Wednesday, 5 November 2014

VGK 29...அட்டெண்டர் ஆறுமுகம்.

VGK 29...அட்டெண்டர் ஆறுமுகம்...பரிசு பெறாத விமரிசனம்.. 
 கதைக்கான இணைப்பு இதோ....


 http://gopu1949.blogspot.in/2014/08/vgk-29.html
 
அட்டெண்டர்ஆறுமுகம் பணியில் சேர்ந்த நாள் முதல் அவருடன் இருக்கும் எனக்கு அவர் முதலாளி மட்டுமல்ல. என்னை மிக அருமையாக பராமரிப்பவர். உடல் கறுத்து,ஒல்லியாக,உயரமாக காணப்படும் அவரின் மீசை மட்டுமே முரடு.அவரோ தங்கமானவர்.அவர் ஒருநாள் இல்லை என்றாலும் அந்த அலுவலகமே ஆடிப்போய்விடும்.

ஒழுக்கம்,நேர்மை, அன்பு என்று அத்தனை நல்ல குணங்களுடன், ஓயாத உழைப்பாளியாக வளைய வருபவரின் ஏக்கப் பார்வையும், கூழைக் கும்பிடும் மட்டுமே எனக்குப் பிடிக்காத விஷயம். என்னதான் அவருடைய இதயத்துக்கு நெருக்கமாக இருந்தாலும் இதைச் சொல்வது எப்படி?

அவர் தன் வேலை பற்றியோ, ஊதியம் பற்றியோ மன வருத்தம் கொள்ளவில்லை. தன் பதவி பற்றிய மன சங்கடம்...அதுவும் தன் மகள் கல்யாணத்தின்போது....தன் மருமகன், தன் வேலையைப் பற்றி அல்ல...அதற்கான அட்டெண்டர் என்ற சொல்லைப் பற்றி தாழ்வாக நினைப்பாரோ என்ற வருத்தம்.அவர் அட்டெண்டர் என்று சொல்லாமல் கிளார்க், ஆஃபீஸ் அஸிஸ்டெண்ட் என்று மாற்றிச் சொல்லியிருக்கலாம். ஆனால்பொய் சொல்ல விரும்பாத அவரது குணம் போற்றத்தக்கது.

ஆனால் இன்று அவருக்கே தனக்கு பதவி உயர்வுக்கு ஏதாவது வாய்ப்பு உண்டா என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டு விட்டதை தன் டைரியில் எழுதியபோது,அதை நினைத்து என் மனம் கும்மாளம் போடுகிறது. மாலை மேனேஜரை சந்தித்து இந்த விஷயம் பற்றி என் தலைவர் கேட்டபோது நான் அடைந்த ஆனந்தம் கொஞ்சநஞ்சமில்லை!

தன் பெண்ணின் கல்யாண விஷயத்தை மெதுவாகச் சொல்லி, பின் பத்திரிகை அடிப்பதைப் பற்றிச் சொல்லி, (பத்திரிகையில் பெயர் போடும்போது பதவியும் போட வேண்டுமே!)தனக்கு பதவி உயர்வு தர வாய்ப்பு உண்டா என்று பதவிசாக கேட்டபோது எனக்கு என் காதுகளையே நம்ப முடியவில்லை.'சூப்பர் தலைவா'என்று கத்தி விட்டேன்!

அடுத்த டைரக்டர்கள் மீட்டிங்கில் பேசுவதாக மேனேஜர் சொன்னது என் தலைவரைவிட எனக்கு சந்தோஷமாக இருந்தது. அன்று முதல் 'என்ன முடிவு வருமோ' என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது.

என் தலைவர் சாதாரண மனிதர்களிலிருந்து மாறுபட்டவர்.அதிக ஆசை, ஆடம்பரம்,வீண்செலவு இவற்றை அறவே வெறுப்பவர்.குடும்பப் பொறுப்பானவர்.எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது. பொது அறிவுப் புத்தகங்களைப் படித்து நிறைய குறிப்பெடுத்துக்கொள்வார்.

இதுநாள் வரை 'அட்டெண்டர்' என்பதைத் தாழ்வாக நினைக்காதவர்.எந்த வேலையிலும் 10அல்லது 15 வருடங்கள் ஆனால் கண்டிப்பாக பதவி உயர்வு கொடுப்பதுண்டு. தனக்கு 36 வருடங்களாகியும் ஒரே பதவியில் இருப்பது மனதை உறுத்த அதனாலேயே தன் ஆதங்கத்தை மேனேஜரிடம் கொட்டி விட்டார்.

அத்துடன் நாளை மாப்பிள்ளை வீட்டாரிடம் கௌரவமாக சொல்லிக் கொள்ளலாமே என்ற ஆசையும் கூட.இதன் பயன் என் தலைவருக்கு மட்டுமல்லவே....இவர் போன்ற பலரின் சமூகப் பிரச்னையும் ஆயிற்றே?மனிதாபிமானம் மிக்க மேனேஜர் கண்டிப்பாக இதற்கு ஓர் வழி செய்வார் என்ற நம்பிக்கையில் இருவரும் காத்திருந்தோம்.

