Monday, 13 April 2015

மன்மத ஆண்டே வருக...!!!

 

சித்திரையில் துவங்கும் தமிழ்ப் புத்தாண்டு அன்று ஆதவன் மேஷ  ராசியில் பிரவேசிக்கிறார். அது முதல் நமக்கு வசந்த காலம் ஆரம்பமாகிறது. வசந்தம் என்றால் மகிழ்ச்சி! புது வாழ்வின் தொடக்கம்! மன்மதனின் ஆட்சி ஆரம்பித்து, காதலர்கள் களிக்கும் காலம்!  எங்கு நோக்கினும் பசுமை! மாமரங்கள் புதுத் தளிரையும், வேப்ப மரங்கள் கொத்து கொத்தாக புது மலர்களையும் தாங்கி நிற்கும்!

தமிழ் ஆண்டுகள் அறுபது. இவற்றின் பெயர்கள் எப்படி ஏற்பட்டன? அப்பெயர்களின் காரணம் என்ன? இவற்றை அறிவோமா? மனிதனின் வயது அந்நாளில் 120 ஆக இருந்தது. 120 ஆண்டுகள் வாழ்பவர் எல்லா (ஒன்பது) தசைகளையும் பார்க்க முடியும். வருடங்களை அறுபதாக வைத்த காரணம், மனிதன் இரண்டு வட்டங்கள் வாழ வேண்டும் என்பதற்கே.

பிறப்பு, இறப்பில் சிக்கி, மாயையில் வாழும் மனிதருக்கு நல்லது, கெட்டது  எல்லாவற்றையும் ஒரே மாதிரி பாவிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே, ஆண்டுகளுக்கு நல்ல, கெட்ட பெயர்களை வைத்தனர் நம் முன்னோர். பிரபவ என்பது புகழையும், விபவ என்பது அந்தஸ்தையும் குறிக்கும்.சுக்ல என்றால் வெண்மை. அதாவது தூய்மையான உள்ளத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தாது என்பது கொடையைக் குறிக்கும். கர, துன்மதி, குரோதன, ராக்ஷச என்பது போன்ற அசுரப் பெயர்கள் நம்மிடமுள்ள காம, குரோத, லோப குணங்களைக் குறிக்கும்.

இவ்வருடங்கள் பிறந்தது எப்படி? நாரத புராணத்திற்கு செல்வோம். ஒருமுறை நாரதர் வைகுண்டம் சென்றபோது அருகில் இருந்த ஸ்ரீதேவி சட்டென்று எழுந்து உள்ளே சென்று விட்டாள். நாரதருக்கு இது சுருக்கென்று இருந்தது.

"நாராயணா! நானோ மாயையை வென்ற ஜிதேந்திரியன். தேவி என்னைக் கண்டு உக்ள்ளே சென்றது ஏன்?"என்றார். 

"நாரதா! பிரம்மாவும், ருத்ரனும் கூட மாயையை வெற்றி பெற முடியாது.காலத்திற்கு உருவம் கிடையாது. ஆனால் அக்காலமே மாயைக்கு உருவமாயிருக்கிறது." என்றார் நாராயணர்.

அம்மாயையைக் காண விரும்பிய நாரதரை பூலோகம் அழைத்து வந்த நாராயணர், அவரை ஒரு தடாகத்தில் ஸ்நானம் செய்யச் சொல்லிவிட்டு மறைந்து விட்டார் பகவான்! ஸ்நானம் செய்து கரையேறிய நாரதர் அழகிய ஒரு கன்னிப் பெண்ணாகக் காட்சியளித்தார். 

மாயையில் ஆட்பட்ட நாரதருக்கு தன்  பூர்வீக நினைவுகள் மறந்து, அங்கு வேட்டையாட வந்த காலத்வஜன் என்ற அரசரை மணந்து, 60 பிள்ளைகளைப் பெற்றார். மாயையின் வலையில் சிக்கியபோது அதில் வசப்பட்டதால், தனக்கு  பிறந்த பிள்ளைகளுக்கு பல குணங்களின் பெயர்களைச்  சூட்டினார் நாரதர். அவரின் 60 பிள்ளைகளே 60 வருடங்கள். அதனாலேயே பிரபவ முதல் அக்ஷய வரை உள்ள பெயர்கள் அனைத்தும் நம் வாழ்க்கை சம்பந்தப்பட்ட குணங்களின் பெயர்களே.


