Saturday, 30 November 2019

சார்தாம் யாத்ரா..3.பாவம் போக்கும் பத்ரிநாத்சார்தாம் யாத்திரையில் முக்யமான தலம் பத்ரி நாராயணன் தவக் கோலத்தில் அருட்காட்சி தரும் பதரியாச்ரமம் எனப்படும் பத்ரிநாத். இது 99வது திவ்யதேசம். அஷ்டாக்ஷர மந்திரத்தை உலகுக்கு உபதேசிக்க பெருமாள் வந்த இடம். 

அலகநந்தா நதிக் கரையின் வலது கரையில் நர நாராயணச் சிகரங்களுக்கு இடையே உள்ளது தொன்மை வாய்ந்த பத்ரிநாத் ஆலயம். திருக்கோயிலுக்குப் பின் புறம் உயர்ந்த நீலகண்ட சிகரம் காணப்படுகிறது.

பத்ரிநாத், உத்தர்கண்ட் மாநிலம் சமோலியிலிருந்து கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர்  தொலைவில் இருக்கிறது. இங்கு செல்ல நான்கரை மணிநேரம் ஆகிறது. பாதை மிக மிக மோசமாக உள்ளது. ஒரே பாதைதான், அதுவும் ஒரு பஸ் செல்லும் அளவுதான் உள்ளது. இந்தப் பாதையில்தான் இருவழிப் பயணங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.  

வாகன ஓட்டுனர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு பக்கம் அதலபாதாளமும், ஒரு பக்கம் உயர்ந்த மலைச்சாரல்களும் என்று இந்தச் சாலை ஓட்டுனர்களுக்கு  சவாலாக இருக்கிறது. பள்ளத்தாக்குகளின் பக்கம் ஓரமாக பஸ் செல்லும்போது நமக்கு கதி கலங்குகிறது. அந்த பகவானே கதி என்று ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டே சென்றோம்.

கடந்த 2013 வெள்ளத்தில் நிலச்சரிவுகளினால் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளதால், இச்சாலையில் செல்வது ‘கரணம் தப்பினால் மரணம்’ என்கிற நிலையில் உள்ளது. ஆறு வருடங்களாகியும் சாலைப் பணிகள் இன்னமும் நடந்துகொண்டிருப்பதால், வாகனங்கள் மிக மிக மெதுவாக செல்கின்றன. 

உயர்ந்த பனி மூடிய மலைச்சிகரங்கள், அடர்ந்த காடுகள், வெள்ளிக் கோடுகளாய் மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள், சிற்றோடைகள், சில இடங்களில் நிதானமாகவும், சில இடங்களில் ஆக்ரோஷமாகவும் ஓடிவரும் ஆறுகள்,வளைந்து நெளிந்து போகும் சாலை,  மண்சரிவு மிகுந்த ஆபத்தான இடங்கள் என்று அருமையான இயற்கைக் காட்சிகள் நம் கண்களையும்,மனதையும்  கொள்ளை கொள்கிறது.

நான்கு பக்கமும் இமயமலைச் சிகரங்களான  நீலகண்ட பர்வதம் (சிவபெருமான்), ஊர்வசி பர்வதம் மற்றும் நர-நாராயண பர்வதங்கள் வானுயர்ந்து நிற்கின்றன. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து நீலகண்ட பர்வதம், நர நாராயண பர்வதங்கள் மிக அழகாகக் காட்சி தந்தன. மஹாவிஷ்ணு, நர நாராயணர்களாக அவதரித்து, இந்த லோகக்ஷேமத்திற்காக நீண்ட நெடிய தவம் புரிந்தபோது, தவத்தைக் கண்டு அஞ்சிய தேவேந்திரன் அவர்களது தவத்தைக் கலைக்க அப்ஸரஸ்களை அனுப்புகிறான். உடனே மஹாவிஷ்ணுவானவர் அந்த அப்ஸரஸ்களின் அகம்பாவத்தை அடக்கவும், தேவேந்திரனுக்குப் பாடம் கற்பிக்கவும், தன் துடையிலிருந்து மிகவும் அழகான தேவதையைப் போன்ற ஊர்வசியை உருவாக்குகிறார். 

அவள் அழகைக் கண்டு வெட்கிப்போன அப்ஸரஸ்கள் தங்கள் அகம்பாவத்தைக் களைகின்றனர். தேவேந்திரன் மனம் திருந்துகிறான். இதனால்  பத்ரிநாராயணனின் ஆலயம் 'ஊர்வசி’ பீடம் எனப்படுகிறது. ஆலயத்துக்குத் தெற்கில் ஊர்வசிக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது.பிறகு நர நாராயணர்கள் ஊர்வசியைத் தேவேந்திரனின் அரண்மனைக்கே அனுப்புகிறார்கள். அவளும் தேவேந்திரனின் அரசவையில் ஆடலரசியாகப் பணிபுரிகிறாள். 

வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி, 'ஸ்ரீ பத்ரி நாதரின் பெருமையையும்  பத்ரியைத் தரிசிப்பதனால் ஏற்படும் பயன்களையும் கூறுங்கள்' என்று கேட்டபோது, அவருக்குப் பதில் அளிக்கும் விதமாக, 'ஹிமாலயத்தில் இருக்கும் பத்ரிநாத்தைத் தரிசிப்பவன் தன்னுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று முக்தி அடைகிறான். எவனொருவன் எப்போதும் அவரைப் பிரார்த்திக்கிறானோ,அவனுக்கு பத்ரியைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கிறது'என்றுரைக்கிறார்.

'பத்ரிநாதனைச் சரணடைந்தால், அவர் அவனுடைய பாவங்களைப் போக்கி மோக்ஷம் தருகிறார். ஸ்நான சங்கல்பம் செய்து கங்கையில் நீராடி, பின்னர் தப்த குண்டம் என்று சொல்லப்படுகிற வெந்நீர் ஊற்றிலும் நீராடிவிட்டு, பத்ரிநாதரை வலம் வந்து தரிசிப்பது ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தருவதாக பத்ரி நாதரே கூறியுள்ளார்' என்று வசிஷ்ட முனிவர் தெரிவிக்கிறார். 

விஷ்ணுமனஸ் என்ற அந்தணனின் மகன் விஷ்ஹரதி என்பவன்வேத சாஸ்திரத்தில் ஈடுபாடின்றி பத்ரி வந்தான். அங்கு பெருமாள் அருளால் நாரதராகி ஞானம், யோகித்வம்,இசை வல்லமை  பெற்று சிறப்படைந்தார். அதனால் இது நாரத க்ஷேத்திரம் எனப்படுகிறது. ஜனமேஜயன் பெண்ணாசையால் அழிந்தபோது வியாசர் அறிவுரையால் திருந்திய தலம்.

சம்ஸ்க்ருதத்தில்  ‘பத்ரி’ என்றால் ‘இலந்தை’ என்று பொருள். ஆகவே இத்தலம்  இலந்தைவனமாகத் திகழ்கிறது. இங்கு மஹாவிஷ்ணு தவக்கோலத்தில் இருக்கும்போது, அவரை சூரியனின் வெப்பத்திலிருந்து காப்பதற்காக அவர் அருகேமஹாலக்ஷ்மி அரவிந்தவல்லித் தாயார் என்ற பெயரில் தானே இலந்தை மரமாக நின்றிருக்கிறாளாம். சாதாரண மானிடர்களான நமக்கே அருள் செய்யும் தேவி தன் மணாளனுக்கு மரமாக நிற்பதில் வியப்பில்லையே! மஹாவிஷ்ணு தவத்தில் இருந்தபோது அவரை தரிசிக்க வந்த பிரம்மா முதலிய முனிவர்களிடம் 'தாம் அங்குள்ள நாரத குண்டத்தில் மறைந்திருப்பேன் என்றும் வெகுகாலத்திற்குப் பின் ஒரு ஆன்மீக மஹானால் கண்டெடுக்கப்படுவேன். கலியுகத்தில் மக்களை தீய வழியிலிருந்து நல்வழிப் படுத்த என்னை கஷ்டப்பட்டு வந்து தரிசித்தால் அவர்களுக்கு முக்தி தருவேன்' என்றும் கூறி மறைந்து விட்டார்.

பின்னர் பிரம்மாவால் வடிக்கப்பட்ட சிலை புத்த மதம் தழைத்தபோது அவர்களால் சிதைக்கப்பட்டு நாரத குண்டத்தில் வீசப்பட்டதாம். அந்த விக்கிரகம் ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் கண்டுபிடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாரத குண்டத்திலிருந்துதான் ஆதி சங்கரருக்கு சாளக்ராமம் கிடைக்கிறது.  அதை தப்த குண்டத்திற்கும் கருட சிலைக்கும் நடுவே பிரதிஷ்டை செய்தார். குஷ்ட நோயால் அவதிப்பட்ட கர்வால் மகாராஜா, வரதராஜ ஆச்சாரியார் என்ற தன் குருவின் ஆலோசனைப்படி, இந்த மூர்த்தியைத் தற்போது உள்ள மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியுள்ளார். அதன் பயனாக அவருடைய நோயும் நீங்கப்பெற்றுள்ளது. 

பத்ரிநாத் வைகுண்டத்தின் நுழைவாயில் என்பதால் தேவர்கள் அவரை வணங்க வேண்டியே ஆறு மாதங்கள் பனிப்பொழிவதாகவும் கூறப்படுகிறது. இத்தலத்திற்கு பத்ரி விஷால் என்று பெயர்.  பத்ரியைத் தரிசிக்காமல் முக்தி அடைய முடியாது என்பது நம்பிக்கை. ரிக் வேதத்தின் சில வாசகங்கள் இங்கு எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.

பத்ரிநாதர் ‘பத்ரீசர்’ என்றும் குறிப்பிடப்படுகிறார். இவர் வைணவர்களுக்கு வைகுண்டநாதராகவும், சிவனடியார்களுக்கு பஞ்சமுகி சிவனாகவும், அம்மன் உபாசகர்களுக்கு காளியாகவும் காட்சி தருகிறார் என்பது நம்பிக்கை. எனவே, இது சைவ வைணவத்தின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் தலமாகவும் விளங்குகிறது. மேலும் பௌத்தர்களுக்கு சாக்கிய முனியாகவும், ஜைனர்களுக்கு தீர்த்தங்கரராகவும் காட்சி தருகிறார் என்றும் நம்பப்படுகிறது.

ஆலயம் கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் இரண்டடி உயரத்தில் பத்ரிநாதர் த்யான நிலையில் காட்சி தருகிறார். இவரைத் தரிசிக்காமல் முக்தி அடைய முடியாது என்பது நம்பிக்கை. கருவறைக்கு அருகே தர்ம சிலா என்கிற உண்டியலும் ஹோம குண்டமும் இருக்கின்றன.    வலப்பக்கம் நின்றநிலையில் நரநாராயணர்களும் இடப்புறம் குபேரனும் விநாயகரும் காட்சி தர, பெருமாள் முன்புறம் நாரதர் அமர்ந்திருக்க, மேலே சந்திர சூரியர்கள் உள்ளனர்.
கருமை நிற சாளக்ராமத்தில் உள்ள பத்ரி நாதருக்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம் நடைபெறுகிறது.’ மாலை சிங்கார தரிசனத்தின் போது, விஷ்ணு சஹஸ்ரநாமமும், கீத கோவிந்தமும் பாடப்படுகின்றன. ஆதிசங்கரரால் நியமிக்கப்பட்ட நம்பூதிரிகளே இங்கு பூஜை செய்கின்றனர்.

ஆலயத்தினுள் கண்டா கர்ணனுக்கும், மஹாலக்ஷ்மிக்கும் தனி சன்னிதிகள் இருக்கின்றன. குபேரன், நாரதர், உத்தவர், நர நாராயணர்களுக்கு சன்னிதி உண்டு. ஆதி சங்கரர், ராமானுஜர், வேதாந்த தேசிகர் ஆகியோரின் விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஆலயத்தின் உள்ளே ஆதிசங்கரர் மடமும், அவர் தவம் செய்த குகையும், கற்பக விருட்ச மரமும் உள்ளது.

கோவில் வாயிலில் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் விதமாகப் பத்து தூண்கள் அமைந்துள்ளன. கருடன் அழகாக வீற்றிருக்கிறார். அருகே விநாயகர் விக்ரகமும், ஹனுமான் விக்ரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.

மூலஸ்தானமான கர்ப்பக்கிருகத்தின் விமானம் பொன்னால் வேயப்பட்டிருக்கிறது.  சபா மண்டபத்தில் இருந்துதான் பக்தர்கள் பத்ரிநாதரைத் தரிசனம் செய்ய முடியும். 

