Sunday, 10 August 2014

வாய் விட்டுச் சிரித்ததால் வந்ததே பரிசு......!!

திரு வை. கோபு  ஸார் அவர்களின் 28ம் கதைக்கான இணைப்பு.

  http://gopu1949.blogspot.in/2014/07/vgk-28.html

அதற்கான என் விமரிசனத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்ததற்கான  இணைப்பு...

 http://gopu1949.blogspot.in/2014/08/vgk-28-03-03-third-prize-winner.html



வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! நம் கோபு ஸாரின் கதைகளைப் படித்தாலோ சிரித்து, சிரித்து எந்த நோயும் நம் அருகிலேயே வராது!

வித்யாசமான, வேடிக்கையான நடைமுறைகளைக் கொண்ட ஒரு மருத்துவ மனையைப் பற்றிய நகைச்சுவை கதை! படிக்கும்போது 'அட...இப்படியும் ஒரு ஆஸ்பத்திரியா' என்ற எண்ணம் தோன்றினாலும், கதையின் சுவாரசியத்தில் முழுக் கதையையும் படித்து முடித்து விடும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை! அதுதான் கதாசிரியரின் ஸ்பெஷாலிட்டி!

முன்கோபி கதாநாயகனுக்கேற்ற பொருத்தமான பெயர் கோபி! சலிப்பு, கொதிப்பு, கடுப்பு, கோபம், எரிச்சல் (ஆசிரியர் எழுதியுள்ள {எரிச்சல்} இந்த அனுபவம் ஆண்கள் மட்டுமே அறிந்தது!) இவற்றை பிறவியிலேயே பெற்றதுடன் யாராலும் விரும்பப் படாதவனாக இருந்தவனுக்கு சிரிப்பும் 'பை...பை..'சொல்லி விட்டது போலும்!

பாவம்...ஏற்கெனவே கடுகடு, சிடுசிடு கோபியின் எரிச்சலை ஒரு குட்டியூண்டு  கல் இடறி ரத்தக்காயம் வேறு! அவன் முகத்தை கற்பனை செய்யவே முடியவில்லை! 

மருத்துவமனை நர்ஸ்களை வெள்ளைப் புறாக்களாக கற்பனை செய்யும் ஆசிரியரின் ரசனையை என்ன சொல்ல! இது போன்ற உவமைகள் கதைக்கு சுவாரசியம் கூட்டும் 'எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ்'!

அவசரமாக டாக்டரைப் பார்க்க வேண்டும் என்றவனை சட்டை, பனியனை அவிழ்க்கச் சொல்வது வேடிக்கையாக இருந்தாலும், ஏன் அப்படி என்ற கேள்வி கதையை மேலும் படிக்கத் தூண்டுகிறது.

அந்த மருத்துவமனையில் அதுதான் சட்டம் என்று கொரியர்காரர் சொன்னபோது 'இது ஏதோ பைத்தியக்கார ஆஸ்பத்திரியோ' என்ற சந்தேகம் ஏற்படுகிறது! 

காலில் அடிபட்ட காயத்தைப்பற்றிக் கவலைப்படாமல், கண்ட டெஸ்ட்டுகளையும் எடுப்பதுதான் இங்கு சட்டம் என்பது கோபியைவிட நமக்கு அதிக கோபத்தை ஏற்படுத்துகிறது!

வரும் நோயாளிகளை இந்த சட்டங்களைச்சொல்லி அல்லல் படுத்துவது அளவில்லாத ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது!

ஆனால் கொரியர்காரரும் தினமும் இது போன்ற டெஸ்ட்டுகள் முடிந்த பின்பே டாக்டரைப் பார்க்க முடியும் என்பது வலியை மறந்து சிரித்த கோபியைப் போலவே நம்மையும் வாய்விட்டு, வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது!! இவை கதைக்கு ஆசிரியர் கொடுத்த 'ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்'!

எப்படியோ சிரிப்பு என்றால் என்னவென்றே தெரியாத, சிடுசிடு கடுகடு கோபியையும் சிரிக்க வைத்த பெருமை அந்த நகரின் பிரபல ஆஸ்பத்திரிக்கு கிடைத்து விட்டது! அதில் கதாசிரியருக்கும் பங்கு உண்டே!!

இது பல்துறை மருத்துவமனை மட்டுமல்ல, (ஆண்)பால் துறை.... ஆண்களுக்கு மட்டுமான ஆஸ்பத்திரி போலும்! பெண்களுக்கு இந்த விதிமுறைகள் சரிவராதே!! 

