வடுவூர்.. கோதண்டராமர் கோயில்
ஸ்தல வரலாறு :-
இந்த ஊருக்கு வடுவூர் என்ற பெயர்க்காரணமே சுவாரஸ்யமானது. சேரர் மற்றும் தொண்டை மண்டலத்தார் என பெரும் படையை எதிர்த்து கரிகால சோழன் வெற்றி கண்ட வெண்ணிப்பறந்தலைப் (தற்போது கோவில்வெண்ணி) தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது.
இந்த போரில் வெற்றி கண்ட கரிகால சோழனது வீரர்கள் இந்த ஊரில் தங்கி இளைப்பாறி, விழுப்புண் ஆற்றிச் சென்றனர்.
வடுக்களைப் பெற்ற போர்வீரர்கள் தங்கி சென்ற ஊர் என்ற பொருளில் வடு + ஊர் = வடுவூர், அழகுமிக்க, இளமையான ஊர் எனும் பொருளில் வடிவு +ஊர் என அழைக்கப்படுகிறது.
அந்த காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மகிழங்காடு, வெகுளாரண்யம் என்றும், பாஸ்கர ஷேத்திரம், தக்ஷிண அயோத்தி, ஏகாதசி கிராமம் என பல்வேறு பெயர்களும் உண்டு என்கிறார்கள்.
இந்த ஊர் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள். ஒரு காலத்தில் தஞ்சை அரசர்களால் ஓர் ஏகாதசி தினத்தன்று வித்வான்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வடுவூரை ‘ஏகாதசி கிராமம்’ எனவும் அழைப்பர்.
முனிவர்களின் வேண்டுகோள்
இதிகாச நாயகனான ராமன், தந்தை தசரதனின் ஆணையின்படி 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அடர்ந்த கானகத்தில் அவர் நடமாடி வந்தபோது, அங்குள்ள முனிவர்கள் அவரை அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர்.
அவதார நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ராமன் முனிவர்களை சமாதானப்படுத்தி மேற்கொண்டு செல்ல தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். அதற்கு முனிவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ராமன் என்ன செய்வதென்று சிந்தித்தார். முடிவில் தன் கையாலேயே தன்வடிவத்தைத்தானே விக்ரகமாக செய்து தனது ஆசிரமத்து வாசலில் வைத்துவிட்டு உள்ளே சீதையுடன் இருந்தார்.
முனிவர்கள் மறுமுறை ராமனை தரிசிக்க வந்தபோது, ஆசிரமத்து வாசலில் அழகெல்லாம் ஓர் உருவாய் திரண்ட வடிவழகுடன் கூடிய ராமன் செய்த விக்ரகத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றார்கள். அப்போது அவர்கள் ராமனிடம் இந்த தண்ட காரண்யத்தை விட்டு செல்லக்கூடாது என்று மீண்டும் வேண்டிக்கொண்டனர்.
அப்போது ராமன் நான் வேண்டுமா?
அல்லது ஆசிரமத்து வாசலில் உள்ள எனது அர்ச்சை உருவம் வேண்டுமா?
என்று கேட்டார். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்து இருந்த முனிவர்கள் அந்த திவ்ய விக்ரகத்தையே விரும்பினார்கள். உடனே விக்ரகத்தை முனிவர்களிடம் கொடுத்த ராமன் அங்கே எழுந்தருளிவிட்டார்.
திருக்கண்ணப்புரத்தில்
அந்த விக்ரகத்தை திருக்கண்ணப்புரத்தில் ராமர் சன்னிதியில் பிரதிஷ்டை செய்து நீண்டகாலம் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் திருக்கண்ணப்புரம் பெருமாளை பாடிய குலசேகர ஆழ்வார், இந்த ராமனை மனதில் கொண்டு, தனது பெருமாள் திருமொழியில் ‘மன்னுபுகழ் என்ற எட்டாம் திருமொழியில், சிலை வளைத்தாய், சிலைவலவர், ஏமருவுஞ்சிலை வலவா, வளையவொரு சிலை அதனால், ஏவரி வெஞ்சலை வலவா’ என பாடியுள்ளார்.
ஸ்ரீ சவுரி ராஜனாகிய கண்ணபிரான் எழுந்தருளியிருக்கும் திருக்கோவிலில் கிளைச்சன்னிதியில் ராமன் இருந்ததால் இப்பதிகத்தை அவர்பாடினார். இந்த ராமர் விக்ரகம் ஒரு காலத்தில் அங்கிருந்து அகற்றப்பட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள தலைஞாயிறு என்ற ஊரில் மரத்தடியில், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன் விக்ரகங்களுடன் மண்ணுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய மன்னரின் கனவில், பெருமாள் சென்று தான் தலைஞாயிறு அருகே மண்ணுக்கடியில் புதையுண்டு கிடப்பதாகவும், அதை வெளியில் எடுத்து கோவில்கட்டி, ஆராதனை செய்யும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விக்ரகங்களை மண்ணில் இருந்து வெளியே எடுத்தார்.
அப்போது அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, சிலைகளை அங்கிருந்து எடுத்துச்செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே லட்சுமணன், பரதன், சிலைகளை மன்னர் அவர்களிடம் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி, ஸ்ரீ கோதண்டராமர், சீதை, அனுமன் சிலைகளை பல்லக்கில் எடுத்துக்கொண்டு வந்தார். அந்த சிலைகளை தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய எண்ணி கொண்டு வரும் வழியில் வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது.
வடுவூரில் விக்ரகங்கள்
அங்கு தங்கி இளைப்பாறி, விக்ரகங்களை வடுவூர் கோவிலில் வைத்து இருந்தார். இந்த எழிலார்ந்த விக்ரகங்களை கண்ட அவ்வூர் மக்கள் அவற்றை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மன்னரிடம் கேட்டுக்கொண்டனர். விக்ரகங்களை மன்னர் மீறி எடுத்து சென்றால்,
தாங்கள் அனைவரும் உயிரை மாய்த்து கொள்வதாக கூறினர். உடனே மன்னனும் மனமுவந்து அந்த விக்ரகங்களை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். பின்னர் லட்சுமணன் விக்ரகத்தையும் புதிதாக செய்தனர்.