Wednesday, 5 November 2014

VGK 34...பஜ்ஜின்னா பஜ்ஜிதான்
VGK 34...பஜ்ஜின்னா பஜ்ஜிதான்...கதைக்கு தேர்வாகாத என் விமரிசனம்...

கதைக்கான இணைப்பு...
ஒரு சிறு நெல்லிக்கனியளவு கதையை கருவாகக் கொண்டு, அதனை சொற்சுவை, பொருட்சுவையுடன், தன் எண்ணங்களையும், அதில் கிடைக்கும் படிப்பினைகளையும் அழகாக எழுதி, படிக்கும் நம்மை அதில் லயிக்க வைத்து ஒரு பலாப்பழம் அளவிற்கு நல்ல கருத்துக்களை  இனிமையாக எடுத்துச் சொல்லும் கதாசிரியரின் எழுத்துத் திறமை என்னை எண்ணும்தோறும் வியக்க வைக்கிறது.
 
இம்முறை நம் கதாசிரியர் எடுத்துக் கொண்ட கரு சாதாரண பஜ்ஜி...இல்லை இல்லை பஜ்ஜி பற்றிய பல விஷயங்களை பிட்டு பிட்டு வைக்கும் நம் கதாநாயகனின் வீட்டு சமையலறைக்குள்ளிருந்தே இக்கதையை விமரிசனம் செய்தால் என்ன?

கதாநாயகனின் இல்லத்தரசி பானுவுக்கும், அவள் சினேகிதி லல்லுவுக்கும் தினமும் மதிய நேரம் ஊர் உலகத்தாரைப் பற்றிய விஷயங்களை அலசும் இன்பமான நேரம். மெகா தொடர்களை விட சுவாரசியமான பல விஷ யங்களை அலசோ அலசு என்று பேசி மகிழும் நேரம்!அத்துடன் லல்லுவின் கணவரும் நம் கதாநாயகரின் ஆஃபீஸ் நண்பர்.அவர்களின் இன்றைய டாபிக் பஜ்ஜீ...!!


பானு....நம்மாத்துக்காரர் வேலை செய்யற ஆஃபீஸ் பக்கத்தில ஒரு பஜ்ஜிக் கடை இருக்கில்லையா, அவன் கடை பஜ்ஜியை நீ சாப்பிட்டிருக்கியோ? அவர் பஜ்ஜி பண்ற அழகை பார்த்திருக்கியோ?

லல்லு...அவன் என்ன எண்ணையை வைக்கிறானோ? எந்தக் கையால பண்றானோ? அதல்லாம் நான் சாப்பிட்டதில்ல.
 
நேத்திக்கு கோவிலுக்கு போனபோது அந்த வழியா போனேனா, அந்த பஜ்ஜிக்கடையைப் பார்த்தேன். என்னைக்கும் இல்லாம கொஞ்சம் நின்னு, ரசிச்சுப் பார்த்தேன். நிறைய விஷயம் புரிஞ்சுது பானு.

அட...பஜ்ஜிக்காரன் கிட்ட இருந்து ஞானம் கிடைச்சுதா?அதை எனக்கும் சொல்லேன்.

அந்த பஜ்ஜி போடறவர் என்ன வேகமா அந்த வேலையை செய்யறார் தெரியுமா? அவருக்கு ரெண்டு கைதான் இருக்கு. ஆனா பத்து காரியம் பண்றார் தெரியுமோ? பம்ப் ஸ்டவ்வுக்கு காத்து அடிச்ச்சுண்டு, அடுத்த நிமிஷம் கறிகாயல்லாம் தானே மளமளன்னு நறுக்கிண்டு,மாவில தோச்ச பஜ்ஜிகளை பதமான சூட்டுல எண்ணையில போட்டுண்டு, அதை சிவக்காம பக்குவமா வேக விட்டு எடுத்து, எண்ணையை அழகா வடிச்சு பாத்திரத்துல போட்டுன்னு...என்ன ஒரு சிஸ்டமேடிக்கா பண்றார் தெரியுமோ?