காலை 5 மணிக்கு கோயில் திறக்கப்படுகிறது. தரிசன நேரம் காலை 6.30 முதல் பகல் 1 மணி வரையிலும், பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும். வரிசையாக பூஜைகள். எல்லாவற்றிற்கும் கட்டணங்கள் உண்டு. கட்டண தரிசனங்களுக்கு மட்டுமே கருவறையை அடுத்த  மண்டபத்துக்குள் அனுமதி. மற்றவர்கள் வரிசையில் வெளிமண்டபத்திலிருந்தே தரிசிக்க வேண்டும். நாங்கள் மாலை விஷ்ணு சகஸ்ரநாம பூஜையில் கலந்து கொண்டோம். இருபது நிமிடங்கள் இறைவனை இதயபூர்வமாக தரிசித்தோம்.

வராஹ ஷிலா, நாரத ஷிலா, நரசிங்க ஷிலா, கருட ஷிலா, மற்றும் மார்கண்டேய ஷிலா என்று பஞ்ச ஷிலாக்கள் இங்கே இருக்கின்றன. இவை தப்த குண்டத்திற்கு மேலே உள்ளன. அதைச் சுற்றிலும் பிரஹலாத தாரா, கூர்ம தாரா, ஊர்வசி தாரா, பிருகு தாரா, இந்திர தாரா ஆகிய ஐந்து அருவிகள் (பஞ்ச தாரா)இருக்கின்றன. 

பித்ரு காரியங்களைச் செய்வதற்கு அலக்நந்தா கரையில்பிரம்ம கபாலம் என்கிற இடம் உள்ளது. சிவபெருமான் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்தபோது,அது அவர் கையிலேயே ஒட்டிக் கொண்டது. அத்தலை இங்கு விழுந்ததால் பிரம்ம கபாலம் எனப்படுகிறது. இங்கு பிண்ட தர்ப்பணம் செய்வதால் முன்னோர் நற்கதி அடைவதாகச் சொல்லப்படுகிறது.

ஆலயத்திற்கு போகும் வழியில் உள்ள தப்தகுண்டத்தில் நீர் புகை வரும் அளவு பயங்கர  சூடாக உள்ளது. இது இங்கு தோன்றியது  எப்படி? பகீரதனுக்காக  சிவபெருமானின் கபாலத்திலிருந்து உருவான கங்கை என்பதால் சூடாக இருப்பதாக கூறப் படுகிறது. இதில் மருத்துவ குணமுள்ளதால் இதில் குளிப்பவர்களின்    நோய்கள் குணமாவதாகக்  கூறப்படுகிறது.


மஹாபாரதம், ஸ்கந்த புராணம், பாகவத புராணம், பத்மபுராணம் ஆகியவை பத்ரிநாத் தலத்தைப் பற்றிக் கூறுகின்றன.. பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் பத்ரி நாதரின் பெருமைகளைத் திவ்யப் பிரபந்தங்களாகப் பாடியுள்ளனர்.  

நவம்பரில் ஆலயம் மூடப்பட்டபின் ஆறு மாதங்கள் உற்சவ விக்ரகங்கள் கீழே ஜோஷிமடம் எடுத்துச் செல்லப்பட்டு பூஜைகள் தொடரும். அந்த ஆறு மாதங்களும் தேவர்கள் இவரை வழிபடுவதாகக் கூறுகின்றனர். ஆலயம் மூடும்போது ஏற்றி வைக்கப்படும் விளக்கு ஆறு மாதங்கள் கழித்து திறக்கும்வரை எரிந்து கொண்டிருப்பது அதிசயமாகக் கூறப்படுகிறது. 

பயணம் மனதில் பயத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும், பத்ரிநாதனின் தரிசனம் நம் பாவங்களோடு அனைத்து துன்பங்களையும் தூசாக்கி நம் மனதைக் கொள்ளை கொள்கிறது.


பத்ரி நாராயணர் .jpg

Sunday, 24 November 2019

சார்தாம் யாத்திரை

சார்தாம் யாத்திரையில் நாம் தரிசிக்க வேண்டிய சில முக்கிய ஆலயங்கள்.

#உத்தரகாசி
உத்தர காசி  பாகீரதி நதிக்கரையில் கடல்
மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. பல ஆறுகள் கொண்ட இம்மா
வட்டத்தில், பாகீரதியும் யமுனையும் பெரிய ஆறுகள்.  வாரணாசியில் உள்ளது போலவே இங்கேயும் ஒரு 'அசி' நதி இருக்கிறது. ஸ்கந்த புராணத்தில் 'கலியுகத்தின் காசி' என்று சொல்லப்பட்டுள்ளது இத்தலம்.

கலியுகம் பாதி முடியும்போது இப்போதுள்ள பத்ரி கேதார் தலங்கள் அழிந்து விடுமாம். பஞ்சபத்ரிகளில் ஒன்றான பவிஷ்யபத்ரி பத்ரியாகவும் உத்தரகாசி கேதாராகவும் மாறிவிடும் என்கிறது புராணம்.

உத்தர காசியிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் மிக அழகாக உள்ளது. இந்த ஆலயத்தில் சிவபெருமான் தவத்தில் வீற்றிருப்பதாக ஐதீகம். கர்ப்பக்கிருகத்தில் இருக்கும் சிவலிங்கம் தென்திசை நோக்கி லேசாக சாய்ந்திருக்கிறது. எமன் மார்கண்டேயரின் உயிரைக் கவர முயன்றபோது, மார்கண்டேயர் சிவபெருமானைக் கட்டி அணைத்துக்கொண்டதால், அவரை எமனிடமிருந்து சிவபெருமான் காப்பாற்றினார்; அதன் காரணமாகத்தான் சிவலிங்கம் தென்திசையில் சாய்ந்திருக்கிறது என்று கூறுகிறது ஸ்தல புராணம். இந்தத் தலம் மார்கண்டேய மஹரிஷிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பக்கிருகத்தின் உள்ளேயே விநாயகர் பார்வதி தேவி கார்த்திகேயர் விக்ரகங்கள் உள்ளன. தற்போது உள்ள கோவில் தேஹ்ரி மன்னர் சுதர்ஷன் ஷாவின் மனைவி கனேதி தேவி 1857ல் கட்டியது.

கோவில் வளாகத்திற்குள்ளேயே, காசி விஸ்வநாதர் சன்னிதிக்கு எதிரே சக்தி தேவிக்கும் கோவில் உள்ளது. சக்தி தேவி 19.5 அடி உயரம் கொண்ட திரிசூலமாகக் காட்சி தருகிறாள். தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான யுத்தத்தில் இந்த திரிசூலத்தைக் கடவுள்கள் பயன்படுத்தி அசுரர்களை அழித்ததாக ஐதீகம். இந்தத் திரிசூலத்தில், விஷ்ணுவின் சுதர்சன சக்கிரமும் பரசுராமரின் கோடரியும் சேர்ந்துள்ளதாகவும் ஐதீகம்.

இங்கே பாரத திபேத்திய கலாச்சாரப் பிணைப்பைக் காட்டும் விதத்தில் கல்வெட்டுக்களும் அழகிய சிற்பங்களும் உள்ளன. வேதம் பயிலும் பாடசாலை உள்ளது.

நாங்கள் சென்ற அன்று கர்வாசௌத் (Karva Chauth). அன்று நம் காரடை நோன்பு போன்று கணவரின் ஆயுளுக்காக செய்யும் பண்டிகை என்பதால் கோவிலில் நிறைய பெண்கள் பூஜை செய்தனர்.

#குப்தகாசி
ருத்ரப் பிரயாகையைத் தாண்டி உள்ளது குப்த காசி என்கிற இடம்.  குப்தகாசிக்கு எதிரே உள்ள ‘ஊகிமட்’ என்கிற கிராமத்தில்  மணிகர்ணிகா என்கிற  நீரூற்று  உள்ளது.

150 படிகளுக்கு மேல் அமைந்துள்ள  இந்தக் கோவில் கேதார்நாத், நேபாளம், பசுபதிநாத் ஆகிய ஆலயங்களுடன் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் இங்கு செய்யப்படும் பூஜை, புண்ணிய காரியங்கள்,தான தருமங்கள் அந்தத் தலங்களில் செய்த பலனைத் தருவதாக ஐதீகம்.

கோவில் மிகவும் அழகாக  கிட்டத்தட்ட கேதார்நாத் போலவே உள்ளது. கோவிலுக்கு முன்புறம் அழகிய சிறிய குளம் உள்ளது.
அதில் ஒரு பக்கம் ‘பசு’ முகத்திலிருந்து கங்கையும்  மறுபுறம் ‘யானை’ முகத்திலி
ருந்து யமுனை நீரும் ஊற்றிக்
கொண்டிருக்கிறது. சரஸ்வதி பூமியிலிருந்து இணைவதால் திரிவேணி சங்கமம் எனப்படுகிறது.

பாண்டவர்கள் தங்கள் பாவம் தீர சிவபெருமானை தேடி காசி சென்ற போது அவர்களுக்கு காட்சி தராமல் திருக்கயிலாயத்திற்கு வந்து விட்டார். அவரைத் தேடி இமயமலை வந்தபோது ஈசன் இவ்விடத்தில் நந்தி ரூபத்தில் மறைந்ததால் இவ்விடம் குப்தகாசி என்ற பெயர் பெற்றது.

அர்த்தமண்டபத்துடன்  சிங்கி-பிங்கி எனும் துவார
பாலகர்கள் ஆலயத்தை காவல் காக்க கருவறையில் சிவலிங்க ரூபத்தில் அருள்பாலிக்கின்றார் விஸ்வநாதர். அவருக்கு எதிரே  நுண்ணிய  வேலைப்பாடுகளுடன் சிறிய பஞ்சலோக நந்தியெம்
பெருமான் காட்சி தருகிறார். சிவபெருமான் கௌரிதேவியை
இங்குதான் பெண் கேட்டார் என்று ஒரு ஐதீகம் உள்ளது. அவுரங்கசீப் காசி ஆலயத்தை அழித்து மசூதியாக மாற்றியபோது விஸ்வநாதர் இங்கு வந்தவர் இங்கேயே தங்கி விட்டார் என்று கூறப்படுகிறது.

விஸ்வநாதர் ஆலயத்திற்கு இடப்பக்கம்  இன்னொரு சிறு சன்னதி உள்ளது. அது அர்த்தநாரீசுவரர் சன்னதி. இவ்வாலயத்தில் இடபத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் ஆண்பாதி பெண்பாதியாக சிவசக்தியின் பளிங்குமூர்த்தமாக அருள் பாலிக்கின்றார். இடப்பக்கம் மூக்குத்தி, அக்கமாலை, சுவடி, திருப்பாதங்களில் கொலுசு, வலப்பக்கம் நாகம், இளம்பிறை, திரிசூலம், திருப்பாதங்களில் நாகம்  என அழகு மிளிர்கிறது. பின்புறம் அன்னபூரணிக்கு ஒரு சிறு சன்னதி உள்ளது.

#ஜோஷிமட்
ரிஷிகேஷிலிருந்து 254 கிலோமீட்டர் தொலைவில், கடல்மட்டத்திலிருந்து 6150 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஜோஷிமட் அல்லது திருப்பிருதி எனும் திவ்யதேசம். பெருமாளின் மீது பக்தர்களுக்கும், பக்தர்கள் மீது பெருமாளுக்கும் இருக்கும் அன்பைக் குறிக்கும் பிரீதி என்ற சொல்லிலிருந்து இந்தத் திருத்தலம் திருப்பிரீதி என்று பெயர் பெற்று,  பிறகு இந்தப் பெயர் திருப்பிருதி என்று  மருவியிருக்கலாம்.இங்கே இருக்கும் நரசிம்மர் மற்றும் வாசுதேவர் ஆலயங்கள் ஆதிசங்கரரால் கட்டப்பட்டுள்ளன.

திருமங்கை ஆழ்வாரின் பாசுரப்படி இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் கிடந்த திருக்
கோலத்தில் இருந்திருக்கிறார். ஆனால் தற்போது இந்தக் கோவிலில் எழுந்தருளியிருப்பவர் இருந்த கோலத்தில் சேவை சாதிக்கும் நரசிம்மர். இந்தக் கோவில் நரசிங் மந்திர் என்றே அழைக்கப்படுகிறது.

