Thursday, 24 November 2022

வடுவூர்.. கோதண்டராமர் கோயில்

 






வடுவூர்.. கோதண்டராமர் கோயில்
ஸ்தல வரலாறு :-
இந்த ஊருக்கு வடுவூர் என்ற பெயர்க்காரணமே சுவாரஸ்யமானது. சேரர் மற்றும் தொண்டை மண்டலத்தார் என பெரும் படையை எதிர்த்து கரிகால சோழன் வெற்றி கண்ட வெண்ணிப்பறந்தலைப் (தற்போது கோவில்வெண்ணி) தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது.
இந்த போரில் வெற்றி கண்ட கரிகால சோழனது வீரர்கள் இந்த ஊரில் தங்கி இளைப்பாறி, விழுப்புண் ஆற்றிச் சென்றனர்.
வடுக்களைப் பெற்ற போர்வீரர்கள் தங்கி சென்ற ஊர் என்ற பொருளில் வடு + ஊர் = வடுவூர், அழகுமிக்க, இளமையான ஊர் எனும் பொருளில் வடிவு +ஊர் என அழைக்கப்படுகிறது.
அந்த காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மகிழங்காடு, வெகுளாரண்யம் என்றும், பாஸ்கர ஷேத்திரம், தக்ஷிண அயோத்தி, ஏகாதசி கிராமம் என பல்வேறு பெயர்களும் உண்டு என்கிறார்கள்.
இந்த ஊர் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள். ஒரு காலத்தில் தஞ்சை அரசர்களால் ஓர் ஏகாதசி தினத்தன்று வித்வான்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வடுவூரை ‘ஏகாதசி கிராமம்’ எனவும் அழைப்பர்.
முனிவர்களின் வேண்டுகோள்
இதிகாச நாயகனான ராமன், தந்தை தசரதனின் ஆணையின்படி 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அடர்ந்த கானகத்தில் அவர் நடமாடி வந்தபோது, அங்குள்ள முனிவர்கள் அவரை அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர்.
அவதார நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ராமன் முனிவர்களை சமாதானப்படுத்தி மேற்கொண்டு செல்ல தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். அதற்கு முனிவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ராமன் என்ன செய்வதென்று சிந்தித்தார். முடிவில் தன் கையாலேயே தன்வடிவத்தைத்தானே விக்ரகமாக செய்து தனது ஆசிரமத்து வாசலில் வைத்துவிட்டு உள்ளே சீதையுடன் இருந்தார்.
முனிவர்கள் மறுமுறை ராமனை தரிசிக்க வந்தபோது, ஆசிரமத்து வாசலில் அழகெல்லாம் ஓர் உருவாய் திரண்ட வடிவழகுடன் கூடிய ராமன் செய்த விக்ரகத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றார்கள். அப்போது அவர்கள் ராமனிடம் இந்த தண்ட காரண்யத்தை விட்டு செல்லக்கூடாது என்று மீண்டும் வேண்டிக்கொண்டனர்.
அப்போது ராமன் நான் வேண்டுமா?
அல்லது ஆசிரமத்து வாசலில் உள்ள எனது அர்ச்சை உருவம் வேண்டுமா?
என்று கேட்டார். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்து இருந்த முனிவர்கள் அந்த திவ்ய விக்ரகத்தையே விரும்பினார்கள். உடனே விக்ரகத்தை முனிவர்களிடம் கொடுத்த ராமன் அங்கே எழுந்தருளிவிட்டார்.
திருக்கண்ணப்புரத்தில்
அந்த விக்ரகத்தை திருக்கண்ணப்புரத்தில் ராமர் சன்னிதியில் பிரதிஷ்டை செய்து நீண்டகாலம் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் திருக்கண்ணப்புரம் பெருமாளை பாடிய குலசேகர ஆழ்வார், இந்த ராமனை மனதில் கொண்டு, தனது பெருமாள் திருமொழியில் ‘மன்னுபுகழ் என்ற எட்டாம் திருமொழியில், சிலை வளைத்தாய், சிலைவலவர், ஏமருவுஞ்சிலை வலவா, வளையவொரு சிலை அதனால், ஏவரி வெஞ்சலை வலவா’ என பாடியுள்ளார்.
ஸ்ரீ சவுரி ராஜனாகிய கண்ணபிரான் எழுந்தருளியிருக்கும் திருக்கோவிலில் கிளைச்சன்னிதியில் ராமன் இருந்ததால் இப்பதிகத்தை அவர்பாடினார். இந்த ராமர் விக்ரகம் ஒரு காலத்தில் அங்கிருந்து அகற்றப்பட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள தலைஞாயிறு என்ற ஊரில் மரத்தடியில், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன் விக்ரகங்களுடன் மண்ணுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய மன்னரின் கனவில், பெருமாள் சென்று தான் தலைஞாயிறு அருகே மண்ணுக்கடியில் புதையுண்டு கிடப்பதாகவும், அதை வெளியில் எடுத்து கோவில்கட்டி, ஆராதனை செய்யும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விக்ரகங்களை மண்ணில் இருந்து வெளியே எடுத்தார்.
அப்போது அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, சிலைகளை அங்கிருந்து எடுத்துச்செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே லட்சுமணன், பரதன், சிலைகளை மன்னர் அவர்களிடம் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி, ஸ்ரீ கோதண்டராமர், சீதை, அனுமன் சிலைகளை பல்லக்கில் எடுத்துக்கொண்டு வந்தார். அந்த சிலைகளை தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய எண்ணி கொண்டு வரும் வழியில் வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது.
வடுவூரில் விக்ரகங்கள் 
அங்கு தங்கி இளைப்பாறி, விக்ரகங்களை வடுவூர் கோவிலில் வைத்து இருந்தார். இந்த எழிலார்ந்த விக்ரகங்களை கண்ட அவ்வூர் மக்கள் அவற்றை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மன்னரிடம் கேட்டுக்கொண்டனர். விக்ரகங்களை மன்னர் மீறி எடுத்து சென்றால்,
தாங்கள் அனைவரும் உயிரை மாய்த்து கொள்வதாக கூறினர். உடனே மன்னனும் மனமுவந்து அந்த விக்ரகங்களை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். பின்னர் லட்சுமணன் விக்ரகத்தையும் புதிதாக செய்தனர்.

Sunday, 3 July 2022

காசி யாத்திரை

<காசி யாத்திரை...இந்த வார்த்தையை எல்லா திருமணங்களிலும் நாம் கேட்டிருக்கிறோம்...அதை பார்த்து, அதில் பங்கு கொண்டு ரசித்திருக்கிறோம்! மாப்பிள்ளை திருமணத்தன்று காலை கையில் தடி, விசிறி, பக்தி புத்தகம், காலில் செருப்பு சகிதம் காசிக்கு யாத்திரை கிளம்பிப் போவதாகவும், பெண்ணின் தந்தை அவரிடம் தன்  பெண்ணை மணந்து கொண்டு இல்லறத்தைக் கடைப்பிடித்து  பின்பு மனைவியுடன் இணைந்து காசி யாத்திரை செய்யலாம் என்று சொல்வதாக ஐதீகம்.

என் திருமணத்திலும் இந்த சடங்கு நடை பெற்றது.ஆனால் நாங்களோ அடுத்த வருடமே  எங்கள் திருமண நாள் அன்று காசியில் யாத்திரை செய்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.அச்சமயம் என் வயது 19. திருச்சியில் வங்கியில் பணிபுரிந்த என் கணவருக்கு பதவி உயர்வுடன் மாற்றல் கிடைத்தது.எங்கு தெரியுமா! சப்த மோக்ஷ புரியில் ஒன்றான ஸ்ரீக்ருஷ்ணன் பிறந்த மதுராவுக்கு! எங்களுடன் இருந்த என் கணவரின் 80 வயது தாத்தாவுக்கு காசிக்கு சென்று காரியங்கள் செய்ய ஆசை. அவருடன் சென்ற நாங்களும் (எனக்கு மாமனார் இல்லாததால்) பித்ரு காரியங்களை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்பு என் மாமியார்  காலமானபின் நாங்கள் மீண்டும் காசி யாத்திரை செய்து வர முடிவெடுத்து கடந்த 2014ம் ஆண்டு சென்று வந்தோம். எங்களுடன் என் மைத்துனர், ஓர்ப்பிடியும், நாத்தனார், அவள் கணவரும் சேர்ந்து கொள்ள எல்லோருமாக காசி யாத்திரை கிளம்பினோம்.

குல தெய்வங்களான மதுரைவீரன் மற்றும் ஸ்வாமிநாதஸ்வாமியிடம் வேண்டிக் கொண்டு, ஷேத்திர தெய்வமான திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாரிடமும் பிரார்த்தித்துக் கொண்டு முதலில் ராமேஸ்வரம் சென்றோம்.

அங்குள்ள ஸ்ரீசங்கர மடம் மிக அருமையாக உள்ளது. ஆலயத்திற்கு அருகில் உள்ளது.அக்னி தீர்த்தக் கரையில் உள்ளது.தங்குவதற்கு அறைகள் உள்ளன. மடத்தில் ஆதி சங்கரர் மற்றும் ஏனைய தெய்வங்களுக்கு சிறுசிறு சன்னதிகள் உள்ளன. அங்கு தங்குமிடத்திற்கு 15 நாட்கள் முன்னமே பதிவு செய்து கொள்ள வேண்டும். ஐம்பது அடி உயரத்தில் மேல் தளத்தில் ஆதிசங்கரர் தன் நான்கு சீடர்களுடன் கடலை நோக்கியபடி அமர்ந்தருளும் சலவைக்கல் திருவுருவங்கள் மிக அற்புதமாக வடிவமைக்கப் பட்டுள்ளன. அங்கு அமைக்கப்பட்டுள்ள பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள், கணபதி, முருகன், சரஸ்வதி மிக அற்புதமாக உள்ளன.ஆதி சங்கரரின் பாதுகா மண்டபம் மூன்றாம் தளத்தில் அமைந்துள்ளது.அவரது வாழ்க்கை வரலாறு அழகிய வண்ணச்சித்திரங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சிமணி மண்டபத்தின் உச்சியில் மணி அடிக்கும் பசுவின் சிற்பம் அமைந்துள்ளது.கோசாலையும் அமைந்துள்ளது.

முதலில் ஸ்நான சங்கல்பம் செய்து கொண்டு அக்னி தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின் ராமேஸ்வரம் ஆலயத்திற்குள் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் நீராட வேண்டும். அதன்பின் நாம் பித்ரு காரியங்கள் செய்ய நியமித்துள்ள  இருப்பிடம் சென்று தீர்த்த ஸ்ரார்த்தம், 17 பிண்டங்கள் பிடித்து பிண்டப்பிரதான தர்ப்பணம்  செய்ய வேண்டும். ஐந்து பிராம்மணர்களுக்கு அன்னமிடல் நல்லது.

அங்கு திரு வெங்கட்ராமன் சாஸ்திரிகள் என்பவரை எங்கள் காரியங்கள் செய்ய அணுகியிருந்தோம்.அவரும் மிக அருமையாக எல்லாம் விளக்கமாக சொல்லி செய்து வைத்தார். அவர் ஏற்பாடு செய்த இல்லத்திலேயே மடி சாப்பாடும் சாப்பிட்டோம்.நாங்கள் சென்ற அன்று முதலில் ஸ்நான சங்கல்பம் செய்து அக்னி தீர்த்த ஸ்நானம் செய்தபின், அவரே ஆலயத்தின் 22 தீர்த்தங்களிலும் நீராட ஒருவரை உடன் அனுப்பினார்.

அக்கினி தீர்த்தம்....இங்குள்ள தீர்த்தங்களில் முதன்மையானதும், சிறப்பானதுமான கடல் 'அக்னி தீர்த்தம்'.அன்னை சீதையின் கற்பை நிரூபிக்க இராமபிரான் அவளை அக்கினிப் பிரவேசம் செய்யும்படி சொன்ன இடம் இது. ராமன் கட்டளைப்படி அனுமன் மூட்டிய தீ குளிர்ந்து பிராட்டியின் கற்புக் கனலைத் தாங்க முடியாத அக்னி தேவன் அன்னையை பயபக்தியுடன் வணங்கிய இடமே அக்னி தீர்த்தம். இதில்தான் நாம் முதல் ஸ்நானம் செய்ய வேண்டும்.

இந்த இடம்தான் சீதாதேவியை மீட்டு வந்தபின் ராமர் அவளை அக்னி பிரவேசம் செய்யச் சொல்ல சீதை தீக்குளித்த இடம். அதைக் கேட்டு அக்கினிபகவான் பயந்தபோது சீதை,'பயப்படாதே. நான் குளிப்பதால் நீ பவித்திரமடைவாய்'என்று அருள் செய்த இடம். அக்கினியும் அவளை சுடாமல் குளிர்ந்து அங்கு நீராடியதாகப் புராணக் கூற்று.அக்கினியும் குளிர்ந்து அவ்விடத்தில் நீராடி புனிதம் பெற்ற இடம். நினைக்கவே மெய் சிலிர்த்தது.நாங்கள் போன சமயம் மகாளய பட்ச நாட்களானதால் கூட்டம் தாங்கவில்லை. அங்கு குளித்தவர்கள் தம் ஆடைகளை அங்கேயே விட்டுவிட்டு போக வேண்டும் என்பது வழக்கமாம். கடலில் இறங்கி குளிக்க முடியாத அளவுக்கு ஒரே ஆடைமயம்!

அங்கிருந்து ஆலயம் சென்று சுற்றுப் பிரகாரத்தில் இருக்கும் 22 தீர்த்தங்களில் நீராட வேண்டும். அடேயப்பா...வரிசையில் சென்று கொண்டிருந்தார்கள் அனைவரும்.நம்முடன் வந்தவர் அங்கு பரிச்சயமானவர் என்பதால் யாரும் தடுக்கவில்லை. அவர் கையோடு கொண்டு வந்திருந்த கயிற்று வாளியால் இழுத்து நம் தலைகளில் தாராளமாக தண்ணீர் ஊற்றினார்! இந்தத் தீர்த்தங்கள் வற்றாத நீரோட்டத்துடனும், பல ஜீவ அணுக்களையும், சத்துப் பொருள்களையும் தன்னுள் கொண்டு குளிப்பவர்களுக்கு உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை பயப்பனவாம்.அவற்றின் பெயர்கள்....1.மகாலட்சுமி தீர்த்தம் 2.காயத்ரி, 3.சாவித்திரி,4.சரஸ்வதி, 5.சேதுமாதவ,, 6.கந்தமாதன, 7. கவாட்ச ,8.கவய.9.,நள 10.நீல,11.சங்க,12.சக்ர, 13.பிரம்மஹத்தி விமோசன,14. சூரிய,15.சந்திர,16.கங்கை,17.யமுனை,,18.கயா ,19.சிவ,20.சத்யாம்ருத,21.சர்வ,22.கோடி தீர்த்தங்கள். இவற்றின் சிறப்புகளைப் பார்ப்போம்.

1.மகாலக்ஷ்மி தீர்த்தம்.....தர்மராஜன் ஐஸ்வர்யம் பெற்ற தீர்த்தம், செல்வ வளம்
2.காயத்ரி...உலக நன்மை
3.சாவித்திரி....,பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
4.சரஸ்வதி..... காஷ்யப மன்னரின் பாவம் தீர்ந்தது, கல்வி அபிவிருத்தி
5,சேதுமாதவ தீர்த்தம்....இது ஆலயத்தின் அழகிய அல்லிப் பூக்கள் நிறைந்த திருக்குளம். லக்ஷ்மி கடாக்ஷம் மற்றும் சித்த சுத்தி, தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல். இதன் அருகில் அமைந்துள்ளது  சேது மாதவர் சந்நிதி. காசி யாத்திரை செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய இறைவன் இவர்.
6.கந்தமாதன...ஏழ்மை நீங்கி செல்வம் பெற, சர்வ பாபங்களும் தீர,எத்துறையிலும் வல்லுனராக 
7. கவாட்ச.....நரகம் செல்லாமல் இருக்க.
8.கவய....கற்பக விருட்சத்தினருகில் வாழ்வு.
9.நள ....சூரியனைப் போன்ற தேஜஸ் பெற்று சுவர்க்கம் அடைய.
10.நீல....சகல யாகபலன்களையும் பெற.
11.சங்கு....வத்ஸநாப ரிஷி  விமோசனம் பெற்றார்.வாழ்க்கை வசதி அதிகரிப்பு
12. சக்ர....சூரியனின் கரம் தங்கமாகியது.மனஉறுதி பெறுதல்
13. பிரம்மஹத்தி விமோசன....பிரம்மஹத்தி தோஷம் நீங்க.
14.சூர்யா....முதன்மை ஸ்தானம் அடைதல், நிறைந்த அறிவு பெற்று, விரும்பியவற்றை பெற.
15.சந்திர...அறிவும், ஆசையும் நிறைவேற.
16.கங்கை,17.யமுனை,18.கயா......ஞானஸ்ருதி அரசன் வெற்றி பெற்றான்.
19. சிவா...பைரவரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சகல பீடைகளும் ஒழிதல்
20. சத்யாம்ருத....புருனு சக்கரவர்த்தி சாப விமோசனம் பெற்றார்.ஆயுள் விருத்தி
21. சர்வ...சுதர்சனர் கண் பெற்று, செல்வம் பெற்றார்.எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
22, கோடி....கிருஷ்ணர் தன்  மாமா கம்சனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார்.

இந்தக் கோடி தீர்த்தம் சகல பாபங்களையும் நீக்கி மோட்சம் தர வல்லது.இக்கிணற்று  நீரே இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.இது கோடி புண்ய தீர்த்தங்கள் இதில் இருப்பதால் இது கங்கா ஜலம் போல் மிகவும் புனிதமானது.எத்தனை நாளானாலும் கெடுவதில்லை.ஸ்ரீராமர் தான் வில்லினால் சிவனை அபிஷேகிப்பதற்காக உருவாக்கியதே கோடி தீர்த்தம்.ஸ்வாமி அபிஷேகத்திற்கு இந்த நீரே பயன்படுத்தப் படுகிறது.உள்ளிருந்து கொட்டும் நீர் கோமுகம் வழியாக நம்மை நனைக்கும்.காசி யாத்திரை முடிந்து நாம் கங்காபிஷேகம் செய்ய வரும்போது ஒரு பாட்டிலில் கோடி தீர்த்தம் எடுத்து சென்று அதையும் கங்கை நீருடன் வைத்து சமாராதனை, பூஜை செய்ய வேண்டும்.

குளித்து முடித்து மடி வஸ்திரம் அணிந்து கொண்டு பித்ரு காரியம் செய்ய வாத்தியார் நியமித்த இடம் சென்று தீர்த்த ஸ்ரார்த்தமும், 17 பிண்டங்கள் ( பித்ரு வர்க்கம்..3, மாத்ரு வர்க்கம்..3, மாதாமஹாதி..3, மாதாமஹீ..3, காருண்ய பித்ருக்கள்..1, தர்ம பிண்டம்..4) பிடித்து பிண்டப்பிரதான தர்ப்பணமும் செய்தோம்.என் கணவர் தினமும் மாளய  பட்ச தர்ப்பணம் செய்பவர். அதனால் அதுவும் செய்து அன்று  பிராம்மணர்களுக்கு போஜனம் செய்வித்தோம்.

மாலை ராமேஸ்வரம் ஆலயங்களை தரிசித்து வந்தோம்.ராமர் பாதம் பதித்த கந்தமாதான பர்வதம் ஒரு சிறு குன்று. ஸ்ரீராமர் இம்மலையிலிருந்துதான் இலங்கைக்குப் பாலம் காட்டும் இடத்தைத் தேடினாராம். அங்கிருந்து தூரத்தில் கடலுக்கு அப்பால் இலங்கை தெரிகிறது.

அடுத்து பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம். அங்கு உயரமான பஞ்சமுக ஆஞ்சநேயர் வெளியில் காட்சி தருகிறார்.ஸ்ரீராமர் பாலம் அமைக்க உபயோகப்படுத்திய மிதக்கும் கற்கள் உள்ளன. அவற்றை வெளியில் எடுத்ததும் கனம் கூடி விடுகிறது.

அடுத்ததாக நாங்கள் சென்றது லக்ஷ்மண தீர்த்தம் சேது மஹாத்மியத்தில் இத்தீர்த்தத்தில் வபனம் செய்து, இக்குளத்தில் நீராடி தீர்த்த ஸ்ரார்த்தம் செய்வது மிக விசேஷமானதாகக் கூறப்படுகிறது.அருகிலேயே ராமர், சீதை தீர்த்தங்களும், ஆலயங்களும் உள்ளன.

வடக்கில் பத்ரகாளி, கிழக்கில் உஜ்ஜயினி காளி, மேற்கில் துர்க்கை அம்மன், தெற்கில் நம்புநாயகி அம்மன் ஆகிய தேவியர் ராமேஸ்வரத்தில் நான்கு திசைக்கு காவல் தெய்வங்களாக உள்ளனர்.இன்னும் சில ஆலயங்களும் தரிசித்தோம்.

மறுநாள் காலை ஆறு மணிக்கு கிளம்பினால்தான் தனுஷ்கோடி சென்று அங்கு சங்கல்பம், 36 ஸ்நானம், மணலை எடுத்து அதற்கு பூஜை செய்து நம்முடன் எடுத்து வர வேண்டும். ஜீப் மிக மெதுவாகப் போகும் என்பதுடன், திரும்ப வரும்போது சில ஆலயங்களும் தரிசிக்க வேண்டும், வந்து மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றதால் விடிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து தயாரானோம்.ஜீப்பில் எங்களுடன் இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டார்கள். மொத்தம் 12 பேர். போகும் வழியெல்லாம் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. இரு பக்கமும் கருவேல, பனை மரங்கள். வெகுசில கிராமங்கள்.மிகச் சில மனிதர்கள். முகுந்தராயன் சத்திரம் என்ற இடம் வரை சாதாரண ஜீப்கள் செல்ல முடியும். அதன்பின் கடல் மணலில் செல்வதற்கு ஏறறாற்போல் சக்கர அமைப்பை மாற்றினார் ஜீப் ஓட்டுநர்.

தனுஷ்கோடி...இந்தப் பெயர் வரக் காரணம் என்ன?சீதையைத் தேடி வந்த ராமர் முதலில் வேதாரண்யம் வந்தடைந்தார்,அங்கு கடலின் குறுக்கே அணையோ, பாலமோ கட்ட முடியாது என அறிந்து கோடிக்கரைக்கு வந்தார்.தனுஷ்கோடி வந்த ராமர் தன்முன் விரிந்து, பிரிந்து இருந்த இரு மாபெரும் கடல்களைக் கண்டார். இதுவே பாலம் கட்ட சரியான இடம் என முடிவு செய்தார்.வலப்பக்கம் ரத்னாகரம்.இந்தியப் பெருங்கடல் ராவணன். ஆர்ப்பாட்டம் இருக்கும், ஆபத்தில்லை. வலப் பக்கம் மகோததி.வங்காள விரிகுடா. மண்டோதரி, அமைதி ஆனாலும் ஆபத்தானது.இரண்டும் இணையும் வில்முனை போன்ற இடமே தனுஷ்கோடி.ராவண ஜெயமானபின் ராமர் அந்தப் பாலத்தை தனது வில்லினால் உடைத்து விட்டார்.

'சேதும் த்ருஷ்ட்வா சமுத்ரஸ்ய பிரும்மஹத்யாவ்ய போஹதி'...
இந்த ராமசேதுவை தரிசித்தாலே பிரும்மஹத்தி பாவம் அகலும் என்று சாஸ்த்திரம் கூறுகிறது.ராவண, கும்பகர்ணாதியரைக் கொன்ற பாவம் நீங்க ஸ்ரீராமர் இந்த கோடிக்கரையில் ஸ்நானம் செய்து சிவபெருமானை பூஜித்தார். அவர்  பூஜித்த கோயில் கடலால் அழிந்து விட்டதாம்.

போகும் வழியெங்கும் 1964ம் ஆண்டு அடித்த பெரும் புயலின் கோரமான முகம். அன்றைய நாளை நினைத்து மனம் கலங்குகிறது. ஒரு புகை வண்டி முழுவதுமாக  அந்த கோரப்  புயலில் சிக்குண்டு கடலால் விழுங்கப்பட்டு கடலோடு போன சம்பவம் மனதை என்னவோ செய்கிறது. ஜீப்பும் ஆடி, ஆடி மிக மெதுவாகத்தான் செல்லுகிறது. கிட்டத்தட்ட எட்டு கிலோ மீட்டர். கடல்நீர், சகதியில் ஏறியும், இறங்கியும், வளைந்தும், நெளிந்தும் ஒரு வழியாக கடற்கரையை அடைந்தோம்.

தம்பதியராக இணைந்து 36 முறை ஸ்நானம் செய்தோம்.அவ்விடத்தில் குளிக்கும் முன்பு நமஸ்கரித்து சமுத்திரத்திடம் அனுமதி பெற வேண்டும்.சங்கல்பம் செய்தபின் ஒரு கல் அல்லது கொஞ்சம் மணலை எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லியபடி அதனை கடலில் போடவேண்டும்.
''பிப்பலாத ஸமுத்பன்னே க்ருத்யே லோக பயங்கரி
ஸைகதம் தே பிரதாஸ்யாமி ஆஹாரார்த்தம் பிரகல்பிதம்''
எந்த இடத்தில் சமுத்திர ஸ்நானம் செய்தாலும் இந்த மந்திரம் கூறி ஒரு கல் அல்லது மணலைக் கடலில் போடவேண்டும்.கடல் மண்ணை எடுத்து கடலிலேயே எதற்கு போடுவது? இதற்கும் ஒரு காரணம் உண்டு என்கிறார் எங்களை அழைத்துச் சென்ற புரோகிதர்! கடலில் க்ருத்யை என்ற அரக்கி வாழ்வதால் அவளுக்கு உணவாக நாம் இவ்வாறு கல்லையோ,மணலையோ போட்டால் அவள் மனம் மகிழ்ந்து நம் காரியங்கள் தடையின்றி நடக்க அருள் செய்வதாக ஐதீகமாம்.

பின் எங்கள் பிரோஹிதர் கூறியபடி மணலில் மூன்று சிவலிங்கங்களைப் பிடிக்க வேண்டும். நடுவில் உள்ள லிங்கம் வேணி மாதவர் மற்றும் இரு பக்கங்களில் உள்ளவர்கள் சேது மாதவரும், பிந்து மாதவரும். முறைப்படி அர்ச்சனை, அலங்காரம், தூப, தீப, நைவேத்தியங்களுடன் பூஜை செய்து பிரயாகை சென்று அங்குள்ள வேணி மாதவரைப் பூஜிக்கவும், காசி சென்று அங்குள்ள பிந்து மாதவரைப் பூஜித்து வரவும் உத்தரவு பெற்றுக் கொள்ள வேண்டும்.பின் சேது மாதவரைக் கடலில் கரைத்துவிட்டோம். பிந்து மாதவரை புரோஹிதருக்கு  தானம் செய்துவிட வேண்டும். அவர் தட்சணையைப் பெற்றுக் கொண்டு அவ்விடத்திலேயே பிந்து மாதவரைக் கலைத்து விடுவார். வேணி மாதவரை அடுத்து செல்லப் போகும் பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் கரைக்க எடுத்து பத்திரமாக ஒரு துணியில் கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை நாம் காசிக்கு செல்லும்வரை பூஜையறையில் வைக்க வேண்டும்.இத்துடன் ராமேஸ்வரத்தில் செய்ய வேண்டிய யாத்திரை காரியங்கள் முடிந்தன.

திரும்ப வரும்போது சிதிலமடைந்த ரயில் நிலையம், துருப்பிடித்த படகுகள், அழிந்த நிலையில் வீடுகள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து வந்தோம். அங்கிருந்து நாங்கள் சென்றது கோதண்டராமர் ஆலயம். இங்குதான் ராமர் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்த இடம்.இக்கோயிலும் புயலால் சீரழிந்துள்ளது.வாசலில் இரு தூண்கள் மட்டுமே உள்ளன.அங்கிருந்து ஜடாமகுட தீர்த்தம்.ராவண சம்ஹாரம் முடிந்து ராமர் தன் ஜடையை நீக்கி நீராடிய இடம்.

இன்னும் ராமநாத ஸ்வாமியை தரிசிக்க வில்லையே? பித்ரு காரியம் முடிந்தபின்பே இறை வழிபாடு செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.ஆலயம் செல்வோம்.

நமோ  தேவாதி தேவாய ராமனாதாய சாக்ஷினே
நமோ வேதாந்த வேத்யாய யோகிநாம் பததாயினே

ராமபிரான் ராவணாதியரைக் கொன்ற பாபம் அகல ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்த லிங்கமே ஸ்ரீராமனாத சுவாமி.ராமாயண காலத்தில் தோன்றியது ராமேஸ்வரம்.மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புகளைக் கொண்டது.சீதாதேவியின் கையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கமே ஸ்ரீராமநாதஸ்வாமி. இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் முதன்மையானது ராமேஸ்வரம்.காசியிலிருந்து ஹனுமான் கொண்டு வந்த லிங்கம் ஹனும லிங்கம் என்று வணங்கப் படுகிறது. அந்த லிங்கத்திற்கு முதல் பூஜை நடந்த பின்பே ராமநாத ஸ்வாமிக்கு பூஜை நடை பெறுகிறது.ராமநாதசுவாமி மிக அழகாக்க காட்சி தருகிறார். சதா நேரமும் காசியிலிருந்து பக்தர்கள் கொண்டுவரும் கங்கை நீரினால் அபிஷேகம் நடைபெறுகிறது.

அன்னை பர்வதவர்த்தினி அழகின் உருவமாய், நான்கு கரங்களுடன், கருணை பொங்கும் விழிகளும், புன்னகை பொருந்திய அதரத்துடனும் அற்புதக் காட்சி தருகிறாள். கந்தமாதான பர்வதம் அவளின் பிறந்த வீடாகக் கொண்டு ஆடி மாதம் அங்கு சென்று விடுகிறாள். திருக்கல்யாண உற்சவத்தின் சமயம் ஸ்ரீராமநாதரும் அங்கு சென்று தங்கி விடுவாராம். அப்போது ராமேஸ்வர ஆலயம் அடைக்கப்பட்டு விடுமாம்.ஆடி மாதம் ராமேஸ்வரம்  செல்வோர் அந்த நாட்களைத் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும்.

ராமநாதஸ்வாமி சந்நிதியின் உட்புறத்தில் ஸ்படிக லிங்கம் உள்ளது. தினசரி காலை 5 மணி முதல் இந்த லிங்கத்திற்கு நடைபெறும் பூஜை மிக விசே ஷமானது. இதற்கான கட்டணம் 50 ரூபாய். விடிகாலை 4 மணி முதலே இந்த தரிசனத்திற்கு நீண்ட வரிசை இருக்கிறது.ராமநாத ஸ்வாமி சந்நிதியின் முதல் பிரகாரத்தில் சகஸ்ர  லிங்கம் இருக்கிறது. ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கங்களைக் கொண்ட லிங்கம் இது. இவ்வாலயத்திலுள்ள 3 நடராஜர்  மிகப் பெரியவை. தட்சிணா மூர்த்தி மிக சிறப்பானது.

இவ்வாலயத்தில் அனுமனால் ஸ்தாபிக்கப்பட்ட காசிவிஸ்வநாதரை தரிசித்த பின்பே ராமநாதஸ்வாமியை தரிசிக்க வேண்டும்.ராமரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவ பூஜை செய்ய வேண்டி ஹனுமனை காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டுவரப் பணித்தார் ராமர். காசியில் சிவபெருமான் அனைவர் காதிலும் ராம மந்திரம் ஓதுவத்தைக் கேட்டு அதில் லயித்த ஹனுமான் வந்த காரியத்தை மறந்தார். ஹனுமான் வர நேரமானதால் சீதை பிடித்து வைத்த லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்தார்.

இதற்கு இன்னொரு கதையும் உண்டு.காசியின் காவல் தெய்வமான காலபைரவரின் அனுமதி பெறாததால் அவர் ஹனுமனை  கீழே வைத்து விடும்படி செய்து விட்டார். அவ்விடமே நாகலாபுரம் என்கின்றனர்.ஆகவே ஆஞ்சநேயர் மீண்டும் காலபைரவர் அனுமதியுடன் காசி சென்று இரு லிங்கங்களைக் கொண்டு வந்தார். இங்கு ஏற்கெனவே பூஜைக்கு தயாராக இருந்த லிங்கத்தை அகற்ற தான் வாலினால் கட்டி இழுத்தார்.அது சற்றும் அசையாததால் தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்ட, ராமரும் அதை அருகிலேயே ஸ்தாபித்து முதல் பூஜை அனுமனின் லிங்கத்துக்கே என்று சொல்லிவிட்டார். ஆஞ்சநேயர் கொணர்ந்த இன்னொரு லிங்கம் வாசலில் வலப்புறம் காட்சி தரும் வித்யாசமான செந்தூர ஹனுமானின் சந்நிதிக்கு பின்புறம் உள்ளது.

ராமநாத ஸ்வாமியின் பின்புறம் இரண்டு மூன்றாவது பிரகாரங்களை இடையே வெள்ளை சலவைக்கல்லால் ஆன சேது மாதவர் சந்நிதி உள்ளது.இவர் வெண்மை நிறமானவர் என்பதால் ஸ்வேதமாதவர் என்றும் அழைக்கப் படுகிறார். அவர் அவரை சங்கிலி போட்டு கட்டியிருப்பதாக ஒரு கதை!பாண்டிய மன்னன் தான் மனைவியுடன் கடல் நீராடி திரும்பும்போது ஒரு சிறுமி வர, அவளைத் தன்னோடு அழைத்து வந்தார் மன்னர்.அப்பெண் ஒரு நிபந்தனை விதித்தால். 'என் விருப்பமின்றி என்னை யாராவது தொட்டால் அவரை தண்டிக்க வேண்டும்' என்றால்.ஒருநாள் எவனோ ஒருவன் அவள் கையைப் பிடிக்க அவள் கூச்சலிட, மன்னனும் அவனை சங்கிலியால் கட்டிப் போட்டான். அன்றிரவு கனவில் வந்த ஸ்ரீமன் நாராயணன் தானே அவன் பெண்ணின் கையைப் பிடித்ததாயும், அவளே மகாலக்ஷ்மி' என்றும் சொன்னார்.அந்த மாதவனின் விளையாட்டைப் புரிந்து கொண்ட அரசன் 'சேது மாதவ லக்ஷ்மி ஸ்துதி' பாடுகிறான்.இது சேது மஹாத்மியத்தில் உள்ளது.

இத்திருக் கோயிலின் மூன்றாம் பிரகாரம் 'சொக்கட்டான் மண்டபம்' எனப்படும்.உலகிலேயே மிக நீண்ட பிரகாரநடை இது. இதன் மொத்த நீளம் 3850 அடி.இந்துமதக் கட்டிடக் கலையின் ஈடு இணையற்ற சிறப்புக்கு சிறந்த எடுத்துக் காட்டு இது.இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி என்பவரால் கட்டப்பட்டது. 1747ல் தொடங்கிய இந்தப் பிரகார வேலைகள் முடிய 30 ஆண்டுகள் ஆயிற்றாம்.1212 தூண்கள் வரிசை மாறாமல் மிக அழகாக நிறுத்தப் பட்டுள்ளது பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்ட இவ்வாலயம் கம்பீரமாகக் காட்சி தருகிறது.
ஆலய நேரம்...காலை 5-1...மாலை 3-9

ஷாப்பிங்....அது இல்லாமலா! அங்கு நம் மறைந்த விஞ்ஞானி திரு அப்துல்கலாம் அவர்களின் சகோதரரின் மிகப் பெரிய கடை உள்ளது. அதில் மிக அழகான, வித்யாசமான கைவினைப் பொருட்களும், அலங்கார விளக்குகள், கிளிஞ்சல் பொம்மைகள் என்று ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் மிக நியாயமான விலையில் விற்கப் படுகிறது. ராமேஸ்வரம் செல்பவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய கடை அது!

அட...இன்னும் சுற்றியுள்ள திருப்புல்லாணி, உத்திரகோச மங்கை, நவபாஷாணம், வில்லூண்டி தீர்த்தம்,உப்பூர்...இவற்றுக்கெல்லாம் சென்று தரிசிக்க நேரம் இல்லை. அவற்றை திரும்ப கங்கா தீர்த்த அபிஷேகம் செய்ய சென்ற போது தரிசித்தோம்.




Wednesday, 22 June 2022

வா..மகளே..வா!

 வாழ்த்துக்கள் பெண்ணே!


ஐயெட்டு ஆண்டுகளுக்கு முன்

அழுகையோடு அழகாக அகிலம் வந்து உதித்த ஆசை மகளே!


பெண் வேண்டும் என்று ஆசைப்பட்ட உன் அப்பாவின் செல்லமாகப் பிறந்த

எங்கள் செல்வ மகளே! 


நீ தத்தி நடக்கும்போதும் மழலை மொழி மிழற்றும் போதும் கண்கள் விரிய பேசும்போதும் கோபித்தால் விசிக்கும் போதும் எங்கள் வீட்டு தேவதையானாய்! 


அப்பாவின் செல்ல மகள்! அண்ணன் தம்பிகளின் அருமை சகோதரி! அவ்வப்போது அழகாய் அறிவுரைக்கும் என் அருமைத் தோழி மட்டுமல்ல.. என் அன்புத் தாயாகவும்

தோற்றமளிக்கிறாய்!


நீ மருத்துவரானபோது

மனமகிழ்ச்சியில் வானத்தில் 

பறந்தேன் நான்!


காதலித்தவனைக் கைப்பிடித்து

காலம் முழுதும் அவனுடன் வாழ காவியமாய் நீ 

புறப்பட்டபோது

கண்கலங்கியது நீ மட்டுமல்ல..

நாங்களும்! 


குழந்தைகள் உனக்குப் பிறந்தாலும் குறையாத பாசமும் நிறைவான நேசமும் என்றைக்கும் காட்டும் அன்புமகள் நீ! 


இன்று பிறந்தநாள் காணும் என் ஆசை மகளே! உனக்கு எங்கள் மனமார்ந்த நல்லாசிகள்!


இன்று போல் என்றும் சீரோடும் சிறப்போடும் வாழ இறையருளை வேண்டுகிறேன்!


நீ வருகிறாய் எனும்போதே நான் ஆனந்தத்தில் ஆவலாய்க் காத்திருக்கிறேன்...

உன்னைக் காணவும் உரையாடி மகிழவும்! வாழ்த்துக்கள் பல!

வா..மகளே..வா!

Tuesday, 21 June 2022

என் வீடு

 

என் 🏡


என் வீடு எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு உண்டு... 

அழகான திண்ணை அணிவகுத்து நிற்கும் தூண்கள்..

கால் வீசி நடக்க விசாலமான 

அறைகள்..

விதவிதமாய் சமைக்க விருப்பமான

சமையலறை..

தெய்விகம் நிறைந்த மனதை ஒருமுகப் படுத்தும் சுவாமி அறை..

வீட்டைச் சுற்றிலும் அழகிய பசுமைத்

தோட்டம்..

அக்கம் பக்கம் இரண்டிரண்டு தென்னை மரங்கள்..

அங்கங்கே அழகிய பூக்களைத் தரும்

மலர் மரங்கள்..

இரவில் நிலவை ரசித்து மகிழ மேன் மாடமுள்ள மாடி.. 

கண்ணுக்கெட்டும் தூரத்தில் காவேரித்

தாயின் சலசல சத்தம்..

ஆடும் மயிலும் கூவும் குயிலும் அருகருகே நடந்துவர..

காணி நிலம் வேண்டுமென்று பாரதி போல் கேட்டேன்..

இயற்கையை நேசித்து இனிய தென்றலை சுவாசித்து.. 

இனிவரும் நாட்களை இனிதே கழிக்க

இறைவனின் பரிசோ இவ்வழகிய வீடு!

Tuesday, 14 June 2022

நினைவுகள்

 நினைவுகள் மறக்க முடியாதவை.. ஆம்.. ஐந்து வயதிலிருந்தே நாம் செய்து வரும் செயல்கள் விளையாட்டு கோபத்தை உண்டாக்கும் சண்டைகள் நம் மனதில் இருந்து என்றும் மறையாது. சிறு வயதில் என் அம்மா மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார். காலையில் எழுந்ததும், வீட்டு வாசலில் போடுவது, மிகவும் நேர்த்தியாக உடை அணிவது, வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, வீட்டு வேலைகளைச் செய்வது என்று சரியாகச் செய்ய வேண்டும்.இல்லையென்றால் மீண்டும் செய்யச் சொல்வாள். அந்த பயத்தில் நான் அதை சரியாக செய்வேன். மடிப்பு துணிகளையும் நேர்த்தியாக செய்ய வேண்டும். அதனால்தான் இன்றும் நான் வேலை செய்யும் போது என் அம்மாவை நினைத்துப் பார்க்கிறேன்.

Memories are unforgettable..yes..as actions we have been doing since we were five years old sports angers fights which will never fade from our minds.
At a young age my mom would behave very strictly. Getting up in the morning, putting on the doorstep, dressing very neatly, cleaning the house, washing the dishes and doing household chores should be done properly.If not she will tell me to do it again. In that fear I would do exactly that. Folding clothes should also be done neatly. That’s why I still remember my mom when I work today.

என் அம்மா மிக அழகாக இருப்பார். நன்றாக பாடுவார்..கோலம் போடுவார். சமையல் செய்வார். ஓவியம் வரைவார். எப்பவும் பளிச்சென்று திருத்தமான அலங்காரத்துடன் இருப்பார்.அம்மாவைப் பார்த்து வளர்ந்ததால் நானும் அதே போல் இருக்க முயற்சித்தாலும் பல நேரங்கள் அம்மா போன்று சரியாக கடைப்பிடிக்க முடிவதில்லை.

My mom would be so cute. She sings well. cooks well. Draw rangolis and drawings very beautifu. She will always be bright and with the right outfit. Growing up looking at my mother I tried to be the same but many times I could not adhere exactly like my mother. Because I'm little bit lazy.

என் அம்மா தன் கொள்ளு பேரன் பேத்திகளைப் பார்க்க மிக ஆசையுடன் இருந்தார். துரதிர்ஷ்டவசமாக நீங்களெல்லாம் பிறக்குமுன்பே இறந்து விட்டார். என் அம்மா பற்றி உன் அம்மாவுக்கு தெரியும். என்னுடைய நினைவுகள் இன்னும் நிறைய...அவற்றை பல சமயங்களில் கட்டுரைகளாக நிறைய எழுதியிருக்கிறேன். நீயும் என்னைப் போல எழுத்தாளராக வாழ்த்துக்கள் ஸாய்லி😍

My mother was very eager to see her great-grandchildren. Unfortunately she died before you could all be born. Your mom knows about my mom. My memories are many more ... I have written them a lot of times as articles. Congratulations Sailee for being a writer like me😍