ஃ பைவ் ஸ்டார் ஹோட்டல் பஜ்ஜிஎல்லாம் அவன்கிட்ட  பிச்சை வாங்கணும்.அத்தனை சூப்பரா பாக்கும்போதே வாயில தண்ணி ஊறற்து! அதைப் பார்த்த எனக்கும் ரெண்டு பஜ்ஜி வாங்கி சாப்பிட ஆசையாத்தான் இருந்தது. ஆனாலும் நாம போய் அந்தக் கடைல எப்படி வாங்கி சாப்பிடறதுன்னு ஆசையை அடக்கிண்டு வந்துட்டேன்! 

அந்த பஜ்ஜிக்காரனின் படுவேக சமையல் திறமையை அஷ்டாவதானி...தவறு தசாவதானிதான் சரி...ஆசிரியர் பக்காவாக எழுதியிருந்த அழகு, பஜ்ஜி செய்வதையும், அதனை ரசித்து, ருசித்து சாப்பிடுவதை விடவும் சுவை! பஜ்ஜிகள் சண்டை போடுவதையும், நீச்சல் அடிப்பதையும், இறுதியில் கண்ணீர் விட்டு  வெளியேறுவதையும் (ஏய்...இந்தப் பக்கம் வராதே. இது என் ஏரியா  என்று ஒரு பஜ்ஜி சொல்ல, ஆமாம்...இது உன் அப்பன், பாட்டன் நிலமா என்ன? என்று அடுத்தது முறைக்க, அப்பாடி...ரெண்டும் சண்டை போடும் நேரம் நாம கொஞ்சம் ஜாலியா நீஞ்சுவோம் என்று ஒரு உப்பலான குடை மிளகாய் பஜ்ஜி குதித்து ஓட...!) படித்த என் கற்பனை இது! கதாசிரியரின் நகைச்சுவையான எழுத்துக்கு பெரிய சபாஷ்!
ஏன் லல்லு ...நம்ம ஆத்துக்காரர்லாம் தினமும் அவன்கிட்ட பஜ்ஜி வாங்கி சாப்பிடறதா இவர் சொல்லுவார்.உனக்கு ஆசையா இருந்தா ஒரு நாள் வாங்கிண்டு வரச் சொல்லி சாப்பிடு. இப்போ இந்த காஃ பியை சாப்பிடு.
ஆனாலும் அவன் இப்படி எண்ணை  அடுப்பு முன்னால வேகறதைப் பாக்கும்போது ரொம்ப பாவமா இருக்கில்லையா? ஆஃ பீஸ்ல வேலை செய்யறவாள்ளாம் ஏ.சி ல ஹாய்யா வேலை செய்யறா. அதுல வர சம்பளமே நமக்கு சமயத்துல போற மாட்டேங்கறதே? இவனுக்கு என்ன  வந்து எப்படி குடித்தனம் பண்றானோ? ஹ்ம்...நான் வரேன் பானு ..குழந்தைகள் ஸ்கூல்லேருந்து வந்துடுவா.
கதாநாயகன் யோசிப்பது போல இத்தனை வசதிகளுடன் வேலை பார்ப்பவர்களுக்கே பற்றாக்குறை ஏற்படுகிறது.இதில் இது போன்ற ரோட்டோரக் கடையில் வேலை செய்யும் ஒரு சாதாரணத் தொழிலாளிக்கு என்ன வருமானம் பெரிதாகக் கிடைத்துவிடும்? தொழிலாளியின் வேலையைப் பற்றி பத்து விதமாக எடுத்துச் சொன்ன கதாசிரியர் அடுத்து அந்த முதலாளியின் ஒவ்வொரு செய்கையையும் கதாநாயகன் சொல்வது போல விலாவாரியாகக் கூறுகிறார். பஜ்ஜிக்கடை எதிரில் ஒருமணி நேரம் அமர்ந்து  அவரின் செய்கைகளை கவனித்தால் மட்டுமே இப்படி எழுதுவது சாத்தியம்.கதாசிரியரின் கூர்மையான கண்ணோட்டம் இதில் மிக அருமையாகத் தெரிகிறது! ஒரு திரைப் படத்தைப் பார்ப்பது போல ஒவ்வொருவரின் செய்கையையும் விளக்கும் ஆசிரியரின் ஆழ்ந்த கண்ணோட்டத்திற்கு ஒரு பலத்த கைதட்டல்!
வா லல்லு...இன்னிக்கு என்ன நியூஸ்? ஆமாம் நேத்திக்கு சொன்னியே பஜ்ஜி வாங்கித் திங்க ஆசையா இருக்குன்னு. உங்காத்துக்காரரை வாங்கிண்டு வரச் சொன்னியா?

