நான் சில ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் வீட்டிற்கு ஜெர்மனி சென்ற சமயம்
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்திற்கு சென்று வந்தோம். அச்சமயம் 'உலகின் மிகப் பெரிய இமயமலையின்
சிகரங்கள் இன்னும் அழகாக இருக்கும்மா! அதெல்லாம் போய்ப் பார்' என்றான் என் பிள்ளை. ஏற்கெனவே சிம்லா,டார்ஜிலிங்,காங்க்டாக் எல்லாம் பார்த்துவிட்டதால் குல்லு
மனாலிக்கு சென்றோம்.ஆஹா! அந்த இடத்தின் அழகில் சொக்கிப் போனேன்! திரும்ப வரவே
மனமில்லை.
'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று நெஞ்சு
நிமிர்த்தி நம் மீசைக் கவிஞர் பாரதி பாடியது போல இமயமலையை தன்னகத்தே கொண்டுள்ள
ஹிமாச்சல பிரதேசத்தில் எத்தனை குளிர்வாசத்தலங்கள்! இவற்றில் 'தேவ பூமி'என்ற சிறப்புப் பெயருடன் விளங்கும் மனாலி
மிக அழகான, நம் கண்ணுக்கும், மனதுக்கும்
நிறைவான, ஆன்மீகத் தலங்களைத் தன்னில் கொண்ட அற்புதமான ஒரு
சொர்க்கம் எனலாம்.
மனம் மயக்கும் இயற்கை அழகு, வண்ணமயமான மலர்த்தோட்டங்கள், பனிமூடிய மலைச்சிகரங்கள் மற்றும் ஆப்பிள்
தோட்டங்கள் போன்ற உன்னதமான அழகம்சங்களின் மூலம் இந்த மனாலி காலங்காலமாக
சுற்றுலாப்பயணிகளை வசீகரித்து வருகிறது. நெடிதுயர்ந்த தேவதாரு மரங்களும், பனி படர்ந்த மலைச் சிகரங்களும், பச்சைப் பசுமை
ததும்பும் நிலப் பரப்பும், சீறி ஓடும் ஆறுகளுமாக அந்த
இடத்தின் சூழ்நிலை நம்மையே மெய்மறக்கச் செய்யும். கிழக்கில் திபெத்திய
பீடபூமியையும், தெற்கில் ஜம்மு காஷ்மீரையும், மேற்கே பஞ்சாபையும் எல்லைகளாகக் கொண்ட மனாலியின் அழகைக் கண்டு களிப்போமா!
|
மேலே சென்று பனியில் நாம் படுத்துப் புரளலாம்! குட்டி போனி குதிரைகளில் சவாரி
செய்யலாம்! பனி மனிதனை உருவாக்கலாம்! பனியை எடுத்து ஒருவர் மேல் ஒருவர் வீசி
விளையாடலாம்! இரண்டு குச்சிகளுடன் பனியில் கால் புதிய நடக்கலாம்.! அந்தப்
பனியிலும் சூடாக காபியும், டீயும் விற்கும் சிறுவர்கள் நிறைய! ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று வந்த ஒரு புதிய அனுபவத்தைப் பெறலாம்!
இந்த பாஸின் வழியாக லே, லடாக், கெய்லாக், உதய்பூர் போன்ற இடங்களுக்கு பேருந்து போக்குவரத்து உண்டு. ட்ரெக்கிங் செய்பவர்களுக்கு மிக முக்கியமான வழி இது. ஜூன் முதல் அக்டோபர் வரையே இந்த வழி திறந்திருக்கும்.
எல்லா சீசன்களிலும் பனியில் மூடிக் காணப்படும் இந்த ரோதங் பாஸ் செல்வதற்கு
மனாலியிலிருந்து பஸ், தனிப்பட்ட வேன், டேக்சி வசதிகள் உண்டு. விடிகாலை
5 மணிக்கே கிளம்ப வேண்டும். போகும் வழியில் பனியில்
அணிவதற்கான ஜாக்கெட் போன்ற ஆடைகளை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
வாடகைக்கு வாங்கி அணிந்து கொண்டு செல்ல வேண்டும். ஸ்வெட்டர்கள் பனியில்
நனைந்துவிடும்.
போகும் வழியில் சாப்பாட்டு ஹோட்டல்கள் இருக்கிறது. சுடச் சுட டீ, சப்பாத்தி சப்ஜி அந்தக்
குளிருக்கு அமிர்தமாக இருக்கிறது. அப்பாதையில் போக்குவரத்து மிக மிக மெதுவாக
செல்வதால் போய்ச் சேரவே 6 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.
நான்கு மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும். அந்த வழியில் போக்குவரத்து
அங்குலம்,அங்குலமாகத்தான் நகர்கிறது.
