Saturday, 21 September 2019

கனவு


கனவு..
இது எல்லா மனிதர்க்கும் வரக் கூடியது. மனித மனத்தின் ஏக்கங்களும், தாக்கங்களுமே கனவாக வெளிப்படுகிறது என்கிறது ஆய்வு.கனவுகளைப் பற்றி முதன்முதலாக ஆராய்ச்சி செய்து கூறியவர் சிக்மண்ட் ஃப்ராய்ட்(Sigmund Freud).

நாம்ஆசைப்படும் விஷயங்கள் நினைவில் நடக்காதபோது அவை கனவுகளாக வெளிப்படுமாம்.
அவையே அவற்றை நிறை
வேற்றிக் கொள்ள நமக்கு ஊக்கமும் தரும்.

கனவு காணாதவர் யாருண்டு? ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு! எனக்கு வரும் கனவுகள் தூக்கம் கலைந்ததுமே மறந்துவிடும். இதுவும் நலலதற்கே என்று நினைப்பேன்! அதை நினைத்து கவலைப்பட வேண்டாமே!

ஆனால் மிகச்சில கனவுகளே நினைவில் இருக்கிறது.எனக்கு தண்ணீரைக் கண்டால் பயம். ஆறு, குளங்களில் குளிக்க தெரியாது..
குளிக்கவும் பயம்!
திருமணத்திற்குப் பின்  வைத்தீஸ்வரன் கோவில் , திருப்பதி என்று எந்தக் கோவிலுக்கு போனாலும் கால் அலம்பும்போது வழுக்கி விழுந்து எழுவேன்! என் கணவர் பயத்தில் என் அருகிலேயே நிற்பார்!

காசிக்கு சென்றபோது கட்டாயம் குளிக்க வேண்டிய நிர்ப்பந்தம்! படியில் அமர்ந்து சொம்பில் மொண்டு குளித்தேன்! அதனாலோ என்னவோ அடிக்கடி பெரும் வெள்ளத்தில் நான் அகப்பட்டுக் கொண்டு நடுவில் நிற்பது போல் கனவு வரும். சில சமயம் என் குழந்தைகளும் என்னுடன் இருப்பார்கள். அப்படியே பதறி எழுந்திருப்பேன்.

ஒருநாள் மகாபெரியவரை கனவில் தரிசித்தபோது அவர் என்னைப் பாடச் சொன்னதுபோல் கனவு கண்டேன். பலநாள் இந்தக் கனவு மனதிலேயே நின்றது. ஒருமுறை பெரியவரை தரிசிக்க நினைத்தாலும்
அன்றைய குடும்பப் பொறுப்புகளால் போக முடிய
வில்லை. இக்கனவு வந்த சில மாதங்களில் பெரியவர் சமாதியாகி விட்டார். அவரை தரிசிக்க முடியாதது இன்றும் வருத்தமாக உள்ளது.

என் அம்மா நெஞ்சக நோயினால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அச்சமயம் கனவில் நாங்கள் புட்டபர்த்தி செல்வது போலும் ஸ்ரீசத்ய
சாயிபாபா எனக்கு விபூதி கொடுத்துவிட்டு என் அம்மா கையை நீட்டியும் கொடுக்காமல் சென்று விடுவது போலும் கனவு கண்டேன். என் மனது ஏனோ கவலையாகி விட்டது.

2005ம் ஆண்டு..மார்ச் மாதம். என் அம்மா 'நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேனோ. புட்டபர்த்தி போய் 2,3 நாள் தங்க வேண்டும். அழைத்துப் போவாயா'என்றார். என் அப்பா அம்மாவின் உடல் நிலையை நினைத்து தயங்கினார். எனக்கு என் கனவு நினைவு வர, மனம் கலங்கியது. நான் என் அம்மா,அப்பாவுடன் சென்று மூன்று நாள் தங்கினோம். தினமும் அற்புதமான  சுவாமியின் திவ்ய தரிசனம்.

