Sunday, 23 March 2014

ஆஹா...முதல் பரிசு!

பதிவுலக ஜாம்பவான் திரு கோபு சார் அவர்களின் அமுதைப் பொழியும் நிலவே கதைக்கான  விமரிசனத்துக்கு எனக்குக் கிடைத்த நம்பமுடியாத முதல் பரிசு!
கதைக்கான இணைப்பு
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html
என் விமரிசனத்துக்கான இணைப்பு

http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08-01-03-first-prize-winners.html#comment-form


அமுதைப் பொழியும் நிலவே...


அலுவலக விடுமுறையை ஒரு அருமையான தொடர் பேருந்தில் அமர்ந்து பகல்  கனவுடன் அனுபவிக்கும் ஒரு சராசரி மனிதரின் நிலையை அழகாக,ரசனையோடு கதாசிரியர் விளக்கியவிதம் அருமை.

ஒரு ஆண்  அலுவலகம் விடுமுறை என்றதும்  வீட்டில் மின்சாரமும் இருக்காது என்பதால் ஜாலியாக பஸ் சவாரி செய்யமுடிகிறது. அதே ஒரு பெண் இப்படி சொல்ல முடியுமா? அல்லது செல்ல முடியுமா?

எத்தனை வயதானாலும் சில சின்னச்சின்ன  ஆசைகள் அனைவருக்குமே இருக்கும் என்பதை ஹீரோவின் தொடர் பேருந்து பயண ஆசையாகக் கூறுகிறார் ஆசிரியர்.


தொடர் பேருந்துக்கு ஆசிரியர் கொடுத்த விளக்கங்கள் சற்றே முகச் சுளிப்பை ஏற்படுத்தினாலும், ரசிக்க வைத்தது.

கதாநாயகனின்  நீண்டகால  ஆசையை நிறைவேற்ற, அழகாக பேருந்து வந்து பக்கத்தில் நின்றால் பழம் நழுவிப் பாலில் விழுந்த கதைதானே! சட்டென்று ஏறி பட்டென்று ஒரு இருக்கையைப் பிடித்து விட்ட  நாயகன் காற்று வாங்க ஏறிக் கண்ணயர்ந்து ஒரு கவிதை நடையில் கனவும் கண்டு... அதை நமக்கு கச்சிதமாகச் சொல்லிவிட்டார் கதாசிரியர்!

பேருந்து பயணம் ஒரு இனிமையான அனுபவம்தான்  கூட்டமோ, தள்ளுமுள்ளோ இல்லாவிட்டால்.அந்தப் பயண நேரத்தில் நாம் பலரின் பேச்சு, செய்கைகள் இவை காணவும்,கேட்கவும் சுவையானவை. அதிலும் மொபைலில் சிலர் சத்தமாகப் பேசும்போது அவர்கள் வீட்டு விஷ யம்,வியாபார விஷ யம்,அலுவலக விஷ யம் என்று அத்தனையும் தெரிந்து கொள்ளலாம்.

பேருந்தில் ஏறும் சில காதல்,புது கல்யாண ஜோடிகளின் நெருக்கங்கள் நம்மை  நெளிய வைக்கும்! அதிலும் மல்லிகை மணக்க ஏறிய மயக்கம் தரும் சின்னப் பெண்களைக் கண்ட நம் கதாநாயகரும் பாவம்...அந்த நினைவிலேயே உறங்கிவிட்டார்! மனித மனத்தின் எண்ணங்கள்தான் கனவாக வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் நம் கதாநாயகனும்  ஒரு பெண் நம் பக்கத்தில் உட்கார்ந்து நம்முடன் பேசிக் கொண்டே வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியிருப்பார் போலும்!

