடியவில்லை. நண்பர்கள் மூலம் நடந்த பாடங்களை வாங்கிப் படித்தான்.

நானும் எங்கள் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டேன். மனதில் திடீரென்று திருப்பதி பெருமாள் 'நான் இருக்கிறேனே.
நினைவில்லையா' என்று கேட்பது போல் தோன்ற, திருமலையானிடம் 'உன் சந்நிதிக்கு என் குழந்தையை மலையில் நடத்தி அழைத்து வருகிறேன். நீதான் அவனை நடக்க வைக்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்டுவிட்டேன். அன்றைய மனநிலையில் நடக்கமுடியுமா முடியாதா என்றெல்லாம் எதுவும் யோசிக்கத் தோன்றவில்லை.

டாக்டர்கள் எல்லா சோதனையும் செய்து மருந்து சாப்பிட்டும் வலிக்கான காரணம் பிடிபடாததால் கோவை சென்று காண்பிக்கலாமா என்று யோசித்தோம். மறுநாள் எழுந்தவனை 'கால் எப்படி இருக்கு?நடக்க முடியற்தா' என்றேன். அவனும் எழுந்து சற்று ஊனிக் கொண்டு நடந்தாலும் வலி இருக்கிறது என்றான். மறுநாள் வலி வெகுவாகக் குறைந்து பிடித்துக் கொண்டு நடந்தவன் அதற்கு மறுநாள் சாதாரணமாக நடக்க ஆரம்பித்தபோது, அந்த திருமலையானுக்குதான் நன்றி சொன்னேன்.

முன் ஜன்ம பாக்கியை இந்த ஜன்மத்தில் கடவுள் வசூல் பண்ணி விடுவார் என்பார் என் அம்மா. அது மாதிரி இந்த மலை ஏறி வந்து தரிசிப்பதும் போலும். சாதாரணமாக இருந்தால் நடந்து செல்வது பற்றி யோசித்திருக்கவே மாட்டோம்.

இதுபோல் இன்னொரு முறை தலைவலி வந்து நான்கு மாதம் சரியாகவில்லை. MRI ஸ்கேனிலும் ஒரு பிரச்னையும் இல்லை. மனம் கலங்கிய நான் அவன் தலைமுடியை காணிக்கையாகத் தருவதாக வேண்டிக் கொண்ட நாலு நாளில் தலைவலி போன இடம் தெரியவில்லை.

அவனருளை நமக்கு செய்ய இதுபோன்ற வேண்டுதல்களையும் நம் மூலம் செய்து நமக்கு புண்ணியம் தருவது அவன் செயலே!
பதிவு நீண்டு விட்டது. இன்னொரு பதிவு தொடரும்...

Thursday 20 February 2020

யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்


ஓம் வஜ்ர நாகாய வித்மஹே;
   தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
   தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!

நரசிம்மர் உக்ர தெய்வம் என்றாலும் தன்னை பக்தியுடன் வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தன் குழந்தை போல் காப்பாற்றுவார். இது நாம் பிரகலாத சரித்திரத்
திலிருந்து அறிந்த விஷயம். ஆந்திரா நரசிம்ம மூர்த்திக்கு மிகப் பிடித்த இடம் போலும்! நிறைய நரசிம்மர் ஆலயங்கள்.மங்களகிரி, அந்தர்வேதி, அஹோபிலம், சிம்மாசலம், யாதகிரி, வேதாத்ரி, மட்டபல்லி என்று நிறைய்ய உள்ளன.

யாதகிரிகுட்டா, தெலுங்கானாவில் உள்ள விஷ்ணுவின் நான்காம் அவதாரமான பஞ்ச நரசிம்மர்
கோவில். இந்தக் கோவில்
ஐதராபாதில் இருந்து 65 கி.மீ துரத்தில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது.

திரேதா யுகம் நடக்கும் போது  இங்கு ஒரு குகையில்
ரிஷிய சிருங்கர், சாந்தாதேவி இருவரின் புத்திரரான யது என்ற ரிஷி அனுமானின் அருள் பெற்று தவம்  இருந்தார். இவருக்கு மஹாவிஷ்ணு தரிசனம் தந்து அருள் புரிந்தபோது, ரிஷியும்
தான் நரசிம்ஹ மூர்த்தியாக அவரைப்பார்க்க விரும்பினார்.
முதலில் ஜ்வாலா நரசிம்ஹ
ராகவும்,  பின்னர் உக்ர நரசிம்மராகவும், பின் கண்டபேருண்ட நரசிம்மராகவும்  தோன்றினார். ரிஷியோ அந்தத் தோற்றங்கள் வேண்டாமென்று கூற யோக நரசிம்மராகக் காட்சி அளித்தார். அதிலும் திருப்தி படாமல் போனதால் சாந்தமாக லக்ஷ்மி நரசிம்மராக தரிசனம் கொடுத்து அருள் புரிந்தார்.  இதனால் இது பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரம் எனப் பெயர் பெற்றது.

பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்கந்த புராணத்தில் இந்த கோயிலை பற்றிய தகவல்கள் உள்ளது. இன்றும் கருவறையில் இந்த ஐந்து ரூபங்களில் நரசிம்மஸ்வாமி
காட்சியளிக்கிறார்.

ரிஷி தவம் செய்த இடம் இப்போதுள்ள கோவிலில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு முனிவர் பல காலங்கள் இறைவனை வழி பட்டு முக்தி அடைந்த பிறகு அங்குள்ள மக்கள் முறை அறியாது வழிபட்டதால் லட்சுமி நரசிம்மர் மலைக்குள் சென்று விட்டார்.

பல ஆண்டுகள் கழித்து ஒரு பக்தையின் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை காட்டி அங்கு  இறைவன் அவரின் ஐந்து உயரிய அவதாரங்களால் காட்சியளித்தார். அவ்விடமே தற்சமயம் குன்றின் மேலுள்ள குடவரைக் குகை ஆலயம். அதன்பின்பே இங்கு  முறையான பூஜைகள் தொடங்கப்பட்டன. இங்கு பாஞ்சராத்ர முறைப்படி பூஜை நடைபெறுகிறது.

