மாதங்களில்
நான் மார்கழி என்றார் கண்ணபரமாத்மா.இம்மாதம் இறைவனை வழிபடவென்றே ஏற்பட்ட
மாதம். இம்மாதத்தில் நாம் இறைவனுக்கு செய்யும் வழிபாடுகள் பன்மடங்கு
பலனைத் தரும். நாராயணனின் வைகுண்ட ஏகாதசியும், சிவனுக்குகந்த
திருவாதிரையும் வருவது இம்மாதத்தில்தான்.
ஆடும் அரசரும், பள்ளிகொண்ட
அரங்கனும் தம் அருட்கண்களால் பக்தர்களின் இன்னல்களைத் தீர்ப்பது
இம்மாதத்தில்தான்.
நட்சத்திரங்களுள்
சிறந்தது திருவாதிரை. சிவாலயங்களுள் முதன்மையானது தில்லை
சிதம்பரம்..அங்குதான் கனகசபையில் நடராஜப் பெருமான் தன் இடதுகாலைத் தூக்கி
திருநடனம் ஆடுகிறார். கைகளில் மான், கனல், உடுக்கை, டமருகம், தலையில்
சந்திரன் இவற்றோடு தன் இடப்பாதத்தைத் தூக்கியபடி இறைவன் தாண்டவம்
ஆடுகிறார். இவற்றை இறைவன் தரித்திருப்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
புலித்தோல்....அகங்காரமாகிய புலியைக் கொன்று அதன் தோலை அணிந்தார். இது அகங்காரத்தை அடக்குவதன் பொருள்.
மான்....மனித
மனம் மானைப் போல் துள்ளிக் குதித்து அங்குமிங்கும் ஓடும். நடராஜப்
பெருமானின் கையிலுள்ள மான் அவர் முகத்தையே பார்த்திருப்பதுபோல், ஜீவர்களும்
மனதை தீய வழிகளில் செலுத்தாமல் இறைவன் வசமே வைத்திருக்க வேண்டும் என
உணர்த்துகிறது.
நெருப்பு....எந்தப்
பொருளையும் அக்னி சாம்பலாக்கும். எரிந்தபின் மிஞ்சுவது நீறு. சிவஞானம் என்ற
அக்னி கர்மத்தை எரித்து சாந்தமும், இன்பமும் நிறைந்த வாழ்வு
தரும்.திருநீறு சகல பாவங்களையும் போக்கும்.
சந்திரன்...இறைவன் தூய்மைக்கு இருப்பிடம் என்பதை உணர்த்துகிறது.
உடுக்கை,
டமருகம் .....நாதம் என்ற விந்துதான் உலகையே உருவாக்கியது.'ஓம்' என்ற ஓசையே
பிரணவ நாதம். அதன் மூலம் மனிதன் தன்னை தெய்வ நிலைக்குப் போக வல்லவனாக
முடியும் என்பதைக் குறிப்பதே உடுக்கையும், டமருகமும்..
தூக்கிய பாதம்....சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குண
மாயையாகிய முயலகனை மிதிக்கும் பாங்கில் ஒரு காலைத் தூக்கி ஆடுகிறார் ஈசன்.
மாயையை மிதித்து அழித்தாலே ஞானம் கிட்டும் என்பதை இது எடுத்துக்
காட்டுகிறது.
நடராஜ
வடிவம்....ஸ்ரீநடராஜ வடிவமே பஞ்சாட்சரமாகும். அவரின் திருவடி 'ந'காரம்.
திருவுந்தி 'ம'காரம். திருத்தோள் 'சி'காரம். திருமுகம் 'வ'காரம். திருமுடி
'ய'காரமாகும். இப்பஞ்ச அட்சரங்களை தன உருவாய்க் கொண்டு திரு நடனம்
செய்கிறார்.
பஞ்ச நடன சபைகள்...
சிதம்பரம்....பொற்சபை
மதுரை....ரஜித (வெள்ளி) சபை
திருநெல்வேலி....தாமிர சபை
திருவாலங்காடு....ரத்ன சபை
திருக்குற்றாலம்....சித்ர சபை
பூலோக கைலாசம் எனப் புகழப்படும் சிதம்பரத்தின் பெருமைகள்...
தில்லைவனம், ஞானாகாசம், பொன்னம்பலம், புலியூர்,வியாக்கிரபுரம், புண்டரீகபுரம் ....இவை சிதம்பரத்தின் பெயர்கள்.
இது பஞ்சபூதத் தலங்களில் ஆகாசத் தலமாக விளங்குகிறது.
தல விருட்சம்..தில்லைமரம்.
