Thursday 18 September 2014

எல்லோருக்கும் பெய்த மழையில் பரிசு மழையில் நனைந்தேன்!!!


 
 
திரு வை.கோபு அவர்களின் 33வது சிறுகதை விமரிசனத்திற்கு  எனக்கு கிடைத்தது இரண்டாம் பரிசு...
 
கதைக்கான  இணைப்பு...
 
  
என் பரிசு பெற்ற விமரிசனத்திற்கான இணைப்பு...
 http://gopu1949.blogspot.in/2014/09/vgk-33-02-03-second-prize-winners.html


நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை....இது வள்ளுவர் வாக்கு.
அக்குறளில் பாதியை தலைப்பாகக் கொண்டு நம் கதாசிரியர் எழுதிய சிறு கதையில் நல்லவரை அடையாளம் காட்டும் பாங்கு மிக அருமை.

இளம் வயதில் விதவையாவது மிக கொடுமை என்றால் திருமணமான ஓராண்டிற்குள் கணவரை இழப்பது என்பது மனதாலும் நினைக்க முடியாத மகா கொடுமை.

பாவம் அந்த காசாளர் வசந்தி... பெயரில் இருக்கும் வசந்தத்தை தன்  வாழ்வில் தொலைத்து விட்டு, தன்  பெண் குழந்தையின் ஆறாவது விரலில் அதிர்ஷ்டத்தைத் தேடிக் கொண்டிருக்கும் பேதைப் பெண்.
நம் நாட்டில் மூட நம்பிக்கைகளுக்கு அளவில்லாததுபோல அதைப் பின்பற்றுபவர்களுக்கும் குறைவில்லை.

இவளது துரதிர்ஷ்டம்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்ற புகுந்த வீட்டாரின் எண்ணம் ஒருவேளை வசந்தியின் குழந்தை வளர்ந்த பின்பு மாறி அவளையும், குழந்தையையும் ஏற்றுக் கொண்டால் அதுதான் அந்த ஆறாம் விரலின் அதிர்ஷ்டம் எனலாம்.
நல்லவேளையாக அவள் கணவரின் வேலையும், அவளைக் காப்பாற்ற அவளுடைய ஒன்டிக்கட்டைத் தாயையும் அளித்த இறைவனின் கருணையை நினைக்க வேண்டும்.

தாய்க்குப்  பிள்ளையும்,பிள்ளைக்குத் தாயுமாக அவர்கள் மூவரும் ஓரளவு பணக் கஷ்டம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தது புரிகிறது.
வீட்டில் இருந்தால் வேதனையை மறைக்க அலுவலகம் வரும் வசந்திக்கு, காசாளர் பணி அவ்வப்போது சோதனையைக் கொடுத்து விடுகிறதே? பாவம்...கணக்கு டாலி (tally) ஆகாதபோது அவள் கையை விட்டுப் பணம் கட்ட வேண்டும் என்பது வங்கி விதி ஆயிற்றே?

அனுபவசாலிகளையே காலை வாரி விட்டுவிடும் பணி காசாளர் பணி என்பதை நம் ஆசிரியர் சொல்வது மிகப் பொருத்தமானதே!!
வசந்திக்கு என்று இல்லை, மிகவும் பொறுப்பான, திறமையான காசாளர்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது ஒரு வங்கி மேனேஜரின் மனைவியான நான் அறிந்ததே.ஒரு ஐம்பது ரூபாய் குறைந்தாலும் 'அது எப்படி, எங்கே போயிற்று' என்று காசாளரும், மேனேஜரும் மண்டையை உடைத்துக் கொண்டு தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்கு வர ஒவ்வொரு சமயம் நள்ளிரவாகிவிடும். 'ஒரு ஐம்பது ரூபாய்க்கு இந்த பாடா...நீங்களே  சரி பண்ணுவதுதான?' என்று கூட நான் கேட்டதுண்டு.அது ஐம்பதோ, ஐயாயிரமோ சட்டம் ஒன்றுதானே?
அது கிடைக்காவிட்டாலோ ...பாவம் கேஷியரின் பர்சிலிருந்துதான் தர வேண்டும். அதனாலேயே கேஷியர் வேலையில் சேர பலரும் தயங்குவதுண்டு. 
வசந்திக்கு வாழ்வாதாரமான காசாளர் வேலையில் 400 ரூபாய் என்பது அந்த நாளில் பெரும் தொகை ஆச்சே?அவள் சம்பளத்தில் அம்மாதம் அந்தத் தொகை குறைந்தால் அவளுக்கு  என்னென்ன செலவுகளைக்  குறைக்க வேண்டுமோ என்ற கவலை.

மேலதிகாரிகளுக்கோ எப்பொழுதும் போல் மாதக் கடைசி என்று தானே வசந்தி எடுத்துக் கொண்டு நாடகமாடுகிறாளோ  என்ற சந்தேகம்..
வசந்திக்கோ அவளுக்கு கீழே வேலை செய்யும் அஞ்சலையின் பேரில் சந்தேகம்.அதுவும் அவள் இரண்டு நாட்களுக்கு முன் 200 ரூபாய் பணம் கேட்டபோது தான் இல்லை சொன்னதால் எடுத்திருப்பாளோ என்ற ஐயம்.

வசதிக் குறைவானவர்களைப் பார்த்து பணம் அதிகம் இருப்பவர்களுக்கு வரும் இயல்பான சந்தேகம் இது என்பதை அழகாகச் சொல்கிறார் ஆசிரியர்.

இதுதான் மனித மனத்தின் இயல்பு. வசந்திக்கு அஞ்சலை மேல் வந்த அதே சந்தேகம், மேலதிகாரிகளுக்கு வசந்தியின் மேல்.