இங்கு பல அர்ச்சனை சேவைகள் நடைபெறுகின்றன. நாங்கள் 216 ரூபாய் கொடுத்து சஹஸ்ரநாம அர்ச்சனைக்கு சென்றோம். நரசிம்மர் ஐந்து ரூபங்களில் அழகுறக் காட்சி தருகிறார். 12அடி நீளமும், 30அடி உயரமும் கொண்ட குடவரைக் கோயிலில் பாறையில் சுயம்புவாக காட்சி தருகின்றனர் ஐவரும். அவற்றிற்கு கவசம் அணிவிக்கப் பட்டுள்ளது. ஆஞ்சநேயரும் அங்கு உள்ளார். அருகில் ஆறடிக்கும் மேல் உயரத்தில் லக்ஷ்மியும் நரசிம்மப் பெருமானும் பொற்கவசம் பூண்டு நின்ற நிலையில் அற்புதக் காட்சி தருகின்றனர். அர்ச்சனைகள் இந்த நரசிம்மருக்கே. காணும்போதே மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்.

சகஸ்ரநாமம் முடியும்வரை அரைமணி நேரம் அமர்ந்து இறைவனை கண்குளிர, மனம் நெகிழ தரிசித்தோம். இவர் வைத்ய நரசிம்மராக விளங்கு
கிறார். நோய் நொடியில்லாத வாழ்வை வேண்டிக் கொண்டேன். பின் அர்ச்சனை, தீபாராதனை முடித்து அபிஷேக தீர்த்தம் சடாரி குங்குமம்  பெற்றுக் கொண்டு வெளிவந்தபோது மனம் நிறைந்திருந்தது.

பில்லி, சூன்யம், ஏவல் போன்
றவை விலகவும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வருகிறார்கள். ஒரு மண்டலம் (40 நாட்கள்) பிரதட்சிணம் என்னும் வேண்டுதல் இங்கே பிரசித்தம். திருமணப்பேறு, பிள்ளைப்பேறு உள்ளிட்ட எல்லா நலன்களும் இத்தலம் வந்தால் கிட்டுகின்
றனவாம்.தீய சக்திகளாலும், தீய கிரகங்களாலும் பீடிக்கப் பட்டவர்களை காப்பாற்றி நல்வழி படுத்துபவராகவும்,   பல சமயங்களில் பக்தர்களின் கனவுகளில் நரசிம்மர் தோன்றி அவர்களுக்கு தேவையான மருத்துவ மூலிகைகளைத் தந்து பக்தர்களின் நோயைத் தீர்ப்பதும், அவர்களின் உடல் ஆரோக்கி
யத்திற்கு நல்லாசியும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. நரசிம்மர் காட்சிதந்த தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 28-ஆம் தேதி கொண்டாடப்
படுகிறது.

கர்ப்பக்கிரஹத்தின் மேல் சிகரத்தில் தங்க சுதர்சனச்சக்கரம் உள்ளது. முன்பெல்லாம் இந்தச்சக்கரம் பக்தர்கள் வரும்போது அந்தப்பக்கம் திரும்பிஒரு காம்பஸ் போல் வழிக்காட்டுமாம். தற்சமயம் ஆலயத்தில் புனருத்தாரணம் செய்வதால் அந்த சக்கரம் கழற்றி வைக்கப் பட்டிருப்பதாகவும், கும்பாபிஷேகத்திற்கு பின்பு மீண்டும் பொருத்தப்படமென்றும் கூறினார்கள்.

ஆஞ்சநேயர் இருந்த தலம் என்பதாலோ என்னமோ ஏகப்பட்ட குரங்குகள்! நம் கையில் இருப்பதைப் பிடுங்க ஆயத்தமாக உட்கார்ந்திருக்கின்றன!

ஆதி  நரசிம்மர் கோவில் இவ்வாலயத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்து பளிச்சென காட்சி தரும் இவ்வாலயத்தில் இரண்டு அதிசயங்கள் உள்ளன, ஒன்று ஹனுமான் இங்கிருந்து கிஷரா என்னும் இடத்தில் தாவிய போது வந்த ஹனுமானின் கால் அடித் தடம். மற்றொன்று அங்கு உள்ள தண்ணீர் வற்றாத தெப்பகுளம்.

யாதகிரி செல்ல ஹைதராபாதிலிருந்து நிறைய பஸ் வசதி உள்ளது.தெலிங்கானா செல்பவர்கள் உடல்நல ஆரோக்யம் வேண்டி அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம்.

சுரேந்திரபுரி..ஆன்மிக அருங்காட்சியகம்..


யாதகிரி ஆலயத்திலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள சுரேந்திரபுரி நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய இடம். ஆம். ஆலயம் பல நிறைந்த இடத்தைப் பார்ப்பது சரியல்ல..
தரிசிப்பதுதானே! நாம் எங்கோ தேவலோகத்துக்குள் சென்றுவிட்ட உணர்வைத் தருகிறது இந்த அருங்காட்சியகம். இது இந்தியாவில் எங்கும் காணமுடியாத தனியொரு மனிதரால் உருவாக்கப்பட்ட முதல் Mythological Museum..ஆன்மிக அருங்காட்சியகம் இது.

ஹைதராபாதுக்கு அருகில் யாதகிரி புவனகிரிக்கு அருகில் உள்ள ஒரு சுவாரசியமான காண வேண்டிய அருங்காட்சியகம்  சுரேந்திரபுரியாகும். இந்திய
புராணங்கள், இதிகாசங்கள், ஆலயங்கள் போன்ற ஆன்மீகத் தகவல்கள் மற்றும் மேன்மைகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும்  நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதை உருவாக்கியவர் யார்..ஏன் என்ற கேள்விகள் எழுகிறதல்
லவா? தெலுங்கானாவிலுள்ள  கம்மம் என்ற ஊரில் பிறந்த குண்டா சத்யநாராயணா என்பவர் ஒரு சாதாரண விவசாயி. மேல்படிப்பு படிக்க வழியில்
லாதவர். ஆன்மீக உணர்வு மிகுந்தவர். அவருடைய  இளைய மகன் சுரேந்திரன் எதிர்பாராத விதமாக மிகச்சிறு வயதில் இறந்தபோது, அவன் பெயர் இவ்வுலகில் என்றும் நிலைத்து நிற்க விரும்பி இந்த அருங்காட்சி
யகத்தை  உருவாக்கினார்.

இதை உருவாக்க எண்ணிய
வருக்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டன. தன் 70 வயது முதுமைக் காலத்தில் ..நம் நாட்டில் பக்தி அழியக் கூடாது, ஆன்மிகம் மேம்பட வேண்டும், புராண இதிகாசங்களை மக்கள் இலகுவாக அறிய ஏதாவது செய்ய வேண்டும்.. என்று எண்ணினார்.

