நம் இந்தியச் சுற்றுலாத் தலங்கள் வரிசையில்
ஒரிஸ்ஸாவுக்கு சிறப்பான இடம் உண்டு. உலகின் மக்களைக் கவரும் கொனாரக், பூரி, புவனேஸ்வர் என்று முக்கோணத்தில் அமைந்த Golden Triangle என்ற இந்நகரங்கள் கலைவண்ணம் மிளிரும் புராதனமான, புகழ்பெற்ற இடங்களாகும்.
ஒரிஸ்ஸாவின் தலைநகரமாக விளங்கும் புவனேஸ்வர் கோயில் நகரம் என்ற
சிறப்பைப் பெற்றது. இந்நகரில் கால் வைத்த இடமெல்லாம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட
சிவாலயங்கள் இருந்ததாகக் கூறப் படுகிறது கலிங்கம் என்ற புகழ்பெற்ற ராஜ்ஜியம்
கி.மு. 260ல் அசோகச் சக்கரவர்த்தியின் ஆளுமையின் கீழ் இருந்தபோது நடைபெற்ற கலிங்கப்போர் புவனேஸ்வரில் உள்ள தவுலியில்தான் நடைபெற்றது.
அங்குள்ள தயா என்ற பெயருள்ள ஆற்றின் மணல் இன்றும் கூட அந்தப் போரில்
உயிரிழந்தவர்களின் குருதி கலந்ததால் சென்னிறமாகக் காணப்படுவதாகக் கூறப் படுகிறது.
அதன் பின் மனம் மாறிய அசோகா சக்கரவர்த்தி
புத்த
மதத்தைத் தழுவியதால் பல புத்த மடாலயங்கள் உருவாயின.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கேசரி மற்றும் கங்கா
அரசர்களால் பல இந்து ஆலயங்கள் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டன.அதன்பின் பதினாறாம்
நூற்றாண்டில் முகம்மதியர்களின் படையெடுப்பால் புவனேஸ்வரின் எண்ணற்ற ஆலயங்கள்
அழிக்கப்பட்டு மீதமுள்ளவைகளே இன்று உள்ளன. அவையே கிட்டத்தட்ட அறுநூறுக்கும்
மேற்பட்ட ஆலயங்களுக்கு அதிகமாக உள்ளனவாம். புவனேஸ்வர் என்ற பெயர் பூவுலகம், மேலுலகம், பாதாள லோகம் ஆகிய 'மூவுலகின் கடவுள்' 'Lord Of
three World' என்ற பெயரிலிருந்து
உருவானது.
இது 'ஏகாம்ர க்ஷேத்ரம்' என்றும் 'சைவ பீடம்' என்றும் போற்றப்படுகிறது.
இங்கு அமைந்துள்ள பிந்துசாகர் மிகப் பெரிய
ஏரி..
மிகப் புனிதமான இந்த ஏரியைச் சுற்றிலுமே பல ஆலயங்கள் அமைந்துள்ளன. இது புராணப்
பெருமை பெற்றது. சிவபெருமானால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் என்று பிரம்ம புராணம் கூறுகிறது.அதற்கான சுவாரசியமான கதை இது! திருமணம்
புரிந்து கொண்ட சிவனும், பார்வதியும் வாரணாசிக்கு தம் புது வாழ்க்கையைத்
தொடங்கச் சென்றார்களாம். அங்கு மக்கள் நெருக்கடி அதிகமாக இருந்ததால் உல்லாசமாக
இருக்க வேறு புதிய நகரைத் தேடியபோது, 'ஏகாம்ர க்ஷேத்திரா' என்ற புவனேஸ்வரை அடைந்தனர். பார்வதி ஒரு மாடு மேய்க்கும் பெண்
உருக் கொண்டு அங்கு இன்பமாக நாட்களைக் கழித்தாள் .