குளிர்ந்த அமுதைப் பொழியும் வான்மதியாக ஒரு பெண் அருகில் வந்து உட்கார்ந்து இரண்டு வார்த்தைகள் பேசினாலே போதுமே, ஆண்களின் ஆசை மனம் அவளைத் திருமணம் செய்துகொண்டு ஹனிமூனுக்கே சென்றுவிடுவார்கள்! இது சராசரி  ஆண்களின் உள்மனம்.
அழைப்புக் கடிதத்தில் அவள் பெயரையும், வயதையும் பார்த்து அவளுக்கு கனிந்த பருவம்,அழகிய உருவம்,அரைத்த சந்தன நிறம், மிடுக்கான உடை, துடுக்கான பார்வை....மனத்துக்குள் அவளை வர்ணித்து அப்படியே பதிந்து கொண்டுவிட்டான் நம் ஹீரோ! கனவில் தோன்றும் கற்பனை எண்ணங்கள் இந்தக் கதைக்கு களமாக இருந்து கனம் சேர்க்கின்றன.

'காதல் பெண்ணின் கடைக்கண் பார்வையில் காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்' என்று மகாகவியே கூறியிருக்க, சாதாரண ஆண்மகன் எம்மாத்திரம்?

எழிலான பெண் ஒருத்தி அழகு தேவதையாக அருகில் அமர்ந்து வளைந்து,குழைந்து பேசினால் அந்த ஆண் கற்பனைக் குதிரையில் ஏறி ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்து விடுவானே! அதைத்தான் நம் கதாநாயகனும் செய்கிறான்! அமுதா போக வேண்டிய இடத்துக்கு ஆட்டோவில் என்ன,அவளை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு போகக் கூட தயார் நம் கதாநாயகன்!
ஒரு ஆண்  ஒரு அழகிய இளம் பெண்ணைக் கனவில் கண்டாலும்  எப்படியெல்லாம் கற்பனை செய்து அவளைக்  கண  நேரத்தில் காதலித்து கல்யாணம் செய்து கொள்வதுவரை யோசித்து விடுகிறான் என்பதை ஆசிரியர் அருமையாகக் கூறியுள்ளார்.

தன்னுடைய வீட்டு விலாசம், செல் நம்பரோடு தானும் அவளுடைய கைப்பையில் புகுந்து கொண்டான் என்பதைக்  கூறிய ஆசிரியர், பாடல் வரிகளைக் கூட அவன் தனக்கு சாதகமாக்கிக் கொண்டதாகக் கூறுவது சுவாரசியமான கற்பனை!

இதுவரை முன்பின் தெரியாத ஒரு பெண்,வெல்டிங் பற்றி ட்ரைனிங் எடுக்க வந்திருப்பவளை வெட்டிங் பண்ணிக் கொள்ளலாமா  என்று ஆசைப்படும் ஆண்மனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்!

ஒரு அழகு தேவதையை அருகில் அமர்த்தி இத்தனை நேரம் ஆராதித்த நம் கதாநாயகனின் அருகில் 'இதோ வந்திட்டேன்யா'என்று சொல்லாமல் சொல்லி அமர்ந்தவளோ வாழ்ந்து முடித்து இன்று அங்கம் தளர்ந்த ஆச்சி அமுதா! 


பளபள அமுதாவை பகல் கனவில் கண்ட கதாநாயகனுக்கு அருகில் பல்லெல்லாம் போன அமுதாபாட்டி உட்கார்ந்தால் எப்படி ரசிக்க முடியும்? இந்த அமுதாவும் ஒருகாலத்தில் அழகாகத்தானே இருந்திருப்பாள்?  இவளைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள எத்தனை பேர் வரிசையில் இருந்தார்களோ? யாருக்குத் தெரியும்?

'அமுதும்,தேனும் எதற்கு?நீ அருகினில் இருக்கையிலே எனக்கு?' என்று அழகி அமுதா பக்கத்தில் இருந்த போது 'லாலாலா' பாடிய  மனது, அவளுக்காக எதையும் செய்யத் தயாராயிருந்த கதாநாயகனின் காதல் மனம், கிழவி அமுதா கட்டி அணைக்காத குறையாக மேலே இடித்தபோதும்,லுக் விட்டபோதும், பாவம் வெறுத்து போயிருக்கும்! 
இளமை சாசுவதமல்ல ...ஒரு நாள் முதுமை வந்தே தீரும். இளமையின் அழகை ரசிக்கும் நம்மால் முதுமையை ரசிக்க என்ன,சகித்துக் கொள்ளக்கூட முடியவில்லை. ஏன் அவள் பெயரை அமுதா என்று கூவிய பெண்ணின் குரல் கூட நம் கதாநாயகனுக்கு கர்ண கடூரமாக கேட்கிறதே! இதுதான் மனித மனத்தின் விகாரம்.

