Tuesday, 5 February 2019

#ஆலயதரிசனம்

மங்களகிரி ஶ்ரீபானகல நரசிம்மர்

தனக்குப் பிறந்த மகனைப் பார்த்து மனம் கலங்கி நின்றான், அரசன் பரியாத்ரா.உடலின் அத்தனை பாகங்களும் அளவுக்கு அதிகமான வளர்ச்சியும்,அவலட்சணமும் கொண்டு பிறந்திருந்தான் மகன் ஹ்ருச்வச்ருங்கி. வளர்ந்ததும், தன் உடல் நிலை கண்டு வருந்திய அரசகுமாரன், பல திருத்
தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து, தன் குறைகளை நீக்கிக் கொள்ள எண்ணி,யாத்திரை கிளம்பினான்.
பல்வேறு ஆலயங்களைத் தரிசித்து இறுதியாக,மங்களகிரி எனும் புனிதமான தலத்திற்குச் சென்று மனதை ஒருமுகப்படுத்தி கடுந்தவம் புரிந்தான். உடல் அழகைப் பெற்றான். எனினும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க விரும்பாத ஹ்ருச்வச்ருங்கி, தன் தவப்பயனாக தன்னை ஒரு யானையாகவும் பின் பெரிய மலையாகவும் மாற்றிக் கொண்டான். அம்மலையே கிழக்குத் தொடர்ச்சி மலையில், 'பானகநரசிம்ம
சுவாமி'ஆலயம் அமைந்துள்ள மங்களகிரி.

இவ்வாலயத்தை தரிசித்தாலே நம் பாவங்கள் தவிடுபொடியாகும் என்கிறது தலபுராணம்.
தோடாத்ரி எனப்போற்றப்படும் மிகப் புனிதமான இத்தலம் மகாவிஷ்ணு தானே சுயம்புவாகத் தோன்றிய எட்டு ஷேத்திரங்களுள் ஒன்று.மற்றவை ஶ்ரீரங்கம், ஶ்ரீமுஷ்ணம், நைமி
சாரண்யம்,புஷ்கரம்,சாலகிராமம், வெங்கடாத்ரி, நாராயணாஸ்ரமம்.


கிருத யுகத்தில் தம் சுதர்சனத்தால் நமுசி என்ற அரக்கனை வதம் செய்த நரசிம்ம சுவாமி இங்கு சுதர்சன நரசிம்மராக் காட்சியளிக்கிறார்.
கீழிருந்து 360 படிகள் ஏறிச் சென்றால், யானை போன்று அமைந்த இம்மலையில்,யானையின் வாய்ப்பகுதி போன்று தோற்ற
மளிக்கும் இடத்தில் பானக நரசிம்மர் ஆலயம் துவஜஸ்தம்பத்துடன் காட்சி தருகிறது.
உள்ளே அமைந்துள்ள  சிறு சன்னதியில் தானே சுயம்புவாக 15செ.மீ. அளவில் பெரிதாகத்
திறந்தபடி, நரசிம்மரின் வாய்
மட்டுமே உள்ளது.அதனைச் சுற்றிலும் நரசிம்மரின் முகம் போன்று வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்ட  இவருக்கு நைவேத்தியம் பானகம் மட்டுமே. பக்தர்களால் காணிக்கையாகத் தரப்படும் பானகம், ஒரு சங்கினால் நரசிம்மரின் வாயினுள் ஊற்றப்படுகிறது. சுவாமி பானத்தைக் குடிப்பது போன்று தொண்டையிலிருந்து'களக், களக்'
என்ற சத்தம் ஏற்பட்டு, சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வந்து நின்றுவிடுகிறது. மீதியுள்ள பானகம் வெளியே வழிய ஆரம்பித்துவிட. அது பிரசாதமாக வழங்கப்படுகிறது. நாம் எவ்வளவு பானகம் நிவேதிக்கிறமோ. அதில் சரிபாதி மட்டுமே சுவாமியால் அருந்தப்படுவது ஓர் அதிசயம்.இதைக் காணும்போதே மெய்சிலிர்க்கிறது. இத்தனை பானகம் கீழே சிந்தினாலும் ஒரு எறும்பு கூட காணப்படாதது அதிசயம்!


அங்கிருந்து 50 படிகள் ஏறிச் சென்றால் மேலே சிறு சன்னதியில் மகாலட்சுமி சுயம்பு வடிவாகக் காட்சி தருகிறாள். வேண்டிய வரங்களை அள்ளித் தருபவளாம் இவ்வன்னை!அருகிலுள்ள  உண்டவல்லி குகைப்பாதை கிருஷ்ணா நதிக்கரைக்கு செல்வதாகக் கூறப்படுகிறது.
மேலும் சில படிகள் ஏறிச் சென்றால் மலையில் அமைந்துள்ளக்ஷீர
விருட்சம் (பால்மரம்),நாரதரின் வடிவமாகக் கூறப்படுகிறது. இந்த மரத்தை தரிசித்து பக்தியோடு வழிபடும் பெண்களுக்கு,
பிள்ளைப்பேறு ஏற்படுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.


ஒவ்வொரு யுகத்திலும் இதேபோன்று நடந்துள்ளதாக தலபுராணம் மூலம் தெரியவருகிறது. கிருதயுகத்தில் அஞ்சனாத்ரி என்ற பெயரில் தேனும், துவாபரயுகத்தில் மங்களாத்ரி என்ற பெயரில் பாலும்,திரேதாயுகத்தில்
தோடாத்ரி, முக்தாத்ரி என்ற பெயரில் நெய்யும்  இதேபோல் நிவேதிக்கப்
பட்டதாம். கலியுகத்தில் மங்களகிரி என்ற பெயரில்  பானகம் நிவேதிக்கப்படுகிறது.