அச்சமயம் இவ்விடத்தை ஆண்டு வந்த கீர்த்தி,வாசா என்ற இரு அரக்கர்கள்
பார்வதியை
மணக்க விரும்ப, பார்வதி தேவி தன்னை அவர்களின் தோள்களில்
தூக்கிச் செல்லும்படி கூற, அவ்விருவரையும் தன் பாதத்தால் மண்ணில் அழுத்தி வதம் செய்தாள். அச்சமயம் பார்வதிக்கு தாகம்
ஏற்பட, ஈசன்
அவ்விடத்தில்
தன் சூலத்தைச் செலுத்தி ஒரு நீரூற்றை
உருவாக்கினார். அதில் பாரதத்தின்
எல்லா
புனித நதியின் நீர்களையும் கலக்கச் செய்தார். அதுவே பிந்து சாகர் என்ற மிகப் பெரிய
நீர்த்தேக்கமாக மாறியது. ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் ஒரிஸ்ஸாவை ஆண்ட மன்னர்கள் புனிதமான இந்நீர்த் தேக்கத்தை சுற்றிலுமே ஆலயங்களை உருவாக்கினர். இப்புனித நதியின் நீர் அதில்
குளிப்பவர்களின் அனைத்து நோய்களையும், துன்பங்களையும் நீக்குவதாகக் கூறப் படுகிறது.
கிரகண காலங்களில் இந்நதியில் குளித்து, முன்னோர் காரியங்களைச் செய்வது நற்பலனைத்
தரும்.
அங்கிருந்த ஒரு மாமரத்தின் அடியில் குடிகொண்ட ஈஸ்வரன் 'கிருத்திவாசன்' என்றும்,
'லிங்க
ராஜா' என்றும் போற்றப் பட்டார்.
புவனேஸ்வரின் மிக முக்கியமான, மிகப்பெரிய ஆலயம் லிங்கராஜா ஆலயம். இவ்விறைவன்
உலகின் லிங்கங்களுக்கெல்லாம் அரசன் என்ற பொருளில் லிங்கராஜா என்ற பெயர்
விளங்குகிறது.கிழக்கு நோக்கி அமைந்துள்ள லிங்கராஜா ஆலயம், பதினொன்றாம் நூற்றாண்டில் ஜஜதி
கேசரி
என்ற சோமவன்ஷி அரசனால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. அவரது கொள்ளுப் பேரனான லலடேந்து கேசரி என்ற மன்னரால் கட்டி
முடிக்கப்பட்டது. சிறந்த கலை நுணுக்கத்துடனும், கட்டமைப்புடனும் பிரமிடு போன்ற மேல்பாகத்துடனும் உருவாக்கப்பட்ட இவ்வாலய
விமானத்தின் உயரம் 54 மீட்டர். நூறுக்கும் மேற்பட்ட சந்நிதிகள் அமைந்திருக்கும் இவ்வாலய சுற்றுச் சுவர்கள் 520 அடி நீளமும், 456
அடி
அகலமும் கொண்டு ஆலய நுழைவாயில் 'சிம்ம துவாரம்' என்ற இரண்டு சிங்கங்களை வாயிற் காவலர்களாகக்
கொண்டு அழகான தோற்றத்துடன் விளங்குகிறது.
'சிம்ம துவாரம்' |
கலிங்கத்து பாணியில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தின்
அமைப்பும், அதில் செதுக்கப்பட்டுள்ள கண்களைக் கட்டி
நிறுத்தும் சிற்பங்களும் கலிங்கத்தின்
சிற்பக்
கலையின் சிறப்பை எடுத்து இயம்புகின்றன. செந்நிறக் கற்களால், செம்மண்ணால் கட்டப் பட்டுள்ள ஆலயத்தின் நிறம் வித்யாசமாக ஒரிஸ்ஸாவின் கட்டடக்
கலையை தனித்துவமாக எடுத்துக் காட்டுகிறது. அரசன், அரசிகளின் உருவம், அரசவை,
நாட்டியக்
கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், வேடுவர்கள் என்று ஒவ்வொரு சிற்பமும் அதி அற்புதம்! இவ்வாலயத்தில்
லிங்கராஜாவின் சந்நிதி தவிர நூற்றுக்கும் மேற்பட்ட பல இந்துக் கடவுளரின்
சந்நிதிகள் உள்ளன. இவ்வாலயத்தின் பல பாகங்கள் கி.பி. ஆறாம் நூற்றாண்டைச்
சேர்ந்தவையாம்.
கலிங்க கட்டிட அமைப்பில் அமைந்துள்ள
இவ்வாலயத்தில் விமானம், போகமண்டபம், நாட்ய மண்டபம், ஜகன்மோகன மண்டபம் ஆகிய இவற்றைத் தாண்டிச் சென்றால் லிங்க ராஜாவின் கர்ப்பக்கிரகம் அமைந்துள்ளது. தானே
சுயம்புவாக உருவாகிய லிங்க ராஜா நெடிதுயர்ந்த, எட்டு மீட்டர் குறுக்களவுள்ள லிங்க ரூபத்தில் அருட்காட்சி தருகின்றார். ஏகாம்ர புராணத்தில் உள்ளபடி இவ்விறைவன் கிருத, த்ரேதா யுகங்களில் ஒரு மாமரத்தின் கீழ் உருவமற்ற நிலையில் வழிபடப் பட்டார்.
அதன்பின் துவாபர, கலி யுகங்களில் லிங்க ரூபம் கொண்டு அருளுவதாகவும்
கூறப்பட்டுள்ளது. லிங்கமானது சக்திபீடத்தின் மீது அமைந்துள்ளதால் மிகவும் வரப்பிரசாதியாக விளங்குவதாக கூறுகிறார்கள்.
சைவமும்,வைணவமும் இணைந்து பின்பற்றப்பட்ட அந்நாளில், கர்ப்பக்கிரக வாயிலின் இருபுறமும் திருசூலமும், சக்கரமும் அமைந்து இவ்வாலயம் 'ஹரிஹர க்ஷேத்திரம்' என்பதைக் குறிக்கிறது. அதன்பின் 12ம் நூற்றாண்டில் வைணவ வழிபாடு மேலோங்க, அப்போது உருவானதே பூரி ஜகன்னாதர் ஆலயம். இந்த லிங்க ராஜாவிற்கு தினமும் பால், தண்ணீர், தயிர்,
பழச்சாறு, பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவனும், விஷ்ணுவும் இணைந்து காணப்படுவதால் இங்கு வில்வத்துடன், துளசியும் பெருமானுக்கு அர்ச்சிக்கப்படுகிறது. வேறு எந்த ஆலயத்திலும் உபயோகப்
படுத்தாத ஒருவித நச்சுப் பூக்கள் இவ்வாலயத்தில் மட்டுமே இறைவனுக்கு
சூட்டப்படுகிறது.
ஆலயத்தின் நடுநாயகமாக விளங்கும் சிவபெருமானின்
சன்னிதியைச் சுற்றி விநாயகர், முருகன்,
பார்வதிக்கான
சந்நிதிகள் உள்ளன. அழகிய ஆபரணங்களுடன் அன்புருவாகக் காட்சி தரும் பார்வதியின்
சன்னதி நம்மை மெய்மறக்கச் செய்கிறது. இவ்விறைவனை விடியற்காலையில் தரிசனம் செய்வது அற்புதமான காட்சியாகும். காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை தரிசனம் தரும் இறைவனுக்கு மதிய ம் 12 மணி முதல் 3 மணிவரை மகாஸ்நானம், 'பல்லப்போக்' என்ற நைவேத்தியம் ஆனபின்பே ஆரத்தி காட்டப்படும். இதுவே
மகாப்ரசாதமாக பக்தர்களுக்கு அளிக்கப்படும்.அந்த நேரம் கர்ப்பகிரகம்
மூடப்பட்டிருக்கும்.
பின் மாலை சந்தியா ஆரத்தி, இரவு 'படாசிங்காரா' என்ற அலங்காரம் செய்யப்பட்டு இறைவனை உறங்கச் செய்வர். இந்த பள்ளியறை நேரத்தில்
பஞ்சமுக ஈசனின் மடியில் பார்வதி இருப்பதைப் போன்ற பஞ்சலோகத்தினாலான மூர்த்தி கர்ப்பகிரகத்திளிருந்து அலங்காரம் செய்யப்பட்டு, தூப, தீபாராதனை, நிவேதனம் செய்யப்பட்டபின், அழகிய பல்லக்கில் பள்ளியறைக்கு எடுத்து
செல்லப்படும். இதற்கென கேசரி அரசர்கள் காலத்தில் இருந்தே நியமிக்கப்பட்ட
அந்தணர்களே பூஜை செய்து வருகின்றனர்.
இந்த சந்நிதிகளைத் தவிர கிட்டத்தட்ட 100 சிறு சந்நிதிகள் பல இந்துக் கடவுளருக்கும் இவ்வாலயத்தில்
அமைந்துள்ளது. மா தாரிணி, நரசிம்ம மூர்த்தி, காளிகாதேவி, நாராயணர்,
ராமர்
என்று ஏகப்பட்ட சந்நிதிகள். அவற்றிற்கான எல்லா விசே ஷங்களும் தவறாமல் நடைபெற்று
வருகின்றன.
இவ்வாலயத்தில் இந்துக்கள் அல்லாதோர் கண்டிப்பாக அனுமதிக்கப் படுவதில்லை. பிற மதத்தாருக்கென அமைக்கப்பட்ட
பிரத்யேக இடத்திலிருந்தே அவர்கள் இறைவனை தரிசிக்க முடியும்.
இங்கு சிவராத்திரி மிக கோலாகலமாகக்
கொண்டாடப்படுகிறது. இரவு முழுதும் அபிஷேகம் நடைபெறும். கடுமையான நியமத்துடன்
எதுவும் உண்ணாமல் விரதம் இருப்போர் பலருண்டாம். காலை 'மகாதீபம்' ஆலய கோபுரத்தில் ஏற்றப்பட்டு, ஆரத்தி தரிசித்த பின்பே விரதம் முடிவுறும். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிவராத்திரியன்று இங்கு
தரிசிப்பார்களாம். அடுத்து ஏப்ரல் அல்லது மே
மாதம்
வரும் அசோகாஷ்டமி அன்று நடைபெறும் 'ரத்-யாத்ரா'வில் லிங்கராஜாவும், அவரது சகோதரி ருக்மணியும் (பார்வதி விஷ்ணுவின்
தங்கை என்றால் ருக்மணி சிவனின் சகோதரிதானே!) பிந்துசாகரில் நீராடி, ரதத்தில் ஏறி ராமேஸ்வர் ஆலயம் சென்று அங்கு ஐந்து நாட்கள் தங்கி வருவாராம்.
சிவபெருமான் அங்கு ஒரு அரக்கனை வதம் செய்ய செல்வதாக சம்பிரதாயம்.
பிரம்மாண்டமான இவ்வாலயத்தை பிரமிப்புடன்
சுற்றிப் பார்த்து, தரிசித்து, அங்குள்ள கலைச்சிற்பங்களை ரசித்து வெளிவர குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகிறது.
இவ்வாலயம் தவிர பல புவனேஸ்வரில் பல ஆலயங்கள் உள்ளன. எல்லா ஆலயங்களும் கலிங்க
சிற்பக் கலை அமைப்பைக் கொண்டிருந்தாலும்,
ஒவ்வொரு
மன்னன் கட்டிய ஆலயத்திலும் ஒரு வித்யாசமான அழகைக் காண முடிகிறது.
ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பரசுராமேஸ்வரர்
ஆலயம் மிகப் பழமையானது. அளவில் சிறிய இவ்வாலயம் சிவபெருமானுக்குடையதாயினும், இதன் சுற்றுச் சுவர்களில் மகாவிஷ்ணு,
சப்த
கன்னியர், மயில்வாகன முருகன் போன்ற தெய்வ உருவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இது கலிங்க, புத்த, ஜைன கால சிற்பக் கலைகள் இணைந்து
உருவாக்கப்பட்டுள்ளது.வெளியில் ஒரு நீள்வடிவ சகஸ்ரலிங்கம் மிக அருமையாக, அளவெடுத்தாற்போல் செதுக்கப்பட்டு காணப்படுகிறது.
ஒன்பதாம்
நூற்றாண்டைச்
சேர்ந்த ராமேஷ்வர் ஆலயம் லிங்கராஜாவின் அத்தை வீடாக கூறப்படுகிறது! லிங்கராஜா ராமநவமிக்கு
முதல் நாள் அசோகாஷ்டமி அன்று இங்கு வந்து நான்கு நாட்கள் தங்கிச் செல்வார். இது
ராமனும், சீதையும் ராவணவதம் முடிந்து இலங்கையிலிருந்து
திரும்பியபோது இங்கு சிவபெருமானை ஸ்தாபித்து வணங்கிய ஆலயமாகும்.
பத்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரிஸ்ஸாவின் கலைத் திறனுக்கு அடையாளமாக விளங்கும்
முக்தேஸ்வரர் ஆலய அழகு நம் கண்களைக் கட்டி நிறுத்துகிறது. உள்ளே காட்சி தரும்
இறைவன் சற்று பள்ளத்தில் காணப்படுகிறார். அர்ச்சகர்கள் விபரமாகக் கோயில் பற்றி
சொல்லி, நம்மிடம் ஏதாவது தொகையை எதிர்பார்ப்பது எல்லா
ஆலயங்களிலும் வாடிக்கை போலும்! அளவெடுத்தாற்போல அமைக்கப்பட்டுள்ள மண்டபங்களில்
அழகுறக் காட்சி தரும் முக உணர்வுகளை தத்ரூபமாக விளக்கும் பெண்களின் உருவங்கள், குரங்குகள் மற்றும் யானைகளின் பல காட்சிகள், பஞ்ச தந்திரக் கதைக் காட்சிகள்
மனத்தைக்
கொள்ளை கொள்கின்றன.வேலைப் பாடுடன் அமைந்துள்ள அலங்கார தோரண வாயில் இவ்வாலயத்தின்
கூடுதல் சிறப்பு.
இங்கு அமைந்துள்ள 'மரீசிகுண்ட்' என்ற கிணற்று நீருக்கு மழலைப் பேறு தரும் விசே ஷ சக்தி உண்டாம். அசோகாஷ்டமி அன்று மட்டுமே அந்த நீரை இறைப்பராம். அன்று குழந்தை இல்லாதவர்கள் அந்த
நீரை பல மடங்கு ஏலத்தொகை செலுத்தி வாங்கிச் செல்வார்களாம். அன்று ஒரு நாளில்
மட்டும் ஆலயத்துக்கு பல்லாயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குமாம்.
அதனை ஒட்டி அமைந்துள்ள கேதாரகெளரி ஆலயத்தின்
சிற்பங்கள் சிதிலமடைந்திருந்தாலும், இவ்வாலயம் பற்றி சுவையான ஒரு கதை உள்ளது. அரசன்
லலடேந்து கேசரி அரசாண்டபோது,கேதார்,
கௌரி
என்ற காதலர்களின் நினைவாக இவ்வாலயத்தை உருவாக்கினான். அந்நாட்டின் பிரஜைகளான
இவ்விருவரும் ஒருவரை ஒருவர்
விரும்பி,திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனராம். ஜாதிப் பிரச்னை இவர்களின் திருமணத்தை
ஆட்சேபிக்க, நாட்டை விட்டு வெளியேறினர்.செல்லும் வழியில் கேதாரை ஒரு புலி அடித்துக் கொன்றுவிட, மனம் நொந்த கௌரி அங்கிருந்த ஒரு குளத்தில் குதித்து உயிர் துறந்தாளாம். அதை
அறிந்த அரசன் அவர்கள் நினைவாக இவ்வாலயம் எழுப்பினானாம். இங்குள்ள சிவனும், பார்வதியும் கேதார், கௌரி என்ற பெயரில் விளங்குகின்றனர். இங்கு
அமைந்துள்ள க்ஷீர குண்டத்தில் ஊறும் நீர் வெண்மையாக இருப்பதுடன், மிகவும் தூய்மையானதும், அனைத்து நோய்களையும் நீக்கும் சக்தியும்,
மறுபிறவி
இல்லா வாழ்வும் தரக் கூடியதாம். சீதலா அஷ்டமி அன்று லிங்கராஜா இவ்வாலயம் வந்து
பார்வதியைத் திருமணம் செய்து கொள்வது இவ்வாலயத்தின் விசே ஷத் திருவிழாவாகும்.
ராஜாராணி ஆலயம் மிகப் பழமையானதுடன், கஜுராஹோ போன்ற ஆண், பெண் இணைந்த காமசூத்திர சிற்பங்களை அதிகமாகக்
கொண்டதால், 'காதல் ஆலயம்' எனப்படுகிறது. இது கட்ட பயன்பட்ட கற்களின் பெயரான 'ராஜாராணி' என்பதே இக்கோயிலின் பெயராயிற்றாம்! இதிலுள்ள
சிற்பங்களில் பெண்கள் அணிந்துள்ள ஆபரணங்களும், அலங்காரமும், அவர்களின் நடனக் காட்சிகளும் தத்ரூபமாகக்
காணப்படுகின்றன.இவ்வாலய இறைவர் பெயர் இந்திரேஸ்வரர். இன்று உள்ளே இறைவனும், வழிபாடும் இல்லை. ஆலயத்தின் 8 வாயில்களிலும் இந்திரன், குபேரன், வாயு முதலான தேவர்கள் காட்சி தருகிறார்கள்.
தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் பாதுகாக்கப்படும் இவ்வாலயம் நன்கு
பராமரிக்கப்படுகிறது.
வைட்டல் ட்யுல் ஆலயம் சக்தி ஆலயமாகும். 18ம் நூற்றாண்டு ஆலயமான இதில் சாமுண்டிதேவி சவத்தை ஆசனமாகக் கொண்டு,மண்டை ஓட்டு மாலையுடன், இரு பக்கமும் ஓநாய், ஆந்தையுடன்,எட்டு கைகளில் கத்தி, கேடயம், திருசூலம், அரக்கனின் வெட்டப்பட்ட தலை, வாள்,
வஜ்ராயுதம்,வில், அம்பு இவற்றுடன் பயங்கரமாகக் காட்சி தருகிறாள்.
இவ்வாலய கர்ப்பகிரகம் இருண்டு இருப்பதால், வெளி மண்டப சிற்பங்களை ரசிக்க காலை வேளையில் செல்வது நலம்.
(64) யோகினி ஆலயம் புவனேஸ்வரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் ஹிராபூரில் உள்ளது. இது இந்தியாவின் சிறப்பான நான்கு யோகினி
கோவில்களில் ஒன்றாகும். .சக்திதேவியின் அம்சமான 64 யோகினிகளின் உருவம் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. பிரதான வழிபாட்டு தெய்வமாக
மஹாமாயா வணங்கப்படுகிறாள். இது தாந்த்ரீக சக்தி நிறைந்த ஆலயம். இங்கு மனம்
குவித்து வணங்குவோருக்கு அற்புத சித்திகள் கிட்டும் என்பதால் இங்கு நிறைய மக்கள்
சென்று தரிசிக்கின்றனர்.
அனந்த வாசுதேவர் ஆலயம் வைணவக் கோயில். அங்கு ஸ்ரீ கிருஷ்ணர் பலராமன், சுபத்திரையுடன் பூரி ஆலயம் போல் காட்சி தருகிறார். இவைதவிர யமேச்வர்,
பிரம்மேஷ்வர், ராமர் ஆலயம் என்று ஏகப்பட்ட ஆலயங்கள். புவனேஸ்வரிலுள்ள ஆலயங்களை தரிசிக்க
மட்டும் இரண்டு நாட்கள் ஆகும். இதைத்தவிர கொனாரக், பூரி மற்றுமுள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு மகிழ இன்னும் மூன்று நாட்கள் தேவை. கலிங்கத்தின் கலையழகைக் கண்களால் கண்டு
களித்து வர ஒருமுறை புவனேஸ்வர் சென்று வாருங்கள்!புவனேஸ்வருக்கு அனைத்து பெரிய
நகரங்களில் இருந்தும் ரயில், விமான வசதி உண்டு. மார்ச் முதல் செப்டம்பர் வரை
இங்கு செல்வதற்கு ஏற்ற காலம்.
விளக்கமான விரிவான தகவல்கள் சிறப்பு...
ReplyDeleteநன்றி...
மிக்க நன்றி...
Delete