இல்ல பானு ...இன்னிக்கு அங்க பக்கத்துல இருக்கற குப்பைத்தொட்டி ரொம்பி வழிஞ்சுண்டு கேவலமா இருக்கு...ஒரே நாத்தம்..அங்க இருந்து பத்து தப்பிடி கூட இல்ல இந்த பஜ்ஜிக் கடை. அதைப் பார்த்த எனக்கு பஜ்ஜி ஆசையே போயிடுத்து.வாங்கித் தின்னா என்ன வியாதியெல்லாம் வருமோ? இனிமேல் அந்த பஜ்ஜியை வாங்கி சாப்பிடாதேங்கோனு என்னவர்ட்ட சொல்லணும்.  நாமளே  ஆத்தில பஜ்ஜி பண்ணி சாப்பிட்டாப் போச்சு.

நல்ல வேளை  புரிஞ்சுண்டியே? நான் எங்காத்துக்காரர் கிட்ட கூட இதைத்தான் சொன்னேன். அந்த பஜ்ஜியை வாங்கி சாப்பிட வேண்டான்னு. ஆனா அவா கேட்டாதான? அவருக்கேன்னமோ நான் பண்ற பஜ்ஜியை விட மொறுமொறுன்னு, டேஸ்டா இருக்காம் இந்த பஜ்ஜி. எனக்கும் வங்கித் தரட்டுமான்னார். நான் வேண்டான்னுட்டேன். அந்தக் குப்பைத் தொட்டியை நினைச்சா குமட்டிண்டுதான் வருதே தவிர பஜ்ஜி திங்க ஆசை வருமா என்ன?

ஆனா பானு...அந்த கடை வாசல்ல சாயங்கால நேரத்தில கூட்டத்தைப் பார்க்கணுமே. காலேஜ், பள்ளிக்கூடம் போற பசங்கள்ள இருந்து, வேலைக்குப் போற பொண்கள், ஆஃபீஸ்ல இருந்து திரும்பிப் போறவா...ஏன் வாக்கிங் போற வயசானவா கூட அந்த பஜ்ஜியை எப்படி ரசிச்சு சாப்பிடறா தெரியுமோ? அதுக்கு காரணம் என்னனு யோசிச்சேன். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி பிரச்னை. சிலருக்கு வேலைச் சுமை. இளசுகளுக்கு சித்த நேரம் ஹாய்யா நின்னு ஜாலியா வம்படிக்க ஆசை. வயசானவாளுக்கு ஆத்தில இவாளுக்கு பீ.பி, சுகர்னு சாக்கு சொல்லி வாய்க்கு ருசியா எதுவும் சாப்பிட முடியாத கஷ்டம். அம்மாக்களுக்கு ஆத்தில டி ஃ பன் பண்ண முடியாதபோது குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க இன்ஸ்டன்ட் ஸ்நேக். இப்படி எல்லாரையும் தன்னோட வாசனையாலயும், ருசியாலயும் கட்டிப் போடற பஜ்ஜியால  எத்தனை பேர் ரிலேக்ஸ் ஆகறா பார்த்தியா?

என்ன ரிலேக்ஸோ லல்லு..அவாளுக்கல்லாம் அந்த குப்பைத் தொட்டி தெரியாதோ? திரும்பி நின்னுண்டு சாப்பிடுவாளாயிருக்கும். அவா மூக்குல அந்த நாத்தத்தை விட இந்த பஜ்ஜி வாசனைதான் தூக்கலா தெரியும் போலருக்கு. என்ன கஷ்டமோ போ. அவன் கடைல நல்ல வியாபாரம் ஆனாதான அவனும் குடும்பம் நடத்த முடியும்? 


ஆமாம்...அந்த பசி நேரத்தில குப்பைத் தொட்டியையும், ஈ, கொசு, நாற்றத்தையும்விட அந்த பஜ்ஜி மணம் மனசை மயக்கறதில்லையா? அந்த இடம் சரியில்லாட்டாலும் தரம்  நன்னா இருக்கே? அதான் அந்த பஜ்ஜிக்கடைக்காரரோட வெற்றின்னு சொல்லலாம்.