டைரக்டர் மீட்டிங் முடிந்து 10வருடம் ஆனவர்கள் ஜெராக்ஸ் ஆப்பரேட்டர்கள், 20 ஆண்டு முடித்தோர் ரிக்கார்டு கிளார்க்குகள், 30 ஆண்டு முடித்தோர் ஆஃபீஸ் கிளார்க்குகளாக அறிவித்தபோது என் தலைவர் போன்ற பலரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

அந்த ஆர்டரில் கையெழுத்து போட்டபோது சந்தோஷத்தில் என் தலைவரின் கையோடு, என் உடலும் லேசாக நடுங்கியது! அன்று முதல் என் தலைவரின் ஆடை காக்கியில் இருந்து கலராக மாறியது மட்டுமே அவருள் ஏற்பட்ட மாற்றம்.

இந்த ப்ரமோஷனை 'அவருக்கு மாப்பிள்ளை வரும் நேரம்' என எல்லாரும் கூறினாலும் என்னைப் பொறுத்தவரை அவரது நியாயமான, நேர்மையான,பொதுநலக் குறிக்கோளுக்கு இறைவன் தந்த பரிசு என்றே எண்ணுகிறேன்.

ஒரு மாதமானபின் பின் என் தலைவரின் பெயரை அவர் சம்பந்தி மரியாதையாக 'ஆறுமுகம் ஐயா' என்று கேட்டபோது பேசியவர் 'அட....அட்டெண்டர் ஆறுமுகமா?' என்று சொன்னதாக சம்பந்தி கூறியபோது, தலைவர் மன நிலையை அவரது வருத்தமான இதயத் துடிப்பிலிருந்து என்னால் உணரமுடிந்தது.

சம்பந்தி கூறியது போல, பொய் சொல்லாமல்,திருடாமல்,பிச்சை எடுக்காமல்,ஏமாற்றாமல் செய்யும் எந்தத் தொழிலும் கேவலமானதில்லை. மற்றவர் நம்மை கூப்பிடுவது பெரிதல்ல என்று பெருந்தன்மையாக்க் கூறிய சம்பந்தி வீட்டார் தலைவரின் பெண்ணையும் நன்கு வைத்துக் கொள்வார்கள் என்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது.

நாம் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்தபோது 'பே மீ ஃபார்ட்டி...கால் மீ தோட்டி' என்று கூறுவதாக மாப்பிள்ளையின் தந்தை கூறுவது, எந்தத் தொழிலும் கேவலமல்ல என்பதைக் குறிக்கிறது.

நம் தேசத்தந்தை தென் ஆப்பிரிக்காவில் இருந்த சமயம் தன் கழிவறையை தானே சுத்தம் செய்ய வேண்டும் என்று தன் மனைவியிடம் வலியுறுத்தியதாக என் தலைவர் 'சத்திய சோதனை'யில் படித்து அதைக் குறிப்பெடுத்த சமயம்  நானும் 
அறிந்து கொண்டேன்.

தலைவர் தினமும் சைக்கிளில் ஆஃபீஸ் செல்லும்போது தெரு குப்பைகளை அள்ளி லாரியில் போடும்போது தெருவில் சென்று கொண்டிருக்கும் அனைவரும் மூக்கை மூடிக் கொண்டு அவசரமாக விலகிச் செல்வர். ஆனால் அந்த வேலையைச் செய்பவர்கள் அசிங்கப்படாமல் 'செய்யும் தொழிலே தெய்வம்' என்று கை கூசாமல் அந்த வேலையைச் செய்வதில்லையா?அவர்களால்தானே நம் வீடும், நாடும் நாற்றமின்றி இருக்கிறது.

தலைவர் மகளின் திருமணம் சுற்றமும்,நட்பும் சூழ மிக நன்றாக, விமரிசையாக நடைபெற்றது.அவருக்கு வந்த அனைத்து மணி ஆர்டர்களிலும் கையெழுத்து போடும்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அட....நான் யாரென்று சொல்லவே இல்லையே? நான்தான் அவரின் மிகப் பிரியமான பேனா....அந்தக்கால ஃபவுண்டன் பேனாவாக்கும்! சிறு வயது முதல் பொக்கிஷமாய் என்னை பாதுகாத்து வரும் என் தலைவர் நானின்றி எந்த இடத்திற்கும் சென்றதில்லை.அவர்சட்டைப்பைக்கு நான்தான் அழகு சேர்ப்பதாக அவர் நண்பர்களிடம் கூறும்போது எனக்கு பெருமையாக இருக்கும்.

அவரைப் பற்றி அனைவருக்கும் சொல்லும் ஒரு அரிய வாய்ப்பை எனக்கு இந்த விமரிசகர் கொடுத்ததை நான் மிகப் பெருமையாக நினைக்கிறேன்.

 

என் தலைவரைப் பற்றி சிறப்பாக ஒரு சிறுகதை எழுதிய கதாசிரியருக்கு நன்றி!No comments:

Post a Comment