பலவிதமான பதுப்புது மருத்துவ உபகரணங்களை வாங்கிப் போட்டதுடன், வேலைக்கும் பலரை வைத்து, ஷகரில் அதிகபட்ச வாடகையையும் கொடுத்து ஆஸ்பத்திரி நடத்துபவர்களின் ஒரே இலக்கு அப்பாவி மக்களாகிய நாம்தானே?!

நகரின் சிறந்த ஆஸ்பத்திரி என்று வந்து விட்டு அவர்களின் முட்டாள்தனமான விதிமுறைகளைக் கேட்டு, அதனால் ஆத்திரம், கோபம், எரிச்சல் ஏற்பட்டு, அவர்கள் டெஸ்ட் எடுக்கும்போது ரத்தக் கொதிப்பு, ஹைபர் டென்ஷன், ஷுகர்.... இன்னும் பெயர் தெரியாத வியாதிகள் வந்து அந்த மருத்துவமனையின் நிரந்தர நோயாளிகளாக ஆக்குவதே அவர்களின் குறிக்கோள் போலும்! பேஷண்டுகளை அதிகரிக்க ஒரு நல்ல ஐடியா! 

இந்த விஷயத்தை 'கிரிஸ்டல் க்ளியராக' எடுத்துச் சொல்கிறார் நம் ரைட்டர்!

எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் நல்ல உடல்நலத்துடன் மிக ஆக்டிவ்வாக இருந்தார். ஜெனரல் செக்கப்பிற்காக பலரும் பரிந்துரைத்த ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அவர்கள் செய்த பரிசோதனையில், உங்கள் கர்ப்பப்பையில் பிரச்னை... உடனே நீக்க வேண்டும் என்று சொல்ல, பயந்து போய் ஆப்பரேஷன் செய்து கொண்டார். அது முதல் பல பிரச்னைகள். தையல் சரியில்லை, உள்ளே புண் ஆகி விட்டது, மீண்டும் தையல் என்று வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை, மன உளைச்சல், பணச்செலவு....'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக' நன்றாக இருந்த உடம்பைக்கெடுத்துக்கொண்டு விட்டேனே என்று வருத்தப் படுகிறார்.

இந்தக் காலத்தில் டாக்டர்களையும் நம்ப முடிவதில்லை.... நல்ல மருத்துவமனை எது என்று தீர்மானிக்கவும் முடிவதில்லை.

ஒன்றுமில்லாத நோய்க்கெல்லாம் இக்காலத்தில் எப்படி விரிவான(!) மருத்துவம் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை சுருங்கச்சொல்லி விளங்க வைப்பது போல் மிக அழகாக ஆசிரியர் அவருக்கே உரிய நகைச்சுவையுடன், அங்கங்கே ரசனையான வர்ணனைகளுடன், 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்பதைப்போல் எழுதியுள்ள இக்கதையின் முடிவை நம்மிடமே விட்டு நம்மையும் 'ஜட்ஜ்' ஆக்கி விட்டார்!!

என்னைப்பொறுத்தவரை கதாநாயகன் கோபி தன் கால்வலியையும் பொறுத்துக் கொண்டு, 'விட்டேன் பிழைத்தேன்' என்று வேறு ஆஸ்பத்திரிக்கு ஓடியிருப்பான்!!




'அவன் போட்ட கணக்கு'க்கு எனக்கு கிடைத்தது இரண்டாம் பரிசு!!


திரு வை.கோபு ஸார் அவர்களின் 27வது கதையான 'அவன் போட்ட கணக்கு' கதையினைப் படிக்க இணைப்பு...

 http://gopu1949.blogspot.in/2014/07/vgk-27.html

அதற்கான என் விமரிசனத்திற்கான இணைப்பு...

http://gopu1949.blogspot.in/2014/08/vgk-27-02-03-second-prize-winners.html

இது என் விமரிசனம்....
---------------------------------

 முந்தைய கதையில் பஞ்சாமியின் பல்லை பலவிதமாக பல்டாக்டர்  பாடாய்ப் படுத்தி, பின்பு அத்தனை பல்லையும் பிடுங்கி கடைசியில் போலிப்  பல்லைக் கட்டிய டாக்டரும் போலி என்று சொல்லி....பல்சுவை அல்ல...நகைச்சுவை கதை எழுதி பல்லாயிரக் கணக்கான மக்களையும் பல் வலிக்க சிரிக்க வைத்த அந்தக் கதையின்  தொடர்ச்சி போல இருக்கிறது 'அவன் போட்ட கணக்கு' !