இங்குள்ள கல்பவிருக்ஷம் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கருதப்படுகிறது. நரசிம்மர், துர்கை ஆகியோருக்கு இங்கே கோவில்கள் இருக்கின்றன.

கேரளாவில் இருந்து 8-ஆம் நூற்றாண்டில் இங்கு வந்து இந்தக் கோவிலில் உள்ள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த பிறகுதான் ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதினர் என்றும், இங்கே ஒரு பீடத்தை நிறுவினார் என்றும் ஐதீகம். (ஆதிசங்கரர்  இந்தியாவின் நான்கு திசைகளிலும் நிறுவிய நான்கு பீடங்கள்: வடக்கே ஜோதிர்மட்,கிழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி, மேற்கே துவாரகை)

#வசிஷ்டர்குகை
ரிஷிகேஷிலிருந்து 25 கி.மீ. தொலைவில் பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ளது வசிஷ்டர் குகை. சில படிகள் கீழே இறங்கிச் செல்ல வேண்டும்.

சப்தரிஷிகளில் ஒருவரும் பிரம்மாவின் மானஸபுத்திர
ருமான வசிஷ்டரின் பிள்ளைகள்
விசுவாமித்திரரால் வஞ்சனை
யால் கொல்லப்பட்டபோது மனம் வெறுத்த வசிஷ்டர் தானும் கங்கையில் விழுந்து உயிர்விட  முடிவு செய்தார்.

கங்காதேவி அவரைக் காப்பாற்றி அங்கு தங்கியிருக்க வேண்டினாள். அருந்ததிக்கும் அவ்விடம் பிடித்துப் போய் அங்கேயே தங்கினர்.பல நூறு ஆண்டுகள் இங்கு தவம் செய்தபின் வசிஷ்டர் தன்  மனசஞ்சலம் நீங்கப் பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.
அருந்ததி குகையும் அருகில் உள்ளது.

இவ்விடம் சுவாமி புருஷோத்த
மானந்தா ஆஸ்ரமத்தால்  மிக அழகாக பராமரிக்கப்படுகிறது. சற்று நீண்ட குகையினுள் சிறிய சிவலிங்கம் உள்ளது. அமைதியும் சுத்தமும் மனதைக் கொள்ளை கொள்கின்றன.அங்கு தியானம் செய்ய ஆசனங்களும் உள்ளன. எவரும் உள்ளே சென்று அமர்ந்து தியானம் செய்யலாம். அருகில் அமைதியாக ஓடும் கங்கை
நதியின் அழகு சொக்க
வைக்கிறது.

#ஹனுமான்சட்டி
ஜோஷிமட் பத்ரிநாத் பாதையிலுள்ள ஹனுமான் சட்டி ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம் புராண பெருமை பெற்றது. பீமன் திரௌபதிக்காக சௌகந்திக புஷ்பத்தை தேடிச் சென்றான். வழியில் படுத்திருந்த ஹனுமனை வழிவிடும்ழடி பீமன் சொல்ல, ஹனுமனும் தன் வாலை நகர்த்திவிட்டு போகச் சொன்னார்.

தன் பலத்தைப் பற்றி அகந்தை கொண்டிருந்த பீமன் அலட்சியமாக வாலை நகர்த்தினான். அது நகரக்கூட இல்லை.தன் கையால் பலம் கொண்டவரை நகர்த்தியும் முடியவில்லை. தன் கர்வம் குறைந்து பீமன் மன்னிப்பு கேட்க ஹனுமன் தான் யாரென்று கூறி சகோதரனை அணைத்து ஆசி வழங்கினார். அவ்விடமே இவ்வாலயம் உள்ள இடம். இதே பெயரில் உள்ள இன்னொரு ஊர் யமுனோத்ரி செல்லும் வழியில் உள்ளது.

கோவில் சிறிதானாலும் மிக அழகாக இருக்கிறது. இங்கு ஹனுமான் சாலிஸா சொல்லி எதை வேண்டினாலும் நிறைவேறுமாம்.

இன்னும் பல ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் புராண வரலாறுகள் உள்ளது. எல்லா இடங்களுக்கும் செல்ல யாத்திரையின் 12 நாட்கள் போதாது!

Saturday, 23 November 2019

குமுதம் சிநேகிதி இதழில்..

குமுதம் சிநேகிதி 7.11.'19 இதழில் பிரசுரமான எங்கள் வீட்டு கொலுவின் புகைப்படம். ஆசிரியை திருமதி லோகநாயகி அவர்களுக்கு மிக்க நன்றி🙏மனம் மகிழ் தீபாவளி🎊🎇🔖💣🌟


மனசெல்லாம் மிளிரும் மத்தாப்பூ
மகிழ்மனம் பட்டாசு சிரிப்பொலி
நாவில் தேனாக  இனிப்பு!
இதயம் நிறைந்த  களிப்பு!
புத்தாடையுடன் புன்னகை!
சிறுபிள்ளை போல சந்தோஷம்!

நட்புக்களுடன் நல்வாழ்த்து!
உறவுகளுடன் உற்சாகப் பேச்சு!
குழந்தை பெரியவர் இன்றில்லை!
கொண்டாட்டத்திற்கு அளவில்லை!

இல்லம் தோறும் தீப ஒளி!
இன்பமாக தீபாவளி!
ஆலயம் சென்று வழிபாடு!
ஆனந்தமான வாழ்த்துமழை!

இல்லத்தில் விளக்கொளிர..
இன்பத்தில் மனம் ஒளிர..
உள்ளத்தில் இருள் மறைய...
எண்ணத்தில் அருள் நிறைய...
வண்ணமாய் வாழ்வு செழிக்க..
கண்ணனைக் கொண்டாடுவோம்!


Friday, 22 November 2019

கங்கோத்ரி தாம்


கங்கை நதியின் பிறப்பிடமான
கங்கோத்ரி கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3400 மீட்டர் (11,200 அடிகள்) உயரத்தில் அமைந்திருக்கிறது. பகீரதனின் தவத்தால் பூவுலகிற்குள் நுழைந்த கங்கை இங்கே பாகீரதியாகவே தோன்றுகிறாள். பின்னர் தேவ பிரயாகையில் அலக்நந்தா நதியுடன் சங்கமித்த பிறகுதான் கங்கை என்கிற பெயரைப் பெறுகிறாள்.

கங்கோத்ரிக்கும் மேலே 4255 மீட்டர் உயரத்தில் இருக்கும் 'கௌமுக்'
என்கிற இடத்திலிருந்துதான்
கங்கோத்ரி என்னும் க்ளேசிய
ரிலிருந்து உற்பத்தியாகிறது
பாகீரதி. கௌமுக்கை அடைய ஒற்றையடிப்பாதை கூடக் கிடையாது. கௌமுக்கையும் கடந்து மூன்று கிலோமீட்டர் சென்றால் மேரு-கங்கோத்ரி

தேவப்பிரயாகையில் அலக்நந்தாவுடன் சங்கமிக்கும் வரை மிகவும் ஆக்ரோஷமாக நுரைத்துக் கீழிறங்கி, கற்கள் மணல் என்று அனைத்தையும் வாரிச்சுருட்டிக்கொண்டு
மணலின் வண்ணத்திலேயே
ஓடுகிறது பாகீரதி. போகும் வழியெங்கும் பாகீரதியின் ஆக்ரோஷமான ஓட்டம்.. பாதையெங்கும் மலைச்சாரல்கள், பள்ளத்தாக்குகள் என்று பார்க்குமிடமெல்லாம் பச்சைப் பசேல் என்று பசுமையின் அழகு.

எழிலுடன் பகட்டாக வலம் வந்த பாகீரதி  வெண்மையான கூழாங்கற்களை அள்ளிக்
கொண்டு வெள்ளை வெளேரென்று நுரைத்துக்
கொண்டு தன் ஆக்ரோஷ ஓட்டத்தின் மூலம் வெண்மைப் புரட்சியையும் காண்பிக்கிறாள்!

ஏற்றமும் இறக்கமுமான  சாலைகளின் வழியாகச் செல்லும்போது மலைச்சாரல்
களின் இடையே இமயத்தின் பனிச்சிகரங்களின்  பளபளப்பு.. வளைந்து நெளிந்து உடன் வரும் பாகீரதியின் சலசலப்பு...
அங்கங்கு மலையுச்சியிலிருந்து
வரும் சிறிய அருவிகள்...
மனதைக் கொள்ளை
கொள்கின்றன!

குன்றுகளின் மேல் இறைவனின் புகழ்பாடும் சிறு கோவில்கள்..
ஆங்காங்கே மலைக்கிராமங்
கள்..மலைச்சரிவுகளில் விவசாயம்..உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரங்கள்..
பாலங்கள், மண்சரிவு ஏற்பட்ட பாதைகள் என்று பயணம் சில இடங்களில் ஆனந்தமாகவும், பல இடங்களில் பயமாகவும் இருக்கிறது!

நாங்கள் சென்ற அன்று துலா மாதப் பிறப்பானதால் செல்லும் வழியில் 'கங்கனானி' என்ற இடத்திலுள்ள வெந்நீர் ஊற்றில் ஸ்நானம் செய்தோம். தண்ணீர் குளிக்க இதமாக உள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் குளிக்க தனித்தனி இடங்கள் உள்ளது. அங்கு கங்காமாதாவின் சிறிய ஆலயம் உள்ளது.

அங்கிருந்து கங்கோத்ரிக்கு சென்றோம். ஆலயத்திற்கு ஒரு கி.மீ.தூரம் நடக்க வேண்டும்.
இந்தக் கோவிலை கர்வாலின் கூர்க்கா பிரிவைச் சேர்ந்த ஜெனரல் அமர்சிங் தாப்பா என்பவர் 18ம் நூற்றாண்டில் கட்டியுள்ளார்.

கங்கை பூமிக்கு வர காரணமா
னவர் பகீரதன் என நாம்
அறிவோம். அவனுடைய
கொள்ளுத் தாத்தா அயோத்தியை ஆண்ட இஷ்வாகு குல அரசர் மகாராஜா சகரன். குழந்தைப்பேறு வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது முதல் மனைவியான சுமதிக்கு 60000  பிள்ளைகளும், இரண்டாவது மனைவி கேசினிக்கு அம்சுமான் என்ற ஒரு மகனும் பிறந்தனர்.

அவர் அஸ்வமேதயாகம் செய்ய விரும்பினார். அதற்காக யாகக் குதிரையை எல்லா நாடுகளுக்கும் அனுப்பி அவர்களுக்கு அசுவமேத
யாகம் பற்றி சொல்வது வழக்கம். அவரை யாரும் எதிர்ப்பவர்கள் இல்லாததை அறிந்த தேவேந்திரன் தன் பதவி பறிபோய் விடுமென பயந்து அக்குதிரையை திருடிச் சென்று கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டிவிட்டான்.

இதனால் கோபம் கொண்ட சகரன் தன் 60000 மகன்களை அனுப்பி குதிரையைக் கண்டு பிடித்து வர அனுப்பினார். அவர்கள் கபிலமுனியின் ஆசிரமத்தில் குதிரையைக் கண்டு அவர் திருடியதாக எண்ணி அவரைக் கடுஞ்சொற்களால் பேசினர்.

தவம் கலைந்ததால் கோபம் கொண்ட கபிலர் அவர்கள் அனைவரும் சாம்பலாக சாபமிட்டார். அதை அறிந்த அம்சுமான் அவரிடம் பணிந்து வேண்ட..அவர்கள் மோட்சம் அடைய வேண்டுமெனில் தேவலோகத்தில் இருக்கும் கங்கையில் அவர்கள் சாம்பலைக் கரைக்க வேண்டும்..என்றார்.

அம்சுமானும் அவன் மைந்தன் திலீபனும் எவ்வளவு முயற்சித்தும் கங்கையை பூவுலகிற்கு கொண்டு
வர முடியவில்லை. தம் முன்னோர் நற்கதி அடையாததை அறிந்த  திலீபனின் மகன் பகீரதன் தன் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்க கங்கையை வேண்டி 1000 ஆண்டுகள் ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் செய்தான்.

அவன் தவத்துக்கு இரங்கிய கங்கை பூமிக்கு வந்தாள். எப்படி? அவள் இறங்கிய வேகத்தில் பூமியே மூழ்கிக் காணாமல் போய்விட்டது. பூமியைக் காப்பாற்ற கங்கையை தம் சடையில் தாங்கி அவள் வேகத்தை கட்டுப் படுத்தினார் சிவபெருமான். இதனால் மனம் வருந்திய பகீரதன் சிவபெருமானைக் குறித்து மீண்டும் தவம் செய்ய, அவன் தவத்திற்கு இரங்கிய சிவன் கங்கையின் வேகத்தைக் குறைத்து பூமிக்கு அனுப்பினார். அந்நதியின் பெயர் பாகீரதி ஆயிற்று. பகீரதனின் முன்னோர்களும் நற்கதி அடைந்தனர்.இதனாலேயே ஒரு காரியத்தில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பலன் அடைவதை பகீரதப் பிரயத்தனம் என்கிறோம்.

