Wednesday 5 November 2014

'உடம்பெல்லாம் உப்புச் சீடை'...VGK6


 திரு கோபு சாரின் கதைக்கான விமரிசனப் போட்டியில் பரிசு பெறாத என் விமரிசனமும், கதைக்கான  இணைப்பும்....

http://gopu1949.blogspot.in/2014/02/vgk-06.html

'உடம்பெல்லாம் உப்புச் சீடை'....தலைப்பைப் படித்ததும் உடல் முழுதும் கொப்புளங்கள் போல காணப்படும் ஒரு உருவம்தான் என் கண்களில் தெரிந்தது. ஒருமுறை எங்கோ வெளியில் சென்றுகொண்டிருந்தபோது அது போன்று இருந்த ஒரு பெண்ணைப் பார்த்த எனக்கு மனம் மிகவும் வேதனைப் பட்டது. 'கடவுளே..இவ்வளவு பேர் நன்றாக,அழகாக இருக்கும்போது இந்தப் பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த நிலை'என்ற பரிதாபம்தான் ஏற்பட்டது. இதற்கு  மருத்துவமே  இல்லையா என்று விசனப் பட்டிருக்கிறேன். அந்த முகம் இரண்டு,மூன்று நாட்கள் கண்ணிலேயே இருந்து சங்கடம் ஏற்படுத்தியது.

அது போன்ற ஒரு பெரியவரைப் பார்த்து அருவருப்புபடும்  பட்டாபி குடும்பத்தாரின் மனநிலையை மிக அழகாகப் பிட்டு பிட்டு வைத்திருக்கிறார்  கதாசிரியர்.அவருடன் இரண்டு நாள்கள் பிரயாணம் செய்த அந்தக் குடும்பத்தாரின் பேச்சுகள்,நடவடிக்கைகள் இயல்பாக உள்ளன.

அவர்களுடன் சேர்ந்து நாமும் காசியாத்திரை சென்று வந்தாற்போல் உணர வைக்கிறது உ.உ.சீ !மூன்று குழந்தைகளின் தகப்பனார் எவ்வளவு பொறுப்பாக செயல்பட வேண்டும் என்பதை மிக அழகாக  எழுதியுள்ளார்  ஆசிரியர்.கணவனுக்கு ஆணை போடும் சராசரி ஆத்துக்காரி பங்கஜம் பல   மனைவியரின் மறுபதிப்பு(என்னையும் சேர்த்துதான்)!!

ரவியும், கமலாவும் சன்னல் ஓர இருக்கைக்கு சண்டை போட்டுக் கொள்வது,கழிவறை சென்ற பெண்ணைப பற்றிக் கவலைப்படும் தாய்,எதிர் சன்னலில் யார் வரப்போகிறார் என்ற ஆர்வம் இவை ரயிலில் பயணம் செய்யும் போது அந்தக் காலத்தில் அனுபவித்த விஷயங்கள்! இந்நாளைப் போல தட்காலில் டிக்கட் புக் செய்யலாமா,ஃ ப்ளைட்டில் போகலாமா என்றெல்லாம்  அன்று யோசிக்க  முடியாத நிதிநிலைமை ஆச்சே?


“என்ன நீங்களெல்லாம் காசிக்குப் போறேளா! கங்கா ஸ்நானமா! பித்ரு கார்யமா! பில்டர் காஃபியா ... கும்முனு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம்.
“நானும் காசிக்குத்தான் போறேன்” என்றது அது, யாரும் கேட்காமலேயே.
ஒரு வித்யாசமான உருவ அமைப்பைக் கண்டு நம் மனம் அருவருப்பு ஏற்படும்போது அவர்,அவன் என்ற மரியாதை எல்லாம் போய் அது என்று கேவலமாக நினைப்பது சகஜம் என்பதை மேற்கூறிய வரிகளின் மூலம் ஆசிரியர் அருமையாக கூறியுள்ளார்.குழந்தைகள் கள்ளம்,கபடம் அறியாதவர்கள்.அவர்கள்எந்த மனிதரையும் வித்யாசப்படுத்தியோ ,விகாரப் படுத்தியோ பார்ப்பதில்லை.ஆனால் வயதான நாம்தான் உருவத்தைக் கண்டு மனிதர்களை எடை போடுகிறோம்.ரவி தன குடும்ப நபர்களின் பெயரையும், அவர் தனக்கு சன்னல் சீட் கொடுத்ததும் மகிழ்ந்து போய் அவர் பக்கத்தில் முகம் சுளிக்காது அமர்ந்ததுடன், அவரது கொப்புளங்களை  திருகிப் பார்த்ததும் கள்ளமில்லா பிள்ளை மனம்!அவரது ஆதரவில்தான் ரவி தன் பெற்றோர் அங்கிருந்து எழுந்து வரும்படி கூறியும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டான்.இதுவும் குழந்தைகளின் இயல்பு என்பதை அங்கு நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