இத்தலத்தில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்த சபை, இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்துள்ளன.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று பெருமைகளும் உடையது தில்லை.
நடராஜ
மூர்த்தி, திருச்சிற்றம்பல உடையார், அம்பலவாணன், தில்லையம்பலப் பெருமான்,
ஆனந்ததாண்டவப் பெருமான்,பொன்னம்பல நாதன், சபாபதி என்ற பெயர்களைக் கொண்டவர்.
தேவியின் பெயர் சிவகாமசுந்தரி.
சிதம்பரத்தில் நான்கு ராஜகோபுரங்கள் உண்டு. நான்கும் ஒரே உயரத்தில் அமைந்த சிறப்பு பெற்றது.
இங்கு சிவன், விஷ்ணு சன்னதிகள் ஒரே இடத்தி நின்று தரிசிக்கும்படி அமைந்துள்ளது.
நடராஜர்
வீற்றிருக்கும் பொன்னம்பலக் கூரை தங்கத்தால் வேயப்பட்டது.இதிலுள்ள 21,600
ஓடுகள், மனிதன் ஒரு நாளில் விடும் மூச்சுக் காற்றின் எண்ணிக்கை.
கூரை இணைக்கப் பயன்படுத்தப்பட்ட 72000 தங்க ஆணிகள், மனிதனின் சுவாச, ஜீவ நாடிகளின் எண்ணிக்கை.
அங்குள்ள 64 கைம்மரங்கள், 64 கலைகளை குறிக்கின்றன.
9 தங்கக் கவசங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.
மனித இதயம் உடம்பின் நடுவில் இல்லாது இடப்புறம் தள்ளி இருப்பதுபோல,கர்ப்பக்கிரகம் கோயிலின் மத்தியில் இல்லாமல் தள்ளி அமைந்துள்ளது.
மனித இதயத்தில் ரத்தம் பக்கங்களிலிருந்து செல்வது போல் கோயிலுக்கும் நேராக வழி இன்றி இருபக்கமும் அமைந்துள்ளது.
கனகசபையில்
உள்ள பதினெட்டு தூண்கள் பதினெண் புராணத்தையும், ஐந்து வெள்ளிப் படிகள்
ஐந்தெழுத்தையும், 96 பலகணிகள் 96 தத்துவங்களையும் குறிப்பன.
சிற்சபையில்
உள்ள ஐந்து தூண்கள், ஐம்பொறிகளையும், பிரம பீடத்தில் மேலுள்ள நான்கு
தூண்கள் நாலு வேதத்தையும், கீழுள்ள ஆறு தூண்கள் ஆறு சாத்திரங்களையும்
உணர்த்துவன.
இப்படிப்பட்ட சிறந்த
தத்துவங்களுடன் அமைந்த பிரணவ பீடத்தில் சிதம்பர ரகசியமும், நடராஜப்
பெருமானும், சிவகாம சுந்தரி அம்மையும் எழுந்தருளியுள்ளார்கள்.
சிதம்பர ரகசியம்....நடராஜரின் வலப்பக்கமுள்ள சிறு திரையைஅகற்றினால், ஆரத்தி காட்டும்போது, அதனுள் ஒரு தங்க
வில்வதளமாலை தொங்கவிடப் பட்டிருக்கும்.இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய
உருவில் இருப்பதாகப் பொருள்.எங்கும் நிறை இறைவன் இங்கு அகண்ட சச்சிதானந்த
ஸ்வரூபனாக, அரூபமாகக் காட்சியளிக்கிறார்.
இந்த நடராசப் பெருமானுக்கு ஆண்டில் ஆறு முறைகள் மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.
எந்த
ஆலயத்திலும் மூலவர் கருவறையை விட்டு வெளிவரும் வழக்கம் கிடையாது. ஆனால்
இங்கு மட்டும் நடராஜப் பெருமான் மூல மூர்த்தியே ஆனித் திருமஞ்சனம் மற்றும்
ஆருத்திரா தரிசனம் இரண்டு நாட்களிலும் சன்னதியில் இருந்து வெளிவந்து,
நான்கு வீதிகளிலும் வலம் வந்து மக்களுக்கு தரிசனம் கொடுப்பது எங்குமில்லாத
அதிசயம்.
திருவாதிரை அன்று
நடராஜப் பெருமானுக்கு களி நிவேதனம் செய்வது விசே ஷம். அதற்கான காரணம்
என்ன?
