அன்னையர் தினப் பதிவு...13.5.2018
அன்புள்ள அம்மா வணக்கம்!
தலைமகளாய் என்னை ஈன்றெடுத்தாய்!
அள்ளி அணைத்து அரவணைத்து முத்தமழை பொழிந்தாய்!
தலைவாரி பூச்சூட்டி என்னை அழகு பார்த்தாய்!
அன்பாய், பண்பாய் இருக்க கற்பித்தாய்!
கல்வி,கலைகளில் சிறக்க ஊக்கம் தந்தாய்!
கடமையில் கருத்தாய் இருக்க கற்றுக் கொடுத்தாய்!
அடுத்தவரை நேசிக்க அழகாய் சொல்லித் தந்தாய்!
தவறுகளைத் திருத்திக் கொள்ள சற்றே கோபித்தாய்!
என் மணநாள் அன்று கண் கலங்கி அழுதாய்!
பரிவாய், பாசமாய், பக்குவமாய் வாழ அறிவுரைத்தாய்!
நான் சோர்ந்து போனபோது பரிவாய் எனக்கு ஆறுதல் தந்தாய்!
நான் பாடும்போது பரவசமடைந்தாய்!
என் எழுத்துக்களை படித்து ரசித்தாய்!
நான் தாயானபோது முகம் மலர ஆனந்தித்தாய்!
என் குழந்தைகளை பாசத்துடன் நேசித்தாய்!
அன்பு தந்தாய்!
ஆசையாய் அரவணைத்தாய்!
நான் துவண்டபோது நீ தோள் கொடுத்தாய்!
நான் சிரித்தால் நீயும் முகமலர்ந்து சிரித்தாய்!
பக்க பலமாய் துணையிருந்தாய்!
சக்தியாய் உடனிருந்தாய்!
நீ ஏன் அம்மா மறைந்தாய்?
மகிழ்ச்சியான தருணங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும்போது நீ உடன் இல்லை என்ற உணர்வில் கண்கள் கசிகின்றது.
நீ அன்று எனக்கு அளித்த அறிவுரைகளும், படிப்பினைகளுமே இன்று என் வாழ்வை சிறக்க வைத்திருப்பதை உணர்ந்து உனக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எத்தனையோ விஷயங்கள் உன்னிடம் மட்டுமே சொல்ல விழைகிறேன்.
உன்னை மீண்டும் காண மனம் ஏங்குகிறது.
இன்று எல்லாம் இருந்தும் நீ இல்லையே அம்மா!
என்று எங்கு உன்னைக் காண்பேன் அம்மா.
உன்னைத் தாயாய் அடைந்ததற்கு தலைவணங்குகிறேன் என் அன்பு அன்னையே!
No comments:
Post a Comment