ஆனால் இது ஒரு தந்தை-மகனுக்கிடையேயான உணர்ச்சிபூர்வக் கதை. 

பல்லைப் பற்றிய பல விஷயங்களை பல்லாராய்ச்சிகளைச் செய்து, பல் மருத்துவம் ஏன் படிக்கலாம், எதனால் படிக்கலாம், எப்படி படிக்கலாம், அதன் ப(ல்)லாபலன் என்ன, அதில் கிடைக்கும் பல்லாயிரம் வருமானம்,  போலியில்லாத பல் டாக்டர் உருவானால் அதன் பயன் என்ன ....இப்படி  பல் படிப்பு பற்றி ஒரு பெரிய பட்டியல் போட்டு  தமிழ்மணியின்  பிள்ளையை ஒரு பல் மருத்துவர் ஆக்க உதவி செய்து விட்டார் கணக்கு வாத்தியார் மூலமாக நம் கதாசிரியர்!
 
மனித மனங்களைப் படித்து  உணர்வுகளை நயமாக, சுவாரசியமாக எடுத்துக் கூறுவதில் ஆசிரியருக்கு இணை யாரும் இல்லை எனலாம். நாமும்  அப்படிப்பட்ட அனுபவங்களை அறிந்திருந்தால்  இது போன்ற கதைகளில் ஒன்றிவிட முடிகிறது.

'பெற்ற மனம் பித்து...பிள்ளை மனம் கல்லு', 'நாமொன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும்' போன்ற பழமொழிகளை  அழகாக எடுத்துச் சொல்லும் நல்ல கதை.
பள்ளி மணியை மட்டுமே அடித்து அயர்ந்த தமிழ்மணிக்கு தன் மகன் ஒரு நல்ல டாக்டரானால் மணி (money) யை தாராளமாகப் பெற்று  நிம்மதியாக ஒய்வு நாட்களைக் கழிக்கலாம்  என்ற ஆசை இருக்காதா என்ன? அதிலும் நன்கு படிக்கும் மகனை தான் கஷ்டப் பட்டும், கடன் வாங்கியும் நன்கு படிக்க வைத்து தோளில் கோட்டும், கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்புமாகப் பார்க்க விரும்பியது தவறில்லை. இது எல்லா தந்தைக்கும் இருக்கும் ஆசைதான்.
ஆனால் அந்த சீட் கிடைக்காதபோது, பல் டாக்டர் படிப்புக்கு வாய்ப்பு உண்டா என்பதைப் பற்றித் தெரியாதே அவனுக்கு. அதைப் பற்றி விபரம் அறியவே தன்னைவிட அதிகம் படித்து அறிந்த  கணக்கு வாத்தியாரிடம் ஆலோசனை கேட்க வந்தான்.

கணக்கு வாத்தியார் 'அந்தப் படிப்புக்கே சேர்த்துவிடு' என்று சொன்னதை அவன் விரும்பவில்லை.அவன் மட்டுமல்ல பல பெற்றோர்கள் தம் குழந்தை பெரிய டாக்டர் ஆக வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்;  பல் டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப் படுவதில்லை. பல் மருத்துவத்தை ஏதோ குறைவாகக் கருதுவதை நாம் காண முடிகிறது. மெடிகல் சீட் கிடைக்காவிட்டால்  பொறியியல் போன்ற வேறு துறைகளுக்கு மாணவர்கள்  முயல்கிறார்களே தவிர பல் மற்றும் கால்நடை மருத்துவம் படிக்க யாரும் ஆர்வம் காட்டாதது இயல்பாக உள்ளது. 


ஒரு தெருவில் ஐந்து பொது மருத்துவர்கள் இருந்தால் ஒரு பல் மருத்துவர் மட்டுமே இருப்பார். மேலும் பல்லைப் பற்றி யாரும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.தாங்க முடியாத வலி வரும்போது மட்டுமே நாம் பல்மருத்துவரிடம் செல்கிறோம். 


ஆனால் கோணல் மாணலான பல்லையும் சீர்படுத்தி, முக அமைப்பை மாற்றி நம்மை அழகுறச் செய்வது பல் மருத்துவர்களால் மட்டுமே முடியும் எனலாம்! தற்காலத்தில் பல் சீரமைப்பு செய்து கொள்ள பலரும் விரும்புவதால் பல் மருத்துவர்களின் தேவையும்  அதிகமாகி இருக்கிறது. ஆசிரியர் தன்  கதையில் கூறியிருப்பது போல் பல் மருத்துவர்கள் இன்று நிறைய சம்பாதிக்க வாய்ப்புகளும் உள்ளது.

