Saturday, 14 March 2020

நன்றி சொல்லும் நேரமிது😊




மத்யமர் கோலப் போட்டியில் என் கோலத்திற்கு  பரிசாக சான்றிதழ்! மிக மகிழ்ச்சியான விஷயம்💃 கோலம் போடுவது எனக்கு மிகப் பிடித்தமானது. புள்ளி வைத்தோ, ரங்கோலியோ, உருவக் கோலங்களோ எல்லாம் என் கைவண்ணத்தில் வண்ணக் கோலமாக்குவேன். மார்கழி வருமுன்பே கோலத் தேர்வை ஆரம்பித்து விடுவேன்.

இம்முறை போட்டிக்கான மூன்று கோலங்களுமே ஸ்பெஷலாக தேர்வு செய்து போட்டேன். இதில் எனக்குப் பிடித்தது Kerala Mural Art முறையில் போட்ட
ஸ்ரீ குருவாயூரப்பன்
கோலம். இதைப் போட்டு முடிக்க 4 மணி நேரம் ஆயிற்று. இந்த வருடக் கோலங்களில் எனக்குப் பிடித்த கோலம் இது.






சூரிய கிரகணத்தன்று போட்ட போட்டிக் கோலம் 3D கோலம். பதிவு போட்ட ஐந்து நிமிடத்தில் அப்ரூவ் செய்த மாடரேட்டர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்!

நான் போட்டிக்கென போட்ட முதல் கோலம் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டது. இது Sanskar Barathi rangoli முறையில் போட்டேன். அதில் 'மத்யமர்'என்ற வார்த்தையை கோலத்துக்குள் ளேயே எழுதியிருந்தேன். அதை தனி ஃபோட்டோவாகவும் போட்டிருந்தேன். அதைக் கண்டு பிடிக்க முடியாத Selvi Shankar 'மத்யமர் பெயரில்லாத கோலத்தைப் போட்டிக்கு எடுத்துக்க முடியாது' என்று சொல்ல நான் எடுத்துக் கூறியதும் ஒப்புக் கொண்டார்.

நம் தலைவரோ Shankar Rajarathnam கோலத்துடன் தனி பதிவு போட்டு அதில் 'மத்யமர்' எழுதியிருப்பதைக் கண்டு பிடிக்கச் சொன்னது என் கோலத்துக்கு மேலும் மெருகேற்றியது. 'வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்' வாங்கிய மகிழ்ச்சி எனக்கு! மிக்க நன்றி அட்மின் சார்🙏
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/1263529550501523/

என் கோலத்தைப் பரிசுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்கள் Vijayshree Krishnan, Mallika Ponnusamy , Thailambal ஆகியோருக்கு என் நன்றிகள்🙏

மத்யமர் magazineலும் மத்யமர் பற்றிய என் கருத்தும், இந்தக் கோலமும் பிரசுரித்தமைக்கு மிக்க நன்றி..நன்றி🙏



Thursday, 12 March 2020

அப்பா..அன்றும்..இன்றும்!👨‍🦳

அப்பா என்றாலே ஒரு சுதந்திரமும் சந்தோஷமும் மனதில் வந்து உட்காருகிறது. ஒவ்வொரு தலைமுறை அப்பாக்களில் வித்யாசம் இருந்தாலும் அவர்களின் பாசத்தில் அப்பழுக்கிருக்காது. குடிசையோ கோபுரமோ அப்பாவின் அன்பு வெளிக் காட்டாவிட்டாலும்  அளவில்லாதது.👨‍👧‍👦

1940-'50 களில்...
என் தாத்தா..அம்மாவின் அப்பா மிகவும் ஸ்டிரிக்ட் என்பார் என் அம்மா. அவருக்கு 4 பெண்களும் 3 பிள்ளைகளும். மனைவி இளவயதில் இறந்து விட தன் நான்கு பெண்களையும் தாயில்லாமல் வளர்ந்த பெண்கள் என்பதனால் யாரும் குறை சொல்லக் கூடாது என்று மிக கட்டுப்பாடாக வளர்த்து திருமணம் செய்து கொடுத்தார். என் தாத்தா முன்னால் அவர்கள் குரல் உயர்த்தியும் பேச மாட்டார்கள்.