பண்டைத் தமிழர்கள்  ஆதாரமாகக் கொண்டே மாதங்களைக் கணித்தனர்.  அதனாலேயே மாதங்களுக்கு 'திங்கள்' என்ற பெயர் ஏற்பட்டது.அப்பெயர்கள் எப்படி ஏற்பட்டன? தமிழில் திங்கள் என்பது மாதத்தைக் குறிக்கும்.பன்னிரு திங்களின் பெயரும் தமிழ்ப் பெயர்களே. 


கடைசி மாதமான பங்குனிக்குப் பின்பு பனி முற்றும் போய் வானம் வெயிலால் பளிச்சென்று சித்திரம் போல் காணப்படுவதால் 'சித்திரை'.இம்மாதம் மக்கள், மாக்கள், செடிகொடிகள் தழைக்கும் இன்பமான மாதம்.

அடுத்த மாதம் வெய்யில் அதிகரித்து, செடிகொடிகள் வாடி காசநோயுற்றது போல காணப்படும். அதனால் 'வைகாசி' (வை என்பது வைக்கோல்,புல)என்பதைக் குறிக்கும். வைகாசம் என்பது வைகாசி ஆயிற்றாம்!

தை முதல் ஆனி  வரையான ஆறு மாதங்கள் தேவர்களுக்கு பகல் காலமாகும்.அப்பகலின் முடிவிற்கு எல்லை  மாதம் 'ஆனி'  (ஆனி -எல்லை) ஆயிற்று.சூரியன் வடக்கு  எல்லையை அடைந்து தெற்கு நோக்குவதால் 'தட்சிணாயனம்' எனப்படும்.

ஆதவன் திசை திரும்பும்போது உலகம் ஆட்டமுறும்.அனல் காற்று வீச ஆரம்பிக்கும். 'ஆடி' என்பதற்கு காற்று என்ற பொருள்.


வெப்பம் அதிகரித்து காற்று மேலேழும்பும்.மேகங்கள் வெண்மை நிறம் கொண்டு வேன்பசுக் கூட்டங்கள் அணிவகுத்து செல்வது போல வரிசையாக ஒன்றுடனொன்று இணைந்து செல்வதால், (ஆ-பசுக்கள்) அணியாகச்  செல்வதால் 'ஆவணி' ஆயிற்று.

வானில் வெயிலும், மாசும் புரண்டு அடித்து வானிலை மாறுபட்டு, வெயிலும், மழையும் சரியாக இல்லாத மந்த நிலை கொண்ட மாதம் 'புரட்டாசி' (புரட்டு - புரண்டு, அசி- வானம் ) புரட்டாசி எனப்பட்டது.

சூரிய வெப்பம் குறைந்து மக்களை பசி அணுகுவதால் 'ஐப்பசி' (ஐப்பசி..அணுகிய பசி) ஆயிற்று. 

கார் காலம் மயங்கத் தொடங்கவே (கார்...திகை-மயங்குவது) 'கார்த்திகை' ஆனது.

சூல்  கொண்ட மேகங்கள் மழை பொழிந்து மயக்கம் தெளிவதால் (மாரி -மழை, கழி-கழிவது) 'மார்கழி' என்றாயிற்று.

மழை நீங்கி ஆதவன் வெளிப்பட்டு அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும், வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு புதுத் தோற்றம் கொள்வது, புது நெல், புதுப்பானை இவற்றில் செய்யப்பட்டு சூரியனுக்குப் படைக்கப்படும் பொங்கல்... இவற்றால் சிறப்பு பெரும் இம்மாதம் 'தை' (தை-சிறப்பு) ஆகியது.

மழை நீங்கினாலும் வானம் மாசு படிந்திருக்கும் மாதம் மாசி எனப்பட்டது.

மார்கழி முதல் நான்கு மாதம் பனிக்காலமாதலால், பனி கூறுபடும் மாதம் (பங்கு-கூறுபடுவது ) 'பங்குனி' மாதம்.

