Wednesday, 5 November 2014

தாயுமானவள்..VGK 24

தாயுமானவள்..VGK 24   திரு கோபு சாரின் கதைக்கான பரிசு பெறாத என் விமரிசனம்...

 கதைக்கான இணைப்பு...http://gopu1949.blogspot.in/2014/06/vgk-24.html

ஒரு திருவிழாவின் காட்சிகளை அழகுற, உணர்வுபூர்வமாக நம் கண்ணெதிரில் காட்டியுள்ள ஆசிரியரின் நடைக்கு ஒரு பாராட்டு!

ஒரு தேர்த்திருவிழாவில் கதையை ஆரம்பித்து, அதை ஒரு மனம் நிறைந்த உணர்ச்சிப் பெருவிழாவாக முடித்த ஆசிரியரின் கதாரசனையைப் புகழ 
வார்த்தைகளே இல்லை.

மாரியம்மன் கோவிலின் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டு தெருவின் அத்தனை காட்சிகளையும் கண்டு களித்தாற்  போன்ற அனுபவம் அருமை.
வண்ணக் கோலங்கள், மாவிலைத் தோரணங்கள், ஆங்காங்கே நாக்கில் நீர் ஊற வைக்கும் அன்ன தானங்கள், வயிற்றை நிறைக்கும் கஞ்சி, அக்னிச் சட்டி ஏந்திய அழகு மங்கையர், கரகாட்டம், காவடியாட்டம், வாண  வேடிக்கைகள் (இவற்றுடன் ஆங்காங்கே ஒலிபெருக்கியில் கேட்கும் எல். ஆர். ஈஸ்வரியின் 'மாரியம்மா எங்கள் மாரியம்மா' என்ற பக்திப் பாட்டு).....அத்தனையும் நமக்கு பறவைக் காணல் (bird view) காட்சிகளாகத் தெரிகின்றன! அந்த சந்தோஷங்கள் படிக்கும்போதே நம்மையும் தொற்றிக் கொள்வதை மறுக்க முடியவில்லை!

இதில் 'செய்யும் தொழிலே தெய்வ'மாக எண்ணி வாழும் முனியாண்டி எதற்காக பணம் சேர்க்கிறான்; அவன் மனைவிக்கு என்ன வாங்கிக் கொடுக்க ஆசைப் படுகிறான்? இப்படி சஸ்பென்ஸ் கொடுத்த ஆசிரியர் அடுத்து அவனுக்கு திருமணமாகி மூன்று வருடங்களாக குழந்தைப் பேறு  இல்லை என்பதைச சொல்லி, அதற்காகவே சிகிச்சைக்காக பணம் சேர்க்கிறான் என்பதையும் நம்மை ஊகிக்க வைக்கிறார். 

அன்பும், அறமும் இணைந்த இல்வாழ்க்கை நடத்தும் முனியாண்டி, மரகதம் இருவரும் சிறு குடிசையையே அரண்மனையாக எண்ணி வாழும், 'போதும் என்ற மனம் படைத்த' பண்பாளர்கள் என்பதை அருமையாகக் கோடிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர்!

கடவுள் என்னவோ நல்லவர்களைத்தானே அதிகம் சோதிக்கிறார்? அவளுக்காகவே, அவள் மனதை மகிழ்விக்கவே முனியாண்டி அல்லும் பகலும் பலூன்களை வாயினால் ஊதி, கை விரல்களினால் கட்டி, கைகளால் காசுகளை வாங்கிப் போட்டும் சுறுசுறுப்பாக வியாபாரம் செய்கிறான்.அம்மனின் ரதம் அந்த தெருவுக்குள் நுழைவதையும், மக்கள் மாரியம்மனை வணங்க முண்டியடித்து ஓடுவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சில வினாடிகளில், முனியாண்டியிடம் அந்தக் குழந்தையை விட்டுவிட்டு ஓடிப்போன கைலிக்காரன்தான் முனியாண்டியின் குறையைத் தீர்க்க வந்த தெய்வம். அவன் குறை தீர்க்க அம்மனே அக்குழந்தை வடிவில் வந்தாள்  போலும்.

அந்தக் குழந்தை தாய், தந்தையை சுனாமிக்கு பறி  கொடுத்து  அனாதையாய் நிற்பதையும், அவளை அந்த இரக்கமில்லாத  கைலிக்காரன் கடத்திக் கொண்டு வந்து, என்ன காரணத்தாலோ முனியாண்டியிடம் விட்டுவிட்டுப் போனதையும், அந்தக் குழந்தை சொல்லிய விஷயங்களிலிருந்து அவனுக்குப் புரிந்தது. பசியில் அழுத குழந்தைக்கு வயிறார உணவு வாங்கிக் கொடுத்தவன், அந்தக் குழந்தையைக்  கட்டியணைத்து முத்தமிட்டபோது, இதுவரை தான் அனுபவிக்காத அந்தப் புது உணர்வில் தன்னையே மறந்து விட்டான்.