1960-'70 களில்...
என் அப்பா நான் ஒரே பெண் என்பதால் என் தம்பிகளிடம் காட்டிய கண்டிப்பு என்னிடம் கிடையாது. அந்தக் கால typical அப்பா. பிள்ளைகள் நன்கு படித்து நல்ல வேலைக்குப் போகவும் பெண்ணை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்! ஆனால் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்ததில்லை..
தேவையானவற்றுக்கு
மறுப்பு சொன்ன
தில்லை.👨

மாதம் ஒருமுறை பீச், எக்ஸிபிஷன், பாட்டுக் கச்சேரி, நல்ல சினிமாக்கள், ஏப்ரல் மாத விடுமுறையில் சுற்றுப் பயணம் என்று எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்.தன் குழந்தைகள் எல்லாம் அறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம்.👨‍👧

எங்கள் ஆசைகளை நைஸாக அம்மா மூலம் அப்பாவுக்குத் தெரிவித்து நிறைவேற்றிக் கொள்வோம்! நாங்கள் settle ஆனபின் அப்பாவின்...தான் சாதித்து விட்டோம். குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள்...என்ற சந்தோஷத்தைப் புரிந்து கொண்டேன்.👴

1980- '90 களில்..
என் கணவருக்கு அவரது நான்கு மாதத்திலேயே அப்பா மறைந்துவிட்டார். அப்பாவின் முகமே தெரியாது. அதிலும் துரதிர்ஷ்டம் என் மாமனாரின் புகைப்படமே கிடையாது. அப்பா இல்லாதது அவருக்கு மிகவும் குறை என்று வருந்துவார். அப்பாவின் அன்பை அனுபவிக்காததால் தன் குழந்தைகளிடம் மிக அன்பாக நடந்து கொள்வார்.

எல்லா வீடுகளிலும் குழந்தைகள் அம்மா வழியாகத்தான் தம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். என் வீட்டில் நேரெதிர்! சிறு வயதிலிருந்து அவர்கள் நியாயமாகக் கேட்டதை என்ன விலையானாலும் வாங்கித்தரத் தவறியதில்லை. நான் கோபித்தால்..எனக்குதான் அந்தக் கொடுப்பினை இல்லை. என் குழந்தைகளுக்கு நான் செய்யாமல் யார் செய்வார்கள்?..என்பார்.

என் இரண்டாம் மகன் பத்தாம் வகுப்பில் science பாடங்களில் நிறைய மதிப்பெண் பெற்றிருந்தான். +1ல் அவன் பள்ளி ஆசிரியர்கள் அவனை Science க்ரூப் எடுத்துக் கொள்ள சொல்லியும் தனக்கு விருப்பமான காமர்ஸ் பிரிவை தேர்ந்தெடுத்
தான். இதைப் பற்றி ப்ரின்சிபால் என் கணவரிடம் சொல்லி அவனை science பிரிவில் சேருங்கள் என்றபோது என் கணவர்..அவனுக்கு எது இஷ்டமோ அதிலேயே சேர்ந்து கொள்ளட்டும். நான் எதுவும் சொல்ல மாட்டேன்..என்று கூறி விட்டார். காமர்ஸ் எடுத்தும்  +2வில் மாநில முதலாகத் தேறி அன்றைய முதல்வர் திரு. கருணாநிதியிடம் பரிசு வாங்கி பள்ளிக்கும் பெருமை சேர்த்து, ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றான்.🧑

'குழந்தைகளை எப்போதும் சந்தேகப் படாமல் அவர்கள் எடுக்கும் முடிவுகளிலுள்ள தவறுகளை சுட்டிக் காட்டி ஆலோசனை சொல்லலாம். அவர்கள் விருப்பங்களில் நாம் தலையிடக் கூடாது. தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன். தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும்'  என்று சொல்வார் என் கணவர். இன்றும் 'அப்பாவுக்கு எல்லாம் தெரியும்' என்ற எண்ணத்தில் அவர்கள் எந்த ஆலோசனை தேவையென்றாலும் அப்பாவைக் கேட்டே செய்வார்கள். 🤵