கிருதயுகத்தில் பாற்கடலிலிருந்து தோன்றிய மகாலட்சுமியை திருமால் மணந்துகொள்ள விரும்பியபோது,
தேவர்கள் இத்தலத்தில் ஒரு புஷ்கரணியை உண்டாக்கினார்கள். உலகின் புனிதமான நதிகளின் நீரை அதில் நிரப்ப, அதில் மகாலட்சுமி நீராடி, வைகுண்டம் சென்று,
திருமாலைக் கரம் பிடித்தாளாம். அந்தக் குளம் இன்றும் 'லட்சுமி புஷ்கரணி'என்ற பெயரில் அதில் நீராடும் பக்தர்களின் பாவங்களைக் களைகிறது.
திரேதாயுகத்தில் ஸ்ரீராமர் முக்தி
யடைய விரும்பியபோது, இத்தலம் வந்து தொழுத பின்பே வைகுண்டம் சென்றாராம். அதனால் இத்தலம் தோடாத்ரி, முக்தயாத்ரி என அழைக்கப்பட்டதாம். அச்சமயம் ஆஞ்சநேயர் தானும் ஸ்ரீராமருடன் வைகுண்டம் வர அனுமதி வேண்ட,
ராமர் ஹனுமானை கலியுகம் முடியும் வரை இத்தலத்தில் இருந்து உலகை ரட்சிக்கும்படிஆணையிட்டதால்,
இத்தலத்தின் காவல் தெய்வமாக  ஆஞ்சநேயர் அருள் செய்து கொண்டிருக்கிறார்.


துவாபர யுகத்தில் பஞ்ச
பாண்டவர்கள் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியுள்ளார்கள். மங்களாத்ரி என வழங்கப்பட்ட இம்மலையில் இருந்து சில மைல்கள் தூரத்திலேயே இந்திரகீல பர்வதம் என்ற மலையுள்ளது. அங்குதான் அர்ச்சுனன், சிவனை நோக்கி தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்றதாகக்
கூறுகிறது புராணம்.


மலையடிவாரத்தில் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இடது மடியில் லட்சுமியைத் தாங்கியபடி பொற்கவசத்தில் அற்புதக் காட்சி தருகிறார், பிரகலாதவரதர். ஆலயத்துள் மகாலட்சுமி, சீதா-ராம லட்சுமணருக்கு தனிச் சன்னதிகள் உள்ளன.தங்ககருடவாகனமும்,
வெள்ளி ஹனுமந்த வாகனமும் கண்கவர் அழகுடன் காட்சி தருகின்றன.
கிழக்கு திசையிலுள்ள பிரதான கோபுரம் காலி கோபுரம் எனப்படுகிறது. வித்யாசமாக உயர்ந்து தோற்றமளிக்கும் இக்கோபுரம்  தென் இந்தியா
விலேயே மிக உயரமான  கோபுரமாகும். 153 அடிஉயரமும்,
49 அடி அகலமும் கொண்டு,11 நிலைகளுடன் உயர்ந்து கிழக்கு மேற்காக அமைந்துள்ள இவ்வாலய கோபுரத்தின் அமைப்பும்,கட்டடக் கலையும் நம்மை வியக்க வைக்கின்றன.


இவ்வாலயத்திலுள்ள தக்ஷஜமாவர்த்த சங்கு,பகவான் கிருஷ்ணர் உபயோகித்தது எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசி அன்றும் அந்த சங்கு வெளியில் எடுக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப் படுமாம். அன்று மட்டுமே பக்தர்கள் அச்சங்கை தரிசிக்க முடியும்.


பல்குன மாதத்தில் (பிப்ரவரி-மார்ச்) பதினொரு நாட்கள் பிரம்மோத்ஸவம் கொண்டாடப் படுகிறது. இதனை முதலில் நடத்தியவர் யுதிஷ்டிரரே! கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னன், தன் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஏழு நாட்கள் கொண்டாட ஆசைப்பட,கிருஷ்ணர் அந்தப் பொறுப்பை தர்மரிடம் ஒப்படைத்தாராம். பிரத்யும்னனின் பிறந்த நாள், பல்குன சுத்த சப்தமி. அதற்கு முதல் நாள் சஷ்டியில் ஆரம்பித்து பிரம்மோத்ஸவத்தை
11 நாட்கள் கொண்டாடினார் தர்மர். அதுவே இன்றுவரை தொடர்கிறதாம். இது தவிர ஸ்ரீராம நவமி, ஹனுமத் ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி ஆகியவை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
யுகயுகமாய் மக்களின் பாவங்களைப் போக்கி,முக்திக்கு வழிகாட்டும் பானகல நரசிம்ம சுவாமியின் ஆலயத்திற்கு ஒருமுறை சென்று தரிசித்தால், நாமும் பிறவிப் பயனைப் பெறலாம்;பிறவாப் பேறும் அடையலாம்.


மங்களகிரி ஆலயம் ஆந்திராவில் விஜயவாடாவிலிருந்து 17 கி.மீ.
தூரத்தில் உள்ளது.
#ராதாபாலு

No comments:

Post a Comment