Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Saturday, 7 May 2016

அன்புள்ள அம்மா...

அம்மா என்றதும் நமக்குள் ஊற்றெடுத்துப் பிரவாகமாக ஏற்படும் உணர்வு....அது வேறு எந்த உறவுக்கும் ஏற்படாது. ஐயிரண்டு மாதங்கள் சுமந்து, தன்  உதிரத்தால் பாலூட்டி, நம் தேவைகளை அவ்வப்போது அறிந்து அதற்கேற்ப அவற்றை நிறைவேற்றி நமக்காகவே வாழ்நாள் முழுதும் வாழ்ந்து முடிக்கும் நம் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாள் அன்னையர் தினம்.

நம் கூடவே இருக்கும்போது தெரியாத அம்மாவின் அருமையை அவள் மறைந்த பின்பே உணர முடிகிறது என்பது கசப்பான உண்மை. நம்மை தாலாட்டி, சீராட்டி, நல்லவைகளை சொல்லி வளர்த்து நம்மை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து, நாம் உயர்ந்தால் தான் மகிழ்ந்து, நம் கண்ணீரை தன  ஆதரவான வார்த்தைகளால் ஆறுதல்சொல்லி.....

 பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு எங்களை விட்டுச் மறைந்த என் அம்மாவின் ஞாபகம் என்னை அம்மாவுடன் வாழ்ந்த அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்கிறது. சின்னப் பெண்ணாய் இருந்தபோது, கனிவும், கண்டிப்புமாய் என்னை அரவணைத்து வழி காட்டியவள். நல்லன சொல்லி அல்லனவற்றை நீக்கியவள்.

பலமுறை அம்மாவின் கண்டிப்பு கோபத்தை ஏற்படுத்தினாலும் நான் தாயானபோது அதன் அவசியத்தை உணர்ந்தேன்.

என்னை நேரில் பாராட்டாமல், அடுத்தவர்களிடம் என்னைப் பற்றி பெருமையாகப் பேசிய அம்மாவைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.

வேறு யாரிடமும் சொல்ல முடியாத தன் மன ஆதங்கங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டபோது ஆறுதல் சொல்லியிருக்கிறேன்.

தன சந்தோஷங்களை உடனுக்குடன் குழந்தையைப்போல் சிரித்துக் கொண்டே சொல்லி மகிழ்ந்த சமயம் நானும் இணைந்து மகிழ்ந்திருக்கிறேன்.

என் திருமணத்தன்று என்னைப் பிரியும் சமயம் கலங்கி அழுத அம்மாவைப் பார்த்து என் மன வருத்தத்தை வெளிக் காட்டாமல் சென்றாலும், பலநாட்கள் அவளை நினைத்து அழுதிருக்கிறேன்.

என் குழந்தைகளின் உயர்வில் என்னம்மா அடைந்த மகிழ்ச்சியில் நான் ஆனந்தப் பட்டிருக்கிறேன்.
2005 ம் ஆண்டு இதே எட்டாம் தேதி அன்னையர் தினத்துக்கு அம்மாவிடம் தொலைபேசியில் பேசி வணங்கியபோது அம்மா சற்று உற்சாகம்  இல்லாதது போல தெரிந்தாலும், அடுத்த எட்டே நாட்களில் அம்மா என்னை விட்டு சென்று விடுவார் என்று எண்ணியும் பார்க்கவில்லை.

15ம் தேதி என் அம்மா காலமான செய்தியைக் கேட்டபோது உள்ளத்தில் ஒரு வெறுமை சூழ்ந்த உணர்வு ஏற்பட்டது. அம்மாவை கண்ணாடிப் பெட்டிக்குள் பார்த்தபோது உள்ளம் உடைந்து நொறுங்கி அழுதுவிட்டேன்.

இனி அம்மாவிடம் ஏதும் பேச முடியாது, எதையும் சொல்ல முடியாது, நமக்கு ஆறுதல் சொல்லவும், அன்பாய் தலை கோதவும் இனி அம்மா இல்லை என்பதை நினைக்கும்போது 'இதுதான் யதார்த்தம்' என்று மனம் சொன்னாலும் கண்கள் அழுவதை நிறுத்த முடியவில்லை.

அம்மா என்ற உறவுக்கு அழிவு ஏது? அன்றும், இன்றும், என்றும் இறுதிவரை அம்மாவின் அன்பும், அரவணைப்பும்,பாசமும் மறக்க முடியாது.எத்தனை உறவுகள் சுற்றிலும் இருந்தாலும் அம்மா என்ற வார்த்தைக்கு இணை ஏது?