கற்பனையிலும் ,கனவிலும் நமக்குப் பிடித்தது கிட்டும்: ஆனால் நடைமுறை யதார்த்தம்தான் உண்மையானது: மாறாதது.

அமுதா என்ற ஒரு சின்னப் புள்ளியை வைத்து விட்டு அதைச் சுற்றி இம்மி பிசகாமல், வளையாமல்,கோணலில்லாமல் ஒரு அழகிய நிலவு போன்ற வட்டமான வண்ணக் கோலத்தை வடிவமைத்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்!

கதையுடன் சேர்ந்த ஒளிப்படக் காட்சிகள் கதைக்கு மேலும் சுவாரசியம் சேர்க்கின்றன. இரண்டு ஸ்மைலிகள்  காதலித்துக் கொண்டிருப்பது அழகான காட்சி!
 
 
 


Saturday, 22 March 2014

புலியின் வாலைப் பிடித்தேன்!!


டைகர் டெம்பிள்...பாங்காக்
 
பயணங்கள்  நமக்கு  மன  உற்சாகத்தை  அளிக்கிறது.   நம்   பொது  அறிவை  விரிவடையச்  செய்கிறது. பல  ஊர்கள்,  பல   நாடுகள்,  அந்நாட்டு  மக்கள்,  அவர்களின்  பழக்க  வழக்கங்கள்  ஆகியவற்றைப்   பற்றிய  விபரங்களையும்  நாம்  அறிய  முடிகிறது. நான்  எப்பொழுதும்  எந்த  நாட்டிற்கு  சென்றாலும்,  அந்நாட்டின்  வித்யாசமான  சுற்றுலா  இடங்களை  சென்று  பார்த்து  வருவேன்.  அது  போன்று  சமீபத்தில்  சிங்கப்பூரிலுள்ள  என்  மகன்  வீட்டிற்குச்   சென்றபோது  பாங்காக்   சென்றிருந்தோம்.  அப்போது    அருகிலுள்ள  காஞ்சனபுரியில்  உள்ள    'டைகர் டெம்பிள்'  என்ற  இடத்திற்கு  சென்று  வந்தோம். 
அது  ஒரு  புலிகளின்  சரணாலயம்  எனலாம்.  ஆனால்  அங்குள்ள  புலிகள்  கொடூரமில்லாத, மென்மையான  குணமுள்ளவை.  எப்படி  என்று  ஆச்சரியமாக  இருக்கிறதா?   அதுதான்  அந்த  இடத்தின்  சிறப்பு.  அதனால்தான்  அவ்விடம்  ஆலயம்  எனப்படுகிறது.


