Sunday, 23 November 2014

படித்து....ரசித்து.....சிரித்தது!!!பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார்.

எமன் சொன்னான்,
"நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு "படு பயங்கரமான விண்டோஸையும் " உருவாக்கிவிட்டாய்.அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்... உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்."


"நல்லது கடவுளே!ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?"

" ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!"

"அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்"

நரகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் பில்கேட்ஸ்.

இதுவா நரகம்? ... தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி...

"ஆஹா ! அருமை !" இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை.." என்று பில்கேட்ஸ் சொன்னபோதும்
"வா சொர்கத்தை பார்க்கலாம்.." என சொர்க்கத்துக்கு அ
ழைத்துச் சென்றார் எமன்.

அங்கே,
நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க .. அருமை. ஆனால் பில்கேட்ஸ்க்கு, நரகத்தை போல சொர்க்கம் அவரைக் கவரவில்லை..

நீண்ட யோசனைக்குப்பின்,
"தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்" என்றார் பில்கேட்ஸ்.

"உன் விருப்பம்", எமன்.

இரண்டு வாரங்களுக்குப்பின்,
பில்கேட்ஸின் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார்.

அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் பில்கேட்ஸை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள்.

"எப்படி இருக்கே பில்கேட்ஸ்?" என்றான் எமன்.

பில்கேட்ஸ் கடுமையான வேதனையோடு, ஈனமான குரலில்,
"முடியல... நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?"

 எமன் சொன்னான்...


 


"அட லூசு பய புள்ள, அது SCREEN SAVER டா !"Saturday, 22 November 2014

தன்னம்பிக்கை

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?
----------------------------------------------

சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.

 
வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.

வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.

அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.

அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது.

வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது.

வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது.

உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது.

தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது.

அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது.

தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது.

தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது.

சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது.

விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது.

அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது.

குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது.

கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது.

நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது.

அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத
தன்னம்பிக்கை இருக்கிறது.


Wednesday, 5 November 2014

VGK ...40...மனசுக்குள் மத்தாப்பூ..

 
 VGK ...40...மனசுக்குள் மத்தாப்பூ....தேர்வாகாத விமரிசனம்..
கதைக்கான இணைப்புகள்...

இணைப்புகள்:

பகுதி-1 க்கான இணைப்பு:  
பகுதி-2 க்கான இணைப்பு:  

பகுதி-3 க்கான இணைப்பு:  

பகுதி-4 க்கான இணைப்பு:  

அழகான ஒருதலைக் காதல் கதை...ஒரு அரவத்தினால் இருவருக்குள்ளும் காதல் அரும்பி களிப்பூட்டும் கனவுகள் நிறைந்த அருமையான கதை.
ஆசிரியரின் கதைகளில் எப்பொழுதுமே ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். அது இந்தக் கதையிலும் அளவின்றி இருக்கிறது.
புதிதாகக் கல்யாணம் ஆன  ஒரு காதல் ஜோடியின் தவிப்பையும், ஆசைகளையும், காமத்தையும் மிக அழுத்தமாக எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர்.
தன மனைவியை விட்டுப் பிரிந்து இருப்பது எப்படி என்று மனம் வருந்தும் கணவனின் மனநிலையையும், தன்னை விட்டு நகராமல் பாடாய்ப் படுத்தும் தன கணவனின் அன்புத் தொல்லையையும் விவரிக்கும் ஆசிரியரின் கதை நயம் இயல்பாக இருக்கிறது.
ஆசிரியர் தரும் ஆலிங்கனத்துக்கான உதாரணம் சற்றே மனதை நெருடுகிறது.மார்க்கண்டேயனின் ஆலிங்கனம் பேரின்பத்தின் வாயில். மனோவின் ஆலிங்கனமோ சிற்றின்பம் தருவது.சிற்றின்பமே பேரின்பத்தின் ஆரம்பம் என்பதை சொல்கிறாரோ கதாசிரியர்!
பிள்ளைத் தாய்ச்சி பெண்ணை இப்படி படுத்துவது சரியல்ல என்று ஒரு மருத்துவரான மனோவுக்கு தெரியவில்லையே? அனுவுக்கு வலியெடுத்து விட்டதே....என்ன குழந்தை பிறந்ததோ என்ற ஆவலில் அடுத்த பாகத்தைப் படிக்க....அட! இவ்வளவும் கனவா?
தினமும் பாவாடை தாவணியுடன் விதவிதமாய்க் கோலம் போடும் பெண்ணை அவளுக்கு தெரியாமல் காதலித்தது போதாது என்று பைனாகுலர் மூலம் அவள் அழகை திருட்டுத் தனமாய் ரசிக்கும் மனோவின் மன நிலையை என்ன சொல்ல? பொதுவாக ஆண்களின் மனநிலை அது என்றாலும், அதை சரியென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவளைக் கோலப் பைத்தியமாகக் கண்ட மனோவின் காதல் பைத்தியத்தை என்ன சொல்ல? உலகிலுள்ள மற்றவர்களைப் போல மனோவும் ஒரு விதத்தில் அனு பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும்!
கோலங்கள் கூட பேசுவதாகக் கற்பனை செய்யும் மனோதத்துவ மருத்துவருக்கே மனநிலை சிதைந்து விட்டதோ?
பாவாடை, தாவணி, தொங்கும் ஜிமிக்கி, கொஞ்சும் கொலுசு, வழவழக் கைகளில் கண்ணாடி வளையல், தலை நிறைய பூ,(கண்ணில் தீட்டிய மையை விட்டு விட்டார்!) என்று அழகின் இலக்கணங்களை அடி மாறாமல் சொன்ன ஆசிரியரின் கற்பனை அற்புதம்! அதற்கேற்ற ஹன்சிகா மோட்வானியின் அழகிய படம் அருமை!

இது போன்ற படங்களை எங்கு தேடிப்  பிடித்து கதைக்கு மேலும் அழகு சேர்க்கும் ஆசிரியரின் கைவண்ணத்தைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!
அனுவின் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியாய் தான் மாற மாட்டோமா என்று ஏங்கும் மனோ நிச்சயமாகக் காதல் பைத்தியம்தான்!!
ஒவ்வொரு பாகத்திலும் ஒரு புதிய திருப்பத்தை மிக இயல்பாகக் கூறியிருக்கிறார் ஆசிரியர்.
இவ்வளவு அழகான பெண்ணுக்கு வாய் பேச முடியாதா? அதைப் படிக்கும்போதே மனம் கலங்குகிறது.
அனுவின் அம்மா மனோவை மறுநாள் பெண் பார்க்க வருபவர்களுடன் பேச அழைக்கும்போது, ஓரளவு மனோவின் மனம் மாறி விடுகிறது. இனி இவளை நாம் அடையா முடியாது என்ற எண்ணமே அவனிடம் வருத்தம் ஏற்படுத்துகிறது. அவளுக்கு நல்ல, பொருத்தமான கணவன் கிடைக்க வேண்டுமே என்று உண்மையிலேயே கவலைப் படுகிறான்.
அதுவே அவளைப் பாம்பு கடிப்பது போலும், அவளைத் தான் காப்பாற்றுவது போலும் கனவு காண வைக்கிறது.காப்பாற்றிய அவனையே அனைவரும் ஒரு குற்றவாளியாக நினைப்பதை படித்து  நமக்கும் அவன் மேல் பரிதாபமே ஏற்படுகிறது. ஆனால் அச்சமயம் பேச்சு வந்துவிட்ட அனு ஏன் உண்மையைச் சொல்லவில்லை என்று நாம் குழப்பத்தில் இருக்கும்போதே, அந்த நிகழ்ச்சியும் ஒரு கனவுதான் என்று புரிகிறது.
அடுத்து வரும் பாகத்தில் மனோவின் கனவுகள் பலித்துவிடும் என்ற திடுக்கிடும் தகவலுடன் கொண்டு செல்கிறார் ஆசிரியர்!

தாய், தந்தை மரணம், சக மாணவன் முதலிடம் பெற்றது இவை பலித்தது போல, ஐயோ பாவம்...இந்தப் பெண்ணுக்கு என்ன ஆகுமோ என்ற கவலை ஏற்படும்போதே....அடுத்த திருப்பம்!
பெண் பார்க்க வந்தவனை நாகப்பாம்பு என்ற பொருள் கொண்ட நாகப்பன் என்ற பேட்டை ரவுடியாக்கி, அவனைப் பற்றி சகலமும்தெரிந்த மனோ அனுவின் தாயாரிடம் அதைப் பற்றி எடுத்துச் சொல்லி, அவளை ஒரு தீயவனிடமிருந்து காப்பாற்றியதை எடுத்துச் சொல்லி ஆசிரியர் அவன் கனவு உண்மையாகும் என்பதை சொல்லும் அதே நேரம், அவள் பேசுவதைப் போல் கனவு கண்டதனால், விரைவில் அவளுக்கு தக்க சிகிச்சை மூலம் பேசும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி சுபம் போடுகிறார் ஆசிரியர்!
தன்னை ஒரு தீயவனிடமிருந்து காப்பாற்றிய மனோவை அனுவும் காதலிக்க ஆரம்பித்ததில் வியப்பென்ன? ஒரு சராசரிப் பெண்ணின் கனவே நல்ல, அன்பான, அழகானக் கணவன்தானே! மனோவும் அதற்கான அனைத்து தகுதிகளும் உடையவன் தானே?

'இந்த செவிட்டு ஊமைப் பெண்ணை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?' என்று நாகப்பன் கேட்க, அவளைத் தன்னால் மணக்க முடியும் என்பதைத் தன்  மனதில் சொல்லிக் கொள்ளும் மனோவின் காதல் விரைவில் கல்யாணத்தில் முடிய நாமும் வாழ்த்துவோம்!

மனோவின் எல்லாக் கனவுகளையும் போல அவள் கர்ப்பமாகி, அவளுடன் காதல் செய்யும் மனோவின் கனவும் விரைவில் நடக்கட்டும்!
காதும் கேட்காமல், வாயும் பேசாமல் அனுமானத்திலேயே எதையும் புரிந்து கொள்ளும் கதாநாயகிக்கு 'அனு' என்ற பெயரையும், மனோதத்துவ மருத்துவரான கதாநாயகனுக்கு 'மனோ' என்ற பெயரையும் ஆசிரியர் சூட்டியது இயல்பாகவா? அல்லது கதைக்கேற்றவாறு பெயர்களை வைத்தாரா? எப்படியோ கதைக்குப் பொருத்தமான அழகான பெயர்கள்!

நம் மனதின் எண்ணங்களே இரவில் நம் கனவுகளாக வரும் என்று கேள்விப் பட்டதுண்டு. அந்தக் கனவையே கருப் பொருளாகக் கொண்டு ஒரு கிளுகிளு காதல் கதையை ஆர்வம், எதிர்பார்ப்பு, சுவாரசியத்துடன் எழுதி நம்மை மகிழ்வித்த ஆசிரியரின் திறமைக்கு ஒரு ஜே!
இக்கதை வல்லமை மின் இதழில் வெளியானதற்கு ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

அன்று அடைந்த மகிழ்ச்சியைவிட இன்று விமரிசனங்களைப் படித்து அளவற்ற மகிழ்ச்சியை அடையட்டும் நம் பதிவுலக பிதாமகர்!

VGK 34...பஜ்ஜின்னா பஜ்ஜிதான்
VGK 34...பஜ்ஜின்னா பஜ்ஜிதான்...கதைக்கு தேர்வாகாத என் விமரிசனம்...

கதைக்கான இணைப்பு...
ஒரு சிறு நெல்லிக்கனியளவு கதையை கருவாகக் கொண்டு, அதனை சொற்சுவை, பொருட்சுவையுடன், தன் எண்ணங்களையும், அதில் கிடைக்கும் படிப்பினைகளையும் அழகாக எழுதி, படிக்கும் நம்மை அதில் லயிக்க வைத்து ஒரு பலாப்பழம் அளவிற்கு நல்ல கருத்துக்களை  இனிமையாக எடுத்துச் சொல்லும் கதாசிரியரின் எழுத்துத் திறமை என்னை எண்ணும்தோறும் வியக்க வைக்கிறது.
 
இம்முறை நம் கதாசிரியர் எடுத்துக் கொண்ட கரு சாதாரண பஜ்ஜி...இல்லை இல்லை பஜ்ஜி பற்றிய பல விஷயங்களை பிட்டு பிட்டு வைக்கும் நம் கதாநாயகனின் வீட்டு சமையலறைக்குள்ளிருந்தே இக்கதையை விமரிசனம் செய்தால் என்ன?

கதாநாயகனின் இல்லத்தரசி பானுவுக்கும், அவள் சினேகிதி லல்லுவுக்கும் தினமும் மதிய நேரம் ஊர் உலகத்தாரைப் பற்றிய விஷயங்களை அலசும் இன்பமான நேரம். மெகா தொடர்களை விட சுவாரசியமான பல விஷ யங்களை அலசோ அலசு என்று பேசி மகிழும் நேரம்!அத்துடன் லல்லுவின் கணவரும் நம் கதாநாயகரின் ஆஃபீஸ் நண்பர்.அவர்களின் இன்றைய டாபிக் பஜ்ஜீ...!!