அன்னையே உனக்கு நமஸ்காரம்!
 

Saturday, 20 June 2015

தந்தையர் தினம்



அப்பா ... அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது ... வித்யாசமான பாசம் கொண்டது ... இந்த வார்த்தை சொல்லும்போதே மனம் சிலிர்க்கிறது. என் அப்பாவுக்கு என்னிடம் ரொம்ப ஆசை என்பார் என் அம்மா. முதல் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என்ற என் அப்பாவின் ஆசைப்படி நான் பிறந்ததால், எனக்குப் பின் மூன்று சகோதரர்கள் பிறந்தாலும், என் அப்பாவுக்கு என்னிடம் தனிப் பாசம் உண்டு என்பதை நான் பலமுறை உணர்ந்து அனுபவித்திருக்கிறேன். 

சிறு வயதில் அவர் என் கைபிடித்து பள்ளி  அழைத்துச் சென்றது, நான் படிப்பில் சிறப்புப் பெற்றபோது பெருமிதப் பட்டது, என்னைப் பாடச் சொல்லி ரசித்தது....எனக்கு குழந்தைகள் பிறந்தபோது ஒரு தாத்தாவாக சந்தோஷப் பட்டது, அவர்களின் படிப்பு, திருமணம் இவற்றை அன்போடு ரசித்து அனுபவித்து பாராட்டி வாழ்த்தியது என்று அவரின் அன்புக்கு சான்றாக எத்தனை விஷயங்கள். 

எனக்குத் திருமணம் நடந்த அன்று, அவர் மடியில் அமர்ந்து எனக்கு திருமாங்கல்ய தாரணம் செய்தபோது என் அப்பா கண்  கலங்கி அழுதது இன்னும் என் கண்களிலேயே நிற்கிறது. அதை நினைக்கும்போது இன்றும் என் கண்களில் கண்ணீர் வருவதைத் தடுக்க முடியவில்லை.


பிள்ளைகளிடம் சற்று கண்டிப்புடன் நடந்து கொள்ளும் தந்தைகள், பெற்ற பெண்ணிடம் சற்று விட்டுக் கொடுத்துப் போவதுஎனக்கு மட்டுமல்ல பல பெண்களின் அனுபவமாக இருக்கும். பாசத்தில் பாரபட்சமா? இல்லை...அது ஒரு தனிப்பட்ட அன்பு எனலாம். நான் ஒரே பெண் என்பதால் அப்பாவுக்கு இத்தனை பாசமா என்று நான் நினைப்பதுண்டு. என் அம்மாவுடன் நான்கு பெண்கள் என் தாத்தாவிற்கு. நான்கு பெண்களிடமும் அவருக்கு தனிப்பட்ட பாசம் உண்டு என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். பல பெண்களும் அம்மாவைவிட அப்பா செல்லமாக இருப்பதைக் காணலாம்!

அம்மா என்கிறபோது உருகும் மனம், அப்பா எனும்போது ஒரு அதீதமான  வாஞ்சையை அனுபவிப்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. இன்று அப்பா என்னுடன் இல்லை என்றாலும் அவரின் ஆசிகள் என்னை என்றும் நன்கு வாழவைக்கும்.


இந்தத் தந்தையர் தினத்தில் என் பிரியமுள்ள அப்பாவுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்களைக் கூறிக் கொள்கிறேன்.




ஒரு தந்தையைப் பற்றி மகனும், மகளும் ஒவ்வொரு வயதிலும் நினைப்பது பற்றி ...

6 வயதில் ...
'என் அப்பாவைப் போல கிடையாதாக்கும்...'

8 வயதில் ...
'என் அப்பாவுக்கு தெரியாதது எதுவும் இல்லை...'

12 வயதில்...
'என் அப்பா நல்லவர்தான்...ஆனாலும் கொஞ்சம் முன்கோபக்காரர் ...'

14 வயதில்...
'என் சின்ன வயதில் அப்பா என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார்...'

18 வயதில் ...
'இந்த நாளைக்கு ஏற்ற மாதிரி என் அப்பாவுக்கு நடந்து கொள்ளத் தெரியவில்லை.சுத்தமாக அவருக்கு ஒன்றுமே தெரிவதில்லை....'

20 வயதில்...
'என் அப்பா ரொம்பவே மோசமாகிவிட்டார். எல்லாவற்றுக்கும் எதிரிடையாகப் பேசுகிறார். எதையும் புரிந்து கொள்வதில்லை...'