இங்கு பகீரதசிலா என்ற பெயரில் பகீரதன் தவம் செய்த இடம் உள்ளது. அதைக் காணும்போது பகீரதனின் மன உறுதியை எண்ணத் தோன்றுகிறது.
வெண்ணிறக் கல்லினால் கட்டப்பட்ட கங்காமாதாவின் கோவிலும், காசிவிஸ்வநாதர் ஆலயமும் உள்ளது.
கங்காமாதாவின் சிறிய வெள்ளியிலான விக்ரகம்.அவளை தரிசித்தாலே நம் பாவங்கள் நீங்கிவிடும் என்கிறார் அங்குள்ள பண்டா. சிவலிங்கத்திற்கு நாமே அபிஷேகம் செய்யலாம்.

கணபதிக்கும் துர்கா லக்ஷ்மி சரஸ்வதிக்கும் சந்நிதிகள் உண்டு. இங்கே பஞ்ச பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் செய்ததாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. இங்குள்ள உற்சவ விக்ரகம் தீபாவளி முதல் அட்சயதிருதியை வரை ஆறுமாதங்களுக்கு கீழுள்ள
முக்பா கிராமத்தில் முகிமட் என்ற ஆலயத்தில் வைத்து வழிபாடுகள் நடைபெறும்.

கோவிலின் அருகிலேயே பாகீரதி மிகவும் சில்லென்று குளிர்ச்சியாக  மிக அழகாக தெளிவாக அமைதியாக ஓடுகிறாள். இவ்விடம் கங்கோத்ரி என்றாலும் அலகநந்தாவுடன் சேர்ந்தபின்பே கங்கையாகிறாள். நதி முழுதும் வெண்பளிங்குக் கற்கள். மிக கவனமாகக் குளிக்க வேண்டும். தெய்வீகம் ததும்பி நிற்கும் அழகான அந்த இடத்திலிருந்து வரவே மனமில்லை.

திரும்ப வரும்போது பைரான்காட்டிலுள்ள பைரவரை தரிசித்து செல்ல வேண்டும் என்பது ஐதீகம். அழகிய சிறிய ஆலயத்து பைரவரிடம் எங்கள் வருகையைப் பதிவு செய்தோம்!

திரும்ப உத்தரகாசி செல்லும் வழியில் 'பைலட்பாபா ஆஸ்ரம்' பார்க்க வேண்டிய ஆலயம். அத்தனை இறை உருவங்களும் பிரம்மாண்ட உயரத்தில்! அவற்றின் அழகு கண்களுக்கு விருந்து!

மனிதனின் கால், கை படாத இடங்களில் இயற்கை
அன்னையின் இயல்பான
நாட்டியம் கண்களையும் மனதையும் சொக்க வைக்கிறது!

மருத்துவர் தினம்

எனக்கு இரண்டு மகன்களுக்குப் பின் பெண் பிறந்ததும் மகிழ்ச்சி தாங்கவில்லை! அப்பவே முடிவு செய்தேன் அவளை ஒரு மருத்துவராக்க வேண்டுமென்று.

இரண்டு வயது முதலே அவள் தன் அண்ணாக்களுடன் பள்ளி செல்வேன் என்று அடம் பிடிப்பாள் ஒரு பையில் சிலேட்டு, அவளுக்கு வாங்கிக் கொடுத்த புத்தகம் போட்டுக் கொண்டு அவர்களுடன் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்து விடுவாள்.அவளை இறக்குவதற்குள் போதும் என்றாகிவிடும்!

படிப்புடன் டான்ஸ், டிராமா, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசை தட்டிக் கொண்டு வருவாள். சிறு வயது முதலே அவளுக்கு டாக்டராக வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வேன்.   

நாங்கள் கோலாப்பூரில் இருந்தபோது +2 படித்தாள். நல்ல மார்க்குகள் எடுத்து மும்பை கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் (Grant Medical college)ல்  இடம் கிடைத்தது.

மும்பையில் 150வருடங்களுக்கு மேல் பழமையான, நாட்டின் மிகச் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று. அங்குதான் முன்னாபாய் M.B.B.S. படப்பிடிப்பு நடந்தது.

அவளைக் கல்லூரியில் சேர்த்துவிட்டு நான்தான் தினமும் கவலைப்பட்டேன். Dead body பார்த்து பயந்து விடுவாளோ
...ragging எப்படி இருக்குமோ...
உடன் படிப்பவர்கள் எப்படியோ..
என்று ஒரே டென்ஷன்!

அப்பொழுதெல்லாம் மொபைல் கிடையாது. அடிக்கடி ஃபோன் செய்யவும் முடியாது.  ஒரு மாதத்துக்குப் பிறகு call செய்தவள் படிப்பு மிக interestingகாக இருப்பதாகச் சொன்னாள்.

...Dead body பார்த்து பயந்தியா...

..சே..எனக்கென்ன பயம்? நம்ம உடம்புக்கு உள்ளே இருக்கற பார்ட்ஸ் எல்லாம் பார்த்தேன்...

...யாராவது பயப்பட்டாளா?...

...ஆமாம்மா. ஒரு பையனும், 2 பெண்களும் பயந்து வீட்டுக்கு போய்ட்டா.பாவம்...

...தமிழ்ப் பெண்கள் இருக்காளா?..

...இல்ல. நான் மட்டும்தான். எல்லாரும் என் நீள தலைமுடியைப் பார்த்து ஆச்சரியப் பட்றா! தொட்டு தொட்டு பாக்கறா!...
...அப்றம் கேளேன். அனாடமி professor எல்லார்கிட்டயும்  ஜொள் விட்டதோடு, என்னிடம் ‘ஆத்தி க்யா கண்டாலா?’
(கண்டாலாவுக்கு வருகிறாயா?) என்று கேட்டதும்   நடுங்கிட்டேன்!... 

...நீ என்ன சொன்ன?...

...நான் என்ன சொல்லற்து? சீனியர்ஸ் சொன்னா 'அவர் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டியாம். Girlsகிட்ட அப்டித்தான் அசடு வழிவாராம்!...

...அப்பறம் ragging பண்ணினாளா?...

...இரவு 8 மணிக்கு ஹாஸ்டலிலிருந்த எங்களை சீனியர்கள் கூப்பிட்டு அனுப்பினா. 7, 8 பேராக கிளம்ப, வார்டன் கேட்க, நான் முந்திரிக் கொட்டை மாதிரி சீனியர் ரூமுக்குப் போறதா சொல்லிட்டேன்.
‘நோ ராகிங்; அறைக்குத் திரும்புங்கள்’ என்று வார்டன் சொல்லிவிட, வந்து ஜாலியா தூங்கிட்டோம்...

...சீனியர்கள்  நடந்ததை அறிந்து இரவு 2 மணிக்கு வந்து, என்னை மட்டும்  கூப்பிட்டுன் போனா. ஆட்டம், பாட்டம் வேறு! ‘தோட்டத்திலுள்ள செடி, மரங்களை எண்ணிட்டு வா’ ன்னு  துரத்த, நானும் கர்ம சிரத்தையாக எண்ணிண்டு வந்து சொன்னேன்!
...‘சே! உனக்கு அறிவில்லை? மரம், செடியெல்லாம் எண்ணினா 
எப்படி டாக்டராகற்து?’ என்று கேலி செய்ய, போறும்னு ஆயிடுத்து போ...

அதன்பின் அந்த சீனியர்களே இவளுக்கு நண்பர்களானது வேறு விஷயம்.

முதல்முறையாக பிரசவத்தை நேரில் பார்த்த பலரும்...முக்யமாகப் பையன்கள்..மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார்கள் என்பாள். அம்மாவைக் கோபிக்கவே மாட்டோம்னு சொல்கிறார்கள்..என்றாள்.

அதன்பின் என் கணவர் வங்கிப்பணியில் VRS  வாங்கிக்கொள்ள நாங்கள் மும்பை சென்று விட்டோம். ஒவ்வொரு வீக்என்டும் 10 ஃப்ரெண்ட்ஸை வீட்டுக்கு அழைத்து வருவாள். இட்லி,தோசை, வடை என்று விதவிதமாக சமைத்துப் போடுவேன்.

அவள் படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றபோது அவளைவிட நான்தான் அதிக சந்தோஷ
மடைந்தேன். எங்கள் குடும்பத்தில் முதல் டாக்டர். அன்று நான் அவளை ஈன்ற பொழுதின் பெரிதுவந்தேன்.

ஒருமுறை அவள் மருத்துவராக ICUவில் பணிபுரிந்தபோது  இரவு ஒருவர்  இறந்துவிட,  தூக்கத்தை அடக்கமுடியாமல்  அவரை அகற்றியதும் அதே bedலேயே தூங்கினேன் என்பாள்! டாக்டர்களின் நேரம் காலமில்லாத தொண்டு ஈடில்லாதது!

நான் histerectomy
செய்துகொண்டபோதும், காலில் varicose vains அறுவை சிகிச்சையின் போதும்  என் பெண் உடனிருந்தது எனக்கு தைரியம் கொடுத்தது.

இப்பவும் எங்கள் family doctor என் மகள்தான். அவள் சொல்லும் மருந்துகள் எங்களுக்கு உடன் பலன் தரும்.

காதலொருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து, ஆணும் பெண்ணுமாக இரு அழகுக் குழந்தைகளுடன் சிறப்பான இல்லறத்தை இனிமையாக நடத்தும் என் செல்ல மகள் Dr.கிரிஜா  வுக்கும், அன்பான மாப்பிள்ளை Dr.விஜய்க்கும் இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள்!!

Thursday, 21 November 2019

மகள் தினம்..22.9.'19


நேற்றைய மகள்களின் தினத்திற்காக...

அழுகையோடு அழகாக
அகிலம் வந்து உதித்த
ஆசை மகளே!

பெண் வேண்டும் என்று ஆசைப்பட்ட உன் அப்பாவின் செல்லமாக என் வீட்டிற்கே
இன்பம் தந்த மகளே!

நீ தத்தி நடக்கும்போதும்
மழலை மொழி பேசும்போதும்
கண்கள் விரிய பேசும்போதும்
கோபித்தால் விசிக்கும் போதும்
எங்கள் வீட்டு தேவதையானாய்!

அப்பாவின் செல்ல மகள்!
அண்ணன் தம்பிகளின்
அருமை சகோதரி!

அவ்வப்போது அழகாய்
அறிவுரைக்கும்
என் அருமைத் தோழி மட்டுமல்ல..என்
அன்புத் தாயாகவும்
தோற்றமளிக்கிறாய்!

நீ மருத்துவரானபோது
மனமகிழ்ச்சியில்
வானத்தில் பறந்தேன் நான்!

காதலித்தவனைக் கைப்பிடித்து
காலம் முழுதும் அவனுடன் வாழ
காவியமாய் நீ புறப்பட்டபோது
கண்கலங்கியது நீ மட்டுமல்ல..
நாங்களும்!

குழந்தைகள் உனக்கு பிறந்தாலும்
குறையாத பாசமும்
நிறைவான நேசமும்
என்றைக்கும் காட்டும்
அன்பு மகள் நீ!

நீ வருகிறாய் எனும்போதே
நான் ஆனந்தத்தில்
ஆவலாய்க் காத்திருக்கிறேன்...
உன்னைக் காணவும்
உரையாடி மகிழவும்!
வா..மகளே..வா!

யமுனோத்ரி தாம்


பத்ரி கேதாரை அடுத்து இது சார்தாமில் மூன்றாவது தலம். இமயமலையில் கார்வாலில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3300 மீட்டர் (10800 அடி) உயரத்தில் யமுனோத்ரிக்கு மேல் 4400 மீட்டர் உயரத்திலுள்ள சம்பஸார் கிளேசியரிலிருந்து தன் நீண்ட பயணத்தைத் துவங்கும் யமுனை, இமயமலைச் சாரலில் பல இடங்களைத் தன் மென்மையான கரங்களால் தழுவியபடியே நிதானமாக, அமைதியாக, அழகாக, ஆரவாரமின்றிச் சென்றுகொண்டிருக்கிறாள். அந்த யமுனோத்ரியே  யமுனையின் ஆலயம் அமைந்துள்ள சார்தாம்களில் ஒன்று.