பானு....நம்மாத்துக்காரர் வேலை செய்யற ஆஃபீஸ் பக்கத்தில ஒரு பஜ்ஜிக் கடை இருக்கில்லையா, அவன் கடை பஜ்ஜியை நீ சாப்பிட்டிருக்கியோ? அவர் பஜ்ஜி பண்ற அழகை பார்த்திருக்கியோ?

லல்லு...அவன் என்ன எண்ணையை வைக்கிறானோ? எந்தக் கையால பண்றானோ? அதல்லாம் நான் சாப்பிட்டதில்ல.
 
நேத்திக்கு கோவிலுக்கு போனபோது அந்த வழியா போனேனா, அந்த பஜ்ஜிக்கடையைப் பார்த்தேன். என்னைக்கும் இல்லாம கொஞ்சம் நின்னு, ரசிச்சுப் பார்த்தேன். நிறைய விஷயம் புரிஞ்சுது பானு.

அட...பஜ்ஜிக்காரன் கிட்ட இருந்து ஞானம் கிடைச்சுதா?அதை எனக்கும் சொல்லேன்.

அந்த பஜ்ஜி போடறவர் என்ன வேகமா அந்த வேலையை செய்யறார் தெரியுமா? அவருக்கு ரெண்டு கைதான் இருக்கு. ஆனா பத்து காரியம் பண்றார் தெரியுமோ? பம்ப் ஸ்டவ்வுக்கு காத்து அடிச்ச்சுண்டு, அடுத்த நிமிஷம் கறிகாயல்லாம் தானே மளமளன்னு நறுக்கிண்டு,மாவில தோச்ச பஜ்ஜிகளை பதமான சூட்டுல எண்ணையில போட்டுண்டு, அதை சிவக்காம பக்குவமா வேக விட்டு எடுத்து, எண்ணையை அழகா வடிச்சு பாத்திரத்துல போட்டுன்னு...என்ன ஒரு சிஸ்டமேடிக்கா பண்றார் தெரியுமோ?

ஃ பைவ் ஸ்டார் ஹோட்டல் பஜ்ஜிஎல்லாம் அவன்கிட்ட  பிச்சை வாங்கணும்.அத்தனை சூப்பரா பாக்கும்போதே வாயில தண்ணி ஊறற்து! அதைப் பார்த்த எனக்கும் ரெண்டு பஜ்ஜி வாங்கி சாப்பிட ஆசையாத்தான் இருந்தது. ஆனாலும் நாம போய் அந்தக் கடைல எப்படி வாங்கி சாப்பிடறதுன்னு ஆசையை அடக்கிண்டு வந்துட்டேன்! 

அந்த பஜ்ஜிக்காரனின் படுவேக சமையல் திறமையை அஷ்டாவதானி...தவறு தசாவதானிதான் சரி...ஆசிரியர் பக்காவாக எழுதியிருந்த அழகு, பஜ்ஜி செய்வதையும், அதனை ரசித்து, ருசித்து சாப்பிடுவதை விடவும் சுவை! பஜ்ஜிகள் சண்டை போடுவதையும், நீச்சல் அடிப்பதையும், இறுதியில் கண்ணீர் விட்டு  வெளியேறுவதையும் (ஏய்...இந்தப் பக்கம் வராதே. இது என் ஏரியா  என்று ஒரு பஜ்ஜி சொல்ல, ஆமாம்...இது உன் அப்பன், பாட்டன் நிலமா என்ன? என்று அடுத்தது முறைக்க, அப்பாடி...ரெண்டும் சண்டை போடும் நேரம் நாம கொஞ்சம் ஜாலியா நீஞ்சுவோம் என்று ஒரு உப்பலான குடை மிளகாய் பஜ்ஜி குதித்து ஓட...!) படித்த என் கற்பனை இது! கதாசிரியரின் நகைச்சுவையான எழுத்துக்கு பெரிய சபாஷ்!
ஏன் லல்லு ...நம்ம ஆத்துக்காரர்லாம் தினமும் அவன்கிட்ட பஜ்ஜி வாங்கி சாப்பிடறதா இவர் சொல்லுவார்.உனக்கு ஆசையா இருந்தா ஒரு நாள் வாங்கிண்டு வரச் சொல்லி சாப்பிடு. இப்போ இந்த காஃ பியை சாப்பிடு.
ஆனாலும் அவன் இப்படி எண்ணை  அடுப்பு முன்னால வேகறதைப் பாக்கும்போது ரொம்ப பாவமா இருக்கில்லையா? ஆஃ பீஸ்ல வேலை செய்யறவாள்ளாம் ஏ.சி ல ஹாய்யா வேலை செய்யறா. அதுல வர சம்பளமே நமக்கு சமயத்துல போற மாட்டேங்கறதே? இவனுக்கு என்ன  வந்து எப்படி குடித்தனம் பண்றானோ? ஹ்ம்...நான் வரேன் பானு ..குழந்தைகள் ஸ்கூல்லேருந்து வந்துடுவா.
கதாநாயகன் யோசிப்பது போல இத்தனை வசதிகளுடன் வேலை பார்ப்பவர்களுக்கே பற்றாக்குறை ஏற்படுகிறது.இதில் இது போன்ற ரோட்டோரக் கடையில் வேலை செய்யும் ஒரு சாதாரணத் தொழிலாளிக்கு என்ன வருமானம் பெரிதாகக் கிடைத்துவிடும்? தொழிலாளியின் வேலையைப் பற்றி பத்து விதமாக எடுத்துச் சொன்ன கதாசிரியர் அடுத்து அந்த முதலாளியின் ஒவ்வொரு செய்கையையும் கதாநாயகன் சொல்வது போல விலாவாரியாகக் கூறுகிறார். பஜ்ஜிக்கடை எதிரில் ஒருமணி நேரம் அமர்ந்து  அவரின் செய்கைகளை கவனித்தால் மட்டுமே இப்படி எழுதுவது சாத்தியம்.கதாசிரியரின் கூர்மையான கண்ணோட்டம் இதில் மிக அருமையாகத் தெரிகிறது! ஒரு திரைப் படத்தைப் பார்ப்பது போல ஒவ்வொருவரின் செய்கையையும் விளக்கும் ஆசிரியரின் ஆழ்ந்த கண்ணோட்டத்திற்கு ஒரு பலத்த கைதட்டல்!
வா லல்லு...இன்னிக்கு என்ன நியூஸ்? ஆமாம் நேத்திக்கு சொன்னியே பஜ்ஜி வாங்கித் திங்க ஆசையா இருக்குன்னு. உங்காத்துக்காரரை வாங்கிண்டு வரச் சொன்னியா?

இல்ல பானு ...இன்னிக்கு அங்க பக்கத்துல இருக்கற குப்பைத்தொட்டி ரொம்பி வழிஞ்சுண்டு கேவலமா இருக்கு...ஒரே நாத்தம்..அங்க இருந்து பத்து தப்பிடி கூட இல்ல இந்த பஜ்ஜிக் கடை. அதைப் பார்த்த எனக்கு பஜ்ஜி ஆசையே போயிடுத்து.வாங்கித் தின்னா என்ன வியாதியெல்லாம் வருமோ? இனிமேல் அந்த பஜ்ஜியை வாங்கி சாப்பிடாதேங்கோனு என்னவர்ட்ட சொல்லணும்.  நாமளே  ஆத்தில பஜ்ஜி பண்ணி சாப்பிட்டாப் போச்சு.

நல்ல வேளை  புரிஞ்சுண்டியே? நான் எங்காத்துக்காரர் கிட்ட கூட இதைத்தான் சொன்னேன். அந்த பஜ்ஜியை வாங்கி சாப்பிட வேண்டான்னு. ஆனா அவா கேட்டாதான? அவருக்கேன்னமோ நான் பண்ற பஜ்ஜியை விட மொறுமொறுன்னு, டேஸ்டா இருக்காம் இந்த பஜ்ஜி. எனக்கும் வங்கித் தரட்டுமான்னார். நான் வேண்டான்னுட்டேன். அந்தக் குப்பைத் தொட்டியை நினைச்சா குமட்டிண்டுதான் வருதே தவிர பஜ்ஜி திங்க ஆசை வருமா என்ன?

ஆனா பானு...அந்த கடை வாசல்ல சாயங்கால நேரத்தில கூட்டத்தைப் பார்க்கணுமே. காலேஜ், பள்ளிக்கூடம் போற பசங்கள்ள இருந்து, வேலைக்குப் போற பொண்கள், ஆஃபீஸ்ல இருந்து திரும்பிப் போறவா...ஏன் வாக்கிங் போற வயசானவா கூட அந்த பஜ்ஜியை எப்படி ரசிச்சு சாப்பிடறா தெரியுமோ? அதுக்கு காரணம் என்னனு யோசிச்சேன். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி பிரச்னை. சிலருக்கு வேலைச் சுமை. இளசுகளுக்கு சித்த நேரம் ஹாய்யா நின்னு ஜாலியா வம்படிக்க ஆசை. வயசானவாளுக்கு ஆத்தில இவாளுக்கு பீ.பி, சுகர்னு சாக்கு சொல்லி வாய்க்கு ருசியா எதுவும் சாப்பிட முடியாத கஷ்டம். அம்மாக்களுக்கு ஆத்தில டி ஃ பன் பண்ண முடியாதபோது குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க இன்ஸ்டன்ட் ஸ்நேக். இப்படி எல்லாரையும் தன்னோட வாசனையாலயும், ருசியாலயும் கட்டிப் போடற பஜ்ஜியால  எத்தனை பேர் ரிலேக்ஸ் ஆகறா பார்த்தியா?

என்ன ரிலேக்ஸோ லல்லு..அவாளுக்கல்லாம் அந்த குப்பைத் தொட்டி தெரியாதோ? திரும்பி நின்னுண்டு சாப்பிடுவாளாயிருக்கும். அவா மூக்குல அந்த நாத்தத்தை விட இந்த பஜ்ஜி வாசனைதான் தூக்கலா தெரியும் போலருக்கு. என்ன கஷ்டமோ போ. அவன் கடைல நல்ல வியாபாரம் ஆனாதான அவனும் குடும்பம் நடத்த முடியும்? 


ஆமாம்...அந்த பசி நேரத்தில குப்பைத் தொட்டியையும், ஈ, கொசு, நாற்றத்தையும்விட அந்த பஜ்ஜி மணம் மனசை மயக்கறதில்லையா? அந்த இடம் சரியில்லாட்டாலும் தரம்  நன்னா இருக்கே? அதான் அந்த பஜ்ஜிக்கடைக்காரரோட வெற்றின்னு சொல்லலாம்.

அட்டெண்டர் ஆறுமுகம் வாங்கி வரும் சூடான பஜ்ஜிகளின் சுவையை விட கதாசிரியர் அந்த பஜ்ஜிகளைப் பற்றி அவற்றை கவனிக்காவிட்டால் கோபித்துக் கொண்டு அவை தொஜ்ஜியாகிவிடும் என்று கூறுவது, அவற்றிற்கும் நம்மைப் போல் உணர்வுகள் உண்டோ என்று எண்ண வைக்கிறது. இந்த பஜ்ஜி சாப்பிட்ட அனுபவம் அவருக்கு நிறையவே உண்டோ என்றும் எண்ணம் தோன்றுகிறது இந்த உயிரோட்டம்தான் இவரின் கதைகளில் எவரையும் ஈர்க்கும் மாயாஜாலம் எனலாம். இப்படிப்பட்ட சுவாரசியமான இவரின் எழுத்துக்களுக்கு ஒன்று அல்ல நூறு 'ஜே'க்கள் போடலாம்!

ஒருசிறந்த  உழைப்பாளிக்கு உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளம் கொண்ட கதாநாயகன் 'தான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறட்டும்' என்ற எண்ணத்தில் அந்த பஜ்ஜிக் கடைக்காரரை வலிய அழைத்துக் கடன் கொடுப்பதாகச் சொல்வது அவரது சிறந்த மனிதாபிமானத்தை தெரிவிக்கிறது.
 
ஆனால் தான் செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழும் அந்த பஜ்ஜிக்காரர் ஒரு பெரிய மனிதர் கூப்பிடுகிறாரே என்று விழுந்தடித்து ஓடி வராமல், பிறகு வருகிறேன் என்று கூறியது அவரது மரியாதை மாறாத தன்மானத்தைக் காட்டுகிறது.
 
அதனை நினைவில் கொண்டு மறுநாள் காலை கதாநாயகனின் வீட்டுக்கு சென்று என்ன விஷயம் என்று கேட்டபோது அவர் கதாநாயகனை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை என்பது புரிகிறது.
'என்னால் உனக்கு பண உதவி செய்ய முடியும். பெற்றுக் கொள்கிறாயா?'என்று கதாநாயகன் கேட்ட கேள்வியில் சற்று தலைக்கனம் இருப்பதை உணர முடிகிறது.