என் பெண்ணும் பிள்ளைகளும் காதலித்தபோது அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பச்சைக்கொடி காட்டியவர் என் கணவர். நான் மறுத்துப் பேசியபோது..என் குழந்தைகளுக்கு நல்ல படிப்பைக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் சரியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு..என்று திடமாக நம்பியவர். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை.  மிகச் சிறப்பாக வாழ்கிறார்கள்.👫

இக்கால அப்பாக்கள்..
இந்தக்கால அப்பாக்களான என் பிள்ளைகள், மற்றும் மாப்பிள்ளை குழந்தைகளுக்கு நிறையவே சலுகைகள் தருகிறார்கள்.
அவர்கள் கேட்பதெல்லாம் தட்டாமல் வாங்கித் தருகிறார்கள். ஒரு விஷயம் குழந்தைகளிடம் சொல்லிவிட்டால் அதை உடன் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகள் மனம் நொந்து விடுவார்களாம்.👨‍👧‍👧

ஜெர்மனியில் இருக்கும என் பிள்ளை ஒருமுறை என் பேத்தியை வெளியில் அழைத்து செல்வதாகக் கூறியிருந்தான். அதுவும் ரெடியாகிக் காத்துக் கொண்டிருந்தது. அவனுக்கு அன்று வேலை அதிகம் என்பதால் முடியவில்லை. வேலையை முடித்தவன் ..கிளம்பும்மா வெளில போகலாம்..என்று சொல்ல, நானோ..நீ டயர்டா இருக்கயே. நாளைக்கு போய்க்கலாமே..
என்றேன்.
..நான் உன் பேத்திட்ட சொல்லிட்டேன். அழைச்சுண்டு போகாட்டா'அப்பா நம்மை அழைச்சுண்டு போகல. அப்பா சொல்வதை நம்ப முடியாது'னு அவ மனசுல எண்ணம் வந்துடும்..என்றான்.
அடேயப்பா! இந்தக் கால அப்பாக்களின் எண்ணம் வித்யாசமாதான் இருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

சினிமாவில் காட்டும் அப்பாக்கள் மட்டுமே தன் பெண் காதலித்தால் அறையில் அடைத்து தன் சுயநலத்துக்காக பணக்காரனைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதும் காதலித்தவனை கொலை செய்ய ஆட்களை ஏவுவதுமான கொடுமைக்கார அப்பாக்கள் என்று நினைத்திருந்தேன்.

எனக்கு தெரிந்த பெண் ஒருத்தி வேற்றுமதக் காரரை காதலித்து மணந்ததற்காக அவளிடம் 'எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்கள் சொத்தில் பங்கு கேட்க மாட்டேன்' என்று எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டாராம் அவள் அப்பா! இப்படியும் அப்பாக்கள்!!

சிநேகிதி - பொன்மணி குக்கரி குயின் சமையல் போட்டி - 6 குழந்தைகள் விரும்பும் பிக்னிக் ரெசிபிகள்


சிநேகிதி - பொன்மணி
குக்கரி குயின் சமையல் போட்டி - 6
குழந்தைகள் விரும்பும் பிக்னிக் ரெசிபிகள்

ரெசிபி..1
ஹெல்தி டிட்பிட்ஸ்
தேவை
கடலை மாவு - 50 கிராம்
அரிசி மாவு - 50கிராம்
பொட்டுக் கடலை மாவு - 50கிராம்
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை
சமையல் சோடா - 1சிட்டிகை
இஞ்சி -  1 சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
காரப்பொடி -1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
பாதாம் பருப்பு - 20 கிராம்
பிஸ்தா பருப்பு - 25கிராம்
முந்திரி பருப்பு - 25கிராம்
நெய் - 4 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு தேவையான அளவு

செய்முறை
பொட்டுக்கடலையை லேசாக சூடுவர வறுத்து பொடி செய்யவும்.
முந்திரிப்  பருப்பை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
பாதாம் பிஸ்தாவை வெந்நீரில் ஊறவைத்து சிறு துண்டுகளாக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, சமையல் சோடா, காரப்பொடி, கரம் மசாலா, உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தாபருப்பு, வெங்காயம்,  இவற்றுடன் மிக்ஸியில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
நெய்யை சூடாக்கி கலவையில் கொட்டவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெயை சூடாக்கவும்.
மாவு கலவை சிறிது எடுத்துக் கொண்டு பிசிறினாற் போல் காய்ந்த எண்ணெயில் போட்டு பொறிக்கவும். சிவந்தவுடன் எடுத்து வடிய விடவும்.
இனிமையான  ஹெல்தி டிட்பிட்ஸ் பிக்னிக் சமயங்களுக்கு ஏற்ற ரெசிபி!  குழந்தைகளுக்கு சத்தானது.  

