என்னைக்
கவர்ந்த கோயில்களில் ஒன்று அன்னாவரம் ஸ்ரீ வீர சத்யநாராயண சுவாமி கோயில்.
சத்யநாராயணரின் ஆலயங்கள் மிகக் குறைவே. அவற்றுள் தனிச் சிறப்பு கொண்டு
விளங்குவது அன்னாவரம் ஆலயம். அக்கோயிலின் அழகும், சாந்நித்தியமும்
தரிசிப்பவரை மெய்சிலிர்க்க வைக்கும். இவ்வாலயத்தில் பிரம்மா, சிவன்,
மகாவிஷ்ணு மூவரும் இணைந்து இருப்பது இவ்வாலயத்திற்கு சிறப்பை
அதிகரிக்கிறது. மும்மூர்த்திகள் இணைந்து அருள் தரும் ஆண்டவனுக்கு 'ஹரி ஹர
ஹிரண்யகர்ப த்ரிமூர்த்தியாத்மகா'என்ற பெயரும் உண்டு.
ஆந்திராவில்
திருப்பதிக்கு அடுத்ததாக மிக பெருமையும், சிறப்பும், செல்வமும் பெற்ற
ஆலயமாக அன்னாவரம் திகழ்கிறது. முற்காலத்தில் இவ்வூரில் எப்பொழுதும்
தடையின்றி அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இதற்கு அன்னாவரம் என்ற
பெயர் ஏற்பட்டதாகவும், இங்கு அருள்புரியும் ஸ்ரீ சத்ய நாராயணர் 'அனைன
வரம்', அதாவது தன்னை வணங்கியவரின் விருப்பமான வரங்களைத் தருபவர் என்பதாலும்
அன்னாவரம் என்ற பெயர் பெற்றதாகக் கூறப் படுகிறது.
இவ்வாலயம்
அமைந்த வரலாறு ஸ்கந்தபுரானத்தில் ரேவாகாண்டத்தில் காணப்படுகிறது.இறைவன்
கோயில் கொண்டிருக்கும் இம்மலை 'ரத்னகிரி' என்று அழைக்கப் படுகிறது. இம்மலை
மேருமலையின் மகனாக புராணம் உரைக்கிறது. மேருமலையும், அதன் மனைவி மேனகையும்
வரம் செய்து மகாவிஷ்ணுவின் அருளால் ரத்தினாகரா, பத்ரா என்ற இரு மகன்களைப்
பெற்றனர். பத்ரா விஷ்ணுவை நோக்கித் தவம் செய்து பத்ராசலம் என்ற மலையாகி
தன்னிடம் விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீராமபிரானைத் தாங்கிப் புகழ் பெற்றது.
ரத்னாகர
மலையும் நாராயணரை நோக்கித் தவம் செய்து அவரையே தன்னிடத்தில் வந்து வாசம்
செய்ய வேண்டும் என்ற வரத்தைக் கேட்க, விஷ்ணுவும் தானே வீர வேங்கட சத்ய
நாராயண சுவாமி என்ற பெயரில் இங்கு கோயில் கொண்டார் என்கிறது தல வரலாறு.
ரத்னாகர் மலை ரத்னகிரி என்ற பெயரைப் பெற்றது. இம்மலையைத் தொட்டவாறு புண்ணிய
நதியான பம்பா சரோவர் என்ற ஆறு ஓடுகிறது.
இங்கு பெருமான்
ஆலயம் கொண்டது எவ்வாறு? ஏரங்கி பிரகாசம் என்ற அந்தணரின் கனவில் வந்த
நாராயணர் தன் விக்கிரகம் இம்மலையில் வழிபாடு இன்றி இருப்பதாயும்,அதனைக்
கண்டுபிடித்து ஆலயம் அமைக்கும்படியும் ஆணையிட அவரும் ஊர்மக்களிடம்
இவ்விஷயம் சொல்லி, அனைவரும் பகவானைத் தேடிக் கண்டுபிடித்து இம்மலையில்
சிறிய ஆலயம் அமைத்து வழிபட ஆரம்பித்த ஆண்டு 1891. அதன்பின் 1934ம் ஆண்டு
மீண்டும் சற்று பெரிய ஆலயமாக உருவாக்கப்பட்டது. சில்ப சாஸ்திரம் மற்றும்
ஆகம விதிகளின்படி ரதம் போன்ற தற்போதைய ஆலய அமைப்பு உருவாக்கப் பட்டது
2012ல்.