அசீத முனிவர் நாள்தோறும் கங்கையிலும் யமுனையிலும் குளித்துத் தவம் செய்யும் வாழ்வை மேற்கொண்டவர். அவருடைய முதுமைக் காலத்தில் அவரால் கங்கோத்ரி செல்ல முடியாததால் கங்கை நதியே அவருக்காக யமுனோத்ரி வந்ததாக நம்பப்படுகிறது.

இத்தகு சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலமான யமுனோத்ரி, ரிஷிகேஷிலிருந்து சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் இருக்கிறது. டேராடூன், முசோரி, பார்கோட் வழியாக ஜானகிபாய் சட்டி என்ற இடம் வரையில் தான் பேருந்து செல்லும். பின்னர் அங்கிருந்து 6 1/2 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் ஏறிச்சென்றால் யமுனோத்ரி அடையலாம்.

ஜானகிபாய் சட்டியிலிருந்து பார்க்கும்போது பனி சூழ்ந்த இமயமலைச் சிகரங்கள் இளம் வெயிலில் பளபளத்துக்
கொண்டிருந்தது கண்களைப் பறிப்பதாக இருந்தது. இயற்கையின் அழகு நம்மைக் கட்டிப் போடுகிறது.

மேலே ஏற முடியாதவர்களுக்கு குதிரைகளும், நான்கு பேர் தூக்கிச் செல்லும் டோலிகளும் உள்ளன. குதிரைகளுக்கு 1000முதல் 1200 வரையும், டோலிகளுக்கு 3500 முதல் 4500 வரையும் ஆகும் என்றார் எங்கள் டூர் மேனேஜர். நாங்கள் சென்றது சீஸனின் கடைசி டூர் என்பதால் அவர்கள் கேட்டதைக் கொடுக்க வேண்டியதாயிற்று. அவர்களுக்கு ஏஜண்டுகள் இருப்பதால் அவர்கள் மூலமே நாம் புக் செய்ய முடியும்.

குதிரையில் செல்ல 1500ரூ. டோலி நான்கு பேர் என்பதால் 5000ரூ. குதிரைக்கு 100ரூபாயும், டோலிக்கு 500ரூ.யும் அரசுக்கு tax கட்டவேண்டும். குதிரைக்காரருக்கு 500ரூ.யும் டோலிக்காரர்களுக்கு 1000ரூ.யும் சாப்பாட்டுக்கு கொடுக்க வேண்டும். சீஸனில் குறைவாகக் கேட்பார்களாம். மேலே செல்ல குதிரையில் 1 மணி நேரமும் டோலியில் 2 மணி நேரமும் ஆகிறது.

மலை மிகவும் செங்குத்தாக இருப்பதால் ஏற முடியாதவர்கள் கண்டிப்பாக இப்படித்தான் மேலே ஏறி இறங்க வேண்டும். எங்கள் குழுவில் காலை 9 மணிக்கு காலநடையாக ஏறிச் சென்றவர்கள் 5 மணிக்கு திரும்பி வந்தார்கள். திரும்ப வரும்போது மழை வந்துவிட்டதால் குதிரைகள் இறங்க முடியாமல் வழுக்கி விழுகின்றன.

நடந்து செல்பவர்கள் குதிரைகளுக்கும்,
டோலிகளுக்கும் வழிவிட்டுச் செல்லவேண்டும்.
டோலிக்காரர்கள் சற்று உயரம் குறைவான பாதைகளில் நம்மை இறக்கி விட்டு சற்று தூரம் நடக்கச் சொல்கிறார்கள். அவர்களும் மனிதர்கள்தானே? அவர்கள் தூக்கிச் செல்வது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. வழியில் தேனீர் சாப்பாட்டு கடைகளில் இறக்கி அவர்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொள்கிறார்கள். நடந்து செல்பவர்கள் ஓய்வெடுக்க வழியில் இருக்கைகளும், கழிவறை வசதிகளும் உள்ளன.

பனியாறுகள் கொண்ட பிரம்மாண்ட பனிமலையாக இமயத்தின் தரிசனம். மனிதனின் அசுரக்கரங்கள் இன்னும் எட்டாத இடத்தில் இருப்பதால், அவனிடமிருந்து தப்பிப்பிழைத்த, மரங்களும், செடிகொடிகளும் கொண்ட பசுமையான பிரதேசம் கண்களுக்கு இதத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. ஒரு பக்கம் நெடிதுயர்ந்த மலையும் மறுபுறம் அதலபாதாளமுமாக இயற்கையின் எழிலான காட்சி நம்மைப் பிரமிக்க வைக்கிறது.
மலையில் பிறந்து மண்ணில் இறங்கி நம்மை வாழவைக்கும் நதிகளின் பெருமையும் சிறப்பும் சொல்லி மாளாது.  இத்தனை நதிகள் இருந்தும் தண்ணீருக்கு நாம் படும் கஷ்டம் ஏன்? பதில் தெரியாத கேள்வி.

செல்லும் வழியில் ராமர், பைரவர் ஆலயங்கள் உள்ளன. நான் டோலியில் சென்றதால் பார்க்கும் பரவசக் காட்சிகளையும் இயற்கை அன்னையின் எழிலான தோற்றத்தையும் கண்களுக்குள் படம் பிடித்ததோடன்றி என்றும் காணும் விதமாக மொபைலிலும் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் பதிந்து கொண்டேன்.

யமுனை நதி தெளிவாகப் பளிங்குபோலும், சற்றே இளம்பச்சை நிறத்தோடும் அசைந்து வளைந்து நெளிந்து அழகாக ஓடிவருகிறாள். அருகிலேயே யமுனைக்கான ஆலயம் அமைந்துள்ளது.

கீழே படிகளில் இறங்கிச் சென்றால் யமுனை நதி. கங்கை சரஸ்வதி போலின்றி சாதுவாக ஓடும் நதியில் நீரும் அதிகமில்லை. மேலே கிளேசியர்கள் உருகி வரும்போது நிறைய தண்ணீர் இருக்குமாம். 

யமுனோத்ரியில் பயங்கர குளிர். தண்ணீரைத் தொட்டாலே கைகள் குளிரில் மரத்துப்போகிறது.
இதற்கு அருகில் எப்படி ஒரு வெந்நீர் ஊற்று என்று இயற்கையை நினைக்க  ஆச்சரியமாக உள்ளது. தண்ணீரை பாட்டிலில் நிரப்பிக் கொண்டோம். டோலி ஆட்கள் விரைவாக வரச்சொன்னதால் குளிக்க முடியவில்லை.

அங்குள்ள சூர்யகுண்டம் என்ற வெந்நீர் ஊற்றுக் குளத்தின் தண்ணீரைப் ப்ரோக்ஷித்துக் கொண்டு அருகிலுள்ள யமுனாபாய் குண்டத்திற்கு சென்றோம்.

சூரிய குண்டத்தின் அருகில் உள்ள 190°F.ல்  கொதிக்கும் நீரூற்று  'யமுனாபாய் குண்டம்' என்று அழைக்கப்படுகிறது. அங்கே யமுனையின் 'திவ்ய சிலா' பூஜிக்கப்படுகிறது. அங்குள்ள பண்டா என்ற  புரோகிதர்கள்   நாம் கொடுக்கும் அரிசியையும்,
உருளைக்கிழங்கையும்  ஒரு
மெல்லிய துணியில் கட்டி  அந்த குண்டத்தில் சில நிமிடங்கள்  வைத்துக் கொள்கிறார்கள். அது ஓரளவு வெந்ததும் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். அந்த அரிசியைக் காயவைத்து பாயசம் செய்து சாப்பிட சொல்கிறார்கள். அங்குள்ள கடைகளில் அரிசி, உருளைக் கிழங்கு விற்கிறார்கள்.

அடுத்து யமுனையின் ஆலயதரிசனம். யமுனை சூரியனின் மகள். யமனின் சகோதரி. இவளை வணங்கு
வதால் யமபயம் இன்றி கஷ்டமில்லாத மரணம் சம்பவிக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலே வெகு உயரத்தில் இருந்த யமுனையின் ஆலயத்துக்கு யாரும் எளிதில் போகமுடியாததால் இவ்வாலயத்தை தேஹ்ரி அரசர் நரேஷ் சுதர்சன் ஷா  1839ம் ஆண்டு யமுனோத்ரியில் உருவாக்கினார்.

கர்ப்பகிரகத்தில் கருமை நிறத்தில் யமுனையும் வெண்ணிறத்தில் கங்கையும் காட்சி தருகிறார்கள். தீபாவளிக்கு அடுத்தநாளான யமதிவிதியை அன்று உற்சவ விக்ரகம் கீழுள்ள கர்சாலி என்ற இடத்திலுள்ள ஆலயத்துக்கு பல்க்கில் விமரிசையாக எடுத்துச் சென்று பூஜிக்கப்படும். ஆறு மாதங்களுக்கு பின்பு அட்சயதிருதியை அன்று திரும்ப யமுனோத்ரிக்கு செல்லும்.

நான்கு தாம்களில் யமுனோத்ரி தாம் செல்வது சற்று கடினமாகவே உள்ளது. ஜானகிபாய் சட்டியிலிருந்து பாதை மிக குறுகலாகவும் மேடுபள்ளமாகவும் உள்ளது. தெரு விளக்குகளும் குறைவு.

நாங்கள் திரும்பும்போது 6 மணிக்கு மேல் ஆகிவிட்டது. பகலில் மயக்கும் இயற்கை அழகு இருளில் எதையும் ரசிக்க முடியாமல் நம்மை மிரட்டுகிறது. நல்லபடி போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணமே மேலோங்
குகிறது. பேருந்து ஓட்டுனர்களின் திறமைக்கு தலை வணங்க வேண்டும்.

எங்கள்_வீட்டு_கொலு


உலகமனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரி கொண்டாடுவதன் தத்துவம். இதன் காரணமாகவே இமயம் முதல் குமரி வரை அன்னை கொலு வீற்றிருக்கும் காட்சி வீடு தோறும் காணப்படுகிறது. தேவியானவள் உலகிலுள்ள அத்தனை உருவத்திலும் உலவுகிறாள் என்பதாலேயே கொலுவாக எல்லா உருவங்களிலும் அவள் பூஜிக்கப் படுகிறாள்.

மஹாளய பக்ஷம் பதினைந்து நாட்களும் பித்ரு பூஜைக்கு முக்கியமானது. தொடர்ந்து வரும் சுக்ல பக்ஷம் தேவதைகளின் பூஜைக்கு உரியது. சமஸ்த தேவதைகளும் பராசக்தியில் அடங்குவதால் நவராத்திரி பராசக்தியை வணங்கும் பூஜையாயிற்று.

ப்ரும்ம ஸ்வரூபியான பராசக்தி மக்களுக்குத் துன்பம் ஏற்படுத்தும் கொடியவர்களைக் களைய ஐந்து முறை அவதரிக்கிறாள்.

திருப்பாற்கடலில் ஆலிலை மேல் ஸ்ரீமகாவிஷ்ணு சயனித்திருக்க, அவரது நாபியிலிருந்து தோன்றிய பிரம்மா எதுவும் செய்யத் தோன்றாது மயங்கி நிற்க தேவி பிரசன்னமாகி அவருக்குத் தெளிவும், சிருஷ்டிக்கும் வல்லமையும் தந்து, விஷ்ணுவின் யோக நித்திரையைக் கலைத்து மது கைடபர்களைக் கொல்ல சக்தியளித்து மறைந்ததே முதல் அவதாரம்.

மோகினியாகத் தோன்றியது இரண்டாவது அவதாரம்.

தாக்ஷாயணி மூன்றாவது,

பார்வதியாகத் தோன்றியது நான்காம் அவதாரம்.

ஈசன் நெற்றிக் கண்ணால் மன்மதனைச் சாம்பலாக்க, விஸ்வகர்மா அச்சாம்பலைப் பிசைந்து உருவமாக்க, ஈசனின் க்ருபையால் உயிர் பெற்றவனே பண்டாசுரன். அவனது துன்பங்கள் அதிகரிக்க தேவர்கள் ஸ்ரீவித்யா என்ற மந்திரத்தால் அம்பாளைப் பிரார்த்தித்து ஹோமம் செய்தனர்.