ஆனால் அந்த சாதாரண மனிதரோ இந்தப் பெரிய பதவியில் இருக்கும் பெரிய மனிதரின் உதவியை மறுத்து இவரை விட உயரத்திற்கு சென்று விட்டார்.
அவர் கடன் வாங்க மறுத்துக் கூறிய காரணங்கள் கீதோபதேசமாக அல்லவா இருக்கின்றன!

அந்தக் காலத்தில்
காலணாவுக்கு விற்ற பஜ்ஜியை இன்றைக்கு மூன்று ரூபாய்க்கு விற்பதை வருத்தத்துடன் சொல்லும் அவரது பணிவு....
'நானாக்கொண்டு மூணு ரூபாய்க்கு பஜ்ஜி விற்கிறேனாக்கும்' என்ற மமதை இல்லாத நற்குணம்....

வேளாவேளைக்கு சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் தொழிலாளிகளில் இருந்து பெரும் பணக்காரர் வரை தன்னால் முடிந்த அளவு சுத்தமாக, சுவையாக பஜ்ஜி செய்து தரும் நேர்மையான உழைப்பு...

எல்லோரும் குலத் தொழிலை கடவுளாக மதிக்க வேண்டும் என்பதை தம் தாத்தா, அப்பா முதல் அனைவரும் செய்த இந்தத்  தொழிலையே தாமும் தொடர விரும்புவதாகக் கூறிய சிறந்த சுபாவம்....

அகலக்கால் வைத்தாலும் ஆழக்கால் வைப்பதை விரும்பாததால், ஒரு புதிய தொழிலை அனுபவம் இல்லாமல் தொடங்க விரும்பாத பக்குவப்பட்ட  மனம்....
எல்லா வசதிகளையும் அளவாகப் பெற்றுள்ளதே எனக்குப் போதும் என்று சொன்ன பேராசைப் படாத நல்ல உள்ளம்....

எல்லாவற்றிற்கும் மேலாக தனக்குக் கொடுக்கும் கடனை தேவையுள்ள வேறு எவருக்காவது கொடுத்தால் அவர்கள் உயரலாமே என்ற நல்லெண்ணம்....

இறுதியாக இன்றைய வியாபாரத்திற்காக சாமான் வாங்கப் போகும் கடமை தவறாத கண்ணியம்...
 
இன்று நடப்பது நன்றாகவே நடக்கிறது...நாளை நடப்பதும் நன்றாகவே நடக்கும்...என்ற  தன் உழைப்பின் மேலுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை...

விஸ்வரூபமாக நிற்கும் பஜ்ஜிக் காரர் முன் நம் கதாநாயகன் ஒரு சின்னப் புள்ளியாகி விட்டாரே!
 
பிழைக்கத் தெரியாதவர்  என்று நம் கதாநாயகன் நினைத்த அந்த சாதாரண பஜ்ஜிக்காரர் அவருடைய எண்ணங்களை பளிச்சென்று ஆணி அடித்தாற்போல் சொல்லிவிட்டு ஒரு கும்பிடு போட்டுவிட்டு சென்று விட்டார்.

நம் கதாநாயகனோ பல விஷயங்களைப் புரிய வைத்த அவருக்கு மானசீகமாக ஒரு பெரிய கும்பிடு போட்டு, சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்து விட்டாரே!  

ஏன்னா...இன்னிக்கு ஆஃபீஸ் லீவா என்ன? இன்னும் கிளம்பாம எதையோ யோசிச்சிண்டிருக்கேளே?  அந்த பஜ்ஜிக் காரர் என்ன சொன்னார்? அவருக்கு எவ்வளவு கடன் கொடுக்கப் போறேள்?

பானு..எனக்கு இப்போதான் புத்தி வந்தது. இவ்வளவு தாராளமா சம்பாதிச்சும் இன்னும் பணம் வேணும், பணக்காரனா ஆகணும்கற ஆசையில ஷேர்  மார்க்கெட்டுல எவ்வளவு  லட்சத்தை நான் விட்டிருப்பேன்? நீ எவ்வளவோ சொல்லியும் திருந்தாம ஏகத்துக்கு கடனை வாங்கி எவ்வளவு நஷ்டப் பட்டேன். அதை நினைச்சா எனக்கு ரொம்ப கேவலமா இருக்கு பானு.

கொஞ்சம் நிறுத்துங்கோ. இதல்லாம் இப்போ எதுக்கு என்கிட்டே சொல்றேள்? இது எனக்கு தெரிஞ்சதுதான? அதனாலதான் நமக்கு தெரியாத காரியத்தில இறங்கக் கூடாதுன்னு பெரியவ சொல்லிருக்கா. சுலபமா பணம் கிடைக்கும், நாம பணக்காராளா ஆயிடலாம்னு நீங்க பேராசைப் பட்டு ஷேர்ல இறங்கினேள். என்னாச்சு? ஏகப்பட்ட நஷ்டம். நாம குருவி மாதிரி சேர்த்த பணமெல்லாம் கோவிந்தா ஆயிடுத்தே? 

இன்னிக்கு அந்த பஜ்ஜிக்காரன் என் கண்ணைத் திறந்துட்டான் பானு. அவன் சாதாரண பஜ்ஜிக் காரனாச்சே, நாம கடன் குடுக்கறேன்னா உடனே ஓடி வந்து வாங்கிப்பான்னு கர்வமா நினைச்சேனே, அது எவ்வளவு முட்டாள்தனம்னு இப்போதான் எனக்கு புரியறது. சர்வ சாதாரணமா 'என் வருமானத்தில நான் வசதியாத்தான் வாழ்ந்திண்டிருக்கேன். எனக்கு எந்தத் தேவையும் இல்ல. உங்க கடனை வேற யாருக்காவது கொடுத்துக்கோங்க'னு அநாயாசமா சொல்லிட்டு போயிட்டான். எத்தனை தன்மானம், தன்னம்பிக்கை பாரேன் அவனுக்கு. அவன் எங்கேயோ  உசரத்துல இருக்கான்...நான்தான் அதல பாதாளத்துல விழுந்துட்டேன். சம்பாதிச்ச பணத்தை எல்லாம் ஷேர்ல போட்டு, நஷ்டமானப்போ விட்டதைப் பிடிக்கறேன்னு, இருந்ததையும் விட்டு, லோனை வாங்கி என் வாழ்க்கைல பாதி நாளை ஷேர்ங்கற சூதாட்டத்தில வீணா போக்கிட்டேனே? உனக்கும் எவ்வளவு கஷ்டம் குடுத்துட்டேன். இனிமேல் நானும் பேராசைப் படாம, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு சிக்கனமா இருந்து வாழறதுன்னு முடிவு பண்ணிட்டேன். இனி நான் ஷேர் மார்க்கெட் பக்கமே போக மாட்டேன் பானு. உனக்கு சந்தோஷம்தான?

எப்படியோ நான் கும்பிட்ட தெய்வம் என்னைக் கைவிடல. அந்தக் கண்ணன்தான் பஜ்ஜிக்காரனா வந்து உங்களுக்கு உபதேசம் பண்ணிருக்கார் போலருக்கு. இனிமேலாவது நீங்க மாறினா சரி. சீக்கிரம் குளிச்சுட்டு வாங்கோ...சாப்ட்டு ஆஃபீசுக்கு கிளம்புங்கோ.
ஒரு சின்ன எறும்பிலிருந்து சுறுசுறுப்பை அறிந்து கொள்வது போல, ஒவ்வொரு மனிதரிடமும் சில தனிப்பட்ட சிறந்த நற்குணங்கள் உண்டு. அவைநம்மிடம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதே இக்கதையின் சாரம்.

போதும் என்ற மனம் வேண்டும், பேராசை பெருநஷ்டம் என்பனவற்றை இக்கதை உள்ளங்கை நெல்லிக்கனியாக எடுத்தியம்புகிறது.
ஒரு பஜ்ஜிக்காரன் மூலமாக நமக்கு பல நல்ல வாழ்வியல் தத்துவங்களை அழகாக, அர்த்தமுள்ளதாக எடுத்துச் சொன்ன ஆசிரியருக்கு பாராட்டுகள் பலப்பல. 

எங்கள் வீட்டுக்கு அடுத்தும் ஒரு பஜ்ஜிக்கடை உள்ளது. மதியம் 12 மணி ஆனால் சூப்பர் பஜ்ஜி வாசனை மூக்கைத் தூக்கும். இரவு பத்து மணி வரை செம வியாபாரம்! சாப்பிடும் ஆவலையும் அடக்க முடியாது. போகும்போது, வரும்போது பார்க்கும்போதே அந்த பளபள பஜ்ஜியும், வாசனையும் நாக்கில் நீர் ஊற வைக்கும்!சுகாதாரமில்லாத சுற்றுப்புறமும், எண்ணையின் தரமும் அந்த பஜ்ஜியை வாங்கிச் சாப்பிட மனம் வருவதில்லை. அந்த பஜ்ஜிக் கடைக்காரரிடமும் ஏதாவது கதை இருக்குமோ? ஒருநாள் பேசிப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்!
ஒரு சின்ன சம்பவத்தை, நமக்கு சாதாரணம் என்று தோன்றும் சில்லியான (சில்லி பஜ்ஜி) விஷயத்தைக் கூட ஆழ்ந்து நோக்கி, அதை  ஒரு அழகான கதையாக்கி, சுவாரசியமான அந்தக் கதையில் ஒரு தத்துவம், படிப்பினை இவற்றை எடுத்துச் சொல்லி, நம்மை அந்தக் கதைக் களத்துக்கே அழைத்துச் சென்று, சிலமணி நேரம் நம் மனத்தை அந்தக் கதையினுள்ளேயே லயிக்கச் செய்யும்,  ஒரு சாதாரணமான, சாதிக்க நினைக்கும் நம் கதாசிரியரின் திறமைக்கு ஆயிரம் சல்யூட்!!

VGK 29...அட்டெண்டர் ஆறுமுகம்.

VGK 29...அட்டெண்டர் ஆறுமுகம்...பரிசு பெறாத விமரிசனம்.. 
 கதைக்கான இணைப்பு இதோ....


 http://gopu1949.blogspot.in/2014/08/vgk-29.html
 
அட்டெண்டர்ஆறுமுகம் பணியில் சேர்ந்த நாள் முதல் அவருடன் இருக்கும் எனக்கு அவர் முதலாளி மட்டுமல்ல. என்னை மிக அருமையாக பராமரிப்பவர். உடல் கறுத்து,ஒல்லியாக,உயரமாக காணப்படும் அவரின் மீசை மட்டுமே முரடு.அவரோ தங்கமானவர்.அவர் ஒருநாள் இல்லை என்றாலும் அந்த அலுவலகமே ஆடிப்போய்விடும்.

ஒழுக்கம்,நேர்மை, அன்பு என்று அத்தனை நல்ல குணங்களுடன், ஓயாத உழைப்பாளியாக வளைய வருபவரின் ஏக்கப் பார்வையும், கூழைக் கும்பிடும் மட்டுமே எனக்குப் பிடிக்காத விஷயம். என்னதான் அவருடைய இதயத்துக்கு நெருக்கமாக இருந்தாலும் இதைச் சொல்வது எப்படி?

அவர் தன் வேலை பற்றியோ, ஊதியம் பற்றியோ மன வருத்தம் கொள்ளவில்லை. தன் பதவி பற்றிய மன சங்கடம்...அதுவும் தன் மகள் கல்யாணத்தின்போது....தன் மருமகன், தன் வேலையைப் பற்றி அல்ல...அதற்கான அட்டெண்டர் என்ற சொல்லைப் பற்றி தாழ்வாக நினைப்பாரோ என்ற வருத்தம்.அவர் அட்டெண்டர் என்று சொல்லாமல் கிளார்க், ஆஃபீஸ் அஸிஸ்டெண்ட் என்று மாற்றிச் சொல்லியிருக்கலாம். ஆனால்பொய் சொல்ல விரும்பாத அவரது குணம் போற்றத்தக்கது.

ஆனால் இன்று அவருக்கே தனக்கு பதவி உயர்வுக்கு ஏதாவது வாய்ப்பு உண்டா என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டு விட்டதை தன் டைரியில் எழுதியபோது,அதை நினைத்து என் மனம் கும்மாளம் போடுகிறது. மாலை மேனேஜரை சந்தித்து இந்த விஷயம் பற்றி என் தலைவர் கேட்டபோது நான் அடைந்த ஆனந்தம் கொஞ்சநஞ்சமில்லை!

தன் பெண்ணின் கல்யாண விஷயத்தை மெதுவாகச் சொல்லி, பின் பத்திரிகை அடிப்பதைப் பற்றிச் சொல்லி, (பத்திரிகையில் பெயர் போடும்போது பதவியும் போட வேண்டுமே!)தனக்கு பதவி உயர்வு தர வாய்ப்பு உண்டா என்று பதவிசாக கேட்டபோது எனக்கு என் காதுகளையே நம்ப முடியவில்லை.'சூப்பர் தலைவா'என்று கத்தி விட்டேன்!