எவர் உதவியும் நாடாது  தன் சொந்தப் பணத்தில்  பல கஷ்டங்கள் சவால்களுடன் தனியொருவராக நின்று இதை உருவாக்கினார். அவர் மனைவி அவருக்கு உறுதுணையாக இருந்தது குறிப்பிடத் தக்கது. 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்'என்பது இவருக்கு சரியாகப் பொருந்தும். இந்த அருங்காட்சியகம் நம் ஆன்மிகத்தைப் போற்றிக் கொண்டு அவர் மகன் பெயரில் தலைசிறந்து விளங்குகிறது.

17 ஏக்கர் பரப்பில் 31/2 கிலோ மீட்டர்  நடைபாதையுடன் 3000க்கும் மேற்பட்ட மெகா உயர கடவுள் சிலைகள் அமைக்கப்பட்டு, மே 2003 முதல் மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது. பின் மேலும் சீரமைக்கப்பட்டு 2009 பிப்ரவரியில் அன்றைய ஆந்திர கவர்னர் அவர்களால்  'குண்டா சத்யநாராயணா தாம்' என்ற பெயரில் துவங்கி வைக்கப்பட்டது.

இனி நாமும் உள்ளே சென்று தரிசிப்போம். நுழைவிடத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மாதியரை தரிசித்து இங்குள்ள ஆலயங்களைத் தொழுவோம். வாஸ்து ஆகம சாத்திரப்படி  தென்னாட்டு வடநாட்டு கோபுரங்களுடன் காட்சி தரும் ஆலயத்தில் நுழைந்ததும் கோசாலை உள்ளது. 16அடி உயர பஞ்சமுக ஹனுமதீஸ்வரர் கம்பீரத்துடன் நின்ற நிலையில் காட்சி தருகிறார். இந்த விக்கிரகம் காஞ்சியிலிருந்து கருநிறக் கல்லால் செய்து இங்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார்களாம்.நேபாள் பசுபதிநாத் போன்ற பஞ்சமுக லிங்கேஸ்வரர், திருமலை பாலாஜி, மகா லக்ஷ்மி சந்நிதிகள் கண்களைக் கொள்ளை கொள்கின்றன. நவகிரக தேவர்கள் அவர்களின் வண்ணங்கள் கொண்ட தனித்தனி சந்நிதிகளில் அருளாட்சி செய்கின்றனர். அனைத்து தெய்வங்களும் சக்தி வாய்ந்த தெய்வங்களாம்.பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன.

இங்கு ஒரே சிலையில் இரு புறமும் அமைந்துள்ள பஞ்முக சிவனும், பஞ்சமுக ஆஞ்சநேயரும் எங்கும் காணக் கிடைக்காத காட்சி. வெளியில் காட்சி தரும் நாககோடீஸ்வர லிங்கம் புற்று மண்ணால் செய்யப்பட்ட கோடி சிறுலிங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு காலசர்ப்பத்தால் சூழப்பட்டு 101அடி உயரத்தில் மிகபிரம்மாண்டமாய்க் காட்சி தருகிறார். நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், குஜதோஷங்களை நீக்கும் அளப்பரிய சக்தி கொண்டவராம் இவர். சிவராத்திரி நாட்களில் இங்கு நிறைய மக்கள் இவரை வணங்க வருவார்களாம்.

அடுத்து சுரேந்திரபுரிக்கு செல்வோம். உள்நுழைய பெரிவர்களுக்கு 350ரூ.யும், 5முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தை
களுக்கு 300ரூ. டிக்கட். மொபைல் காமிராக்களுக்கு 100ரூ.

உள்ளே நாம் செல்லும் பாதை
யைக் கோடிட்டு காட்டியுள்ளார்கள். அந்த வழியில் சென்றால்தான் எல்லாவற்றையும் பார்க்க முடியும். எதையும் நாம் தொட முடியாதபடி தடுப்பு வேலி உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரையுள்ள  மிகப் பிரசித்தமான பெரும்பாலான முக்கியமான கோயில்களின் மாதிரி வடிவமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.கொஞ்சமும் வித்தியாசம் இல்லாமல் தத்ரூபமாக இவை கலை
நயத்துடன் உருவாக்கப்பட்
டுள்ளன. இந்த ‘மாதிரி வடிவமைப்பு’களில் இருந்தே அக்கோயில்களின் கட்டிடக்கலை பாணி மற்றும் தனித்தன்மைகளை புரிந்து கொள்ளும் அளவுக்கு துல்லியமாக இவை படைக்கப்பட்டிருப்பது ஒரு அற்புதமான சாதனையாகும்.

ஹிந்து புராணங்களின் கடவுளர்கள் தொடர்பான சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ள சிற்பவடிவங்கள், ஹிந்து புராணிக பாரம்பரியம் குறித்த பல தகவல்களை இந்த மியூசியத்தில் நாம் தெரிந்து கொள்ளலாம். பாண்டுவுக்கு சாபம் எப்படி வந்தது, சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமர் பொன்னால் செய்த சீதையுடன் அசுவமேதயாகம் செய்தது, ராவணன் கைலாயத்தை தூக்கியது  போன்ற சிறிய நிகழ்ச்சிகளையும் அழகாக செய்திருப்பது கண்ணைக் கவர்கிறது.

பிரலம்பன்,தேனுகன்,காளியன் போன்ற அரக்கர்ளின் வாயில் குகை போல் நாமும் ஏறி இறங்கிச் சென்று உள்ளிருக்கும் திருவிளையாடல்களை ரசிக்கலாம்.  கைலாய குகையில் தண்ணீரில் செல்வதும், வைஷ்ணோதேவியை சிறு குகையில் சென்று தரிசிப்பதும் தெய்வீக அனுபவங்கள்.சுற்றிப் பார்க்க 3-4 மணி நேரம் ஆகிறது. மேலே 8 திக்பாலர்கள் சூழ நடுவில் கேன்டீன் உள்ளது.

ராமாயணம், மகாபாரதம், பாகவதம், புத்த சரிதம், கிருஷ்ண லீலா,  சிவ தாண்டவம், ஹனுமத் பிரபாவம், சப்தலோகங்கள் மிக அழகாக உருவாக்கப் பட்டுள்ளன. நாகலோகத்தில் சீறும் நாகங்களின் ஒலி, எம லோகத்தில் பாவம் செய்து பலனை அனுபவிக்கும் உயிர்களின் கூக்குரல், சக்கர வியூகத்தில் சண்டை சத்தம் என்று நம்மை அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்லும் அற்புத உணர்வு
பூர்வமான ஆன்மிகக் களஞ்சியம்.

