Wednesday 5 November 2014

VGK ...40...மனசுக்குள் மத்தாப்பூ..

 




 VGK ...40...மனசுக்குள் மத்தாப்பூ....தேர்வாகாத விமரிசனம்..
கதைக்கான இணைப்புகள்...

இணைப்புகள்:

பகுதி-1 க்கான இணைப்பு:  
பகுதி-2 க்கான இணைப்பு:  

பகுதி-3 க்கான இணைப்பு:  

பகுதி-4 க்கான இணைப்பு:  

அழகான ஒருதலைக் காதல் கதை...ஒரு அரவத்தினால் இருவருக்குள்ளும் காதல் அரும்பி களிப்பூட்டும் கனவுகள் நிறைந்த அருமையான கதை.
ஆசிரியரின் கதைகளில் எப்பொழுதுமே ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். அது இந்தக் கதையிலும் அளவின்றி இருக்கிறது.
புதிதாகக் கல்யாணம் ஆன  ஒரு காதல் ஜோடியின் தவிப்பையும், ஆசைகளையும், காமத்தையும் மிக அழுத்தமாக எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர்.
தன மனைவியை விட்டுப் பிரிந்து இருப்பது எப்படி என்று மனம் வருந்தும் கணவனின் மனநிலையையும், தன்னை விட்டு நகராமல் பாடாய்ப் படுத்தும் தன கணவனின் அன்புத் தொல்லையையும் விவரிக்கும் ஆசிரியரின் கதை நயம் இயல்பாக இருக்கிறது.
ஆசிரியர் தரும் ஆலிங்கனத்துக்கான உதாரணம் சற்றே மனதை நெருடுகிறது.மார்க்கண்டேயனின் ஆலிங்கனம் பேரின்பத்தின் வாயில். மனோவின் ஆலிங்கனமோ சிற்றின்பம் தருவது.சிற்றின்பமே பேரின்பத்தின் ஆரம்பம் என்பதை சொல்கிறாரோ கதாசிரியர்!
பிள்ளைத் தாய்ச்சி பெண்ணை இப்படி படுத்துவது சரியல்ல என்று ஒரு மருத்துவரான மனோவுக்கு தெரியவில்லையே? அனுவுக்கு வலியெடுத்து விட்டதே....என்ன குழந்தை பிறந்ததோ என்ற ஆவலில் அடுத்த பாகத்தைப் படிக்க....அட! இவ்வளவும் கனவா?
தினமும் பாவாடை தாவணியுடன் விதவிதமாய்க் கோலம் போடும் பெண்ணை அவளுக்கு தெரியாமல் காதலித்தது போதாது என்று பைனாகுலர் மூலம் அவள் அழகை திருட்டுத் தனமாய் ரசிக்கும் மனோவின் மன நிலையை என்ன சொல்ல? பொதுவாக ஆண்களின் மனநிலை அது என்றாலும், அதை சரியென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவளைக் கோலப் பைத்தியமாகக் கண்ட மனோவின் காதல் பைத்தியத்தை என்ன சொல்ல? உலகிலுள்ள மற்றவர்களைப் போல மனோவும் ஒரு விதத்தில் அனு பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும்!
கோலங்கள் கூட பேசுவதாகக் கற்பனை செய்யும் மனோதத்துவ மருத்துவருக்கே மனநிலை சிதைந்து விட்டதோ?
பாவாடை, தாவணி, தொங்கும் ஜிமிக்கி, கொஞ்சும் கொலுசு, வழவழக் கைகளில் கண்ணாடி வளையல், தலை நிறைய பூ,(கண்ணில் தீட்டிய மையை விட்டு விட்டார்!) என்று அழகின் இலக்கணங்களை அடி மாறாமல் சொன்ன ஆசிரியரின் கற்பனை அற்புதம்! அதற்கேற்ற ஹன்சிகா மோட்வானியின் அழகிய படம் அருமை!