இவ்வாறு பன்னிரண்டு தமிழ் மாதங்களும் பொருள் பொதிந்தவையே.

தமிழ் வருடப் பிறப்பன்று பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் நம் நாட்டில் உண்டு. பஞ்சாங்கம் மூலம்தான் வாரம், நட்சத்திரம், லக்னம் , திதி, யோகம் ஆகிய ஐந்து அம்சங்களைத் தெரிந்து கொள்ள முடியும். அந்த வருடத்திற்குரிய பலன்களை புத்தாண்டு அன்று படித்து அறிந்து கொள்வதே பஞ்சாங்க படனம்.

வருடப் பிறப்பன்று வேப்பம்பூ பச்சடி செய்வது ஐதீகம்.வாழ்வில் சுகத்தை அனுபவிப்பது போலவே துக்கத்தையும் அனுபவிக்கும் மனப்பான்மை வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. 

இனிய மன்மத ஆண்டு நல்வாழ்த்துக்கள்!


Thursday, 9 April 2015

இந்த நாள் இனிய நாள்....ஏப்ரல் 5...

ஏப்ரல் ஐந்தாம் நாள் என் வாழ்வில் மிக முக்கியமான நாள்...என் திருமணநாள். 1976 ம் ஆண்டு என்னுடைய 19ம் வயதில் இந்த நாளில்தான் நான் திருமதியாக மாறினேன். என் அம்மாவும், அப்பாவும்  என்னைப் பிரிய மனமின்றி என்னை திருமணம் செய்து கொடுத்துவிட்டு கலங்கிய கண்களுடன் நின்றது இன்னும் என் கண்களில் கண்ணீரை நிறைக்கிறது.



ஏப்ரல், 5-1976 அன்று

திருமணத்தை ஒரு சந்தோஷத்தின் ஆரம்பமாக எண்ணிய  நாட்கள் அவை. கணவன், மனைவிக்கு இடையேயான இன்ப வாழ்வில் 'நாம்தான் ராணி' என்ற நினைவும், கற்பனைகளும்   எல்லா மணப்பெண்களுக்கும் இருக்கும் சகஜமான எண்ணம். 'பிரேமையில் யாவும் மறந்தோம்' என்று ஆகாய  வானில் சிறகு விரித்து பறக்க ஆசைப்பட்ட நாட்கள் அல்லவோ அவைதாயாக நான் ஏற்றுக் கொண்ட என் மாமியார், அச்சான அந்தக்கால மாமியாராகவே இருந்தது என் துரதிர்ஷ்டம். பொறுமையுடன் வாழ என்னை நானே பழக்கிக் கொண்டேன்.

பூஞ்சோலையாக கனவு கண்ட  வாழ்க்கையில் எத்தனை முட்பாதைகள்? ஆனந்தங்களோடு வேதனைகளும், சமயத்தில் வெறுப்பும், கசப்பும்....நவரசங்களும் வாழ்வில் நர்த்தனம் ஆடிய நாட்கள்...இன்பமும், துன்பமும் கவலைகளும், கஷ்டங்களும், ஏமாற்றங்களும், எதையும் ஏற்கும் மனநிலையும் கொண்டதுதானே வாழ்க்கை.  இன்று நினைக்கும்போது அவற்றால் நான் பெற்ற அனுபவங்கள் எத்தனை எத்தனை. நல்லவற்றை மட்டுமே ஏற்றுக் கொண்டு, அல்லவற்றை மறக்கவும், குறைகளை தள்ளி நிறைகளை மட்டும் காணவும், ஒவ்வொரு அனுபவத்தையும் என்னை மெருகேற்றிக் கொள்ளும் பாடங்களாகவும் எடுத்துக் கொண்டேன். இன்றைய  இந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்னைப் பக்குவப் படுத்திய நாட்களாகத்தான் அவற்றை நான் நினைக்கிறேன்.