ரெசிபி..2
மிக்ஸட் நட்ஸ் ரௌண்ட்ஸ்
தேவை
துண்டுகளாக்கிய மிந்திரி..50 கிராம்
துண்டுகளாக்கிய பாதாம்..25 கிராம்
துண்டாக்கிய பிஸ்தா..15 கிராம்
விதை நீக்கிய பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம்..50 கிராம்
வறுத்து தோல் உரித்து இரண்டாக்கிய வேர்க்கடலை..1/2 கப்
பொட்டுக்கடலை..1/2 கப்
கொப்பரைத் தேங்காய்த் துருவல்..1/4 கப்
லிக்விட் குளுகோஸ்..50 கிராம்
வெல்லம்..250 கிராம்
ஏலப்பொடி..1டீஸ்பூன்
சுக்குப் பொடி..1 டீஸ்பூன்
நெய்..7-8 டீஸ்பூன்

செய்முறை
மிந்திரி, பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, பொட்டுக்கடலையை நெய்யில் தனித்தனியே வறுக்கவும்.
வெல்லத்தை கம்பிப் பதத்திற்கு முன்பான பாகு காய்ச்சி இறக்கவும்.அதில் வறுத்த நட்ஸ், கடலை, பொட்டுக்கடலை சேர்க்கவும். துண்டாக்கிய பேரீச்சை, கொப்பரைத் துருவல், லிக்விட் குளுகோஸ், ஏலப்பொடி  சேர்த்து நன்கு கிளறவும். சிறுசிறு உருண்டைகளாக்கவும். வித்யாசமான ருசியில் சத்தான இந்த உருண்டைகள் குழந்தைகளுக்கு பிடித்த பிக்னிக் ரௌண்ட்ஸ்!

ரெசிபி..3
க்ரிஸ்பி சிலிண்டர்
வரகரிசி..1கப்
சாமை அரிசி..1கப்
பெரிய வெங்காயம்..1
புள்க்காத கெட்டித் தயிர்..1/2 கப்
காரட் துருவல்..1/2 கப்
பொடி ரவை..3ஸ்பூன்
சிறு துண்டுகளாக்கிய மிந்திரி..2டீஸ்பூன்
பெருங்காயப் பொடி..சிறிது
காரப்பொடி..1 டீஸ்பூன்
கரம் மசாலா..1ஸ்பூன்
விழுது நெய்..2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்..2
இஞ்சி..சிறுதுண்டு
உப்பு, எண்ணெய்..தேவையான அளவு

செய்முறை
வரகரிசி,சாமையை நன்கு களைந்து தயிரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும். ஊறிய அரிசியுடன் ரவை, மிந்திரி, காரப்பொடி, கரம் மசாலா, நெய்,உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து நீள் வடிவ சிலிண்டர் போல் உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சாஸுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான சிறுதானிய ரெசிபி.

Radha Balu
M/o B.Ganesh
SD, Block no.6
Jains Abishek Apartments
173, Velachery Main Road
Selaiyur
Chennai
600073

Tuesday, 10 March 2020

தென் சீரடி..அக்கரைப்பட்டி


ஸ்ரீசாய்ராம்🙏







சீரடி சாய் பாபாவின் ஆலயம் பல ஊர்களில் மட்டுமன்றி வெளி நாடுகளிலும் நிறைய உள்ளது. பக்தியைப் பார் முழுதும் சாதி மத பேதமின்றி பரப்பிய சாயி பல அற்புதங்களை நிகழ்த்தியவர்.

கலியுகத்தில் கேட்டவருக்கு கேட்ட வரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் சீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும்.

சீரடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சாய்பாபா, பல கோடி மக்களின் மனதில் தெய்வமாக மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல இடம் பிடித்துள்ளார். அவரை முழுமையாக, உறுதியாக நம்பியவர்களுக்கு நினைத்தது நடக்கிறது. இதனால் தான் ஊர் தோறும் சீரடி சாய்பாபாவின் ஆலயங்கள் உலகமே வியக்கும் வண்ணம் உருவாகி வருகின்றன.

அது போன்று இன்று திருச்சியில் உருவாகியிருப்பதுதான் தென்சீரடி என்ற அக்கரைப்பட்டி பாபா ஆலயம். திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார், சமயபுரம் மாரியம்மன், வயலூர் முருகன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவானைக்கோயில் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் அருளாட்சி செய்யும் புனிதத் தலமான திருச்சியில் பாபா தானும் கோவில் கொள்ள ஆசை கொண்டார் போலும்!

ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கே.சந்திரமோகன் அவர்களுக்கு  சாய்பாபாவின் கட்டளை கிடைக்க உருவானது ஆலயம்! அவரது கனவில் தோன்றி தன் விருப்பத்தை உணர்த்தியதன் பேரில் திருச்சிக்கு அருகில் அக்கரைப்பட்டி என்ற இடத்தில் தென் சீரடி என்ற பிரமாண்டமான ஆலயம் உருவாகியுள்ளது.

மகாராஷ்டிராவில்  இன்றைக்கு உலகத்தின் சாய் சின்னமாக விளங்கிக் கொண்டிருக்கும் சீரடிக்கு சாய்பாபா முதன்முதலில் வந்தபோது அமர்ந்த இடம் எது தெரியுமா? ஒரு பாறைக்குள் இருந்து முளைத்து வந்த  ஒரு வேப்பமரத்தின் அடியில்தான். அந்த இடமே குருஸ்தான் என்று கோடானு கோடி மக்களால் வணங்கப்படுகிறது. அங்கு அமர்ந்துதான் சீரடி சாய்பாபா பல்லாயிரக்கணக்கான பேரின் குறை தீர்த்தார்.

அதே போன்று  அக்கரைப்
பட்டியிலும் பாறைக்கு இடையே ஓர் வேப்பமரம் வளர்ந்திருந்தது. சீரடியில் நிலவிய அதே அமைப்பு, அக்கரைப்பட்டியிலும் இருந்ததை தன் பக்தருக்கு கனவில் உரைத்தார் சாயி.  அங்குதான் முதலில் பாபா சிலை வைக்கப்
பட்டு பூஜைகள் நடைபெற்றன.

அவ்வாலயமே சமயபுரம் அருகே அக்ரஹாரப்பட்டி என்கிற அக்கரைப்பட்டியில் 50 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2011ல் குருஸ்தான் உருவாக்கப்பட்டு வழிபாடுகள் ஆரம்பிக்கப் பட்டன.

2016ல் துவாரகமாயி  பிரம்மாண்
டமாக சீரடியில் உள்ள சாய்பாபா கோவில் போன்றே  நேர்த்தியான கட்டிடக்கலையுடன் உருவாகி கம்பீரமாகக் காட்சி தருகிறது. 3.6 அடி உயரத்தில் 30 கோடி மதிப்பில் கட்டப்பட்டு தமிழகத்தின் மிகப்பெரிய பாபா ஆலயம் என்ற பெயரைப் பெறுகிறது.

ஜனவரி 20ம் தேதி கும்பாபி
ஷேகம்  நடந்த ஆலயத்தை தரிசிக்க சென்ற வாரம் சென்றிருந்தோம். வெண்ணிறப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட அழகிய ஆலயம் விரிந்து பரந்து உயர்ந்து நின்று..என்னை தரிசிக்க வருபவர்களின் துன்பங்களை தூசாக்கி அவர்களுக்கு முக்தியளிப்பேன்...என்று பாபா கூறுவது போல் உள்ளது.

