Wednesday, 5 November 2014

.VGK 9....அஞ்சலை

திரு கோபு சார் கதைக்கான பரிசு பெறாத என் விமரிசனம்....VGK 9....அஞ்சலை

கதைக்கான சுட்டி...

 http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09.html
ஒரு பெண்ணின் மென்மையான தாயுள்ளத்தின் தவிப்பை மிக நுணுக்கமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
அழகிய மாருதி காரும், குடிசைகள் நிறைந்த சேரியின் அழகையும் மிக இயல்பாக வடித்த ஆசிரியரின் ரசனையின் உச்சகட்டம், புழுதி படிந்த கைரேகைகள் அந்தக் காரின் திருஷ்டிப் பொட்டுகளாக தோன்றியது என்ற வர்ணனை!
தான் வேலை செய்யும் வீட்டு எஜமானர் தன வீடு தேடி வந்ததன் அதிர்ச்சியும்,படபடப்பும் அவள் எதிர்க் கடையிலிருந்து அவசரமாக எடுத்து வந்த ஸ்டூலை தன்  புடவைத் தலைப்பால் துடைத்துப் போட்ட காட்சியும்,ஒரு பெரிய மனிதர் தன்  வீட்டுக்கு வந்த காரணம் அறியாத அந்த அப்பாவிப் பெண் சிவகுருவின் தயக்கம் அறிந்து உள்ளே அழைத்ததும் ஒரு சாதாரண ஏழைப்பெண்ணின் பரபரப்பைக் காட்டுகிறது.

ஒரு பெண்,அதிலும் கணவனை இழந்த ஏழைப்பெண், தன்னைத்தேடி ஒரு வசதியான  ஆண்மகன் வந்தால்,அடுத்தவர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயமும் அவள் செயலில் தெரிகிறது.
ஒரு எளிய குடிசை எப்படி இருந்தால் அழகாக இருக்கும் என்பதை அஞ்சலையின் குடிசை அப்பட்டமாக சொல்கிறது. மூலையில் சின்ன சாமி படமும்,அதன் மேல் வைக்கப் பட்டிருந்த புதிய  பூ, முன்னால் போடப்பட்ட கோலம், முத்துப்போல் எறிந்த விளக்கு இவற்றிலிருந்து அஞ்சலை வீட்டை எவ்வளவு சுத்தமாக பராமரிப்பாள்  என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

கயிற்றுக் கட்டில்,லாந்தர் விளக்கு, பனை ஓலை விசிறி இவை அவளது ஏழ்மையின் அளவைக் காட்டுகிறது.எதையும் சுத்தமாக,சுகாதாரமாக வைத்துக் கொள்பவள் அஞ்சலை என்பதை அழகாக விளக்கியுள்ளார் ஆசிரியர். ஒரு ஓலைக் குடிசைக்குள் நாமே சென்று வந்த ஒரு அனுபவத்தை அழகுற காட்டியுள்ளார் கதாசிரியர்.

மண்குடிசை வாசலென்றால் தென்றல் மட்டும் அல்ல,மழலையும் வர மறுப்பதில்லையே? ஆனால் மாடமாளிகைகளுக்கு அதே மழலை எளிதில் வருவதில்லையே? இதுதான் இறைவனின் விளையாட்டு போலும்.

அந்த பேதைப் பெண்ணின் வாழ்வில் விளையாடிய மது அரக்கனை என்ன சொல்ல? குடி குடியைக் கெடுக்கும் என்று அறிவுரை சொல்லும் அரசாங்கமே சாராயம் விற்கத் தடை விதிக்காததால் அஞ்சலையின் கணவன் போன்ற எத்தனை பேர் இதுபோல் உயிரைவிட நேர்கிறது? இந்த மக்களின் நிலையை நினைக்கும்போது கண்கள் தானாக நனைகின்றன.
அஞ்சலை துக்கத்தை மறப்பதே அவளுடைய பிஞ்சுக் குழந்தையின் முகத்தைப் பார்த்துதான். அதையும் விற்றுவிட அவள் மனம் எப்படி ஒப்பும்? கணவனை இழந்து கையில் குழந்தையுடன் தனியாகத் தவிக்கும் ஒரு அபலைப் பெண்ணின் மனநிலையை விளக்கமாக கூறியுள்ளார் ஆசிரியர்.