சேந்தனார் என்ற சிவபக்தர் தினமும் நடராஜப் பெருமானுக்கு உணவு
சமைத்து நிவேதனம் செய்து பின் சிவனடியார்களுக்கு உணவளித்த பின்பே தான்
சாப்பிடுவார். ஒருமுறை திருவாதிரை அன்று மழையினால் அவரால் வெளியில் சென்று
உணவுக்கு தேவையான சாமான்களை வாங்க முடியவில்லை. அடுப்பு எரிக்கும் விற்கும்
ஒரே ஈரம்.
எப்படி உணவு சமைப்பது என்று அவரும், அவர் மனைவியும் தவித்து
இறைவனை வேண்டினர். ஆனால் நடராஜப் பெருமானோ அவரை சோதிக்கும் பொருட்டு
சிவனடியாராக வந்து உணவு கேட்டார். ஒன்றும் செய்ய முடியாத அவர் மனைவி வீட்டில் இருந்த
அரிசிமாவு,வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து களியாக்கி நிவேதனம்
செய்தாராம்.
'ஆஹா...இது போன்ற உணவை நான் எப்போதும் சாப்பிட்டதில்லை.
பேஷ்..பேஷ்!' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார் நடராஜப் பெருமான்.
சேந்தனாரின் பக்தியை அனைவருக்கும் வெளிப்படுத்தும் பொருட்டு இறைவன் தான்
களியை சாப்பிட்டதன் அடையாளமாக தன் சந்நிதானத்தில் சிதறியிருந்தாராம்.
அவரது சிலையின் வாயிலும் களித்துகள்கள் ஒட்டிக் கொண்டிருந்ததாம்.
அனைவரும்
சேந்தனாரின் சிவபக்தியைப் பற்றி அறிந்தனர். அதுமுதல் திருவாதிரைக்கு களி
செய்து நிவேதிக்கும் வழக்கம் ஏற்பட்டது.
ஆருத்திரா தரிசன பலன்கள்...
ஆணவம் அழியும், அன்பு உண்டாகும், மனம் கட்டுப்பாடாக
இருக்கும், எதையும் சாதிக்கும் ஆற்றல் ஏற்படும், இறைவனிடம் பக்தி பெருகி,
அதனால் முக்தி கிடைக்கும்.
சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் நடராஜ தாண்டவம் திருக் காட்சி பெற்றனர்.
நாமும் திருவாதிரை அன்று அருகிலிருக்கும் சிவாலயம் சென்று நடராஜப் பெருமானை வணங்கி நலம் பெறுவோம்.
தில்லையம்பல நாதன் நடமாடிய சில க்ஷேத்திரங்கள்
1.மதுரை....வரகுண பாண்டியனுக்காக வலது பதம் தூக்கி ஆடியது.
2. திருவாலங்காடு...ஈசன் காளிதேவியுடன் ஆடியது.
3. திருப்புத்தூர்...சிவபெருமான் மகாலட்சுமிக்கு கௌரி நடனம் ஆடிக் காட்டினார்.
4. திருவாவடுதுறை....ஈசன் வீரசிங்க ஆசனத்தில் சுந்தர நடனம் மகா தாண்டவம் ஆடியது.
5. திருப்பனையூர்...ஊருக்கு வெளியே சுந்தரருக்கு நடனம் ஆடியது.
6. திருவதிகை....சிவகாமி பாட நடராஜர் சம்பந்தருக்கு திருநடனம் ஆடிக் காட்டினார்.
7. திருக்கூடலையாற்றூர்....ஈசனார் பிரம்மனுக்கு நர்த்தனம் செய்து காட்டிய இடம்.
8. திருவுசாத்தானம்....விஸ்வாமித்திரருக்கு இறைவன் நடனக் காட்சி அருளியது.
9. கொடுமுடி...சித்ரா பௌர்ணமியில் பரத்வாஜ முனிவருக்கு தாண்டவ நடனக் காட்சி அருளியது.
10. திருப் பைஞ்ஞீலி...வசிஷ்டருக்கு நடராஜர் நடனக் காட்சி.
11. திருத்துறைப்பூண்டி....நடராஜர் அகத்தியருக்கு சந்திர சூடாமணி தாண்டவம் காட்டி அருளியது.
12. அரதைப்பெரும்பாழி....உபமன்யு முனிவருக்கு நடனக் காட்சி.
13. திருக்காறாயில்...பதஞ்சலி முனிவருக்கு ஏழுவகைத் தாண்டவங்களைக் காட்டல்.
14. திருக்கச்சூர்....திருமாலுக்கு இறைவன் நடனக் காட்சி.
15.திருமழபாடி....மார்க்கண்டேயருக்கு மழு ஏந்தி நடனக் காட்சி தந்தது.
படங்கள் கூகிளில் இருந்து எடுக்கப்பட்டவை.