நம் வீட்டில் ஏதாவது காணாமற்போனால் நமக்கு முதலில் சந்தேகம் வருவது நம் வீட்டு வேலைக்காரர்கள் மீதுதானே? பின்பு அந்தப் பொருளை வேறு எங்காவது நாமே மறந்து வைத்து விட்டுக் கிடைக்கும்போது சுலபமாக அவர்களிடம் 'ஸாரி' என்று சொல்லி விடுகிறோம்.

ஆனால் நம்மால் திருட்டுப் பட்டம் கட்டப் பட்ட அந்த மனிதர்களின் மனநிலையையும், வருத்தத்தையும் நாம் உணர்வதில்லையே? அது பற்றி யோசிக்கிறோமா என்பது கூட சந்தேகம்தான்.

அஞ்சலையின் ஏழ்மை நிலை வசந்திக்கு அவளைப் பற்றி தவறாக எண்ணத் தோன்றியதுடன், அவள் வசந்திக்கு தொலைந்த பணத்தைத் தேட உதவியது கூட நாடகமோ என்றே நினைத்தாள்.
அந்த அஞ்சலையின் உயர்ந்த குணத்தை அவள் மறுநாளே உணர்ந்து கொண்டாளே. அவள் தன் தாலியை விற்று கிடைத்த பணத்தில் கொண்டு வந்தேன் என்றபோது கூட அதை நம்ப மறுத்தது வசந்தியின் மனம். அஞ்சலை ஏழையானாலும் வசந்தி அவ்வப்போது கொடுத்து உதவிய பணத்தை அவளிடம் திருப்பித் தரும்படி கேட்காதபோதும், அவளின் இக்கட்டை உணர்ந்து அந்தப் பணத்தைக் கொடுத்த அவளின் பெருந்தன்மைக்கு முன் காசாளர் வசந்தி செல்லாக் காசாகி விட்டாளே.
 கட்டிய கணவனே சரியில்லாதபோது அவன் கட்டிய தாலி மட்டும் எதற்கு என்று அதனை விற்றுக் காசாக்கியது அஞ்சலையின் தைரியம். அதற்கு பதிலாக ஒரு மஞ்சளைக் கயிற்றில் கட்டி அணிந்து கொண்டது அவளின் பாதுகாப்பிற்காக. இனி அவன் என்னிடம் வம்புக்கு வந்தால் அவனை போலீசில் புகார் கொடுத்து உள்ள தள்ளிப்புடுவேன் என்று சொன்னது அவளின் கோபமும், வெறுப்பும்.
அலுவலகம் சென்ற வசந்தியின் இருப்பிடம் வந்த பெரியவரை, அச்சு அசலான கிராமத்துக் 'குடையாளி'யாக நம் கண்முன் காட்டுகிறார் ஆசிரியர்!

முதல் நாள் தான் வாங்கிப் போன 5000 ரூபாயில் 400 அதிகமாக இருந்ததை சுட்டிக் காட்டிய அக்கிராமப் பெரியவரின் நியாயமும், நேர்மையும் நம்மை வியக்க வைக்கிறது.கிராம மக்களின் இயல்பான பயத்தால், பணத்தை எண்ணாமல் அப்படியே எடுத்துக் கொண்டு சென்றதைத் தன் தவறாகவும் சொல்லி மன்னிப்பு கேட்ட அவரல்லவோ மனிதர்?

தன் நஷ்டத்தை எண்ணி மனம் கலங்கிக் கொண்டிருந்த வசந்தியின் வயிற்றில் பாலை வார்த்த அப்பெரியவருக்கு நன்றி சொல்லி தேநீர் கொடுத்ததும் பொருத்தம்தானே!
அத்துடன் அப்பெரியவர் அஞ்சலையின் நல்ல குணத்தை எடுத்துச் சொல்லி பாராட்டியபோது அஞ்சலையைத்  தானும் தவறாக எண்ணி விட்டதை வசந்தி உனர்ந்து கொண்டாள்.
பொதுவாக நாம் ஒரு தவறு செய்யும்போது அதை நம்முடைய தவறாக இருக்குமோ என்று யோசிப்பது கூட இல்லை. சுற்றி இருப்பவர்கள் மேல்தான் அந்தத் தவறை சுமத்துகிறோம்.

அதுபோல வசந்தியும் தான் தவறு செய்திறோப்போமோ என்று சிறிதும் நினைக்காமல், ஏழை அஞ்சலை  மேல்தானே சந்தேகப் பட்டாள்? ஆனால் இந்தத் தவறுக்குக் காரணம் பணத்தை சரியாக எண்ணாமல் கொடுத்த வசந்திதானே?

ஆனால் வெள்ளை மனம் கொண்ட அஞ்சலையோ தன் தாலியை விற்று வசந்தியின் இக்கட்டைத் தீர்க்க உதவி செய்தாள். அப்பொழுதும் அவள் மேல் சந்தேகம் ஏற்பட்டது வசந்திக்கு.

அந்த கிராமத்துப் பெரியவர் ஒருவேளை பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் இருந்திருந்தால் வசந்தி அஞ்சலையை தவறானவளாகத்தானே எப்போதும் நினைத்திருந்திருப்பாள்.

நேர்மைக்கு இலக்கணமாக வாழும் கிராமத்துப்  பெரியவரும், வறுமையிலும் சிறந்த குணவதியாக வாழும் அஞ்சலையும், வாராவாரம் பரிசுப் பணத்தை அள்ளித் தந்து எங்களை உற்சாகப் படுத்தும் நம் கதாசிரியரும் இருக்கும்  நம் நாட்டில் மழை பெய்யெனப் பெய்வதோடு வளத்தையும் அள்ளித் தரும்!