அந்த முறை காலை ஓங்காரம், சுப்ரபாதம்,நகர சங்கீர்த்தனம் எல்லாவற்றிற்கும் முடியாத நிலையிலும் அம்மாவும் வந்தார். மாடியிலுள்ள கடைகளுக்கெல்லாம் போக வேண்டும் என்று ஆசைப்
பட்டு வந்து சுவாமியின் மோதிரம் புகைப்படம் எல்லாம் வாங்கினார்.
கேக், ஐஸ்கிரீம் (முட்டை சேர்க்க மாட்டார்கள்) எல்லாம் வாங்கி சின்னக் குழந்தை போல் சாப்பிட்டார்!

அடுத்த இரண்டு மாதத்தில் மே15 அன்று உடல்நிலை சரியில்லாமல் நன்கு பேசிக் கொண்டே  மருத்துவமனை சென்றவர், வீல் சேரில் அட்மிட் ஆகப் போகும்
போதே இதயம் நின்று விட்டது. எப்பொழுதும் என் அம்மா விரலில் அணிந்திருந்த சாய்பாபா மோதிரத்தை  அன்று அணியாமலே சென்றிருக்கிறார்.

இது போன்ற கனவு யாருக்காவது வந்திருக்குமா எனத் தெரியவில்லை.நானே இறந்து விட்டது போல் வந்த ஒரு கனவு என்னை இன்று நினைத்தாலும் பதறச் செய்கிறது. இரண்டு வருடம் முன்பு மும்பைக்கு என் மகள் வீட்டுக்கு சென்றபோது அவர்கள் வீட்டு single cotல் நான் படுத்துக் கொள்ள என் பேரன் பேத்திகள் கணவருடன் கீழே படுத்து உறங்கினர்.

இரவு நான் இறந்து போய் படுத்திருப்பது போலும், எல்லோரும் சுற்றிநின்று ஏதோ பேசுவது போலும் கனவு. 'நான் இறக்கவில்லை' என்று என் மனம் 'எழுந்திரு..எழுந்திரு' என்று பதற, அப்படியே உடம்பு நடுங்க கண் விழித்தேன். நல்லவேளை...
உயிரோடுதான் இருக்கிறோம் என்ற நிம்மதி இருந்தாலும்.. கடவுளே..இப்படி ஒரு கனவா?

உடனேஎன் கணவரை எழுப்பி நான் பயத்துடன் சொல்ல, அவர் என்னைஆசுவாசப்
படுத்தி கீழே படுத்துறங்கக் கூறினார். ஆனால் அன்று இரவு முழுதும் அந்தக் கனவால் என்னால் தூங்க முடியவில்லை.
மறுநாள் விடிந்ததும் நெட்டில் அதற்கான பலனைத் தேடினேன்.
...இறப்பது போன்ற கனவு வந்தால், நாம் புதிதாக ஏதோ ஒன்று செய்யப் போகிறோம் என்று அர்த்தமாம். நம்மிடம் இருந்த ஏதோ ஒன்றை நிறுத்திவிட்டு, அல்லது நீக்கிவிட்டு வேறு மனிதனாகப் போகிறோம் என்று அர்த்தம் தருகிறதாம் அந்தக் கனவு.
கனவில் செத்தால், மகிழ்ச்சி
யடையுங்கள்...என்று இருந்தது.

அதன் பிறகே மனம்நிம்மதி
யாயிற்று. ஆனாலும் என் மகள் வீட்டில் அந்தக் கட்டிலை இன்று பார்த்தாலும் எனக்கு அந்தக் கனவு நினைவில் வரும்! நான் அதில் படுப்பதுமில்லை!

சமீபத்தில் வந்த சயன அத்தி வரதரின் தரிசனம் மனதுக்கு ஆனந்தத்தைக் கொடுத்த இனிய கனவு. கூட்ட பயத்தினால் செல்ல முடியாத வருத்தத்தை அந்தக் கனவு தீர்த்து வைத்தது.
இப்படி அவ்வப்போது வரும் கனவுகள் நமக்கு எதையோ சொல்வதை நமக்கு பல நேரங்களில் புரிந்து கொள்ள முடிவதில்லை.

No comments:

Post a Comment