பழமையும்,  புதுமையும்  இணைந்த  தாய்லாந்தின்  தலைநகரமான  மன்னராட்சி  நடைபெறும்  பாங்காக்  ஒரு  அழகான  நகரம்.  மன்னரின்  அலங்கார  மாளிகை,  புத்த  மடாலயங்கள்,  தாய்லாந்தின்  சிறப்பான  ஸ்பா  மற்றும்  மசாஜ்  நிலையங்கள்,  இவற்றோடு  நம்  மாரியம்மன்  கோவில்,  பிரம்மா,  கணபதி  ஆலயங்கள்,    மிதக்கும்  சந்தைகள்,    வானளாவிய  மால்கள்  என்று  நம்மை   கவர்ந்து  இழுக்கின்றன. 
 பாங்காக்கிலிருந்து  சுமார்  150  கிலோமீட்டரில்  அமைந்துள்ள  காஞ்சனபுரி  என்ற  இடத்தில்  அமைந்துள்ளது  டைகர்  டெம்பிள் . இங்குள்ள   புலிகளை   நாம்  தொடலாம்:  அனைத்துக்  கொள்ளலாம்; iஅவற்றுடன்  புகைப்படம்  எடுத்துக்  கொள்ளலாம்:  அவற்றிற்கு  பாலூட்டலாம்;  அவற்றுடன்  விளையாடலாம்!
இந்த  டைகர்  டெம்பிள்  1994ம்  ஆண்டு  வாட்  பா  யன்னசம்பன்னோ என்ற  புத்த  மடாலயம்  அப்பாட்  ப்ரா  (Abbot  Phra)  என்ற  பிட்சுவால்  ஆரம்பிக்கப்பட்டது.  மடாலயம்  ஒரு  வனவிலங்குகள்  சரணாலயமாகவும்  மாறியது  எப்படி?ஒருநாள்  ஒரு  சிறிய  காட்டுக்  கோழி  அடிபட்டு  மடாலயத்துக்கு  வர  அங்கிருந்த  பிட்சுக்களால்  பராமரிக்கப்பட்டது.  அதனைத்  தொடர்ந்து  மயில்கள்,  காட்டுப்  பன்றிகள்  என்று  பல  மிருகங்கள்  ஒவ்வொன்றாய்  வர  மடாதிபதிகளும்  அவற்றை  அன்பாய்ப்  பராமரித்தனர். ஆதரவு  காட்டி  உணவளித்தனர்.   1999ம்  ஆண்டு   பிப்ரவரி  மாதம்,   வேட்டைக்காரர்களால்  ஒரு  தாய்ப்புலி  இறந்துவிட்டது. காயமடைந்த  அதன்   குட்டியை  பக்கத்து   கிராம மக்களிடம்  கொடுத்து  அதன்  தோலை  உரித்து  வாங்கிக்   கொண்டு அவர்களுக்கு  பணம்  கொடுப்பார்களாம்  அந்த  விலங்கு  வேட்டைக்காரர்கள். அதனைக்  கொல்ல   மனமில்லாத  இரக்கமுள்ள  கிராமத்தார்  அதனைக்  கொண்டு  வந்து  மடாலயத்தில்  விட்டனர்.  பிட்சுக்கள்  எத்தனையோ  அன்பாகப்  பராமரித்தும்  அந்த  புலிக்குட்டி  ஜூலை  மாதம்  இறந்து  விட்டது. 

அதன்  பின்  கிராம  மக்கள்  தாய்ப்புலி  கொல்லப்பட்டு  ஆதரவில்லாமல்  இருந்த  பல  புலிக்  குட்டிகளை  மடாலயத்தில்  ஒப்படைக்க,  அவை  பெரிதாகி  குட்டிகளைப்  போட்டு  இனப்பெருக்கமும்  செய்தன.  அன்பான  புத்த  பிட்சுக்களிடம்  வளர்ந்த  புலிகளும்  பூனைகளைப்போல்  மிகச்  சாதுவாக  விளங்கின.  முதலில்  அவற்றிடம்  பயந்த  மடத்தினர்  பின்  சகஜமாகப்  பழக  ஆரம்பிக்க,  இதனைக்  கேள்விப்பட்டு  ஆச்சரியப்பட்ட  மக்கள்  இந்த  அதிசயத்தைக்  காண  வர  ஆரம்பித்தனர்.  இப்படி  உருவானதுதான்  டைகர்  டெம்பிள். அன்பில்  வயப்படாத  விலங்கு  உண்டா?  அங்கு  வந்த  புலிகளும்  அன்பான  பிட்சுக்களிடம்  வளர்ந்ததால்   மூர்க்க  குணம்  இன்றி  வளைய  வருகின்றன.

ஒவ்வொரு  புலிக்கும்  ஒரு  வாலண்டியர்  உண்டு.  கழுத்தில்  சங்கிலி  போடப்பட்ட  புலிகளை  அவர்களே  அழைத்து  வருவர்.  கிட்டத்தட்ட  20  புலிகளை  ஒரே  நேரம்  காணும்போது  மனம்  சற்று  பதறுகிறது.  அவை  புத்த  பிட்சுக்களுடன்  சாதுவாக  நடை  போடுகின்றன;  அவர்  சொல்வதைக்  கேட்டு  நடக்கின்றன. அவற்றின்  உருவத்தைக்  காணும்போது   நம்  மீது பாய்ந்து  விடுமோ   என  அச்சம்  ஏற்படுகிறது.