குழந்தை என்ற ஒன்றையே அறியாத அவனின் மனமும், அந்தக் குழந்தையின் முத்தத்தில், அந்த ஸ்பரிசமே தெரியாத அவன் உடம்பும் பரவசம் அடைந்ததில் வியப்பென்ன? அந்தப் பேரின்பம்  நிலைக்குமா? இதுவே அவனது அப்போதைய கவலை. ஒரு குழந்தையால் இத்தனை மனமகிழ்ச்சி கிடைக்குமா? 


நமக்காக ஒரு குழந்தை பிறக்குமா? கடவுள் கண் திறப்பாரா? பிள்ளையாரிடம் தன் குறைகளைக் கூறியவன் வெய்யிலின் களைப்பு தாங்காமல் கண் அயர்ந்தான் .கூடத் தூங்கிய குழந்தையோ 'இவனை விட்டால் நமக்கு கதியில்லை' என்பதுபோல் அவன் அருகில் அவன் சட்டையைப் பிடித்தபடி படுத்துத் தூங்கியதை அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

கண்விழித்து எழுந்து தன் வியாபாரமும் முடிந்த நிலையில் தன் அரண்மனைக்குத் திரும்பியவனுடன் வரும் அழகு மிளிரும் பெண் குழந்தையைப் பார்த்த மரகதத்தில் உள்ளத்தில் ஒரு பரவசமும், கூடவே ஆயிரமாயிரம் கேள்விகளும். 'ஒரு தோசை வேணும்' என்று கேட்ட குழந்தைக்கு தாயாக மாறி அதை ஊட்டி விட்டாள் அவள். அப்பொழுதே அவள் தாய்மை ஊற்றெடுத்துப் பெருக ஆரம்பித்தது. 

அந்தச் சின்னத் தளிரை போலீசிடம் ஒப்படைக்கும் முடிவை அவர்கள் எடுத்தபோது, அதை அறிந்த விஜி  மனம் நெகிழ்ந்து 'நான் உங்களோடையே இருந்து விடுகிறேன்' என்று கூறியபோது, தன்னைக் கொண்டு விட்டுவிடுவார்களோ என்ற பயத்திலேயே காய்ச்சல் வந்துவிட்ட குழந்தையை யாருக்குதான் வெளியில் அனுப்ப மனம் வரும்? அன்புக்கும் உண்டோ அடைக்கும்  தாழ்? கடவுளே தங்கள்  குறை தீர்க்க இந்தக் குழந்தையைத் தந்ததாக எண்ணினாள் மரகதம். பருத்தி காய்த்து புடவையாகவே கிடைத்துவிட்ட மகிழ்ச்சி அவளுக்கு. அதுதானே தாய்மனம்! அது புரியாத முனியாண்டி பாவம் அவளை டாக்டரிடம் அழைக்கிறான்!

இப்படி அழகாக ஒரு குழந்தையைக் கொடுத்த மாரியம்மனுக்கு நன்றி சொல்வது எப்படி? இதையே அவள் பிரசாதமாக எண்ணி சீரும்,சிறப்புமாக வளர்ப்பதுதானே சரி. அதைப் புரிந்து கொண்ட மரகதம் தாயுமானாள் ஆகிவிட்டாள்! தனக்கு சொந்தமாகக் குழந்தை பிறக்க இத்தனை ஆண்டுகாலம் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தில்  ஒரே நொடியில் அந்தக் குழந்தையை நன்கு வளர்க்க வேண்டும் என்றும், தனக்கு குழந்தை வேண்டாம் என்றும் முடிவெடுத்த அவள்தானே தாயுமானவள்? 

 உள்ளத்தால் உயர்ந்த மரகதத்தின் அழகிய மனம் புரிந்த முனியாண்டியின் மனதில் அவள் மேல் இன்னும் காதல் பெருகியதை, அவளை ஆசையுடன் அணைத்ததாகச் சொல்லி அவர்களின் அழகிய தாம்பத்தியத்தை ஒரே வரியில் புரிய வைக்கும் ஆசிரியரின் திறமை அபாரம்!

ஆம்!  தாய்+ உமா+ ஆனவள்! தன் முலைப்பாலை திருஞான சம்பந்தருக்கு பொற்கிண்ணத்தில் கொடுத்து, உண்ணாமுலையாளாகிய அன்னை உமாதேவியைப் போல தானும் விஜிக்கு 'தாயுமானவள்'  மரகதம்.
அவளுக்கு சிகிச்சை இல்லாமலேயே இன்னொரு குழந்தை பிறக்க அந்தத் தாயுமானவர் அருள்புரியட்டும்.


No comments:

Post a Comment