அங்கு வடிக்கப்பட்டுள்ள சிலைகள் தத்ரூபமாக நம்முடன் பேசுவது போல் காணப்படுவது விந்தையாக உள்ளது. அஷ்டலக்ஷ்மிகள், தசாவதாரங்கள், கைலாயம், இந்திரலோகம், வைகுண்டம்...
சொல்ல வார்த்தைகளில்லை. நாம் உயிருடன் மேலே சென்று சகல லோகங்களும் சுற்றி மீண்டும் பூமிக்கு வந்த உணர்வு ஏற்படுகிறது! முக்யமாக இக்கால இளைய தலைமுறை இதன் மூலம் பல அரிய புராண விஷயங்களை அறியலாம்.

ஹைதராபாத் செல்பவர்கள் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய இடம் சுரேந்திரபுரி.

Tuesday 18 February 2020

காதலர் தினத்தில் பெற்ற பரிசு!


2013ம் ஆண்டு ப்ரின்ஸ் ஜுவல்லரியின் முகநூல் வேலன்டைன்ஸ் டே போட்டியில் வெற்றி பெற்று 1000ரூ. பரிசுக் கூப்பன் கிடைத்தது.

Prince Jewellery
Announcing the winner for the 'Prince Jewellery SOULMATE Contest Day 7 13.2.2013 - Radha Balu

 In my life love came after marriage! Thirty years before, when I was twety years old, In a joint family, there would be no honeymoon...no gifts for my birthday or wedding anniversary! We had no intimate moments, because of my husband's busy work shedule and my motherly duties. But love was blossoming between us like a thread .

When my husband retired, then lo and behold, all the intimacy I gave up in my youth, came flooding back! He now spends all his time with me!

We frequently head out for picnics together, enjoying each other's company! To cap it all, on my 50th birthday my sweetheart presented me a salwar suit and followed it up with dinner in a fancy restaurant and mesmarised 'How young you look! I want you to be like that forever!'. I blushed and never forget that romantic evening!




விசா பாலாஜி தரிசனம்..


வேலன்டைன்ஸ்டே  அன்று ஹைதராபாதிலுள்ள பிரசித்தமான விசா பாலாஜியை தரிசிக்கச் சென்றோம்.பெயரே வித்யாசமாக இருக்கிறதில்
லையா? ஆம்..வெளிநாடு செல்ல விசா கிடைக்காவிட்டாலோ, தாமதமானாலோ இவ்வாலயம் வந்து இந்த பாலாஜியை தரிசித்தால் உடன் தடங்கல் நீங்கி விசா கிடைக்குமாம்.

ஹைதராபாதிலிருந்து 30  கிலோ மீட்டர் தொலைவில் 'உஸ்மான் சாகர்' என்னும் ஏரிக் கரையில் அமைந்துள்ள சில்கூரில் அமைந்துள்ள ஆலயத்தின் பெருமை பெரிதினும் பெரிது!




தெலுங்கானாவிலுள்ள மிகப் பழமையான 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலை பக்த ராமதாசரின் மாமன்களான வெங்கண்ணாவும், அக்கண்
ணாவும் கட்டியதாகக் கூறப்
படுகிறது. காலப் போக்கில் அழிந்துவிட்ட அக்கோயில்  500 ஆண்டுகளுக்கு முன்பு கண்டு
பிடிக்கப் பட்டது.

மாதவ ரெட்டி என்ற பக்தர் அறுவடை முடிந்தபின் தவறாமல் திருப்பதி செல்லும் வழக்க
முடையவர். திரும்பியதும்தமது நிலத்தில் விளைந்த பொருட்
களின் ஒருபகுதியை தானம் செய்யும் வழக்கமுடையவர். முதுமையில் செல்ல முடியாமல் வருத்தமுடன் நிலத்தில் அமர்ந்தி
ருக்கும்போது  பாலாஜி அவர் கனவில் தோன்றி 'இனிமேல் திருப்பதிக்கு நீ வரவேண்டாம். நானே உன் வயலில் உள்ள எறும்பு புற்றினுள் குடி கொண்டிருக்
கிறேன்' எனக்கூறி மறைந்தார்.



மறுநாள் புற்றை அகற்றியபோது பூதேவி, ஸ்ரீதேவி சமேதகராக திருப்பதி பாலாஜியின் திருமணக் கோலச் சிலையைக் கண்டு ஊர்மக்கள் கூடி ஆகமவிதிப்படி ஆலயம் உருவாக்கினார். இப்பொழுதும் பெருமாள் தலையில் கடப்பாரை வெட்டு இருக்கிறதாம்.



இவர் 'விசா பாலாஜியானது எப்படி?' வெளிநாடு செல்ல விரும்புவோர், பெருமாள் காலடியில் பாஸ்போர்ட்களை வைத்து வணங்கி வேண்டிக்
கொண்டால் உடனே வேண்டுதல் நிறைவேறுமாம்.

இதற்கு ஒரு முறை உண்டு. வெளிநாடு செல்ல முக்கியமாக அமெரிக்க விசா கிடைக்க வேண்டிக் கொள்பவர்கள் 11 சுற்றுகள் சுற்ற வேண்டும்.பின் விசா கிடைத்தபின் 108 சுற்றுகள் சுற்றி பிரார்த்தனையை முடிக்க வேண்டும். மேலும் திருமணம், குழந்தை வேண்டியும் இங்கு வேண்டிக் கொண்டு பிரார்த்தனை நிறைவேறியதும் 108 பிரதட்சிணங்கள் செய்ய வேண்டும்.



இங்கு எப்பொழுதும் கூட்டம்! ஆயிரக் கணக்கானோர் ஆலயத்தை சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கணக்கு வைத்துக் கொள்ள ஆலயத்தில் ஒரு எண்கள் எழுதிய அட்டை தரப்படுகிறது. அங்குள்ள ஜன நெரிசலே அந்த ஐயனின் பெருமையை உணர்த்துகிறது.

இங்கு உண்டியல் இல்லை. VIP க்க
ளுக்கு சிறப்பு தரிசனம் கிடையாது. மற்றுமொரு விசேஷ அம்சமாக இந்த கோயிலின் நிர்வாகமும் மத்திய, மாநில அரசாங்கத்தின் அறநிலையத்துறை கட்டுப்
பாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்தக் கோயிலுக்கு வாரந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அருகில் அழகிய கைலாசநாதர் கோயில் ஒன்றும் உள்ளது. இதனருகில் இருந்த புற்றிலி
ருந்துதான் பெருமாள் எடுக்கப் பட்டாராம்.



மனதிற்கினிய தரிசனம் முடித்ததும் வயிறு 'என்னையும் கொஞ்சம் கவனி' என்று கூற, ஹோட்டலுக்கு சென்றோம்.