அன்பான கணவரும், அருமையான குழந்தைகளும் என் வாழ்வை முழுமையாக்கினார்கள். ஈன்ற பொழுதினும் பெரிதுவக்க வைத்த என் குழந்தைகள் என் பொக்கிஷங்கள். நான்கு குழந்தைகளையும் அவர்கள் விரும்பிய துறைகளில் சிறப்புற செய்தது, எங்கள் கடமையைச் சரியாகச் செய்தோம் என்ற மனதிருப்தியைக் கொடுக்கிறது.

எதையும் கேட்பதற்கு முன் செய்து கொடுக்கும் என் கணவர் எனக்கு கடவுள் கொடுத்த வரம். கோபதாபங்கள்,சண்டை சச்சரவுகள் இல்லாத தாம்பத்தியம் ரசிக்குமா! எங்கள் இடையேயும் இவை எல்லாம் உண்டு. ஆனால் அவ்வப்போதே எதையும் பேசித் தீர்த்துக் கொள்வதும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதும் எங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஆதாரம். மெல்லிழையாக மனதில் ஓடும் அன்பு, பாசம் இவற்றை அடிநாதமாகக் கொண்ட இனிய சங்கீதம் எங்கள் மணவாழ்வு!

திருமணத்துக்கு முன்பு அப்பாவின் இட மாற்றத்தால் தமிழகத்தின் பல ஊர்களிலும் இருக்கும் வாய்ப்புடில்லியும், மும்பையுமே பெரிய்ய்ய்ய நகரங்களாக எண்ணிக் கொண்டிருந்த நான் கணவரின் வங்கி வேலையின் மாற்றலால்  டில்லி, ஆக்ரா, மதுரா, கோலாப்பூர், மும்பை என்று பல இடங்களிலும் வசிக்கும் வாய்ப்பு பெற்றேன். பின் மகன்களுடன் பெங்களுர், சண்டிகர், புவனேஸ்வர், போபால், சென்னை இவற்றில் வாசம். இதனால் பல மொழிகள், கலாசாரம், சமையல் முறைகள் இவற்றை அறியும் வாய்ப்பு கிடைத்தது.

சின்ன வயதில் ஆனந்த விகடனில் எழுத்தாளர் மணியனின் பயணக் கட்டுரைகளைப் படித்து பாரிஸ், ஸ்விட்சர்லாந்து, லண்டன் போன்ற நாடுகளுக்கு செல்ல ஆசைப்பட்டதுண்டு! அந்த ஆசை நிறைவேறாது என்று மனதில் நினைத்ததும் உண்டு! ஆனால் அவற்றுடன் இன்னும் பல நாடுகளையும் சென்று கண்டு களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த என் அன்புக் குழந்தைகளுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

திருமணத்திற்குப் பின்பு அடுத்தடுத்து குழந்தைகள், அடிக்கடி ஊர் மாறுதல், குழந்தைகளின் படிப்பு, அவர்களைப் பற்றிய பொறுப்பு, கவலை என்று இறக்கை கட்டிப் பரந்த நாட்களை நான் இன்று திரும்பிப் பார்த்தபோது பிரமித்து விட்டேன். இத்தனைக்கு நடுவிலும் என்னை அடையாளப்  படுத்திக் கொண்ட என் எழுத்துகள் பல பத்திரிகைகளிலும், கிட்டத்தட்ட  முன்னூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இன்றுவரை வெளியாகிக் கொண்டிருப்பது என் சிறிய சாதனையாகக் கருதுகிறேன்.

குழந்தைகளுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் ஜெர்மனியிலும், சிங்கப்பூரிலும், பெண் மும்பையிலும் அவரவர்கள் செட்டிலாகிவிட, நாங்கள் இரண்டாவது பிள்ளையுடன் சென்னை வாசம்! மூன்று மருமகள்களும், மாப்பிள்ளையும் தங்கமான குணமுள்ளவர்கள். ஏழு பேத்திகளும், ஒரே பேரனுமாக எங்கள் குடும்பம் ரொம்ப பெரிசு!