பட்டணத்துக் காரருக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு எப்படி பெற்ற குழந்தையை விற்க மனம் வரும் ஒரு தாய்க்கு? பணமா... பாசமா... என்றால் ஒரு தாயின் மனம் பாசத்தைத்தான் விரும்பும். பாவம் அஞ்சலை. அவள் நிலை படிப்பவர் கண்களையே கலங்க வைக்கிறது.

கதையின் இடைச் செருகலாக ஒலிக்கும் திரைப் பாடல்கள் கதைக்கு எக்ஸ்டிரா ஃ பிட்டிங்!
ஆரோக்கியமான, துறுதுறுப்பான, அழகான குழந்தையை விரும்பாதார் யார்? அதன் சுட்டித்தனம் சிவகுருவையும் கட்டிப் போட்டதில் வியப்பு என்ன?சிவகுரு அஞ்சலையைக் காரில் தன்னுடன் எங்கு அழைத்துச் செல்கிறார் என்று அறியும் ஆவல் அந்த சேரிப் பெண்களுக்கு மட்டுமல்ல....நமக்கும்தான் தோன்றுகிறது.

அதிலும் ஃ பைவ் ஸ்டார் ஏ .சி. ஹோட்டல், 3 பெட் போடப்பட்ட ரூம்...ஹோட்டலுக்கு அழைத்துவரக் காரணம் என்ன?  நம்மையும் ஏன், எதற்கு என்ற கேள்விகளைக் கேட்க வைக்கிறது, ஆசிரியர் கதையை சஸ்பென்சாகக் கொண்டு செல்லும் இடம்.. ஒருவேளை சீரியலில் வாடகைத்தாய் கதாபாத்திரம் பிடித்த அஞ்சலியிடம் தனக்கும்,மல்லிகாவுக்கும் வாடகைத் தாயாக இருந்து ஒரு குழந்தை பெற்றுத்தர வேண்டுவாரோ சிவகுரு?

அவர் தன்  விருப்பத்தை சொல்லிவிட்டு அவளை முடிவெடுக்கச் சொல்லிச் சென்றபோது, அவர் என்னதான் சொல்லிச் சென்றார் என்ற சஸ்பென்ஸ் தாங்கவில்லை. சிவகுரு சொற்படி நடப்பது பாவமில்லையா, என் கணவனுக்கு துரோகம் செய்வது போல் ஆகாதா என்றெல்லாம் அஞ்சலை எண்ணும்போதும் , குழந்தையுடன் பற்றாக்குறை வாழ்க்கையா அல்லது குழந்தையைப் பிரிந்து வசதியான வாழ்க்கையா? என்று முடிவெடுக்கத் திணறும் போதும் அஞ்சலையின் மனதை, தன் குழந்தையைப் பிரிந்து வாழ முடியுமா என்று நினைத்து வருந்தும் ஒரு ஏழைத் தாயின் மனதை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் கதாசிரியர்.

தனக்கு எப்படியாவது ஒரு மழலை பிறக்காதா என்று நாளும், பொழுதும் தவிக்கும் மல்லிகாவுக்கு, சிவகுரு தூக்கி வந்த அழகான குழந்தையைப் பார்த்ததும் அவளுக்குள்ளிருந்த தாய்மை சிலிர்த்தெழுவதையும், அவள் தானும் குழந்தையாக மாறி முகமலர்ச்சியுடன் தன்னை மறந்து விளையாடுவதையும், அஞ்சலை பெற்ற குழந்தையையே அவளுக்கு அறிமுகப் படுத்தும்போது, அக்குழந்தையைப் பெற்ற அஞ்சலையின்  தாய்மை குமுறுவதையும் மிக அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

