VGK15....அழைப்பு கதைக்கான எனக்கு மிகவும் பிடித்த பரிசு பெறாத என் விமரிசனம்...
கதைக்கான இணைப்பு....
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.html
திருமணத்திற்கு
அழைக்கச் சென்ற நண்பரின் அனுபவத்தை மிக சுவாரசியமான ஒரு சிறு கதையாக்கிக்
கொடுத்திருக்கிறார் கதாசிரியர்! இந்த சம்பவம் பிள்ளைகள்,பெண்களுக்குத்
திருமணம் செய்த ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கண்டிப்பாக நடந்த ஒரு
அனுபவமாக இருக்கும்!
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.....குறள் 61
அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைப் பெறுவதைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு எதுவுமில்லை.
அந்தப் பிள்ளைகளுக்கு சிறந்த துணைகளைத் தேடித் தேர்ந்தெடுத்து திருமணம்
முடிப்பது என்பது இக்காலத்தில் மிகப் பெரிய்ய்ய்ய விஷயம்தான்!
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.....குறள் 751
தகுதி அற்றவரையும் தகுதி உடையவராக ஆக்கும் தகுதி பணத்திற்கு மட்டுமே உண்டு.
'வீட்டைக் கட்டிப்பார்.. கல்யாணத்தைப் பண்ணிப்பார்' என்பது
அந்தக்காலப் பழமொழி. ஆனால் இக்காலத்திலோ பணம் இருந்தால் எதுவுமே செய்வது
மிகவும் சுலபம் என்பதை திருமண காண்ட்ராக்டர்கள் மூலம் எளிதில் திருமணத்தை
முடித்துவிடலாம் என்பதை ஆசிரியர் மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளார்.ஆனால்
அழைப்பதற்கு நாம்தானே செல்ல வேண்டும்?
அறுபதைத் தாண்டி சற்று ஆரோக்கியம் குறைந்த ஆசிரியரின் நண்பர்
எதையும் திட்டமிட்டுச் செய்வதில் விருப்பமுள்ளவர் என்பதைக்
குறிப்பிடும்போதே , ஏற்பாடுகளை எவ்வளவு அழகாகச் செய்து முடித்தார்
என்பதையும் அருமையாக விளக்கியுள்ளார்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்....664
ஒரு செயலை இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்வது யாருக்கும் மிக எளிது:ஆனால் அதை சொல்லியபடி செய்து முடிப்பது மிகவும் கடினம்.
பத்திரிகை நான்கு மாதம் முன்பே எழுதப்பட்டு, திருத்தப்பட்டு, வெளி
மாநிலக்காரர்களுக்கு ஒன்றரை மாதமுன்பே அனுப்பப் பட்டதும்,அனுப்பியவர்கள்
பட்டியலை சிவப்பு மையால் குறி யிட்டதும் ஒரு திருமணம் முன்னாலேயே எப்படி
திட்டமிடப்படவேண்டும் என்பதைமிக அழகாக விளக்குகிறது. .
தம் வீட்டில் திருமணம் நிச்சயிப்பவர்கள் ஆசிரியரின் இந்தக் கதையைப்
படித்து அதன்படி செயலாற்றினால் ஒரு சிரமமும் இன்றி திருமணத்தை நடத்தி
முடிக்கலாம். அதற்கே ஆசிரியரை ஆயிரம் முறை பாராட்டலாம்.
'எட்டுத் திக்கிலும் கொட்டு முரசே' என்பது போல எட்டு
திக்குகளுக்கும் பத்திரிகைகளைப் பிரித்து வைத்துக் கொண்டு,தினம் ஒரு
திசைக்கு பத்து வீடுகளாக கொடுத்துவிட்டு வர திட்டமிட்ட நண்பரின் எண்ணம்
சரியானதே!
பெற்றாற் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு....58
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால் பெண்டிர்க்கு இல்வாழ்க்கை பெருஞ்சிறப்பாக அமையும்.
இதன்படி
ஒரு நல்ல கணவரான நண்பருக்கு தன் பெருமையைச் சுட்டிக்காட்டும் விதமாக பளபள
பட்டுப் புடவை, அங்கமெல்லாம் தங்க நகைகள்,கொண்டையிலே மல்லிகைப்பூ,கையிலே
வெள்ளிக் குங்குமச் சிமிழ்....இப்படி தன் இல்லத்தரசியை ஒரு அரசியின்
கோலத்தில் தன் நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்கு சூறாவளி சுற்றுப் பயணமாய்
அழைத்துக் கொண்டு போய், தான் மனைவியை சிறப்பாக வைத்துக் கொண்டிருப்பதை
பெருமையாகப் பறை சாற்ற ஆசைதான்!