போகும் வழியெங்கும் சுற்றுலா செல்வோர் தூக்கி எறிந்த குப்பைகள்...மாசுபட்ட
சுற்றுச் சுழல்... இவ்வளவு பெரிய சுற்றுலா தலத்தை சரியாக பராமரிக்காததைப் பார்க்க
மனதுக்கு மிக வருத்தமாக உள்ளது.அங்கு செல்ல வெகு நேரமாவதால் கைக்குழந்தைகள், முதியோர்கள் செல்வது சற்று
கடினமே. இவற்றிற்கு நம் அரசு ஏதாவது செய்தால் தேவலை என்பதே பலரின் விருப்பமாக
உள்ளது.
மனு ஆலயம் |
|
ஆலயம் மிக
அழகாக உள்ளது. அமைதியான சுற்றுப்புறம். அவ்வூர் மக்களுக்கு மனு
கண்கண்ட தெய்வமானவர். அவரிடம் வேண்டிக் கொண்ட எதுவும் உடன் நிறைவேறும் என்ற
நம்பிக்கையாம். பியாஸ் நதியின் கரையில் அமைந்துள்ளா ஆலயம் மனாலி
செல்வோர் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம். மனுவின் சந்நிதி பிரதானமாக
உள்ளது.சுற்றிலும் சிவன், நாராயணர் போன்ற தெய்வங்களின்
உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்து டுங்கிரி என்ற இடத்தில் அமைந்துள்ள 'ஹிடும்பா ஆலயம்'. நாம் பீமனையும், அவன்
மனைவி ஹிடும்பியையும் அறிவோம். அவளுக்கு இங்கு ஓர் ஆலயம் இருப்பது வேடிக்கையாக
உள்ளது! ஒரு அரக்கிக்கு ஆலயமா? ஆம்...அவள் இங்கு தெய்வமாகக்
கொண்டாடப் படுகிறாள்.இடும்பி பீமனை மனந்தபின்பு அவர்களின் புதல்வனான கடோத்கஜன்
பிறந்ததும், அவள் இங்கு வந்து தெய்வமாகிவிட்டதாகக் கூறுகிறது
வரலாறு. கி.பி.1553ல் ராஜா பகதூர் சிங் என்பவரால்
உருவாக்கப்பட்ட இவ்வாலயத்தில் இடும்பா தேவியின் உருவச் சிலை
கிடையாது. பாதச் சுவடுகளே தெய்வமாகக் கொண்டாடப் படுகிறது. அரக்க நிலையிலிருந்த
ஒருத்தி அவளது சிறந்த குணங்களால் தெய்வ நிலைக்கு உயரலாம் என்பதையே இது
காட்டுகிறது.
மூன்று சதுர கோபுரங்களைக் கொண்டு பகோடா முறையில் மிக அழகாக,சிறப்பான முறையில் மரம்,உலோகம் என உருவாக்கப்பட்டுள்ள இவ்வாலய சுற்றுச் சுவர்களில் அனைத்து
இந்துக் கடவுளரின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. ஆவணியிலும், சித்திரையிலும் இரண்டு மிகப் பெரிய திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.
|
இங்குள்ள வசிஷ்ட் என்ற கிராமத்தில் ஸ்ரீராமனின் குலகுரு வசிஷ்டருக்கு
அமைந்துள்ள கோயிலில் வெந்நீர் ஊற்றுகள் அமைந்துள்ளன. இவை வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகளையும் வெகுவாகக் கவர்பவை.இவை ராமனின் தம்பி இலக்குவனால்
உருவாக்கப்பட்டவையாம்.
வெந்நீர் ஊற்றுகள் |
ராமன் ராவணனை வென்று திரும்பியதும் அஸ்வமேத யாகம் செய்ய விரும்பி வசிஷ்டரை
அழைத்தபோது,அவர் இப்புனித பூமியில் தியானத்தில்
இருந்தாராம். அவரைத் தேடி வந்த இலக்குவன் குருவிற்கு குளிரும் என்பதால் தன்
அக்னி பாணத்தை விட்டு உருவாக்கியவையே இங்கு காணப்படும் வெந்நீர் ஊற்றுக்களாம்.
இவற்றில் குளிப்பதால் தீராத நோய்களும், சரும நோய்களும்
தீரும் என்பது நம்பிக்கை. இங்கு குளிப்பதற்கென வசதிகள் செய்யப்
பட்டுள்ளன.ஆலயத்தில் வசிஷ்டரின் சிலை உள்ளது. அருகிலுள்ள ராமர் ஆலயம் மலைப்
பாறைகளால் சிறப்புற கட்டப்பட்டுள்ளது.
மனாலியிலிருந்து சில மைல் தூரத்திலுள்ள நக்கர் (Naggar ) என்ற இடத்தில் பியாஸ்
நதிக்கரையில் அமைந்துள்ள கோட்டை மிக அருமையானது.700 ஆண்டுகளுக்கு
முன்பு முழுதும் மரத்தினாலும்,கற்களாலும் கட்டப்பட்டு அரச
பரம்பரையினர் வாழ்ந்த இக்கோட்டை தற்போது ஒரு ஹோட்டலாக செயல்படுகிறது. 'நிக்கோலாஸ் ரியோரிச்' எனும் பிரசித்தமான ரஷிய
ஓவியரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிக்கோலாஸ் ரியோரிச் ஆர்ட் காலரியும்
இந்த கோட்டை வளாகத்தில் உள்ளது.