ஹைதராபாதில் நான் கண்டு வியந்த விஷயம் ஊர் முழுதும் ஏகப்பட்ட ஹோட்டல்கள்! எங்கெங்கு நோக்கினும் ஹோட்டல்கள்!! விதவிதமாய் சாப்பாடு!! அத்தனை மாநில, வெளிநாட்டு சாப்பாடுகள் விதவிதமாய்க் கிடைக்கிறது. எந்த ஹோட்டல் போகலாம் என்று யோசிக்க வேண்டியுள்ளது!

நாங்கள் மெட்ரோ பில்லர் அருகிலுள்ள Gud Gudee (Tickling your taste buds என்று அர்த்தம்!) என்ற ஹோட்டலுக்கு சென்றோம்.   அன்று Valentine's day க்காக ஸூப், starters, Main course எல்லாமே ஸ்பெஷலாம்! காஷ்மிரி நான், ப்ளூ ஷூ ஜுஸ், கமல் கலோட்டி
( தாமரை தண்டு கபாப்),வெஜ் டகாடக் என்று எல்லாமே இதுவரை எந்த ஹோட்டலிலும் சாப்பிடாத சுவையில் இருந்தது!










நான் சென்று சாப்பிட்ட சில ஹோட்டல்கள்...
99 Dosa Hubல் 99 வகையான விதவிதமான தோசைகள்..எதை சாப்பிடுவது என்று ஒரே dilamma!

Variety panipuri..ஐயப்பா ஸொசைட்டியிலுள்ள இந்தக் கடையில் 7 வித பானிபூரி..ஒவ்வொன்றிலும் வித்யாசமாக..இஞ்சி..பூண்டு..புதினா..எலுமிச்சை..நார்மல் என்று விதவிதமான பானிகளுடன் குட்டி பூரிகள் சுவையோ சுவை!




தந்தூரி மட்கா சாய்..டீயை தந்தூரி அடுப்பில் சுடவைத்து மண்குவளைகளில் குடிப்பது..அருமையான சுவை!



சட்னி...மாதாபூரிலுள்ள இந்த ஹோட்டலில் பல தினுசு சட்னிகள்



Cloud Dine...இது ஒரு வித்யாசமான அனுபவம் தரும் ஹோட்டல்.  ஹைதராபாதில் ஹைடெக் சிட்டியில் ஜெர்மன் டெக்னாலஜியில் உருவாக்கப்
பட்ட முதல்  Cloud Dine ஹோட்டல். 26 இருக்கைகள் மட்டுமே! 160அடி உயரத்தில், பெல்ட்டுகள் இணைத்த நாற்காலியில் க்ரேன் மூலம் மேலே அழைத்து செல்லப் பட்டு, வெட்ட வெளியில் ஜில்லென்ற காற்றில் உயர்ந்து நிற்கும் பக்கத்து கட்டிடங்களையும் அருகிலுள்ள ஃப்ளை ஓவர்களையும் நோட்டமிட்டபடி சாப்பிடலாம்.  ஒரு சாப்பாட்டின் விலை..அதிகமில்லை..
5000 ரூபாய்தான்!! (இந்த முறை போகவில்லை. அடுத்த முறை ட்ரை பண்ண ஆசை!)





Platform 65..Train Restaurant குக்கட் பள்ளி என்ற இடத்திலுள்ள இந்த  ஹோட்டலில்  இடையிலுள்ள தண்டவாளங்களில் வரும் toy trainல் உணவு கொண்டு வரப்பட்டு பரிமாறப் படுகிறது!




இதுபோல் விதவிதமாய் ஹோட்டல்கள்! வித்யாசமான ருசியில் உணவு! இங்குள்ளோர் வாழ்க்கையை ரசித்து மட்டுமல்ல..ருசித்தும் வாழ்கிறார்கள்!!

என் உயிர் நீதானே...




திருமணத்தில் கூறப்படும் சப்தபதி மந்திரத்தில் ஏழாவது அடியில் வரும் மந்திரம் 'கணவனும்,
மனைவியும் வாழ்நாள் முழுதும் உற்ற தோழர்களாக இருப்போம்.'

கணவரும், மனைவியும் அடுத்தவர் குறைகளை பெரிது படுத்தாமல், அதிக எதிர்பார்ப்புகள் இன்றி, நிறைகளைப்  போன்றே குறைகளையும் ரசித்து குடும்பம் நடத்தினால் வாழ்க்கை என்றுமே இன்பமயம்தான்!

எனக்கு 19 வயதில் திருமணமாகி, உடன் குழந்தைகள் பிறந்துவிட, வாழ்க்கையின் சிரமங்கள்  என்னை தடுமாறச் செய்தபோது, வங்கி அதிகாரியான என் கணவர், என்னிடம் அதிகாரம் காட்டாமல், கோபப்படாமல் என்னை அரவணைத்த ஆசைக் கணவர்!

குழந்தைகளைக் காலை வேளை
களில் தயார் செய்ய நான்  சிரமப்பட்டபோது, தானும் பங்கு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அன்புத் தோழன்!

கம்ப்யூட்டர் அறிமுகமான புதிதில் அதை இயக்கும் முறையை புரியும்படி விளக்கமாக எடுத்துச் சொன்ன ஆசான்!

எனக்கு வயிற்றிலும்,காலிலும் அறுவை சிகிச்சைகள் நடந்தபோது வீட்டில் அத்தனை வேலைகளும் செய்து, ஒவ்வொரு வேளையும் கையில் மாத்திரையும், தண்ணீ
ருமாக என்முன் நின்று என்னைக் கண்கலங்க வைத்த தாயுமானவர்!

நான் ஆலயங்கள்  பற்றியும்,
பயணக் கட்டுரைகளும் நிறைய எழுதுவதால், எந்தக் கோயிலுக்கு சென்றாலும் 'என் மனைவி எழுத்தாளர்' என்று பெருமையோடு சொல்லி,அங்குள்ள ஸ்பெஷல் பற்றியெல்லாம் கேட்டு எனக்கு சொல்லி எழுத உதவும் என் காரியதரிசி!

எங்களுக்கு எதிலும் ஒளிவு,
மறைவு கிடையாது. எந்த விஷயமானாலும் இருவரும் கலந்து பேசி முடிவெடுப்போம்.
பணி ஒய்வு பெற்றபின் இன்று நாங்கள் தனிக்குடித்தனம் நடத்தும் இந்த நேரத்திலும், நான் செய்யும் அத்தனை வேலைகளிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் நல்ல துணைவர்!