“சரியான அடம் பிடித்தது; ஊர் வரட்டும்; கங்கையிலே ஒரே அமுக்கா அமுக்கிப் புடறேன்” கறுவிக் கொண்டாள் பங்கஜம்.
நமக்குப் பிடிக்காத விஷயத்தை நம் பிள்ளைகள் செய்யும்போது என்னதான் தாயாக இருந்தாலும் இப்படித்தானே எண்ணுகிறோம்?அந்த மனிதரின் உருவம்தானே அவளுடைய ஒரே மகனை கங்கையில் அமுக்கும் எண்ணத்தை  உண்டாக்குகிறது?உருவம் கண்டு மனிதரை எடைபோடும் நம் மனம் எவ்வள வு கீழ்த்தரமாக யோசிக்கிறது.நாம் இன்று நன்றாக இருக்கிறோம் என்ற மமதைதான் பட்டாபியை அவரை ஒரேயடியாகக் கேவலமாகப் பேச வைத்தது? நாளை நம் நிலைமை என்ன என்பதை நம்மால் நினைத்துப் பார்க்க முடிவதில்லை. 'ஐயோ பாவம்..இவர் இப்படியிருக்கிறாரே நாம் சற்று அவருக்கு ஆறுதலாகப் பேசுவோம்,அல்லது அதைக் கண்டு கொள்ளாமல் இருப்போம் என்றில்லாமல் அவரைப் பொரிந்து தள்ளிய பட்டாபி வெறும் மனிதன்.தன்  நிலைமையைப் புரிந்து அவர்களிடமிருந்து விலகி,முடியாத வயதிலும் அவர்கள் கண்ணில் படக்கூடாது என்று மேல் பெர்த்தில் ஏறிப் படுத்தாரே அவர்தான் மாமனிதர்!ஒரு வயதான மனிதரை வார்த்தைகளால் காயப் படுத்திய பட்டாபியைப் போன்றவர்கள் நிறைய இருக்கிறார்கள்.ஓடும் ரயிலிலிருந்து குதித்துவிட மாட்டாரா என்ற பங்கஜத்தின் இழிவான, மனிதத் தன்மையற்ற எண்ணத்தை என்ன சொல்வது?

கணவனும் மனைவியும் மீண்டும் ரவியைப் பார்த்து முறைக்க, “சப்பாத்தி எனக்குப் பிடிக்காது, எனக்கு வேண்டாம், நீங்களே சாப்பிடுங்க” எனப் பட்டென்றுச் சொல்லி விட்டான், ரவி.

மாசற்ற மனதுடன் அவருடன் பழகிய குழந்தையின் மனதில் அவர் உடல் குறையை காரணமாகக் காட்டி,அவர் கொடுப்பதை சாப்பிடக்கூடாது என்ற விஷத்தை விதைப்பது பெற்றோர்தான்.
பட்டாபி கோஷ்டி தன்னை வெறுப்பதை அறிந்து அவர்கள் கண்ணில் படாமல் ஒதுங்கிய முதியவர்பால் அவர்களுக்கு சிறிதும் பச்சாத்தாபமோ,அன்போ,மதிப்போ  ஏற்படவில்லையே? அவர் கொண்டுவந்த சுருங்கிய வாழைப்பழப் பையைப் போலவே பட்டாபி தம்பதியின்  மனமும் சுருங்கி விட்டது.

குழந்தையை ஆட்டிவிடும் தொட்டிலைப் போன்ற வண்டியின் அருமையான ஆட்டத்திலும், சீரான ஓட்டத்திலும், சுகமான காற்றிலும் அனைவரும் நிம்மதியாகத் தூங்கி விட்டனர். அவர்களை ஏற்றிச் சென்ற ரயில் மட்டும் தூங்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.
மனித மனங்களை சித்தரித்ததைப் போன்று உறங்காத ரயிலையும் எழுத மறக்கவில்லை ஆசிரியர்!காலையில் எழுந்து அந்த மனிதர் முகத்தில் விழிக்கக் கூடாது என்ற எண்ணமே மேலோங்கியிருந்த பட்டாபி,பங்கஜத்திற்கு கடவுள் அஸ்திப் பெட்டியை மறக்க வைத்து தலையில் ஒரு அடி கொடுத்ததுதான் விதி.இல்லையெனில் அந்தத் தன்னலமற்ற பெரியவரைப் பற்றி இவர்கள் அறிந்திருக்க முடியாதே?எல்லா காரியங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் உண்டே?அந்த மனிதரின் முகத்தை மட்டுமே கண்டு ஏளனமாகவும்,குத்தலாகவும் பேசியவர்கள், அவரிடம் அன்போடு பேசியிருந்தால் எத்தனையோ நல்ல விஷயங்களை அறிந்திருக்கலாம்.ஒருவரின் உருவம் கண்டு அவர்களைப் பற்றி தவறாக,தாழ்வாக நினைத்தால் நாம் பெறுவது அல்ப சந்தோஷம்;இழப்பதோ பல நல்ல விஷயங்கள் என்பதை இந்தக் கதை மிக அழகாக எடுத்துச் சொல்கிறது.