23 வயதில்...
'ச்சே! வரவர அப்பாவின் செயல் எதுவும் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அம்மா எப்படித்தான் இவருடன் இத்தனை நாளாக வாழ்கிறாளோ?'

25 வயதில்...
'வர வர அப்பாவுக்கு மூளையே சரியில்லையோ என்று தோன்றுகிறது. எது சொன்னாலும் எதிர்மறையாகவே பேசுகிறார். என்றுதான் இந்த உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளப் 'போகிறாரோ?

32 வயதில்...
'ஹ்ம்ம்..என் மகனை என்னால் சமாளிக்கவே முடியவில்லை. நான் சின்ன வயதில் என் அப்பாவுக்கு ரொம்பவே பயப்படுவேன்..'

40 வயதில்..
'என் அப்பா எங்களை மிக ஒழுக்கத்துடன் வளர்த்தார். அந்தப் புரியாத வயதில் அவர் எப்படி எங்களை மிகச் சரியாக வளர்த்தார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை..'

45 வயதில்...
'அவர் எங்களை எப்படி நல்லவிதமாக உருவாக்கினார் என்பது எனக்கு இன்னும் குழப்பமாகவே இருக்கிறது..'

50 வயதில்...
'நாங்கள் நான்கு சகோதர சகோதரிகள்..எங்களை வளர்க்க எங்கள் அப்பா ரொம்பவேகஷ்டப் பட்டதை நினைத்துக் கொள்கிறேன். எனக்கு ஒரு மகனையே இன்று வளர்ப்பது கடினமாக உள்ளது.'

55 வயதில்...
'என் அப்பா மிகவும் முன்யோசனையுடன், திட்டமிட்டு எங்களை நல்ல விதமாக உருவாக்கினார். இன்றும் இந்த வயதிலும், தன் வேலைகளைத் தானே செய்து கொள்வதோடு, எந்த கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றலுடன் இருக்கிறார். அது அவரின் மிகச் சிறந்த குணம்.


மொத்தத்தில் என் அப்பா மிக மிக உயர்ந்தவர்!



Thursday, 9 April 2015

இந்த நாள் இனிய நாள்....ஏப்ரல் 5...

ஏப்ரல் ஐந்தாம் நாள் என் வாழ்வில் மிக முக்கியமான நாள்...என் திருமணநாள். 1976 ம் ஆண்டு என்னுடைய 19ம் வயதில் இந்த நாளில்தான் நான் திருமதியாக மாறினேன். என் அம்மாவும், அப்பாவும்  என்னைப் பிரிய மனமின்றி என்னை திருமணம் செய்து கொடுத்துவிட்டு கலங்கிய கண்களுடன் நின்றது இன்னும் என் கண்களில் கண்ணீரை நிறைக்கிறது.



ஏப்ரல், 5-1976 அன்று

திருமணத்தை ஒரு சந்தோஷத்தின் ஆரம்பமாக எண்ணிய  நாட்கள் அவை. கணவன், மனைவிக்கு இடையேயான இன்ப வாழ்வில் 'நாம்தான் ராணி' என்ற நினைவும், கற்பனைகளும்   எல்லா மணப்பெண்களுக்கும் இருக்கும் சகஜமான எண்ணம். 'பிரேமையில் யாவும் மறந்தோம்' என்று ஆகாய  வானில் சிறகு விரித்து பறக்க ஆசைப்பட்ட நாட்கள் அல்லவோ அவைதாயாக நான் ஏற்றுக் கொண்ட என் மாமியார், அச்சான அந்தக்கால மாமியாராகவே இருந்தது என் துரதிர்ஷ்டம். பொறுமையுடன் வாழ என்னை நானே பழக்கிக் கொண்டேன்.

பூஞ்சோலையாக கனவு கண்ட  வாழ்க்கையில் எத்தனை முட்பாதைகள்? ஆனந்தங்களோடு வேதனைகளும், சமயத்தில் வெறுப்பும், கசப்பும்....நவரசங்களும் வாழ்வில் நர்த்தனம் ஆடிய நாட்கள்...இன்பமும், துன்பமும் கவலைகளும், கஷ்டங்களும், ஏமாற்றங்களும், எதையும் ஏற்கும் மனநிலையும் கொண்டதுதானே வாழ்க்கை.  இன்று நினைக்கும்போது அவற்றால் நான் பெற்ற அனுபவங்கள் எத்தனை எத்தனை. நல்லவற்றை மட்டுமே ஏற்றுக் கொண்டு, அல்லவற்றை மறக்கவும், குறைகளை தள்ளி நிறைகளை மட்டும் காணவும், ஒவ்வொரு அனுபவத்தையும் என்னை மெருகேற்றிக் கொள்ளும் பாடங்களாகவும் எடுத்துக் கொண்டேன். இன்றைய  இந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்னைப் பக்குவப் படுத்திய நாட்களாகத்தான் அவற்றை நான் நினைக்கிறேன்.