எனக்கு சில சமயங்களில் கோபம் வந்து ஏதாவது சொன்னாலும் அதைக் கண்டு கொள்ளவே மாட்டார்! 'உங்களுக்கு என்மேல் கோபம் வரவில்லையா' என்றால், 'உன்னை என்று மணந்து கொண்டேனோ, அன்றிலிருந்து உன் கோபத்தையும் சேர்த்து காதலிக்க ஆரம்பித்து விட்டேன்! உன் கோபத்துக்கும் நான் அடிமை' என்று வசனம் பேசி என்னை சிரிக்க வைக்கும் அழகிய காதலர்!

எங்களுக்கு திருமணமாகி 40 வருடங்களைக் கடந்து விட்டோம்.
ஆனாலும் ‘இன்று புதிதாய் மணந்தோம்’ என்ற ரீதியில்தான் வாழ்கிறோம். இன்றும் என்னை அவ்வப்போது அவர் காதலோடு பார்க்கும்போது 'என்ன பார்வை உந்தன் பார்வை' என்று பாடுவேன்!

நேரம் கிடைக்கும்போதெல்
லாம் என்னை சீண்டுவதும் தீண்டுவதும் இன்னும் தொடரும் செயல்கள்! கோபமோ தாபமோ நாங்கள் பேசாமல் இருந்தது
மில்லை..விலகிப் படுத்தது
மில்லை!

ஊடல்...கோபம் இல்லாத வாழ்க்கை யாருக்கேனும் உண்டா என்ன? அவர் அலுவலகத்துக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்ற நாட்கள்..நேரம் ரெக்கை கட்டிப் பறக்கும்! ஒரு நாள் அவர் ‘pant'டுக்கு பட்டன் தைக்கச் சொன்னார். நான் மறந்துவிட்டேன். மறு நாள் காலை நேர அமளியில், ‘என் pantல் பட்டன் கூட தைக்காமல் நாள் முழுக்க அப்படி என்னதான் செய்கிறாய்?’ என்று சத்தம் போட்டார்.

சமையல் டென்ஷனிலிருந்த எனக்கும் ‘ஈகோ’ கிளம்பியது. ‘சே, நானென்ன சும்மாவா இருக்கிறேன்?’ என்று கேட்க வாயெடுத்தேன். அப்படிக் கேட்டால் கோபம் இன்னும் அதிகமாகும்.

‘அட்டா, நேற்று பட்டன் தைக்க எடுத்தேனா, சட்டையைத் தொட்டதும் உங்கள் ஞாபகம் வந்து, எதோ பழைய நினைவுகளில் மூழ்கி பட்டன் தைக்கவே மறந்து போச்சு! சாரி, இதோ இப்ப தைத்துவிடுகிறேன்’ என்று கூலாக சொன்னேன்.

அதற்கு மேலும் சத்தம் போடுவாரா என்ன? பிறகு நான் அவரை ‘தாஜா’ செய்ய... (தவறு என்னுடைய
தாயிற்றே!) அவர் என்னைக் கொஞ்ச... இது போன்ற சந்தர்ப்பவாத சமாளிப்புகள் எங்கள் தாம்பத்யத்துக்கு மெருகூட்டும் ரகசியங்கள்!

ஒருவர் செய்த தவறுகளை திரும்பத் திரும்பச் சொல்லிக் காட்டாமல், சரியான சமயத்தில் சொல்லிப் புரியவைப்பது, ஒருவர் அழகை மற்றவர் தாராளமாகப் புகழ்வது, விட்டுக் கொடுப்பது... இவற்றால் தாம்பத்ய சுவை கூடுமென்பது என் அனுபவம்!

வெளியில் அலுவலகத்தில் ஆயிரம் கவலை, டென்ஷன் என்று வேலை முடித்து ஓய்ந்து வீட்டுக்கு வரும் கணவன் அன்பும், ஆதரவும் தேடுவது மனைவியிடம்தான்.
அதைப் போர்க்களமாக்காமல், பூஞ்சோலையாக்கினால், கணவன் மகுடிக்கு மயங்கி ஆடும் நாகம்தான்!

எங்கள் தாம்பத்யத்தில் சில நாள் முன்பு கூட சுவாரஸ்யம்தான்! ‘லைட்டை அணை’ என்று என் கணவர் சொல்ல, நானோ லேசாக அவரை அணைக்க முயன்றேன். ‘ஏய்! என்ன இது?’ என்றார் அவர். ‘நீங்கதான லைட்டா அணைக்கச் சொன்னீங்க?’ என்று நான் ‘கடி’க்க ‘என்ன ரொமேன்ஸா?’ என்றார் குரல் குழைய. சேச்சே! இது ரொ’விமன்’ஸ் என்று நான் திரும்பவும் கடிக்க... அதற்குப் பின் அங்கு பேச்சுக்கு இடமேது!?

காலை நாங்கள் இருவரும் இணைந்து கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த என் பேரன்...தாத்தா வேலன்டைன்ஸ் டேக்கு எங்க போலான்னு plan பண்றியா? பாட்டிக்கு என்ன gift தரப்போற?..என்று சிரித்தான்! அவரோ..நானே உன் பாட்டிக்கு giftதான்...என்று சொல்ல, நானோ..நான்தான் உங்களுக்கு gift...என்று வேகமாக சொல்ல, என் பேரனோ...வேலன்டைன்ஸ் டேல சண்டை போடக்கூடாது. ஜாலியா இருக்கணும்...என்று எங்களுக்கே அட்வைஸ் செய்கிறான்!






Thursday 13 February 2020

சார்மினாரும் மகாதேவர் ஆலயமும்...
















பாரிஸின் ஈஃபில் டவர், ஆக்ராவின் தாஜ்மஹால் , டில்லியின் குதுப்மினார் போல் ஹைதராபாதின் சிறப்பு சார்மினார். நான்கு உயர்ந்த  கோபுரங்களுடன் சதுர வடிவில் கிரானைட் மற்றும் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டு,  பழைய ஹைதராபாத் நகரில் நெருக்கமான கடைகள் நிறைந்த இடத்தில் ம்யூஸி நதியின் கரையில் அழகுற கம்பீரமாகக் காட்சிதரும்  சார்மினார் தற்சமயம் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப் படுகிறது.

சார்மினார் 1591ஆம் ஆண்டு, பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டதன் அடையாளமாக, பெர்சிய கலைக் கட்டிட நிபுணர்களால் முகம்மது குதுப் ஷா என்ற அரசரால் கட்டப்பட்டது. சார்மினாரை மையமாக வைத்தே பழமையான நகரமான ஐதராபாத் உருவாக்கப்பட்டது. மன்னர்
தன் காதலி பாக்மதியை முதலில் சந்தித்ததன்  நினைவாக இதைக் கட்டியதாகவும், பாக்மதி என்ற நகரின் பெயரே  ஹைதராபாத் என மாற்றப்பட்டதாகவும் கூறப்
படுகிறது.

