Wednesday, 5 November 2014

VGK 16....ஜாதிப்பூ












VGK 16....ஜாதிப்பூ கதைக்கான பரிசு பெறாத என் விமரிசனம்..

கதைக்கான இணைப்பு....
 http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16.html


புஷ்பே ஷு ஜாதி' என்று பூக்களிலே மிகச் சிறந்த பூவாகப் போற்றப்படுவது ஜாதிப்பூ. அதன் அழகிய தோற்றமும், ஐந்து இதழ்களும், மனம் மயக்கும் அதீத மணமும் அனைவர் மனதையும் கவர்ந்திழுக்கும்.
ஜாதிப் பூவைப் போன்ற மென்மையான  ஒரு அழகிய பெண்ணின் கதையை அருமையாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

ஏன்னா....அந்த பூக்காரப் பொண்ணைப்  பாருங்கோளேன்...புதுசா இருக்காளே? பதினேழு, பதினெட்டு வயசு இருக்குமோ? மூக்கும் முழியுமா ரொம்ப அழகா இருக்கால்லியோ?

ஆமாண்டி...அவகிட்ட கூட்டத்தைப் பாத்தியோ? பாவம்...அந்தக் கிழவி வியாபாரம் இனிமே அம்போதான்.

அழகான பொண்ணுதான்...அதுக்கேத்த கண்ணுதான்..பதினெட்டு வயது பருவ அழகு...பார்ப்பவரை மயங்கச் செய்வதில் ஆச்சரியம் என்ன? அவளது இயற்கையான அழகையும், அதே நேரம் இளைஞர்களிடம் அனாவசியமாகப் பேசாமல் சாமர்த்தியமாக அவர்களிடம் பேசி, நிமிடத்தில் கூடையை காலி செய்த அவள் வேகத்தையும் 'பூக்களைவிட அந்த பூக்காரி அழகு' என்று கதாசிரியர் மிக அழகாக சொல்கிறார்.

மகாலட்சுமி மாதிரி சின்னப் பொண்ணா இருக்காளே? அதான் இள வயசுப் பையன்கள்ளாம் அவகிட்ட பூ வாங்கற சாக்கில சைட்டுன்னா அடிக்கரான்கள்.  பூக்காரம்மா...அந்தப் புதுப் பொண்ணு யாரு? 

எனக்கு தெரியாது தாயி.என் வியாபாரம்தான் போச்சு அவளால.உனக்கு எவ்வளவு முழம் வேணும் தாயி?

இந்தப் புள்ளைகள்ளாம் அவகிட்ட அசடு வழியரான்களே? அந்தப் பொண்ணு எப்படி சமாளிக்கறா?
அதல்லாம் இவங்கல்லாம் அதுங்கிட்ட ஒண்ணும் வாலாட்ட முடியாதும்மா.இன்னா தெகிரியமா பேசும் தெரியுமா? எப்படியோ அவனுங்களை சமாளிச்சு நிமிஷமா கூடையை காலி பண்ணிட்டு போயிடுதும்மா.அது போனாங்காட்டியும்தான் எனக்கு போணியே ஆரம்பமாகுது. உனக்கு எவ்வளவு பூ வேணும் சொல்லு.

ஒரு ரெண்டு முழம் குடு....சாயரட்சை தீபாராதனைக்கு நேரமாச்சு. வரேன்.

ரோஜா  ஒரு அழகிய மலர். பெண்களை ரோஜாவுக்கு உபமானமாகக் கூறுவர் கவிஞர்கள். ரோமானியர்களுக்கு  விருப்பமான ரோஜா மலரின் இதழ்களை தன்  படுக்கையிலும், தரையிலும்  பரப்பி தன் காதலன் மார்க் ஆண்டனியை  வரவேற்பாளாம் எகிப்திய  அழகி  கிளியோபாட்ரா! ரோஜா மாலையாகவும், இறைவனுக்கு அர்ச்சிக்கவும், வாசனை திரவியங்கள், ,அழகு சாதனப் பொருள்களிலும் மிக அதிக அளவில் பயன்படுகிறது.
ஏன்னா....அந்த பூக்காரப் பொண்ணு மாதிரி ஒரு அழகான பொண்ணு நம்ம மதுவுக்கு கிடைச்சா எப்படி இருக்கும்?

நாமளும்தான் ரெண்டு வருஷமா பார்த்திண்டிருக்கோம். ..ஹ்ம்ம்...ஒண்ணும் தகைய மாட்டேங்கறதே? அவனுக்குன்னு ஒருத்தி இனிமேலையா பிறக்கப் போறா? 
அந்தக் கடவுள் என்னிக்குதான் கண் திறக்கப் போறாரோ?

                                                                          
மல்லிகை  வாசமுள்ள ஒரு மலர். அந்த வாசத்தில் மயங்காதவரே  இல்லை.எந்த வயதுப் பெண்ணுக்கும் மல்லிகைப்பூவைத் தலையில் சூடும் ஆசை இல்லாமல் இருக்காது. மல்லிகைப பூவில் இருந்து சென்ட், சோப்புகள், வாசனை எண்ணைகள், ஊதுபத்திகள் அதிக அளவில் உருவாக்கப் படுகின்றன.

வாடாப்பா பேராண்டி...என்ன அந்தப் பொண்ணையே அப்பிடி பாக்குற?

பாட்டி வந்து...அந்தப் பொண்ணு யாரு? தினமும் இங்க பூ விக்க வருவாளா ?