அந்த ஹோம குண்ட மத்தியில் ஸ்ரீசக்கரமென்ற ரதத்தில் அம்பிகை தோன்றினாள். லலிதாம்பிகை என்ற நாமத்துடன், உடன் அநேக சக்திகளையும் உருவாக்கி சிந்தாமணி க்ருஹத்தில் காமேஸ்வரருடன் சௌபாக்கியவதியாய் விளங்கிய இதுவே தேவியின் ஐந்தாவது அவதாரம்.

பகலில் செய்யும் பூஜை ஈஸ்வரனுக்கும், இரவில் செய்யும் பூஜை தேவிக்கும் உரியது. ஆனால் இந்த ஒன்பது தினங்களில் பகல், இரவு இரண்டு நேரம் செய்யும் பூஜையும் தேவிக்கே உரியன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் குறிப்பிட்ட ஒரு நாளே பூஜை செய்ய உகந்தது. ஆனால் பராசக்தியை ஒன்பது மடங்கு அதிகமாக பூஜிக்கவே நவராத்திரி என்று ஒன்பது தினங்கள் விதிக்கப் பட்டுள்ளன.

சித்திரையும், புரட்டாசியும் யமனின் இரண்டு விஷப்பற்கள் என்பதால், இவ்விரண்டு மாதங்களிலும் பலவிதமான விஷ நோய்கள் ஏற்படும். அவற்றை நீக்க ஈசுவரி அருள் வேண்டியே, சித்திரை மாதம் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதம் பாத்ரபத நவராத்திரியும் அனுஷ்டிக்கப் படுகின்றன. சரத் காலத்தில் வருவதால் இது ‘சாரதா நவராத்திரி’ எனப்படுகிறது.

‘சக்தி’ என்றால் விசை, ஆண்மை, பலம், வல்லமை, ஊக்கம் என்பது பொருள். சக்தியின் தயவின்றி இவ்வுலகில் நாம் எந்தக் காரியமும் செய்ய இயலாது. அவளுடைய அருளை வேண்டியே, நாம் நவராத்திரியின் போது அவ்வம்பிகையைப் பூஜிக்க வேண்டியது அவசியம். ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கிய ஈசுவரி பத்தாம் நாள் சிவத்தில் கலந்து ‘அர்த்த நாரி’யாகிறாள்.

இந்த ஒன்பது நாளும் தினமும் தேவி மகாத்மியம், துர்கா சப்தசதி, தேவி ஸஹஸ்ர நாமம், ல்லிதா த்ரிசதி, லலிதாம்பாள் சோபனம் போன்றவற்றை பாராயணம் செய்து சுமங்கலிகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் விசேஷ பலன் கிடைக்கும்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் தேவி மாஹேஸ்வரி, கௌமாரீ, வாராஹி என்ற பெயர்களில் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என்ற பெயர்களில் லட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என்ற பெயர்களில் சரஸ்வதியாகவும் பூஜிக்கப் படுகிறாள். தேவியை ஒன்பது நாட்களும் ஒன்பது வடிவங்களில் வழிபடுவது அவசியம்.

முதல் நாள் மதுகைடபர் அழிவுக்குக் காரணமான தேவி ‘குமாரி’யாகிறாள். இரண்டாம் நாள் ‘ராஜராஜேசுவரி’. மூன்றாம் நாள் மகிஷனை வதம் செய்து சூலம் தாங்கிய ‘மஹிஷாஸூர மர்த்தினி’க் கோலம்.

நான்காம் நாள் வெற்றிக்கு விளக்கமான ‘விஜய லட்சுமி’. ஐந்தாம் நாள் ‘மோஹினி’யானாள்,
ஆறாம் நாள் சர்ப்ப ராஜா ஆசனத்தில் அமர்ந்த ‘சண்டி’கைக் கோலம்!

ஏழாம் நாள் சண்ட, முண்டர்களை அழித்து ஸ்வர்ண ஆசனத்தில் வீணை வாசிக்கும் தோற்றம். எட்டாம் நாள் ரக்த பீஜனை சம்ஹாரம் செய்து கருணை பொழியும் ‘ஜகன் மாதா’ கோலம். ஒன்பதாம் நாள் வில், அம்பு, அங்குசம், சூலமுடன் ‘ஸ்ரீ லலிதா பரமேசுவரி’யின் கோலம்.

பத்தாம் நாள் தேவி ஈசுவரனைப் பூஜித்து ‘சிவ சக்தியைக்ய ரூபிணி’ ஆகிறாள். ‘ஸ்ரீமாதா ஸ்ரீமஹா ராக்ஞி’ என்று ஆரம்பிக்கும் லலிதா ஸகஸ்ர நாமம் கடைசியில் ‘சிவஸ்க்தியைக்ய ரூபிணி’ என முடிவது இதனை நன்கு உணர்த்துகிறது.

நவராத்திரி விரதத்தை மேற் கொண்டதால் சிவன் முப்புரம் எரித்தார். ஸ்ரீராமன் சீதையையும், இழந்த ராஜ்ஜியத்தையும் பெற்றார். பராசக்தி அருளால் திருமால் மது கைடபர்களை அழித்தார். இந்திரன் நவராத்திரி பூஜை செய்து, விருத்திராசுரனை அழித்தான்.

ஆதி சங்கரர் சக்தியின்றி ஓரணுவும் அசையாது என்பதை சௌந்தர்யலஹரி முதல் சுலோகத்தில் உரைத்துள்ளார்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், அபிராமி பட்டர் ஆகியோரும் அன்னையின் அருள் பெற்றவர்கள். நாமும் நவராத்திரி ஒன்பது நாட்களும் தேவியைப் பூஜித்து இகபர சுகங்களைப் பெறுவோமாக.

எங்கள் வீட்டு கொலுவில் இந்த வருட ஸ்பெஷல்...
அன்னை ஸ்ரீபாலாவும் அவளைத் தம் வீணை இசையால் ஆராதிக்கும் ஸ்ரீமகாபெரியவரும்...
தேவி க்ருஹலக்ஷ்மியும்🙏

Monday, 18 November 2019

சரஸ்வதி நதியின் தோற்றம்


சரஸ்வதி நதியின் தோற்றம்
(மனா கிராமம் பத்ரிநாத்)

சரஸ்வதி நதியை நாம் எங்கும் காணமுடியாது. அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் சரஸ்வதி நதி கலப்பதாக ஐதிகம். இவள் பிறந்த இடம்தான்
பத்ரிநாத்திற்கு அருகில்
இருக்கும் இந்தியாவின் கடைசிக் கிராமம்  மனா.

மூன்று கிலோமீட்டர் தொலைவில் திபேத்திய எல்லையில் உள்ள  இந்தியாவின் கடைசியிலுள்ள  இக்கிராமத்தில் ஒரு இயற்கை அழகு மிகுந்த இடத்தில் சரஸ்வதி நதியின் தோற்றுவாய் உள்ளது.

அது மட்டுமா? வேத வியாசர் மகாபாரதம் சொல்ல அதை விநாயகப் பெருமான் எழுதியதும் இங்குதான்.

பஞ்ச பாண்டவர்கள் சுவர்க்கம் சென்றதும் இங்கிருந்துதான் என்கிறது புராணங்கள். இவற்றைக் கேட்டபோது நம்மையறியாமல் ஒரு ஈர்ப்பும் சிலிர்ப்பும் ஏற்படுகிறது.

மலைப்பாதை முழுதும் நம்முடன் ஓடிவரும்  அலகானந்தா நதியின் அழகில் என்னை மறந்தேன் நான்!

மேட்டிலும் பள்ளத்திலும் பாறையிலும்  குதித்தும் கும்மாளமிட்டும் குதூகலித்தும் ..இது என் ராஜ்யம்..என்று மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து ஓடும் நதியாக நாமும் ஆகமாட்டோமா என்ற ஆசை ஏற்படுகிறது. அந்த அழகை எத்தனை வார்த்தைகளில் வடித்தாலும் நேரில் அனுபவித்தாலே உணர முடியும்.

உயரமாக செங்குத்தான மலைமீது செல்ல படிகள் ஏறுவது சற்று கடினமாக இருந்தாலும்
நம்முடன் இருக்கும் இயற்கையின் அழகில் அந்த சிரமத்தை மறக்கிறோம். வழியெல்லாம்  ஸ்வெட்டர் பனிக்குல்லா கடைகள்; தேனீர் ஹோட்டல்கள். குளிரும் அதிகம். அந்தக் குளிருக்கு தேனீர் இதமாக இருக்கிறது.

அங்குள்ள மக்கள், பெண்களும் கூட  முதுகில் கூடைகளில் குழந்தை
களையும் முதியவர்களையும் மட்டுமன்றி கேஸ் சிலிண்டர்
களையும் தூக்கிச் செல்வது ஆச்சரியமாக உள்ளது. இவர்களுக்கெல்லாம் முதுகு முழங்கால் வலிகள் வராதோ? அந்த மாசில்லாத சுற்றுச்சூழ்நிலை அவர்கள் ஆரோக்யத்தையும் பாதுகாக்கும் போலும்!

முதலில் யானைமுகன் விநாயகனின் 'கணேஷ் குஃபா' என்ற குகை.வியாசமுனிவரின்
வேண்டுகோளுக்கு இணங்கிமகாபாரதத்தை எழுதுமுன் விநாயகர் அவரிடம்...தான் எழுத ஆரம்பித்தால் நிறுத்தாமல் எழுதுவேன் என்றும் சற்றும் இடைவெளி தராமல் தொடர்ந்து பாரதத்தை சொல்ல வேண்டும்... என்றும் ஆணையிடுகிறார்.
கணநாதரின் எழுத்தாணி
அடிக்கடி உடைந்து போகிறது.

வியாசரிடம்  கூறியபடி விரைவாய்எழுதத்
தனது தந்தத்தையே எழுத்தாணியாக மாற்றிப் பாரதம்
முழுவதையும் எழுதிய விநாயகர்
இவர் என்று கூறுகிறார்கள். குகையில் குனிந்து விநாயகரை தரிசித்து வியாசகுகைக்கு சென்றோம்.

மகாபாரதம் இயற்றிய
வியாசர் வீற்றிருக்கும்
குகைக்கு மேலும் சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
மஹாபாரதம் எழுதிய பிறகு வியாசர் மன சஞ்சலத்துடன் இருந்தபோது, நாரதர் ஆலோசனைப்படி மானுடரின் மோக்ஷத்திற்காக பாகவதம் எழுதிய இடம்தான் வியாச குகை என்று நம்பப்படுகிறது. இது 5300 வருடங்களுக்கு மேல் பழமையானது. இங்கு விநாயகர், சுகர்,
வல்லபாச்சாரியார்
சிற்பங்களும் பழமை
மாறாமல் உள்ளன.
மகாபாரத ஏட்டுச்சுவடியும்
ஒரு கண்ணாடிப்
பெட்டிக்குள் வைத்துப் போற்றப் படுகிறது.

சரஸ்வதி நதியைக் காண நம் மனம் ஆவலாகிறது. இங்குதான் சரஸ்வதி
நதி தோன்றுகிறது.இரு மலைகளுக்கிடையே அலை மோதி ஆர்ப்பரிக்கும் நதியாக வெளிவருகிறது.

ஓ.... என்கிற சப்தம் மட்டும் கேட்கும் அமைதியான சூழ்நிலையில், நாம் நிற்கும் இடத்திலிருந்து சற்றே கீழே, நம்மால் நெருங்க முடியாத ஒரு பள்ளமான பகுதியில் இருக்கிறது சரஸ்வதியின் உற்பத்தி ஸ்தானம். ஆக்ரோஷத்துடன் ஆரவாரமாக சற்றே ஆணவத்துடன்
கண்ணைப் பறிக்கும்
வெண்ணிறத்தில் அதிவேகமாக கிளம்பும் சரஸ்வதி பிரமிக்க வைக்கிறாள். இவளின் மறைவுக்கு காரணம் யார்?

ஒரு சுவையான புராண சம்பவம்!மகாபாரதம் எழுதுவதில் ஈடுபட்டிருந்த விநாயகர்,
ஆர்ப்பரிக்கும் நதியை
அமைதியாகச் செல்லும்படிக் கூறினார். ஆனால் சரஸ்வதி நதியோ, அகம்பாவம்
கொண்டு மேலும் பேரொலியுடன் ஆர்ப்பரித்தாள். அதனால் கோபமுற்ற விநாயகர்...நதியே நீ கண்ணுக்குத் தெரியாமல்
மறைந்து போவாய்,உன்பெயரும் மறையும்...எனச் சாபமிட்டார்.

