என்னைப் பெற்று, வளர்த்து கலைகளைக் கற்றுக் கொடுத்து எனக்கு சீரான, சிறப்பான அறிவுரைகளை சொல்லி என் இன்றைய வாழ்வின் ஆதாரமான என் அன்னைக்கும், திருமணத்திற்குப் பின் என்னிடம் கண்டிப்புடன் நடந்து என்னை எந்த சூழலையும் கலங்காமல் எதிர்கொள்ளும் திறனைக் கொடுத்த என் மாமியாருக்கும், இன்று அவர்கள் என்னுடன் இல்லையென்றாலும் என் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்!
நான் கலங்கி நின்ற சமயங்களில் எனக்கு இன்னொரு தாயாய் இருந்து எனக்கு ஆறுதல் தந்து என்னைத் தேற்றிய என் மகள் மற்றும் மருமகளுக்கும், பல நேரங்களில் உடனிருந்து வழி நடத்திய பெண்மணிகளுக்கும், என் நேரங்களை இனிமையாக்கிய சிநேகிதிகளுக்கும்,மத்யமரால் எனக்கு கிடைத்த அன்புத் தோழிகளுக்கும் என் மனமார்ந்த மகளிர்தின வாழ்த்துக்கள்!
அம்மா, பாட்டி, சகோதரி, மகள் எனும் அனைவரும் நம்முடன் ரத்த சம்பந்தம் உடையவர்கள். அவர்களிடம் நாம் அன்பு காட்டுவது இயல்பு.இன்று நான் சிறந்த பெண்மணியாகக் குறிப்பிடப் போவது அன்னை தெரசாவையே. சிறு வயது முதல் எனக்கு அன்னை தெரசாவை மிகவும் பிடிக்கும்.அவரது தன்னலமற்ற தொண்டுக்கு முன் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று
எண்ணுவேன்.உடனிருப்பவரே அருவறுக்கும் தொழு
நோயாளிகளையும்,சகதியிலும், சேற்றிலும், குப்பைத்தொட்டிகளிலும் கிடைக்கும் குழந்தைகளையும் சற்றும் கூசாமல் தொட்டுத் தூக்கி சென்று அவர்களுக்கு வாழ்வு கொடுத்த அன்னை தெரசாவின் மாண்பு என்னை வியக்க வைத்தது;என் மனதை நெகிழ வைத்தது.
1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26 மெசிடோனியாவில் பிறந்த அன்னையின் பெயர் அக்னஸ் கொன்ஸா பொஜாக்கியோ (Agnes Gonxha Bojaxhiu). இதற்கு சின்னஞ்சிறு மலர் என்ற பொருளாம்.அதனால்தானோ அவர் சின்னஞ்சிறு மலர்கள் போன்ற குழந்தைகளிடம் அளவில்லா பாசம் கொண்டிருந்தாரோ?ஆழ்ந்த இறைநம்பிக்கையும், பொதுத்தொண்டில் அளவற்ற ஆர்வமும் கொண்டிருந்த அன்னை தன 18 வயதில் கத்தோலிக்க கன்னிகாமட உறுப்பினரானார்.
கல்கத்தாவில் இந்திய மிஷனரிகளின் சமூகத் தொண்டுகளில் ஈர்ப்பு பெற்றவர்,1931ல் அன்னை தெரசா என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற்று இந்தியா வந்தார்.
அதன்பின் சில ஆண்டுகள் ஆசிரியப் பணியில் இருந்தவர்,அதை விடுத்து கல்கத்தாவில் மோதிஜில் என்ற சேரிப் பகுதிகளுக்கு சென்று அவர்களுக்கு தொண்டு செய்தபடி அவர்களுடன் வாழஆரம்பித்தார்.
அங்குள்ள குழந்தைகளுக்கு படிப்பு, நோயாளிகளுக்கு மருத்துவம் என்று தொண்டு செய்து வந்தார்.1950ல் மிஷனரீஸ் ஆப் சாரிட்டி (Missionaries of Charities)என்ற அறக்கட்டளையை ஆரம்பித்தார்.
இதன் மூலம் பசியால் வாடுகின்றவர், வீடின்றி தவிக்கின்றவர், கண்பார்வை இல்லாதவர்,
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர் என தன்னால் முயன்ற அத்தனை உதவிகளையும் பாரபட்சம் இல்லாமல் செய்து வந்தார். முதியவர்களுக்கு கருணை இல்லம் உருவாக்க விரும்பியவர்,அரசாங்க உதவியுடன் ‘காளிகட்’ என்னுமிடத்தில் ஹீக்ளி
நதிக்கரையின் அருகில் கிடைக்கப்பெற்ற “நிர்மல் ஹ்ருதய்” என்ற கட்டிடத்தை முதியோர் காப்பகமாக மாற்றினார். இதன் பெயர்தான் பின்னாளில் “காளிகட் இல்லம்”.
1955ல் சிசுபவன் என்ற உடல் ஊனமுற்ற, குப்பைத்தொட்டிகளில் போடப்பட்ட குழந்தைகளுக்கான இல்லம் ஆரம்பித்தார்.1957ல் தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனை ஆரம்பித்தார். இவற்றிற்கான பணத்தை எப்படி சேர்த்தார் என்பதை இந்த உருக்கமான நிகழ்ச்சியின் மூலம் அறியலாம்.
அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டும் வழக்கம் கொண்ட அன்னை ஒரு கடைக்கு முன் சென்று நின்று தொடர்ந்து யாசகம் கேட்டார். கடைக்காரர் தெரசாவை கோபமாக பார்த்து விட்டு அவர் நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார். அப்போது சற்றும் மனம் தளராமல் 'மிக்க நன்றி. நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்' என்று கேட்டார்'.அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப்பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். இப்படி தெரசாவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன.
இந்தியாவில் சுற்றுப்பயணம் வந்த போப்பாண்டவர் தான் சுற்றுப்பயணம் செய்த விலை உயர்ந்த காரை அன்னைக்கு பரிசளித்தார்.அன்னையோ அதை ஏலம் விட்டு அந்தப் பணத்தை அறக்கட்டளை நிதியில் சேர்த்துக் கொண்டார்.தன் வாழ்நாள் முழுதும் ஏழைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், குடிசை வாசிகளின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துக்காவும் செலவழித்த அன்னை "குடிசை சகோதரி" என அழைக்கப்பட்டார்.
1962ல் பத்மஸ்ரீ, 79ல் நோபல் பரிசு, 83ல் எலிசபெத் மகாராணியின் கவுரவ விருது, 97ல் அமெரிக்க கவுரவ பிரஜா உரிமை,77ல் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக டாக்டர் பட்டம் என பல பட்டங்கள் தேடி வந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல் 45 வருட காலங்கள் சமூகப் பணிகளே வாழ்க்கையாக வாழ்ந்தவர், 1997 செப்டெம்பர் 5ம்நாள் இருதய நோயால் உயிர் நீத்தார். #அன்னை என்று உலகம் முழுக்க அழைக்கப்பட்ட அவரின் தொண்டு அவரை 'சாதனைப்பெண்மணி' ஆக்கியது.
'நீங்கள் செல்லுமிடமெல்லாம் அன்பைப்பரப்புங்கள்.தனிமையும்,
தன்னிரக்கமும் மிகப் பெரிய வறுமை நிலைகள்' என்று உரைத்த
அன்னை தெரேசாவே என் மனம் கவர்ந்த #செம்மைமாதர்!
No comments:
Post a Comment