ஆனால் பாவம்...அடிக்கும் வெய்யில், அசந்து போன மனைவியின் உடல்நிலை,
அடிமனஉற்சாகம் மற்றும் அலுப்பு....எல்லாவற்றுக்கும் மேலாக
அத்திப்பூக்கள் நெடுந்தொடர்...(அத்திப் பூக்கள் தொடரின் அத்யந்த
ரசிகர் போலும் நம் ஆசிரியர்!) ஹ்ம்ம்..பாவம் நண்பர்...அவர் மனைவி சீவி
முடித்து சிங்காரித்து.....டிஃபன், காஃபி சாப்பிட்டு கிளம்புவதற்குள் பாதி
நாள் கடந்து விடுவதையும், ஒவ்வொரு வீட்டிற்கும் ஏறி,
இறங்கி,லிஃப்டில்,லிஃப்ட் இல்லாத மாடிகளுக்கு கால் வலிக்க ஏறி முழங்கால்
வழியை வரவழைத்துக் கொண்டதையும் நண்பர் சொல்வதாக ஆசிரியர் மிக நகைச்
சுவையாகச் சொல்வது ரசமாக உள்ளது!
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வெட்ப மொழிவதாம் சொல்.....643
சொல்லும்போது கேட்பவரைத் தன வயப் படுத்தும் தன்மையோடு, கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவதே சொல்வன்மையாம்.
வேலை மெனக்கெட்டு கூப்பிட வந்தால் அட்சதைகளை
டஸ்ட் பின்னில் போட்டு பத்திரிகையைப் பிரிக்காமலே விஷயங்களை விசாரிப்பது,
தன் பெண், பிள்ளைகளின் ஜாதகத்தைக் கொடுத்து வரன் தெரிந்தால் சொல்லச்
சொல்வது, தொலைகாட்சி தொடர்களில் மூழ்கி நாம் வந்ததையே இடைஞ்சலாக
நினைப்பது....ச்சே..இவர்களுக்கெல்லாம் பத்திரிக்கை கொடுத்து என்ன ஆகப்
போகிறது என்ற வெறுப்பை ஏற்படுத்துவதோடு, ஆட்டோ வெயிட்டிங்கில் பணமும்
ஏறுவது... இவை எல்லாமே நம்மை அன்புடன் வரவேற்று, உபசரித்து, சாப்பிட ஏதாவது
கொடுத்தனுப்பும் அந்த ஐந்து சதவிகித மக்களுக்காகத்தான்!
கதவைத் திறக்கவே யோசிப்பவர்கள், 'இன்னிக்கு நம்ம
தூக்கம் போச்சே' என்று சட்டென்று பத்திரிகையை வாங்கிக் கொண்டு பட்டென்று
கதவை மூடிக் கொள்பவர்கள், பத்திரிகையைப் பிரிக்காமலே அதில் பலவும் எழுதும்
நண்பர்,வில்லங்கமான வீட்டில் இல்லாத நண்பர், வீட்டிலேயே இல்லாத நண்பர்கள்
என்று பலர் வீட்டிலும் ஏமாற்றம் கிடைத்தாலும் மகனின் திருமணம் சந்தோஷமான
முதல் அனுபவம் ஆயிற்றே?அத்துடன் பழைய நண்பர்களைக் கண்டு அளவளாவிய
மகிழ்ச்சி....இவை தனிதானே?
திருமண மண்டபக் காட்சிகளை நாம் நேரில் பார்ப்பது போல்
கதாசிரியர் எழுதியிருப்பது அருமை! அவசரமாக பரிசை வேறு எவரிடமோ கொடுத்துச்
செல்பவர்கள், அதிகம் அறிமுகமில்லாதவரின் அரட்டை, பெண்களின் பட்டுப்புடவை
மற்றும் நகைகளைப் பற்றியபேச்சு என்று அப்படியே ஒரு கல்யாண மண்டபத்தை நம்
கண்முன்னே காட்டிய ஆசிரியருக்கு ஒரு சபாஷ்!
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.....885
நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகை அவர்களிடையே பல துன்பங்களை உண்டாக்கும்.
எந்தப்
பெண்ணுக்கும் தன் பிறந்த வீட்டு உறவுகளை விட்டுக் கொடுக்க முடியாது.