அன்பான கணவரும், அருமையான குழந்தைகளும் என் வாழ்வை முழுமையாக்கினார்கள். ஈன்ற பொழுதினும் பெரிதுவக்க வைத்த என் குழந்தைகள் என் பொக்கிஷங்கள். நான்கு குழந்தைகளையும் அவர்கள் விரும்பிய துறைகளில் சிறப்புற செய்தது, எங்கள் கடமையைச் சரியாகச் செய்தோம் என்ற மனதிருப்தியைக் கொடுக்கிறது.

எதையும் கேட்பதற்கு முன் செய்து கொடுக்கும் என் கணவர் எனக்கு கடவுள் கொடுத்த வரம். கோபதாபங்கள்,சண்டை சச்சரவுகள் இல்லாத தாம்பத்தியம் ரசிக்குமா! எங்கள் இடையேயும் இவை எல்லாம் உண்டு. ஆனால் அவ்வப்போதே எதையும் பேசித் தீர்த்துக் கொள்வதும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதும் எங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஆதாரம். மெல்லிழையாக மனதில் ஓடும் அன்பு, பாசம் இவற்றை அடிநாதமாகக் கொண்ட இனிய சங்கீதம் எங்கள் மணவாழ்வு!

திருமணத்துக்கு முன்பு அப்பாவின் இட மாற்றத்தால் தமிழகத்தின் பல ஊர்களிலும் இருக்கும் வாய்ப்புடில்லியும், மும்பையுமே பெரிய்ய்ய்ய நகரங்களாக எண்ணிக் கொண்டிருந்த நான் கணவரின் வங்கி வேலையின் மாற்றலால்  டில்லி, ஆக்ரா, மதுரா, கோலாப்பூர், மும்பை என்று பல இடங்களிலும் வசிக்கும் வாய்ப்பு பெற்றேன். பின் மகன்களுடன் பெங்களுர், சண்டிகர், புவனேஸ்வர், போபால், சென்னை இவற்றில் வாசம். இதனால் பல மொழிகள், கலாசாரம், சமையல் முறைகள் இவற்றை அறியும் வாய்ப்பு கிடைத்தது.

சின்ன வயதில் ஆனந்த விகடனில் எழுத்தாளர் மணியனின் பயணக் கட்டுரைகளைப் படித்து பாரிஸ், ஸ்விட்சர்லாந்து, லண்டன் போன்ற நாடுகளுக்கு செல்ல ஆசைப்பட்டதுண்டு! அந்த ஆசை நிறைவேறாது என்று மனதில் நினைத்ததும் உண்டு! ஆனால் அவற்றுடன் இன்னும் பல நாடுகளையும் சென்று கண்டு களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த என் அன்புக் குழந்தைகளுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

திருமணத்திற்குப் பின்பு அடுத்தடுத்து குழந்தைகள், அடிக்கடி ஊர் மாறுதல், குழந்தைகளின் படிப்பு, அவர்களைப் பற்றிய பொறுப்பு, கவலை என்று இறக்கை கட்டிப் பரந்த நாட்களை நான் இன்று திரும்பிப் பார்த்தபோது பிரமித்து விட்டேன். இத்தனைக்கு நடுவிலும் என்னை அடையாளப்  படுத்திக் கொண்ட என் எழுத்துகள் பல பத்திரிகைகளிலும், கிட்டத்தட்ட  முன்னூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் இன்றுவரை வெளியாகிக் கொண்டிருப்பது என் சிறிய சாதனையாகக் கருதுகிறேன்.

குழந்தைகளுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் ஜெர்மனியிலும், சிங்கப்பூரிலும், பெண் மும்பையிலும் அவரவர்கள் செட்டிலாகிவிட, நாங்கள் இரண்டாவது பிள்ளையுடன் சென்னை வாசம்! மூன்று மருமகள்களும், மாப்பிள்ளையும் தங்கமான குணமுள்ளவர்கள். ஏழு பேத்திகளும், ஒரே பேரனுமாக எங்கள் குடும்பம் ரொம்ப பெரிசு!