தன் நிலை உணர்ந்த சரஸ்வதி நதி,
தன்னை மன்னிக்குமாறு பணிந்து வேண்டினாள். கஜமுகனும்
நதியின் மீது கருணை கொண்டு...
நதியே!நீ இங்கு மறைந்து,
கங்கையும்,யமுனையும்,
சங்கமம் ஆகும்
அலகாபாத்தில்,
மூன்றாவது நதியாக் கலந்து புகழ் பெறுவாய்...என்றார். அருகில் சரஸ்வதிக்கு ஆலயம் உள்ளது.

சரஸ்வதி கர்வம் அடங்கி வெளியே வந்து அலக்நந்தா ஆற்றுடன்  கலந்தபின், அந்தர்யாமியாகிவிடுகிறாள். சரஸ்வதியும் அலக்நந்தாவும் கலக்குமிடம் மிகவும் ரம்மியமாக இருக்கிறது.  இந்த இடத்திற்கு கேசவ பிரயாகை என்று பெயர்.

சரஸ்வதி நீரை நாம் அங்கிருக்கும் குழாய்களில் பிடித்துக் கொள்ளலாம். இதற்கும் மேலே பஞ்சபாண்டவர்கள் சுவர்க்கம் சென்ற இடம் உள்ளது. அவ்விடம் 'பீம்புல்' பீமன்பாறை எனப்படும். ஐவரும் சென்றபோது  சுவர்க்கம் செல்லும் வழியில்,சரஸ்வதி
நதியைக் கடக்க முடியாமல் பாஞ்சாலி தவிக்க, பீமன் ஒரு பாறையைப் பாலமாகப் போட்டதாக புராண வரலாறு. அதில் பீமனின் கைத்தடங்களும் தெரிவதாக எழுதப்பட்டுள்ளது. தர்மர் தவிர மற்ற ஐவரும் அங்கே தம் உடலை விட்டு சுவர்க்கம் செல்ல, தர்மர் மட்டுமே மனித உடலுடன், அறமாகிய
நாய் வழிகாட்ட மேலுலகம் சென்றார்.அவர்கள் சென்ற வழி,மலைப்படிக்கட்டுகள்,
உயர்ந்தோங்கிய மலைப்பாதை இன்றும் தெரிகிறது.

மனா கிராமம் இந்தியாவின் கடைசி கிராமம். அடுத்து திபெத்தின்(சீனா) எல்லை தொடங்கி விடுகிறது. அங்குள்ள தேனீர் விடுதியும் இந்தியாவின் கடைசி தேனீர்க்கடை என்ற சிறப்பைப் பெறுகிறது.இங்கு
தின்பண்டம், குடிநீர்,
பானங்கள், டீ, பிஸ்கட் அனைத்தும் கிடைக்கின்றன.
இதைப்போலவே வியாச குகை அருகேயும் இந்தியக் கடைசி டீக்கடை உள்ளது.
India's Last Tea Shop - Mana village

பாதி  மறைந்திருக்கும் எழுத்தளாரும் அவர் கணவரும் 

பீமன் பாலம் 

சரஸ்வதி கோவில் சரஸ்வதி நதி 
இமயமலையின் ஒவ்வொரு இடத்திற்கும் தனிப்பட்ட சிறப்பு உள்ளது. அதனாலேயே அது தேவபூமி என்ற சிறப்பைப் பெறுகிறது.

வாழ்த்துக்கள்


உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!
வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் தேடி
வாசல்வரை வந்துநின்றேன்!
நீங்கள்
காதல் பேசி
கவிகள் பேசி
வார்த்தைகள் யாவற்றையும்
வசமாக்கி விட்டீரோ?
வார்த்தைப்
பஞ்சத்திலே நான்!
நீவீரோ மஞ்சத்திலே!
வாழ்த்துக்கள் உங்களுக்கு!
வாழ்க பல்லாண்டு!
நிலாவின் கைப்பற்றி
நிறைவிழா காணும்மணமகனிற்கு வாழ்த்துக்கள்!
தமிழன்னை மடியில்
தவழ்ந்த மைந்தனை
தன்மடி தாங்கும்மணமகளுக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்க்கை என்பது
வளைவுகள் நிரம்பிய
வசந்தப்பாதை!
இன்பமும் இனிதே நிறைந்தது!
இன்பத்தில் இணைந்தே வாழ்க!
தென்றலின் சாமரவீச்சில்
திங்களின் ஒளி ஒத்தடத்தில்
மங்கள நாளில்
மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க!
உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!
வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!
இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!
வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
‌குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!,
எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
சாத்திரங்கள் பழையன
சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே
சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது
பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே
அஞ்சாதோர் புதுவழி
குறையொன்றுமில்லை
மணமகன் உன்னிடம்
வரையாத ஓவியம்
இருக்குது பார் உன் இடம்
சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும்
உன்மன
அன்பே என்று அழைத்திடுங்கள்!
ஆசைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்!
இதயங்களை ஈந்திடுங்கள்!
ஈரவிழிகளை துடைத்திடுங்கள்!
உறவுகளை நினைத்ததிடுங்கள்!
ஊடல்களை மறந்திடுங்கள்!
எளிமைக்கு வழிவிடுங்கள்!
ஏழ்மைக்கு உதவிடுங்கள்!
ஐயங்களை அழித்திங்கள்!
ஒரு யுகம் கடந்திடுங்கள்!
ஓசையின்றி உயர்ந்திடுங்கள்!
ஒளஷதம் நிறைந்து வாழ்ந்திடுங்கள்!
வாழும் குறளாய்  வள்ளுவமாய்
தூயஅன்புத்துணையுடன் நிகரில்லா வாழ்வில்
அன்புடனே அறம்பொருள் இன்பம் கூட்டி
குன்றாத இல்வாழ்வினில் விரும்பியதை விரும்பியவாறே  பெற்று
என்றும்  விருப்பமுடனே வாழ்ந்திடவே
விண்ணவரும் மண்ணவரும் ஒன்றாய் கூடி
விருப்பமுடன் வாழ்கவென வாழ்த்துகின்றோம்

இருமனமும் ஒருமனமாய்   மலரும் மணமுமாய்
நாதமும் கீதமுமாய்; பாட்டும் பரதமுமாய்
இணையில்லா ஜோடியாய்;ஜோடி நெம்பர் ஒன்றாய்
இல்லறத்தின் இலக்கணமாய்;இல்லறம் மணக்க நல்லறம் போற்ற
பார்ப்போர்  புருவம் உயர்த்த; அன்புடனும் அறனுடனும்
பண்போடும் பாசத்தொடும்;  ஆன்றோரும் சான்றோரும் போற்ற
 கிட்டா புகழும்; எட்டா சிறப்பும் பெற்று இறையருள்  வழித்துணை நிற்க
அருமறையாம் திருக்குறள் வழிநின்று வையகம் போற்ற
ஆரிவர்தாம் ரதி மன்மதனோ என வியக்க
வாழ்க  பல்லாண்டு வளமெலாம் பெற்று   வாழ வாழ்த்துகிறேன் 
குறள் போல அளவாய்
குறள் போல ஆழமாய்
குறள் போல எழிலாய்
குறள் போல அழியாமல் உன்புகழ் நிலைத்திருக்க மகிழ்ச்சி..
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

பஞ்ச பிரயாகை


இரண்டு அல்லது மூன்று நதிகள் சந்திக்கும் இடங்கள் பிரயாகை என்று சொல்லப்படுகின்றன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  அலஹாபாத் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறும் சிறப்பு வாய்ந்த தலமாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இவ்விடம் பிரயாகை எனப்படும்.

சார்தாம் யாத்திரை செல்லும்போது உத்தர்கண்ட் மாநிலத்திலும் பஞ்ச பிரயாகை என்று சொல்லப்படுகிற ஐந்து பிரயாகைகள் உள்ளன. அவை
தேவப்ரயாகை, விஷ்ணு பிரயாகை, ருத்ர பிரயாகை, நந்த பிரயாகை, கர்ண பிரயாகை.
இவை அலக்நந்தா நதியுடன் வேறு ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடங்கள் ஆகும்.

#தேவபிரயாகை
ஹிமாலயப் பயணத்தில் தேவ பிரயாகை ஒரு முக்கியமான தலமாகும். உத்தர்கண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் மாவட்டத்தில் இருக்கிறது தேவ பிரயாகை.

சதோபந்திலிருந்து வரும் அலக்நந்தா நதியும், கௌமுகி
யிலிருந்து பாய்ந்தோடி வரும் பாகீரதியும் சங்கமித்து கங்கையாகப் பெயர் பெறும் இடமாகும். சற்றே பழுப்பு நிறத்தில் அலக்நந்தாவும், இளம் பச்சை நிறத்தில் பாகீரதியும் சங்கமிக்கும் இடம் எழில் கொஞ்சும் ரம்மியமாக இருக்கிறது.

அலகநந்தாவின் பாலத்தைக் கடந்து சென்று கீழே இறங்கினால் சங்கமம் உள்ளது. இங்கு பிண்ட தர்ப்பணம் செய்வது முக்கியம். ஸ்நானம் செய்ய வசதியாக படிகள் உள்ளன. உயரமான படிகளில் ஏறுவது கடினமாக உள்ளது.

கௌமுகியிலிருந்து ஆவேசமாகவும் ஆர்ப்பாட்ட
மாகவும் அடித்துப் புரண்டு அதிவேகமாக வரும் பாகீரதி நதியும், வஸுதராவில் தோன்றி பல சங்கமங்களைக் கண்டு பாய்ந்து வரும் அலகநந்தாவும் இங்கு சங்கமமாகி புனித கங்கையாகிறது. அதனால் இவ்விடம் ஆதிகங்கை எனப் போற்றப்படுகிறது.

அருகில்மகரவாகினியாக
வெள்ளைப் பளிங்கில் கங்காமாதாவின் சிலையும் ஹனுமன் சிலையும் உள்ளது. இவ்விடத்தில் தேவசர்மா என்ற முனிவர் தவம் செய்ததால் தேவப்ரயாகை எனப் பெயர் பெற்றது.

#ஸ்ரீரகுநாதர்ஆலயம்
தேவப்பிரயாகை சங்கமத்திற்கு மேலே அரை கிலோமீட்டர் ஏறிச் சென்றால் ரகுநாதர் கோவிலைக் காணலாம். பத்ரிநாத்திலிருந்து ஹரித்வார் வரை பெருமாளின் விராடரூபம் எனப்படும். அவரது நாபிக்கமலம் தேவப்ரயாக்.

தசரதரும், ராவணனைக்
கொன்ற பாவம் தீர ஸ்ரீ ராமனும் தவம் செய்த தலம் இது. அந்த இடத்தில் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்ய மண்டபம் உள்ளது.

68வது திவ்யதேசமான திருக்கண்டமெனும் கடிநகர்
எனப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு வருகை தந்த பெரியாழ்வார் ரகுநாதனைப் போற்றி 11 பாசுரங்கள் பாடியிருக்கிறார்.அவருடைய பாசுரங்களைக் கல்வெட்டாகப் பதித்திருக்கிறார்கள்.
கற்களால் ஆன இக்கோவில் மிகவும் அழகாக இருக்கிறது.

பல ஆயிரம் வருடங்கள் பழமையான ஆலயத்தில் ஒரே பிரகாரம். உயரமான கருவறையில் சாளக்கிராம மூர்த்திகளாக லட்சுமணன், சீதையுடன் உயரமான கோலத்தில் சேவை சாதிக்கும்  ஸ்ரீ கோதண்ட
ராமரின் அழகில் மனம் மயங்குகிறது.

இங்கேயுள்ள ரகுநாதனின் பாதக் கமலங்களிலிருந்து சரஸ்வதி நதியானவள் அந்தர்யாமியாக உற்பத்தியாகி தேவ பிரயாகையில் அலக்நந்தாவுடனும் பாகீரதி
யுடனும் சங்கமிப்பதாக ஐதீகம்.
’தேவ பிரயாகை’ என்றால் ‘தெய்வீக சங்கமம்’ என்று அர்த்தம்.

#விஷ்ணுபிரயாகை
சமோலி மாவட்டத்தில் ஜோஷி மட்டுக்கும் பத்ரிநாத்துக்கும் இடையில் இருக்கிறது விஷ்ணு பிரயாகை. இது. ’அலக்நந்தா’ நதியும் ’தௌலி கங்கா’ நதியும் சங்கமிக்கும் இடமாகும். இரண்டு வண்ணங்களில் நதிகள் சங்கமிக்கும் காட்சி கண்களுக்கு விருந்து.