தலைவலி, வயிற்றுவலி என்று வருபவர்களைவிட பல்வலி என்று வரும் நோயாளிகள் 32 மடங்கு அதிகம் என்று கணக்கு வாத்தியார் சொன்னதைப் படித்து சிரிப்பை அடக்க முடியவில்லை!தலையும், வயிறும் நமக்கு ஒன்றுதான் இருக்கிறது: பல்லோ 32 இருக்கே...அதனால் அதற்கு 32 முறை டாக்டரிடம் போக வேண்டும் என்கிறார் ஆசிரியர் கணக்கு வாத்தியார் மூலமாக! நல்ல நகைச்சுவை!

நாட்டின் ஜனத்தொகை, அதில் குழவிகள், கிழவர்,கிழவிகள் இவர்களைக் கழித்து மிச்சமுள்ள பேருக்கு 32 பல்கள் வீதம் பெருக்கி, பல்வைத்தியம் செய்து கொள்ள வேண்டியவர்கள் 640 கோடி என்று....உஸ் ....அப்பாடா! அந்தக் கணக்கு வாத்தியார் போட்ட கணக்கை சிவப்பும், நீலமுமாக பட்டியல் போட்டு காட்டிய ஆசிரியருக்கு ஒரு 'ஒ' போடலாம்!
பால் கணக்கு போல பல் கணக்கு...சூப்பர்! ஏழை, பணக்காரர், அரசியல்வாதி என்று அத்தனை பெரும் பல் டாக்டர் முன்னால மட்டும்தான் பல்லைக் காட்டிக்கிட்டு நிற்க முடியும் என்ற பெரிய உண்மையை சொல்லி தமிழ்மணியை கற்பனை உலகில் பறக்க வைத்து விட்டார் க.வாத்தியார்! 
தன்  மகனின் மருத்துவமனையில் பல் நோயாளிகளின் கூட்டம் சமாளிக்க முடியாமல் இருப்பதாகவும், பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போவதாகவும் கற்பனையில் லயித்த தமிழ்மணி க. வாத்தியார் சொன்னபடியே  பல் மருத்துவத்தில் சேர்த்து விட்டான் மகன் மாசிலாமணியை....அந்தப் படிப்பே அவன் மனதை மாசுபடுத்தப் போவதை அறியாமல்!

தமிழ்மணியின் மகன் படிப்பு முடித்து வரப் போவதைத் தன்னிடம் சொல்ல விரும்புவதாக எண்ணிய க.வாத்தியாருக்கு மகிழ்ச்சியாக  இருந்தது அவன் சொன்ன காதல் கதை. 


இருவருமாக பல் மருத்துவத்தில் இரண்டு மடங்கு சம்பாதிப்பார்களே என்று எண்ணினார்  வாத்தியார். அதை சொல்லவும் செய்தார்.தான் சொன்னதைக் கேட்டு படிக்க வைத்த தமிழ்மணிக்கு இனி நல்ல காலம் ஆரம்பித்து விட்டதாக வாத்தியாருடன் சேர்ந்து நாமும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு  ஆயுள் மிகக் குறைவு!

அவர்கள் இருவரும் மேலே படிக்க வெளிநாடு போகப் போவதாகவும், அவர்கள் விரித்த வலையில் தன் மகன் விழுந்து விட்டதாயும் புலம்பிய தமிழ்மணிக்கு ஆறுதல் சொல்வது யார்? தான் சீராட்டி, பாராட்டி பார்த்துப் பார்த்து வளர்த்த மகனைத்  தலையாட்டி பொம்மை, வீட்டு மாப்பிள்ளை, கொத்தடிமை போல் மாற்றி விடுவார்களே என்ற  அவரது ஆதங்கம்....நமக்கும் மனதை கனக்கச் செய்கிறது. 

'தோளுக்கு மேல் உயர்ந்தால் தோழன்' ஆயிற்றே? அதை சரியாகப் புரிந்து கொண்ட(!) மாசிலாமணி தன்  தந்தையிடம் இந்த செய்தியை ஒரு நண்பனிடம் சொல்வது போல சொல்லிவிட்டான்.அவனைப் பொறுத்தவரையில் இதில் தவறில்லை. ஆனால் பெற்ற மனம்தான் பதறித் துடிக்கிறது.

