திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம். இது ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
கோயிலில், வரதராஜப் பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயிலுக்கு முன்னே உள்ள அழகான ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் ஒரு மண்டபத்து தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நாலு கால பூஜை மரபு. வருடாந்திர பிரம்மோத்சவம் வைகாசித் திங்களில் விமரிசையாக நடைபெறுகிறது.
108 திவ்யதேசங்களில் 8-ம் இடத்தில் இருக்கும் பெருமை பெற்றது. மதுரை நகருக்கும் கூடலூர் என்ற பெயர் வழங்கப்படுவதால், இத்தலம் ‘வட திருக்கூடலூர்’ என்றும் ‘சங்கம க்ஷேத்ரம்’ என்றும் வழங்கப்படுகிறது.
பெருமாளின் வராக அவதாரத்துக்கு முன்னால் தோன்றிய கோயில் இது. ஒரு முறை இரண்யாட் சகன் என்ற அசுரன், பூமாதேவியை ஏழு சமுத்திரங் களுக்கும் கீழே அதல பாதாளத்தில் கொண்டு போய் வைத்துவிட, சிவபெருமான் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து பெருமாளி டம் முறையிட்டார்களாம். பூலோகத்தைக் காப்பதற்காக, வராக அவதாரம் எடுத்த பெருமாள், இங்கே ஆடுதுறையில் மண்ணுக்குள்ளே தோண்டிப் புகுந்து, ஸ்ரீமுஷ்ணத்தில் பூமாதேவி யுடன் வெளிப்பட்டதாக புராணங்கள் சொல் கின்றன. வையகத்தை மீட்டுக் கொண்டு வந்தவர் என்பதால், இத்தலத்தில் ‘வையம் காத்த பெருமாள்’ என்று அவர் அழைக்கப்படுகிறார். இரண்யாட் சகனை அழிப்பதற்கு பிரம்ம பிரயத்தனம் மேற்கொண்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கே ஆலோசித்ததால், இத்திருத்தலம் ‘திருக்கூடல்’ என்றும் வழங்கப்படுகிறது.
இப்புராணச் சம்பவத்தை, ‘கூற்றே ருருவின் குறளாய் நிலநீர் ஏற்றா னெந்தை பெருமானூர்போல்’ என்ற திருமங்கையாழ்வாரின் பாசுர வரிகள் விவரிக்கின்றன. மகாவிஷ்ணு ஸ்ரீமுஷ்ணத்தில் பூமிதேவியுடன் வெளிப்பட்டார் என்றாலும், திருமங்கையாழ்வார் அந்த முயற்சியின் முதல் கட்டம் செயல்படுத்தப்பட்ட இந்தத் தலத்தையே பாடியிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தல வரலாறு
முற்காலத்தில் இங்கே ஆட்சி புரிந்த அம்பரீச மகாராஜா, பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர். மாதந் தோறும் ஏகாதசி விரதம் இருப்பார். அவருடைய பக்தியிலும் விரதத்திலும் அகமகிழ்ந்த பகவான், அவருக்கு நேரே பிரத்யட்சமாகி ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்க, இதேபோல எப்போதும் விரதம் இருக்கும் ஆன்மபலத்தையும் மனோசக்தியையும் கேட்டாராம் அம்பரீச ராஜா.
இதைக் கண்டு பொறாமையடைந்த துர்வாச முனிவர், அவருடைய விரதத்தைக் கலைக்கும் முடிவோடு, துவாதசி தினத்தில் மன்னர் விரதம் முடிக்கும் தறுவாயில் வந்து, விரதத்தை முடிக்கவிடாமல் இடையூறு ஏற்படுத்தியிருக்கிறார்.
தன் பக்தனுக்குத் துன்பம் விளைவிக்கும் துர்வாசரைக் கண்டு வெகுண்ட பெருமாள், தன் கையிலிருந்த சக்கரத்தை அவர் மீது ஏவ, மிரண்டுபோன துர்வாசர், தன் ஆணவம், கோபம் அடங்கி, பெருமாள் பாதங்களில் பணிந்தார் என்கிறது புராணம். ஏகாதசி விரதத்தின் மகிமைக்கும் இச் சம்பவம் ஓர் உதாரணம். பெருமாள் ஏவிய சக்கரம்தான் இங்கிருக்கிறது என்று ஒரு நம்பிக்கை. அதுதான் ‘பிரயோக சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயிலின் இக்கோயிலின் தல விருட்சம் பலா மரம். கோயிலின் தீர்த்தமாக சக்கர தீர்த்தம் என்ற புஷ்கரணியும் காவிரி நதியும் உள்ளன.
பூவராகப் பெருமாள்
பெரிய மதில் சுவருடன் கூடிய பிராகாரத்துடன் அமைந் திருக்கும் கோயிலின் முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. கோயில் கோபுரத்தில் தசாவதாரச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், எதிரே மண்டபத்தில் இடது பக்கத்தில் சக்கரத்தாழ்வார் வடக்கு நோக்கி தரிசனம் தருகிறார். சக்கரத்தாழ்வாருக்குப் பின்னால் யோக நரசிம்மர் அருளாசி வழங்குகிறார். மண்டபத்தில் வலது பக்கத்தில் பூவராகப் பெருமாள் காட்சி தருகிறார். பூமித் தாயாரை மீட்கும் முயற்சியில், இந்தத் தலத்தில்தான் முதல் அடி எடுத்து வைத்த கம்பீரம் அந்தச் சுதைச் சிற்பத்தில் வண்ணமயமாக விளங்குகிறது. அவர் மடியில் பூமித் தாயார்.
கருவறை மண்டபத்தில் வலது பக்கம் விஷ்வக்சேனர், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வரதராஜப் பெருமாள் ஆகியோரும், பிராகாரச் சுற்றில் பிள்ளை லோகாச்சார்யார், ஆளவந்தார், மணவாள மாமுனிகள், ராமாநுஜர், திருமங்கையாழ்வார் ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளை அலங்கரிக்கிறார்கள். தாயார் சந்நிதி யில் மூலவராக பத்மாசினி தாயார், உற்சவராக புஷ்பவல்லித் தாயார் ஆகியோர் தனித்தனியே அருள்பாலிப்பது சிறப்பு.
பிராகாரத்தில் தனிச் சந்நிதியில் ஆண்டாள் அருள்பாலிக்கிறார். மூலவர் வையங்காத்த பெருமாள் (ஜகத்ரட்சகன்), நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இவருக்கு முன்னால் வராஹர். உற்சவரும் வையங்காத்த பெருமாளே. இவர் பிரயோக சக்கரத்தைக் கையிலேந்தியிருக் கிறார்.
தம்பதி ஒற்றுமைக்குப் பிரார்த்தனை
நந்தக முனிவரின் மகளான உஷை மீது, அவள் கணவனும் சந்திரகுல மன்னனுமான விஸ்வஜித் சந்தேகம் கொண்டு, அவளை வீட்டை விட்டு விரட்டிவிட்டான். அந்தப் பெண்பாவத்தால் செல்வம் அழிந்து, தொழுநோயும் பீடிக்க, மனைவிக்குச் செய்த துரோகத்துக்குப் பிராயச் சித்தம் செய்ய அவளைத் தேடிப் போனான். அவன் துயரைக் கண்ட துறவி ஒருவர், ‘நீ திருக்கூடலூர் எம்பெருமானை வணங்கு, உன் மனைவி உன்னைச் சேருவாள்’ என்று ஆறுதல் அளித்தார். அதன்படியே அவன் பெருமாளின் பாதம் பற்ற, விரைவில் தன் நோய் நீங்கியதோடு, மனைவியையும் அடைந்து மகிழ்ந்தான். அதற்கு நன்றிக்கடனாக, பெருமாளுக்குத் தேர் ஒன்றைச் செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் கணவன் மனைவி சேர்வதற்கான பிரார்த்தனைத் தலம் இது. தொடர்ந்து 16 நாள்கள், ஸ்ரீஜகத்ரட்சகப் பெருமாளுக்கு வெண்ணெய், கல்கண்டு நைவேத் தியம் செய்து, வெள்ளை மலர்களால் (மல்லிகை, முல்லை) அர்ச்சனை செய்து, நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். இருவருக்குமிடையில் அந்நியோன்யம் தழைக்கும்.
நிவேதனம் செய்த வெண்ணெயையும், கல்கண்டையும் கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கு விநியோகிக்கலாம். தம்பதியருக்குள் மன ஒற்றுமை ஏற்பட்டு அவர்கள் மீண்டும் இணைவது, இப்போதும் நடந்துவருகிறது. இந்தப் பரிகாரத்தை இவர்கள் வாரம் ஒருநாள் வீதம் பதினாறு வாரங்களுக்கு மேற்கொள்கிறார்கள்.
அதேபோல, இக்கோயிலின் வடக்கு நோக்கிய சக்கரத்தாழ்வாரை செவ்வாய்க்கிழமைகளில் 16 நெய் தீபங்கள் ஏற்றி, வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி, வெள்ளை நிற மலர்களால் அர்ச்சித்து, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் கடன் தொல்லைகளிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்; நஷ்டத்தில் இயங்கும் தொழில் விருத்தியடைந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.
அது மட்டுமல்ல; இங்கே 16 தினங்கள் பிரார்த் தனை, அர்ச்சனை செய்தால் நினைத்தகாரியங்கள் தடையில்லாமல் நிறைவேறும். தொழிலில் மேம்பாடு, வேலைவாய்ப்பு, தடைப்படும் திருமணம் என பிரார்த்தனை எதுவாக இருந் தாலும் அதை நடத்தி வைக்கிறார், வையகத்தைக் காத்து வாழவைக்கும் இந்த ஆடுதுறை பெருமாள்