பொறுப்புகள் முடிந்துவிட்ட நிலையில் வெகுநாளாக அடிமனதில் இருந்த 'தனிக் குடித்தன' ஆசை தலை தூக்க, என் கணவரிடம் கேட்டேன். பிள்ளையிடமும், மருமகளிடமும் இதைப் பற்றி பேச, அவர்களோ 'இந்த வயதில் தனியாக எப்படி இருப்பீர்கள்?' என்று யோசிக்க, நான் 'இத்தனை நாட்கள் எல்லாருக்காகவும் செய்து விட்டேன். இனி கொஞ்ச நாள் எங்களுக்காக 'வானப்ரஸ்த' வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறோம்' என்றேன்!   'நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் ஒரு கண்டிஷன். உங்களுக்கு முடியாத போது இங்கு வந்துவிட வேண்டும்' என்று சொல்ல, நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன்! உடன்  வீடு, கார் என்று அத்தனையும் வாங்கிக் கொடுத்து எங்களை தனிக் குடித்தனம் வைத்த என் பிள்ளைக்கும், மாட்டுப்பெண்ணுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்! கடந்த இரண்டு  வருடங்களாக எங்களுக்கு பிடித்த திருச்சியில் வாசம்!

எங்கள் திருமணம் முசிறியில் நடந்து, நான் என் துணைவருடன் வாழ வந்த ஊர் திருச்சி. திருமணம் முடிந்து காரில் முசிறியிலிருந்து திருச்சி வந்து கொண்டிருந்தபோது, குணசீலம் ஆலயத்தின் அருகில் கார் பழுது  ஆகிவிட்டது. இக்காலம் போல கால்டேக்சியோ, மொபைல் ஃ போனோ இல்லாத காலமாச்சே? இறைவனை தரிசித்து எங்கள் மணவாழ்வைத் தொடங்க வேண்டும் என்பது பெருமாளின் எண்ணம் போலும்.  குணசீலப்பெருமாளை தரிசனம் செய்துவிட்டு, பஸ்ஸில் திருச்சி வந்து சேர்ந்தோம்.



குணசீலம் கோவில் இன்று

நாற்பதாவது மண நாளான இன்று அந்தப் பெருமாளை தரிசித்துவிட்டு, எங்கள் திருமணம் நடந்த இடத்தையும் பார்த்துவர ஆசைப் பட்டோம். இத்தனை நாட்களாக நாங்கள் வெளி ஊர்களில் இருந்ததால் இப்படிப்பட்ட வாய்ப்பும், எண்ணமும் வரவில்லை. என் அப்பா அச்சமயம் முசிறியில் வங்கியில் வேலைபார்த்து வந்தார்.நாங்கள் குடியிருந்த வீடே பெரிய சத்திரம் மாதிரி  இருந்ததால் அதிலேயே எனக்கு திருமணம் நடந்தது.


எங்கள் திருமண மண்டபம் (வீடு) அன்றும் இன்றும்!!

வீடு இப்போ மாறியிருக்குமோ, அடையாளம் தெரியுமா என்ற  கேள்விகளுடன் போன எங்களை அன்றிருந்த அதே நிலையில் இன்றும் காட்சி தரும் அந்த வீடு ஆச்சரியப் படுத்தியது. அந்த வீட்டில் என் பெற்றோர், தம்பிகளுடன் வாழ்ந்த நாட்கள் மனதில் ஓடியது. அந்த வீட்டின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம்! 


அன்று எங்கள் திருமணத்தில் எங்களை வாழ்த்திய பெரியவர்கள் இன்று இல்லாததை நினைத்து மனம் கலங்கியது. என் அப்பா சென்ற ஆண்டு இதே நாளில் எங்களை விட்டுப் பிரிந்ததை எண்ணி கலங்கி விட்டேன். இந்த சிறப்பான வாழ்க்கையை எனக்கு அமைத்துக் கொடுத்த என் தந்தைக்கும், தாய்க்கும்  என் மனமார்ந்த நன்றிகள்.

என் நிறைவான வாழ்க்கையில் என்றும் என்னுடைய எல்லா செயல்களிலும் துணை நிற்கும் இறைவனை சிரம் தாழ்த்தி, இருகரம் கூப்பி வணங்குகிறேன்.

ஆசை அன்பு இழைகளினாலே...
நேசம் என்னும் தறியினிலே ......
நெசவு நெய்தது வாழ்க்கை......