அட்டெண்டர் ஆறுமுகம் வாங்கி வரும் சூடான பஜ்ஜிகளின் சுவையை விட கதாசிரியர் அந்த பஜ்ஜிகளைப் பற்றி அவற்றை கவனிக்காவிட்டால் கோபித்துக் கொண்டு அவை தொஜ்ஜியாகிவிடும் என்று கூறுவது, அவற்றிற்கும் நம்மைப் போல் உணர்வுகள் உண்டோ என்று எண்ண வைக்கிறது. இந்த பஜ்ஜி சாப்பிட்ட அனுபவம் அவருக்கு நிறையவே உண்டோ என்றும் எண்ணம் தோன்றுகிறது இந்த உயிரோட்டம்தான் இவரின் கதைகளில் எவரையும் ஈர்க்கும் மாயாஜாலம் எனலாம். இப்படிப்பட்ட சுவாரசியமான இவரின் எழுத்துக்களுக்கு ஒன்று அல்ல நூறு 'ஜே'க்கள் போடலாம்!

ஒருசிறந்த  உழைப்பாளிக்கு உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளம் கொண்ட கதாநாயகன் 'தான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறட்டும்' என்ற எண்ணத்தில் அந்த பஜ்ஜிக் கடைக்காரரை வலிய அழைத்துக் கடன் கொடுப்பதாகச் சொல்வது அவரது சிறந்த மனிதாபிமானத்தை தெரிவிக்கிறது.
 
ஆனால் தான் செய்யும் தொழிலே தெய்வம் என்று வாழும் அந்த பஜ்ஜிக்காரர் ஒரு பெரிய மனிதர் கூப்பிடுகிறாரே என்று விழுந்தடித்து ஓடி வராமல், பிறகு வருகிறேன் என்று கூறியது அவரது மரியாதை மாறாத தன்மானத்தைக் காட்டுகிறது.
 
அதனை நினைவில் கொண்டு மறுநாள் காலை கதாநாயகனின் வீட்டுக்கு சென்று என்ன விஷயம் என்று கேட்டபோது அவர் கதாநாயகனை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை என்பது புரிகிறது.
'என்னால் உனக்கு பண உதவி செய்ய முடியும். பெற்றுக் கொள்கிறாயா?'என்று கதாநாயகன் கேட்ட கேள்வியில் சற்று தலைக்கனம் இருப்பதை உணர முடிகிறது.

ஆனால் அந்த சாதாரண மனிதரோ இந்தப் பெரிய பதவியில் இருக்கும் பெரிய மனிதரின் உதவியை மறுத்து இவரை விட உயரத்திற்கு சென்று விட்டார்.
அவர் கடன் வாங்க மறுத்துக் கூறிய காரணங்கள் கீதோபதேசமாக அல்லவா இருக்கின்றன!

அந்தக் காலத்தில்
காலணாவுக்கு விற்ற பஜ்ஜியை இன்றைக்கு மூன்று ரூபாய்க்கு விற்பதை வருத்தத்துடன் சொல்லும் அவரது பணிவு....
'நானாக்கொண்டு மூணு ரூபாய்க்கு பஜ்ஜி விற்கிறேனாக்கும்' என்ற மமதை இல்லாத நற்குணம்....

வேளாவேளைக்கு சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் தொழிலாளிகளில் இருந்து பெரும் பணக்காரர் வரை தன்னால் முடிந்த அளவு சுத்தமாக, சுவையாக பஜ்ஜி செய்து தரும் நேர்மையான உழைப்பு...

எல்லோரும் குலத் தொழிலை கடவுளாக மதிக்க வேண்டும் என்பதை தம் தாத்தா, அப்பா முதல் அனைவரும் செய்த இந்தத்  தொழிலையே தாமும் தொடர விரும்புவதாகக் கூறிய சிறந்த சுபாவம்....