அடுத்த டைரக்டர்கள் மீட்டிங்கில் பேசுவதாக மேனேஜர் சொன்னது என் தலைவரைவிட எனக்கு சந்தோஷமாக இருந்தது. அன்று முதல் 'என்ன முடிவு வருமோ' என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது.

என் தலைவர் சாதாரண மனிதர்களிலிருந்து மாறுபட்டவர்.அதிக ஆசை, ஆடம்பரம்,வீண்செலவு இவற்றை அறவே வெறுப்பவர்.குடும்பப் பொறுப்பானவர்.எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது. பொது அறிவுப் புத்தகங்களைப் படித்து நிறைய குறிப்பெடுத்துக்கொள்வார்.

இதுநாள் வரை 'அட்டெண்டர்' என்பதைத் தாழ்வாக நினைக்காதவர்.எந்த வேலையிலும் 10அல்லது 15 வருடங்கள் ஆனால் கண்டிப்பாக பதவி உயர்வு கொடுப்பதுண்டு. தனக்கு 36 வருடங்களாகியும் ஒரே பதவியில் இருப்பது மனதை உறுத்த அதனாலேயே தன் ஆதங்கத்தை மேனேஜரிடம் கொட்டி விட்டார்.

அத்துடன் நாளை மாப்பிள்ளை வீட்டாரிடம் கௌரவமாக சொல்லிக் கொள்ளலாமே என்ற ஆசையும் கூட.இதன் பயன் என் தலைவருக்கு மட்டுமல்லவே....இவர் போன்ற பலரின் சமூகப் பிரச்னையும் ஆயிற்றே?மனிதாபிமானம் மிக்க மேனேஜர் கண்டிப்பாக இதற்கு ஓர் வழி செய்வார் என்ற நம்பிக்கையில் இருவரும் காத்திருந்தோம்.

டைரக்டர் மீட்டிங் முடிந்து 10வருடம் ஆனவர்கள் ஜெராக்ஸ் ஆப்பரேட்டர்கள், 20 ஆண்டு முடித்தோர் ரிக்கார்டு கிளார்க்குகள், 30 ஆண்டு முடித்தோர் ஆஃபீஸ் கிளார்க்குகளாக அறிவித்தபோது என் தலைவர் போன்ற பலரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

அந்த ஆர்டரில் கையெழுத்து போட்டபோது சந்தோஷத்தில் என் தலைவரின் கையோடு, என் உடலும் லேசாக நடுங்கியது! அன்று முதல் என் தலைவரின் ஆடை காக்கியில் இருந்து கலராக மாறியது மட்டுமே அவருள் ஏற்பட்ட மாற்றம்.

இந்த ப்ரமோஷனை 'அவருக்கு மாப்பிள்ளை வரும் நேரம்' என எல்லாரும் கூறினாலும் என்னைப் பொறுத்தவரை அவரது நியாயமான, நேர்மையான,பொதுநலக் குறிக்கோளுக்கு இறைவன் தந்த பரிசு என்றே எண்ணுகிறேன்.

ஒரு மாதமானபின் பின் என் தலைவரின் பெயரை அவர் சம்பந்தி மரியாதையாக 'ஆறுமுகம் ஐயா' என்று கேட்டபோது பேசியவர் 'அட....அட்டெண்டர் ஆறுமுகமா?' என்று சொன்னதாக சம்பந்தி கூறியபோது, தலைவர் மன நிலையை அவரது வருத்தமான இதயத் துடிப்பிலிருந்து என்னால் உணரமுடிந்தது.

சம்பந்தி கூறியது போல, பொய் சொல்லாமல்,திருடாமல்,பிச்சை எடுக்காமல்,ஏமாற்றாமல் செய்யும் எந்தத் தொழிலும் கேவலமானதில்லை. மற்றவர் நம்மை கூப்பிடுவது பெரிதல்ல என்று பெருந்தன்மையாக்க் கூறிய சம்பந்தி வீட்டார் தலைவரின் பெண்ணையும் நன்கு வைத்துக் கொள்வார்கள் என்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது.

நாம் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்தபோது 'பே மீ ஃபார்ட்டி...கால் மீ தோட்டி' என்று கூறுவதாக மாப்பிள்ளையின் தந்தை கூறுவது, எந்தத் தொழிலும் கேவலமல்ல என்பதைக் குறிக்கிறது.

நம் தேசத்தந்தை தென் ஆப்பிரிக்காவில் இருந்த சமயம் தன் கழிவறையை தானே சுத்தம் செய்ய வேண்டும் என்று தன் மனைவியிடம் வலியுறுத்தியதாக என் தலைவர் 'சத்திய சோதனை'யில் படித்து அதைக் குறிப்பெடுத்த சமயம்  நானும் 
அறிந்து கொண்டேன்.

தலைவர் தினமும் சைக்கிளில் ஆஃபீஸ் செல்லும்போது தெரு குப்பைகளை அள்ளி லாரியில் போடும்போது தெருவில் சென்று கொண்டிருக்கும் அனைவரும் மூக்கை மூடிக் கொண்டு அவசரமாக விலகிச் செல்வர். ஆனால் அந்த வேலையைச் செய்பவர்கள் அசிங்கப்படாமல் 'செய்யும் தொழிலே தெய்வம்' என்று கை கூசாமல் அந்த வேலையைச் செய்வதில்லையா?அவர்களால்தானே நம் வீடும், நாடும் நாற்றமின்றி இருக்கிறது.

தலைவர் மகளின் திருமணம் சுற்றமும்,நட்பும் சூழ மிக நன்றாக, விமரிசையாக நடைபெற்றது.அவருக்கு வந்த அனைத்து மணி ஆர்டர்களிலும் கையெழுத்து போடும்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அட....நான் யாரென்று சொல்லவே இல்லையே? நான்தான் அவரின் மிகப் பிரியமான பேனா....அந்தக்கால ஃபவுண்டன் பேனாவாக்கும்! சிறு வயது முதல் பொக்கிஷமாய் என்னை பாதுகாத்து வரும் என் தலைவர் நானின்றி எந்த இடத்திற்கும் சென்றதில்லை.அவர்சட்டைப்பைக்கு நான்தான் அழகு சேர்ப்பதாக அவர் நண்பர்களிடம் கூறும்போது எனக்கு பெருமையாக இருக்கும்.

அவரைப் பற்றி அனைவருக்கும் சொல்லும் ஒரு அரிய வாய்ப்பை எனக்கு இந்த விமரிசகர் கொடுத்ததை நான் மிகப் பெருமையாக நினைக்கிறேன்.

 

என் தலைவரைப் பற்றி சிறப்பாக ஒரு சிறுகதை எழுதிய கதாசிரியருக்கு நன்றி!தாயுமானவள்..VGK 24

தாயுமானவள்..VGK 24   திரு கோபு சாரின் கதைக்கான பரிசு பெறாத என் விமரிசனம்...

 கதைக்கான இணைப்பு...http://gopu1949.blogspot.in/2014/06/vgk-24.html

ஒரு திருவிழாவின் காட்சிகளை அழகுற, உணர்வுபூர்வமாக நம் கண்ணெதிரில் காட்டியுள்ள ஆசிரியரின் நடைக்கு ஒரு பாராட்டு!

ஒரு தேர்த்திருவிழாவில் கதையை ஆரம்பித்து, அதை ஒரு மனம் நிறைந்த உணர்ச்சிப் பெருவிழாவாக முடித்த ஆசிரியரின் கதாரசனையைப் புகழ 
வார்த்தைகளே இல்லை.

மாரியம்மன் கோவிலின் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டு தெருவின் அத்தனை காட்சிகளையும் கண்டு களித்தாற்  போன்ற அனுபவம் அருமை.
வண்ணக் கோலங்கள், மாவிலைத் தோரணங்கள், ஆங்காங்கே நாக்கில் நீர் ஊற வைக்கும் அன்ன தானங்கள், வயிற்றை நிறைக்கும் கஞ்சி, அக்னிச் சட்டி ஏந்திய அழகு மங்கையர், கரகாட்டம், காவடியாட்டம், வாண  வேடிக்கைகள் (இவற்றுடன் ஆங்காங்கே ஒலிபெருக்கியில் கேட்கும் எல். ஆர். ஈஸ்வரியின் 'மாரியம்மா எங்கள் மாரியம்மா' என்ற பக்திப் பாட்டு).....அத்தனையும் நமக்கு பறவைக் காணல் (bird view) காட்சிகளாகத் தெரிகின்றன! அந்த சந்தோஷங்கள் படிக்கும்போதே நம்மையும் தொற்றிக் கொள்வதை மறுக்க முடியவில்லை!

இதில் 'செய்யும் தொழிலே தெய்வ'மாக எண்ணி வாழும் முனியாண்டி எதற்காக பணம் சேர்க்கிறான்; அவன் மனைவிக்கு என்ன வாங்கிக் கொடுக்க ஆசைப் படுகிறான்? இப்படி சஸ்பென்ஸ் கொடுத்த ஆசிரியர் அடுத்து அவனுக்கு திருமணமாகி மூன்று வருடங்களாக குழந்தைப் பேறு  இல்லை என்பதைச சொல்லி, அதற்காகவே சிகிச்சைக்காக பணம் சேர்க்கிறான் என்பதையும் நம்மை ஊகிக்க வைக்கிறார். 

அன்பும், அறமும் இணைந்த இல்வாழ்க்கை நடத்தும் முனியாண்டி, மரகதம் இருவரும் சிறு குடிசையையே அரண்மனையாக எண்ணி வாழும், 'போதும் என்ற மனம் படைத்த' பண்பாளர்கள் என்பதை அருமையாகக் கோடிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர்!

கடவுள் என்னவோ நல்லவர்களைத்தானே அதிகம் சோதிக்கிறார்? அவளுக்காகவே, அவள் மனதை மகிழ்விக்கவே முனியாண்டி அல்லும் பகலும் பலூன்களை வாயினால் ஊதி, கை விரல்களினால் கட்டி, கைகளால் காசுகளை வாங்கிப் போட்டும் சுறுசுறுப்பாக வியாபாரம் செய்கிறான்.அம்மனின் ரதம் அந்த தெருவுக்குள் நுழைவதையும், மக்கள் மாரியம்மனை வணங்க முண்டியடித்து ஓடுவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சில வினாடிகளில், முனியாண்டியிடம் அந்தக் குழந்தையை விட்டுவிட்டு ஓடிப்போன கைலிக்காரன்தான் முனியாண்டியின் குறையைத் தீர்க்க வந்த தெய்வம். அவன் குறை தீர்க்க அம்மனே அக்குழந்தை வடிவில் வந்தாள்  போலும்.

அந்தக் குழந்தை தாய், தந்தையை சுனாமிக்கு பறி  கொடுத்து  அனாதையாய் நிற்பதையும், அவளை அந்த இரக்கமில்லாத  கைலிக்காரன் கடத்திக் கொண்டு வந்து, என்ன காரணத்தாலோ முனியாண்டியிடம் விட்டுவிட்டுப் போனதையும், அந்தக் குழந்தை சொல்லிய விஷயங்களிலிருந்து அவனுக்குப் புரிந்தது. பசியில் அழுத குழந்தைக்கு வயிறார உணவு வாங்கிக் கொடுத்தவன், அந்தக் குழந்தையைக்  கட்டியணைத்து முத்தமிட்டபோது, இதுவரை தான் அனுபவிக்காத அந்தப் புது உணர்வில் தன்னையே மறந்து விட்டான்.

குழந்தை என்ற ஒன்றையே அறியாத அவனின் மனமும், அந்தக் குழந்தையின் முத்தத்தில், அந்த ஸ்பரிசமே தெரியாத அவன் உடம்பும் பரவசம் அடைந்ததில் வியப்பென்ன? அந்தப் பேரின்பம்  நிலைக்குமா? இதுவே அவனது அப்போதைய கவலை. ஒரு குழந்தையால் இத்தனை மனமகிழ்ச்சி கிடைக்குமா? 


நமக்காக ஒரு குழந்தை பிறக்குமா? கடவுள் கண் திறப்பாரா? பிள்ளையாரிடம் தன் குறைகளைக் கூறியவன் வெய்யிலின் களைப்பு தாங்காமல் கண் அயர்ந்தான் .கூடத் தூங்கிய குழந்தையோ 'இவனை விட்டால் நமக்கு கதியில்லை' என்பதுபோல் அவன் அருகில் அவன் சட்டையைப் பிடித்தபடி படுத்துத் தூங்கியதை அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

கண்விழித்து எழுந்து தன் வியாபாரமும் முடிந்த நிலையில் தன் அரண்மனைக்குத் திரும்பியவனுடன் வரும் அழகு மிளிரும் பெண் குழந்தையைப் பார்த்த மரகதத்தில் உள்ளத்தில் ஒரு பரவசமும், கூடவே ஆயிரமாயிரம் கேள்விகளும். 'ஒரு தோசை வேணும்' என்று கேட்ட குழந்தைக்கு தாயாக மாறி அதை ஊட்டி விட்டாள் அவள். அப்பொழுதே அவள் தாய்மை ஊற்றெடுத்துப் பெருக ஆரம்பித்தது. 