சில படிகள் ஏறிச் சென்றால் எதிரில் சாயி பகவான் தரிசனம் நம்மை மெய்மறக்கச் செய்கிறது.
சுற்றிலும் வண்ணக் கண்ணா
டிகள் பொருத்தப்பட்டு கண்கவர் அழகில் காட்சி தரும் சந்நநிதி. மேல் விதானங்களில் பாபா சீரடியில் செய்த அருள் பொங்கும் திருவிளையாடல்களின் ஓவியங்கள்.

பாபாவின் வெண்ணிற உருவமும் அவர் முன்புள்ள சமாதியும் அச்சு அசலான சீரடியின் தோற்றம். பகவானின் கண்களின் தீட்சண்யம், 'என் பாதங்களைப் பற்றிக் கொண்டு உன் வேதனைகளைத் தீர்த்துக் கொள்' என்று சொல்வது போல் காருண்யத்துடன் காட்சி தருகின்றது.

சமாதி மந்திரில் சென்று பாபா
முன் நிற்கிறோம்.  சாந்தமான கருணை வழியும் விழிகள்.
வாவென்று  அழைப்பதைப்
போன்ற  புன்னகை  வதனம்.  'உன்  வினைகளைத்  தீர்க்க  நான்  இங்கே  விச்ராந்தியாக    அமர்ந்திருக்க  நீ  என்னை  எங்கெங்கோ  தேடுகிறாயே!  என்  பாதங்களைப்  பற்றிக்கொள்.  உன்  கவலைகளை நான்  காணாமல் போகச்
செய்கிறேன்' என்று  வெள்ளித்
திருவாசியும், பட்டு  பீதாம்பர
முமாக் கம்பீரமாகக்  காட்சி தரும்
பாபாவின் திருவுருவம்
நம் மனதை ஆசைகளில்
இருந்து  விலக்கி  'நீயே  சரணம்'
என்று  அடிபணிய  வைக்கிறது.
அந்த  ஆகர்ஷண  சக்தியில் கட்டுண்டு  அங்கு  சற்று நேரம் தியானத்தில் அமர்ந்தாலே
நம் மனம் அமைதி  பெறுகிறது

காலை 9 மணிக்கு நடைபெறும்  சோட்டா(சிறிய) ஆரத்தி தரிசனம். அனைவரும் அமர்ந்து அமைதியான சூழ்நிலையில் சாயிநாமத்தை வாயினால் ஓதி மனதினால் சிந்தித்து கண்மூடி அமர்ந்து அவரை தியானித்தபின்,   சாயியின் பாத தரிசனம்.

துவாரகமாயியின் தரிசனம் நம்மை மெய் மறக்க வைத்து சாயி..சாயி..என்ற நாமம் ஒன்றையே சொல்லத் தூண்டுகிறது. பாபாவின் விதவிதமான தோற்றங்களோடு மகாபெரியவர், ராமானுஜர் போன்ற குருமகான்களின் ஓவியங்கள் கண்ணைக் கவர்கின்றன.

பின் பாபாவின் அருட் பிரசாதமான உதியைப் பிரசாதமாகப் பெற்று  நாம் நெற்றியில் பூசிக் கொள்ளும்
போது 'எதுவும் நிரந்தரமில்லை,  என்றேனும் ஒரு நாள் நாமும் சாம்பல்தான் என்பதையும், அதனால் இந்த உலக வாழ்க்கையின் மீது அதீத ஆசையும், போதையும் கொள்ள வேண்டாம்' என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

உதி பிரசாதம் பெற்று வெளியில் வந்து  குருஸ்தான், சிவலிங்கம், தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக வழி அமைத்துள்ளதால் அந்த வழியில் சென்று தரிசித்து வெளியில் வந்து விடலாம்.

தினம் ஐந்துமுறை ஆரத்தி உண்டு.மதியம் அன்னதானம் உண்டு. இன்னமும் ஆலய சுற்றுப்புற வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்
கின்றன.

பக்தர்கள் வேண்டும் வரங்க
ளையும், எல்லையில்லா அன்பு,
அருள், அமைதியையும் வாரி வழங்கும் சாயி பகவானை ஆரவார
மின்றி  தரிசிக்க விரும்புவோர்
அவசியம்  செல்ல வேண்டிய ஆலயம் இந்த தென்  சீரடி!

திருச்சியிலிருந்து ஆலயத்திற்கு வாகன வசதிகள் உள்ளன.