Naggar Fort |
இங்குள்ள 'ஜகதிபட்' ஆலய இறைவன் பற்றிய செய்தி சற்று வித்யாசமாக
உள்ளது. சதுர வடிவில் ஹிமாசலப் பிரதேச ஆலய வடிவில் கற்பலகைகள்,தேவதாரு மரப் பலகைகளைக் கொண்டு அழகுற, சிறிதாகக்
காணப்படும் இவ்வாலயத்தினுள் 5 x 6 x 8அங்குல நீல, அகல, கனம் கொண்ட
பாறையே தெய்வமாக வணங்கப்படுகிறது.
அவ்வூர் மக்களின் நம்பிக்கைப்படி அனைத்து இந்துக் கடவுளரும்,அவர்களின் தேவியரும் தேனீக்களாக மாறி பிருகுதுங் மலையிலிருந்து ஒரு பாறையை
எடுத்து வந்து இக்கோட்டையில் வைத்ததாகவும்,இப்பாறையில் அனைத்து தெய்வங்களும் குடி கொண்டுள்ளதாகவும் கூறப்
படுகிறது. இப்பகுதி மக்களை இடர்களிலிருந்து காப்பாற்றுவதற்காக இந்த
கோயிலில் தெய்வங்கள் ஒன்று கூடுவதாகவும் உள்ளூர் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.
'ஜகத்சுக்' என்ற இடத்தில் அமைந்துள்ள 'சந்த்யாகாயத்ரி' மற்றும் 'கௌரிசங்கர்'
ஆலயங்கள் எட்டாம் நூற்றாண்டின் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாய்
விளங்குகின்றன. மணிகரண்,ஜகன்னாதி, ரகுநாத்ஜி,
ஆதிப்ரம்மா, பியாஸ் குண்ட் போன்ற பல இதிகாச காலக் கோவில்களைத் தன்னகத்தே
கொண்ட குல்லு 'கடவுளரின்
பள்ளத்தாக்கு' (valley of Gods) என்று போற்றப்படுகிறது.
மனாலியில் உள்ள வண்ண மயமான சுவர்ச் சித்திரங்களைக் கொண்ட திபெத்திய புத்த
மடாலயமான 'கதான் தேக்சோகிங் கோம்பா' (Gadhan Thekchoking Gompa Monastery) விலுள்ள புத்த விக்ரகம் மிக அழகானது.பௌத்தர்களின் மிக முக்கிய ஆலயமாக இது
விளங்குகிறது. இங்குள்ள கடைகளில் திபெத்திய கார்பெட்டுகள் கிடைக்கும்.
கதான் தேக்சோகிங் கோம்பா |
குழந்தைகளைக் கவரும் மனாலி க்ளப் ஹவுஸ், கிரேட் ஹிமாலயன் நே ஷனல் பார்க்,சோலங் பள்ளத்தாக்கு, இளைஞர்களுக்கு ஏற்ற சாகச
விளையாட்டுகள், ஸ்கீயிங்,பாரா கிளைடிங்,போட் ரோயிங்,மௌன்டைன் பைகிங்,ட்ரெக்கிங்,
பனிச் சறுக்கு விளையாட்டுகள் அத்தனையும் இங்கு உண்டு.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் குளிர்கால பனிச்சறுக்கு (ஸ்கி)
திருவிழாவின் போது ஏராளமான சுற்றுலா ரசிகர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
புது மணத் தம்பதிகளுக்கு தேனிலவிற்கு ஏற்ற அருமையான ரொமாண்டிக்கான சுற்றுலாத்தலம் இது!
புது மணத் தம்பதிகளுக்கு தேனிலவிற்கு ஏற்ற அருமையான ரொமாண்டிக்கான சுற்றுலாத்தலம் இது!
ஷாப்பிங் |
இங்கிருந்து டெல்லி, சிம்லா, சண்டிகர்,பதான்கோட்,
தரம்சாலா போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன.மனாலிக்கு அருகில்
165 கி.மீ தூரத்தில் ஜோகீந்தர் நகர் ரயில் நிலையம்
சண்டிகர் வழியாக மற்ற நகரங்களுடன் ரயில் இணைப்பு வசதி உள்ளது.
ஹிமாசல் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக்கழகம் (HPTDC) மனாலியிலிருந்து தில்லி,சண்டிகர்,சிம்லா,பதான்கோட் போன்ற நகரங்களுக்கு சொகுசுப்பேருந்துகளை இயக்குகிறது.
குல்லு-மனாலி செல்வதற்கு மார்ச் முதல் ஜூலை வரையுள்ள பருவமே
உகந்ததாகும்.
மனாலி பயண அனுபவம் இனிமை... பல தகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteதங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்...
Delete