அந்தச் சின்னத் தளிரை போலீசிடம் ஒப்படைக்கும் முடிவை அவர்கள் எடுத்தபோது, அதை அறிந்த விஜி  மனம் நெகிழ்ந்து 'நான் உங்களோடையே இருந்து விடுகிறேன்' என்று கூறியபோது, தன்னைக் கொண்டு விட்டுவிடுவார்களோ என்ற பயத்திலேயே காய்ச்சல் வந்துவிட்ட குழந்தையை யாருக்குதான் வெளியில் அனுப்ப மனம் வரும்? அன்புக்கும் உண்டோ அடைக்கும்  தாழ்? கடவுளே தங்கள்  குறை தீர்க்க இந்தக் குழந்தையைத் தந்ததாக எண்ணினாள் மரகதம். பருத்தி காய்த்து புடவையாகவே கிடைத்துவிட்ட மகிழ்ச்சி அவளுக்கு. அதுதானே தாய்மனம்! அது புரியாத முனியாண்டி பாவம் அவளை டாக்டரிடம் அழைக்கிறான்!

இப்படி அழகாக ஒரு குழந்தையைக் கொடுத்த மாரியம்மனுக்கு நன்றி சொல்வது எப்படி? இதையே அவள் பிரசாதமாக எண்ணி சீரும்,சிறப்புமாக வளர்ப்பதுதானே சரி. அதைப் புரிந்து கொண்ட மரகதம் தாயுமானாள் ஆகிவிட்டாள்! தனக்கு சொந்தமாகக் குழந்தை பிறக்க இத்தனை ஆண்டுகாலம் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில்  ஒரே நொடியில் அந்தக் குழந்தையை நன்கு வளர்க்க வேண்டும் என்றும், தனக்கு குழந்தை வேண்டாம் என்றும் முடிவெடுத்த அவள்தானே தாயுமானவள்? 

 உள்ளத்தால் உயர்ந்த மரகதத்தின் அழகிய மனம் புரிந்த முனியாண்டியின் மனதில் அவள் மேல் இன்னும் காதல் பெருகியதை, அவளை ஆசையுடன் அணைத்ததாகச் சொல்லி அவர்களின் அழகிய தாம்பத்தியத்தை ஒரே வரியில் புரிய வைக்கும் ஆசிரியரின் திறமை அபாரம்!

ஆம்!  தாய்+ உமா+ ஆனவள்! தன் முலைப்பாலை திருஞான சம்பந்தருக்கு பொற்கிண்ணத்தில் கொடுத்து, உண்ணாமுலையாளாகிய அன்னை உமாதேவியைப் போல தானும் விஜிக்கு 'தாயுமானவள்'  மரகதம்.
அவளுக்கு சிகிச்சை இல்லாமலேயே இன்னொரு குழந்தை பிறக்க அந்தத் தாயுமானவர் அருள்புரியட்டும்.


எட்டாக் க(ன்)னிகள்!

எட்டாக் க(ன்)னிகள்!VGK19

பரிசு பெறாத என் விமரிசனத்துக்கான கதை இணைப்பு...
http://gopu1949.blogspot.in/2014/05/vgk-19_23.html


பிறப்பால் வாமனனாகப் பிறந்த ஒரு சிறிய மனிதரின் எண்ணங்களையும், அவரின் திருமண ஏக்கங்களையும், அதனால் அவருக்கு ஏற்படும் ஏமாற்றத்தையும் எட்டாக்க(ன்)னிகள்  என்று எழுச்சியுடன் எடுத்துக் கூறியுள்ள எங்கள் கதாசிரியருக்கு முதலில் ஒரு ஜே!

பேருந்து என்றாலே அதில் பெண்களுக்கும் இடமுண்டே!  அதிலும் கலகலவென்று  பேசும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு முப்பத்தி ஐந்து வயது இளைஞனின் எண்ணங்களும் அவன் வயதுக்கேற்றபடி அந்தப் பெண்களைச் சுற்றித்தானே வரும். கும்மென்ற மல்லிகை மனமும், குசுகுசுவென்று ஓரக்கண்ணாலும், ஒதுங்கி நின்றும் அவர்கள் பேச்சும், சிரிப்பும் எந்த ஆணையும் ஈர்ப்பதில் என்ன ஆச்சரியம். இதனையே ஆசிரியர் மிக அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

அழகிய பெண்களுக்கிடையில் ஒரு ஒட்டடைக் குச்சிப் பெண்ணும் இருந்ததையும், மற்ற அழகிய பெண்களின் பால் ஈர்க்கப்படாத கதாநாயகனின் மனது அவளின்பால் நாட்டம் கொண்டதையும், அவளை   வாத்துக் கூட்டத்தில் இருக்கும் நெட்டைக் கொக்காக கற்பனை செய்ததையும் ஆசிரியர் எழுதியிருப்பது நல்ல சுவாரசியமான கற்பனை!இப்படியும் ஒரு அழகற்ற படைப்பா என்று கதாநாயகன் அனுதாபப் பட்டபோது அவன் ஒரு அழகிய மன்மதன் என்றே எண்ணத் தோன்றுகிறது.அந்தப் பெண் அழகற்றவளாக இருந்தாலும் அவள் வலிய வந்து பேசும்போது எந்த ஆண்மகனும் தன்னை அவள் விரும்புவதாகத்தானே எண்ணுவான்? இது ஆணின் இயல்பான குணம் ஆச்சே?

தன்  உருவத்தைப் பார்த்தால் முப்பத்தி ஐந்து வயது மதிக்க முடியாது என்றபோது கதாநாயகன் மிக இளமையாகத் தெரிபவன் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறார் ஆசிரியர்! இப்படிப்பட்ட அழகான, இளமையான ஆண்மகனுக்கு அவர் வீட்டார் திருமணம் பற்றிய பேச்சை எடுக்காதது ஏன் என்பதை ஒரு சஸ்பென்சாக கூறியுள்ளார் ஆசிரியர்.

மணி என்ன ஆகிறது, காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு என்ன என்றெல்லாம் அவள்  ஒரு நண்பரிடம் பேசுவது போல  எண்ணிக் கேட்டாள்.ஆனால் நம் கதாநாயகனுக்கோ அவளுக்கு தன் மேல் காதல் வந்துவிட்டதாக எண்ணம் தோன்ற, நதியின் வேகத்தையும், இளமை உணர்ச்சிகளையும் கட்டுப் படுத்த முடியாது என்று சொல்வதாக ஆசிரியர் கூறுவது மிகச் சரியான உவமை.

ஒருநாள் மணி கேட்டதாலும், இன்னொருநாள் டிக்கெட்டுக்கு சில்லறை கொடுத்ததாலுமே அவள் தன்னைக் காதலிப்பதாக நினைத்த கதாநாயகனின் பேதை மனதை  என்ன சொல்வது?

காதல் வரும்போது தான் காதலிப்பவரின் அழகு காணாமல் போவது காதலின் தன்மைகளில் ஒன்று! அதனால்தான் அந்த அழகற்ற பெண்ணும் உலக அழகியாகத் தோன்றுகிறாள் நம் கதாநாயகனுக்கு!

அது மட்டுமா?அவளுக்கு தன்  காதலைக் கொட்டி கடிதமே எழுதி விட்டானே! ஆனால் பாவம் அந்தக் கடிதத்தின்ஆயுள் கொடுக்குமுன்பே மடிந்து போயிற்றே?
எழுதிய காதல் கடிதத்தை தானே படித்துப் ,படித்துக் கிழிந்து போனதால்,இரவு முழுதும் கண்விழித்து வேறொரு கடிதம் எழுதி அதை மிக பத்திரமாக வைத்துக் கொண்டதை, அவளைத் தன்  மனதில் பூட்டி பத்திரமாக வைத்துக் கொண்டதாக சிம்பாலிக்காக  சொல்லியுள்ளார் கதாசிரியர்.
மறுநாள் அந்தப் பெண்ணின் தோழி அவளது நிச்சயதார்த்தப் பத்திரிகையைக் கொடுத்தபோது அதைக் காதல் கடிதம் என எண்ணி,அவளுக்கே முத்தம் கொடுப்பதாக நினைத்து கவரைப் பிரித்து படித்ததும், அது நிச்சயதார்த்தப் பத்திரிகை என்று தெரிந்து அவன் அதிர்ச்சியாகி, மயக்க நிலைக்கு உள்ளானதையும், அழகு இல்லாவிட்டாலும், ஒரு பெண்ணுக்கு உயரமும் கூடுதல் பர்சனாலிட்டிதான் என்று கதாநாயகன் மனம் வருந்துவதை, அந்த ஏக்கத்தை அருமையாக எழுதியுள்ளார் ஆசிரியர்!
அந்த அழகு குறைந்த பெண்ணே (கடவுளின் படைப்பில் யாருமே அழகற்றவர்கள் இல்லை என்பது என் கருத்து.) ஒதுக்கும் அளவுக்கு நம் கதாநாயகனுக்கு என்ன குறை?
அதை ஒரு சிறிய இடைவேளை விட்டு சஸ்பென்சை உடைக்கும் தனித்தன்மை கதாசிரியரின் சிறப்பான பாணி எனலாம். பாவம்....முப்பத்தைந்து வயதில் மூன்றடி உயரமே உள்ள கதாநாயகனுக்கு  எந்தப் பெண்தான் கழுத்தை நீட்டுவாள்! எல்லாப் பெண்களுமே எட்டாக்கன்னிகள்தான்!
ஆசையில்லாத மனிதர் யார்? இப்படிப்பட்ட மனிதர்களைப் படைத்த இறைவனைத்தான் கேட்க வேண்டும்.
நாராயண!நாராயண! என்னை அழைத்தீர்களா தேவரே?

வா நாரதா! உன் தந்தையை சற்று அழைத்துவா. 

இதோ வருகிறேன்....நாராயண...நாராயண!
வணங்குகிறேன் தந்தையே!
 
வா மகனே நான்முகா! சற்று பூலோகத்தைக் குனிந்துபார். ஒரு சிறந்த கதாசிரியரின் நாயகனுக்கு ஏற்பட்டிருக்கும் மன சஞ்சலத்தை எப்படி நீக்கப் போகிறாய்?

தந்தையே! அவனுடைய பிறப்பு அப்படி. நான் என்ன செய்ய முடியும்?

அவனைப் படைத்தது நீதானே? அவனுக்கேற்ற வாழ்க்கையையும் நீதானே அமைத்துக் கொடுக்க வேண்டும்?

பிதாவே! அவனது உருவத்தில் தாம் கூட ஒரு அவதாரம்  எடுத்துள்ளீர்களே? மறந்து விட்டீரா?

எனக்கு அதில் எந்த பிரச்சினையும்  வரவில்லை.ஆனால் அந்தப் பேதை மனிதனின் துன்பத்தை எப்படி போக்குவது? அவன் உருவம் போன்ற பெண்கள் எங்கும் அதிகம் பிறப்பதில்லையே? 

மன்னிக்க வேண்டும் தந்தையே! அந்த உருவம்தான் அவர்களை சர்க்கஸில் கோமாளிகளாக்கி பலரையும்  சிரிக்க வைத்து, மக்களின் கவலைகளை மறக்க வைக்கிறது. அவர்களின் துணையையும் அங்கேயே தேடிக் கொடுக்கிறது.ஆனால்....இந்த மனிதன் அந்த நிலைக்கு போகாததால்தான் இந்த கஷ்டம். இவர் படித்து, வேலையில் இருக்கிறானே? நீங்கள் சொல்வது போல் இந்த வடிவப் பெண்கள் அதிகம் பேர் இல்லை என்பதும் உண்மைதான்!

அதனால் என்ன?  அவனுக்கேற்ற ஒரு பெண்ணை உடனே அவன் திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்.


மன்னிக்க வேண்டும் தந்தையே! அதுதான் இன்று இந்த பூமியில் மிக கஷ்டமான வேலை. நல்ல பெர்சனாலிட்டியுடன், பல லட்சம் சம்பளம் வாங்கும் ஆண்களையே  இந்தக்காலப் பெண்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லையாம்! இதில்  இந்த வாமன வடிவினனுக்கு பெண்....என்னை விட்டுவிடுங்கள்..அதோடு படைப்பது மட்டுமே என் செயல். காப்பாற்றுவது தங்கள் தொழில் அல்லவா? இந்த நாரதனுடன் சென்று அவனுக்கான ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து....அவனுக்கு திருமணம் நடக்க அருள் புரிவீராக! நான் சென்று வருகிறேன்.

நாராயண...நாராயண! தேவா! எனக்கும் கொஞ்சம் இந்திர லோகத்தில் வேலை இருக்கிறது. இதோ சென்றுவிட்டு வந்து விடுகிறேன். (பூலோகத்தில் பெண்தேடுவதா! நடக்காத காரியம் ஐயனே! நான் ஜூட்!)

இப்படி ஒரு பெரிய பிரச்னை பூலோகத்தில் இருப்பது தெரியாமல் நான் பாற்கடலில் சுகமாகத் தூங்கி விட்டேனே? இதற்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்ட வேண்டும்.