அதுவும் நண்பரின் மனைவிக்கோ ஒரே அண்ணா, மன்னி. எத்தனையோ செலவழித்து ஊர்
முழுக்க கூப்பிட்டவர்கள் ஒரு நடை மும்பைக்கும் சென்று அவர்களைக் கூப்பிட்டு
வந்திருக்கலாம். அந்தக் கோபத்தை மனதில் வைத்து திருமணத்தில் முகம் தூக்கி
பகைமை பாராட்டுவது அவரது அண்ணனுக்கும் ஏற்றதல்ல.இப்படிப்பட்ட சின்னக்
காரனங்களால்தான் உறவுகளுக்குள் பெரும்பகை உருவாகிறது.
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்....303
யாரிடம் சினம் கொண்டாலும் அதனை உடன் மறந்துவிடல் வேண்டும்.இல்லையெனில் அச்சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
தன் கோபத்தால் இவர்களை எல்லாம் ஒரு ஆட்டம் ஆடவைத்து
எல்லோரும் தன காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்ற அல்ப
ஆசையே நண்பரின் மைத்துனர் எண்ணம் என்பதை நம் ஆசிரியர் சரியாகப் புரிந்து
கொண்டுவிட்டார். அந்தக் கோபத்தை விட்டு சமாதானம் ஆகும் மனம் அவரிடம்
இல்லையே? இருவரும் அவரவர் நியாயத்தை சொல்லிக் கொண்டிருந்தால் பகை விலகுவது
எப்போது?
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற....95
அடக்கமான பண்பும், இனிய பேசும் திறனும் தவிர ஒருவருக்கு சிறந்த அணிகலன் வேறு இல்லை.
மைத்துனரின் கோபத்தை தணிக்க நம் ஆசிரியர் உடனே அவருக்கு
சாதகமாகப் பேசியது பாராட்டுக்குரியது. அவரோ கடுங்கோபத்தில் இருக்கிறார்.
அவரிடம் எது சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார். தான் சொல்வதே சரி என்று
வாதிப்பார்.
அவரை வழிக்குக் கொண்டுவர ஒரே வழி அவர் வழியிலேயே சென்று அவரை
வழிப்படுத்துவதுதான். இதைத்தான் மிகச் சரியாகச் செய்த கதாசிரியர், அவர்
சண்டை போட்டது நியாயமே என்று கூறி சடாரென்று அவருக்கு சாஷ்டாங்க
நமஸ்காரமும் செய்ததில் கோபம் தணிந்த மைத்துனர் அவரைப் பாராட்டி, தூக்கி
நிறுத்தி, கட்டியணைத்துக் கொண்டார். அங்கு பகை மறந்து உறவுடன் நட்பும்
ஏற்பட்டது. தம் காலில் விழுபவரிடம் யாருக்குமே கோபமோ, வெறுப்போ வராதே!
அன்பு ஈனும் ஆர்வமுடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு....74
அன்பு பிறரிடம் பற்றுக் கொண்டு, சிறந்த நட்பு எனும் பெருஞ்சிறப்பை உண்டாக்கும்.
அந்த நேரம் மைத்துனருக்கு தன தங்கையின் கணவரைவிட அன்பில்
தன்னை கட்டிப்போட்ட அவரது நண்பர் பெரியவராகத் தெரிந்தார். அவருடன் நட்பு
கொள்ளவும் விரும்பினார்.அவருக்கு தங்கையின் கணவரிடம் பகை இல்லை.ஒரு சின்னக்
கோபம். அதைக் காட்ட அந்த சரியான நேரத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.
காசியாத்திரைக்கு பஞ்சகச்சம் கட்டிவிட அவரும் அவரின் தங்கை கணவருடன்
சந்தோஷமாகப் புறப்பட்டார்.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு....106
மாசற்றவரின் உறவை மறக்கவும் கூடாது.துன்பத்தில் துணை நின்றவர் நட்பை மறக்கவும் கூடாது.
தன கணவரும், அண்ணாவும் மகிழ்ச்சியாக இணைந்ததைக் கண்ட
நண்பரின் மனைவி ஆசிரியரின் நட்பையும், சமயத்தில் உதவியதையும் எண்ணி கை
குவித்து நன்றி தெரிவித்தார்.
பெண்கள் 'கௌரீ கல்யாணம்'
பாட, புரோகிதர் 'மாங்கல்யம் தந்துனானேனா'சொல்ல நண்பரின் மகனுக்கும், மணப்
பெண்ணுக்கும் திருமணம் இனிதே நிறைவேறியது!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
அட..ஆமாம்...மக்கட் பேறு....ஆசிரியர் எழுதியிருப்பது போல
திரும்பவும் நண்பரின் வளைகாப்பு சீமந்த அழைப்பு....அதற்கான சுவாரசியமான
நிகழ்வுகள் ....ஆசிரியரின் அடுத்த சிறுகதை...அதற்கு மீண்டும்
விமரிசனம்...!