இது போன்ற படங்களை எங்கு தேடிப்  பிடித்து கதைக்கு மேலும் அழகு சேர்க்கும் ஆசிரியரின் கைவண்ணத்தைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!
அனுவின் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியாய் தான் மாற மாட்டோமா என்று ஏங்கும் மனோ நிச்சயமாகக் காதல் பைத்தியம்தான்!!
ஒவ்வொரு பாகத்திலும் ஒரு புதிய திருப்பத்தை மிக இயல்பாகக் கூறியிருக்கிறார் ஆசிரியர்.
இவ்வளவு அழகான பெண்ணுக்கு வாய் பேச முடியாதா? அதைப் படிக்கும்போதே மனம் கலங்குகிறது.
அனுவின் அம்மா மனோவை மறுநாள் பெண் பார்க்க வருபவர்களுடன் பேச அழைக்கும்போது, ஓரளவு மனோவின் மனம் மாறி விடுகிறது. இனி இவளை நாம் அடையா முடியாது என்ற எண்ணமே அவனிடம் வருத்தம் ஏற்படுத்துகிறது. அவளுக்கு நல்ல, பொருத்தமான கணவன் கிடைக்க வேண்டுமே என்று உண்மையிலேயே கவலைப் படுகிறான்.
அதுவே அவளைப் பாம்பு கடிப்பது போலும், அவளைத் தான் காப்பாற்றுவது போலும் கனவு காண வைக்கிறது.காப்பாற்றிய அவனையே அனைவரும் ஒரு குற்றவாளியாக நினைப்பதை படித்து  நமக்கும் அவன் மேல் பரிதாபமே ஏற்படுகிறது. ஆனால் அச்சமயம் பேச்சு வந்துவிட்ட அனு ஏன் உண்மையைச் சொல்லவில்லை என்று நாம் குழப்பத்தில் இருக்கும்போதே, அந்த நிகழ்ச்சியும் ஒரு கனவுதான் என்று புரிகிறது.
அடுத்து வரும் பாகத்தில் மனோவின் கனவுகள் பலித்துவிடும் என்ற திடுக்கிடும் தகவலுடன் கொண்டு செல்கிறார் ஆசிரியர்!

தாய், தந்தை மரணம், சக மாணவன் முதலிடம் பெற்றது இவை பலித்தது போல, ஐயோ பாவம்...இந்தப் பெண்ணுக்கு என்ன ஆகுமோ என்ற கவலை ஏற்படும்போதே....அடுத்த திருப்பம்!
பெண் பார்க்க வந்தவனை நாகப்பாம்பு என்ற பொருள் கொண்ட நாகப்பன் என்ற பேட்டை ரவுடியாக்கி, அவனைப் பற்றி சகலமும்தெரிந்த மனோ அனுவின் தாயாரிடம் அதைப் பற்றி எடுத்துச் சொல்லி, அவளை ஒரு தீயவனிடமிருந்து காப்பாற்றியதை எடுத்துச் சொல்லி ஆசிரியர் அவன் கனவு உண்மையாகும் என்பதை சொல்லும் அதே நேரம், அவள் பேசுவதைப் போல் கனவு கண்டதனால், விரைவில் அவளுக்கு தக்க சிகிச்சை மூலம் பேசும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி சுபம் போடுகிறார் ஆசிரியர்!
தன்னை ஒரு தீயவனிடமிருந்து காப்பாற்றிய மனோவை அனுவும் காதலிக்க ஆரம்பித்ததில் வியப்பென்ன? ஒரு சராசரிப் பெண்ணின் கனவே நல்ல, அன்பான, அழகானக் கணவன்தானே! மனோவும் அதற்கான அனைத்து தகுதிகளும் உடையவன் தானே?

'இந்த செவிட்டு ஊமைப் பெண்ணை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?' என்று நாகப்பன் கேட்க, அவளைத் தன்னால் மணக்க முடியும் என்பதைத் தன்  மனதில் சொல்லிக் கொள்ளும் மனோவின் காதல் விரைவில் கல்யாணத்தில் முடிய நாமும் வாழ்த்துவோம்!

மனோவின் எல்லாக் கனவுகளையும் போல அவள் கர்ப்பமாகி, அவளுடன் காதல் செய்யும் மனோவின் கனவும் விரைவில் நடக்கட்டும்!
காதும் கேட்காமல், வாயும் பேசாமல் அனுமானத்திலேயே எதையும் புரிந்து கொள்ளும் கதாநாயகிக்கு 'அனு' என்ற பெயரையும், மனோதத்துவ மருத்துவரான கதாநாயகனுக்கு 'மனோ' என்ற பெயரையும் ஆசிரியர் சூட்டியது இயல்பாகவா? அல்லது கதைக்கேற்றவாறு பெயர்களை வைத்தாரா? எப்படியோ கதைக்குப் பொருத்தமான அழகான பெயர்கள்!

நம் மனதின் எண்ணங்களே இரவில் நம் கனவுகளாக வரும் என்று கேள்விப் பட்டதுண்டு. அந்தக் கனவையே கருப் பொருளாகக் கொண்டு ஒரு கிளுகிளு காதல் கதையை ஆர்வம், எதிர்பார்ப்பு, சுவாரசியத்துடன் எழுதி நம்மை மகிழ்வித்த ஆசிரியரின் திறமைக்கு ஒரு ஜே!
இக்கதை வல்லமை மின் இதழில் வெளியானதற்கு ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

அன்று அடைந்த மகிழ்ச்சியைவிட இன்று விமரிசனங்களைப் படித்து அளவற்ற மகிழ்ச்சியை அடையட்டும் நம் பதிவுலக பிதாமகர்!

No comments:

Post a Comment