முகம்மதியரின் முதல் நான்கு கலிஃபாக்களைக் குறிக்கும் விதமாக 48.7 மீட்டர் உயரத்தில் நான்கு கோபுரங்கள் உயர்ந்து நிற்கின்றன. இரண்டு தளங்களை உடைய கோபுரங்களின் உள்ளே காணப்படும் அழகான கட்டமைப்பு கண்ணுக்கு விருந்து! மேல் தளத்தில் தொழுகைக்கான பள்ளிவாசல் உள்ளது. மேலே ஏறிச் செல்ல 149 வளைந்து செல்லும் படிகள் உள்ளன.

நான்கு புறமும் உள்ள வாசல்கள் உயர்ந்த வளைவுகளுடன் சுற்றியுள்ள நான்கு சாலைகளைப் பார்த்து இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. நான்கு பக்கங்களிலும் பெரிய  கடிகாரங்கள் அமைக்கப்
பட்டுள்ளன.சார்மினாரிலிருந்து கோல்கொண்டா கோட்டைக்கு ஒரு சுரங்கப் பாதையும் உண்டு எனப்படுகிறது.

சார்மினாரின் உள்ளழகு வளைவுகளைக் கொண்ட நுழைவாயிலுடன்  இஸ்லாமிய கலாசாரப்படி அழகுற அமைந்
துள்ளது. தொழுகைக்கான 45 அறைகளும் உண்டு. சுற்றிலும் உள்ள லட் பஜாரில்(Lad Bazaar) ஹைதராபாதின் சிறப்பான கல், முத்து நகை விற்கும் கடைகள் சார்மினாரின் அழகுக்கு மேலும் மெருகு சேர்க்கின்றன. இரவில் அந்த இடமே வண்ண விளக்
கொளியில் தகதகக்கிறது. நான்கு பக்கமும் நீண்டு இருக்கும் இந்த சிறப்பான கடைத்தெரு பற்றி  சரோஜினி நாயுடு அவர்கள் In the bazaars of Hyderabad என்று கவிதை எழுதியுள்ளார்.

சார்மினாரின் அழகை ரசிப்ப
தோடு, அந்தக் கடைகளின் அழகு...கண்களைக் கட்டி இழுக்க..மனதை மயக்க கல் வைத்த, முத்து பதித்த வளையல் மற்றும் நெக்லஸ்களை வாங்காமல் எந்தப் பெண்ணாலும் வர முடியாது! தரமான முத்துக்
களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கடைகளும் உண்டு.

அவ்விடத்தில் கிடைக்கும் உஸ்மானியா பிஸ்கட் மற்றும் ஈரானியன் டீயின் சுவை அமிர்தம்! விடுமுறை நாளில் விடிகாலை நேரம் 6 மணிக்குள் இங்கு வந்து பிஸ்கட்டும், டீயும் சாப்பிடுவது பலரின் வழக்கமாம்!

கடைகளைப் பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்த என் கண்களில் பட்டது ஸ்ரீமகாதேவர் ஆலயம். அட..நம்ம சாமி என்றபடியே சென்று தரிசித்தேன்.  1857ம் ஆண்டு தோன்றிய அந்த சிவாலயம் மிக அழகாகக் காட்சியளிக்கின்றது. அங்கு நகைக்கடைகள் வைத்துள்ள வடநாட்டு மார்வாரி வியாபாரிகளால் ஏற்படுத்தப் பட்ட கோவில்.

கீழுள்ள சிவலிங்கம் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். பின் ஆலயம் சில படிகள் மேலே ஏறிச் சென்று உயரத்தில் விஸ்தரிக்
கப்பட்டு  கணபதி, லக்ஷ்மி நாராயணர், சாய்பாபா, மகாலக்ஷ்மி, ராமர், ஹனுமன் , துர்கை போன்ற தெய்வ சன்னிதிகள் அமைக்கப்பட்டது. இங்குள்ள ஸ்படிக லிங்கம் மிக அருமையாக உள்ளது. சார்மினாரின் சத்தமான கடைத்தெருவில் இருந்தும், அங்கு காணப்படும்  தெய்வீகமான அமைதியான ஏகாந்த சூழ்நிலையில் தியானம் செய்ய முடிகிறது. எல்லா தெய்வங்களின் சிறப்பான நாட்கள் கொண்டாடப்
படுகிறது. கீழுள்ள ஹாலில் பிரவசனங்கள் நடைபெறுமாம். தினமும் 400 பேரும், தீபாவளி சமயம் 10000 மக்களும் தரிசனத்துக்கு வருவதுண்டாம்.

இவ்விடத்தை சுற்றி பல மார்வாரிகள் வாழ்கின்றனர். தினமும் லட்சக் கணக்கில் நகை வியாபாரம் நடைபெறுகிறதாம்.  இதற்கு ஒரு சுவையான காரணம் கூறப்படுகிறது! ஔரங்கசீப் அரசனான பின்பு அந்த இடத்தின் தலைவனாக  ஐந்தாம் நிஜாம் நியமிக்கப்பட்டபோது அங்கு நகைக்கடைகள் வைத்திருந்த மார்வாடிகளுக்கு வீடுகள் கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கினாராம். சார்மினார் செல்லும் வழியில் அவர்கள் கடைகளில் காணப்படும் நவரத்தினங்களைக் காண்பது நல்ல சகுனமாக எண்ணினார்
களாம். எப்படியோ இன்று அந்த உலகப் புகழ் பெற்ற சார்மினாருக்கு நிகராக ஸ்படிகலிங்கேஸ்வரரும் அருள் செய்து கொண்டுள்ளார்!

ஹைதராபாத் செல்பவர்கள் சார்மினாரைக் கண்டு சிற்பக் கலையை ரசிப்பதோடு  அவசியம் மகாதேவரை தரிசித்து வரவும்.

Wednesday 12 February 2020

40 வருட மலரும் நினைவுகள்


மங்கையர் மலருடனான என் மலரும் நினைவுகள் பலப்பல. எதைச் சொல்லது?

என் எழுத்துலகப் பிரவேசம் ஆரம்பமானதே மங்கையர் மலரில்தான். ஒன்றா..இரண்டா? கிட்டத்தட்ட 150க்கு மேற்பட்ட கதை, கட்டுரைகள், பயணக் கட்டுரைகள்! மற்ற தமிழ் இதழ்களிலும் நான் எழுதுவதற்கு ஆதாரம் மங்கையர் மலரே!