அந்தப் பவித்ரமான வஸ்துவை இந்த அருவருப்பான மனுஷன் கையால் தூக்கி வரும்படி ஆகிவிட்டதே என்ற சிறு வருத்தமும் மனத்தின் ஆழத்தில் ஏற்பட்டது, பட்டாபிக்கு.
தான் அவமதித்த மனிதர் தன் அப்பாவின் அஸ்திக் கலசத்துடன் வந்ததை எண்ணி நன்றி சொல்ல வேண்டிய பட்டாபி,இந்த மனிதர் கையால் தொட்டு விட்டாரே என்று நினைத்தது எத்தனை அநாகரீகமான,மனித நேயமில்லாத செயல்?ஆனால் அந்த செயலை தான் தவறாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்று சொன்ன அந்தப் பெரியவர் ஒரு மகான்!அதுதானே சிறந்த பக்தியின்,ஞானத்தின் அடையாளம்.அவரின் மேன்மையையும்,உயர்வையும் உணர்ந்து கொண்ட பட்டாபி குடும்பத்தார் இனி நிச்சயமாக உருவம் கண்டு உள்ளத்தை எடை போட  மாட்டார்கள்.
தான் செய்த தவறுக்குப் பரிகாரமாக குற்ற உணர்வில் கூனிக் குறுகிய பட்டாபி தம்பதியர் கொடுத்த பணத்தை வேதபாடசாலைக்கு அப்படியே கொடுக்காமல் வஸ்த்ரதானம் மற்றும் அன்னதானமாகச் செய்யச் சொன்னபோது அவரின் பெருந்தன்மையும்,பொது நலமும் பளிச்செனத் தெரிகிறது.தன்னை அவலமாகப் பேசியதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத அவர் மிகப் பெரிய மனிதர்!வேதத்தை மட்டுமே ஓதி, பாவங்கள் செய்யாத அந்தப் புண்ணியரை  அலட்சியம் செய்து பாவம் சேர்த்துக் கொண்ட பட்டாபிக்கு கங்கா ஸ்நானம் புண்ணியம் தந்திருக்கும். அவர்களுடன் கூடவே சென்ற நமக்கும் கங்கா ஸ்நான பலன் கிடைத்துவிட்டது.

அங்கங்கே காணப்பட்ட திரிவேணி சங்கமம்,காசி,கயா பற்றிய படங்கள் அருமை.கதையைப் படித்ததும் பல ஆண்டுகளுக்கு முன் சென்ற காசி யாத்திரையின் ஞாபகம் வந்தது.மீண்டும் காசிக்குப் போகும் ஆசையையும் ஏற்படுத்தி விட்டது!உறங்காத ரயில்,அசை போடும் மாடு,சுருங்கிய வாழைப்பழ கேரி பேக்,வரிசையாக  ஸ்டே ஷ  ன்கள் என்று மிக இயல்பாக நகர்கிறது கதை.அவர்களோடு சேர்ந்து நாமும் காசிக்குப் போன உணர்வைத் தருகிறது!


அழகிய உடலோ
அருவருப்பான உடலோ


உயிர் என்ற ஒன்று பிரிந்தபின்
அழுகக்கூடிய, 
நாறக்கூடிய
அப்புறப் படுத்த வேண்டிய   
பொருளாகி விடுகிறது.


அதை எரிக்க வேண்டிய 
அவசரமும், அவசியமும், நிர்பந்தமும் 
ஏற்படுகிறது.

எரிந்த அதன் சாம்பலில்


அழகும் இல்லை
அருவருப்பும் இல்லை.

சாம்பல் கரைக்கப்படும் கங்கையோ
என்றுமே புனிதமாகப் போற்றப்படுகிறது!

என்ன அருமையான வார்த்தைகள்.அனாதையான சவங்களை யாராக இருந்தாலும் கண்டிப்பாக எடுத்து தகனம் செய்ய வேண்டும் என்பது மகாபெரியவரின் வாக்கு இங்கு நினைவு கூறத் தக்கது.
ஹர ஹர சங்கர!ஜெய ஜெய சங்கர!

No comments:

Post a Comment