அவை  யாரையும்  எதுவும்  செய்யாது  என்று  அவர்கள்  உறுதி  செய்து  நம்மை  அவற்றைத்  தொட்டுக்கொண்டு,  அவற்றின்  மீது  சாய்ந்து  கொண்டு,  படுத்துக்  கொண்டு  என்று  பல  போஸ்களில்  புகைப்படம்  எடுத்துக்  கொள்ள அனுமதிக்கின்றனர். நாம்  அவற்றின்  அருகில்  சென்றாலும்,   தொட்டாலும் அவை  எதுவும்  செய்யாததுடன்  நமக்கும்  பயம்  தெரியாதது  ஆச்சரியமாக  உள்ளது. நாங்களும்   அவற்றுடன்  பல  புகைப்  படங்கள்  எடுத்துக்  கொண்டோம்.  என்னதான்  வாலண்டியர்கள்  அருகில்  இருந்தாலும்,  அவை  வாலை   வீசும்போதும்,  முகத்தை  சட்டென்று  திருப்பும்போதும்  நடுங்கி  விட்டேன்.   ஆனாலும் புலியின்  வாலைப்  பிடித்தது  ஒரு  வித்யாசமான  அனுபவம்தான்!


இவை   தவிர  குட்டிப்  புலிகளுக்கு நாமே ஃ பீடிங்  பாட்டிலில்  பால்  கொடுக்கலாம்:  அவற்றுடன்  நீரில்  குளிக்கலாம்:  விளையாடலாம்!  பூனைக்  குட்டிகளைப்  போல  அவை   அழகாக விளையாடுகின்றன.  ஒவ்வொன்றிற்கும்  தனிப்பட்ட  பணம்  செலுத்த  வேண்டும்.  புலிகளைத்தவிர  பல  மிருகங்களுக்கும்  அங்கு  உணவு  அளிக்கப்படுகிறது.  எல்லா  புலிகளுக்கும்  தனித்தனி  குகைகள்  உண்டு.


புலிகளுக்கு  போதை  மருந்து  கொடுக்கப்படுவதாலேயே அவை சாதுவாக இருப்பதாக   சில  அமைப்புகள்  புகார்  செய்ய,  2008ம்  ஆண்டு  ABC   சேனலின்  செய்திப்  பிரிவினர்  அங்கு  சென்று  மூன்று  நாட்கள்  கண்காணித்து  அப்படி  எதுவும்  இல்லை  என  உறுதியாக்கினர். கொடூரத்  தன்மையில்லாத  சாதுவான  புலிகளை   உருவாக்குவதே  எங்கள்  குறிக்கோள்  என்கின்றார்  மடாதிபதி   அப்பாட் !


இங்கு   அமைந்துள்ள புத்த  ஆலயத்தில்  80  கிலோ  எடையுள்ள   தங்கத்தாலான  புத்த  விக்கிரகம்  காட்சி  அளிக்கின்றது.  புனிதமான  போதிமரம்  புத்த  பெருமானுக்கு  ஞானம்  கிடைத்ததன்  அடையாளமாக  இங்கு  நடப்பட்டுள்ளது.  புலிகள்  இயற்கையாக    வாழ  இங்கு  குளங்களும், அருவிகளும்' தீவுகளும்  அமைக்கப்  பட்டுள்ளன.


இங்கு  செல்லும்  சுற்றுலா  பயணிகளுக்கு  சில  நிபந்தனைகளும்  உண்டு.  சிகப்பு  மற்றும்  ஆரஞ்சு  கலர்  ஆடைகளோ,  கால்கள்   தெரியும்  குட்டைப்  பாவாடைகள்,  கையில்லாத  உடைகள்,   சலசலவென சப்தம்  போடும்  உடைகள்,  வாசனை  திரவியங்கள்  இவை  அணிந்து  வரக்  கூடாது.  நேரம்  காலை  12  மணி  முதல்  3.45  வரை.  நுழைவுக்  கட்டணம்   கிட்டத்தட்ட  1000  ரூபாய்கள்.  புலிகளின்   பராமரிப்புக்கென அங்குள்ள  கடைகளில்,  டீஷர்ட்கள் ,  கீ  செயின் என்று  பல  பொருட்கள்  விற்கப்படுகின்றன.   நன்கொடைகளும் பெறப்படுகிறது.

அருகில்   அமைந்துள்ள தாய்லாந்து,  பர்மா  'டெத்  ரயில்வே'  (death railway)  யையும்  கண்டு  வரலாம்.  க்வாய்  நதியின்  மீது  அமைந்துள்ள  இந்த  தண்டவாளம்  1943ல்  இரண்டாம்  உலகப்  போரின்  சமயம்  உருவாக்கப்பட்டது.  ஜப்பான்,  பர்மாவை  தன் ஆட்சியின்  கீழ்க்  கொண்டுவந்து,  தாய்லாந்தையும்  பர்மாவையும்  இணைக்க  ஒரு இருப்புப்பாதை  அமைக்க  முடிவு  செய்தது  ஜப்பான். அதில் ஆஸ்த்ரேலியா, டட்ச், பிரிட்டிஷ், இந்தியா, நியூசிலாந்து , கனடா, அமெரிக்கா  உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கு   மேற்பட்ட சிறைக் கைதிகளை  பலவந்தமாக  ஈடுபடுத்தியது.


இந்த மனிதாபிமானமற்ற  செயலில்  கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்   பசியினாலும்,அதிக வேலையினாலும்  அங்கேயே  விழுந்து  இறந்துபோக  அதனாலேயே  அவ்விடத்திற்கு  அப்பெயர்  உண்டானது.   பல  சமாதிகளையும்  அங்கு  காண  முடிகிறது.  அவர்களின்  நினைவு  நம்  மனதை  என்னவோ  செய்கிறது.  இதனை  நினைவுறுத்தும்  ம்யூசியம்  ஒன்றும்  அங்குள்ளது.   தற்சமயம்  ஒரேஒரு   ரயில்  மட்டுமே  அங்கு  இயங்கி  வருகிறது.

அருகிலுள்ள  ஃ ப்ளோட்டிங்   ரெஸ்டாரண்டில்  தாய்  உணவுகளையும்  ருசிக்கலாம்!

பாங்காக்கிலிருந்து  காஞ்சனபுரிக்கு  பஸ்  அல்லது  டாக்சிகளில்   செல்லலாம்.  பாங்காக்  செல்பவர்கள்  வித்யாசமான  இந்த  டைகர்  டெம்பிளையும்   சென்று  பார்த்து,  ரசித்து  அழிந்து  வரும்  புலி  இனத்திற்கு  நம்மாலான  பொருள்  உதவியை  செய்து    வித்யாசமான  அனுபவத்தையும்  பெற்று  வரலாம்.

Monday, 17 March 2014

"பதிவுலக பிதாமகர் திரு கோபு சார் அவர்களது தளத்தில் எனக்கு கிடைத்த பரிசு...!"
பல வித்யாசமான,விறுவிறுப்பான,விதவிதமான பதிவுகளை எழுதி பதிவுலகத்தை தன்பால் ஈர்த்து, அதில் போட்டிகளும் வைத்து வென்றவர்களுக்கு கைநிறைய பரிசு கொடுத்து மகிழும் பதிவுலக ஜாம்பவான் திரு கோபு  சார் அவர்களது தளத்தில் நான் எழுதிய  விமரிசனத்திற்கு இரண்டாம் பரிசு கிடைத்ததை மிக்க பெருமையுடன் எண்ணி மகிழ்கிறேன்.

அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கதையின் பெயர் 'ஆப்பிள் கன்னங்களும்.... அபூர்வ எண்ணங்களும்....!'
கதையின் இணைப்பு இதோ

என்னுடைய இரண்டாம் பரிசு பெற்ற விமரிசனம்இது ஒரு கிளுகிளு காதல் கதை!
ஆனால் ஒருதலைக் காதல் கதை!
ஒரு பெண் யதார்த்தமாகப் பழகுவது அவளது  நல்ல மனம்! 
அதை அவளுடன் பழகும் ஆண்  காதலாக 
எடுத்துக் கொள்வது அவனுடைய  இயல்பு குணம் !
என்னதான் ’அண்ணன்-தங்கை’  என்று நினைத்துப் பழகினாலும் இத்தனை 'டா'க்களா? ! அது கொஞ்சம் ஓவராகவே தெரிகிறது!


சின்ன வயதில் பழகும் குழந்தைகளுக்குள் ஆண் ,பெண் என்ற பேதமோ, வித்தியாசமோ தெரிவதில்லை. வளர்ந்த பின்பே மனம் களங்கப்படுகிறது.
இருவரும் பிறந்தது முதலே ஒன்றாகப் பழகியதால் ஜெயஸ்ரீ விகல்பமில்லாமல் பழகுகிறாள்.  

அவள் மனம் சுத்தமாகத்தான் இருக்கிறது.


ஏன்..சீமாச்சுவின் மனதிலும் காதல் தோன்றவில்லை, அவள் உள்பாவாடைக்கு நாடா கோர்த்துத் தரும்வரை! ஒரு நல்ல நண்பனாக, சகோதரனாகத்தான்  இருக்கிறான்.சிறு வயதில் நோஞ்சானாக இருந்த ஜெயஸ்ரீ வயதுக்கு வந்ததும் பளபளவென மெருகேறி ஜொலித்ததை ஆசிரியர் அழகாக வர்ணித்திருக்கிறார்! 


பருவம் அடைவதைப் பற்றி ஒன்றும் அறியாத அப்பாவியான சீமாச்சு ..... பாவம்! அவனுக்கு அதைப் பற்றிச் சொல்ல யாரும் இல்லை. பொதுவாக அந்தக் காலத்தில் எந்த பையனுக்கும் இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.நோஞ்சானாக அவள் இருந்தபோது ஈர்க்கப்படாத அவன் மனம் அவள் 'பளபள, தளதள' என்று  ஆனதும் காதல் வயப்பட  ஆரம்பித்த வாலிப உணர்வை பாயிண்ட், பாயிண்டாக எழுதியிருக்கிறார் கதாசிரியர்!


'ஆப்பிள் போன்ற கன்னங்கள், அங்கங்கே  மேடுபள்ளங்கள்' என ஒரு இளம்பெண்ணின் அங்க அழகை சாண்டில்யன் போல இளமை ததும்ப  விவரித்திருக்கிறார் ஆசிரியர்!


ஜிகினாஸ்ரீயின் அழகை அப்படியே கண்ணில் பார்த்து மனதில் பதித்து, அங்க லாவண்யங்களை வரைந்த  சீமாச்சு, நறுக்கிய  ஆப்பிளை அவள் படத்தின் கன்னத்தில் வைத்து கடித்து சாப்பிட்டதை அவனது காதலுடனான காமத்தை வெளிப்படுத்துவதை ரசமாக விவரித்திருக்கிறார் கதாசிரியர்!சீமாச்சுவுக்கே தன்  தகுதிக்கு அவள் தன்னைக் காதலிப்பாளா என்ற சந்தேகம் ஏற்பட்டு, அவளைத் தன்னைக் காதலிக்கத் தூண்டவே அவளைப் படமாய் வரைந்தான். ஆனால் அதற்குள் அவள் திருமணம் நிச்சயமாகிவிட்டதே? அவன் இந்த விஷயத்தை ஜெயஸ்ரீயிடம் சொல்லியிருந்தால் அவள் அவனை விட்டு விலகியிருப்பாள்.தையல்காரர் சொன்ன அவளுடைய காதலன் விஷயம், அவளோடு கூடவே இருக்கும் சீமாச்சுவுக்கு தெரியாதது வியப்பாக உள்ளது. எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளும் ஜெயஸ்ரீ சுரேஷ் பற்றியும், தன்  திருமணம் பற்றியும் சொல்ல மறந்து விட்டாளா அல்லது சொல்ல விரும்பவில்லையோ? சீமாச்சு மனதில் அவள்மேல் காதல் இருக்கும் என்பதை அவள் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை என்பது அவளது  நல்ல மனத்தைக் காட்டுகிறது.அவளுக்கு தன்மேல் ஈடுபாடு   இல்லை என்பதைத் தெரிந்துகொண்டதாலேயே அவனுக்கு தான் வரைந்த படத்தை அவளிடம் கொடுக்க முடியவில்லை. ஆனால் அவனைத் தவறாக நினைக்காத ஜிகினாஸ்ரீ அனைவரிடமும் அவன் திறமையைப் புகழ்ந்ததுடன், சுரேஷிடமும் அவனைப் பற்றி உயர்வாகச் சொல்லியிருக்கிறாள்.சீமாச்சுவை திருமணம் முடியும்வரை தன்னுடன் இருந்து உதவி செய்ய வேண்டும் என்றும், நீதான் என்னுடைய சகோதரன் என்றும் ஜிகினாஸ்ரீ சொன்னது அவள் அவனிடம் கொண்டிருந்த பரிசுத்தமான அன்பையே காட்டுகிறது. ஆணி சீமாச்சுவின் நெற்றியில் பட்டு வலித்தபோது, தன்  காதல் நிறைவேறாமல் போனதால் ஏற்பட்ட வலியை உணர்ந்தான் என்பதையும், வாஷ் பேசினில் கை அலம்பியதோடு, அவள் மேலிருந்த ஆசை, காதலையும் சேர்த்து அலம்பி விட்டதையும்  ஆசிரியர் சிம்பாலிக்காக எழுதியுள்ளார்!
ஒரு பெண் ஆணுடன் பழகும்போது களங்கமில்லாமல், சுத்தமான மனதுடன்தான் பழகுகிறாள். அவள் கொஞ்சம் உரிமை எடுத்துப் பழகினால், இயல்பான இனக்கவர்ச்சியால் ஒரு ஆண்தான் முதலில் காதல் வயப் படுகிறான்.

அவளை தன்  சகோதரி போன்றோ, தோழி போன்றோ எண்ணாமல், அந்தப் பெண் தன்னைப் பற்றி எப்படி நினைக்கிறாள் என்பதைப்பற்றியும் யோசிக்காமல் அவள் உடன் பிறந்த பாசத்துடன் பழகினாலும், அவளைக் கட்டாயப்படுத்தி தன்னைக் காதலிக்கத் தூண்டும் பல திரைக் கதைகளை நாம் காண்கிறோம். 


பிடிக்காத பெண்ணின் பின்னாலேயே துரத்தி, துரத்தி அவள் நிலையைப் பற்றி சற்றும் எண்ணாமல் தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் கதாநாயகர்கள்தான் இன்று சினிமாவில் அதிகம். அந்தப் பெண் நிறையப் படித்திருப்பாள், பணக்காரியாக இருப்பாள்... ஆனால் இவனோ படிப்பறிவில்லாமலோ, தாதாவாகவோ வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பான். அதுதான் உண்மையான காதல் என்று முடியும் திரைப்படம்!


இந்தக் கதையிலும் ஜிகினாஸ்ரீ சீமாச்சுவிடம் வித்யாசமே இல்லாமல் பழகியதைக் காதல் என்று எடுத்துக் கொண்டு அவளைக் காதலித்த சீமாச்சு பாவம்.... ஒரு அப்பாவி! அவனுக்கு ஒரு நல்ல பெண் மனைவியாக அமையவும், ஜிகினா...இல்லை...ஜெயஸ்ரீயும்,சுரேஷும் மணம் முடித்து நீண்ட நாள் நல்வாழ்வு வாழவும் வாழ்த்துக்கள்!கதையின் ஆரம்பத்தில்  காணப்படும் குண்டு ஆப்பிளும்,கொழுகொழு கன்ன குட்டியும் சூப்பர்!!


Thursday, 6 March 2014

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

உலக மகளிர் தினம் மார்ச் 8ம் தேதியன்று எல்லா நாடுகளிலும் கொண்டாடப் படுகிறது. உலகப்பெண்கள் தம் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள,ஆண்களுக்கு சமமான தகுதிகளைப் பெற போராடி அவற்றைப் பெற்ற நாளே மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.