இனி செவ்வாய், வெள்ளி மட்டுதான் வருவாளாமப்பா. 

இல்ல...பாட்டி....வந்து...


என்ன தயங்கி நிக்கற? என்ன விஷயம் சொல்லுப்பா.


பாட்டி...இனி அந்தப் பொண்ணை இங்க பூ விக்க வரவேண்டாம்னு சொல்லிடு.
ஏன்...நீ அவளைக் கல்யாணம் கட்டிக்கப் போறயா?
அப்படித்தான் வெச்சுக்கோயேன்.

ஏன் கண்ணு..நீ உசந்த ஜாதி.அவளோ பூக்காரப் பொண்ணு. நீ எப்படிப்பா அவளைக் கல்யாணம் கட்ட முடியும்? உங்க அம்மா, அப்பா இதுக்கு ஒத்துக்குவாங்களா?

அவங்களை ஒத்துக்க வெச்சு இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஆசீர்வாதம் பண்ணு பாட்டி.

அட...கோவில் மணி அடிக்குது பாரு...நீ நினைச்சது நடக்கும்டா மாப்ளே!

தினமும் தவறாமல் கோயிலுக்கு வரும் பக்தி மிகுந்த அந்த இளைஞன் சிறு வயது முதலே பூக்காரப் பாட்டிக்கு பரிச்சயமானவன். பாட்டியிடம் தன்  படிப்பு, கல்லூரிப் படிப்பு முடித்த கையோடு வங்கி வேலை, நல்ல சம்பளம் என எல்லா விஷயங்களையும் பரிவோடு பகிர்ந்து கொள்பவன்...பாட்டிக்கு ஒரு மழை நாளில் உதவிய கருணை மனம் கொண்டவன்...வயதான இந்தப் பூ விற்கும் கிழவியிடம் அன்புடன் தினமும் பேசிவிட்டு செல்லும் மனிதாபிமானம் கொண்டவன்...

பூக்களிலும் ஜாதி உண்டா என கோபத்துடன்  கேட்டவன்...சிறு வயது முதலே மனிதர்களுள் ஜாதிபேதம் கூடாது என மனதில்  தீர்மானம் செய்தவன்...தான் மணக்கும் பெண்ணின் வீட்டாருக்கு எந்தச் செலவும் வைக்கக் கூடாது என்று நினைக்கும் நல்ல வாலிபன் என்று அவனைப் பற்றி மிகச் சில வரிகளிலேயே நமக்கு சுருங்கச் சொல்லி புரிந்து கொள்ள வைக்கும் ஆசிரியரின் திறமை பாராட்டத் தக்கது.

அப்படிப்பட்ட பையன் தன்  பேத்திக்கு கணவனாக வருவதை எந்தப் பாட்டிதான் விரும்ப மாட்டாள்? அதான் அவனை வாய் நிறைய 'மாப்பிள்ளை' என்று கூப்பிட்டு விட்டாள் என்று எழுதி கதையின் முடிவை சொல்லாமல் சொல்லிவிட்ட ஆசிரியருக்கு பாராட்டு.

சண்பகப்பூ மலர்களுள் மிகவும் மணம் வீசக் கூடியது.பொன் மஞ்சள் நிறத்தில் மரத்தில் பூக்கும் அழகிய  மலர் .வெகு தூரத்துக்கு தன்  வாசம் பரப்பும் இம்மலர் இறை வழிபாட்டுக்கு மிகவும் ஏற்றது.அதிக பலனைத் தரக் கூடியது. இம்மலரிலிருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்படும் 'ஜாய்' என்ற வாசனை திரவியம் (scent) உலகிலேயே  மிக அதிக விலை மதிப்புள்ளதாகும்.

அடி தாமரை....நீ விளையாட்டா  பூ விக்க வந்தது இப்போ என்னாச்சு தெரியுமா?

என்ன பாட்டி ஆச்சு? எனக்கும் ஜாலியா பொழுது போகுது. இரண்டு பேரும் விக்கிறதுல பணமும் கூட வருதே?

அட போடி....உன்னை அந்த ஐயர் வூட்டுப் பையன் கல்யாணம் கட்டிக்க ஆசைப் படறான், அது தெரியுமா உனக்கு?

அடியாத்தி! அப்படியா சேதி.கட்டிக்கிட்டா போச்சு. நாளைக்கு நான் பூ விக்க வரப்போ அவனைக் காட்டிவிடு ஆயா! எப்படி இருக்கான்னு பாத்துப்புடறேன்! அவனை எனக்கு புடிச்சா கல்யாணம் கட்டிக்கிட்டு தயிர் சாதம் சாப்பிட நான் ரெடி!

படிப்பு முடித்து பாட்டி வீடு வந்தவளை, விளையாட்டாக மணமுள்ள பூக்களை விற்க வந்தவளை,அவளது மயக்கும் அழகிலும்,மந்தகாசப்  புன்னகையிலும் மயங்கி, தன்  மனதைப் பறி  கொடுத்து அவளை மனையில் அமர்த்தி மல்லிகை, முல்லை, ரோஜா மலர்களைச் சூடிய மணமகளாக்கி, மங்கள வாத்தியங்கள் முழங்க அவள் சங்குக் கழுத்தில் மங்கல  நாணைப் பூட்டி, தன மனையாளாக்கிக் கொள்ள விரும்பும் மதுவின் ஆசை நிறைவேறி, அவன் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் முடித்து எல்லா நலனும் பெற்று வாழ கதாசிரியருடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்!




No comments:

Post a Comment