பீஷ்ம ஏகாதசி
ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஏகாதசிக்கு ஒவ்வொரு பெயர் உண்டு. இது போல் தை மாதத்தில் வரும் ஏகாதசிக்கு பீஷ்ம ஏகாதசி என்று பெயர். இந்த நாளில் விரதம் இருந்து, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் எதற்காக விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும், பீஷ்ம ஏகாதசியன்று எப்படி விரதம் கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
ரத சப்தமியை அடுத்து வரும் ஏகாதசிக்கு, பீஷ்ம ஏகாதசி என்று பெயர். பீஷ்மர் அம்புப்படுக்கையில் இருந்து, விஷ்ணு சகஸ்ரநாமத்தை இந்த உலகுக்கு வழங்கினார். எனவே, இந்த ஏகாதசி மிகவும் உயர்வானதாகக் கருதப்படுகிறது.
விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பாடுவதும் கேட்பதும் புண்ணிய பலன்கள் அளிக்கும். நம்மைச் சுற்றியிருக்கும் பாவங்களும் பாவிகளும் விலகி ஓடுவர். இதற்கு நல்ல உதாரணம் மகாபாரதத்தில் உண்டு.
முதன்முறை விஷ்ணு சகஸ்ரநாமத்தை உபதேசித்தவர் பீஷ்மர். அம்புப்படுக்கையில் பீஷ்மர் இருந்தபோது, கௌரவர்களும் பாண்டவர்களும் அவரைச் சூழ்ந்திருந்தனர். பகவான் கிருஷ்ணன், அவர்களுக்கு நடுவே நின்றார். பீஷ்மர் தன் உதிரம் அத்தனையும் வழிந்தோடிய பின்பு வைராக்கியத்தில் பிறவிப் பிணி அணுகாமல் இருக்கத் தன் முன்னே நின்ற கிருஷ்ணனை வணங்கி, அவனை விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைச் சொல்லி துதிக்க ஆரம்பித்தார்.
மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணன் முன்பாக விஷ்ணு சகஸ்ரநாமத்தை கூறி முடித்த பிறகே பீஷ்மரின் உயிர் பிரிந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் மோட்சம் அடைந்தார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. இதனால் அந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மோட்சத்தை அளிக்கும் என சொல்லப் படுகிறது.
பீஷ்மர் இதனை சொல்லி முடித்த பின்பே 'இத்தனை பெருமை உடைய சகஸ்ரநாமத்தை உலகுக்கு எப்படி சொல்வது? திரும்ப யாரால் சொல்ல முடியும்' என்று பாண்டவர்கள் யோசித்தனர். அச்சமயம் கண்ணபிரான் 'சகாதேவன் ஏகசந்தகிரஹி. அவனால் மட்டுமே திரும்ப சொல்ல முடியும்' என்று கூற சகாதேவன் மூலமே இது உலகுக்கு தெரிய வந்தது.
நல்லவற்றைக் கேட்பதுதான் கௌரவர்களுக்குப் பிடிக்காதே... அவர்கள் அங்கிருந்து விலகிப்போயினர். சகஸ்ரநாமத்தில் ஒரு நாமத்தைக்கூட அவர்கள் மனத்தால் கேட்கப் பிடிக்காமல் விலகிப்போனார்கள். அன்றுமுதல் இன்றுவரை விஷ்ணு சகஸ்ரநாமம் ஒலிக்கும் இடங்களிலிருந்து இப்படித்தான் பாவங்களும், பாவிகளும் விலகி ஓடுகிறார்கள்.
தினமும் வீட்டில் சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது அவசியம். இயலாதவர்கள், குறைந்தபட்சம் ஏகாதசி தினத்தன்று மட்டுமாவது விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் படிக்கவோ கேட்கவோ வேண்டும்.
இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது வைகுண்ட பதவியை பெற்றுத் தரும் இந்த நாளில் விரதம் இருப்பது வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருக்கும் பலனை கொடுக்கும் என புராணங்கள் சொல்கின்றன. வட மாநிலங்களில் இது ஜெய ஏகாதசி என்ற பெயரால் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் முழுவதுமாகவோ அல்லது பால், பழம், காய்கறிகள், உலர் பழங்கள் சாப்பிட்டோ விரதம் இருக்கலாம்.
அரிசி, தானியங்களை உணவாக எடுத்துக் கொள்வதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது அதிவிசேஷமானது.
மஞ்சள் நிற இனிப்பு வகை அல்லது பழம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.
பசுக்களுக்கு இந்த நாளில் மஞ்சள் நிற வாழைப்பழம் உணவாக அளிப்பது நல்லது.
ராதாபாலு
No comments:
Post a Comment