Wednesday, 5 November 2014

எட்டாக் க(ன்)னிகள்!

எட்டாக் க(ன்)னிகள்!VGK19

பரிசு பெறாத என் விமரிசனத்துக்கான கதை இணைப்பு...
http://gopu1949.blogspot.in/2014/05/vgk-19_23.html


பிறப்பால் வாமனனாகப் பிறந்த ஒரு சிறிய மனிதரின் எண்ணங்களையும், அவரின் திருமண ஏக்கங்களையும், அதனால் அவருக்கு ஏற்படும் ஏமாற்றத்தையும் எட்டாக்க(ன்)னிகள்  என்று எழுச்சியுடன் எடுத்துக் கூறியுள்ள எங்கள் கதாசிரியருக்கு முதலில் ஒரு ஜே!

பேருந்து என்றாலே அதில் பெண்களுக்கும் இடமுண்டே!  அதிலும் கலகலவென்று  பேசும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு முப்பத்தி ஐந்து வயது இளைஞனின் எண்ணங்களும் அவன் வயதுக்கேற்றபடி அந்தப் பெண்களைச் சுற்றித்தானே வரும். கும்மென்ற மல்லிகை மனமும், குசுகுசுவென்று ஓரக்கண்ணாலும், ஒதுங்கி நின்றும் அவர்கள் பேச்சும், சிரிப்பும் எந்த ஆணையும் ஈர்ப்பதில் என்ன ஆச்சரியம். இதனையே ஆசிரியர் மிக அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

அழகிய பெண்களுக்கிடையில் ஒரு ஒட்டடைக் குச்சிப் பெண்ணும் இருந்ததையும், மற்ற அழகிய பெண்களின் பால் ஈர்க்கப்படாத கதாநாயகனின் மனது அவளின்பால் நாட்டம் கொண்டதையும், அவளை   வாத்துக் கூட்டத்தில் இருக்கும் நெட்டைக் கொக்காக கற்பனை செய்ததையும் ஆசிரியர் எழுதியிருப்பது நல்ல சுவாரசியமான கற்பனை!இப்படியும் ஒரு அழகற்ற படைப்பா என்று கதாநாயகன் அனுதாபப் பட்டபோது அவன் ஒரு அழகிய மன்மதன் என்றே எண்ணத் தோன்றுகிறது.அந்தப் பெண் அழகற்றவளாக இருந்தாலும் அவள் வலிய வந்து பேசும்போது எந்த ஆண்மகனும் தன்னை அவள் விரும்புவதாகத்தானே எண்ணுவான்? இது ஆணின் இயல்பான குணம் ஆச்சே?

தன்  உருவத்தைப் பார்த்தால் முப்பத்தி ஐந்து வயது மதிக்க முடியாது என்றபோது கதாநாயகன் மிக இளமையாகத் தெரிபவன் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறார் ஆசிரியர்! இப்படிப்பட்ட அழகான, இளமையான ஆண்மகனுக்கு அவர் வீட்டார் திருமணம் பற்றிய பேச்சை எடுக்காதது ஏன் என்பதை ஒரு சஸ்பென்சாக கூறியுள்ளார் ஆசிரியர்.

மணி என்ன ஆகிறது, காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு என்ன என்றெல்லாம் அவள்  ஒரு நண்பரிடம் பேசுவது போல  எண்ணிக் கேட்டாள்.ஆனால் நம் கதாநாயகனுக்கோ அவளுக்கு தன் மேல் காதல் வந்துவிட்டதாக எண்ணம் தோன்ற, நதியின் வேகத்தையும், இளமை உணர்ச்சிகளையும் கட்டுப் படுத்த முடியாது என்று சொல்வதாக ஆசிரியர் கூறுவது மிகச் சரியான உவமை.

ஒருநாள் மணி கேட்டதாலும், இன்னொருநாள் டிக்கெட்டுக்கு சில்லறை கொடுத்ததாலுமே அவள் தன்னைக் காதலிப்பதாக நினைத்த கதாநாயகனின் பேதை மனதை  என்ன சொல்வது?

காதல் வரும்போது தான் காதலிப்பவரின் அழகு காணாமல் போவது காதலின் தன்மைகளில் ஒன்று! அதனால்தான் அந்த அழகற்ற பெண்ணும் உலக அழகியாகத் தோன்றுகிறாள் நம் கதாநாயகனுக்கு!