===============================================================================================
எட்டிய மணிகள்!
தன கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு கணவர் தான் இறந்த பின் தன் மனைவியைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல், தான் சம்பாதித்த ஒரு கோடி ரூபாய் பணத்தையும்  தன்னுடனே புதைக்க வேண்டும் என எண்ணியது எவ்வளவு கேவலமான, தன்னலமான எண்ணம். தான் இறந்தபின் அது நடக்குமா என்று யோசிக்காத அல்ப மனம்

அதைச் செய்வதாக வாக்கு கொடுத்த அந்த மனைவியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? .தேவ ரகசியமாக அதை மனதில் வைத்திருந்த மனைவி, கணவர் இறந்ததும் அழுத கண்ணும், சிந்திய மூக்குமாக நடித்து, அவரின் டைரிகள் என்று கூறி அந்தப் பெட்டியை அவருடன் புதைத்தது அவளது சாமர்த்தியம்!
எந்த மனைவியாவது அப்படிச் செய்வாளா? யாருக்கும் பயன்படாமல் பூமியில் புதைக்கப்பட்ட பணத்தை வேறு ஏதாவது நல்ல காரியத்துக்குப் பயன்படுத்தலாமே?
அவளின் கூடப் பிறந்த தம்பிக்கோ இத்தனை பணமும் போய்விட்டதே என்ற கோபம். யாராவது தோண்டி எடுத்துவிட்டால் பண மொத்தமும் போய்விடுமே என்ற ஆதங்கம்...அதைத் தானே, அக்காவுக்குத் தெரியாமல் எடுக்க அந்த தம்பிக்கு அறிவில்லையோ! 

'பணத்தின்
அருமை தெரியாமல் இப்படி பண்ணி விட்டாயே' என்ற தம்பியிடம் 'போகட்டும் போ. அவர் ஆசையை நிறைவேற்றி விட்டேன்' என்று கூலாகச் சொன்ன அக்காவா பைத்தியக்காரி!
செக்குகளை பெட்டியில் போட்டு புதைத்துவிட்டு, அந்தப் பணத்தை யாரும் எடுக்க முடியாது என்று ராஜாவுக்கே 'செக்' வைத்த புத்திசாலி மனைவியாச்சே அவள்! அவனுக்கு முன்னால் பிறந்த அவள் 'அக்காவா கொக்கா'.....அவனைவிட அறிவாளி ஆச்சே! அவளுக்கு மாலையிட்டு இத்தனைநாள் குடித்தனம் நடத்தி இறந்த அவள் கணவர்தான் முழு முட்டாள்! பணத்தைப் புதைத்து விட்டாயே என்று அவளிடம் சண்டை போட்ட அவள் தம்பி படு முட்டாள்!
ஆங்கிலக் கதையை அழகுதமிழில் எழுதி வழங்கிய ஆசிரியருக்கு பாராட்டுகள் பல! ஆஹா...இரண்டு கதையிலும் ஒரு ஒற்றுமையைக் கண்டுபிடிச்சுட்டேனே...
முதல் கதையில் கதாநாயகன் காதல் பண்ணிய பொண்ணு 'கொக்கு' போல இருந்தாள்!

இந்தக் கதையில் மனைவி, அக்காவான 'கொக்கு'!

VGK 16....ஜாதிப்பூ
VGK 16....ஜாதிப்பூ கதைக்கான பரிசு பெறாத என் விமரிசனம்..

கதைக்கான இணைப்பு....
 http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16.html


புஷ்பே ஷு ஜாதி' என்று பூக்களிலே மிகச் சிறந்த பூவாகப் போற்றப்படுவது ஜாதிப்பூ. அதன் அழகிய தோற்றமும், ஐந்து இதழ்களும், மனம் மயக்கும் அதீத மணமும் அனைவர் மனதையும் கவர்ந்திழுக்கும்.
ஜாதிப் பூவைப் போன்ற மென்மையான  ஒரு அழகிய பெண்ணின் கதையை அருமையாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

ஏன்னா....அந்த பூக்காரப் பொண்ணைப்  பாருங்கோளேன்...புதுசா இருக்காளே? பதினேழு, பதினெட்டு வயசு இருக்குமோ? மூக்கும் முழியுமா ரொம்ப அழகா இருக்கால்லியோ?

ஆமாண்டி...அவகிட்ட கூட்டத்தைப் பாத்தியோ? பாவம்...அந்தக் கிழவி வியாபாரம் இனிமே அம்போதான்.

அழகான பொண்ணுதான்...அதுக்கேத்த கண்ணுதான்..பதினெட்டு வயது பருவ அழகு...பார்ப்பவரை மயங்கச் செய்வதில் ஆச்சரியம் என்ன? அவளது இயற்கையான அழகையும், அதே நேரம் இளைஞர்களிடம் அனாவசியமாகப் பேசாமல் சாமர்த்தியமாக அவர்களிடம் பேசி, நிமிடத்தில் கூடையை காலி செய்த அவள் வேகத்தையும் 'பூக்களைவிட அந்த பூக்காரி அழகு' என்று கதாசிரியர் மிக அழகாக சொல்கிறார்.

மகாலட்சுமி மாதிரி சின்னப் பொண்ணா இருக்காளே? அதான் இள வயசுப் பையன்கள்ளாம் அவகிட்ட பூ வாங்கற சாக்கில சைட்டுன்னா அடிக்கரான்கள்.  பூக்காரம்மா...அந்தப் புதுப் பொண்ணு யாரு? 

எனக்கு தெரியாது தாயி.என் வியாபாரம்தான் போச்சு அவளால.உனக்கு எவ்வளவு முழம் வேணும் தாயி?

இந்தப் புள்ளைகள்ளாம் அவகிட்ட அசடு வழியரான்களே? அந்தப் பொண்ணு எப்படி சமாளிக்கறா?
அதல்லாம் இவங்கல்லாம் அதுங்கிட்ட ஒண்ணும் வாலாட்ட முடியாதும்மா.இன்னா தெகிரியமா பேசும் தெரியுமா? எப்படியோ அவனுங்களை சமாளிச்சு நிமிஷமா கூடையை காலி பண்ணிட்டு போயிடுதும்மா.அது போனாங்காட்டியும்தான் எனக்கு போணியே ஆரம்பமாகுது. உனக்கு எவ்வளவு பூ வேணும் சொல்லு.

ஒரு ரெண்டு முழம் குடு....சாயரட்சை தீபாராதனைக்கு நேரமாச்சு. வரேன்.

ரோஜா  ஒரு அழகிய மலர். பெண்களை ரோஜாவுக்கு உபமானமாகக் கூறுவர் கவிஞர்கள். ரோமானியர்களுக்கு  விருப்பமான ரோஜா மலரின் இதழ்களை தன்  படுக்கையிலும், தரையிலும்  பரப்பி தன் காதலன் மார்க் ஆண்டனியை  வரவேற்பாளாம் எகிப்திய  அழகி  கிளியோபாட்ரா! ரோஜா மாலையாகவும், இறைவனுக்கு அர்ச்சிக்கவும், வாசனை திரவியங்கள், ,அழகு சாதனப் பொருள்களிலும் மிக அதிக அளவில் பயன்படுகிறது.
ஏன்னா....அந்த பூக்காரப் பொண்ணு மாதிரி ஒரு அழகான பொண்ணு நம்ம மதுவுக்கு கிடைச்சா எப்படி இருக்கும்?

நாமளும்தான் ரெண்டு வருஷமா பார்த்திண்டிருக்கோம். ..ஹ்ம்ம்...ஒண்ணும் தகைய மாட்டேங்கறதே? அவனுக்குன்னு ஒருத்தி இனிமேலையா பிறக்கப் போறா? 
அந்தக் கடவுள் என்னிக்குதான் கண் திறக்கப் போறாரோ?

                                                                          
மல்லிகை  வாசமுள்ள ஒரு மலர். அந்த வாசத்தில் மயங்காதவரே  இல்லை.எந்த வயதுப் பெண்ணுக்கும் மல்லிகைப்பூவைத் தலையில் சூடும் ஆசை இல்லாமல் இருக்காது. மல்லிகைப பூவில் இருந்து சென்ட், சோப்புகள், வாசனை எண்ணைகள், ஊதுபத்திகள் அதிக அளவில் உருவாக்கப் படுகின்றன.

வாடாப்பா பேராண்டி...என்ன அந்தப் பொண்ணையே அப்பிடி பாக்குற?

பாட்டி வந்து...அந்தப் பொண்ணு யாரு? தினமும் இங்க பூ விக்க வருவாளா ?

இனி செவ்வாய், வெள்ளி மட்டுதான் வருவாளாமப்பா. 

இல்ல...பாட்டி....வந்து...


என்ன தயங்கி நிக்கற? என்ன விஷயம் சொல்லுப்பா.


பாட்டி...இனி அந்தப் பொண்ணை இங்க பூ விக்க வரவேண்டாம்னு சொல்லிடு.
ஏன்...நீ அவளைக் கல்யாணம் கட்டிக்கப் போறயா?
அப்படித்தான் வெச்சுக்கோயேன்.

ஏன் கண்ணு..நீ உசந்த ஜாதி.அவளோ பூக்காரப் பொண்ணு. நீ எப்படிப்பா அவளைக் கல்யாணம் கட்ட முடியும்? உங்க அம்மா, அப்பா இதுக்கு ஒத்துக்குவாங்களா?

அவங்களை ஒத்துக்க வெச்சு இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஆசீர்வாதம் பண்ணு பாட்டி.

அட...கோவில் மணி அடிக்குது பாரு...நீ நினைச்சது நடக்கும்டா மாப்ளே!

தினமும் தவறாமல் கோயிலுக்கு வரும் பக்தி மிகுந்த அந்த இளைஞன் சிறு வயது முதலே பூக்காரப் பாட்டிக்கு பரிச்சயமானவன். பாட்டியிடம் தன்  படிப்பு, கல்லூரிப் படிப்பு முடித்த கையோடு வங்கி வேலை, நல்ல சம்பளம் என எல்லா விஷயங்களையும் பரிவோடு பகிர்ந்து கொள்பவன்...பாட்டிக்கு ஒரு மழை நாளில் உதவிய கருணை மனம் கொண்டவன்...வயதான இந்தப் பூ விற்கும் கிழவியிடம் அன்புடன் தினமும் பேசிவிட்டு செல்லும் மனிதாபிமானம் கொண்டவன்...

பூக்களிலும் ஜாதி உண்டா என கோபத்துடன்  கேட்டவன்...சிறு வயது முதலே மனிதர்களுள் ஜாதிபேதம் கூடாது என மனதில்  தீர்மானம் செய்தவன்...தான் மணக்கும் பெண்ணின் வீட்டாருக்கு எந்தச் செலவும் வைக்கக் கூடாது என்று நினைக்கும் நல்ல வாலிபன் என்று அவனைப் பற்றி மிகச் சில வரிகளிலேயே நமக்கு சுருங்கச் சொல்லி புரிந்து கொள்ள வைக்கும் ஆசிரியரின் திறமை பாராட்டத் தக்கது.

அப்படிப்பட்ட பையன் தன்  பேத்திக்கு கணவனாக வருவதை எந்தப் பாட்டிதான் விரும்ப மாட்டாள்? அதான் அவனை வாய் நிறைய 'மாப்பிள்ளை' என்று கூப்பிட்டு விட்டாள் என்று எழுதி கதையின் முடிவை சொல்லாமல் சொல்லிவிட்ட ஆசிரியருக்கு பாராட்டு.

சண்பகப்பூ மலர்களுள் மிகவும் மணம் வீசக் கூடியது.பொன் மஞ்சள் நிறத்தில் மரத்தில் பூக்கும் அழகிய  மலர் .வெகு தூரத்துக்கு தன்  வாசம் பரப்பும் இம்மலர் இறை வழிபாட்டுக்கு மிகவும் ஏற்றது.அதிக பலனைத் தரக் கூடியது. இம்மலரிலிருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்படும் 'ஜாய்' என்ற வாசனை திரவியம் (scent) உலகிலேயே  மிக அதிக விலை மதிப்புள்ளதாகும்.

அடி தாமரை....நீ விளையாட்டா  பூ விக்க வந்தது இப்போ என்னாச்சு தெரியுமா?

என்ன பாட்டி ஆச்சு? எனக்கும் ஜாலியா பொழுது போகுது. இரண்டு பேரும் விக்கிறதுல பணமும் கூட வருதே?

அட போடி....உன்னை அந்த ஐயர் வூட்டுப் பையன் கல்யாணம் கட்டிக்க ஆசைப் படறான், அது தெரியுமா உனக்கு?

அடியாத்தி! அப்படியா சேதி.கட்டிக்கிட்டா போச்சு. நாளைக்கு நான் பூ விக்க வரப்போ அவனைக் காட்டிவிடு ஆயா! எப்படி இருக்கான்னு பாத்துப்புடறேன்! அவனை எனக்கு புடிச்சா கல்யாணம் கட்டிக்கிட்டு தயிர் சாதம் சாப்பிட நான் ரெடி!