மங்கையர் மலர் வெளிவர ஆரம்பித்தது முதலே நான் எழுதிய சிறு துணுக்குகள் பிரசுரமா
னாலும்,  '40 வயதுப் பிரச்னை' என்ற தலைப்பில் என் அம்மா மெனோபாஸினால் கஷ்டப்பட்டதைப் பற்றி நான்
எழுதிய முதல் கட்டுரை பிரசுர
மானபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதற்கான சன்மானமாக 25 ரூ.  M.O. வந்தபோது வானில் பறந்தேன்! வாசிப்பில் எனக்கு ஆசையை ஏற்படுத்திய என் அம்மாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்!

பல கட்டுரைகள், இம்மாத இல்லத்தரசி போட்டி, புடவைப் போட்டிகளில் நிறைய முறை பரிசுகள் வாங்கியுள்ளேன்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொலுப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது முத்தாய்ப்பானது.

என் கணவர் வேலை பொருட்டு மதுரா,ஆக்ராவில் இருந்தபோது என் பிறந்த வீடு சென்று திரும்பும்போதெல்லாம் ஒரு பெட்டி நிறைய புத்தகங்கள் எடுத்து வருவேன்.

புதிய புத்தகத்தை வாங்கியவுடன் பிரித்து முகர்ந்து பார்ப்பதும், ஏதாவது கொறித்துக் கொண்டே அதை ஆற அமரப் படித்து ரசிப்பதும் இன்றும் தொடரும் என் வழக்கம்! நான் இன்று ஒரு எழுத்தாளராகக் காரணமாயிருந்து என்னைப் பலரும் அறியச் செய்த மங்கையர் மலருக்கு மனமார்ந்த நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன்🙏

Monday 10 February 2020

ரதசப்தமி

தை மாத அமாவாசைக்கு அடுத்த ஏழாவது நாளில் ரதசப்தமி  கொண்டாடப்படுகிறது. சூரிய பகவான் ஏழு குதிரைகள்  பூட்டிய தனது ரதத்தை வடகிழக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்த நாள் சூரியக் கடவுளின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்
படுகிறது.

சூரியன் தன் தென்திசைப் பயணத்தை  முடித்துக்கொண்டு ரதசப்தமியன்று வடக்கு நோக்கி பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும். இது  வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது.  விவசாயிகளுக்கு இந்த நாள் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாகும். சூரியனின் தேரோட்டி அருணன்.

சூரியனின் தேரில் உள்ள ஏழு குதிரைகள் ஏழு வண்ணங்களைக் கொண்ட  வானவில்லைக் குறிப்பதாகவும், மற்றும் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது. ரதத்தில் உள்ள 12 சக்கரங்கள் பன்னிரெண்டு ராசிகளைக் குறிக்கின்றன.

சூரியனின் சொந்த வீடாக சிம்ம ராசி உள்ளது. சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் பயணித்து திரும்பி வருவதற்கு ஒரு வருடம் ஆகிறது. ரத சப்தமி திருவிழா சூரிய கடவுளிடமிருந்து ஆற்றலையும் ஒளியையும் பெறும் விழாவாக உள்ளது.

ரத சப்தமி அன்று முதல் தென்னிந்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்வதை உணர முடியும். மேலும் இந்த நாள் வசந்த காலத்தின் ஆரம்பம்.

இந்தியாவில்  உள்ள அனைத்து சூரியக் கோயில்களிலும் ரத சப்தமி விழா விமரிசையாகக்  கொண்டாடப்படுகிறது. ஒரிசாவிலுள்ள கோனார்க் கோயில், மோதேரா சூரியன் கோயில் குஜராத், ஆந்திரா அரசவல்லியிலுள்ள அரசவல்லி சூரியன் கோயில், தமிழ்நாட்டில் சூரியனார் கோயில் போன்றவை சூரியனுக்கான சிறப்பான கோயில்கள். ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா முதலிய நாடுகளில் சிதைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் உள்ளன

ரதசப்தமி புண்ய நாளில்
சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு. அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில்  7 எருக்கம் இலைகள், மஞ்சள்பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்குமேலே வைத்துக் கொண்டு நீராடுவது  நல்லது

ரதசப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்யவேண்டும். ரதசப்தமியன்று சுத்தமான இடத்தில்  செம்மண்ணால் பூசி, அந்த இடத் தில் சூரியரதம் வரையவேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக  நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நைவேத்தியம்  செய்யவேண்டும்.

ரதசப்தமியன்று தொடங்கும் தொழில்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்நாளில் செய்யப்படும் தானம், தருமங்களுக்கும் பலமடங்கு புண்ணியம் கிடைக்கும் எனப்படுகிறது.

என் இனிய தோழி!

கடந்த பத்து வருடங்களாக ஒரு சமையல் தளத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு தனாவுடனானது. அதைத் தொடர்ந்து முகநூலிலும் எங்கள் நட்பு தொடர்ந்தது.

அவளுக்கு என் மகள் வயது என்பதால் என்னை அம்மா என்றுதான் அழைப்பாள். அவ்வப்போது வாட்ஸப்பிலும், ஃபோனிலும் பேசிக் கொள்வோம். ஒருமுறை நாமக்கல்லுக்கு வந்தபோது திருச்சிக்கு வருவதாகவும் நாம் சந்திக்கலாமா என்றும் அவள் கேட்டபோது நான் வெளியூர் சென்றிருந்தேன்.

அவள் இருப்பது  ஹைதரா
பாதில். என் மகள்  ஹைதரா
பாதில் இருப்பதால் இங்கு வந்துவிட்டு அவளிடம் நான் பேசினேன். உடனேயே சந்தோஷத்தில்..நான் உங்களைப் பார்க்க வருகிறேன் அம்மா...என்று சொல்லிவிட்டு பை நிறைய பழங்களுடன் வெள்ளி
யன்று வீட்டுக்கு வந்தாள்.

அவளை பார்த்தது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
கிளம்பியபோது..
உங்களுக்கும் அப்பாவுக்கும் நமஸ்காரம் பண்றேன். ஆசிர்வாதம் பண்ணுங்க..என்று எங்கள் ஆசிர்வாதத்துடன், தை வெள்ளி என்பதால் நான் கொடுத்த தாம்பூலமும் பெற்றுச் சென்றாள்.

ஒருவருக்கொருவர் முகம் பாராமல் ஏற்பட்ட நட்பு, நேரில் பார்க்கும்போது மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது!