Monday, 2 June 2014

மூன்றாம் பரிசு பெற்ற என் விமரிசனம்....

 திரு வை.கோபு சார் அவர்களின் 'ஏமாற்றாதே...ஏமாறாதே...!' சிறுகதைக்கு நான் எழுதிய விமரிசனத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது.

அவரது கதைக்கான இணைப்பு....

 http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18.html

என் விமரிசனம் பரிசு பெற்றதற்கான இணைப்பு...

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18-03-03-third-prize-winner_31.html

ஏமாற்றாதே...ஏமாறாதே...!

ஏமாற்றுபவன் விரைவில் ஏமாறுவான் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாகக் கூறும் சிறுகதை. வயதான தேங்காய் விற்கும் கிழவி தேங்காய்களை விற்க ஆயத்தம் செய்வதை அழகாக எழுதுவதில் நம் ஆசிரியரின் தனித் தன்மை தெரிகிறது.
 

'அப்பனே...பிள்ளையாரப்பா.....நல்லபடி இன்னிக்கு தேங்காய் வியாபாரம் ஆக அருள் பண்ணுப்பா.'
 
இறைவனைய்த் தொழுது தன்  வியாபாரத்தை ஆரம்பித்த கிழவிக்கு, இளமையில் பொசுக்கும் வெய்யிலிலும் 150 காய்கள் வரை தனியாகவே கொண்டு வந்தவள் இன்று பாவம் 50 காய் கூட தூக்கிவர முடியாமல் கஷ்டப்படுவதும்,எப்போ படுக்கலாம் என்று உடல் தளர்வடைவதும் முதுமையின் சாயல்களாக ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.யாரும் முதுமையை வெல்ல முடியாதே?
 


அவளுக்கு தேங்காய் விற்பதில் ஏதும் பெரிதாக லாபம் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும் வயதாகிவிட்டதே என்று வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்காமல், தன்
குடும்பத்திற்கு தான் உழைத்து ஏதாவது பண உதவி செய்யவேண்டும் என நினைக்கிறாளே,அவளின் அந்தப் பெரிய மனதை சிறப்பாகக் கூறியுள்ளார் கதாசிரியர்.
 


கிழவிக்கு தள்ளாமையோடு கண் பார்வையும் மங்கி, கணக்கு வழக்கும் புரியாமல் கிழிசல் நோட்டு,செல்லாத நோட்டு, அழுக்கு நோட்டு இத்துடன் அளவில் வித்தியாசமில்லாத ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய் சில்லறைக் காசுகள்....கிழவிக்குத்தான் எத்தனை பிரச்னைகள் என்று அவளின் பரிதாப நிலையை பட்டியலிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர்.
 


'காய் வாங்கிட்டு போங்க சாமி' என்று வலிய கூப்பிடும் கிழவிக்கு தன்னிடம் இருக்கும் காய்களில் கொஞ்சமாவது வியாபாரம் ஆகுமா என்ற ஆசை...டிப்டாப்பாக காய் வாங்க வந்த கனவானுக்கோ 'எப்படி காயை விலை குறைத்து வாங்கலாம்' என்ற எண்ணம்....இவ்வளவு வயதான,தன தாயின் வயதில் இருக்கும் கிழவியிடம் பேரம் பேசி 7 ரூபாய்த் தேங்காயை 61/2 ரூபாய்க்கு வாங்கியதோடு, ஒன்று அதிகமாக வேறு எடுத்துக் கொண்ட  மகிழ்ச்சி (அநியாயம்)....அவரின் சாமர்த்தியமான பேரத்தை அருமையாகச் சொல்லும் ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
 


அவரிடம் பாக்கிப் பணத்தைக் கொடுத்துவிட்டு'சரியா போச்சா சாமீ'என்று கேட்ட அவளின் வெள்லை மனதையும், முதல்  போணி ஆனதற்காக தேங்காய்களைச் சுற்றி பணத்தை பையில் போட்டுக் கொண்டதையும், அந்தக் காட்சிகளை  கண்ணெதிரே பார்ப்பது போல தத்ரூபமாகக் கூறியுள்ளார் ஆசிரியர்.
 


இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அரசமரப் பிள்ளையார் மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.
 
 

பணம் படைத்தவர்கள் தம் வண்டிக்குப் போடும் பெட்ரோலுக்கும், காலுக்குப் போடும் செருப்புக்கும், அணியும் ஆடைகளுக்கும் ஆயிரக் கணக்கில் செலவழிப்பார்கள். ஆனால் பரிதாபமான ஏழை  வியாபாரிகளிடம் மட்டுமே அவர்கள் ஜம்பம் சாயும். ஐந்து ரூபாய்க்கு ஒரு முருங்கைக்காய் வாங்கிவிட்டு, ஒரு சின்ன முருங்கைக் காயை கொசுறாக வாங்கிச் செல்பவர்கள் பலர். 
 


அந்தத் தெருவோர முதிய வியாபாரிகள் எத்தனை தடுத்தாலும் ...ஹூஹூம்...அனாயாசமாக எடுத்துச் செல்வதைப் பார்க்கும்போது ரொம்ப பாவமாக இருக்கும். இந்த பேரம் இள வயது வியாபாரிகளிடம் பலிக்காது என்பதை ஆசிரியர் சொல்லாமல் சொல்கிறார்!  'ஒரே விலை','கறார் விலை' என்றால்தானே அவர்களும் பிழைக்க முடியும்?
 


காய்கறிகளை ஷேர் மார்க்கெட்டுக்கு இணையாகச் சொல்லியிருக்கும் ஆசிரியரின் கருத்து அவரது எழுத்துத் திறமைக்கு ஒரு நல்ல சான்று.
 


சரியான எடை, நியாயமான விலை சொல்பவரிடம் நாம் பேரம் பேசாமல் வாங்கும்போது சந்தோஷத்தில் அவரே நமக்கு சற்று அதிகமாகவே எடை போட்டுக் கொடுப்பார். மனத்தின் இந்த மாண்பை மிகச் சரியாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
 


தன் நெடுநாள் பிரார்த்தனையை நிறைவேற்ற தேங்காய் வாங்கியவர், 'அன்றே குறைந்த விலைக்கு தேங்காய் வாங்கி உடைத்திருக்கலாமே' என்று எண்ணுவது எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறது? அவர் அன்றே வேண்டுதலை நிறைவேற்றாவிடினும் பிள்ளையார் அவரை இன்றுவரை நல்ல நிலையில்தானே வைத்திருக்கிறார்? அதை நினைத்துப் பார்க்காமல், இப்படியும் ஒரு மனிதரா என்றுஅந்தப் பிள்ளையாரே மனம் வருந்தியிருப்பார்! கடவுளுக்கு செய்யவே லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் மனிதர்களை என்ன சொல்வது?
 


உச்சிப் பிளையார்...உன்னை இவ்வளவு உயர்வாக வாழ வைத்துள்ள எனக்கே கணக்கு பார்க்கிறாயே?

கீழ் பிள்ளையார்......நல்ல வேளை உடைத்த தேங்காயைப் பொறுக்கிக் கொண்டு போகாமல் விட்டாயே!

சுற்றுப் பிள்ளையார் 1....வயதான கிழவியிடம் பேரம் பேசி...அதிலும் குறையா!
 
 சு.பி.2....'எளியாரை வலியார் வாட்டினால்  வலியாரை தெய்வம் வாட்டும்.!
 
  சு.பி.3....ஏழைகளுக்கு கொடுக்க மனமில்லாத சின்ன மனதுள்ள மனிதன்!    சு.பி.4....தன்  கையால் உழைத்து சாப்பிட விரும்பும் கிழவி உன்னைவிட மேலானவள்!

சு.பி.5....பணம் அதிகமாகும்போது பண்பு குறைந்து விடுகிறதே!

சு.பி.6....ஏழைகளின் சிரிப்பில்தான் தெய்வங்களாகிய நாங்கள் இருக்கிறோம் என்பது தெரியவில்லையே! 

சு.பி.7....என்னை உள்ளன்புடன் வணங்கி தினமும் வியாபாரம் செய்யும் அந்தக் கிழவிக்கும் உனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது!

சு.பி.8....லாப நஷ்டக் கணக்கு பார்த்து வேண்டுதலை நிறைவேற்றுவது பக்தியல்ல!

சு.பி.9....அரசன் அன்று கொல்லும்...தெய்வம் நின்று கொல்லும்.

சு.பி.10..ஹா...ஹா...ஹா...பசி வந்து விட்டதா? சீக்கிரம் வீட்டுக்கு போய் சாப்பிடப்பா!
 
பிள்ளையாருக்கு உடைத்த அத்தனை தேங்காய்களும் நல்லதாக இருக்க சமையலுக்கு உடைத்த தேங்காய் மட்டும் அழுகுவானேன்? பாவம்...அவர் மனைவி அது எப்படிப்பட்ட தேங்காய் என்று கூட யோசிக்காமல் அதன் அழுகல் இளநீரைக் கணவருக்கு கொடுத்து....அதைத் துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவர் பட்ட பாடு....பிள்ளையார் அவரின் தவறை அப்பவே சுட்டிக் காட்டிவிட்டாரே? அழுகல் தேங்காய் மூடியில் அந்த பாவப்பட்ட கிழவியின் முகம் தெரிவதாகவும்,12  பிள்ளையார்களும் சேர்ந்து அவரை ஏளனமாகப் பார்த்து சிரிப்பது போலும் ஆசிரியர் எழுதியிருப்பது சூப்பர்! 
 
 
எளியோரையும்,ஏழைகளையும் துச்சமாக எண்ணி ஏமாற்ற நினைத்தால் நமக்கு மேலுள்ள தெய்வம் நமக்கு அதற்கான தண்டனையை சரியான சமயத்தில் கொடுப்பார் என்பதை மிக அழகாக, அற்புதமாக, தனக்கே உரிய சிறப்பான பாணியில் எழுதி,  உணர்த்தியுள்ள ஆசிரியருக்கு பாராட்டுக்கள் பல.