பொறுப்புகள் முடிந்துவிட்ட நிலையில் வெகுநாளாக அடிமனதில் இருந்த 'தனிக் குடித்தன' ஆசை தலை தூக்க, என் கணவரிடம் கேட்டேன். பிள்ளையிடமும், மருமகளிடமும் இதைப் பற்றி பேச, அவர்களோ 'இந்த வயதில் தனியாக எப்படி இருப்பீர்கள்?' என்று யோசிக்க, நான் 'இத்தனை நாட்கள் எல்லாருக்காகவும் செய்து விட்டேன். இனி கொஞ்ச நாள் எங்களுக்காக 'வானப்ரஸ்த' வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறோம்' என்றேன்!   'நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் ஒரு கண்டிஷன். உங்களுக்கு முடியாத போது இங்கு வந்துவிட வேண்டும்' என்று சொல்ல, நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன்! உடன்  வீடு, கார் என்று அத்தனையும் வாங்கிக் கொடுத்து எங்களை தனிக் குடித்தனம் வைத்த என் பிள்ளைக்கும், மாட்டுப்பெண்ணுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்! கடந்த இரண்டு  வருடங்களாக எங்களுக்கு பிடித்த திருச்சியில் வாசம்!

எங்கள் திருமணம் முசிறியில் நடந்து, நான் என் துணைவருடன் வாழ வந்த ஊர் திருச்சி. திருமணம் முடிந்து காரில் முசிறியிலிருந்து திருச்சி வந்து கொண்டிருந்தபோது, குணசீலம் ஆலயத்தின் அருகில் கார் பழுது  ஆகிவிட்டது. இக்காலம் போல கால்டேக்சியோ, மொபைல் ஃ போனோ இல்லாத காலமாச்சே? இறைவனை தரிசித்து எங்கள் மணவாழ்வைத் தொடங்க வேண்டும் என்பது பெருமாளின் எண்ணம் போலும்.  குணசீலப்பெருமாளை தரிசனம் செய்துவிட்டு, பஸ்ஸில் திருச்சி வந்து சேர்ந்தோம்.



குணசீலம் கோவில் இன்று

நாற்பதாவது மண நாளான இன்று அந்தப் பெருமாளை தரிசித்துவிட்டு, எங்கள் திருமணம் நடந்த இடத்தையும் பார்த்துவர ஆசைப் பட்டோம். இத்தனை நாட்களாக நாங்கள் வெளி ஊர்களில் இருந்ததால் இப்படிப்பட்ட வாய்ப்பும், எண்ணமும் வரவில்லை. என் அப்பா அச்சமயம் முசிறியில் வங்கியில் வேலைபார்த்து வந்தார்.நாங்கள் குடியிருந்த வீடே பெரிய சத்திரம் மாதிரி  இருந்ததால் அதிலேயே எனக்கு திருமணம் நடந்தது.


எங்கள் திருமண மண்டபம் (வீடு) அன்றும் இன்றும்!!

வீடு இப்போ மாறியிருக்குமோ, அடையாளம் தெரியுமா என்ற  கேள்விகளுடன் போன எங்களை அன்றிருந்த அதே நிலையில் இன்றும் காட்சி தரும் அந்த வீடு ஆச்சரியப் படுத்தியது. அந்த வீட்டில் என் பெற்றோர், தம்பிகளுடன் வாழ்ந்த நாட்கள் மனதில் ஓடியது. அந்த வீட்டின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம்! 


அன்று எங்கள் திருமணத்தில் எங்களை வாழ்த்திய பெரியவர்கள் இன்று இல்லாததை நினைத்து மனம் கலங்கியது. என் அப்பா சென்ற ஆண்டு இதே நாளில் எங்களை விட்டுப் பிரிந்ததை எண்ணி கலங்கி விட்டேன். இந்த சிறப்பான வாழ்க்கையை எனக்கு அமைத்துக் கொடுத்த என் தந்தைக்கும், தாய்க்கும்  என் மனமார்ந்த நன்றிகள்.

என் நிறைவான வாழ்க்கையில் என்றும் என்னுடைய எல்லா செயல்களிலும் துணை நிற்கும் இறைவனை சிரம் தாழ்த்தி, இருகரம் கூப்பி வணங்குகிறேன்.

ஆசை அன்பு இழைகளினாலே...
நேசம் என்னும் தறியினிலே ......
நெசவு நெய்தது வாழ்க்கை......