அது மட்டுமா?அவளுக்கு தன்  காதலைக் கொட்டி கடிதமே எழுதி விட்டானே! ஆனால் பாவம் அந்தக் கடிதத்தின்ஆயுள் கொடுக்குமுன்பே மடிந்து போயிற்றே?
எழுதிய காதல் கடிதத்தை தானே படித்துப் ,படித்துக் கிழிந்து போனதால்,இரவு முழுதும் கண்விழித்து வேறொரு கடிதம் எழுதி அதை மிக பத்திரமாக வைத்துக் கொண்டதை, அவளைத் தன்  மனதில் பூட்டி பத்திரமாக வைத்துக் கொண்டதாக சிம்பாலிக்காக  சொல்லியுள்ளார் கதாசிரியர்.
மறுநாள் அந்தப் பெண்ணின் தோழி அவளது நிச்சயதார்த்தப் பத்திரிகையைக் கொடுத்தபோது அதைக் காதல் கடிதம் என எண்ணி,அவளுக்கே முத்தம் கொடுப்பதாக நினைத்து கவரைப் பிரித்து படித்ததும், அது நிச்சயதார்த்தப் பத்திரிகை என்று தெரிந்து அவன் அதிர்ச்சியாகி, மயக்க நிலைக்கு உள்ளானதையும், அழகு இல்லாவிட்டாலும், ஒரு பெண்ணுக்கு உயரமும் கூடுதல் பர்சனாலிட்டிதான் என்று கதாநாயகன் மனம் வருந்துவதை, அந்த ஏக்கத்தை அருமையாக எழுதியுள்ளார் ஆசிரியர்!
அந்த அழகு குறைந்த பெண்ணே (கடவுளின் படைப்பில் யாருமே அழகற்றவர்கள் இல்லை என்பது என் கருத்து.) ஒதுக்கும் அளவுக்கு நம் கதாநாயகனுக்கு என்ன குறை?
அதை ஒரு சிறிய இடைவேளை விட்டு சஸ்பென்சை உடைக்கும் தனித்தன்மை கதாசிரியரின் சிறப்பான பாணி எனலாம். பாவம்....முப்பத்தைந்து வயதில் மூன்றடி உயரமே உள்ள கதாநாயகனுக்கு  எந்தப் பெண்தான் கழுத்தை நீட்டுவாள்! எல்லாப் பெண்களுமே எட்டாக்கன்னிகள்தான்!
ஆசையில்லாத மனிதர் யார்? இப்படிப்பட்ட மனிதர்களைப் படைத்த இறைவனைத்தான் கேட்க வேண்டும்.
நாராயண!நாராயண! என்னை அழைத்தீர்களா தேவரே?

வா நாரதா! உன் தந்தையை சற்று அழைத்துவா. 

இதோ வருகிறேன்....நாராயண...நாராயண!
வணங்குகிறேன் தந்தையே!
 
வா மகனே நான்முகா! சற்று பூலோகத்தைக் குனிந்துபார். ஒரு சிறந்த கதாசிரியரின் நாயகனுக்கு ஏற்பட்டிருக்கும் மன சஞ்சலத்தை எப்படி நீக்கப் போகிறாய்?

தந்தையே! அவனுடைய பிறப்பு அப்படி. நான் என்ன செய்ய முடியும்?

அவனைப் படைத்தது நீதானே? அவனுக்கேற்ற வாழ்க்கையையும் நீதானே அமைத்துக் கொடுக்க வேண்டும்?

பிதாவே! அவனது உருவத்தில் தாம் கூட ஒரு அவதாரம்  எடுத்துள்ளீர்களே? மறந்து விட்டீரா?

எனக்கு அதில் எந்த பிரச்சினையும்  வரவில்லை.ஆனால் அந்தப் பேதை மனிதனின் துன்பத்தை எப்படி போக்குவது? அவன் உருவம் போன்ற பெண்கள் எங்கும் அதிகம் பிறப்பதில்லையே? 

மன்னிக்க வேண்டும் தந்தையே! அந்த உருவம்தான் அவர்களை சர்க்கஸில் கோமாளிகளாக்கி பலரையும்  சிரிக்க வைத்து, மக்களின் கவலைகளை மறக்க வைக்கிறது. அவர்களின் துணையையும் அங்கேயே தேடிக் கொடுக்கிறது.ஆனால்....இந்த மனிதன் அந்த நிலைக்கு போகாததால்தான் இந்த கஷ்டம். இவர் படித்து, வேலையில் இருக்கிறானே? நீங்கள் சொல்வது போல் இந்த வடிவப் பெண்கள் அதிகம் பேர் இல்லை என்பதும் உண்மைதான்!

அதனால் என்ன?  அவனுக்கேற்ற ஒரு பெண்ணை உடனே அவன் திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்.