ரத்னகிரி என்ற சிறிய குன்றின்மேல் நான்கு புறம்
சக்கரங்களைக் கொண்டு ரத வடிவில், அழகிய வெண்ணிற கோபுரங்களைக் கொண்ட
ஆலயத்திற்கு சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இங்கு கோயில் கொண்டுள்ள
சத்யநாராயண சுவாமி 13 அடி உயரத்தில் உருளை வடிவத்தில் காட்சி தரும்
வித்யாசமான அமைப்பில் உள்ளார். கீழும், மேலுமாக இரண்டு தளங்களைக் கொண்ட
கர்ப்பக்கிரகத்தில் ஸ்ரீ சத்யநாராயண பீடம் என சொல்லப்படும் கீழ்ப்
பகுதியில் பிரம்ம ரூபமாகக் காட்சி தரும் இறைவனின் நான்கு பக்கங்களிலும்
ஆராதனை மூர்த்திகளாக விநாயகர், சூரியன், ஈசன், அம்பிகை உருவங்கள்
அமைந்துள்ளன. 'ஸ்ரீ மகாத்ரிபத் வைகுண்ட நாராயண யந்திரம்' என்னும் சக்தி
வாய்ந்த விசே ஷ யந்திரம் அமைக்கப் பட்டுள்ளது. இது ஜன தன ஆகர்ஷண யந்திரம்
என்பதாலேயே இங்கு பக்தர்களின் வரவு அதிகமாக உள்ளது. தன்னை வணங்குவோரின்
ஆசைகளையும், வேண்டுதல்களையும் வரமாகத் தரும் ஸ்ரீ சத்யநாராயணரின் அருள்
உலகளாவியது.
மேல்நிலையில் ஸ்ரீ சத்யநாராயண சுவாமியின்
வலப்பக்கம் லிங்க ரூப சிவபெருமானும், இடப்பக்கம் ஸ்ரீ அனந்த லக்ஷ்மி
தாயாருடனும் அழகுக் காட்சி அருள்கின்றனர். தங்கக் கவசத்தில் பளபளவென
ஜொலிக்கும் சத்யநாராயணரின் முன் நாம் மெய்மறந்து நிற்கிறோம். 'நாராயணா
ஏன்னா நாவென்ன நாவோ 'என்பதுபோல் நம் வாய் 'நாராயணா' என்றுதான் திரும்பத்
திரும்ப சொல்கிறதே தவிர, அவரிடம் வேண்டுவது எதுவென்று புரியவில்லை.
அங்கேயே இறைவனுடன் கரைந்து விடும் மனோபாவமே ஏற்படுகிறது.மெய்சிலிர்க்கும்
அனுபவமாக உள்ளது.
இவ்வாலயத்தில் சத்யநாராயண விரதம் செய்வது
மிக சிறப்பானதாகக் கூறப் படுகிறது. தம்பதிகளாகச் செய்யும் இந்த பூஜைக்கான
கட்டணம் 200 ரூபாய் முதல் 1500 வரை உண்டு. காலை 6 மணி முதல் மாலை 6 வரை
இந்த பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுவர். கோவிலின் உள்ளே இருக்கும்
கல்யாண மண்டபத்தில் அனைவரும் வரிசையாக உட்கார வைக்கப் பட்டு, பூஜைக்கான
சாமான்களைத் தந்து, சங்கல்பம் செய்து வைத்து சுவாமிக்கு முன்பு
அர்ச்சகர்கள் சத்யநாராயண பூஜை செய்து வைக்கிறார்கள். கடைசியாக தீபாராதனை
முடித்து, கதை படித்து விரதத்தை பூர்த்தி செய்கிறார்கள். சத்யநாராயணருக்கு
விசே ஷமான இத்தலத்தில் இந்த விரத பூஜை செய்வதால் திருமண பாக்கியம்,
பிள்ளைப் பேறு, விரும்பிய வேலை, இவற்றுடன் நினைத்தது நிறைவேறும் என்று
கூறப் படுகிறது. எனக்கு இது நிதர்சனமாக நடந்தது.
ஆலயம் மிக
சுத்தமாகப் பராமரிக்கப் படுகிறது.இக்கோயில் அருகில் அமைந்துள்ள ராமர்
மற்றும் வன துர்கை ஆலயங்களும் மிக அழகாக உள்ளன. இங்குள்ள கோசாலை அருமையாக
பராமரிக்கப் படுகிறது. ஒவ்வொரு ஏகாதசியும் மிகச் சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது.மே மாதம் 6 நாட்கள் நடைபெறும் சுவாமியின் திருக் கல்யாண
உத்சவம் மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது. அந்த நன்னாளில்
இத்தலத்திற்கு வந்து திருமணம் செய்து கொள்பவர்களின் கூட்டமும் அதிகமாக
இருக்குமாம்!
மற்றும் நவராத்திரி, தெப்ப உத்சவம், தீப உத்சவம்
இவற்றுடன் சிவபெருமானுக்கான உத்சவங்களும் இங்கு மிக விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது. மக்கள் கூட்டம் திருப்பதி போன்றே காணப்படுகிறது.
இக்கோயிலுக்கு
ஒருமுறை சென்று தரிசித்தவரை மீண்டும் ஈர்க்கும் சக்தி இந்த பெருமானுக்கு
நிச்சயம் உண்டு. ஒவ்வொரு முறை செல்லும்போதும் எனக்கு மீண்டும் சென்று
அப்பெருமானை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாலேயே எனக்கு மிகவும்
பிடித்த கோயிலாக உள்ளது.
அன்னாவரம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்
விசாகப்பட்டினத்திலிருந்து 125 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
அனைவரும் வாழ்வில் ஒருமுறை அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புத புண்ணியத் தலம்
அன்னாவரம்.