தான் வெளிநாடு போகும் விஷயத்தை அன்போடு, பாசத்தோடு தந்தையிடம் சொல்லியிருந்தால் கூட தமிழ்மணி எதுவும் மறுப்பு சொல்லியிருக்கப் போவதில்லை. அவன் தன்னை மதிக்காததால்தான் அவர்  தன்  அத்தனை  பற்களையும் பிடுங்கி எறிந்தாது போன்ற  துன்பத்தை அடைந்ததாகச் சொல்கிறார். 


ஒரு பல்லைப் பிடுங்கினாலே வலி உயிர் போய்விடும். இதில் 32 பல்லையும் ஒரே நேரத்தில் பிடுங்குவது என்றால்....அவரது தாங்க முடியாத துக்கத்தை ஆசிரியர் பல் பிடுங்குவதை உதாரனமாக்கிச் சொல்வது வித்யாசமாக உள்ளது.

பாவப்பட்ட தமிழ்மணியின் புதிய கணக்கிற்கு விடை தெரியாமல் கணக்கு வாத்தியார் மட்டுமா முழிக்கிறார்! நாமும்தான்!!

மனம் வெதும்பி வருந்திய தமிழ்மணி அடிக்க வேண்டிய மணியை யாரோ அடித்ததை, அவன் வளர்த்து ஆளாக்கிய பிள்ளையை வேறு யாரோ உரிமையுடன் சொந்தம் கொண்டாடப் போவதை உவமையாகச்  சொல்லும் ஆசிரியரின் நயத்தைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
அவன் போட்ட கணக்கு.....மாசிலாமணி போட்டதா? அவன் மூலமாக இறைவன் போட்ட கணக்கா? கணக்கு வாத்தியாரின் கணக்கிலும் தவறு வருவதற்கு வாய்ப்பு உண்டு!


இக்காலப் பிள்ளைகளுக்கு பாசம், நேசம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

தான்  செய்வதும்,நடந்து கொள்ளும் முறையும் மட்டும்தான் சரி என்பது அவர்களின் வாதம்.

பெரியவர்களின்  அனுபவத்தை அவர்கள் 'அந்தக் காலம்' என்று ஒதுக்கித் தள்ளும் அலட்சியம்.

அறிவுரை சொன்னாலோ 'பெரிசுக்கு இதைத் தவிர வேற வேலை இல்லையா?' என்ற பரிகசிப்பு.
'தென்னையைப் பெத்தா இளநீரு; பிள்ளையைப் பெத்தா கண்ணீரு' என்ற நிலையை இன்று முதியவர்கள் பலரிடம் காண முடிகிறது.

பிள்ளையைப் பாசத்துடன் பெற்று, வளர்த்து அவனுக்கு வேண்டியவற்றை கண்ணும், கருத்துமாகச் செய்து நல்ல படிப்பையும் படிக்க வைத்து அவன் தனக்கு பின்னாளில், வயதான காலத்தில்  கூட இருந்து கைகொடுப்பான் என்று கனவு காணும் பெற்றோர்கள் மாற  வேண்டும்.
எதிர்பார்ப்பு இல்லாத போது ஏமாற்றமும்  இருக்காது. அதற்கு பெரியவர்கள் தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
பிள்ளைகளை மட்டுமே நம்பி இராமல் நமக்கென்று ஒரு தொகையைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

'பட்டம் மட்டும் வாங்கி வந்து பறந்து செல்லப் பார்க்குதடி' என்ற நடிகர் திலகத்தின் பாடல் காட்சிகள்தான் இந்தக் கதையைப் படித்ததும் கண்ணில் தெரிந்தது.

'யாரை நம்பி நான் பிறந்தேன்...போங்கடா போங்க.
.என் காலம் வெல்லும்...வென்ற பின்னே வாங்கடா வாங்க' என்று அவர் நெஞ்சு நிமிர்த்தி பாடியது போல அந்த நல்ல நாள் வரும்போது மாசிலாமணியும் தன்  தந்தையின் பெருமையை உணர்ந்து திரும்பி வர இறைவன் அருள் புரியட்டும்! நிச்சயம் இறைவன் அப்படி ஒரு கணக்கைப் போடுவார்!

இந்தக் கதைக்கு ஏற்றாற்போல்  தேர்ந்தெடுத்து பதிவு செய்துள்ள படக் காட்சிகள் ஒரு சித்திரப் படக்கதையை அனிமே ஷனோடு பார்த்த அனுபவத்தைக் கொடுத்த  ஆசிரியருக்கு பல்லாயிரம் நன்றிகள்!