படிப்பு முடித்து பாட்டி வீடு வந்தவளை, விளையாட்டாக மணமுள்ள பூக்களை விற்க வந்தவளை,அவளது மயக்கும் அழகிலும்,மந்தகாசப்  புன்னகையிலும் மயங்கி, தன்  மனதைப் பறி  கொடுத்து அவளை மனையில் அமர்த்தி மல்லிகை, முல்லை, ரோஜா மலர்களைச் சூடிய மணமகளாக்கி, மங்கள வாத்தியங்கள் முழங்க அவள் சங்குக் கழுத்தில் மங்கல  நாணைப் பூட்டி, தன மனையாளாக்கிக் கொள்ள விரும்பும் மதுவின் ஆசை நிறைவேறி, அவன் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் முடித்து எல்லா நலனும் பெற்று வாழ கதாசிரியருடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்!
VGK15....அழைப்பு

 VGK15....அழைப்பு கதைக்கான எனக்கு மிகவும் பிடித்த பரிசு பெறாத என் விமரிசனம்...
கதைக்கான இணைப்பு....
 http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.html
திருமணத்திற்கு அழைக்கச் சென்ற நண்பரின் அனுபவத்தை மிக சுவாரசியமான ஒரு சிறு கதையாக்கிக் கொடுத்திருக்கிறார் கதாசிரியர்! இந்த சம்பவம் பிள்ளைகள்,பெண்களுக்குத் திருமணம் செய்த ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கண்டிப்பாக நடந்த ஒரு அனுபவமாக இருக்கும்!
பெறுமவற்றுள் யாமறிவது  இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.....குறள் 61

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைப் பெறுவதைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு எதுவுமில்லை.


அந்தப் பிள்ளைகளுக்கு சிறந்த துணைகளைத் தேடித் தேர்ந்தெடுத்து திருமணம் முடிப்பது என்பது இக்காலத்தில் மிகப் பெரிய்ய்ய்ய விஷயம்தான்!
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.....குறள் 751
தகுதி அற்றவரையும் தகுதி உடையவராக ஆக்கும் தகுதி பணத்திற்கு மட்டுமே உண்டு.
'வீட்டைக் கட்டிப்பார்.. கல்யாணத்தைப் பண்ணிப்பார்' என்பது அந்தக்காலப் பழமொழி. ஆனால் இக்காலத்திலோ பணம் இருந்தால் எதுவுமே செய்வது மிகவும்  சுலபம் என்பதை திருமண காண்ட்ராக்டர்கள் மூலம் எளிதில் திருமணத்தை முடித்துவிடலாம் என்பதை ஆசிரியர் மிகத்  தெளிவாகச் சொல்லியுள்ளார்.ஆனால் அழைப்பதற்கு நாம்தானே செல்ல வேண்டும்?
அறுபதைத் தாண்டி சற்று ஆரோக்கியம் குறைந்த ஆசிரியரின் நண்பர் எதையும் திட்டமிட்டுச் செய்வதில் விருப்பமுள்ளவர் என்பதைக் குறிப்பிடும்போதே , ஏற்பாடுகளை எவ்வளவு அழகாகச் செய்து முடித்தார் என்பதையும்  அருமையாக விளக்கியுள்ளார்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்....664

ஒரு செயலை இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்வது யாருக்கும் மிக எளிது:ஆனால் அதை சொல்லியபடி செய்து முடிப்பது மிகவும் கடினம்.


பத்திரிகை நான்கு மாதம் முன்பே எழுதப்பட்டு, திருத்தப்பட்டு, வெளி மாநிலக்காரர்களுக்கு ஒன்றரை மாதமுன்பே அனுப்பப் பட்டதும்,அனுப்பியவர்கள் பட்டியலை சிவப்பு மையால் குறி யிட்டதும் ஒரு திருமணம் முன்னாலேயே எப்படி திட்டமிடப்படவேண்டும் என்பதைமிக அழகாக விளக்குகிறது. .

தம் வீட்டில் திருமணம் நிச்சயிப்பவர்கள் ஆசிரியரின் இந்தக் கதையைப் படித்து அதன்படி செயலாற்றினால் ஒரு சிரமமும் இன்றி திருமணத்தை நடத்தி முடிக்கலாம். அதற்கே ஆசிரியரை ஆயிரம் முறை பாராட்டலாம்.

'எட்டுத் திக்கிலும் கொட்டு முரசே' என்பது போல எட்டு திக்குகளுக்கும் பத்திரிகைகளைப் பிரித்து வைத்துக் கொண்டு,தினம் ஒரு திசைக்கு பத்து வீடுகளாக கொடுத்துவிட்டு வர திட்டமிட்ட நண்பரின் எண்ணம் சரியானதே!
பெற்றாற் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு....58

நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால் பெண்டிர்க்கு இல்வாழ்க்கை பெருஞ்சிறப்பாக அமையும்.
இதன்படி ஒரு நல்ல கணவரான நண்பருக்கு தன்  பெருமையைச் சுட்டிக்காட்டும் விதமாக பளபள பட்டுப் புடவை, அங்கமெல்லாம் தங்க நகைகள்,கொண்டையிலே மல்லிகைப்பூ,கையிலே வெள்ளிக் குங்குமச் சிமிழ்....இப்படி தன்  இல்லத்தரசியை ஒரு அரசியின் கோலத்தில் தன்  நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்கு சூறாவளி சுற்றுப் பயணமாய் அழைத்துக் கொண்டு போய், தான் மனைவியை சிறப்பாக வைத்துக் கொண்டிருப்பதை பெருமையாகப் பறை சாற்ற ஆசைதான்!

ஆனால் பாவம்...அடிக்கும் வெய்யில், அசந்து போன மனைவியின் உடல்நிலை, அடிமனஉற்சாகம் மற்றும்  அலுப்பு....எல்லாவற்றுக்கும் மேலாக அத்திப்பூக்கள் நெடுந்தொடர்...(அத்திப் பூக்கள் தொடரின்  அத்யந்த ரசிகர் போலும் நம் ஆசிரியர்!) ஹ்ம்ம்..பாவம் நண்பர்...அவர் மனைவி சீவி முடித்து சிங்காரித்து.....டிஃபன், காஃபி சாப்பிட்டு  கிளம்புவதற்குள் பாதி நாள் கடந்து விடுவதையும், ஒவ்வொரு வீட்டிற்கும் ஏறி, இறங்கி,லிஃப்டில்,லிஃப்ட் இல்லாத மாடிகளுக்கு கால் வலிக்க ஏறி முழங்கால் வழியை வரவழைத்துக் கொண்டதையும் நண்பர் சொல்வதாக   ஆசிரியர் மிக நகைச் சுவையாகச் சொல்வது ரசமாக உள்ளது!
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வெட்ப மொழிவதாம் சொல்.....643

சொல்லும்போது கேட்பவரைத் தன வயப் படுத்தும் தன்மையோடு, கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவதே சொல்வன்மையாம்.

வேலை மெனக்கெட்டு கூப்பிட வந்தால் அட்சதைகளை டஸ்ட் பின்னில் போட்டு பத்திரிகையைப் பிரிக்காமலே விஷயங்களை விசாரிப்பது, தன்  பெண், பிள்ளைகளின் ஜாதகத்தைக் கொடுத்து வரன் தெரிந்தால் சொல்லச் சொல்வது, தொலைகாட்சி தொடர்களில் மூழ்கி நாம் வந்ததையே இடைஞ்சலாக நினைப்பது....ச்சே..இவர்களுக்கெல்லாம் பத்திரிக்கை கொடுத்து என்ன ஆகப் போகிறது என்ற வெறுப்பை ஏற்படுத்துவதோடு, ஆட்டோ வெயிட்டிங்கில் பணமும் ஏறுவது... இவை எல்லாமே நம்மை அன்புடன் வரவேற்று, உபசரித்து, சாப்பிட ஏதாவது கொடுத்தனுப்பும் அந்த ஐந்து சதவிகித மக்களுக்காகத்தான்!

கதவைத் திறக்கவே யோசிப்பவர்கள், 'இன்னிக்கு  நம்ம தூக்கம் போச்சே' என்று சட்டென்று பத்திரிகையை வாங்கிக் கொண்டு பட்டென்று கதவை மூடிக் கொள்பவர்கள், பத்திரிகையைப் பிரிக்காமலே அதில் பலவும் எழுதும் நண்பர்,வில்லங்கமான வீட்டில் இல்லாத நண்பர், வீட்டிலேயே இல்லாத நண்பர்கள் என்று பலர் வீட்டிலும் ஏமாற்றம் கிடைத்தாலும் மகனின் திருமணம் சந்தோஷமான முதல் அனுபவம் ஆயிற்றே?அத்துடன் பழைய நண்பர்களைக் கண்டு அளவளாவிய மகிழ்ச்சி....இவை தனிதானே?
திருமண மண்டபக் காட்சிகளை நாம் நேரில் பார்ப்பது போல் கதாசிரியர் எழுதியிருப்பது அருமை! அவசரமாக பரிசை வேறு எவரிடமோ கொடுத்துச் செல்பவர்கள், அதிகம் அறிமுகமில்லாதவரின் அரட்டை, பெண்களின் பட்டுப்புடவை மற்றும் நகைகளைப் பற்றியபேச்சு என்று அப்படியே ஒரு கல்யாண மண்டபத்தை நம் கண்முன்னே காட்டிய ஆசிரியருக்கு ஒரு சபாஷ்!
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.....885

நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகை அவர்களிடையே பல துன்பங்களை உண்டாக்கும்.
எந்தப் பெண்ணுக்கும் தன்  பிறந்த வீட்டு உறவுகளை விட்டுக் கொடுக்க முடியாது. அதுவும் நண்பரின் மனைவிக்கோ ஒரே அண்ணா, மன்னி. எத்தனையோ செலவழித்து ஊர் முழுக்க கூப்பிட்டவர்கள் ஒரு நடை மும்பைக்கும் சென்று அவர்களைக் கூப்பிட்டு வந்திருக்கலாம். அந்தக் கோபத்தை மனதில் வைத்து திருமணத்தில் முகம் தூக்கி பகைமை பாராட்டுவது அவரது அண்ணனுக்கும் ஏற்றதல்ல.இப்படிப்பட்ட சின்னக் காரனங்களால்தான் உறவுகளுக்குள் பெரும்பகை உருவாகிறது.
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்....303


யாரிடம் சினம் கொண்டாலும் அதனை உடன் மறந்துவிடல் வேண்டும்.இல்லையெனில் அச்சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
தன் கோபத்தால் இவர்களை எல்லாம் ஒரு ஆட்டம் ஆடவைத்து எல்லோரும் தன காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்ற அல்ப ஆசையே  நண்பரின் மைத்துனர் எண்ணம் என்பதை நம் ஆசிரியர் சரியாகப் புரிந்து கொண்டுவிட்டார். அந்தக் கோபத்தை விட்டு சமாதானம்  ஆகும் மனம் அவரிடம் இல்லையே? இருவரும் அவரவர் நியாயத்தை சொல்லிக் கொண்டிருந்தால்  பகை விலகுவது எப்போது?
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற....95

அடக்கமான பண்பும், இனிய பேசும் திறனும் தவிர ஒருவருக்கு சிறந்த அணிகலன் வேறு இல்லை.
மைத்துனரின் கோபத்தை தணிக்க நம் ஆசிரியர் உடனே அவருக்கு சாதகமாகப் பேசியது பாராட்டுக்குரியது. அவரோ கடுங்கோபத்தில் இருக்கிறார். அவரிடம் எது சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார். தான் சொல்வதே சரி என்று வாதிப்பார்.

அவரை வழிக்குக் கொண்டுவர ஒரே வழி அவர் வழியிலேயே சென்று அவரை வழிப்படுத்துவதுதான். இதைத்தான் மிகச் சரியாகச் செய்த கதாசிரியர், அவர் சண்டை போட்டது நியாயமே என்று கூறி சடாரென்று அவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்ததில் கோபம் தணிந்த மைத்துனர் அவரைப் பாராட்டி, தூக்கி நிறுத்தி, கட்டியணைத்துக் கொண்டார். அங்கு பகை மறந்து உறவுடன் நட்பும் ஏற்பட்டது. தம் காலில் விழுபவரிடம் யாருக்குமே கோபமோ, வெறுப்போ வராதே!
அன்பு ஈனும் ஆர்வமுடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு....74

அன்பு பிறரிடம் பற்றுக் கொண்டு, சிறந்த நட்பு எனும் பெருஞ்சிறப்பை உண்டாக்கும்.
அந்த நேரம் மைத்துனருக்கு தன தங்கையின் கணவரைவிட அன்பில் தன்னை கட்டிப்போட்ட அவரது நண்பர் பெரியவராகத் தெரிந்தார். அவருடன் நட்பு கொள்ளவும் விரும்பினார்.அவருக்கு தங்கையின் கணவரிடம் பகை இல்லை.ஒரு சின்னக் கோபம். அதைக் காட்ட அந்த சரியான நேரத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். காசியாத்திரைக்கு பஞ்சகச்சம் கட்டிவிட அவரும் அவரின் தங்கை கணவருடன் சந்தோஷமாகப் புறப்பட்டார்.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு....106

மாசற்றவரின் உறவை மறக்கவும் கூடாது.துன்பத்தில் துணை நின்றவர் நட்பை மறக்கவும் கூடாது.
தன கணவரும், அண்ணாவும் மகிழ்ச்சியாக இணைந்ததைக் கண்ட நண்பரின் மனைவி ஆசிரியரின் நட்பையும், சமயத்தில் உதவியதையும் எண்ணி கை குவித்து நன்றி தெரிவித்தார்.
பெண்கள் 'கௌரீ கல்யாணம்' பாட, புரோகிதர் 'மாங்கல்யம் தந்துனானேனா'சொல்ல நண்பரின் மகனுக்கும், மணப் பெண்ணுக்கும் திருமணம் இனிதே நிறைவேறியது!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது....45
என்பதற்கேற்ப இரு மனம் ஒரு மனதாகி
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு....  60
என்பதற்கேற்ப சிறந்த மக்களைப் பெற்று நீடூழி வாழ்க!
அட..ஆமாம்...மக்கட் பேறு....ஆசிரியர் எழுதியிருப்பது போல திரும்பவும் நண்பரின் வளைகாப்பு சீமந்த அழைப்பு....அதற்கான சுவாரசியமான நிகழ்வுகள் ....ஆசிரியரின் அடுத்த சிறுகதை...அதற்கு மீண்டும் விமரிசனம்...!

