Wednesday, 29 July 2020

நவகுஞ்சரம்


மகாபாரதத்தில் வரும் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்ட பறவை நவகுஞ்சரம்.
ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது.
சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால்,
யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் கூடிய விலங்கு எப்படி இருக்கும்?
அதுதான் நவகுஞ்சரம்.
‘நவ’ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது. ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர்.
ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனன் மலை மீது தவம் செய்துகொண்டிருந் தார்.
அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர், அர்ஜுனன் முன் தோன்றியதாக வருகிறது.
தவத்திலிருந்து கண் விழித்த அர்ஜூனன், முதலில் நவகுஞ்சரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து திகைத்தார்.
பின்னர் அதன் கையில் தாமரைப் பூவைப் பார்த்தார்.
வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் சேர்ந்த அதன் உடலமைப்பைப் பார்த்து, ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார்.
அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.
'மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. உலகமோ எல்லையற்றது' என்பதை உணர்ந்தார் அர்ஜுனன்.
இதுவரை பார்த்திராத ஓர் உயிர் இந்த உலகில் இருக்கலாம் என்றும் நினைத்தார்.
தன்னைச் சோதிப்பதற்காக இந்த உருவத்தில் வந்திருப்பது கிருஷ்ணன்தான் என்று தெரிந்துகொண்டு, எடுத்த வில்லை கீழே போட்டுவிட்டு வணங்கினார்.
ஒடிஷாவில் விளையாடப்படும் கஞ்சிபா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும், அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிஷாவில் வரையப்படும் ஓவியங்களில் நவகுஞ்சரம் பல வகைகளில் வரையப்படுகிறது.
நவகுஞ்சரத்தின் உருவம் பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
அதன் கையில் இருக்கும் நீலச் சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.