(மனா கிராமம் பத்ரிநாத்)
சரஸ்வதி
நதியை நாம் எங்கும் காணமுடியாது. அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் நம்
கண்ணுக்குத் தெரியாமல் சரஸ்வதி நதி கலப்பதாக ஐதிகம். இவள் பிறந்த இடம்தான்
பத்ரிநாத்திற்கு அருகில் இருக்கும் இந்தியாவின் கடைசிக் கிராமம் மனா.
மூன்று
கிலோமீட்டர் தொலைவில் திபேத்திய எல்லையில் உள்ள இந்தியாவின்
கடைசியிலுள்ள இக்கிராமத்தில் ஒரு இயற்கை அழகு மிகுந்த இடத்தில் சரஸ்வதி
நதியின் தோற்றுவாய் உள்ளது.
அது மட்டுமா? வேத வியாசர் மகாபாரதம் சொல்ல அதை விநாயகப் பெருமான் எழுதியதும் இங்குதான்.
பஞ்ச
பாண்டவர்கள் சுவர்க்கம் சென்றதும் இங்கிருந்துதான் என்கிறது புராணங்கள்.
இவற்றைக் கேட்டபோது நம்மையறியாமல் ஒரு ஈர்ப்பும் சிலிர்ப்பும் ஏற்படுகிறது.
மலைப்பாதை முழுதும் நம்முடன் ஓடிவரும் அலகநந்தா நதியின் அழகில் என்னை மறந்தேன் நான்!
மேட்டிலும்
பள்ளத்திலும் பாறையிலும் குதித்தும் கும்மாளமிட்டும் குதூகலித்து 'இது
என் ராஜ்யம்' என்று மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து ஓடும் நதியாக நாமும்
ஆகமாட்டோமா என்ற ஆசை ஏற்படுகிறது. அந்த அழகை எத்தனை வார்த்தைகளில்
வடித்தாலும் நேரில் அனுபவித்தாலே உணர முடியும்.
உயரமாக செங்குத்தான மலைமீது செல்ல படிகள் ஏறுவது சற்று கடினமாக இருந்தாலும் நம்முடன்
இருக்கும் இயற்கையின் அழகில் அந்த சிரமத்தை மறக்கிறோம். வழியெல்லாம்
ஸ்வெட்டர், பனிக்குல்லா கடைகள்; தேனீர் ஹோட்டல்கள். குளிரும் மிக அதிகம். அந்தக்
குளிருக்கு தேனீர் இதமாக இருக்கிறது!
அங்குள்ள மக்கள், பெண்களும் கூட முதுகில் கூடைகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் மட்டுமன்றி கேஸ் சிலிண்டர்களையும்
தூக்கிச் செல்வது ஆச்சரியமாக உள்ளது. இவர்களுக்கெல்லாம் முதுகு முழங்கால்
வலிகள் வராதோ? அந்த மாசில்லாத சுற்றுச்சூழ்நிலை அவர்கள் ஆரோக்யத்தையும்
பாதுகாக்கும் போலும்!
முதலில்
யானைமுகன் விநாயகனின் 'கணேஷ் குஃபா' என்ற குகை.வியாசமுனிவரின்
வேண்டுகோளுக்கு
இணங்கிமகாபாரதத்தை எழுதுமுன் விநாயகர் அவரிடம் 'தான் எழுத ஆரம்பித்தால்
நிறுத்தாமல் எழுதுவேன் என்றும் சற்றும் இடைவெளி தராமல் தொடர்ந்து பாரதத்தை
சொல்ல வேண்டும்' என்றும் ஆணையிடுகிறார். கணநாதரின் எழுத்தாணி அடிக்கடி
உடைந்து போகிறது. அந்த நேரங்களில் வ்யாஸர் தொடர்ந்து சொல்ல யோசித்துக்
கொள்வாராம்!
ஆனால்
விநாயகரோ வியாசரிடம் கூறியபடி விரைவாய் எழுதத் தனது தந்தத்தையே உடைத்து
எழுத்தாணியாக மாற்றிகே கொண்டு தொடர்ந்து எழுதினார். அவரே குகையில் காட்சி
தரும் விநாயகர் என்று கூறுகிறார்கள். குகையில் குனிந்து விநாயகரை
தரிசித்து வியாசகுகைக்கு சென்றோம்.
மகாபாரதம் இயற்றிய வியாசர் வீற்றிருக்கும்குகைக்கு மேலும் சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
மஹாபாரதம்
எழுதிய பிறகு வியாசர் மன சஞ்சலத்துடன் இருந்தபோது, நாரதர் ஆலோசனைப்படி
மானுடரின் மோக்ஷத்திற்காக பாகவதம் எழுதிய இடம்தான் வியாச குகை என்று
நம்பப்படுகிறது. இது 5300 வருடங்களுக்கு மேல் பழமையானது. இங்கு விநாயகர்,
சுகர்,வல்லபாச்சாரியார் சிற்பங்களும் பழமை மாறாமல் உள்ளன. மகாபாரத
ஏட்டுச்சுவடியும் ஒரு கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்துப் போற்றப் படுகிறது.
எங்கும்
காண முடியாத சரஸ்வதி நதியைக் காண நம் மனம் ஆவலாகிறது. இங்குதான் இரு
மலைகளுக்கிடையே அலை மோதி ஆர்ப்பரிக்கும் நதியாக நுரை பொங்க வெளிப்
படுகிறாள்.அடேயப்பா..என்ன வேகம்!