.VGK 9....அஞ்சலை

திரு கோபு சார் கதைக்கான பரிசு பெறாத என் விமரிசனம்....VGK 9....அஞ்சலை

கதைக்கான சுட்டி...

 http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09.html
ஒரு பெண்ணின் மென்மையான தாயுள்ளத்தின் தவிப்பை மிக நுணுக்கமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
அழகிய மாருதி காரும், குடிசைகள் நிறைந்த சேரியின் அழகையும் மிக இயல்பாக வடித்த ஆசிரியரின் ரசனையின் உச்சகட்டம், புழுதி படிந்த கைரேகைகள் அந்தக் காரின் திருஷ்டிப் பொட்டுகளாக தோன்றியது என்ற வர்ணனை!
தான் வேலை செய்யும் வீட்டு எஜமானர் தன வீடு தேடி வந்ததன் அதிர்ச்சியும்,படபடப்பும் அவள் எதிர்க் கடையிலிருந்து அவசரமாக எடுத்து வந்த ஸ்டூலை தன்  புடவைத் தலைப்பால் துடைத்துப் போட்ட காட்சியும்,ஒரு பெரிய மனிதர் தன்  வீட்டுக்கு வந்த காரணம் அறியாத அந்த அப்பாவிப் பெண் சிவகுருவின் தயக்கம் அறிந்து உள்ளே அழைத்ததும் ஒரு சாதாரண ஏழைப்பெண்ணின் பரபரப்பைக் காட்டுகிறது.

ஒரு பெண்,அதிலும் கணவனை இழந்த ஏழைப்பெண், தன்னைத்தேடி ஒரு வசதியான  ஆண்மகன் வந்தால்,அடுத்தவர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயமும் அவள் செயலில் தெரிகிறது.
ஒரு எளிய குடிசை எப்படி இருந்தால் அழகாக இருக்கும் என்பதை அஞ்சலையின் குடிசை அப்பட்டமாக சொல்கிறது. மூலையில் சின்ன சாமி படமும்,அதன் மேல் வைக்கப் பட்டிருந்த புதிய  பூ, முன்னால் போடப்பட்ட கோலம், முத்துப்போல் எறிந்த விளக்கு இவற்றிலிருந்து அஞ்சலை வீட்டை எவ்வளவு சுத்தமாக பராமரிப்பாள்  என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

கயிற்றுக் கட்டில்,லாந்தர் விளக்கு, பனை ஓலை விசிறி இவை அவளது ஏழ்மையின் அளவைக் காட்டுகிறது.எதையும் சுத்தமாக,சுகாதாரமாக வைத்துக் கொள்பவள் அஞ்சலை என்பதை அழகாக விளக்கியுள்ளார் ஆசிரியர். ஒரு ஓலைக் குடிசைக்குள் நாமே சென்று வந்த ஒரு அனுபவத்தை அழகுற காட்டியுள்ளார் கதாசிரியர்.

மண்குடிசை வாசலென்றால் தென்றல் மட்டும் அல்ல,மழலையும் வர மறுப்பதில்லையே? ஆனால் மாடமாளிகைகளுக்கு அதே மழலை எளிதில் வருவதில்லையே? இதுதான் இறைவனின் விளையாட்டு போலும்.

அந்த பேதைப் பெண்ணின் வாழ்வில் விளையாடிய மது அரக்கனை என்ன சொல்ல? குடி குடியைக் கெடுக்கும் என்று அறிவுரை சொல்லும் அரசாங்கமே சாராயம் விற்கத் தடை விதிக்காததால் அஞ்சலையின் கணவன் போன்ற எத்தனை பேர் இதுபோல் உயிரைவிட நேர்கிறது? இந்த மக்களின் நிலையை நினைக்கும்போது கண்கள் தானாக நனைகின்றன.
அஞ்சலை துக்கத்தை மறப்பதே அவளுடைய பிஞ்சுக் குழந்தையின் முகத்தைப் பார்த்துதான். அதையும் விற்றுவிட அவள் மனம் எப்படி ஒப்பும்? கணவனை இழந்து கையில் குழந்தையுடன் தனியாகத் தவிக்கும் ஒரு அபலைப் பெண்ணின் மனநிலையை விளக்கமாக கூறியுள்ளார் ஆசிரியர்.

பட்டணத்துக் காரருக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு எப்படி பெற்ற குழந்தையை விற்க மனம் வரும் ஒரு தாய்க்கு? பணமா... பாசமா... என்றால் ஒரு தாயின் மனம் பாசத்தைத்தான் விரும்பும். பாவம் அஞ்சலை. அவள் நிலை படிப்பவர் கண்களையே கலங்க வைக்கிறது.

கதையின் இடைச் செருகலாக ஒலிக்கும் திரைப் பாடல்கள் கதைக்கு எக்ஸ்டிரா ஃ பிட்டிங்!
ஆரோக்கியமான, துறுதுறுப்பான, அழகான குழந்தையை விரும்பாதார் யார்? அதன் சுட்டித்தனம் சிவகுருவையும் கட்டிப் போட்டதில் வியப்பு என்ன?சிவகுரு அஞ்சலையைக் காரில் தன்னுடன் எங்கு அழைத்துச் செல்கிறார் என்று அறியும் ஆவல் அந்த சேரிப் பெண்களுக்கு மட்டுமல்ல....நமக்கும்தான் தோன்றுகிறது.

அதிலும் ஃ பைவ் ஸ்டார் ஏ .சி. ஹோட்டல், 3 பெட் போடப்பட்ட ரூம்...ஹோட்டலுக்கு அழைத்துவரக் காரணம் என்ன?  நம்மையும் ஏன், எதற்கு என்ற கேள்விகளைக் கேட்க வைக்கிறது, ஆசிரியர் கதையை சஸ்பென்சாகக் கொண்டு செல்லும் இடம்.. ஒருவேளை சீரியலில் வாடகைத்தாய் கதாபாத்திரம் பிடித்த அஞ்சலியிடம் தனக்கும்,மல்லிகாவுக்கும் வாடகைத் தாயாக இருந்து ஒரு குழந்தை பெற்றுத்தர வேண்டுவாரோ சிவகுரு?

அவர் தன்  விருப்பத்தை சொல்லிவிட்டு அவளை முடிவெடுக்கச் சொல்லிச் சென்றபோது, அவர் என்னதான் சொல்லிச் சென்றார் என்ற சஸ்பென்ஸ் தாங்கவில்லை. சிவகுரு சொற்படி நடப்பது பாவமில்லையா, என் கணவனுக்கு துரோகம் செய்வது போல் ஆகாதா என்றெல்லாம் அஞ்சலை எண்ணும்போதும் , குழந்தையுடன் பற்றாக்குறை வாழ்க்கையா அல்லது குழந்தையைப் பிரிந்து வசதியான வாழ்க்கையா? என்று முடிவெடுக்கத் திணறும் போதும் அஞ்சலையின் மனதை, தன் குழந்தையைப் பிரிந்து வாழ முடியுமா என்று நினைத்து வருந்தும் ஒரு ஏழைத் தாயின் மனதை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் கதாசிரியர்.

தனக்கு எப்படியாவது ஒரு மழலை பிறக்காதா என்று நாளும், பொழுதும் தவிக்கும் மல்லிகாவுக்கு, சிவகுரு தூக்கி வந்த அழகான குழந்தையைப் பார்த்ததும் அவளுக்குள்ளிருந்த தாய்மை சிலிர்த்தெழுவதையும், அவள் தானும் குழந்தையாக மாறி முகமலர்ச்சியுடன் தன்னை மறந்து விளையாடுவதையும், அஞ்சலை பெற்ற குழந்தையையே அவளுக்கு அறிமுகப் படுத்தும்போது, அக்குழந்தையைப் பெற்ற அஞ்சலையின்  தாய்மை குமுறுவதையும் மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

தன்  குடிசையில் வறுமையில் வாழ( ட )வேண்டிய தன் பிள்ளை இனி பணக்காரனாக,சீரும், சிறப்புமாக வாழப்போவதை எண்ணி அஞ்சலையின் மனம் மகிழ்ச்சி அடைந்தாலும், அவனைத் தன மகன் எனக் கூறிக் கொள்ள முடியாத வருத்தம் அவள் நெஞ்சில் முள்ளாகக் குத்துவதை ஆசிரியரின் எழுத்துக்கள் அருமையாக எடுத்துக் கூறுகிறது.அதைப் படித்தபோது என் கண்கள் கலங்கிவிட்டது. எந்தத் தாயும் செய்ய விரும்பாத, செய்ய முடியாத செயல் ஆயிற்றே இது?

கணவனை இழந்த அஞ்சலைக்கு இனி பிள்ளையும் உடன் இல்லை என்பதை இலட்சத்தில் இருக்கும் பூஜ்யங்களைபோல  தன்  இன்றைய வெறுமையான இல்வாழ்க்கைக்கு ஒப்பிட்டுப் பார்ப்பதாக சிம்பாலிக்காகச் சொலுகிறார் ஆசிரியர்.


ஒன்றை இழந்தாலே மற்றொன்றைப் பெறலாம் என அஞ்சலை உணர்ந்து கொண்டாலும், தன ரத்தத்திலிருந்து உருவான, தான் பெற்ற செல்வத்தை தினமும பார்க்கலாம்,பேசலாம்,அவனோடு விளையாடலாம் என்ற சந்தோஷத்தினாலேயே அவள் இந்த திட்டத்திற்கு ஒப்புக் கொள்கிறாள்

தன மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது என்பதை அறிந்த சிவகுரு, தன்  உறவினர் குழந்தையையோ, தன்  அந்தஸ்துக்கு சமமானவர் குழந்தையையோ தத்து எடுக்க நினைக்காமல், தன்  கணவனை இழந்து  கஷ்டத்தில் இருக்கும் அஞ்சலையின் நிலையை எண்ணி, வேற்றுமை பாராட்டாமல் சேரிக் குழந்தையானாலும் தன குழந்தையாக வளர்க்க எண்ணிய அவரின் மனம் மிகப் பெரிது. அத்துடன் அஞ்சலிக்கு பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணிவிட்டு, இனி உன் குழந்தை என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டு வராதே என்று சொல்லாமல், மனிதாபிமானத்துடன் தாயையும், சேயையும் பிரிக்காமல் தன்  வீட்டிலேயே வேலைக்கு வைத்துக் கொண்ட அவர் பெருந்தன்மை மேலானது.

என் பிள்ளையைத் தர முடியாது என்று பிடிவாதம் பிடிக்காமல், சிவகுரு சொல்லியவற்றிலுள்ள நல்ல விஷ யங்களை புரிந்து  கொண்டு, தன் கேள்விக் குறியான எதிர்காலத்தையும் மனதில் கொண்டு தன்  மகனை அவருக்கு மகனாகக் கொடுத்த தன்னலமற்ற அஞ்சலையின்  குணம் போற்றத் தக்கது.

சிவகுருவின் பெருந்தன்மை குணம் உயர்ந்ததா, அஞ்சலையின் தன்னலமற்ற தியாக  குணம் உயர்ந்ததா என்பதைத  துல்லியமாக தராசில் நிறுத்து, முள் அங்கோ, இங்கோ நகராமல் இருவருமே சரிசமம் என்பதை மிக அழகான கதையாக எழுதி, அதில் ரசனையும், நயமும்  இணைத்து கலக்கலாக கதை வடித்திருக்கிறார் ஆசிரியர்!


ஆசிரியரால் பெயரிடப்படாத அந்தக் குழந்தை 'சின்னக் கண்ணன்' சீரும், சிறப்புமாக வளர்ந்து வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மை சேர்ப்பானாக.