அகலக்கால் வைத்தாலும் ஆழக்கால் வைப்பதை விரும்பாததால், ஒரு புதிய தொழிலை அனுபவம் இல்லாமல் தொடங்க விரும்பாத பக்குவப்பட்ட  மனம்....
எல்லா வசதிகளையும் அளவாகப் பெற்றுள்ளதே எனக்குப் போதும் என்று சொன்ன பேராசைப் படாத நல்ல உள்ளம்....

எல்லாவற்றிற்கும் மேலாக தனக்குக் கொடுக்கும் கடனை தேவையுள்ள வேறு எவருக்காவது கொடுத்தால் அவர்கள் உயரலாமே என்ற நல்லெண்ணம்....

இறுதியாக இன்றைய வியாபாரத்திற்காக சாமான் வாங்கப் போகும் கடமை தவறாத கண்ணியம்...
 
இன்று நடப்பது நன்றாகவே நடக்கிறது...நாளை நடப்பதும் நன்றாகவே நடக்கும்...என்ற  தன் உழைப்பின் மேலுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை...

விஸ்வரூபமாக நிற்கும் பஜ்ஜிக் காரர் முன் நம் கதாநாயகன் ஒரு சின்னப் புள்ளியாகி விட்டாரே!
 
பிழைக்கத் தெரியாதவர்  என்று நம் கதாநாயகன் நினைத்த அந்த சாதாரண பஜ்ஜிக்காரர் அவருடைய எண்ணங்களை பளிச்சென்று ஆணி அடித்தாற்போல் சொல்லிவிட்டு ஒரு கும்பிடு போட்டுவிட்டு சென்று விட்டார்.

நம் கதாநாயகனோ பல விஷயங்களைப் புரிய வைத்த அவருக்கு மானசீகமாக ஒரு பெரிய கும்பிடு போட்டு, சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்து விட்டாரே!  

ஏன்னா...இன்னிக்கு ஆஃபீஸ் லீவா என்ன? இன்னும் கிளம்பாம எதையோ யோசிச்சிண்டிருக்கேளே?  அந்த பஜ்ஜிக் காரர் என்ன சொன்னார்? அவருக்கு எவ்வளவு கடன் கொடுக்கப் போறேள்?

பானு..எனக்கு இப்போதான் புத்தி வந்தது. இவ்வளவு தாராளமா சம்பாதிச்சும் இன்னும் பணம் வேணும், பணக்காரனா ஆகணும்கற ஆசையில ஷேர்  மார்க்கெட்டுல எவ்வளவு  லட்சத்தை நான் விட்டிருப்பேன்? நீ எவ்வளவோ சொல்லியும் திருந்தாம ஏகத்துக்கு கடனை வாங்கி எவ்வளவு நஷ்டப் பட்டேன். அதை நினைச்சா எனக்கு ரொம்ப கேவலமா இருக்கு பானு.

கொஞ்சம் நிறுத்துங்கோ. இதல்லாம் இப்போ எதுக்கு என்கிட்டே சொல்றேள்? இது எனக்கு தெரிஞ்சதுதான? அதனாலதான் நமக்கு தெரியாத காரியத்தில இறங்கக் கூடாதுன்னு பெரியவ சொல்லிருக்கா. சுலபமா பணம் கிடைக்கும், நாம பணக்காராளா ஆயிடலாம்னு நீங்க பேராசைப் பட்டு ஷேர்ல இறங்கினேள். என்னாச்சு? ஏகப்பட்ட நஷ்டம். நாம குருவி மாதிரி சேர்த்த பணமெல்லாம் கோவிந்தா ஆயிடுத்தே? 