கார்வால் ஹிமாலயத்தொடரில் உள்ள சௌகம்பா என்கிற சிகரத்தில் உள்ள கிளேசியர்களி
லிருந்து இந்நதி தோன்றி பின்னர் இந்திய-திபேத்திய எல்லையில் இருக்கும் மனா என்கிற கிராமத்தில் உற்பத்தியாகும் சரஸ்வதி நதியுடன் சங்கமித்து, பிறகு பத்ரிநாத் வழியாக வருகிறது. இந்தப் பாதையில் செல்லும் அலக்நந்தாவுக்கு
‘விஷ்ணு கங்கா’ என்கிற பெயரும் உண்டு.

இது நாரதர் விஷ்ணுவுக்குப் பூஜைகள் செய்து வழிபட்ட தலம். இந்தோர் மஹாராணி அஹல்யாபாய் 1889ல் கட்டிய கோவில் இருக்கிறது.

இங்கே அருகில் உள்ள ஹனுமான் சட்டி என்கிற இடத்தில் Jaybee தொழில்நிறுவனத்தாரின்  விஷ்ணு பிரயாகை நீர் மின் திட்டம் மூலம்  400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

#நந்தபிரயாகை
நந்த பிரயாகையும் சமோலி மாவட்டத்தில் உள்ளது. இது ’அலக்நந்தா’ நதியும் ’நந்தாகினி’ நதியும் சங்கமிக்கும் இடம்.

சக்கரவர்த்தி நந்தன் யாகம் செய்த இடமாகையால் அவர் பெயரில் வழங்கப்படுகிறது. கிருஷ்ணரை வளர்த்த யசோதையின் கணவன் நந்தனின் நினைவாகவும் இந்தப் பெயர் என்றும் சொல்லப்படுகிறது. இது கண்வ மஹரிஷி தவம் செய்த இடமாகவும், துஷ்யந்தன்
சகுந்தலை திருமணம் நடந்த இடமாகவும் கூறப்படுகிறது. இங்கே சண்டிதேவி, மகாதேவர், கோபாலனுக்கு  கோவில்கள் உள்ளன.

#கர்ணபிரயாகை
கர்ண பிரயாகையும் சமோலி மாவட்டத்தில் உள்ளது. இது ’அலக்நந்தா’ நதியும் ‘பிண்டார்’ நதியும் சங்கமிக்கும் இடம்.
கர்ணன் தவம் செய்து கவச குண்டலம் பெற்ற இடமாகும்.

பாரதப்போரில் கர்ணன் அடிபட்டு உயிர்போகும் நிலையில் இருக்கும்போது பாண்டவர்
களுக்கு  இவன் தமது சகோதரன் என்பது தெரியவருகிறது. அவர்கள் மனம் வருந்தி கர்ணனின் கடைசி ஆசையைக் கேட்டனர்.   'இதுவரை யாரும் பிண்டம் கொடுக்காத இடத்தில் எனக்கு பிண்டம் கொடுக்க வேண்டும்'   எனக் கேட்டான்.

அர்ஜுனன், தன் காண்டீபத்தை எடுத்து ஒரு அம்பைத் தொடுத்து எய்த, அது போய் தைத்த இடத்திலிருந்து ஒரு நதி கிளம்பி யது.  இதுதான் பிண்டார் நதி. நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பித்ருக்களுக்குக் கொடுக்கும் பிண்டதானத்துக்கு  சிறப்பு அதிகம்.  இந்த பிண்டார் நதி, அலக்நந்தாவுடன் சேருமிடத்தில் கர்ணனுக்கு  பிண்டம் இட்டு இறுதிக் காரியங்களை பாண்டவர்கள் செய்ததால் கர்ணப்ரயாக் என்ற பெயர் வந்ததாக ஒரு கதை உண்டு.

காளிதாசனின் அபிஞான சாகுந்தலையில் துஷ்யந்தனும் சகுந்தலையும் இங்கே நடனமாடி
யதாகக் கூறப்பட்டுள்ளது. இங்கே ஸ்வாமி விவேகானந்தர்
18நாட்கள் தியானத்தில்
இருந்துள்ளார்.

இங்கு உமாதேவிக்கும் கர்ணனுக்கும் கோவில் இருக்கிறது. சங்கமத்திற்குச் செல்லப் படிக்கட்டுகள் உள்ளன.

ருத்ர பிரயாகை
கேதார் நாத்திலிருந்து 86 கிலோமீட்டர் தொலைவிலும், ரிஷிகேஷிலிருந்து 140கி.மீ. தொலைவிலும் ருத்ர  பிரயாகை உள்ளது. இது வெண்ணிற அலக்நந்தாவுடன்  கேதார்நாத்திலிருந்து வரும் பச்சை நிற  மந்தாகினி நதி அழகுற சங்கமிக்கும் இடம்.

இங்கே சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடியதாலும், ருத்ர வீணையில் இசை மீட்டியதாலும் இவ்விடம் ருத்ர பிரயாகை என்று வழங்கப்படுகிறது.

ஒரு முறை நாரதருக்குத் தன்னுடைய இசைத்திறமையின் மீது மிகவும் கர்வம் ஏற்பட்டது. தேவர்களின் வேண்டுகோளுக்
கிணங்க, கிருஷ்ணர் அவரிடம், 'உன்னுடைய இசைத்திறமையில் சிவனும் பார்வதியும் மனதைப் பறிகொடுத்துள்ளனர்' என்று சொல்ல, வியந்து போன நாரதர் அவர்களைத் தரிசிக்க இமயத்திற்
குப் பயணம் மேற்கொண்டபோது, இந்த இடத்தில் பெண்ணுரு கொண்டு வந்த ராகங்களின் அழகு கெட்டுப்போனது. நாரதர் தவறாக வீணை வாசித்ததால்
தான் ராகங்களின் அழகு கெட்டுப்போனதென்று அவர் மீது பழி ஏற்பட, நாரதரின் கர்வம் நீங்கியது. பிறகு சிவபெருமானின் சீடராக நாரதர் விளங்கினார்.

தக்ஷன் சிவபெருமானை அவமதித்ததால், நெருப்பில் விழுந்து தன்னை மாய்த்துக்
கொண்ட தாக்ஷாயிணி பிறகு பர்வத ராஜன் ஹிமவானின் புத்ரி பார்வதியாகப் பிறந்து, சிவபெருமானை மணக்க அவள் தவம் புரிந்து இடமாகவும் இது சொல்லப்படுகிறது. ருத்ரனுக்கும் சாமுண்டிக்கும் இங்கே கோவில்கள் உள்ளன.

நாங்கள் தேவபிரயாக், விஷ்ணுபிரயாக் மட்டுமே சென்றோம். 2013ல் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்கள் இன்னமும் சீர்படுத்தப்பட்டு வருகின்றன.

Saturday, 16 November 2019

தனித்திறமைகள்


கோலம், பாட்டு, கைவேலை, தையல், சமையல் என்று எனக்கு பல திறமைகள்(!) இருந்தாலும் என் தனித்திறமை எழுத்து! 'உன் முக்கியமான எழுத்து திறமை பற்றி எழுதவிட்டுட்டயே' என்று என் கணவர் சொல்ல,' ஆமாம்..மறந்தே போச்சே!' என்று அதையும் எழுதிவிட்டேன்!
நான் கடந்த 35 ஆண்டுகளாக பல இதழ்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். கம்ப்யூட்டர் இல்லாத நாட்களில் பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதி அனுப்பணும். அதன் காப்பியெல்லாம் கிடையாது. மெயிலில் அனுப்பவும் முடியாது. அது தேர்வாகவில்லையெனில் திரும்பவும் வராது. இப்ப எல்லாம் computerல் save பண்ணிக்கலாம்.
எனக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுத்தது என் செல்லப் பிள்ளைகள்! ரொம்பப் பொறுமையாக சொல்லிக் கொடுப்பார்கள். நான் எழுதி புத்தகங்களில் வந்த  அத்தனை கட்டுரைகளையும் பத்திரமாக வைத்துள்ளேன்.அவற்றை தொகுத்து எனக்கு ஒரு blog ஆரம்பித்து அதில் போட்டவர் என் அன்புக் கணவர்! நான் எழுத்தாளர் என்பதில் அவருக்கு அலாதி பெருமை!
நான் எல்லாவிதமான கட்டுரைகள் எழுதினாலும் ஆலயதரிசனக் கட்டுரைகள் என் ஸ்பெஷல். ஞான ஆலயம், பக்தி, சக்திவிகடன், தீபம், ஹிந்து தமிழ் அனைத்திலும் என் ஆலய தரிசனக் கட்டுரைகள் வெளியாகும்.
எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் அங்குள்ள ஆலயம் சென்று தரிசித்து அது பற்றி எழுதுவேன்.சிங்கப்பூர் பலமுறை சென்றுள்ளேன். அங்குள்ள ஆலயங்களின் அழகும், அமைதியும் எனக்கு மிகப் பிடித்தவை. நான் சென்று தரிசித்த கெய்லாங் சிவாலயம் பற்றி  எழுதிய கட்டுரை இத்துடன் இணைத்துள்ளேன்.
என் blog....radhabaloo.blogspot.com
இதுவரை நான் அனுப்பிய தனித்திறமை பதிவுகளுக்கு லைக்கிட்டும்,கமெண்ட் போட்டும் என்னை மகிழச் செய்த அனைத்து மத்யமர்களுக்கும் நன்றி!நன்றி!!

Sabash Madhyamar Super Singer..Junior

Sabash Madhyamar
Super Singer..Junior
Name..Cara..Age..5
My granddaughter
Song....Let it go..

லண்டனில் இருக்கும் என் கடைக்குட்டி பேத்தி. Chat செய்தபோது என் பிள்ளையிடம் மத்யமர் சூப்பர் சிங்கர் பற்றி சொன்னேன். அதைப் பற்றி கேட்ட அவள் தானும் பாடுவதாகச் சொன்னாள்.  அந்தப் பிஞ்சுக் குழந்தையின் ஆசையை என்னால் மறுக்க முடியவில்லை. உடனே இந்தப் பாட்டைப்பாடி, என் மகனை வீடியோ எடுத்து அனுப்பச் சொன்னாளாம். அவள் ஆர்வம் என்னை ஆச்சரியப் பட வைக்க அவள் பாட்டை அனுப்பியுள்ளேன். இங்குள்ள பெரியவர்களின் ஆசிகள் அவள் வாழ்வைச் சிறப்பாக்கும்🙏

ட்ரைஃப்ரூட்ஸ் பர்ஃபி

இந்த ஏகாதசிக்கு எங்காத்து குட்டிக் கண்ணனுக்கு ட்ரைஃப்ரூட்ஸ் பர்பி செய்து நிவேதனம் செய்தேன். அதன் செய்முறை இதோ...

ட்ரைஃப்ரூட்ஸ் பர்ஃபி

பாதாம்,மிந்திரி, பிஸ்தா...தலா 1/4 கப்,
வால்நட்...6
அத்திப்பழம்(figs)..5
பேரீச்சை..5
திராட்சை..10
தேங்காய்த்துருவல்..4டீஸ்பூன்
ஏலப்பொடி
நெய்..2டீஸ்பூன்
பாதாம்,மிந்திரி,பிஸ்தா,வால்நட் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். அதை எடுத்துவிட்டு  அதிலேயே துண்டுகளாக்கிய அத்தி,பேரீச்சை மற்றும் திராட்சையை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். நைஸாக அரைக்கக் கூடாது.
வாணலியில் நெய் விட்டு தேங்காய்த் துருவல் சேர்த்து சற்று வதக்கி, அதில் அரைத்த பாதாம் கலவையைச்  சேர்க்கவும். 5 நிமிடம் வதக்கி அதில் பேரீச்சை கலவை சேர்த்துக் கிளறவும். இரண்டு கலவையும் சேர்ந்து கொள்ள அடுப்பை சிறியதாக வைத்து 5நிமிடம்  தீயாமல்  கவனமாகக்  கிளற வேண்டும்.ஏலப்பொடி சேர்க்கவும்.
கீழே இறக்கி வைத்து  நன்கு கலந்து கை பொறுக்கும் சூட்டில்,கையில் நெய் தடவிக் கொண்டு இரண்டாகப் பிரித்து இரண்டு நீள்வட்டமாகச் செய்யவும்.
நன்கு ஆறியதும் அவற்றை வட்டமாக நறுக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி சதுர துண்டுகளாகவும் செய்யலாம். ஃப்ரிட்ஜ்ல் வைத்து உபயோகிக்கவும்.