தன்  குடிசையில் வறுமையில் வாழ( ட )வேண்டிய தன் பிள்ளை இனி பணக்காரனாக,சீரும், சிறப்புமாக வாழப்போவதை எண்ணி அஞ்சலையின் மனம் மகிழ்ச்சி அடைந்தாலும், அவனைத் தன மகன் எனக் கூறிக் கொள்ள முடியாத வருத்தம் அவள் நெஞ்சில் முள்ளாகக் குத்துவதை ஆசிரியரின் எழுத்துக்கள் அருமையாக எடுத்துக் கூறுகிறது.அதைப் படித்தபோது என் கண்கள் கலங்கிவிட்டது. எந்தத் தாயும் செய்ய விரும்பாத, செய்ய முடியாத செயல் ஆயிற்றே இது?

கணவனை இழந்த அஞ்சலைக்கு இனி பிள்ளையும் உடன் இல்லை என்பதை இலட்சத்தில் இருக்கும் பூஜ்யங்களைபோல  தன்  இன்றைய வெறுமையான இல்வாழ்க்கைக்கு ஒப்பிட்டுப் பார்ப்பதாக சிம்பாலிக்காகச் சொலுகிறார் ஆசிரியர்.


ஒன்றை இழந்தாலே மற்றொன்றைப் பெறலாம் என அஞ்சலை உணர்ந்து கொண்டாலும், தன ரத்தத்திலிருந்து உருவான, தான் பெற்ற செல்வத்தை தினமும பார்க்கலாம்,பேசலாம்,அவனோடு விளையாடலாம் என்ற சந்தோஷத்தினாலேயே அவள் இந்த திட்டத்திற்கு ஒப்புக் கொள்கிறாள்

தன மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது என்பதை அறிந்த சிவகுரு, தன்  உறவினர் குழந்தையையோ, தன்  அந்தஸ்துக்கு சமமானவர் குழந்தையையோ தத்து எடுக்க நினைக்காமல், தன்  கணவனை இழந்து  கஷ்டத்தில் இருக்கும் அஞ்சலையின் நிலையை எண்ணி, வேற்றுமை பாராட்டாமல் சேரிக் குழந்தையானாலும் தன குழந்தையாக வளர்க்க எண்ணிய அவரின் மனம் மிகப் பெரிது. அத்துடன் அஞ்சலிக்கு பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணிவிட்டு, இனி உன் குழந்தை என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டு வராதே என்று சொல்லாமல், மனிதாபிமானத்துடன் தாயையும், சேயையும் பிரிக்காமல் தன்  வீட்டிலேயே வேலைக்கு வைத்துக் கொண்ட அவர் பெருந்தன்மை மேலானது.

என் பிள்ளையைத் தர முடியாது என்று பிடிவாதம் பிடிக்காமல், சிவகுரு சொல்லியவற்றிலுள்ள நல்ல விஷ யங்களை புரிந்து  கொண்டு, தன் கேள்விக் குறியான எதிர்காலத்தையும் மனதில் கொண்டு தன்  மகனை அவருக்கு மகனாகக் கொடுத்த தன்னலமற்ற அஞ்சலையின்  குணம் போற்றத் தக்கது.

சிவகுருவின் பெருந்தன்மை குணம் உயர்ந்ததா, அஞ்சலையின் தன்னலமற்ற தியாக  குணம் உயர்ந்ததா என்பதைத  துல்லியமாக தராசில் நிறுத்து, முள் அங்கோ, இங்கோ நகராமல் இருவருமே சரிசமம் என்பதை மிக அழகான கதையாக எழுதி, அதில் ரசனையும், நயமும்  இணைத்து கலக்கலாக கதை வடித்திருக்கிறார் ஆசிரியர்!


ஆசிரியரால் பெயரிடப்படாத அந்தக் குழந்தை 'சின்னக் கண்ணன்' சீரும், சிறப்புமாக வளர்ந்து வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மை சேர்ப்பானாக.
No comments:

Post a Comment