ஓ....
என்கிற சப்தம் மட்டும் கேட்கும் அமைதியான சூழ்நிலையில், நாம் நிற்கும்
இடத்திலிருந்து சற்றே கீழே, நம்மால் நெருங்க முடியாத ஒரு பள்ளமான பகுதியில்
இருக்கிறது சரஸ்வதியின் உற்பத்தி ஸ்தானம். ஆக்ரோஷத்துடன் ஆரவாரமாக சற்றே
ஆணவத்துடன் கண்ணைப் பறிக்கும் வெண்ணிறத்தில் அதிவேகமாக கிளம்பும் சரஸ்வதி பிரமிக்க வைக்கிறாள். இவளின் மறைவுக்கு காரணம் யார்?
ஒரு சுவையான புராண சம்பவம்!மகாபாரதம் எழுதுவதில் ஈடுபட்டிருந்த விநாயகர், ஆர்ப்பரிக்கும் நதியை
அமைதியாகச்
செல்லும்படிக் கூறினார். ஆனால் சரஸ்வதி நதியோ, அகம்பாவம் கொண்டு மேலும்
பேரொலியுடன் ஆர்ப்பரித்தாள். அதனால் கோபமுற்ற விநாயகர் 'நதியே நீ
கண்ணுக்குத் தெரியாமல்
மறைந்து போவாய்,உன்பெயரும் மறையும்' எனச் சாபமிட்டார்.
தன் நிலை உணர்ந்த சரஸ்வதி நதி, தன்னை மன்னிக்குமாறு பணிந்து வேண்டினாள். கஜமுகனும்
நதியின் மீது கருணை கொண்டு 'நதியே!நீ இங்கு மறைந்து, கங்கையும்,யமுனையும்,
சங்கமம்
ஆகும் இடங்களில் எல்லாம் மூன்றாவது நதியாக் கலந்து புகழ் பெறுவாய்'
என்றார். அதனால் அலஹாபாத், குப்தகாசி, ரிஷிகேஷ் போன்ற கங்கை யமுனை இணையும்
இடங்கள் திரிவேணி சங்கமம் எனப்படுகின்றன. அருகில் சரஸ்வதிக்கு சிறிய குகைக்
கோயில் உள்ளது.
சரஸ்வதி
கர்வம் அடங்கி வெளியே வந்து அலக்நந்தா ஆற்றுடன் கலந்தபின்,
அந்தர்யாமியாகி விடுகிறாள். சரஸ்வதியும் அலகநந்தாவும் கலக்குமிடம் மிகவும்
ரம்மியமாக இருக்கிறது. இந்த இடத்திற்கு கேசவ பிரயாகை என்று பெயர்.
சரஸ்வதி
நீரை நாம் அங்கிருக்கும் குழாய்களில் பிடித்துக் கொள்ளலாம். இதற்கும் மேலே பஞ்ச
பாண்டவர்கள்
சுவர்க்கம் சென்ற இடம் உள்ளது. அவ்விடம் 'பீம்புல்'
பீமன்பாறை எனப்படும். ஐவரும் பாஞ்சாலியுடன் சுவர்க்காரோகணம் என்ற இடத்தின்
வழியே சுவர்க்கம் சென்றபோது
வழியில் சரஸ்வதிநதியைக்
கடக்க முடியாமல் பாஞ்சாலி தவிக்க, பீமன் ஒரு பாறையைப் பாலமாகப் போட்டதாக
புராண வரலாறு. அதில் பீமனின் கைத்தடங்களும் தெரிவதாக எழுதப்பட்டுள்ளது.
தர்மர் தவிர மற்ற ஐவரும் அங்கே தம் உடலை விட்டு சுவர்க்கம் செல்ல, தர்மர்
மட்டுமே மனித உடலுடன், அறமாகிய நாய் வழிகாட்ட மேலுலகம் சென்றார்.அவர்கள்
சென்ற வழி,மலைப்படிக்கட்டுகள், உயர்ந்தோங்கிய மலைப்பாதை இன்றும்
இருக்கிறதாகவும் அந்த இடத்திற்கு செல்வது மிகவும் கடினம் என்றும் கூறப்
படுகிறது..
மனா
கிராமம் இந்தியாவின் கடைசி கிராமம். அடுத்து திபெத்தின்(சீனா) எல்லை
தொடங்கி விடுகிறது. அங்குள்ள தேனீர் விடுதியும் இந்தியாவின் கடைசி
தேனீர்க்கடை என்ற சிறப்பைப் பெறுகிறது.இங்கு
தின்பண்டம்,
குடிநீர்,பானங்கள், டீ, பிஸ்கட் அனைத்தும் கிடைக்கின்றன. இதைப்போலவே வியாச
குகை அருகேயும் இந்தியக் கடைசி டீக்கடை உள்ளது.
இமயமலையின் ஒவ்வொரு இடத்திற்கும் தனிப்பட்ட சிறப்பு உள்ளது. அதனாலேயே அது தேவபூமி என்ற
சிறப்பைப் பெறுகிறது. அந்தபூமியில் நடக்கும்போது நமக்குள்ளும் ஆனந்தமும், அமைதியும் ஏற்படுவதை உணர முடிகிறது.
ராதா பாலு ...திருச்சி
வியாசர் குகை |
No comments:
Post a Comment