மன்னிக்க வேண்டும் தந்தையே! அதுதான் இன்று இந்த பூமியில் மிக கஷ்டமான வேலை. நல்ல பெர்சனாலிட்டியுடன், பல லட்சம் சம்பளம் வாங்கும் ஆண்களையே  இந்தக்காலப் பெண்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லையாம்! இதில்  இந்த வாமன வடிவினனுக்கு பெண்....என்னை விட்டுவிடுங்கள்..அதோடு படைப்பது மட்டுமே என் செயல். காப்பாற்றுவது தங்கள் தொழில் அல்லவா? இந்த நாரதனுடன் சென்று அவனுக்கான ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து....அவனுக்கு திருமணம் நடக்க அருள் புரிவீராக! நான் சென்று வருகிறேன்.

நாராயண...நாராயண! தேவா! எனக்கும் கொஞ்சம் இந்திர லோகத்தில் வேலை இருக்கிறது. இதோ சென்றுவிட்டு வந்து விடுகிறேன். (பூலோகத்தில் பெண்தேடுவதா! நடக்காத காரியம் ஐயனே! நான் ஜூட்!)

இப்படி ஒரு பெரிய பிரச்னை பூலோகத்தில் இருப்பது தெரியாமல் நான் பாற்கடலில் சுகமாகத் தூங்கி விட்டேனே? இதற்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்ட வேண்டும்.

===============================================================================================
எட்டிய மணிகள்!
தன கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு கணவர் தான் இறந்த பின் தன் மனைவியைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல், தான் சம்பாதித்த ஒரு கோடி ரூபாய் பணத்தையும்  தன்னுடனே புதைக்க வேண்டும் என எண்ணியது எவ்வளவு கேவலமான, தன்னலமான எண்ணம். தான் இறந்தபின் அது நடக்குமா என்று யோசிக்காத அல்ப மனம்

அதைச் செய்வதாக வாக்கு கொடுத்த அந்த மனைவியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? .தேவ ரகசியமாக அதை மனதில் வைத்திருந்த மனைவி, கணவர் இறந்ததும் அழுத கண்ணும், சிந்திய மூக்குமாக நடித்து, அவரின் டைரிகள் என்று கூறி அந்தப் பெட்டியை அவருடன் புதைத்தது அவளது சாமர்த்தியம்!
எந்த மனைவியாவது அப்படிச் செய்வாளா? யாருக்கும் பயன்படாமல் பூமியில் புதைக்கப்பட்ட பணத்தை வேறு ஏதாவது நல்ல காரியத்துக்குப் பயன்படுத்தலாமே?
அவளின் கூடப் பிறந்த தம்பிக்கோ இத்தனை பணமும் போய்விட்டதே என்ற கோபம். யாராவது தோண்டி எடுத்துவிட்டால் பண மொத்தமும் போய்விடுமே என்ற ஆதங்கம்...அதைத் தானே, அக்காவுக்குத் தெரியாமல் எடுக்க அந்த தம்பிக்கு அறிவில்லையோ! 

'பணத்தின்
அருமை தெரியாமல் இப்படி பண்ணி விட்டாயே' என்ற தம்பியிடம் 'போகட்டும் போ. அவர் ஆசையை நிறைவேற்றி விட்டேன்' என்று கூலாகச் சொன்ன அக்காவா பைத்தியக்காரி!
செக்குகளை பெட்டியில் போட்டு புதைத்துவிட்டு, அந்தப் பணத்தை யாரும் எடுக்க முடியாது என்று ராஜாவுக்கே 'செக்' வைத்த புத்திசாலி மனைவியாச்சே அவள்! அவனுக்கு முன்னால் பிறந்த அவள் 'அக்காவா கொக்கா'.....அவனைவிட அறிவாளி ஆச்சே! அவளுக்கு மாலையிட்டு இத்தனைநாள் குடித்தனம் நடத்தி இறந்த அவள் கணவர்தான் முழு முட்டாள்! பணத்தைப் புதைத்து விட்டாயே என்று அவளிடம் சண்டை போட்ட அவள் தம்பி படு முட்டாள்!
ஆங்கிலக் கதையை அழகுதமிழில் எழுதி வழங்கிய ஆசிரியருக்கு பாராட்டுகள் பல! ஆஹா...இரண்டு கதையிலும் ஒரு ஒற்றுமையைக் கண்டுபிடிச்சுட்டேனே...
முதல் கதையில் கதாநாயகன் காதல் பண்ணிய பொண்ணு 'கொக்கு' போல இருந்தாள்!

இந்தக் கதையில் மனைவி, அக்காவான 'கொக்கு'!

No comments:

Post a Comment