இன்னிக்கு அந்த பஜ்ஜிக்காரன் என் கண்ணைத் திறந்துட்டான் பானு. அவன் சாதாரண பஜ்ஜிக் காரனாச்சே, நாம கடன் குடுக்கறேன்னா உடனே ஓடி வந்து வாங்கிப்பான்னு கர்வமா நினைச்சேனே, அது எவ்வளவு முட்டாள்தனம்னு இப்போதான் எனக்கு புரியறது. சர்வ சாதாரணமா 'என் வருமானத்தில நான் வசதியாத்தான் வாழ்ந்திண்டிருக்கேன். எனக்கு எந்தத் தேவையும் இல்ல. உங்க கடனை வேற யாருக்காவது கொடுத்துக்கோங்க'னு அநாயாசமா சொல்லிட்டு போயிட்டான். எத்தனை தன்மானம், தன்னம்பிக்கை பாரேன் அவனுக்கு. அவன் எங்கேயோ  உசரத்துல இருக்கான்...நான்தான் அதல பாதாளத்துல விழுந்துட்டேன். சம்பாதிச்ச பணத்தை எல்லாம் ஷேர்ல போட்டு, நஷ்டமானப்போ விட்டதைப் பிடிக்கறேன்னு, இருந்ததையும் விட்டு, லோனை வாங்கி என் வாழ்க்கைல பாதி நாளை ஷேர்ங்கற சூதாட்டத்தில வீணா போக்கிட்டேனே? உனக்கும் எவ்வளவு கஷ்டம் குடுத்துட்டேன். இனிமேல் நானும் பேராசைப் படாம, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு சிக்கனமா இருந்து வாழறதுன்னு முடிவு பண்ணிட்டேன். இனி நான் ஷேர் மார்க்கெட் பக்கமே போக மாட்டேன் பானு. உனக்கு சந்தோஷம்தான?

எப்படியோ நான் கும்பிட்ட தெய்வம் என்னைக் கைவிடல. அந்தக் கண்ணன்தான் பஜ்ஜிக்காரனா வந்து உங்களுக்கு உபதேசம் பண்ணிருக்கார் போலருக்கு. இனிமேலாவது நீங்க மாறினா சரி. சீக்கிரம் குளிச்சுட்டு வாங்கோ...சாப்ட்டு ஆஃபீசுக்கு கிளம்புங்கோ.
ஒரு சின்ன எறும்பிலிருந்து சுறுசுறுப்பை அறிந்து கொள்வது போல, ஒவ்வொரு மனிதரிடமும் சில தனிப்பட்ட சிறந்த நற்குணங்கள் உண்டு. அவைநம்மிடம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதே இக்கதையின் சாரம்.

போதும் என்ற மனம் வேண்டும், பேராசை பெருநஷ்டம் என்பனவற்றை இக்கதை உள்ளங்கை நெல்லிக்கனியாக எடுத்தியம்புகிறது.
ஒரு பஜ்ஜிக்காரன் மூலமாக நமக்கு பல நல்ல வாழ்வியல் தத்துவங்களை அழகாக, அர்த்தமுள்ளதாக எடுத்துச் சொன்ன ஆசிரியருக்கு பாராட்டுகள் பலப்பல. 

எங்கள் வீட்டுக்கு அடுத்தும் ஒரு பஜ்ஜிக்கடை உள்ளது. மதியம் 12 மணி ஆனால் சூப்பர் பஜ்ஜி வாசனை மூக்கைத் தூக்கும். இரவு பத்து மணி வரை செம வியாபாரம்! சாப்பிடும் ஆவலையும் அடக்க முடியாது. போகும்போது, வரும்போது பார்க்கும்போதே அந்த பளபள பஜ்ஜியும், வாசனையும் நாக்கில் நீர் ஊற வைக்கும்!சுகாதாரமில்லாத சுற்றுப்புறமும், எண்ணையின் தரமும் அந்த பஜ்ஜியை வாங்கிச் சாப்பிட மனம் வருவதில்லை. அந்த பஜ்ஜிக் கடைக்காரரிடமும் ஏதாவது கதை இருக்குமோ? ஒருநாள் பேசிப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்!
ஒரு சின்ன சம்பவத்தை, நமக்கு சாதாரணம் என்று தோன்றும் சில்லியான (சில்லி பஜ்ஜி) விஷயத்தைக் கூட ஆழ்ந்து நோக்கி, அதை  ஒரு அழகான கதையாக்கி, சுவாரசியமான அந்தக் கதையில் ஒரு தத்துவம், படிப்பினை இவற்றை எடுத்துச் சொல்லி, நம்மை அந்தக் கதைக் களத்துக்கே அழைத்துச் சென்று, சிலமணி நேரம் நம் மனத்தை அந்தக் கதையினுள்ளேயே லயிக்கச் செய்யும்,  ஒரு சாதாரணமான, சாதிக்க நினைக்கும் நம் கதாசிரியரின் திறமைக்கு ஆயிரம் சல்யூட்!!

No comments:

Post a Comment